Tuesday, August 22, 2017

குருகோவிந்தவிட்டலதாசர்


குருகோவிந்தவிட்டலதாசர்

தாசரின் 25ம் ஆண்டு ஆராதனையின்போது எழுதப்பட்ட கட்டுரை
கன்னடத்தில்: ஹரதி பிரகலாதாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்.

***



நான் பார்த்தவரையில், தன்னலமற்ற மிகச்சிறந்த ஹரிதாசர் என்றால் அவர் மைசூரின் ஸ்ரீகுருகோவிந்தவிட்டலதாசர்தான் என்று சொல்வேன். 1975-76ம் ஆண்டுவாக்கில் நான் அவரைச் சந்தித்ததே ஒரு ஆச்சரியமான சம்பவம்தான். மைசூரில் பள்ளால் சர்க்கிள் அருகே வசித்து வந்த அவரைச் சந்திக்கப் போனால், யாருக்குமே அவரின் இல்லம்/விலாசம் தெரியவில்லை. அன்றிரவு அவரைப் பார்க்கமுடியாமல், மறு நாள் காலை மறுபடியும் தேடிச் சென்றேன். அப்படியும் அவரது இல்லம் கிடைக்காததால், சரி, இதுவே ஸ்ரீஹரியின் சித்தம் என்றெண்ணி, அங்கிருந்து புறப்பட்டு சேஷசந்திரிகாச்சாரியரின் ஆராதனைக்கு டி. நரசிப்புர் செல்லலாம் என்று புறப்பட்டேன். 

அப்போது அங்கு ஒரு வயதான ஸ்மார்த்த பிராமணர் தன் பேரனுடன் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். சாட்சாத் ருத்ரதேவரைப் போலவே அவர் எனக்குத் தெரிந்தார். அவரிடம் விலாசம் கேட்கலாம் என்றெண்ணி கேட்டேன். தானும் தாசர் வீட்டு வழியேதான் போகிறேன், நீங்களும் வாருங்கள் என்று என்னைக் கூட்டிச் சென்றார். ஒரு ஆட்டோ பிடித்துப் போனோம். சரியாக தாசர் வீட்டு வாசலில் நிறுத்தினார். நான் ஆட்டோக்கு பணம் கொடுத்துவிட்டுத் திரும்புவதற்குள், அந்த முதியவரைக் காணவில்லை. 

வீட்டினுள் சென்று, குருகோவிந்தவிட்டலதாசரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். என் நலத்தை விசாரித்தார். அன்றிலிருந்து அவரிடம் கடிதத் தொடர்பில் இருந்தேன். பின்னர் அவரிடம் கிருஷ்ண மந்திர உபதேசத்தையும் பெற்றேன். 

தேவதேவதைகள், யதிகள் மற்றும் ஹரிதாசர்களைப் பற்றி சுமார் 800 பாடல்கள் இயற்றியுள்ளார் தாசர். இதைத் தவிர 265 பேர்களுக்கு அங்கிதம் கொடுத்து, அதற்கான பாடல்களையும் இயற்றியுள்ளார். ஆக இதையும் சேர்த்தால், மொத்தம் 1000 பாடல்களுக்கு மேல் அவர் இயற்றினார் எனக் கொள்ளலாம். 

இதைத் தவிர, நதி ஸ்தோத்ரம், குசேலோபாக்கியானம், அன்னபிரம்மா, ஆத்யாத்மிக வெங்கடேச கல்யாணம் மற்றும் கன்னடத்தில் ஷட்பதியில் தசோபனிஷத் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். ஸ்ரீமத்வரிலிருந்து துவங்கி 20ம் நூற்றாண்டு வரை யாருமே இந்த அளவிற்கு  வேலைகளைச் செய்ததில்லை என்று கூறலாம். தம் சிஷ்யர்களுக்கு ஏதேனும் இன்னல் வந்தால், அவர்களுக்காக சிறப்புப் பாடல் எழுதி, தீர்வுக்காக ஸ்ரீஹரியை வேண்டுவார். 7 பாகங்களைக் கொண்ட ஹரிபக்தி விஜய என்னும் நூலில் உலகத்திற்குத் தெரியாத பல ஹரிபக்தர்களை அறிமுகப்படுத்தினார். மேலும் சுந்தரகாண்டம், ராமாயணம், ஐ.ஜி. ஸ்வாமிகளின் மானஸ ஸ்ம்ருதி ஆகியவற்றை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்தியா முழுவதும் சுற்றி வந்து, தீர்த்தயாத்திரை செய்ததால், தீர்த்தக்‌ஷேத்ர மாலா என்னும் 96 பத்யங்களைக் கொண்ட நூல் ஒன்றை எழுதியுள்ளார். 

தன் அனைத்து புத்தகங்களிலும், தத்வாபிமானி தேவதைகள் மற்றும் ருத்ராங்கர்கத பாரதிரமண முக்யபிராணார்ந்தர்கத ஸ்ரீஹரிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தத்வாபிமானி தேவைதைகளின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது. மேலும், அவரின் புத்தகங்களை அந்த ஸ்ரீஹரியேதான் எழுதுகிறான், தான் ஒன்றுமே செய்யவில்லை என்றும் கூறுகிறார். 

தன் சிஷ்யர்களுக்கு அங்கிதம் வழங்குவதற்கு ஒரு தனிப்பட்ட முறையைக் கடைப்பிடித்தார். சிலரை தாமாகவே அழைத்து அங்கிதம் வழங்கினார். வேறு சிலருக்கு, அவர்கள் ஸ்ரீஹரிக்கு சேவை வழங்க வேண்டி அங்கிதம் அளித்தார். அங்கிதம் கொடுக்கும் முன்பு, ஸ்ரீஹரியை வணங்குவார். அங்கிதம் கொடுப்பவர் & அங்கிதம் வாங்குபவர், இருவருக்கும் நல்ல ஒரு கனவு (கனவில் ஸ்ரீஹரி) வரும்வரை காத்திருப்பார். பின், பிம்பரூபி பரமாத்மாவை வணங்கி, சிஷ்யருக்கு அங்கிதம் கொடுப்பார். பிராமணர்கள் அல்லாத பலருக்கும்கூட தாசர் அங்கிதம் கொடுத்துள்ளார். இப்படிச் சொல்வதால், அவர் போவோர் வருவோர் அனைவருக்கும் அங்கிதம் கொடுத்துவிட்டதாக பொருள் கொள்ளக்கூடாது.

தம் சிஷ்யர்களிடத்தில் மிகுந்த அன்பும் கவனமும் செலுத்திவந்தார் தாசர். மிகவும் முதுமை நிலை அடைந்திருந்தாலும், யார் எந்த விழாவிற்கு அழைத்தாலும், எவ்வளவு தூரம் இருந்தாலும், தவறாமல் அங்கு போய் அவர்களை வாழ்த்திவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

ஒரு முறை, ஒரு பெண்மணி தனக்கு அங்கிதம் வழங்குமாறு அவரது இன்னொரு சிஷ்யை மூலமாக தாசரிடம் வந்தார். அவரிடம் சில கேள்விகளைக் கேட்ட தாசர், அவருக்கு ஸ்ரீஹரியின் கனவு வந்தபிறகு வருமாறு சொல்லி அனுப்பிவிட்டார். 4-5 ஆண்டுகள் ஸ்ரீஹரியை வேண்டியும், சரியான கனவு வராததால், அவர் தாசரின் சிஷ்யையிடம் சென்று வேண்டினார். அவரும் தாசரிடம் இதைச் சொல்லி, அவருக்குப் பதிலாக தான் ஸ்ரீஹரி சேவை செய்யலாமா எனக் கேட்டார். தாசரும் சரி எனச் சொல்ல, சிஷ்யையும் சேவை செய்யத் துவங்கினார். அடுத்த 10-12 நாட்களிலேயே அவருக்கு தகுந்த கனவு வந்துவிட்டது. ஒருவரின் சேவை, அடுத்தவருக்காக (அங்கிதம் வாங்குவதற்காக) பயன்படுகிறது என்கிற இந்த நல்ல சம்பவத்தைக் கேட்டாலே மகிழ்ச்சி வருகிறதல்லவா? இதைப் போல, சில வேறு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. 

தாசர் எங்கும் அதிகம் பேசுபவரில்லை. பெங்களூரில் தாசருக்கு ஒரு விழா எடுத்தபோது, நாங்களும் அங்கு இருந்தோம். அப்போது அவரிடம் ‘மைக்’ கொடுத்து பேசச் சொன்னார்கள். தனக்குப் பதிலாக தன் சிஷ்யர்களில் ஒருவர் பேசுவார் என்று கூறிவிட்டார் தாசர். தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்தியதில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது.

அகில பாரத ஹரிதாச சம்மேளன் நடத்தும் விழாக்களில் அனைத்திலும் கலந்து கொண்டு, பல ஆண்டுகள் புரந்தரதாசர் ஆராதனையை மிகச்சிறப்பாக நடத்தினார். ’யாயிவாரவ மாடி விப்ரரிகெ ம்ருஷ்டான்ன, ப்ரியதலி தானொந்து கொடத லோபி’ - புரந்தரதாசரைக் குறித்து வியாசராஜர் எழுதிய இந்தப் பாடலை மனதில் கொண்டு - இந்த உலகத்திற்கு பல ரத்தினங்களைக் (சிஷ்யர்கள், பாடல்கள்) கொடுத்து, பலருக்கும் ஊக்கமாகத் திகழும் இவரை - அபினவ புரந்தரதாசர் என்று அழைத்தாலும் மிகையில்லை.

ஒரு விஷயம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதை கண்டிப்பாகச் செய்தே ஆகவேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர் தாசர். திருப்பதி மற்றும் பண்டரிபுரத்தில், புரந்தரதாசர் ஆராதனை செய்யும்போது நடந்த சம்பவங்களே இதற்கு உதாரணம். 

ஒரு முறை கோதாவரி நதிக்கரையில், கற்றறிந்தவர்கள் உதவியுடன் பிருஹதி சஹஸ்ர ஹோமம் நடத்த தாசர் முடிவு செய்தார். ஹோமத்திற்கு தேவையான செங்கல்களை தாமே மந்திரங்களை சொல்லியவாறு சுட்டு, அதை ஹோமம் செய்யும் இடத்திற்கு கொண்டு வரச்செய்து, அதுவரை நடந்திறாத வகையில் பிருஹதி சஹஸ்ர ஹோமத்தை சிறப்பாக நடத்திக் காட்டினார். ஹோமம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பிராமணர் அல்லாத ஒரு தெலுங்கர் எழுந்து, அந்த ஸ்ரீஹரியே நம் அனைவரையும் வாழ்த்த இங்கு வந்துவிட்டார் என்று கூறினார். திடீரென்று எழுந்து - குதிரையின் மேலேறி (கல்கி அவதாரம்) அந்த ஸ்ரீஹரி வந்துவிட்டான் - அனைவரும் அவனைப் பாருங்கள் என்று கத்தினார். 

ஸ்ரீவாதிராஜரின் சிறப்பு அனுக்கிரகத்தை தாசர் பெற்றிருந்தார். ஸ்வப்னவிருந்தாவனாக்யான என்னும் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் ஹோமத்தில் இது கண்கூடாகத் தெரிந்தது. தன் 89ம் வயது வரை, தன்னை ஸ்ரீஹரியிடம் முழுவதுமாக ஒப்படைத்த தாசர், 1983ம் ஆண்டு மார்கசீர்ஷ பகுள த்வாதசியன்று, அனந்தபுரத்தில் இறைவனடி சேர்ந்தார். அந்த ஒப்பற்ற தாசரை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். 

ஸ்ரீவாதிராஜரின் அத்யந்த பக்தராகத் திகழ்ந்த தாசர், சொண்டாவில் கடினமான பயோ விரதம் மேற்கொண்டார். தன் அல்லது தன் சிஷ்யர்களின் வாழ்க்கையில் எந்தவித கஷ்டங்கள் வந்தாலும், ஸ்ரீவாதிராஜருக்கு சேவை செய்து, அதற்கான தீர்வு கிடைக்கும்வரை அடுத்த வேலையைத் துவங்க மாட்டார். அவரின் பக்தியை இந்த மாதிரி செயல்களே சொல்கின்றன. 

1983ம் ஆண்டு புரந்தரதாசரின் ஆராதனை, ஸ்வாதியில் (சொண்டா) கொண்டாப்படுவதற்காக மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்தது. தாசரே இந்த விழாவிற்கான அழைப்பிதழை தம் கைப்பட வழங்கியும், அனைத்து வேலைகளையும் மேற்பார்வை பார்த்தும் வந்தது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஆனால் என்ன ஆயிற்று? ஆராதனைக்கு ஒரு மாதம் முன்னதாக, தாசர் தம் இன்னுயிர் நீத்தார். அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினாலும், அவர் இருந்திருந்தால் எப்படி கொண்டாடியிருப்பாரோ, அதேபோல் சிறப்பாக அவ்விழாவை கொண்டாடி முடித்தனர் அவரது சிஷ்யர்கள். அவர் நம்மை விட்டு நீங்கி, தற்போது 30 ஆண்டுகள் ஆனாலும், புரந்தரதாசர் ஆராதனை அங்கு மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவரை நாம் எப்படி ஹரிதாசர் என்று கூப்பிடலாம் என்று யாரேனும் கேட்கலாம். இதற்கான பதில் - அவரது புகைப்படத்தை / தோற்றத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஆனால், நாம் அவருடைய படைப்புகளையும் பார்க்கவேண்டும். இவரை மட்டுமல்ல. எந்த ஒரு ஹரிதாசரைப் பற்றி பேச முற்பட்டாலும், முதலில் அவர்களது படைப்புகளைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், ஆச்சாரியர் மத்வர் சொன்னதுபோல், அவரது அம்சம் சிறிதளவு அவரின் கிரந்தங்களில் இருக்கிறது. இதேபோல்தான், தாசர்களின் அம்சமும் எனக் கொள்ளவேண்டும்.

கெரெய நீரனு கெரெகெ செல்லி - என்று புரந்தரதாசர் சொன்னதுபோல், தாசர் தம் வீட்டையே விட்டலனின் கோயிலாக மாற்றினார். விட்டலின் சிலையை அங்கே நிறுவி, எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டினார். தாசரினாலேயே, மைசூர், இரண்டாம் பண்டரிபுரம் என்று பெயர் பெற்றது. ’தாசனாகு விசேஷனாகு’ என்ற பாடலுக்கு விசேஷமான உரை எழுதி தம் சிஷ்யர்களை நல்வழிப்படுத்தினார்.

20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஹரிதாசர் குருகோவிந்தவிட்டலதாசர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எதுவுமே தெரியாத எனக்கு தாசர் மிகவும் கருணை காட்டி, தன் அளவற்ற ஆசியை எனக்கு வழங்கினார். தன் சொந்த வாழ்க்கையில் பல்வேறு தியாகங்களைப் புரிந்தவர். தாசருடனான சந்திப்பு எனக்கு எப்போதும் மகிழ்ச்சியையே தந்தது. ‘பலவிது பாளுதக்கே’ என்ற பாடலின் பொருளே, அவரது வாழ்க்கையின் தத்துவமாக அமைந்தது. 

விஜயதாசரின் பரம்பரையில் வந்த தந்தெமுத்துமோகனவிட்டலதாசரின், கடைசி சிஷ்யர்களில் ஒருவர் நம் தாசர். தந்தெமுத்துமோகனவிட்டலதாசர், ஸ்ரீவரவிட்டலதாசர் மற்றும் முத்துமோகனவிட்டலதாசரின் சிஷ்யர் ஆவார். குருகோவிந்தவிட்டலா என்ற அங்கிதத்தைப் பெற்று, ஹரிதாச பரம்பரையில் சேர்ந்தார். ‘ஹரிதாச குலதிலகா’ என்று அழைக்கப்பட்ட தாசர், கர்நாடகத்தில், குறிப்பாக மைசூர் பகுதிகளில் ஹரிதாச சாகித்யத்தையும், தாசகூடா’வையும் பரப்பியதில் மிகவும் முக்கியமானவர். ஹரிதாச பரம்பரையின் ஐந்தாம் கட்டத்தின் முதல் தாசராகக் கருதப்படும் குருகோவிந்தவிட்டலதாசரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இவரைப் போல இன்னும் பலர் இவ்வுலகில் பிறந்து நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டுமென்று ஸ்ரீஹரியை வேண்டுகிறேன். இளம் வயதினருக்கு சரியான வழிகாட்டியாக இருந்தவரை மேலும் பலருக்கும் அடையாளம் காட்டவேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை எழுதப்பட்டது.

ஜெய் பஸ்சிம ரங்கா
ஜெய் பாரதீஷா
ஜெய் வாதிராஜார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment