யட்சகானா
01-07-2007 அன்று வெளியிடப்பட்ட புத்தகம்
வெளியீடு: ஹரிதாச சாகித்ய மகாவித்யாலயா
கன்னடத்தில்: ஹரதி பிரகலாதாச்சார்
தமிழில்: திருமதி. சவிதா ராவ்
சரிபார்த்தல்: T.V.சத்ய நாராயணன்.
***
கர்நாடகாவின் ஹரிதாசர்கள் பொது மக்களுக்கு தத்வஞானத்தை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதுவரை இந்தத் துறையில் இவர்களை மிஞ்சியவர்கள் / சவால் விட்டவர்கள் யாரும் இல்லை என்று கூறுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதற்குக் காரணம் அவர்கள் மத்வ சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.
ஹரிதாச சாகித்யம் இன்று வரை உள்ள பல கலை வடிவங்களுக்கான ஒரு அடித்தளமாக உள்ளது. இந்த சாகித்யத்தில் நாம் கமகத்தின் (வசன காவியம்) இருப்பை உணர முடியும். இது நடனத்திற்கு தொடர்புடையது. கலையுலகில் முதலிடத்தில் இருக்கும் கர்நாடக இசைக்கு சரிசமமான நிலையிலேயே தாச சாகித்யமும் வைக்கப்படுகிறது. இது கதா காலட்சேபத்துடனும் ஒன்றி இருக்கிறது. இவற்றை தவிர, தாச சாகித்யமானது, யட்சகானா கலை வடிவத்துடனும் தொடர்புடையதாக உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
உடுப்பி மாவட்டத்தில் நடனக் கலைஞர்களால் நடத்தப்படும் யட்சகானா நடனத்தில் தாச சாகித்யம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று நாம் கூறினால் தவறாகாது. இந்த இடத்தில் பல ஹரிதாசர்கள் தங்கள் பாடல்களின் (தாசர பதங்கள்) மூலம் யட்சகானாவை செழிப்புறச் செய்தார்கள்.
யட்சகானா வெறும் நடனம் ஆடுவது மட்டும் அல்ல. இது ஒரு நடன நாடகம். ஹரிதாச சாகித்யத்தில் விளக்கப்பட்டுள்ள விஷயங்களையும் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியையும் காட்சியாக காட்ட இது ஒரு முயற்சியாகும்.
கர்நாடகத்தின் பாரம்பரிய நடன (பரதநாட்டியம்) வடிவத்திலும் யட்சகானத்திலும் நிறைய வித்தியாசங்கள் இருந்தபோதிலும், இரண்டின் நோக்கம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. கர்நாடகத்தின் பாரம்பரிய நடனம் மற்றும் இசையானது, இறைவன் மீது பக்தி வெளிப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. யட்சகானத்தில் நடனம் ஆடுவதை தவிர, தேவையான இடங்களில் இசை மற்றும் நாடகமும் பயன்படுத்தப்படுகிறது. யட்சகான நிகழ்ச்சிகள் நடனம், இசை மற்றும் நாடகத்தின் கலவையாக இருக்கும். முற்றிலும் நாடகம் அல்லது முற்றிலும் நடனம் அல்ல.
உடுப்பி, மங்களூரு, சிர்சி, தர்மஸ்தாலா, ஹொன்னவரா, தார்வாட் மற்றும் மானவி போன்ற பல இடங்களில் இந்த வகை கலை நிகழ்ச்சி நடக்கிறது. இந்தியாவைத் தவிர, சர்வதேச மேடைகளிலும் யட்சகானா கலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நபர் யார்? யட்சகானாவின் வளர்ச்சிக்கு யார் வேலை செய்தார்கள்? இதன் வளர்ச்சி ஆசாரியர் மத்வர் வழியாக நடந்தது, ஏன் என்றால் அவரின் பிறந்த இடம் பாஜகா. யட்சகானா கலையை சிலர் “பயலட்டா” என்று கூறுகிறார்கள். ஒரு வேளை ஆசாரிய மத்வா் கூட இந்த நடனத்தை ஆடி இருக்கலாம். த்வாதச ஸ்தோத்திரத்தை மிக அற்புதமாகப் பாடிய பெரிய துறவி, இன்றும் அவருடைய பரம்பரையின் நோக்கம் பயலாடத்தோடு ஒன்றி இருக்கிறது என்றால், அவர் அந்த கலையில் நிபுணராக இருந்திருக்க வேண்டும்.
1262 ஆம் ஆண்டில், மன்னர் மும்மாடி வீரா நரசிம்மர் ஸ்ரீகாகுளத்தை அவரது தலைநகரமாக ஆக்கினார், இது கலிங்க ராஜ்யத்திற்கு சொந்தமானது. கலிங்க ராஜா வைஷ்ணவத்தைப் பின்பற்றுபவர் என்று வரலாற்றில் இருந்து நமக்கு தெரியவருகிறது, ஒருமுறை ஆசாரியர் ஸ்ரீ மத்வர், கலிங்க ராஜ்யத்திற்கு விஜயம் செய்தபோது, மன்னர் அவரை மரியாதையுடன் வரவேற்றார், ஸ்ரீ கிருஷ்ண தர்மம் அதாவது ஸ்ரீ பாகவத தர்மத்தின் தீட்சையை ஆசாரியரிடம் பெற்று, அந்த தர்மத்தை பரப்பலானார். வீர நரசிம்மனின் அரசபையில் நிதி மந்திரிகளாக இருந்த ஸ்வாமி சாஸ்த்ரிகள் மற்றும் சோபன பட்டர் இருவரும் ஆசாரியா மத்வருடன் வாக்குவாதம் செய்து, பிறகு ஆசிரமத்தைப் பெற்று அவருடைய சீடர்களாக மாறினர். அவர்களே நரஹரி தீர்த்தா் மற்றும் பத்மநாப தீர்த்தா் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
கலிங்க ராஜா பானுதேவா இறந்தபின், நரஹரி தீர்த்தருக்கு, யானை மாலை அணிவித்ததால், அவரே அங்கு அடுத்த ராஜாவானார். அடுத்த 9 ஆண்டுகளுக்கு அவர் ராஜ்யத்தை ஆட்சி செய்தார். ராஜ்யத்தை ஒப்படைத்தபோது, கருவூலத்தில் இருந்த ஸ்ரீராமச்சந்திரனின் சிலையை பரிசாக எடுத்துக் கொண்டார். சுமார் 1293 ஆம் ஆண்டில் நரஹரி தீர்த்தர் உடுப்பிக்கு வந்து ஸ்ரீ ராமரின் சிலையை ஆசாரியா மத்வரிடம் சமர்பித்தார் என்பதை அறிவோம். நரஹரி தீர்த்தர் பல தேவர நாமங்களையும் எழுதியுள்ளார், அவற்றின் மூலமாகவும் அவர் மக்களுக்கு பக்தி யோகத்தைப் பரப்பினார்.
நரஹரி தீர்த்தருக்கு அநேக சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் கோபால கிருஷ்ண சரஸ்வதி அவரது விருப்பமான சீடர் ஆவார். சரஸ்வதி, அவ்வப்போது நேரம் கிடைத்த சமயத்தில், சிறிய சமஸ்கிருத நாடகங்களை எழுதுவார் மற்றும் நரஹரி தீர்த்தர் முன் நடித்தும் காட்டுவார். இந்த நாடகங்களெல்லாம் ஸ்ரீகாகுளம் (துர்கா) கோவிலில் நடைபெற்றன என்பதை நாம் அறிகிறோம். இந்த நாடகங்களைக் கண்ட சித்தப்பா என்று அழைக்கப்படும் ஒருவர் அறிவொளி பெற்று சித்தப்பா யதி ஆனார். இந்த சிறிய நாடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஸ்ரீ கிருஷ்ணனின் மேல் பக்தி செய்ய ஊக்குவித்தது என நம்பப்படுகிறது. நரஹரி தீர்த்தர் சித்தப்பாவை உடுப்பிக்கு அனுப்பி வேதங்கள் மற்றும் நாட்டிய சாஸ்திரங்களை கற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். 20 ஆண்டுகளுக்கு பயின்று நன்றாக தேர்ச்சி பெற்று அவர் ஸ்ரீகாகுளம் கோவிலுக்கு (கலிங்க ராஜ்யம்) வந்தார், பின்னர் அவரே புகழ்பெற்ற சித்தேந்திர யதி (முனி) என்று அழைகப்பட்டார் என்று கூறப்படுகிறது. இவர் "பாமா கலாபம்" என்ற ஒரு பக்தி நாடகத்தை எழுதினார் மற்றும் இளம் குஷிபூடி பிராமண சிறுவர்களை கொண்டு ஒரு நாட்டிய நாடகத்தை நடத்தினார் என்று ஐதீகம்.
டாக்டர் சிவராமகரன்தா மற்றும் ஸ்ரீ கனகலிங்கீஸ்வரா இவர்களால் சொல்லப்பட்ட கதை உண்மை என்றால், 20 ஆண்டுகள் உடுப்பியில் தங்கியிருந்தபோது தென் கனராவில் பிரசித்தி பெற்ற யட்சகானா மற்றும் பயலாட்டம் போன்ற கலைகளால் சித்தேந்திர யதி கவரப்பட்டார் என்று யூகிக்கலாம். (யட்சகானா பயலாட்டா டாக்டர் சிவராமகரன்தா பக்கம் 46-47)
ஸ்ரீ நரஹரி தீர்த்தர் இந்த சமயத்தில் ஆசாரியா மத்வரிடம் சீடராக இருந்தார் என்பது நமக்குத் தெரியும். ஸ்ரீ ராமரின் சிலை கொண்டுவரவே நரஹரி தீர்த்தரை கலிங்க ராஜ்யம் அனுப்பும் காரணமாக இருந்தாலும், அப்பகுதியில் பாகவத தர்மத்தின் (ஸ்ரீ ராம பக்தியை) விதைகளை விதைப்பதே ஸ்ரீமத்வரின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஸ்ரீ நரஹரி தீர்த்தர் தனது பணியை செவ்வனே முடித்து குரு தட்சிணையாக ஸ்ரீ ராம விக்கிரகத்தை ஆசாரியா மத்வரிடம் சமர்ப்பித்தார். இதற்குப் பிறகு ஆசாரியா மத்வர் மற்றும் நரஹரி தீர்த்தர், யட்சகானா மற்றும் பயலாட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி நம்மைப் போன்ற மக்களுக்கு பாகவத தர்மத்தை பரப்பினார்கள். இந்த காரணத்தால், உடுப்பி மண்டலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் இந்த நடனம் பிரபலமானது.
யட்சகானா பயலாட்டம், பாகவத ஆட்டம், பெரிய ஆட்டம், சிறிய ஆட்டம் ஆகிய சொற்கள் எல்லாம் பர்யாயா தொடர்பான வார்த்தைகளாகிவிட்டன. இவை அனைத்தும் ஸ்ரீ ஹரிக்கு காட்சி செயல்திறன் மூலம் செய்யப்படும் சேவையின் ஒரு வடிவம் என்று நாம் சொன்னால் அது தவறு அல்ல.
இன்றும் கூட உடுப்பியின் அஷ்டமடத்தின் சன்யாசிகள் யட்சகானா பயலாட்டத்திற்கு மிக சிறப்பான முக்கியத்துவம் தருகி்றனர். ஆசார்யர் மத்வர், ஸ்ரீ நரஹரி தீர்த்தரை இந்த பாகவத சம்பிரதாயமான பயலாட்டத்தை சிறு சிறு கிராமங்களுக்கு பரப்புவதற்கு நியமித்தார். நரஹரி தீர்த்தரின் வாயிலாக ஆசார்யர் மத்வர் பாகவத நடனம் அல்லது தசாவதார நடனம் என்ற கலையை நடைமுறையில் கொண்டு வந்தார். இன்றும் கூட இந்த கலை தேசிய மற்றும் சர்வதேச அரங்கங்களில் நன்றாக வளர்ச்சி அடைந்து முன்னேறி வருகிறது.
பயலாட்ட கலை பல்வேறு பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதினால் அங்குள்ள மொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைக்கு ஏற்ப இந்தக் கலையில் சிறு சிறு சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்டன. இவற்றின் அடிப்படையில், பயலாட்டத்திற்கு தற்போது கீழே விளக்கப்பட்டுள்ளபடி ஐந்து வெவ்வேறு வடிவங்கள் உள்ளன.
1) ஆந்திரப் பிரதேசத்தில் அது குச்சுப்புடி நடனம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்ப நாட்களிலிருந்து இது மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது,
2) தமிழ்நாட்டில் இந்த பாகவதா நடனம் தெருக்கூத்து என்று அழைக்கப்படுகிறது.
3) மகாராஷ்டிராவில் இந்த பயலாட்டம் தாசராட்டா (அல்லது ராதநாட்டா) என அழைக்கப்படுகிறது. இதற்கு மராத்தியில் நகைச்சுவை என்று அர்த்தம்.
4) கர்நாடகத்தில் இது பாகவத மேளா, பயலாட்டா, சன்னாட்டா, யட்சகானா, தொட்டாட்டா என்று அழைக்கப்படுகிறது.
5) கேரளாவில் நடக்கும் கதகளி, தார்மீக கதைகள் நடனமாக நிகழ்த்தப்படும் யட்சகானாவைப் போன்றது.
யட்சகானா இந்த 5 வெவ்வேறு நடனங்களை கலந்த நடனமாகும். இதில் நாம் நடனம் மற்றும் இடை இடையே உரையாடல்களைக் காணலாம். இடையே பாடல்களும் பாடப்படுகின்றன. பாடல் இருந்தால், நிச்சயமாக அதில் ஸ்வரம் மற்றும் சாகித்யம் கண்டிப்பாக இருக்கும். இந்த ஆட்டம் வயல்களின் நடுவில் மேடை அமைத்து நடத்தப்பட்டது.
ஹரிதாசர்களில் மூன்று அல்லது நான்கு வகையானவர் உள்ளனர்.
1) தொழில் ரீதியாக, குருவிடம் அங்கிதம் பெற்று அவர்களின் வம்சத்தை தொடர்ந்தவர்கள்.
2) அங்கிதமே பெறாதவர்கள்.
3) தொழில் ரீதியாகவோ அல்லது பரம்பரையாகவோ ஹரிதாசர்களாக இருந்தவர்கள், அவர்களுக்கு இடையே வேறுபாடுகள் நிறைய உள்ளன.
இந்த வகையில் யட்சகானா மற்றும் பயலாட்டத்திற்கு ஒரு கலை வடிவத்தை கொடுத்து நடைமுறைப்படுத்திய பெருமை ஸ்ரீ நரஹரி தீர்த்தரையே சேரும். இதிலிருந்து நாம் ஸ்ரீ நரஹரி தீர்த்தர் இரு கலை வடிவங்களான யட்சகானா மற்றும் கந்தர்வ கானாவில் நிபுணர் ஆவார் என்பதை அறிகிறோம்.
நரஹரி தீர்த்தர் மூலமாக ஆந்திராவைச் சேர்ந்த மக்கள், இந்த நடன வடிவத்திற்காக நிறைய முயற்சி செய்து கர்நாடகத்திற்கு புகழைச் சேர்த்தனர்.
ஆதமாரு மடத்தின் பரம்பரையில் முதல் துறவியான (மூல புருஷர்) நரஹரி தீர்த்தர், ஸ்ரீ பத்மநாப தீர்த்தரிடம் விரிவான அனைத்து சாஸ்திரங்களையும் பயின்று ஹம்பிக்கு வந்து பலவிதமான சாதனைகள் புரிந்து குரு மற்றும் பரம குருவின் ஆசிகளோடு ஹம்பியில் ஒரு குன்றில் பிருந்தாவனத்தில் பிரவேசித்தார். அவர் ஸ்ரீ ஜகன்னாத தீர்த்தருக்கு சன்யாச ஆசிரமம் கொடுத்ததாக நம்பப்படுகிறது. குச்சுபுடி, யட்சகானா மற்றும் பயலாட்டம் ஆகிய கலை வடிவங்களுக்கான தந்தையாகத் திகழ்கிறார் என்று கூறினால் மிகையாகாது.
இசை, நடனம் மற்றும் உரையாடல் கர்நாடகத்தின் யட்சகானத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இது பொதுவாக ஒரு வயலின் மத்தியில் ஒரு மேடையின் மேல் ஆடப்படுகிறது. கர்நாடக மொழியில் யட்சகானா, தொட்டாட்டா அல்லது மூடலபாயா என அழைக்கப்படும் இந்தக் கலை மக்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு பொழுதுபோக்கு.
I) தொட்டாட்டாவின் சிறப்பு என்ன? இது மூடலபாயா என்று அழைக்கப்படுகிறது. இதில் தாச சாகித்யத்தில் இருப்பது போல புராணக் கதைகளை அதிக அளவில் உபயோகப்படுத்திருப்பதை நாம் காணலாம்.
*
தோட்டாடத்தில் இரண்டு வகையான கலைஞர்கள் இருக்கிறார்கள். முன்னணி (மும்மேலா) மற்றும் பின்னணி (ஹிம்மேலா) என்று அழைக்கப்படுகின்றனர். மேடையில் பிரவேசிக்கின்ற பொழுது முன்ணனி நடிகர்கள் தனது சொந்த குரலில் பாடிக்கொண்டு வருவார்கள். ஆனால் பின்னணியில் பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது, முன்னணி நடிகர்கள் மேடையில் நடனமாடுவார்கள்.
நாடகத்தை முன் நின்று நடத்துபவர் சாரதி (தலைவர்) என்று அழைக்கப்படுவார். இசை மற்றும் வாத்தியம், இந்த நபரின் பாட்டு மற்றும் இடத்திற்கு ஏற்ப இருக்கும்.
அனைத்து நாடக நிகழ்ச்சிகளும் ஸ்ரீ விநாயகரை பிரார்த்தனை செய்த பிறகு தொடங்கும்.
சாரதி, ஒவ்வொரு மேடை நடிகரையும், நாடகத்தில் அவர் வகிக்கும் பாத்திரத்துடன் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவார். ஒவ்வொரு நடிகரும் அறிமுகப்படுத்தும் பொழுது அவரவர் பாத்திரத்திற்கு ஏற்ப சில வசனங்களை பேசுவர். அந்த நாட்களில் மேடை விளக்குகள், மற்றும் பெரிய பெரிய எண்ணெய் விளக்குகளை (தீப்பந்தம்) ஏற்பாடு செய்து நாடகத்தை நடத்தி வந்தனர். "மனோ ராயா" என்ற நாடகம் தொட்டாட்டாவில் மிகவும் புகழ் பெற்று இருந்தது.
II) சன்னாடா: இது யட்சகானத்தை தழுவிய ஒரு வகையான நடனம். சைவ மற்றும் வைஷ்ணவ மதத்தை பரப்புவதற்கு உருவாக்கப்பட்டது. இன்றைய நாட்களின் பெரும் பண்டிதர்களின் கருத்துப்படி இந்த வகை நடனம் முதன்முதலாக பெலகாவி மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் தொடங்கப்பட்டது. இங்கே குறிப்பிடத்தக்க சில சூத்திரகள் (கணக்கீடுகள்) பயன்படுத்தப்பட்டு ஆடுபவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் இந்த வகை நடனம் "டப்பினாட்டா" என்று அழைக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் "சங்கியபால்ய" என்ற நடனத்தை இயற்றிய "பத்தர மாஸ்தர்" என்ற கலைஞர் மிகவும் பிரபலமாக போற்றப்பட்டார். யட்சகானா, நாட்டுப்புற நடனம், பாணியில் நடனம் ஆடுவது கண்களுக்கு ஒரு அரிய விருந்து.
III) பாரிஜத ஆட்டம்: சன்னாட்டத்தின் ஒரு வடிவமான இந்த பாரிஜத ஆட்டம், ஸ்ரீ கிருஷ்ண பாரிஜத ஆட்டம் என்று வைஷ்ணவ பிரிவினால் அழைக்கப்பட்டது. இதில் கதை எழுதிய எழுத்தாளர் மற்றும் பாத்திரத்தை வகிக்கும் நடிகர்களை மக்கள் "இத்தூத" என்று அழைப்பார்கள். முன்பே விளக்கப்பட்டுள்ளது போல், இந்த வகை நடனமும் விநாயகர் பிரார்த்தனையுடன் துவங்கும். பின்னணி மேளக்கார்கள் உடன் இரு பாடகர்களும் இருப்பார்கள். நடனத்தில் பங்குபெறும் ஒவ்வொரு "இத்தூதியையும்" அறிமுகப்படுத்தும் வழக்கம் உள்ளது. நாடகத்திற்கு இடையில், பாரம்பரிய மற்றும் புதுமையான பாடல்கள் கலந்து மேடையில் கலைஞர்களால் பாடப்படுகிறது.
எப்போழுதும், புராணக் கதைகளில் நடிக்கும் போது ராட்சதர்களின் பாத்திரம் இது போலவே இருக்கிறது. இந்த சன்னாட்டத்தில் ராட்சதரின் பாத்திரத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம், அவன் அப்படி இருப்பான் இப்படி இருப்பான் என்று ஊகிப்பதற்கு பதிலாக, நேரில் காண்பதற்கு உற்சாகம், அச்சம் போன்ற உணர்வுகள் சகஜமாக வரும். அந்தந்த பாத்திரத்திற்கு ஏற்ப வேடம், நடை, உடை மற்றும் ஒரு விசித்திரமான சப்தத்துடன் மேடைக்கு அழைத்து வருவதே மிகவும் மகிழ்ச்சியை தருவது, வேடிக்கையானது என்பது இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலைஞர்களின் கருத்து. மேலும் விளக்குகள் மற்றும் தீவட்டியின் வெளிச்சத்தால் ஒரு துஷ்ட சக்தி வருகின்றது என்பதிற்கு அடையாளமாக ராட்சதரை மேடையில் காட்டுகின்றனர் .
துஷ்ட மக்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர்களை அழிக்க நாசம் செய்ய அனைவரிலும் சுதந்திரமான பரமாத்மா இருக்கிறான் என்பதை காட்டுவதற்காகவும், அந்த பரமாத்மாவின் பாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயிலாட்டா நடன வடிவங்களில் இது ஒரு பொதுவான குறிக்கோளாக உள்ளது என்று சொன்னால் மிகை இல்லை.
யட்சகானா மனித வாழ்க்கைக்கு தேவைப்படும் திறனைக் கொடுக்கும் ஒரு மகத்துவமிக்க (பவ்ய) கலை, இதை பாதுகாப்பது மற்றும் வளர்ப்பது நமது கடமை. ஒருவேளை இது என் கடமையும்கூட என்று நான் நினைக்கிறேன். ஹரிதாசர்கள் இத்தகைய ஆழமான பாடல்களை யட்சகானத்திற்காகவே எழுதினார்கள் என்று தோன்றுகிறது. இவர்களின் பாடல்கள் இந்த பயலாட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் தெய்வீகம், பக்தி நிறைந்து இருக்கிறது. இது மக்களிடையே ஆன்மிக உணர்வைத் தூண்டுகிறது. இதன் காரணமாக யட்சகானத்தில் தாச சாகித்யம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கர்நாடக அரசாங்கத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய துறை, இன்னும் பல அமைப்புகள், சத்சங்கங்கள் மற்றும் பல பெரிய கலைஞர்கள் இந்த கலையை தக்க வைத்துக் கொள்ள மிகவும் கடினமாக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். உதாரணமாக, 20ம் நூற்றாண்டில் பலர் திரைக்குப் பின்னால் இருந்து பிரசாரம் செய்துள்ளனர் என்று சொல்லலாம்.
1) டாக்டர் கோச்சா சிவராம காரன்தரர்
2) பேரா. கு. ஷி. ஹரிதாசபட்டர்
3) பேரா. எச். கிருஷ்ணபட்டர் போன்றவர்களை நாம் குறிப்பிடலாம்.
4) மணிபால் சங்கம், பாய்பந்துகளின் சங்கம், காரவல்லி சங்கம் மற்றும் பிற குழுக்கள்.
5) தேசிய இசை மற்றும் நடன மையம் இதற்கு குருகுல பாணியில் பாடத்திட்டங்களை நடத்துகிறது.
ஸ்ரீ வாதிராஜ மடத்தின் தலைவரான ஸ்ரீ விஸ்வோத்தம தீர்த்தா் 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் பயிற்சிக்கு உதவி அளித்துள்ளார். இது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் மற்றும் ஒரு மைல்கல் என்று கூறலாம்.
இந்த கலையை தக்கவைத்துக் கொள்வதற்காக உடுப்பி அதமாரு மடத்தில் தங்கியிருந்த ஸ்ரீ வாதிராஜ மடத்தவர், உடுப்பி மாவட்டத்தின் ஹயக்ரீவநகரில் 'சிவபரபாலா சமுச்சயா' என்பதை நிறுவியுள்ளனர். இங்கு மத்திய தொழிற்சங்க அலுவலகம், நூலகம், அருங்காட்சியகம், பயிற்சி மண்டபம், சபா ஹால், சமையலறை, மாணவர் அறை, விருந்தினர் அறை போன்றவற்றை அதிக ஈடுபாடுடன் நிறுவி உள்ளனர்.
புரந்தரதாசரின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட இந்த கலை, சங்கீதக் கலைக்கு பெயர் போன தமிழ்நாட்டின் தஞ்சாவூர் அரசருக்கு மிகவும் பிடித்துப் போக அரசர் இந்த கலையின் வளர்ச்சியை ஊக்குவித்தார். இதை போல் மும்மாதி கிருஷ்ணராஜ உடையார், லிங்கராஜ மற்றும் முத்தன்னா போன்ற கவிஞர்கள் இந்த கலையின் சாரத்தை அனுபவித்துள்ளனர், இதனால் இந்த எளிமையான கலையின் பரம்பரையை ஒரு செயல்பாடுள்ள கலை என்று அழைக்கலாம்.
இந்த கலை பகவானிடம் (பரமாத்மாவிடம்) அன்பை வெளிப்படுத்த உதவுகிறது, இதனால் தான் 500 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இந்த கலை இன்னும் உயிரோட்டத்தோடு உள்ளது. மரியாதைக்குரிய ஸ்ரீ மத்வாசாரியாரின் ஆர்வம், ஸ்ரீ நரஹரி தீர்த்தரால் மேலும் சிறப்பாக வளர்க்கப்பட்டு, பின்னர் ஸ்ரீ வாதிராஜரால் ஊக்குவிக்கப்பட்ட இந்த யட்சகானா கலை, பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய விருந்து அளிக்கிறது.
ஹரிதாசர்களின் பாடல்களை கீர்த்தனை வடிவத்தில் அழகாக பாடலாம், அவர்களின் உகாபோகங்கள் கேட்க மிகவும் அற்புதமானது இது மட்டுமின்றி, இந்த கலைக்கு இந்த சாகித்தியம் என்று ஊகிக்காமல், நன்றாக பொருந்தி இருக்கிறது, இது தான் ஹரிதாச சாகித்யத்தின் மகிமை என்று கூறலாம்.
நாம் இந்தக் கலைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மிகவும் நன்றாகப் பாடக்கூடிய பாகவதர்கள் தேவை. மறுபுறம் சம்பந்தப்பட்ட அரசு, அரசு அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து அத்தகைய பாகவதர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பயிற்சி மையத்தை திறக்க வேண்டும். ஹம்பி மற்றும் உடுப்பியிலுள்ள பல்கலைக்கழகங்களில், இந்த கலைப்பயிற்சியின் துறைகளைத் திறந்தால், இந்தக் கலைக்கு ஒரு பெரிய முன்னேற்றத்தை கொடுக்க முடியும். கலையின் வடிவம் எதுவாக இருந்தாலும் அதன் உருவாக்கம் மற்றும் அழிவு, காலத்தி்ன் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்தி, மேலும் இக்கலைக்கு ஊக்குவிப்பதும் முக்கியமானது. இதனால் கூட ஒரு ஊட்டம் சாத்தியம்.
முன்பு விவரித்தது போல பாரிஜாத அட்டம் யட்சகானத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த சாகித்யத்தை நிறுவிய பெருமை கோகாவி ஆனந்தாச்சார்யாரையே சேரும். அவரது வெங்கடேச பாரிஜாத ஆட்டம் நாடகம் மிகவும் புகழ்பெற்றது. இவர் 1776 முதல் 1840 வரையான காலப்பகுதியில், ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வசித்த ஒரு கவி, இந்த காவியத்தை நாட்டுப்புற நடனம் பாணியில் உருவாக்கியவர் என்பது பெருமைக்குரிய விஷயம். இந்த பாரிஜாத ஆட்டத்தில் சித்தாந்தத்தை விளக்குவது தவிர, பயலாடத்தை தழுவிய ஒரு சாகித்யம் என்ற பெருமை பெற்றது. பெலகாவி, பகல்கோட், மீராஜ், விஜயபுரா, கோலாப்பூர் ஆகிய இடங்களில் மக்களிடையே புகழ்பெற்று பின்னர் தேசிய மட்டத்தில் பெயர் பெற்றது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
ஆனந்தாதீசருக்கு அகத்தூண்டுதலாக இருந்தது திம்மண்ண காவியம். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரின் வரலாறு மற்றும் ஸ்ரீ மத்வாச்சாரியாவின் த்வாதச ஸ்தோத்திரம் இரண்டையும் இணைத்து, ஸ்ரீகிருஷ்ணனின் கதையை மேடையில் முதலில் கொண்டு வந்த பெருமை இவரையே சேரும்.
இதற்குப் பிறகு
1) ஹனுமதிலாசா திப்பன்னாசார்யரின் படைப்பு (பாடல்)
2) குசேல உபாக்யானா
3) காலிங்க மர்தனம்
என பல படைப்புகள் வெளியிடப்பட்டன. இதை எல்லாம் யட்சகானாவின் படைப்புகள் என்றே நாம் அழைக்கலாம்.
கோகவி ஆனந்தாதீசர் பற்றி மேலும்:
வெங்கடேச கல்யாண காவியத்தை நிறுவியபோது, இந்த படைப்பு 1000 பதங்களால் ஆன ஒரு பெரிய மகாகாவியம் ஆனது. இந்த படைப்பில் 10 அத்தியாயங்கள் உள்ளன. வைகுண்டபதியான ஸ்ரீ ஸ்ரீநிவாசன் ஒரு வேடனின் (கிராதக) வேடத்தை தரித்து, அவரது தாயார் பகுலாதேவியிடம் உத்தரவு பெற்று வேட்டைக்கு புறப்பட்டார். வழியில் ஆகாசராஜாவின் தோட்டத்தில், அவர் வனஜாக்ஷியை கண்டு, அவர் வீட்டிற்கு தான் வந்தது போல் பேசினார், என்று புரந்தரதாசர் கூறியுள்ளார்.
பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் இடையே நடக்கும் சம்வாதத்திற்காக ஆனந்ததீசர் எழுதிய உரையாடல் மிகவும் ரம்யமானது. இதுவே இந்த படைப்பின் மிக முக்கியமான அம்சமாகும். அற்புதமான காட்சிகளின் மூலம் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளை விவரித்து பார்வையாளர்களை நன்றாக ஈர்ப்பதை தன் தலயாய கடமையாகக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறியலாம். இதனுடன் ஒரு உறுதியான பக்தியும் வசதியாக வளர்ந்தது.
யட்சகானாவை பயிலாடத்தின் அரசன் என்றும் அழைக்கிறார்கள் , ஏனென்றால் அது மக்களிடையே காவியத்தின் மேல் இருக்கும் ஆசையை விழித்தெழுப்பியது. இதன் மூலம் பொது மக்களிடையே பக்தியை ஊக்குவிக்க முடிந்தது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ராய்ச்சூர் மாவட்டத்தில் யட்சகானத்தின் பாணியில் பயலாட்டம் நிறுவப்பட்டது. ஆனால் யட்சகானாவை போல மக்கள் மத்தியில் அந்த அளவிற்குப் பிரபலமடையவில்லை.
யட்சகானத்தில் வரும் அனைத்து கதைக் களன்களும் ஹரிதாச சாகித்யத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஸ்ரீ ராமபாதுகா பட்டாபிஷேகம், கனகாங்கி கல்யாணம், சந்திரஹாசா கதை, பிரபாவதி பரிணயா, திரெளபதி சம்வாத, பாரதத்தின் கதை, ரம்பா விலாசம், ஷபரசங்கர விலாசம், ச்ருத கீர்த்தி ராஜனின் கதை, ருக்மாங்கதனின் சரித்திரம் போன்றவை புகழ்பெற்றவை.
யட்சகானத்திற்கு ஏற்ற பொருத்தமாக இருக்கும் பல பாடல் வரிகளை ஹரிதாசர்கள் நமக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர். எதிர்காலத்திற்காக இந்த கலையை பாதுகாக்க மற்றும் வளர்க்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.
பாரிஜாத ஆட்டத்தின் பெயரில் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய வகைகள் உள்ளன, அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1) வெங்கடேச பாரிஜாத - கோகாவி ஆனந்தாதீசர்
2) பாண்டுரங்க பாரிஜாத - ஜகன்னாதா தாசர்
3) வெங்கடேச பாரிஜாத - கோபால தாசர்
4) ஸ்ரீஹனுமத் பாரிஜாத - விஜய பிரபுகளு
5) கீதா பாரிஜாத - ஸ்ரீ வ்யாச தீர்த்தர்
இதைப் போல நாம் அவற்றை பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.
இவ்வாறு பல வகையான அனைத்து பயலாட்டத்திலும், ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ், லீலைகள் மட்டுமின்றி, ஸ்ரீ மத்வாச்சாரியரால் நிறுவப்பட்ட தத்வவாத சித்தாந்தத்தை பற்றி தகவலை வெளிப்படுத்தும் நோக்கமும் உள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி யட்சகானத்தில் சுமார் 400க்கும் அதிகமான அத்தியாயங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 100 அத்தியாயங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சில அத்தியாயங்கள் பனை ஓலைகளிலும், கையெழுத்துப் பிரதிகளாக உள்ளன. இன்னும் சில தலைமுறையாக அந்த பாடல்களைப் பாடுபவர்களின் மனதில் (வாயில்) இருக்கின்றன.
சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இன்றும்கூட 30 முதல் 40 அத்தியாயங்களை பாடும் அனுபவமிக்க கலைஞர்கள் நம்மிடையே இருப்பதை நாம் காணலாம். இவைகளில் மோகினி பஸ்மாசுரா, இந்திரஜித்தின் காளகா, தேவி மஹாத்மை, பப்புருவாஹனா, அபிமன்யு காளகா, தான சூர கர்ணன், சைதம்வவதம், கிருஷ்ணார்ஜுனா காளகா ஆகியவை மக்களிடையே பிரபலமான நிகழ்ச்சிகள் என்று பெயரிடலாம்.
யட்சகானத்தின் முக்கிய அம்சங்களை நாம் பார்ப்போம்:
1) அலங்காரமான, விரிவான ஆடைகளை மற்றும் வேடம் காண்பதற்கு உண்மையில் உற்சாகமளிக்கிறது.
2) இலக்கியத்தின் சாரத்தை உடல் அபிநயம், சாரிமண்டலம் (மேடை அமைப்பு), கர முத்திரை (கை சின்னங்கள்) மற்றும் ரொச்சககளிந்தா (அதிர்ச்சியூட்டும் சத்தம் / குரல்கள்) மூலம் காட்டுவது மிகவும் முக்கியமான அங்கமாகும்.
3) பிரபலமான கிராமிய நாட்டுப்புற நடனம், காரணம் இந்த பிராந்தியங்களில் ஸ்ரீ நரஹரி தீர்த்தர் இதை பரப்பினார்.
4) புரந்தரதாசரின் பாடல்களின் உத்வேகத்தால், இது நாட்டுப்புற நடனத்தின் வடிவத்தை ஒத்திருக்கிறது.
5) பாடல்களைப் பாடும் பாகவதர்கள். இது போன்ற பாகவதர்களுக்குப் பயிற்சியளித்து பாடவைப்பது நமது பொறுப்பு. அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் பாடுவதற்கு, அத்தகைய பாகவதர்களை உருவாக்குவதில் தங்கள் கவனத்தை திருப்ப வேண்டும். இது நிச்சயமாக இந்த கலையை தக்கவைக்க உதவுகிறது.
6) இப்படி இந்த கலைகளைப் பாதுகாத்து வளர்ப்பது நம்முடைய கடமையாகும். இப்படி இந்த கலையை நம் நாட்டிற்கு சொந்தமானது என்று இயற்கையாக வளர்க்க வேண்டும். அயல்நாட்டிக்கு ஒரு காட்சிப் பொளுளாக காண்பிப்பதற்கு மட்டும் இதை உபயோகம் செய்யகூடாது, வளர்க்கக்கூடாது.
7) இந்தக் கலையில் பயன்படும் தாள மேளங்கள், தண்டங்கள் போன்ற கருவிகளை வாசிப்பவர்கள் மற்றும் தொழில்முறையாக உள்ள மேடைக் கலைஞர்கள், இதர கலைஞர்கள் இப்படி எல்லோரும் எந்த தயக்கமும் இல்லாமல் ஹரிதாச சாகித்யத்தில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மட்டும் இந்த கலையை மதி்ப்பாகவும் முறையாகவும் தக்கவைத்து கொள்ள முடியும்.
8) கர்நாடக இசையில் கமக அலங்காராத்திற்கு (அலங்கரிக்கப்பட்ட இசை குறிப்புகள்) முக்கியத்துவம் அதிகம். யட்சகானத்தில் லயம் மற்றும் தாளத்தை வடிவமைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த பாணி முக்கியமாக இசைக்கருவிகளின் தாளத்திற்கும், ஆட்டத்தின் தாளத்திற்கும் ஏற்றார் போல திட்டமிடப்பட்டுள்ளன.
9) நாட்டுப்புற நடனம் பாணியில் இருக்கும் யட்சகானா, சமுதாயத்தை தட்டி எழுப்பும் திறனைக் கொண்டுள்ளது. இப்படியாக அழகிய கலைகளில் இது உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது.
10) உடுப்பியின் தேசிய கவிஞர் கோவிந்தா பாய் ஆராய்ச்சி மையம் (எம்.ஜி.எம். கல்லூரியின் ஒரு அங்கமாக) யட்சகான கலையை வளர்ப்பதற்காக உடுப்பியில் நிறுவப்பட்டது. இது 1971ம் ஆண்டில் நடைமுறையில் வந்தது.
11. a) சிவப்பிரபா கால சமுச்சாயா, ஹயக்ரீவ நகரா, உடுப்பி, சோதே வாதிராஜ மடத்தால் நிறுவப்பட்ட ஒரு காலா பவனம். இது தவிர சிறிய அமைப்புகள் உள்ளன.
b) மண்டர்திமாரன கட்டே, கமலஷிலே அம்ருத்தேஸ்வரி சவகுரு இந்த இரண்டு அமைப்புகளும் நன்கு அறியப்பட்டுள்ளன.
c) கடீல் மற்றும் தர்மஸ்தாலா தெங்குத்தீவில் மிகவும் பிரபலமான அணிகளாக உள்ளன.
d) கர்நாடகாவின் யட்சகானா சபை
e) மங்களதேவி யட்சகானா மண்டலி
f) மத்திய மஞ்சுநாதேஸ்வர குழு என்பவை சில குறிப்பிடத்தக்க அமைப்புகளாகும்.
யட்சகானா மற்றும் தாச சாகித்யத்திற்கு இடையே மிக நெருக்கமான சம்மந்தம் இருக்கிறது. தாசர்களின் நோக்கம் (ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கி பக்தி) இந்த யட்சகானாவின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் நிறுவப்பட்டது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். பக்தியை வெளிப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஹரிதாச சாகித்யம், புகழ்பெற்ற பெயர் சொல்லுபடியான ராமாயணம், பாகவதம், மகாபாரதம், 18 புராணங்ள் மற்றும் பல உபநிஷதங்கள் போன்ற ஸ்ரீ ஹரியுடன் தொடர்புடைய படைப்புகளிலிருந்து வரும் புண்ய புராண கதைகளை அடிப்படையாக கொண்டுள்ளன. இந்த சக்தியின் தாக்கத்தை கொண்டு, 500 ஆண்டுகள் கடந்து சென்றாலும், ஹரிதாச சாகித்யம் அதன் உற்சாகம் குறையாமல் இன்றும் நடப்பில் இருக்கிறது. தாச சாகித்யம் இன்று ஒரு வாழும் கலை என்றால், யட்சகானாவும் இன்று ஒரு வாழும் கலை என்று சொல்லுவதில் எந்த மறுப்பும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால் 22ஆம் தத்துவஞானி ஆன ஆசார்ய மத்வரின் ஆசிர்வாதம் இதற்கு இருந்தது. பின்னர் ஸ்ரீ நரஹரி தீர்த்தர் இந்த யட்சகானத்தை மேலும் வளர்த்தார். அவருக்குப் பின் வந்த வாதிராஜர், தானே பாடல்களை எழுதி, அதற்கு நடனமாடிக் காண்பித்தார். இப்படி இந்த யட்சகானத்திற்க்கு ஒரு சிறந்த பாரம்பரிய வரலாறு உள்ளது.
ஸ்ரீபாதராஜரின் அங்கிதம் ரங்கவிட்டலா, அதே ரங்கவிட்டலாவின் மேல் உள்ள ஆசையின் (பக்தியின்) காரணத்தால் இப்படி நான்கு வரிகளை எழுதுவதற்கு நான் ஊக்கம் பெற்றேன். இதிலிருந்து இந்த கலை மேலும் வளரும் என்று நாம் விரும்புகிறோம். நான் எம்.ஏ. (கன்னடம்) படிக்கும்போது, 20 மதிப்பெண்களுக்கு இந்த பாரிஜாத பாடல் (கிருதி) இருந்தது. இதைத் தவிர வேறு எந்தப் சாகித்யத்தையும் என்னால் பாராட்ட முடியாது. யட்சகானா பற்றிய அறிவை நான் அப்போதுதான் பெற்றேன்.
ஒருமுறை சோதேக்கு சென்று சிர்சிக்கு திரும்பி வரும்போது, பேருந்து நிலையத்திற்கு அருகே யட்சகானாவை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். 8 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்கவே இல்லை, எங்கள் பஸ் 10.30 மணியளவில் இருந்ததால் பார்க்க அவகாசம் இருந்தது, பிறகு ஒருவழியாக கணபதி துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. திரைச்சீலைகள் மேலே எழுப்பப்பட்ட அந்த நேரத்தில் சரியாக எங்கள் பேருந்து பெங்களுரை நோக்கி புறப்பட்டது.
சுமார் 1965-66ம் ஆண்டில் எங்கள் ஊரில் ஒரு குழு அதே ஆட்டத்தை நடத்தியது. அப்போது என் கவனம் அதில் ஈடுபடவில்லை. தொலைக்காட்சியில் 3 முதல் 4 அத்தியாயங்களை பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான். பெங்களுர் வித்யாபீடத்தில் ஒரு நிகழ்ச்சியை நான் பார்த்திருக்கிறேன்.
யட்சகானா பொதுவாக இரவு நேரங்களில் நிகழ்தப்படுகிறது. செண்டை மேளத்திலிருந்து வரும் நாதம் / ஒலி மிகவும் அமோகமாக இருக்கும். பாடல்களைப் பாடும் பாகவதர்களின் வெண்கலக் குரல் மிகவும் முக்கியமானது. கண்டிகார சேஷகிரி பாகவதர் இந்த கலையில் பிற்காலத்தில் தனது பெயரை முத்திரை குத்தினார். கராவலியின் யதீஸ்வரர், பகவானின் நாமஸ்மரணையை அனுசந்தானமாக கொண்டு மற்றும் யட்சகானத்தின் முலமாக இறைவனுக்கு சேவை செய்வதில் மிகவும் புகழ் பெற்றவராவார்.
பக்தியால் முக்தி பெற முடியும் என்பதை நிரூபித்து, கற்பித்தவர் ஆசாரியர் மத்வராவார் . இந்த உக்தியை அனுசரித்து நிஸ்சலமான பக்தியே "அமலா பக்திஷ்ச தத் சாதனம்" யட்சகான கலை அமைப்பின் முன்னுரையாகும். ஆனாலும், பாகவதர்களுக்கு எந்த விதமான பெருமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பாகவதர்கள் என்று அழைக்கப்படும் பல வித்வான்களை நாம் காணலாம்.
1) 1684 இல், தஞ்சாவூர் போஸ்லே வம்சத்தை சேர்ந்த அரசர்கள் இந்த கலைக்கு ஊக்கமளித்தனர்.
2) சுமார் 1728-1736ம் ஆண்டுகளில் இருந்த துளஜாஜி ஒரு புகழ் பெற்ற இசைக் கலைஞர், சிறந்த வாய்ப்பாட்டு கலைஞர், நாடகக் கலைஞராக இருந்து "சங்கீத சாராம்ருதம்" என்ற ஒரு சமஸ்கிருத இலக்கியத்தை எழுதினார். இவர் ஸ்ரீ வியாசராஜரை அவரது ஆத்மகுருவாக ஏற்று, அவரே இவரை வழிநடத்துகிறார் என்று தெரிவித்தார்.
3) 1669-1734 இல், ராஜா ரகுநாயக அரசரின், அரசவையில் கோவிந்த தீட்சிதர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாகவதராக திகழ்ந்தார். அவர் நிறைய இலக்கியங்களை எழுதி, புகழ் பெற்றிருந்தார். "சங்கீத சுதா" என்ற நாட்டுப்புற நாடகத்தை எழுதி அரசருக்கு சமர்பித்தார்.
4) யட்சகானா என்பது பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் மஹிமைகளை விவரிப்பதற்கும் மற்றும் பகவானிடம் அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு மிக பெரிய ஏற்பாடு என்று கூறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.
5) பிராந்திய வாரியாக வேறுபாடுகள் இப்படி உள்ளன, 1) மூடலபாயா யட்சகானா 2) படுவலபாயா யட்சகானா 3) பயலாட்டா / பயலு நாடக அல்லது தசாவதார ஆட்டா.
6) "கிராம மக்கள் கலை" என்ற அடையாளத்தைக் கொண்டிருந்த இந்த யட்சகானா, 20 ஆம் நூற்றாண்டில் அனைத்து கலைத் துறைகளின் வித்வான்களும் கெளரவிக்கும்படி செய்த மனிதர் மரியாதைக்குரிய சிந்தனையாளர் டாக்டர். சிவராமகாரந்தகரே ஆவார் என்றால் மிகையாகாது.
யட்சகானத்தில் உணர்ச்சி ரசத்தை வெளிப்படுவது மிகவும் முக்கியமாக கருதபட்டது. யட்சகானா நாட்டுப்புற பாடல்களின் ஒரு கிளை ஆகும் (சாஸ்திரப்படி வாய்வழியே வந்திருப்பது).
இங்கு பயன்படுத்தப்படும் ராகங்கள் கேதாரகெளளை, காம்போஜி, கமாஜ், ஹம்சத்வனி, அடாண, ஆரபி, தேவகாந்தாரி, கேதாரகெளளை, புன்னாகவராளி, சஹானா, நாதனாமக்ரியா, சிந்துபைரவி. ஆஹிரி, முகாரி முதலானவை. சாரங்கா, ஹிந்துஸ்தானி, சாரங்கா பெஹாக், தோடி, வராளி, சாமா தன்யாசி, நீலாம்பரி, காபி, மோஹனா, பிலஹரி இப்படியாக பல ராகங்களின் பயன்பாட்டை அன்பு, அழகு, சிரிப்பு, கருணை, வீரம், பயம், வெறுப்பு, சாந்தம், ஆச்சரியம், பக்தி, வாத்சல்யம், உற்சாகம் மனமகிழ்ச்சி போன்ற ரசங்களில் பாடுவதை நாம் பார்க்கலாம்.
டாக்டர் கே. எம். ராகவன் நம்பியார் யட்சகானத்தில் அவரது ஆராய்ச்சி ஆய்வு எழுதியுள்ளார்.
யட்சகானத்திற்கு என்ன நடக்க வேண்டும்?
1) ஹரிதாச சாகித்யத்தை ஆதரிக்கும் வகையில் மக்கள் யட்சகானத்தை படைக்க வேண்டும்.
2) ஹனுமத் விலாசம் யட்சகானா கலையே ஆகும் என்பது கவிஞர்களின் கருத்து, அதன்படி அது மேடையில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
3) ஹரிதாச படைப்புகளான சந்திரஹாச சரித்திரம், சீதா சுயம்வரம், கஜேந்திர மோட்சம், சங்கர கெளடாவின் பாடல், கிரியம்மாவின் உத்தாலிக கதை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
4) யட்சகானத்தின் மட்டில் மக்கள் விரும்பி நடைமுறையில் பயன்படுத்த வேண்டும்.
அது மட்டுமல்லாமல், வாதிராஜரின் லட்சுமி சோபானம், வைகுண்ட வர்ணனை, கனகதாசரின் மோகன தரங்கிணி, ஸ்ரீபாதராஜரின் ப்ரமரகீதை, மோகனதாசரின் கோலு பாடல், குமாரவ்யாசனின் மகாபாரதத்தின் பல அத்தியாயங்கள், புரந்தரதாசரின் சுதாமா சரித்திரம், கஜேந்திர மோட்சம், திரௌபதியின் வஸ்த்ராபரணம் ஆகியவற்றில் சத்தீஷ் கெட்லாயா போன்ற 100க்கும் அதிகமான மக்களை பயிற்றுவிக்க வேண்டும். விழாக்களில் ஆடுபவர்களை பயிற்றுவிப்பதோடு, வேஷம், உடை, கதை போன்றவற்றில் மூல கூறுகளுக்கு (வேர்களுக்கு) ஒரு கேடும் வராமல் நவீனத்தை கலந்து பயிற்றுவிக்க வேண்டும்.
தாசர பதங்களில் காணப்படும் சமூக நலன், நீதி, சமூக ஒழுக்கம், நடத்தை, புரிந்துகொள்ளுதல் போன்ற அம்சங்களை யட்சகானத்தில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை எழுப்ப முடியும். ஹரிதாசர்களின் வாழ்கை, சாதனை, போதனை இவைகளை யட்சகானத்தின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும், மேலும் சமயோசித மற்றும் வெளிவராத ஓலைகள், கையெழுத்துப் பிரதிகளில் இருக்கும் சாகித்யத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். நாம் இன்னும் இதைப் பற்றி சிந்தித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
பாலிஸோ பண்டரி புரிரேயா ! பாவன காயா
பீமரதி குலநிலய ! பாலிஸோ புண்டரிகாயா
என்று துவங்கும் பாண்டுரங்க பாரிஜாதவில், ஸ்ரீஜகன்னாத தாசர், தொடர்ந்து
தருணதுளசி மாலா ! தப்ப காங்கேயசேலா
ஷரதி தனய லோலா ! ஷக்வரி காரிபாலா
ஸ்ரீ அஜபவ மாலா ! சுத்த காருண்யலீலா
புரஹர சுப லீலா ! பாஹி கோபால பாலா
இப்படியாக பாடுகிறார். ஸ்ரீஹரியை தரிசித்த தருணத்தை வர்ணிக்கிறார். பண்டரிபுரத்தில் இருக்கும் பாண்டுரங்கன், தூய சரீரத்தைக் கொண்டவன், பீமரதி நதிக்கரையில் இருப்பவன், பண்டரிபுரத்தை தனது இருப்பிடமாகக் கொண்டிருக்கும் ஸ்ரீஹரி. அனைத்து உயிரினங்களுக்கும் மூல காரணமாக இருப்பவனே, கருணா மூர்த்தியே, கோபாலகர்களான இடையர்களை காப்பாற்றுபவனே என்று 9 பத்திகளில் இறைவனை பாடும் ஜகன்னாததாசரின் இந்தப் பாடல், யட்சகானத்திற்கென்றே இயற்றிய பாடலாகும்.
திப்பண்ணார்ய அவர்கள் இயற்றிய ஹனுமவிலாஸ் காவியத்திலிருந்து:
அனுமனைக் கண்ட ராவணன், அவரிடம் பேசிய அந்தக் காட்சியை கவி இப்படியாக வர்ணிக்கிறார்.
நீனாரை வானர வீரனே
மௌனவேதகே நுடி - ரண சூரனே
மஹா தீரனே - கோரகாரனே (பல்லவி)
எல்லிந்தா நடெதந்தே, இல்லிகேதக்கே பந்தே
இல்லிந்த பயணவெல்லிகே முந்தே
ஏதகே நிந்தே, தைத்யர கொந்தே
பல்லிதனு நீனாதடப்ரதி
மல்லனாதேமிந்த்ரஜித்தன்ன
ஹுல்லு பாணக்காகி சிலுகிதே
க்ஷுலகன பரி நிமிஷமூத்ரத் ||1
இருவுதாவதேச தரணியொளெல்லி நிவேச
ஷரதீயனெந்து தாண்டித கேஷ
புரஹர ஸ்ரீச பிரம்ம சுரேச
கருட முக்யரு போகலரியரே
புரவ நாவந்ததலி பொக்கலு
திருகிபோகே சமர்த்தனிந்த்ரஹே
மருஹனாதேயோ மருள தரளனே ||2
இப்படியாக போகும் பாடலில் மேலும்..
வானர நோர்வன பிடிது வாலவனு வை
ஷ்வானகனிந்த உருஹி புரதொளகெத
ஷானன மெரெசுவனெந்து த்ரிஜடியொளு
தான வியோர்வளு சுருதிரலத கேளி
ஜானகி சிந்திஸிவன்ஹி சூக்தவ நிஜ
மானசதல்லி த்யானத மாடல நிலன
சூனு சந்தனல்லிப்ப தேஹ நாகுதபர
மானந்த சாந்த்ரனாகுத முப்புரகளனே
ஷானனுருஹிதந்தே பக்திகண்டன புர
ஹீனாலங்காரவ மாடி நீரதியொளு
ஸ்னானவ மாடி பேக - சீதாதேவி
யேனாதளெனுத லாக - சிந்திசி, பந்து
மானினி மணெயராகி நித்வதி கண்டு
தானாலங்கெய ஷிகிகாஹுதியனித்து
வைனவெல்லவ திளுஹிவனு கா
த்ரீன்யைசிம்ஹன தீச மாருதி ||
இப்படி பல ராகங்களில், ஒரு ராகமாலிகையாக பாடும்போது, யட்சகானமானது கேட்பதற்கும் / பார்ப்பதற்கும் மிகவும் அருமையாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இப்படிப்பட்ட அபூர்வமான பாடல்கள் மற்றும் இன்னும் மக்களிடையே பிரபலமாகாத வசன காவியங்கள், பொதுவெளியில் நாடக அரங்கத்திற்கு வரவேண்டும் என்பதே எமது ஆசையாகும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment