தாஸ சதுஷ்டயரு
குருகோவிந்தவிட்டலதாசரின் ஆராதனையை முன்னிட்டு, 6th Jan 2008ல் வெளியான புத்தகம்.
கன்னட மூலம் : ஹரதி பிரகலாதாச்சார்
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
***
ஹரிதாச சாகித்யத்தை Dr.R.S.பஞ்சமுகி, பல பாகங்களாக பிரித்துக் காட்டியிருக்கிறார். Dr.வரதராஜ ராவ் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து அவர்கள் சொல்லியிருக்கிற விஷயங்கள் நாம் கவனிக்கத்தக்கவை. அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் இவர்கள் செய்திருக்கிற ஆராய்ச்சிகள் போற்றத்தக்கவை.
இதுவரை வந்துள்ள கருத்துகள்:
1. Dr.R.S.பஞ்சமுகி:
முதல் கட்டம்: நரஹரி தீர்த்தர்
இரண்டாம் கட்டம்: 13 முதல் 16ம் நூற்றாண்டு வரை - யதித்ரயர்கள் மற்றும் புரந்தரதாசர், கனகதாசர்.
மூன்றாம் கட்டம்: விஜயதாசர், மோகனதாசர், கோபாலதாசர், ஜகன்னாததாசர்
நான்காம் கட்டம்: பிராணேஷதாசர், குருபிராணேஷதாசர் ஆகியோர்
2. Dr.H.K.வேதவியாசாச்சார், ஹரிதாச சாகித்யத்தை 4 நிலைகளாகப் பிரித்திருக்கிறார். துவக்கம், வளர்ச்சி, விரிவு மற்றும் சரிவு நிலைகள். ஆனால், வளர்ச்சி, சரிவு ஆகிய சொற்களைப் பயன்படுத்துவது சரியில்லை என்பது பொதுவான கருத்து.
3. Dr.H.திப்பே ருத்ரஸ்வாமி: காலகட்டங்களை நான்கு நிலைகளாக பிரிக்கலாமே தவிர, ஹரிதாச சாகித்யத்தால் விளைந்த சமூக மாற்றங்களைக் கணக்கில் கொண்டால், இங்கிருப்பது ஒரே ஒரு நிலைதான் என்கிறார்.
4. Dr.K.G.சாஸ்திரி அவர்கள் ஹரிதாச சாகித்யத்தில் இருப்பது இரண்டே நிலைதான் என்கிறார். நரஹரி தீர்த்தர் முதல் புரந்தரதாசர் வரை முதல் நிலையும்; விஜயதாசரிடமிருந்து இரண்டாவது நிலையும் துவங்குகிறது என்பது இவர் கருத்து.
5. Dr.K.கோபால்நாத் அவர்களின்படி இதிலிருப்பது மூன்று காலகட்டங்கள். 1. ஸ்ரீபாதராயர் 2. விஜயதாசர் 3.தந்தேமுத்துமோகனவிட்டலதாசர் காலகட்டம்.
அந்தந்த காலகட்டங்களில் இருந்த ஹரிதாசர்களை வைத்தே இப்படி நிலைகளைப் பிரித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த காலகட்டங்களுக்கு அவர்களே பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் எனச் சொல்வது சரியாகுமா? சிந்திப்போம்.
R.S.பஞ்சமுகி மற்றும் Dr.G.வரதராஜ ராவ் அவர்கள், ஸ்ரீ நரஹரி தீர்த்தரை தங்கள் ஆராய்ச்சியில் சேர்க்கவில்லை. ஏனென்றால்:
* தாச சாகித்யம் அவருக்குப் பிறகு தொடரவில்லை
* அவரது சாகித்யம், 20ம் நூற்றாண்டின் சாகித்யத்தை ஒத்திருக்கிறது என்பது சிலரது வாதம்.
ஸ்ரீபாதராயர், ஸ்ரீவியாசராயர் மற்றும் ஸ்ரீவாதிராஜர் - யதித்ரயர்கள் என அழைக்கப்பட்டால், ஸ்ரீபுரந்தரதாசர் மற்றும் கனகதாசரை - தாச-த்வயர்கள் எனச் சொல்லலாம். ஹரிதாச சாகித்யம் என்னும் கங்கை இந்த காலகட்டத்திலிருந்து துவங்கியதால், இவர்கள் ஐவரையும் முதல் நிலை என்று கருதலாம்.
17ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயதாசர், கோபாலதாசர், ஜகன்னாததாசர் ஆகியோர் இரண்டாம் நிலையிலும்; பிராணேஷதாசர் ஆகியோர் மூன்றாம் நிலையிலும் வருகிறார்கள். ஜகன்னாததாசர் - இந்த குரு பரம்பரையில் வருகிறாரா என்பது யோசித்துப் பார்க்கவேண்டிய விஷயம். விஜயதாசரின் சொல்லிற்கேற்ப கோபாலதாசர், இவருக்கு ஆயுள் தானம் கொடுக்கிறார். அங்கிதம் கேட்டபோது, இவரை பண்டரிபுரம் போகச் சொல்கிறார் கோபாலதாசர். அங்கு ஜலாந்தர்யாமி சங்கர்ஷண ரூபி பரமாத்மாவிடமிருந்து அவர் அங்கிதம் பெற்றதாகக் கருதலாம். ஆகவே, ஜகன்னாததாசர், விஜயதாசரிடமிருந்தோ, கோபாலதாசரிடமிருந்தோ அங்கிதம் பெறவில்லை - ஸ்ரீஹரியிடமிருந்தே பெற்றார். ஆகவே, இவர் குருபரம்பரையில் வருவதில்லை. ஆனால், இரண்டாம் நிலையில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
புரந்தரதாசருக்குப் பிறகு, ஏறக்குறைய 150 ஆண்டுகள் சோர்வடைந்திருந்த ஹரிதாஸ சாகித்யம், வட கர்நாடகத்தின் பாகல்கோட் பிரசன்னவேங்கட தாசர், காகிண்டிகி மஹிபதி தாசர் ஆகியோர் வருகையால் மறுபடி வளரத் துவங்கியது. இந்த இருவரும்கூட எந்த குருபரம்பரையிலும் வரவில்லை. எவரின் காலகட்டக் கணக்கிலும் இவர்கள் இல்லை. ஆனால், இவர்களைப் போலவே உள்ள ஜகன்னாததாசர், இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்படுகிறார். ஏன்?
மேற்சொன்ன விவாதங்களுக்குப் பிறகு, ஸ்ரீபாதராயர், வியாசராயர், வாதிராஜர், புரந்தரதாசர் மற்றும் கனகதாசர் ஆகியோர் முதல் கட்டத்தில் வருகின்றனர் என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதே.
குப்தகாமி ஹரிதாசர்கள்: மஹிபதிதாசர், பிரசன்னவேங்கடதாசர் (இவர்கள் இருவரும் தாச-த்வயர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்).
விஜயதாசர், கோபாலதாசர், வேணுகோபாலவிட்டலதாசர் மற்றும் மோகனதாசர் - இரண்டாம் கட்டத்தில் வருகின்றனர்.
ஜகன்னாததாசர், பிராணேஷதாசர் மற்றும் அவரது சிஷ்யர்கள், வியாச விட்டலர் மற்றும் அவரது சிஷ்யர்கள் - மூன்றாம் கட்டத்தில் வருகின்றனர்.
பரமப்ரிய சுப்பராயதாசர் மற்றும் அவரது சிஷ்யர்கள் நான்காம் கட்டத்தில் வருகின்றனர்.
குருகோவிந்தவிட்டலதாசர் மற்றும் அவரின் சிஷ்ய பரம்பரையினர், 21ம் நூற்றாண்டில் வருபவர்கள் ஐந்தாம் கட்டத்தில் வருகின்றனர்.
தாச-சதுஷ்டயர் என்றால் என்ன? இந்த சொல்லாடலை சரியாகப் புரிந்துகொண்டோமா? புரந்தரதாசர், விஜயதாசர், கோபாலதாசர் மற்றும் ஜகன்னாததாசர் - இவர்கள் நால்வரை தாச-சதுஷ்டயர் என்று அழைக்கலாமா? இவர்கள் ஒரே காலத்தைச் சேர்ந்தவர் அல்லர்; ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவரும் அல்லர். 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர், 18ம் நூற்றாண்டில் பிறந்தவரை எப்படி பார்க்க முடியும்? ஆகவே, விஜயதாசர், கோபாலதாசர், வேணுகோபாலவிட்டலதாசர் மற்றும் ஜகன்னாததாசரை தாச-சதுஷ்டயர் என்று அழைப்பதே சரியானதாக இருக்கும். ஆனால் இப்போது மற்றொரு கேள்வி எழுகிறது.
மோகனதாசரும் தாச சாகித்யத்திற்கு நிறைய பங்களித்திருக்கிறார். ஆகவே, அவரை இந்த பட்டியலில் சேர்க்கலாமே? ஆனால், அவர் விஜயதாசரின் வளர்ப்பு மகன். ஆகவே, அவரின் இடத்தில், வேணுகோபாலவிட்டலதாசரை சேர்த்துவிட்டால், நமக்கிருந்த சந்தேகம் தீர்ந்தது. கற்றறிந்த சான்றோர் இதை சரிபார்க்கலாம். ஆகவே, விஜயதாசர், கோபாலதாசர், வேணுகோபாலவிட்டலதாசர் மற்றும் ஜகன்னாததாசர் ஆகிய நால்வரை ‘தாச-சதுஷ்டயர்கள்’ என்று அழைப்பதில் எந்தவித பிரச்னையும் இல்லை.
இதில் ஜகன்னாததாசரை எப்படி சேர்க்கலாம் என்று யாரேனும் கேட்டால், விடை மிகவும் எளிது. அவர் விஜயதாசர் மற்றும் கோபாலதாசரைப் பார்த்திருக்கிறார். குரு பரம்பரையில் வரவில்லை என்றாலும், தாச சாகித்யத்திற்கு பலமான பங்களித்திருக்கிறார். ஆகவே, அவரை இதில் சேர்த்தோம். யாருக்கேனும் மாற்றுக் கருத்திருந்தால் சொல்லவும்.
ஆனால், மேற்சொன்னதைப் போல, Dr.G.வரதராஜ ராவ் அவர்களின் ஆராய்ச்சியின்படி, புரந்தரதாசரைத் தவிர, மற்றவர்கள் இந்தப் பட்டியலில் வந்துவிடுகின்றனர். ஆகவே, புரந்தரதாசருக்குப் பதிலாக வேணுகோபாலவிட்டலதாசரின் பெயரைச் சேர்த்தால், தாச-சதுஷ்டயர் என்பதற்கு சரியான பொருள் வந்துவிடும் அல்லவா?
யதி-த்வயரு மற்றும் தாச-த்வயரு - இவர்களை முதல் கட்டத்தில் சேர்த்தால், ஹரிதாசர்கள் வாழும் காலத்திலிருந்து அவர்களை கண்டுபிடித்து ஒரு கட்டத்தில் (நிலையில்) சேர்க்கிறோம் என்று ஆகிவிடும். இதுவே, ஆராய்ச்சிகளின் முடிவின்படி கட்டங்களை (நிலைகளை) சொன்னால், அதில் மேலும் விவாதிக்க அவகாசம் இருப்பதில்லை.
தொழில்நுட்பம் மிகுந்த இந்தக் காலத்தில்கூட மத்வர், ஜயதீர்த்தர் மற்றும் வியாசராயர் மூவரும் ‘வாங்மய-த்ரயர்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. இவர்களுக்குள் 200 ஆண்டுகள் இடைவெளி இருக்கின்றது. ஆனால் எப்படி அப்படி அழைக்கப்படுகின்றனர்? ஆகவே, சரியான கருத்துக்களை எதிர்கால சந்ததிகளுக்குச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?
***
விஜயதாசர்
கூஸினமக தாசா என்று அழைக்கப்பட்ட தாசர், மனோநியாமகனான ருத்ரதேவரைப் தரிசிக்க வியாசகாசிக்கு மூன்று முறை சென்றார். மிகுந்த வைராக்கியத்துடன் இருந்த அவருக்கு, அங்கு ‘விஜயவிட்டலா’ என்ற அங்கிதம் - கனவில் வந்த புரந்தரதாசர் மூலமாக கிடைத்தது. ஹரிதாச பரம்பரையின் இரண்டாவது கட்டத்தின் முதல் ஹரிதாசராக ஆனார் விஜயதாசர்.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுக்கா, சிக்கல்பர்வியில் 1682ல் பிறந்தார் தாசர். விஜயவிட்டலா என்ற அங்கிதத்தில் பற்பல சூளாதிகளை இயற்றியுள்ளார். ஸ்ரீஹரியின் மகிமைகளை விளக்கும் விதமாக அவை உள்ளன. புரிந்து கொள்ள மிகவும் கடினமான தத்வவாதங்களை மிகவும் எளிமையான நடையில் விளக்கியுள்ளார். அவரது சூளாதிகள் - உபாசனை, பிம்பாபரோக்ஷா, முக்தி நிலை, ஆத்ம சமர்ப்பணம், கங்கணாகாரா - ஆகிய தலைப்புகளில் உள்ளன.
புரந்தரதாசரிடம் அங்கிதம் பெற்றவுடனேயே அவர் இயற்றிய பாடல் பின்வருமாறு.
அந்தரங்கத கதவு தெரெயுது இந்து
எந்தா புண்யத பல ப்ராப்தியாயித்தோ எனகே (அந்தரங்கத)
ஏசுதினவாயித்தோ பீக முத்ரே மாடி
வாசவாகித்தரு துரளல்லி
மோசவாகித்து இந்தின தனகா தமசின
ராசியொளகே ஹோலி காணி சுத்தித்தில்லா (அந்தரங்கத)
நம் உடம்பில் உள்ளும் வெளியிலும் தலா ஒன்பது கதவுகள் உள்ளன. வெளிப்புற ஒன்பது கதவுகளால் (ஒன்பது இந்திரியங்கள்) நமக்கு சுக துக்கங்கள் கிடைக்கின்றன. நம் ஆன்மாவில், இதயத்தில் சற்று உன்னிப்புடன் நோக்கினால், அங்கு இருக்கும் ஸ்ரீஹரியைக் (பிம்ப ரூப) காணலாம். முன்னர் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்தக் காட்சி காணக் கிடைக்கும்.
நாம் நம்மை சுயபரிசோதனை செய்துகொண்டால் மட்டுமே, புண்ணியம் செய்ய முடியும் என்று தாசர் சொல்கிறார். அப்பொழுது மட்டுமே இறைவனைக் காண முடியும். நம் அனைவருக்குள்ளும் அவன் இருக்கிறான். ஆனால் அவனை எப்படி காண்பது? இறைவனைக் காணும் முன்பு, நம் இதயத்தின் கதவுகள் மூடியிருப்பது மட்டுமல்லாமல் - நம்மிடம் இருக்கும் அரிஷட்வர்க (காமம், குரோதம், மோகம், லோபம், மதம் மற்றும் மாத்சர்யம் ஆகியன) மற்றும் ஒன்பது விதமான த்வேஷங்கள் - ஆகியவற்றால் அந்தக் கதவுகள் நன்றாக பூட்டு போடப்பட்டும் இருக்கின்றன. இப்படிப்பட்ட அறியாமையினால் அந்த ஸ்ரீஹரி இந்தக் கதவுகளின் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறான். அந்தக் கதவுகளைத் திறக்க நம்மிடம் சக்தி இருக்கிறதா?
குருகருண எம்பந்தா கீலிகை தொரகிது
ஹரிகருண எம்பந்தா சக்தியிந்தா
பரம பாகவதர சகவாசதல்லி போகி
ஹரி ஸ்மரணெயிந்தலி பீகவ தெரெதா (அந்தரங்கத)
குருவின குலாம ஆகுவ தனக தொரெயதண்ண முகுதி - என்று சொல்லியிருக்கிறார்கள். சாதிக்க நினைப்பவருக்கு குரு அவசியம். திருமணமான பெண்ணிற்கு அவளது கணவனே குரு; அவரின் உள் இருக்கும் இறைவனையே அவள் வணங்க வேண்டும். கடவுளின் கருணையாலேயே - அவர் நினைத்தால் மட்டுமே தகுந்த குரு கிடைப்பது சாத்தியம். அந்த கருணை இல்லாமல், ராயரின் பிருந்தாவனத்திற்கு தங்கக் கவசம் செய்து அணிவித்தாலும், அவரின் அனுக்கிரகம் கிடைப்பது கடினமே. உபதேசம் செய்யத்தக்க குரு கிடைப்பது கடினம்தான். ஆனால், அப்படி ஒருவர் கிடைத்தபிறகு, அவரிடமிருந்து காயத்ரி மந்திரம், ராமகிருஷ்ண மந்திரம், அங்கித நாம ஜபம் ஆகியவற்றை பெற வேண்டும். இவைகளே நம்முள் இருக்கும் கதவுகளைத் திறக்க உதவும் சாவிகள் ஆகும். இத்தகைய சாவிகளை பெறுவதே சாதிக்க நினைப்பவர்களுக்கு முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும்.
பத்தி கக்கடவெம்ப ஞான தீப
ஜத்தாகி ஹெடெகொண்டு த்வாரவன போகலு
எத்த நோடிதரத்த சிருங்கார சாதனா
சுத்தலித்தவர பாலாயனவாதரு (அந்தரங்கத)
நம்முள் இருக்கும் இறைவனைக் காண்பதற்கான ஒரே வழி - நாம ஜபம் செய்வதே ஆகும். இந்த நாம ஜபம் அதிகரிக்க அதிகரிக்க - அரிஷட்வர்க மற்றும் ஒன்பது வித த்வேஷங்கள் ஆகிய கெட்ட விஷயங்கள் களையும். நாம ஜபம் செய்யும்போது, இதயத்தில் இருக்கும் இருட்டு நீங்கி, அறிவின் ஒளி பெருகும். இந்த ஒளியால்தான் உள்ளிருக்கும் இறைவனை காண முடியும். ஆகவே, இந்த ஒளியைப் பெறுவதே நம் நோக்கமாக இருக்கவேண்டும் என்று தாசர் சொல்கிறார்.
ஹொரகெ த்வாரவு நால்கு ஒளகேஐது த்வாரகளு
புரத த்வாராதிகெ ப்ராணாதி ஜயரூ
மிருகவ மத்ய மண்டப கோடி ரவியந்தே
சரசிஜ நாபன அரமணெய சொபகு (அந்தரங்கத)
நம்முள் இருக்கும் ஸ்ரீஹரியைச் சுற்றி பல கதவுகள் (அரண்கள்) உள்ளன. முதல் நான்கு கதவுகளைக் கடந்தவுடன், அடுத்த ஐந்து கதவுகளைக் காணலாம். அவற்றையும் கடந்தால் ஒரு தாமரை. இந்த தாமரையிலேயே ஸ்ரீஹரி வசிப்பதாக ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஒன்பது கதவுகளிலும் பாரதி ரமணனான பிராணதேவன், ஒன்பது வித ரூபங்களில் வசிக்கிறார். அந்த முக்யபிராணனின் உள்ளிருக்கும் ஸ்ரீஹரியை, ஒவ்வொரு கதவைக் கடக்கும்போதும் வணங்குவது மிகவும் முக்கியமானதாகும். இதயத்தின் உள்ளே ஒரு அரண்மனை - அதற்குள் ஒரு தங்க மண்டபம் - அதற்குள்ளேயே இறைவன் இருக்கிறான். அந்த இறைவனைக் காண்பதே நம் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும் என்கிறார் தாசர்.
ஸ்வமூர்த்தி கண மத்ய சச்சிதானந்தைக
ரமெய தரதிந்த லா லிங்கைத்திதே
கமலஜாதிகளிந்த துதுசிகொளுத ஹ்ரு
கமலதொளகிர்த விஜயவிட்டலன கண்டே (அந்தரங்கத)
ஒரு கோடி சூரியனின் வெளிச்சத்தைப் போல உள்ளவனான ஸ்ரீஹரி, எப்படி தோற்றமளிக்கிறான் என்று யாரும் கேட்டால், சுயம்புவாக இருக்கிறான் என்று சொல்லவும். அவன் தனியாகவா இருக்கிறான்? இல்லை. ரமாதேவி (இலக்குமி) அவனுடன் இருக்கிறாள். ஸ்ரீஹரி எப்போதும் தனியாக இருக்கிறான் என்று நினைக்கவே கூடாது. வணங்கும்போதும் ரமாவுடன் கூடிய பஸ்சிம ரங்கன் என்றே வணங்க வேண்டும். ரமாதேவி, பிரம்மா, முக்யபிராணன், கருடன், சேஷன், ருத்ரன், இந்திரன், காமன் மற்றும் அனைத்து தத்வாபிமான தேவைதைகளும் அந்த ஸ்ரீஹரியுடனேயே இருக்கின்றனர். அந்த சர்வோத்தமன், இந்த எல்லா தேவதைகளுக்குள்ளும் வெவ்வேறு ரூபத்தில், அதே பிரகாசத்துடன் இருக்கிறார். எல்லா தேவர்களும் அவரை எப்போதும் துதித்தவாறே இருக்கின்றனர்.
தத்வாபிமானி தேவதைகள், முக்யபிராணர், ரமாதேவி ஆகியவர்களுக்குள் இருக்கும் அந்த பிம்பரூபி பரமாத்மனை நான் கண்டேன் என்கிறார் விஜயதாசர். அந்த தரிசன அனுபவத்தையும் ஒரு பாடலில் பாடியிருக்கிறார். நாமும் அதைப்போலவே (அவர் பாடியிருப்பதைப் போலவே) செய்தால், நாமும் நம்முள் இருக்கும் பிம்பரூபி பரமாத்மாவைக் காணலாம் என்பதே அவர் நமக்குக் கொடுக்கும் செய்தியாகும்.
விஜயதாசர் பற்பல பாடல்கள், சூளாதிகள் மற்றும் கேசவநாமாவைப் பாடியிருக்கிறார். பலருக்கும் அங்கிதத்தையும் கொடுத்திருக்கிறார். அவர்களில், கோபாலதாசர், ஹயவதன விட்டலதாசர், வேணுகோபால விட்டலதாசர், மோகனதாசர் முக்கியமானவர்கள் ஆகும். இதனால், தாச பரம்பரையை வளர்ப்பதிலும் விஜயதாசர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
கோபாலதாசர்:
இவர் விஜயதாசரின் சலபிரதிமை (நடமாடும் பிரதி) எனக் கருதப்படுகிறார். மேலும், இவரை நினைத்தவுடன் தன்வந்திரி அவதாரமும் நினைவுக்கு வரும்.
என்ன பின்னப கேளோ தன்வந்திரி தய மாடோ
சன்னவனு இவ கேவல
பண்ணபடிசுவ ரோகவன்னு மோசனே மாடி
சென்னாகி பாலிசுவுதே கருணி (என்ன)
ஜகன்னாத தாசருக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தானம் அளிக்குமாறு கோபாலதாசரிடம் விஜயதாசர் சொன்னவுடன், கோபாலதாசர் உடனடியாக அப்படியே செய்து, அந்தச் செயலை விஜயதாசருக்கு தமது குரு தட்சிணையாக அர்ப்பணம் செய்தார். இதனால் ஜகன்னாத தாசரின் ஆயுள் அதிகரித்து, பின் அவர் ஒரு மகத்தான கிரந்தத்தை - ஹரிகதாம்ருதசாரம் - எழுதினார். மேற்சொன்ன ஆயுள் தானம் செய்யும்போது எழுதப்பட்ட பாடலே இது.
ஹே தன்வந்திரி, நான் சொல்வதைக் கேள். இவன் மிகவும் சிறியவன். தீராத வயிற்றுவலியால் தவிக்கிறான். தயைகூர்ந்து இந்த நோயை தீர்த்து வை.
ஆரோக்ய ஆயுஷ்ய ஐஸ்வர்யவெம்ப
ஈ மூரு வித வஸ்துங்களு
நாராயணன பஜகராதவர சாதனக்கே
புராணவாகிப்பவோ
கோர வியாபிசார பரனிந்த பரவித்தாப
ஹார மாடித தோஷதி
தாரித்ர்யராகுவரு ஈ மூரு விததிந்தலி
காரணனு நீனே துஷ்கர்ம பரிஹரிஸோ
ஸ்ரீஹரியை வணங்குவதற்கு நல்ல உடல்நலம், பொருள் மற்றும் ஆயுளும் வேண்டும். இவை எல்லாம் வேண்டும் என்றால் பிறன்மனை நோக்குதல், பிறரின் செல்வத்தை அபகரித்தல் மற்றும் பிறரை தூஷித்தல் - ஆகியவற்றை செய்திருக்கக்கூடாது. இவற்றை நாம் செய்யாதிருந்தால், அதுவே சிறந்த செல்வம் ஆகும். மேலும் தாசர் - ஸ்ரீஹரியே, இவை எல்லாவற்றிற்கும் நீயே காரணம். ஆகவே, இவனை (ஜகன்னாத தாசரை) இந்த நோயிலிருந்து விடுவி என்கிறார். அவர் சொல்வது அனைத்தும் நமக்கும் அப்படியே பொருந்தும்.
வசுமதிய மேலின்னு அசுர ஜனரே பஹள
வஷவல்ல கலிய பாதே
பிசிலிந்த பேடிதவாத சசிகளந்தே
சிஷுகளு நா விப்பேவு
அசுராரி நின்ன கருணாம்ருதத மளிகெகளனு
குஷதல்லி பாலிசுவதோ
கெசரிந்த கெசரு தொளதந்தே கர்மத பதவு
அசுனாத ஹரியே சலஹோ, ஸ்வாமி (என்ன)
ஹே தன்வந்திரி - இந்த உலகத்தில் கலியால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். கடும் வெய்யிலினால் மரம் பட்டுப் போவதைப் போல், உன் கருணை இல்லாமல் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் செய்த பாவங்களைப் போக்கி, எங்களுக்கு கருணை காட்டவும்.
அன்யரனு பஜிசதலே நின்னன்னே பஜிசுத்த
நின்ன சின்னெகளன்னு தரிஸி
நின்ன நாமோச்சரிஸி நின்னவர நெனிஸி
நின்னிந்த உபஜீவிஸி
அன்ன ஆரோக்யவு அல்பவூ ஆகே இன்னு
அன்யரிகே அல்பரியபேகே
நின்ன சங்கல்ப பக்தரனு போஷினெம்போ
கன்ன பிருதன்னு உளுஹோ ஸ்வாமி (என்ன)
ஹே தன்வந்திரி - நாங்கள் எப்போதும் உன்னையே வணங்குகிறோம். உன் சின்னங்களான - சங்கு, சக்ரம், கதை, பத்மம் மற்றும் நாராயண முத்ரிகைகளையே எங்கள் அங்கங்களில் தரிக்கிறோம். உன் அடியார்களுடனேயே பழகுகிறோம். எங்களை எப்போதும் உன் நினைவுகளிலேயே மூழ்கி இருக்கச் செய். உணவு, உடை மற்றும் உடல் நலத்திற்கு எப்போதும் குறை வைக்காதே. உன் மற்றொரு பெயர் பக்தாபராதீனன் (பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன்) அல்லவா? ஆகவே, உன் பார்வையை எங்கள் மேல் செலுத்தி, எங்களை காப்பாற்றுவாயாக.
ஆதிவியாதிகளு உன்மாத விப்ரம நானா
பாதேகெ ஔஷதவு நீனே
ஈ தாவ கரமலதிம் சுதேகரெதே
சாதுகள பாலிசுவெ நீ
மோதபடிசுவி நின்ன சாதிசுவவரிகெ
சுபோதயங்கள நீ நீடி
ஆதரிஸி இவகெ தவபாத பஜனெயன் இத்து
சாதுகளொளிரிஸி மோதகொடு சர்வதா (என்ன)
ஹே தன்வந்திரி, அனைத்து நோய்களுக்கும் (பவ ரோகங்கள்) நீயே மருந்து ஆதலால், இவரை (ஜகன்னாத தாசரை) குணப்படுத்தி, காப்பாற்று. எங்களை எப்பொழுதும் உன் நினைவுகளிலேயே வைத்திரு, உன் புகழை பாடுமாறு செய், உன் அடியார்களின் சேவை செய்ய எங்களுக்கு அனுக்கிரகம் செய். எங்களை ஆனந்தமாக வைத்திரு.
நின்னவரலி இவகே இன்னு ரதியனெகொடோ
நின்னவரனெந்து அரிது
நின்ன பிரார்த்திஸிதே நானன்யரிகெ அல்பரியே
என்ன பாலிசுவ தொரெயே
என்ன மாதல்லவிது என்ன ஹிரியர மாது
மன்னிசபேகு கருணி
அனந்த குணபூர்ண கோபால விட்டல
இன்னிதகே பாலிசுவதோ ஸ்வாமி (என்ன)
ஹே தன்வந்திரி - இவர் (ஜகன்னாததாசர்), என் குருவை (விஜயதாசர்) ஒரு முறை அவமதித்திருந்தாலும், இவர் இன்னொரு முறை அப்படி செய்யாதிருக்க - நீ இவருக்கு உன் கருணையைக் காட்டு; எங்களைக் கரையேற்றுமாறு வேண்டி - உன்னைத் தவிர நான் வேறு எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. இது என் வேண்டுகோள் அல்ல; இவருக்கு ஆயுள்தானம் கொடுக்க வேண்டி என் குருவின் ஆணை. ஆகவே, தயவு செய்து இவரைக் காப்பாற்று. நீ எங்கும் வியாபித்திருக்கிறவன். கோபாலகர்களை நீ காப்பாற்றியிருக்கிறாய். நீயே கோபால கிருஷ்ணன். ஹே விட்டலா, இது என் மற்றும் என் குருவின் பிரார்த்தனை ஆகையால், உன் கருணையை இவனுக்கு உடனடியாக காட்டி, கரையேற்று.
நான்கு ரொட்டிகளை இறைவனுக்கு படைத்து, அவற்றை ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு கொடுத்தார். அவரும் ஒவ்வொரு ரொட்டியிலிருந்தும் ஒரு துண்டு பிய்த்து உண்டார்.
மொதல பக்ரியல்லி ரிக் வேத
எரடனே பக்ரியல்லி யஜுர் வேத
மூரனே பக்ரியல்லி சாம வேத
நால்கனே பக்ரியல்லி அதர்வண வேத
மேற்கண்ட வரிகளைப் பாடி அந்த ரொட்டிகளைக் கொடுக்கவும், அதை சாப்பிட்ட ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு உடனடியாக மயக்கம் தெளிந்தது. பின்னர், ஜகன்னாததாசராகி ‘ஹரிகதாம்ருதசாரம்’ என்னும் மிகச்சிறந்த - வேதங்களின் சாரமான நூல் ஒன்றை எழுதி, தன் குருவிற்கு அர்ப்பணித்தார்.
குறிப்பு: ஒருவர், மற்றொருவருக்கு ஆயுள் தானம் செய்வது சாத்தியமா? ஆம் என்றால், எப்படி? இதற்கு யார் பதில் அளிப்பார்? இப்படி தானம் செய்வதற்கான வழிமுறைகள் என்ன? இதை யார் சொல்வார்? முன்னர் என்னென்ன சொன்னார்களோ, அதை அப்படியே ஏற்கவேண்டியதுதான் நம் கடமையா? இவற்றிற்கு யார் பதில் அளிப்பார்கள்?
மொசரகல்லு கிராமம், தேவதுர்கா தாலுக்கா, ராய்ச்சூர் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த முராரிராயா மற்றும் வெங்கம்மாவிற்கு நான்கு ஆண் பிள்ளைகள். அவற்றில் மூத்தவர் பாகண்ணா. இவரே இந்தக் கதையின் கதாநாயகர். 1722ம் ஆண்டு பிறந்தார். இவரின் தம்பிகளான தாசப்பா, சீனப்பா மற்றும் ரங்கப்பா இன்னும் சிறுவர்களாக இருந்தபோதே, இவர்களின் தந்தை முராரிராயா இறந்து போனார். இக்குடும்பமே அதிர்ச்சியில் தத்தளித்தது. தாயாரான வெங்கம்மா குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார். அக்கஷ்டத்தில் சமாளித்து, பாகண்ணனுக்கு உபநயனம் செய்வித்து, காயத்ரி மந்திர உபதேசம் செய்வித்தார். அன்றிலிருந்து பாகண்ணன் நாள்தோறும் தவறாமல் காயத்ரி மந்திர ஜபம் செய்து வந்தார். ஒருவரின் அடுத்த மூன்று பிறவிகளை கண்டறியும் திறன் பெற்றிருந்தார். காயத்ரி மந்திர ஜபம் செய்ததாலேயே இப்படி கிடைத்தது - ஆகவே இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.
இவர்கள் அனைவரும் உத்தனூர் வெங்கப்பா என்பவரின் வீட்டில் வசித்து வந்தனர். இறைவனின் கருணையால், வெங்கட கிருஷ்ணா என்கிற அங்கிதத்துடன் பாகண்ணன் பாடல்கள் இயற்றத் துவங்கினார். பிறகு, விஜயதாசர் இவருக்கு ஆதோனி மங்கராயா கோயிலில், ‘கோபால விட்டலா’ என்ற அங்கிதத்தை வழங்கி ஆசி புரிந்தார். அன்றிலிருந்து இவர் விஜயதாசரின் பிரதிநிதி ஆனார்.
வெங்கடராமராயா, ஸ்ரீனிவாசாசார்யா மற்றும் தன் மூன்று தம்பிகளுக்கு தன் கருணையை வழங்கினார். ஆண்டுதோறும் திருப்பதி பிரம்மோத்சவத்திற்கு, தன் குரு விஜயதாசருடன் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கோபாலதாசர், இந்தியா முழுக்க பயணம் செய்திருந்தாலும், விட்டலா என்ற அங்கிதம் பெற்றிருந்தாலும், இதுவரை பண்டரிபுரம் போகாமல் இருந்தார். ஒரு நாள், பாண்டுரங்க விட்டலன் இவர் கனவில் வந்து - ஆலே லஹி (மராத்தியில் - இன்னும் வரவில்லை) என்றார். கோபாலதாசர் இன்னும் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதையே சுட்டிக் காட்டினார்.
பண்டரிபுரம் வராததற்கு பாண்டுரங்கனிடம் மன்னிப்பு கேட்டவாறு - நீல குதுரெயனேறி ஷாலு தொங்கக்க சுத்தி’, என்ற பாடல் இயற்றி, பின் பண்டரிபுரமும் சென்று வந்தார். 1762ம் ஆண்டு, சித்ரபானு வருடம், புஷ்ய மாதம், கிருஷ்ண அஷ்டமி அன்று தன் இன்னுயிர் நீத்தார்.
***
வேணுகோபாலவிட்டல தாசர்
பங்க நாமத திம்மண்ணா என்றும் பெயர் கொண்ட வேணுகோபாலவிட்டல தாசர், தற்போதைய ஆந்திரத்தைச் சேர்ந்த ஆதோனியைச் சேர்ந்தவர் ஆவார். ருக்மம்மா தம்பதிகளுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர் ஹிரெ திம்மண்ணா. அடுத்தவர் சிக்க திம்மண்ணா. மூன்றாமவர் நாகப்பா. இந்த இரண்டாவது மகனே பங்க நாமத திம்மண்ணா ஆவார். ’அதோனி வஸாலத் ஜங்க’ என்னும் நபாப்’பின் கீழ், திவானாக பணிபுரிந்து வந்தார்.
விஜயதாசர் எப்போது அதோனி வந்தாலும், இவர்களது வீட்டில் தங்குவது வழக்கமாக இருந்தது. அப்போது ஒரு சமயம், வேணுகோபாலவிட்டல தாசரின் தாய், விஜயதாசரிடம் - நீங்கள் எப்போது இங்கு வந்தாலும், என் மகன் தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு உங்களுடனேயே இருந்துவிடுகிறான். அதனால் அவன் தன் வேலையை இழக்கக்கூடும் - என்றார். இதைக் கேட்ட விஜயதாசர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி, அடுத்த முறையிலிருந்து அங்கு வந்து தங்குவதை தவிர்த்தார். இதைக் கேள்விப்பட்ட திம்மண்ண தாசர், விஜயதாசரிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு அங்கிதம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். விஜயதாசரும், அவருக்கு வேணுகோபாலவிட்டல தாசர் என்ற அங்கிதம் கொடுத்து அவரை ஹரிதாசர் ஆக்கினார்.
விஜயதாசர் இவரை ஏன் பங்க நாமத திம்மண்ணா என்று அழைத்தார்?
அப்படி அவர் கூப்பிட்டதாலேயே, உண்மை என்ன என்று தெரிந்துகொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. திம்மண்ணா முந்தைய பிறவியில் பேலூர் வைகுண்ட தாசராக பிறந்திருந்தார். பேலூர் கேசவனுக்கு சேவை செய்து, அவனின் கருணையைப் பெற்றவர். இதன் காரணமாக, இந்தப் பிறவியிலும் திம்மண்ணனின் நெற்றியில் மூன்று நாமங்களை தான் காண்பதாக விஜயதாசர் கூறினார்.
வேணுகோபாலவிட்டல தாசர், பற்பல பாடல்கள் மற்றும் சூளாதிகளை இயற்றியுள்ளார். 1738 ஸ்வாதாரி ஆண்டு வைசாக மாதம் சுத்த த்ருதியை திங்கட்கிழமை அன்று தன் இன்னுயிர் நீத்தார்.
மேலே சொன்னாற்போல், இவர் முந்தைய பிறவியில் வைகுண்ட தாசராக பிறந்திருந்தார். அப்போது நஞ்சுண்டா என்றொரு சிறுவன் இவருக்கு உதவியாக இருந்தார். அவனது உதவிகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த தாசர், அவனுக்கு வர இருந்த ஆபத்தைத் தடுத்து, அவனுக்கு இரண்டாண்டு காலம் ஆயுள் தானம் அளித்தார்.
பிறகு வைகுண்ட தாசர், வேணுகோபாலவிட்டல தாசராக பிறந்திருக்கையில், அதே நஞ்சுண்டா, கல்லூர் சுப்பண்ணா என்ற பெயரில் பிறந்து - வியாஸ விட்டலா என்ற அங்கிதம் பெற்றார். விஜயதாசரின் ஆசியும் பெற்றார்.
இவர்களினால், இந்த 21ம் நூற்றாண்டிலும் தாச பரம்பரை வளர்ந்து வருகிறது. ஆகவே, வேணுகோபாலவிட்டல தாசரை, தாச சதுஷ்டயரில் சேர்ப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஜகன்னாத தாசர்
1650ம் ஆண்டு கீலக நாம சம்வத்சரம் சிராவண சுக்ல த்விதியை 27/01/1728 அன்று, திருப்பதி ஸ்ரீனிவாசரின் அருளால், நரசிம்ம தாசர் மற்றும் லக்ஷ்மக்காவுக்குப் பிறந்த ஸ்ரீனிவாசன், பல மொழிகளைக் கற்றுணர்ந்த பண்டிதராக வளர்ந்தார்.
ஸ்ரீ வரதேந்திர தீர்த்தர் மற்றும் மந்திராலயத்தில் பல பண்டிதர்களிடம் 12 ஆண்டுகள் பல பாடங்களைக் கற்று, த்வைத சித்தாந்தத்தில் சிறந்து விளங்கினார். கற்றறிந்தவர்கள் சபையில் ‘ஆசார்யா’ என்று அழைக்கப்பட்டார்.
நம் மாத்வர்களில் தங்கள் பெயருக்குப் பின்னால் ‘ஆசார்யா’ என்று பலர் சேர்த்துக் கொள்வது வழக்கம்தானே? யதித்ரயர்கள் மட்டுமே இப்படி சேர்த்துக் கொள்ள தகுந்தவர்கள் எனக் கூறலாம். அத்வைதிகள் மற்றும் விசிஷ்டாத்வைதிகள் இப்படி சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான மாத்வர்கள் - அவர் யாராக இருப்பினும் - சமையல் கலைஞர், பண்டிதர், சொற்பொழிவாளர் - ‘ஆசார்யா’வை சேர்த்துக் கொள்கிறார்கள். இப்படி செய்வது காலப்போக்கில் நின்றுவிடவேண்டும் என்று விரும்புகிறோம். இதைப் பற்றி புரந்தரதாசர் கூறுகையில்:
ஆசாரியர் எம்புவர இவர நோடி
ஆசார பல்லவரே ஆசாரியரு (ஆசாரியர்)
ஆ எந்தரே அதி தத்வவ திளிதவரு
ஆதுளித மதத்வம்ஸ மாடுவரு
அதிதி அப்யைகதரிகே அன்னவன்னே எக்குவரு
ஆயுத வ்ருத்தியன்னே மாடுவரு (ஆசாரியர்)
ச எந்தரே சாஞ்சலாத்மவன்னே அளிதவரு
சென்னாகி வேத சாஸ்திரவன்னே ஓதிதவரு
சலனே இல்லதே குருஹிரியரிகே எரகுவரு
சானஸ பிட்டவரு ஆசாரியரு (ஆசாரியர்)
ரு எந்தரே ருணவ மாடதித்தவரு
ரிபுமித்ர சமரெந்து காம்புவரு
காவ்ய சௌவர்ணவு ம்ருத்திகெயெந்து நோடுவரு
ரமாதவ புரந்தர விட்டலன பல்லவரே ஆசாரியரு (ஆசாரியர்)
இப்போது கூறுங்கள். இவர்களை ஆசாரியர் என்று அழைக்கமுடியுமா? இல்லை. அவர்களின் பெயரை மட்டும் மரியாதையுடன் அழைத்தால் போதுமே?
ஜகன்னாததாசர் மான்வியில் வசித்தபோது, ஒரு நாள் அங்கு விஜயதாசர் வந்திருந்தார். ஸ்ரீனிவாசாச்சாரியரைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் விஜயதாசர். ஒரு நாள், ஸ்ரீனிவாசாச்சாரியரின் வீட்டு வழியே செல்லும்போது, அவரை பிராமணராக உணவருந்த அழைத்தார். ஆனால், ஸ்ரீனிவாசாச்சாரியாருக்கு விஜயதாசரைக் கண்டாலே பிடிக்கவில்லை. நைவேத்யம் ஆனபிறகும் ஒருமுறை சொல்லி அனுப்பினார். ஆனால், ஸ்ரீனிவாசாச்சாரியரோ, தனக்கு வயிற்று வலி என்றும், தாம் ஏற்கனவே உணவருந்தி விட்டதாகவும் கூறிவிட்டார். இதைக் கேட்ட விஜயதாசர் - கடவுள் சித்தம் என்றார்.
அதே கடவுளின் சித்தப்படியே, ஸ்ரீனிவாசாச்சாரியருக்கு கடுமையான வயிற்றுவலி வந்து, நாளுக்கு நாள் அது மோசமடைந்து வந்தது. பொறுத்துக் கொள்ள முடியாததால், திருப்பதி மற்றும் கடிகாசலத்திற்குச் சென்று வேண்டினார். ஆனால், வலி குறையவில்லை. பின்பு ஒரு நாள், கருணைக் கடலான ஸ்ரீராகவேந்திரர் இவரது கனவில் வந்து, விஜயதாசரைப் பணிந்தால் இந்த வலிக்கு தீர்வு கிடைக்கும் என்றார். இதைக் கேட்ட தாசர், சிக்கலபரவிக்குச் சென்று விஜயதாசரிடம் தன் முந்தைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு, அவரது ஆசியை வேண்டினார்.
ஸ்ரீனிவாசாச்சார்யரின் ஆயுள் முடிவுறப் போவதைக் அறிந்த விஜயதாசர், அவரை கோபாலதாசரிடம் அனுப்பினார். விஜயதாசருக்கு அப்போதே 54 வயது ஆகியிருந்தது. விஜயதாசர் ஏற்கனவே தன் 2.5 ஆண்டு ஆயுளை கேசவாச்சார் மற்றும் சிலருக்குக் கொடுத்திருந்தார். மேலும், ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தேவைப்பட்டது - அதை கோபாலதாசரால் மட்டுமே கொடுக்க முடியும். கோபாலதாசரும், விஜயதாசரின் ஆணைக்கேற்ப, தன் ஆயுளிலிருந்து 40 ஆண்டுகளை ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு தானமாகக் கொடுத்துவிடுகிறார்.
இதற்குள் ஸ்ரீனிவாசாச்சார்யாரின் கர்வம் அடங்கிவிடுவதால், அவர் கோபாலதாசரிடம் அங்கிதம் வேண்டினார். கோபாலதாசரும் ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு ஹரிதாஸ தீட்சை கொடுத்து, அங்கிதத்திற்காக பண்டரிபுரம் போகும்படி சொன்னார். அங்கு சந்திரபாகா நதியில் குளிக்கும்போது, ‘ஜகன்னாத விட்டலா’ என்ற பலகை ஒன்று கிடைத்ததால், அதை ஜலாந்தர்யாமி சங்கர்ஷணரூபி பரமாத்மாவின் வாக்காக ஏற்று, அதையே தன் அங்கிதமாக வைத்துக் கொண்டார். அன்றிலிருந்து, அதே அங்கிதத்தில் பற்பல பாடல்களை இயற்றி, ஜகன்னாத தாசர் என்று பெயர் பெற்றார். தன் நேரம் அனைத்தையும் பாடல்களால் இறைவனின் பெயர் பாடுவதிலேயே செலவழித்தார்.
1. ஹரிகதாம்ருதசார - பாமினி ஷட்பதி என்கிற செய்யுள் வகையில் எழுதியது
2. தத்வ சுவ்வாலி - 1200 பத்யங்களால் ஆனது
3. பலவிது பாளுதக்கே என்ற பாடல்
4. நரசிம்ம சூளாதி, மற்றும் பல பாடல்கள் & சூளாதிகள்
தடி தோடி நிபகாயோ
ஜகன்னாதவிட்டலனய்யா விட்டலனய்யா
நீ கருணிசதே நிராகரிசலு என்ன சாகுவர் யாரோ
தயபாரா மூர்த்தே
விட்டலய்யா விட்டலய்யா
மேற்கண்ட பாடலைப் பாடத்துவங்கினார்.
82 ஆண்டுகள் வாழ்ந்து, 1731 சுக்ல நாம சம்வத்சரம் பாத்ரபத சுத்த நவமி ஞாயிறு அன்று 8.30 மணிக்கு தன் இன்னுயிர் நீர்த்தார் ஜகன்னாத தாசர்.
தத்வ சுவ்வாலி
துளசி ஸ்தோத்ரம்
விருந்தாவனி ஜனனி வந்திசுவே சததஜ
லந்தரன ராணி கல்யாணி
கல்யாணி ஸ்ரீ துளசி
மந்திரெ எனகே தயவாகே
ஸ்ரீ துளசி தேவி மன்னாத லாலிசு
ஜகன்னாத விட்டலன்ன சரண
ஜகன்னாத விட்டலன்ன சரணாப்ஜ ஹ்ருதயாதி
நீதோரி நித்ய கிருபெயிந்த
மேலும் இவர் பிரம்ம, வாயு, ருத்ர, நவக்ரக, வினாயக, தசாவதார, வெங்கடேச, ஸ்ரீனிவாச ஸ்தோத்ரங்கள் மற்றும் ருக்மிணி விலாஸ ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.
துரிதவன குடாரி துர்ஜன குலவைரி
சரணாகத வஜ்ரபஞ்சர குஞ்ஜர
மந்த்ர துல்யவாத ந்ருஸிம்ஹ சூளாதி
அனேக ஈப்சித கொடுவந்தத்தாகிதே
பலவிது பாளுதக்கே
சிரி நிலயன குணகள திளிது பஜிசுவுதே
இறைவனின் மகிமைகளை தெரிந்து கொண்டு, அதைப்பற்றி பாடுவதே நாம் பிறந்ததற்கான பொருள் ஆகும் என்கிறார்.
சோசித கர்மகள ஆசரிசுதபலு நீசரல்லிகே போகி யாசிசதே
கேசரவாஹ சராசர பந்தக மோசக நஹுதெந்து யோசிசுதிப்புதே (பலவிது)
நம் அன்றாட தேவைகளுக்கு நாம் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது. கருட வாகனனான ஸ்ரீஹரியை யார் எப்போதும் நினைத்துக் கொள்கிறாரோ, அவர் ஆனந்தமாக இருப்பார். நித்ய கர்மானுஷ்டானங்களான - ஸ்நானம், சந்தியாவந்தனம், ஜபம், தபம், தானம், தர்மம், அத்யயனம், அத்யாபனம், தீர்த்தயாத்திரை ஆகியவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்கிறார் தாசர்.
நிச்ச சுபகுதிய அச்யுதலங்க்ரி களர்ச்சிஸி மெச்சிஸி தெச்சரதி
துச்ச விஷயகள இச்சைசதே யெத்ருச்சா லாபதிம் ப்ரோச்சனாகுவுதே (பலவிது)
’அமலா பக்திஸ்ச தத் சாதனம்’ அதாவது ஸ்ரீஹரியிடம் பக்தி மட்டும் இருந்தால் போதாது, அது தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம் என்று ஸ்ரீவியாச தீர்த்தர் சொல்லியிருப்பதாக தாசர் இங்கு விளக்குகிறார். அந்த ஸ்ரீஹரிக்கு மாற்று யாருமே கிடையாது. நாம் எப்போதும் அவன் அடிகளை வணங்கவேண்டும். இருப்பதை வைத்து யார் திருப்தியுடன் வாழ்கிறாரோ, அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.
பிகித கண்டதிம் த்ருக்பாஷ்பகளிம்
நகெமொகதிம் ரோமகளொளிது
மிகெ சந்தோஷதிம் நெகெதாடுத
நான்முகன அய்யன பொகளி ஹிக்குவுதே (பலவிது)
கடவுளை வணங்குவது ஒரு கலை. இதில் நாம் கற்றுத் தேற வேண்டும். அவனை நினைத்தாலே, நம்மையறியாமல், நம் கண்களிலிருந்து கண்ணீர் வரவேண்டும். நாம் அப்படி இருக்கிறோமா? கத்திவாறு, சத்தமாக சிரித்து, ஆடிப்பாடி அவனைத் தொழவேண்டும். இதுவே ஒரு உண்மையான பக்தனின் அடையாளம் ஆகும். இப்படி யார் செய்கிறாரோ, அவரது வாழ்க்கை - பலவிது பாளுதக்கே - அர்த்தமுள்ளதாகும்.
பன்னகாசல சுசன்னிவாச பாவன சரித சத்குண பரித
ஜன்யஜனக லாவண்யனேக நிதி ஜகன்னாத விட்டலா நான்யப நெம்புதே (பலவிது)
சேஷ சயனனான ஸ்ரீஹரி, நம்முள்ளும் இருக்கிறான். அவனது குணங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். உலகத்தின் அரசனே நமக்குள்ளும் இருக்கிறான் என்று நாம் நம்பினால், நம் வாழ்க்கை - பலவிது பாளுதக்கே - அர்த்தமுள்ளதாகும்.
27 பத்திகள் கொண்ட - நட்சத்திர மாலிகே - என்று அழைக்கப்படும் இந்தப் பாடலில், பஞ்சபேத (ஐந்து வேறுபாடுகள்), தாரதம்யம் (படிநிலை), த்வைத சித்தாந்தம் என அனைத்தையும் விளக்கியிருக்கிறார் தாசர். நம் வாழ்வில் ஆனந்தம் வேண்டுமானால், நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும்? இதற்கான விடைகளை தாசர் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இதைப் புரிந்து கொண்டு, பாடி, அதன்படி நாம் வாழவேண்டாமா?
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து.
***