Thursday, June 1, 2017

ஸ்ரீத விட்டலரின் வாழ்க்கைச் சரிதம்

ஸ்ரீத விட்டலரின் வாழ்க்கைச் சரிதம் (1741-1820)

கன்னடத்தில் : திரு.K.அப்பண்ணாச்சார்யா
(Srida Vittala Kruthigalu - Published by TTD Religious Publications - 1997)
தமிழில் : T.V.சத்ய நாராயணன்.

***

சதாம் பிரசங்கான் மம வீர்ய சம்விதோ
பவந்தி ஹ்ருத் கர்ண ரசாயனா: கதா:
ஸ்ரத்தாரதிர் பக்தி ரனுக்ரமிஷ்யதி
தத் ஜோஷணா தாஷ்வ பவர்க்க வர்த்மனி
(ஸ்ரீமத் பாகவதம் 3-25-25)

இது பாகவதாசாரியரின் அமுதமொழி. கற்றறிந்த ஞானிகளுடனான சகவாசத்தை அந்த ஸ்ரீஹரியே விரும்புகிறான். சகவாசம் என்றால் எப்போதும் அவர்கள் அருகிலேயே இருப்பது என்றில்லை. சகவாசம் என்றால் - அருகில் மற்றும் மனதளவில் என்று இருவகைகள் உண்டு. அருகில் என்றால் ஞானிகளுடனேயே இருப்பது. மனதளவில் என்றால் அவர்களை எப்போதும் நினைத்துக் கொள்வது, அவர்களின் புகழ் பாடுவது, அவர்களை பற்றிய கதைகளைக் கேட்பது - இவையே ஆகும்.

ஞானிகளின் கதை என்றால் அந்த ஸ்ரீஹரியின் கதை என்றே சொல்லலாம். எப்படியென்றால், ஞானிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்ரீஹரியைச் சுற்றியே - எப்போதும் அவனைச் சம்பந்தப்பட்டே இருப்பதால், அப்படிச் சொல்லலாம். இந்த ஞானிகளின் உபன்யாசங்களினால், காதுகளுக்கும் இதயத்திற்கும், எப்போதும் ஸ்ரீஹரியின் சிறப்புகள் கேட்டுக் கொண்டே இருக்கும். மோட்சத்தைக் கொடுக்கும் பக்தி தானாகவே வளரும். அதற்காகவே மதிப்பிற்குரிய மான்வி ஜகன்னாத தாசர் -

ரங்க நின்ன கொண்டாடுவ மங்களாத்மரா
சங்க சுகவித்து பாலிசென்ன கருணா சாகரா

என்று பாடியிருக்கிறார். ஞானிகளுடன் நாம் இருந்தால், அவர்களிடம் பழகி வந்தால், நமக்கு இஷ்டார்த்தங்கள் சித்திக்கும் என்று பொருள்.

ஸ்ரீ பிரசன்ன வேங்கட தாசர்,

சங்கவாகலி சாது சங்கவாகலி
சங்கதிந்த லிங்க தேக பங்கவாகலி

என்று வேண்டியவாறு, ஞானிகளின் ஆசி, இவ்வுலகிலும் மேலுலகிலும் நமக்கு மிகவும் பயன் தரக்கூடியது என்று கூறுகிறார்.

கெண்ட காணதே முட்டிதரு சரி
கண்டு முட்டிதரு தஹிசதிப்புதே
புண்டரீக தலாயதாக்ஷண விமலபதபத்ம
பண்டுஉணிகளெந்தெனிப பக்தர
ஹிண்டு நோடித மாத்ரதலி தனு
திண்டுகெடஹித நரன பாவன மாள்புதாக்‌ஷணதி
(ஹரிகதாம்ருதசார 13 - 12 )

ஈ நிமித்த புன: புன: சு
ஞானிகள ஸஹவாஸ மாடு கு
மானவர கூடாததிரு லௌகீகக்கே மருளாகி
(ஹரிகதாம்ருதசார 13 - 13 )

என்று ஜகன்னாத தாசர், ஞானிகளின் அறிமுகத்தை, அதன் பலன்களை அழகாக விளக்கியிருக்கிறார்.

இப்படிப்பட்ட ஜகன்னாத தாசரின் அறிமுகத்தால், அவருடைய சிஷ்யரான பிராணேஷ விட்டல தாஸரின் ஒரே ஒரு பாடலால், தன் வாழ்க்கை முறையையே நல்லபடியாக மாற்றிக் கொண்டவர் ஸ்ரீதவிட்டல தாசர்.

தார்வாட் பகுதிக்கு உட்பட்ட கிராமம், கர்ஜிகி. வரதா நதி மற்றும் எழில் கொஞ்சும் இயற்கை - இவ்விரண்டும் அக்கிராமத்திற்கு மிகவும் அழகைத் தந்தன.  கிராமத்தில் வேத வேதாந்தத்தில் சிறந்து விளங்கியவர்கள், நித்ய அக்னிஹோத்ரிகள், உபன்யாசகர்கள் என பல பேர் இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் சரஸ்வதி குடி கொண்டிருந்தாள். வெளியூரிலிருந்து பாடங்களைக் கற்க வரும் மாணவர்களுக்கு அந்தக் கிராமத்தில் மிகுந்த மரியாதை கிடைத்தது. பல பண்டிதர்கள், அம்மாணவர்களுக்கு உணவும் வழங்கி, பாடங்களையும் எடுத்து வந்தனர். ஒவ்வொரு நாள் காலையும், ஒவ்வொரு வீட்டிலும் வேத கோஷங்கள் ஒலிப்பதை கேட்க முடிந்தது. கிராமத்திற்கு நடுவே விட்டலன் ஆலயம் ஒன்று இருந்தது. ஸ்ரீத விட்டல தாசர், விட்டலனை வர்ணிக்கும்போது :

ஸ்ரீத விட்டலா, நிம்ம சத்குண வேத சாஸ்திரதல்லி
ஷோதிஸி நோடுவ பூதேவரிகொலிது ஆதரிசலி
பந்தியா விட்டலா

என்று கர்ஜிகியின் அழகினை வர்ணிக்கிறார் தாசர்.

கிபி 1740-50க்கு நடுவில், கர்ஜிகி கிராமத்தில், கருணீகர் குடும்பத்தில், தாசர் பிறந்தார். பெற்றோர் தம் செல்லக் குழந்தைக்கு 'தாசப்பா' என்று பெயரிட்டனர்.

சிக்கதனதல்லி தந்தே தாயிகளு ஒலிது பெசரிக்கே
கரெதரு நின்ன 'தாசப்பா' எந்து

என்ற ஜகன்னாத தாசரின் வாக்கே இதற்கு ஆதாரம். தாசருக்கு சகோதர சகோதரிகள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்ததனால், தாசப்பருக்கு இளமையில் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை. தக்க வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். தாசப்பா வாலிப வயதில் இருந்தபோது, அவரது பெற்றோர் மரணமடைந்தனர். கட்டுப்படுத்துவதற்கு யாரும் இல்லை, வாலிப வயது, நிறைய செல்வம் - இவரை தட்டிக் கேட்பவர்கள் யாரும் இல்லை. ஆகவே காலப்போக்கில், தாசப்பா விலைமாதர்களிடம் போகத் துவங்கினார்.

தக்க வயதில் தாசப்பருக்கு திருமணம் ஆனது. நற்குணங்களையுடைய 'குண்டம்மா' தாசப்பரின் மனைவி ஆனார். திருமணம் ஆனாலும், தாசப்பரின் பழக்க வழக்கங்களில் எந்த மாறுதல்களும் தென்படவில்லை. காலையில் ஸ்நான ஆன்ஹிகங்களை முடித்துக் கொண்டு, கருணீகர் (கணக்கர்) வேலையை சிறிது நேரம் செய்வார். மதிய வேளையில் சாப்பாடு, பின் சிறிது ஓய்வு. மாலை ஆனதும், நன்கு அலங்கரித்துக் கொண்டு, தாம்பூலம் தரித்தவாறு, தனக்கு பிடித்தமான விலைமகள் வீட்டிற்குச் சென்றுவிடுவார். இரவில் எப்போது தோன்றுகிறதோ அப்போது தம் வீட்டிற்குத் திரும்புவது வழக்கம். தாசப்பா எந்நேரம் வீட்டிற்குத் திரும்பி வந்தாலும், அவர் மனைவியான குண்டம்மா, அவருக்கு உணவு பரிமாறிவிட்டு பின் தானும் உண்பது வழக்கம்.

குண்டம்மா மிகவும் பொறுமையுடனும், பயபக்தியுடனும், நடக்கும் அனைத்தையும் சகித்துக் கொண்டும் இருந்தாள். ஊரில் இருக்கும் விட்டலன் கோயிலுக்கு போகும் வழக்கத்தை தாசப்பா கொண்டிருக்கவில்லை. சிறப்பு நாட்களில், கோயிலில் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்தால், ஊரார் வந்து கூப்பிட்டால் மட்டுமே கோயிலுக்கு போவது வழக்கம். அப்போதும், கோயிலின் வெளிப் பிரகாரத்தில், ஏதேனும் ஒரு தூணின் கீழ் சிறிது நேரம் அமர்ந்து பின்னர் வெளியே வந்துவிடுவது வழக்கம். விட்டலன் கர்ப்பகிருஹத்தின் அருகில் ஒரு நாளும் போனது இல்லை.

இதே சமயத்தில், விஜயதாசரின் அனுக்கிரகத்திற்குப் பாத்திரராகி, கோபாலதாசர் மூலம் 40 ஆண்டுகள் ஆயுர் தானம் பெற்றவரான, பண்டரீபுராதீசனான பாண்டுரங்கனிடம் ஜகன்னாத விட்டலா என்ற அங்கிதத்தைப் பெற்றவரான, ஜகன்னாத தாசர், தேசாந்திரம் மேற்கொண்டிருந்தார்.

ஸஜ்ஜனர்களில் இரு வகைப்படுவர். முதல் வகையினர் - தம் சாதனைக்காக பூமியில் பிறந்து, தம் கடமைகளைச் செய்து, அவை முடிந்தவுடன், இங்கிருந்து புறப்பட்டுவிடுவர். இரண்டாம் வகையினர், ஸ்ரீஹரியின் ஆணைப்படி இங்கு பிறந்து தம் கடமைகளைச் செய்வதுடன், பூமியில் வழிதெரியாமல் திரிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வழிகாட்டுவர். ஜகன்னாத தாசர் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் ஆவார்.

பலவிது பாளுதக்கே - சிரி நிலையன குணகள
திளிது பஜிசுவதே - பலவிது பாளுதக்கே

என்று எல்லா சாத்வீகரின் மனத்தைத் தொடுமாறு பாடி வந்தார். இவருக்கு மிகவும் பிடித்த சிஷ்யர் - லிங்கசுகூர் என்ற ஊரைச் சேர்ந்தவரான பிராணேஷ தாசர்.  இவரது இயற்பெயர் யோகீந்த்ர ராயர் ஆகும்.

ஒரு முறை, குரு சிஷ்யர் இருவரும் சேர்ந்து, கர்ஜிகி ஊருக்கு வந்தனர். ஊருக்கு வந்ததும், நேராக தாசப்பாவின் வீட்டிற்குச் சென்றார்கள். தாசப்பாவின் வீட்டில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குண்டம்மா தாசரின் கால்களில் விழுந்து வணங்கினார். உன் மனதில் நினைத்ததெல்லாம் நடக்கட்டும் என்று தாசர் ஆசிர்வத்தார். ஜகன்னாத தாசரின் ஆசிர்வாதத்திற்கு, பிராணேஷ தாசர், ததாஸ்து என்று வழிமொழிந்தார்.

ஜகன்னாத தாசரைப் பற்றி நன்று அறிந்திருந்த குண்டம்மா, அவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றதால் மிகவும் ஆனந்தமடைந்தார். அவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது.

ஜனஸ்ய க்ருஷ்ணாத் விமுகஸ்ய தைவாத்
அதர்ம ஷிலஸ்ய சு துக்கிதஸ்ய
அனுகிரஹாயேஹ சரந்தி நூனம்
பூதாநி பவ்யானி ஜனார்தனஸ்ய
(ஸ்ரீமத் பாகவதம் 3-5-3)

நினைத்த மாத்திரத்தில், ஸ்ரீஹரியைக் காணும் ஆற்றல் பெற்ற ஞானிகளுக்கு, தேச சஞ்சாரம் செய்வதால் எந்தவித பலனும் இல்லை. ஆனால், சாத்வீகராகப் பிறந்தும், சமய சந்தர்ப்பத்தால் புத்தி பேதலித்து அதர்மத்தில் மூழ்கி கிருஷ்ண நிந்தனை செய்பவர்களை உய்விக்க இத்தகைய சஞ்சாரம் தேவைப்படுகிறது. தாசப்பாவிற்கு நல்ல காலம் பிறப்பதற்கான வேளை வந்துவிட்டது என்பதற்கான அறிகுறியே ஜகன்னாத தாசரின் விஜயம் எனலாம்.

குண்டம்மா மிகுந்த பக்தி சிரத்தையுடன் தாசரின் பூஜைக்கு ஏற்பாடு செய்யத் துவங்கினாள். சுவை மிகுந்த சமையலையும் தயார் செய்தாள். தாசப்பரோ, தாசருடன் சிறிது நேரம் பேசிவிட்டு, தாசருக்கு வேண்டியதைச் செய்து தருமாறு குண்டம்மாவிடம் சொல்லிவிட்டு, வழக்கம்போல் வெளியே சென்றுவிட்டார். தாசர், கருட வாகனத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி நரசிம்மரின் பூஜை செய்து முடித்தார். குண்டம்மா செய்து வைத்திருந்த உணவு வகைகளை நிவேதனம் செய்தார். அப்போது வீட்டிற்குத் திரும்பி வந்த தாசப்பா, தாசர் குடுத்த தீர்த்தத்தை பெற்றுக்கொண்டு, தாசரை உண்ண அமர வைத்து, தானும் அமர்ந்து உண்டார்.

மாலை ஆனதும், தாசப்பா வழக்கம்போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு, விலைமகளின் வீட்டிற்குச் சென்றார். தன் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு என்று குண்டம்மா தன மனதில் மாதவனை வேண்டினாள். ஊரின் சில பேர் தாசரிடம் வந்து, விட்டலன் கோயிலில் உபன்யாசம் செய்து தங்களை உய்விக்குமாறு கேட்டுக் கொண்டனர். தாசரும் அதற்கு தன் சம்மதத்தைத் தெரிவித்தார். கோயிலுக்குப் புறப்படும் முன் தாசர், குண்டம்மாவை அருகில் அழைத்து - அம்மா, இன்று மாலை விட்டலன் கோயிலில் உபன்யாசம் உள்ளது. உன் கணவனை அழைத்துக் கொண்டு நீயும் தவறாது கோயிலுக்கு வந்துவிடு - என்றார்.

குண்டம்மா தாசரின் பாதத்தில் வீழ்ந்து கதறினாள். தாசர், நான் அஸ்வதந்திரளாதவள் (எதையும் சுதந்திரமாக செய்ய இயலாதவள்). நான் எப்படி இதைச் செய்வது? என்றாள். தாசர் சற்று கண்டிப்புடன் - ஸ்ரீஹரி நினைத்தால் அது நடந்தே தீரும். நாமெல்லாம் அவன் சொன்னபடி செய்பவர்கள் மட்டுமே. நீ உடனே போய் உன் கணவனை கூப்பிட்டு வா. தாசப்பா கண்டிப்பாக வருவான் - என்றார். தாசரின் சொற்கள், குண்டம்மாவிற்கு என்றும் இல்லாத தைரியத்தைக் கொடுத்தன. உங்கள் ஆணை தாசரே - என்றாள்.

லௌகிகானாம் ஹி சாதூனாம் அர்த்தம் வாகானு வர்த்ததே
ரிஷி ராம் புனரத்ய நாம் வாசம் அர்த்த: அர்த்த: அனுவதந்தி
(உத்தர ராம சரிதம்)

சாதாரணமானவர்களின் சொற்கள், சாதாரணமான பொருளையே தரும். ஆனால், கற்றறிந்த ஞானிகள் / சாதுக்களின் சொற்கள் மிகுந்த பலம் பொருந்தியவை. அவர்கள் கூறியவை கூறியபடியே நடந்தேறும்.

மாலை ஆயிற்று. குண்டம்மா வீட்டில் விளக்கேற்றி ஸ்ரீஹரி முன் விழுந்து மனதார வணங்கினாள். நாம் அனைவரும் ஸ்ரீஹரியின் கட்டளைப்படி நடப்பவர்கள். நீ போய் தாசப்பனை அழைத்து வா. அவன் வருவான் என்ற தாசரின் வார்த்தைகள் குண்டம்மாவின் காதுகளில் எதிரொலித்தன. தாசரை நினைத்துக் கொண்ட குண்டம்மா, தாசப்பா இருந்த விலைமகளின் வீட்டிற்கு கிளம்பினாள். தலை மேல் சேலையைப் போர்த்தியவாறு தலை கவிழ்ந்து விலைமகள் இருக்கும் வீட்டிற்குப் போகும் குண்டம்மாவை வழியில் கண்டவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தன் வீட்டு வாசலில் குண்டம்மாவைக் கண்ட அந்த விலைமகள், வெளியே ஓடிவந்தாள். அக்கா வந்திருக்கிறார்கள் - என்று அவள் கூறியதை கேட்ட தாசப்பா - உடனே வெளியே வந்தார். நீ எதற்கு இங்கே வந்தாய்? நேரமானால் நானே வீட்டிற்கு வருவேனே என்றார். இதைக் கேட்ட குண்டம்மாவிற்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. தலை குனிந்தவாறு - தாசர் உங்களை அவரது உபன்யாசத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டார். ஆகவே நான் வந்தேன் - என்றாள்.

சரி, அப்படியே ஆகட்டும். நீ முன்னால் போ. நான் வருகிறேன் என்றார் தாசப்பா. தாசப்பரை வணங்கிய குண்டம்மா அங்கிருந்து வெளியேறினாள். உள்ளே வந்த தாசப்பா, விலைமகளைப் பார்த்து, வேறொன்றும் சொல்லாமல் - போய் வருகிறேன் என்றார். உடனே அவர் கைகளை பிடித்துக் கொண்ட அந்த விலைமகள் - போகிறேன் என்று மட்டும் சொல்லுங்கள். திரும்ப இங்கு வரவேண்டாம். அந்தப் பெண்ணின் மனதை நோகடிக்க வேண்டாம். இதுவரை உங்கள் பாதசேவை செய்ததே நான் செய்த பெரும் பேறு என்றாள். தாசப்பரும் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டார்.

வீட்டிற்கு வந்த தாசப்பா, குளித்து மடியுடன் குண்டம்மாவையும் அழைத்துக் கொண்டு விட்டலனின் கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த ஜகன்னாத தாசர், தாசப்பாவை அன்புடன் அருகில் அழைத்தார். என்றும் கர்ப்பக்கிருகத்திற்கு அருகிலேயே வராத தாசப்பா, தாசர் அழைத்தவுடன் பணிவுடன் அவரருகில் வந்து அவரை வணங்கி அமர்ந்தார். இதைப் பார்த்த மற்றவர்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.

தாசர் தன் உபன்யாசத்தைத் துவக்கும்முன், பிராணேஷா தாசரைப் பார்த்து, ‘பிராணேஷா, இன்று உபன்யாசம் உன்னிடமிருந்தே துவங்கட்டும்’ என்றார். ’விஜயதாசர், கோபாலதாசரை அனுக்கிரகித்ததைப் போல் எனக்கும் அனுக்கிரகித்தீர். அப்படியே ஆகட்டும்’ என்றபடியே பிராணேஷ தாசர் --

ஆதத்து ஆயித்து இன்னாதரு ஒள்ளே ஹாதி ஹிடியோ பிராணி
ஈ துர்நடதெயலி முந்தே ஹோதரே இஹ பரதி மோத எந்திகு காணே பிராணி

நீலா சதி தனதூள அனவரத ஹுளாகிருவியல்லோ
ஹலா பிடிது விதிகுலாசரணே பிடே பலாதருவரல்லோ
ஸ்தளாஸ்தள அறியதே கலாபமாட்யகு கேளாகுவது சல்லோ
எலா  கேளு ஓந்திலா மாத்ர நீ கெலாஹ பகே எல்லோ பிராணி (ஆதத்து ஆயித்து)

ஷிலாதி விக்ரஹ தளாதி ஹரியரப்யலா கேவலா சுள்ளோ
சலா பிரதிமே பதகள அர்ச்சிசதலே மலா தின்னுதியல்லோ
களா பிடதிரே அனிளான ஹரிமனே வேளாகியாதல்லோ
நளா பரதமுக இளான்மரந்ததி பலா எனிசலில்லோ பிராணி (ஆதத்து ஆயித்து)

பிலா சேரி தலி கெளாகி தபிசலு பலா லேஷிதில்லோ
களாரிதின பிந்துஜலா கொள்ளேநெந்து தலாமாடலில்லோ
பலாதரதலிந்துலாதி ஸ்நான மொதலாத ப்ரதவல்லோ
பலாரிநுத பிராணேஷ விட்டலன பலா களிசி கொள்ளோ பிராணி (ஆதத்து ஆயித்து)

மேற்கண்ட பாடலைப் பாடி முடித்தார். பிராணேஷ தாசரின் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு சொல்லும், தாசப்பரின் இதயத்தைத் தொட்டன. தாசப்பர் இந்த உலகத்திலேயே இல்லாததுபோல் மெய் மறந்தார். பேரானந்தத்தில் மூழ்கிய தாசப்பரின் மனம் அமைதியாயிற்று.

அபராதி நானல்லா அபராத எனகில்லா
கபட நாடக சூத்ரதாரி நீனே (அபராதி)

நீனே ஆடிசதிரலு ஜட வொனகெய கொம்பே
ஏனு மாடலு பல்லரு தானே பேரே
நீனிட்ட சூத்ரதிம் சலிபவு கை காலுகளு
நீனே முக்கிசலு முக்குவ தேஹதவனு (அபராதி)

ஒந்தெண்டு பாகில பட்டணக்கே தன்ன
தெந்து இப்பதனால்கு மனேயாள்கள
தந்து காலவ நிலிசி என்ன நீ ஒளகிட்டு
முன்தே பவதலி பவணிபுதன்யாய (அபராதி)

யந்த்ர வாஹக நீனே ஒளகித்து என்ன ஸ்வ
தந்த்ரநெந்தேநிஸி கொலிசுவரே ஹேளோ
கந்துபித லக்ஷ்மீஷ எந்தாதடந்தஹுதா
நந்த மூர்த்தி நம்ம புரந்தரவிட்டலா (அபராதி)

புரந்தரதாசரின் இந்தப் பாடலை தாசப்பா திரும்பத் திரும்ப பாடினார். சர்வஸ்வதந்த்ரனாகிய அந்த ஸ்ரீஹரியின் முன், அஸ்வதந்த்ரனாகிய நான் வணங்குகிறேன் என்றெண்ணியபடியே, தான் இதுவரை செய்த அனைத்து செயல்களையும் அர்ப்பணம் செய்தார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தாசப்பா ஜகன்னாத தாசரை விழுந்து வணங்கி, என்னை ஆசிர்வாதியுங்கள் என்றார். தாசரும் அவரை ஆசிர்வதிக்குமாறு ஸ்ரீஹரியிடம் வேண்டினார். மண்ணில் கிடந்த மாணிக்கமான தாசப்பனை மன்னித்து அவரை உன் பாதங்களில் விழவைத்து அலங்கரித்துக்கொள் என்ற தாசரின் வாக்கைக் கேட்ட தாசப்பா, தான் இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கியதாக ஆனந்தம் அடைந்தார். வாழ்க்கையில் இதுவரை கிட்டாத அனுபவமாக இதைக் கருதினார். குண்டம்மாவின் ஆனந்தத்திற்கும் எல்லையே இல்லாததுபோல் ஆயிற்று.

மறுநாள் காலை, குளித்து மடியுடன் வந்த தாசப்பனுக்கு ஜகன்னாத தாசர் தாசதீட்சையை வழங்கினார். ஸ்ரீதவிட்டலா என்ற அங்கிதத்தை கொடுத்தார்.

ஸ்ரீதவிட்டலா சர்வரந்தராத்மா
நீதயதி ஒலிது நித்யதல்லி காபாடுவுது... (ஸ்ரீதவிட்டலா)

சிக்கதனதல்லி தந்தே தாயுகளு ஒலிது பெசே
ரிக்கி கரேதரு நின்ன தாசனெந்து
அக்கரதி ஒலிது பவதுக்ககள பரிஹரிசி
மக்களனு தாய்நஹுவ தெரெதி சந்தைஸு (ஸ்ரீத விட்டலா)

சுகனய்யா நின்ன பதபகுதி த்வத்கதாசாஸ்திர
யுகுதிவந்தர சங்க சுகவனித்து
சகல கர்மகள வைதிகவெனிஸு ஒலிது தே
வகி தனய நின்னவர முகதிந்த ப்ரதிதினதி (ஸ்ரீத விட்டலா)

மாதரிஷ்வப்ரியா சுரேதராந்தகனே புரு
ஹூதநந்தன சக நிராதங்கதி
நீ தோரு மனதி சம்ப்ரீதி இந்தலி ஒலிது
ஹூதாஹ்வ குரு ஜெகந்நாத விட்டலா பந்து (ஸ்ரீத விட்டலா)

என்று பாடினார். "ஆத்ம பந்துவாகிய ஸ்ரீ ஜகன்னாத விட்டலா, நீயே குருவாகி இருந்து தாசப்பனை காப்பாற்ற வேண்டும் என்று ஸ்ரீஹரியிடன் வேண்டினார். தாசப்பருக்கு புதிய ஜென்மமே வந்ததாக ஆயிற்று. பிராணேஷ தாசரைப் போலவே, தாசப்பனும் ஜகன்னாத தாசரின் பிரியமான சிஷ்யரானார். ஜகன்னாத தாசரின் பூர்ண ஆசி தாசப்பருக்கு கிடைத்தது. தாசப்பர், 'ஸ்ரீதவிட்டல தாசர்' என்றும் 'கர்ஜிகி தாசர்' என்றும் அழைக்கப்படலானார். ஜகன்னாத தாசரின் மிக முக்கியமான க்ருதியான 'ஹரிகதாம்ருத சாரத்தின்' பல ஸ்ருதியை எழுதும் பாக்கியம், ஸ்ரீதவிட்டல தாசருக்குக் கிடைத்தது. ஸ்ரீதவிட்டல தாசர், தன் பெரும்பான்மையான நேரத்தை ஸ்ரீதவிட்டலனின் ஆலயத்திலேயே கழித்தார். விட்டலனின் முன்னால் பாடல் பாடுவதிலும், நடனமாடுவதிலும் நேரத்தை செலவிட்டார். பிறகு கோவிலிலேயே இருக்கும் ஒரு தூணின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.

சிறிது காலத்தில் ஸ்ரீதவிட்டலருக்கு,  முரளிகிருஷ்ணன் மற்றும் சீதா சமேத ராமச்சந்திர விக்கிரகங்கள் கிடைத்தன. (அவை எப்படி கிடைத்தன என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை).

ஏகாதசி இரவில் ஜாகரணே (இரவு முழுக்க கண்விழித்தல்) செய்தவாறு கண்ணனை தொட்டிலில் உட்கார வைத்து நடனமாடியவாறே -

கொளலூது இந்நொம்மே கிருஷ்ணய்யா
கொளலூது மத்தொம்மே கிருஷ்ணய்யா
கொளலூது த்வாரக நிலையனே

என்னும் பாடலை, தன் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தார். அப்போது, நாதமூர்த்தியான - கோபி ஜனப்ரியனான - பக்தாபராதீனனான - ஸ்ரீகிருஷ்ணன், தன் இடது தோளை, இடது கன்னத்தில் சாய்த்து, தாசரின் பாடலுக்கேற்ப ஆடத் துவங்கினான். தன் கொஞ்சும் விரல்களால், புல்லாங்குழலை ஏந்தி, தன் அழகான உதடுகளில் வைத்து இசைக்கவும் துவங்கினான்.

சில ஆண்டுகளில், குண்டம்மா, கால நாமக பகவந்தனின் ஆணைக்கேற்ப இவ்வுலக வாழ்வை நீத்தார். தாசரின் வம்சம் வளரவில்லை. இவ்வுலகில் அனைத்து சுகங்களையும் துறந்து, எக்காலமும் இறைவனையே நினைத்துக் கொண்டு காலத்தைக் கழித்த தாசரிடம் எந்த உறவினரும் நெருங்கவேயில்லை. தாசரின் உண்மையான உறவினர்கள் யார் என்று கேட்டால், ஹரிதாசர்களே ஆவர். குண்டம்மாவுடன் ஸ்ரீஹரியின் பக்தி வாழ்வை வந்த தாசர், அப்படியே தன் காலத்தைக் கழித்து விட்டார். சம்சாரத்தில் மூழ்கியிருந்த தம்மை, ஜகன்னாத தாசர் மூலமாக கைகொடுத்து தூக்கிவிட்டு, தன் பயத்தைப் போக்கிய அந்த ஸ்ரீஹரியின் கருணையை இந்தப் பாடலின் மூலம் நம் எல்லோருக்கும் விளக்குகிறார்.

அஞ்சபேடா பேடலே ஜீவா..
பவபஞ்சன ஹரிசரணர காவா..

தாசர் தம் 80வது வயதில் (1820 ம் ஆண்டு) உயிர் நீத்தார். தன் இறுதிக்கு காலத்தை உணர்ந்த தாசர் ஒரு சுப முகூர்த்த வேளையில் தாம் பூஜை செய்த ராம சீதா கிருஷ்ண விக்ரகங்களை தம் வீட்டில் ஒரு சுவரில் வைத்து மூடினார். தாமே ஒரு தர்ப்ப ஆசனத்தைப் போட்டு அதில் அமர்ந்து ஸ்ரீஹரியின் சிந்தனையில் மூழ்கி மேலுலகத்திற்கான பயணத்தைக் துவக்கினார். தாசரின் இந்த முடிவைக் கேட்ட உற்றார் உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வருந்தினர். தாசரின் இறுதி பயணத்தில் கலந்து கொள்ள வேண்டி அனைவரும் அவர் வீட்டின் முன் கூடினர்.

அதே சமயம், நல்ல தேஜஸ்விகளாகத் தோன்றிய நான்கு பேர் அங்கு வந்து, நாங்கள் தாசரின் சம்பந்திகள் முறை ஆக வேண்டும் என்று கூறினர். தாங்களே தாசரின் அந்திமக் கிரியைகளை சாஸ்திர பூர்வமாக செய்து முடித்தனர். பரம பவித்ரரான தாசரின் அந்திமக் கிரியைகளை வரதா நதிக்கரையில் அக்னி அந்தரககத பரசுராமருக்கு சமர்ப்பித்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்த நால்வரும் அனைவரின் கண்களிருந்து மறைந்து போனார்கள். அவர்கள் யார் என்று யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. நாங்கள் தாசரின் சம்பந்திகள் என்று அவர்கள் சொன்ன விஷயம் அனைவருக்கும் மிகவும் ஆனந்தத்தைக் கொடுத்தது.

பதிசுதான்வய ப்ராத்ரு பாந்தவான்
அதிவிலங்கிதே ஹ்ருச்சுதா கதா:

என்னும் கோபிகையரின் வசனம் மிகவும் உண்மையானது. ரத்த சம்பந்தப்படட உறவினர்களைவிட அந்த அச்சுதன் உண்மையான உறவினன் ஆவான். அந்த ஸ்ரீஹரியையே உறவினராகக் கொண்டவர்களுக்கு இவ்வுலகில் வேறு உறவினர்கள் இல்லையே என்பது ஒரு குறையா? நிரந்தரமில்லாத உறவுகளான தந்தை, தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன் ஆகிய உறவினர்களால் நிரம்பிய இந்த வாழ்க்கை நிஜமான வாழ்க்கை இல்லை. ஆகவே, புரந்தரதாசர் நிஜமான நிரந்தரமான வாழ்க்கையைப் பற்றி இப்படி பாடியுள்ளார்.

சம்சாரவெம்பந்த பாக்யவிரலி
கம்சாரி நெனெவெம்ப சௌபாக்யவிரலி (சம்சார)

தந்தே நீனே கிருஷ்ண தாயி இந்திரேதேவி
பொந்தித அண்ணனு வனஜசம்பவனு
இந்துமுகி சரஸ்வதி தேவியே அத்திகேயு
என்தெந்திகு வாயுதேவரே குருவு (சம்சார)

பாரதி தேவியே குருபத்னியு எனகே
கருட சேஷாதிகளு குருபுத்ரரு
ஹரிதாஸ ரெம்புவரே இஷ்ட பாந்தவரெனகே
ஹரிபஜனே நடேயுதிஹ ஸ்தளவே மந்திரவு (சம்சார)

சர்வாபிமானவனு த்யஜிசுவுதே சுன்னான
ஹரிய நாமவே இன்னு அம்ருதபான
வரதபுரந்தர விட்டலா நின்ன பாதத்யான
கருணிஸி அனவரத கரபிடிது காயோ (சம்சார)

என்று பாடினார்.

ஸ்ரீகர்ஜிகி தாசாந்தர்கத பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத ஸ்ரீ ஸ்ரீதவிட்டலார்ப்பணமஸ்து

***








No comments:

Post a Comment