Tuesday, March 28, 2017

Bagepalli Sesha Dasaru

கன்னட மூலம் : இணையத்தில் கிடைத்த புத்தகம்
தமிழாக்கம்: T.V. சத்ய நாராயணன்
Proof : திருமதி சவிதா ராவ் & திருமதி சுமதி ராவ்

***



ரமா சமுத்ரன குமாரி நின்ன சரி சமானர் யாரம்மா

கன்னட ஹரிதாசர்களின் பாடல்களை கேட்பவர்கள் மேற்கண்ட பாடலை கண்டிப்பாகக் கேட்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று கேட்டால் பலர் தெரியாது என்றே சொல்வர். இந்தப் பாடலை இயற்றியவர் - பாகேபள்ளி சேஷதாசரு. 

தாசர் பிறந்த இடம் : துமகூர் மாவட்டத்தில் தேவராயனதுர்கா அருகில் இருக்கும் இரகசந்த்ரா ஆகும்.  சோசலே வியாஸராய மடத்தைச் சேர்ந்தவராகிய - நரசண்ணா மற்றும் மகாலட்சுமி (வெங்கம்மா என்றும் சொல்கிறார்கள்) தம்பதிகளுக்கு பிறந்த தாசருக்கு இயற்பெயர் சேஷகிரி. இவர் விச்வாமித்ர கோத்திரத்தை சேர்ந்தவர். 1865ம் ஆண்டு  பிறந்தார். அனைவரும் இவரை சேஷண்ணா என்று அழைத்து வந்தனர். துவக்கப் பள்ளியில் இவர் கன்னடம் மற்றும் சமஸ்கிருதத்தில் பாடங்களைக் கற்றவர் என்று தெரிய வருகிறது.

சுமார் 15-16 வயதில், சேஷண்ணர் தன் வீட்டைத் துறந்து, ஒரு துறவியைப் போல தனிமையில் தியானம் மற்றும் ஊர் ஊராகப் போய் ஹரிகதா உபன்யாசம், பஜனை முதலியவற்றில் ஈடுபட்டு வந்தார். அப்போது யாரிடமிருந்தோ, ஹரிதாஸ கீர்த்தனைகளை கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தார். அப்போது ஒரு முறை, சுமார் 1890ம் வருடம், கோலார் மாவட்டத்தில் பாகேபள்ளி கிராமத்தில், வெங்கடாச்சார் மற்றும் காவேரியம்மா என்னும் கௌதம கோத்ரத்தைச் சேர்ந்த தம்பதியர் வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்தார். இவரின் பக்தி மற்றும் நடவடிக்கைகளை பார்த்து பிடித்துப் போன அவர்கள், வெங்கம்மா என்னும் தங்கள் மகளை சேஷண்ணருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அன்றிலிருந்து, பாகேபள்ளி, சேஷண்ணரின் வசிப்பிடம் ஆயிற்று. ஆயினும், ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்வதை அவர் நிறுத்தவில்லை. போகுமிடங்களில் ஹரிகதை உபன்யாசங்கள் செய்து வந்தார். இவர் இயற்றிய பாடல்கள் சம்பிரதாய பாடல்களைப் போல் உள்ளதால், அவை உபன்யாசங்களில் பாடுவதற்காகவே இயற்றியுள்ளார் என்று ஊகிக்க முடிகிறது.

தாஸரின் முதல் அங்கிதம் ‘சேஷவிட்டல’ - இது அவர் தமக்குத் தாமே வைத்துக் கொண்ட அங்கிதம். அவரின் சமகாலத்திய கீர்த்தனாகாரர்களில், தாஸர் புகழ் பெற்றவராக இருந்தார். இப்படியாக, இரக்கசந்த்ர சேஷகிரி சேஷண்ண - பாகேபள்ளி சேஷதாசர் என்று அழைக்கப்படலானார்.

தாஸரின் குலதெய்வம் - தேவராயனதுர்காவின் ஸ்ரீபோக நரசிம்மஸ்வாமி. இவர் அவ்வப்போது திருப்பதி மற்றும் தேவராயனதுர்கா சென்று வந்தார். ஒன்றிரண்டு ஆண்டுகள் திருப்பதியில் வாழ்ந்தார் என்றும் தெரிய வருகிறது. தாஸரின்

சம்பந்தியாத குடிபண்டே வியாஸாச்சாரும் (மகன் ஸ்ரீகுருராஜாச்சார்யரின் மாமனார்) தாஸருடன் அவரது சஞ்சாரத்தில் பங்கு பெற்றிருந்தார்.

தேவராயனதுர்கா ஸ்ரீநரசிம்மரின் ரதோத்ஸவத்தில் ஆண்டுதோறும் தவறாது பங்கேற்றுவந்தார் தாஸர். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், தேவராயனதுர்காவின் முத்துமோகனதாஸரான - பரமப்ரிய சுப்பராய தாஸரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்களிடையே - அங்கிதோபதேச சந்தர்ப்பத்தில் - நடந்த உரையாடலை, 1965ம் ஆண்டு வெளிவந்த ‘பரமப்ரிய சுப்பராயதாஸர்’ என்ற புத்தகத்தில் ஸ்ரீகோவிந்தவிட்டலதாஸர் சுவாரசியமாக விவரித்துள்ளார்.

சக வருடம் 1824 ஸ்ரீப்லவ நாம சம்வத்ஸரம், (கிபி1902) மாக சுத்த தசமி தேதி 17-02-1902 அன்று, ஸ்ரீமுத்துமோகனதாஸர், சேஷதாஸரை தம் முதல் சிஷ்யராக தேர்ந்தெடுத்து, அவருக்கு உபதேசம் செய்து,  ‘பிராணநாத விட்டல’ என்ற அங்கிதத்தை வழங்கினார்.

அங்கிதம் வழங்கியபோது அவர் இயற்றிய பாடல் இதுவே:

ராகம்: காம்போதி
தாளம்: ஆதி

பிராணநாத விட்டலனே சலஹோ இவன
மானாபிமானக்கே ஒடெயனெந்தெனிஸி, ஸ்ரீ (பிராணநாத)

மாடபாரத கார்ய மாடி இத்தரு இவன
ரூடியொளு கைபிடதே சலஹபேகு
காடப்யாடுவனன்னு ஸ்ரீ நரஹரியே
ஜோடிஸி கரகளனு பேடிகொம்புவே நினகே (பிராணநாத)

ஹரிகுருகளல்லி சத்பக்தி ஹிரிதாகி இரலாகி
ஹரசபேகிவன நீ ஹருஷதிந்தா
சிரியரச ஈ கார்ய பரதிந்த மாடலு
கருணவாரிதி எம்ப நுடி சித்தவாகுவுதே (பிராணநாத)

ஹேகெந்து ப்ரார்த்திசுவே போகிசயனனே நினகே
பாகி கரகள முகிவே பாக்யபுருஷ
யோகிவந்தித தந்தே முத்துமோகனவிட்டலா
சாகுமாடதே இவன கருணிசோ ஸ்வாமி (பிராணநாத)

சேஷதாஸர் சுபாவத்தில் மிகவும் அமைதியானவர். அனைவரிடத்தும் மரியாதையோடு பழகுபவர். சிறுவர்களை அழைக்கும்போது பெயருடன் அன்னையா, அப்பையா, அம்மையா என்று சேர்த்து தனக்கு சரிசமமாக அன்போடு அழைப்பார் என்றால் பார்த்துக் கொள்ளவும்.

சேஷதாசருக்கு ஒரு மகன் - அவர் பெயர் குருராஜாசார்யார். இரு மகள்கள். அவர்களின் பெயர் லட்சுமம்மா மற்றும் கோதாவரம்மா. கோதாவரம்மா சிறுவயதிலேயே கைம்பெண் ஆகிவிட்டதால், அவருக்கு வாரிசு உண்டாகவில்லை.

மற்றவர்கள் மூலம் வாரிசுகள் உண்டாகி சேஷதாஸரின் குலம் வளர்ந்து வந்துள்ளது. சேஷதாஸரின் மகன் குருராஜாசார்யாருக்கும், ஸ்ரீசுப்பராய தாஸரின் மூலமாகவே, ஸ்ரீபிராணநாத மோஹன விட்டலா என்று அங்கிதம் கிடைத்தது.

சேஷதாசருக்கு பல சிஷ்யர்கள் இருந்துள்ளனர். அவற்றில் முக்கியமானவர் - நந்தகுடி ஷ்யாமதாஸர். இவரது அங்கிதம் ஸ்ரீநிதி மோஹன விட்டல. இன்னொரு சிஷ்யரின் பெயர் - ஸ்ரீவெங்கோப ராயர். இவரது அங்கிதம் தெரியவில்லை. மற்ற சிஷ்யர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. சேஷதாஸர் இயற்றிய அங்கித பதங்கள் (அங்கிதம் கொடுக்கும்போது இயற்றப்பட்டும் பாடல்கள்) எதுவும் கிடைக்கவில்லை.

சேஷதாஸர் சிறுவயது முதலே மிகவும் வைராக்கியத்தோடு, ஒரு துறவியைப் போல வாழ்ந்து வந்தார். பாகேபள்ளியில் அவருக்கு தானமாகக் கிடைத்த ஒரு சிறிய வீடும், சிறிய அளவிலான நிலமும் இருந்தன. மிகவும் தேவையான பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார். தாசருக்கு பலரும் வீடு, நிலம் ஆகியவற்றை தானமாகக் கொடுக்க வந்தபோது அவர் அவற்றை மறுத்து, மற்றவர்களுக்கு (தேவையானவர்களுக்கு) வழங்கச் செய்தார் என்று தெரியவருகிறது.

சேஷதாஸர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் மிக எளிமையானவை. சின்னச்சின்ன வாக்கியங்களில் மூன்று பத்திகளுக்குள் இருக்கின்றன. முன்பே சொன்னது போல், அவரின் பாடல்கள் உபன்யாசத்திற்காக எழுதி பாடி புகழ் பெற்றவை. இப்படி எழுதுவதற்கு அபார சாஹித்ய ஞானம் இருந்தாலே சாத்தியம் எனலாம்.

இந்த பாடல்கள் சுமார் 36 புத்தகங்களாக, அவரின் சிஷ்யரான ஸ்ரீவெங்கோபராயரிடத்தில் இருந்தன என்றும், அவருக்குப் பிறகு ஸ்ரீமூர்த்திராயர் என்பவர், தான் அச்சடித்துத் தருவதாக கொண்டு சென்றார் என்றும் தெரிய வருகிறது. ஆனால் அதற்குப் பிறகு, அந்தப் பாடல்களைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. இதுவரை கிடைத்த பாடல்கள் வெறும் 32 மட்டுமே. ஸ்ரீதாசருக்கு தன் பாடல்களின் மேல் இருந்த பற்றற்ற தன்மை மற்றும் மற்றவர்களின் முயற்சியின்மையே இதற்குக் காரணம் என்று தெரிய வருகிறது. ஸ்ரீஹரியின் சித்தம் இதுவே என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தற்போது கிடைத்துள்ள பாடல்களில், பிரம்மண்ய தீர்த்தரைப் பற்றி பாடிய ஒரு பாடலைத் தவிர, தாசர்கள் - சன்யாசிகள் பற்றிய பாடல்கள் வேறெதுவும் கிடைக்கவில்லை. ஸ்ரீதாசர் அவர்களைப் பற்றி பாடவேயில்லை என்று நம்புவது கஷ்டமாக உள்ளது. ஸ்ரீஹரி மற்றும் இதர தெய்வங்களைப் பற்றி இவரது பாடல்கள் சிறிதேனும் நமக்கு கிடைத்துள்ளது என்பதே நமக்கு ஆனந்தமாக உள்ளது.

ஸ்ரீதாசர் அவரின் கையெழுத்து நமக்குக் கிடைக்கவில்லை. அவர் கைப்பட எழுதிய எந்த பாடலோ, வேறெந்த கடிதங்களோ இல்லை. அவரின் வீடு, நிலம் சம்மந்தப்பட்ட பத்திரங்கள் மட்டும் அவரது வம்சத்தவரிடம் தற்போது உள்ளன.

தாஸர் பயன்படுத்திய தாளகட்டை, தம்பூரா இவை அவரது வம்சத்தவரிடம் இருந்திருக்கவில்லை. அவற்றை தேடியபோது, அவை தாஸரின் சிஷ்யரான ஸ்ரீஷ்யாமதாஸரின் வம்சத்தவர்களிடம் - தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் இருப்பதாக தெரிய வந்தது. G.B.கோபிநாதராவ் அவர்களின் சீரிய முயற்சியில், அவை 10-1-2008 அன்று தாசரின் வம்சத்தினரிடம் பெரிய மனதுடன் ஒப்படைக்கப்பட்டன. தற்போது அவை பெங்களூரு கிரி நகரில் இருக்கும் தாஸரின் பேரன் B.G. நரசிம்மமூர்த்தி அவரின் வீட்டில் உள்ளன.

வருத்தப்படும்படியான விஷயம் என்னவென்றால், தாஸரது ஒரே ஒரு படம் - அவர் தாச அலங்காரத்துடன் இருக்கும்படியான படம் - மட்டுமே இதுவரை கிடைத்திருக்கிறது. அதுவே மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது. தாசர் இயற்றிய பாடல்கள், சாஹித்யங்கள் பற்றிய அரிய விவரங்கள் யாரிடமேனும் இருந்தால், அவரது வம்சத்தவருக்கு தெரியப்படுத்தினால்,மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சேஷதாஸர் தன் இறுதிக்காலத்தை சிந்தாமணியில், அரசு வேலையிலிருந்த தன் மகன் குருராஜாச்சார் வீட்டில் கழித்தார். தன் அறுபதாம் வருடத்தில் சக 1847 ரக்தாக்ஷி ஆண்டு பாத்ரபத மாதம் வளர்பிறை சதுர்தசி வெள்ளிக்கிழமை அன்று (தேதி : 12-09-1924) தன் நண்பர் ஸ்ரீநிவாஸாச்சார் வீட்டில் அனந்தபத்பநாப பூஜை மற்றும் தீர்த்தபிரசாதம் முடித்து வந்திருந்தார். அன்றிரவு சுமார் 8 மணிக்கு ஸ்ரீபிராணநாத விட்டலனின் அடி சேர்ந்தார். அந்த நேரத்தில், பவுர்ணமி திதி வந்துவிட்டபடியால், சேஷதாஸரின் ஆராதனை பாத்ரபத பௌர்ணமி அன்று பின்பற்றப்பட்டு வருகிறது.


***


1 comment:

  1. Hare krishna
    I want sri haridasara relatives of Bagepalli. If any body is there please contact. Mohankumar.
    9449974931

    ReplyDelete