Sunday, March 12, 2017

ஹரிதாஸ சாகித்யத்தால் ஏற்படட அனுபவம்

ஹரிதாஸ சாகித்யத்தால் ஏற்படட அனுபவம்

ஹரிதாச சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை.
கன்னட மூலம் : திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி
தமிழில் : T.V.சத்ய நாராயணன்

***

மிகவும் ஆசாரமான குடும்பத்தைச் சார்ந்தவளாகிய எனக்கு, சிறிய வயதிலேயே ஹரிதாஸ சாகித்யத்தில் பரிச்சயம் இருந்தது. காலையில் எழுந்ததுமே சுப்ரபாதம் கேட்பது, அதனைத் தொடர்ந்து திரௌபதி வஸ்திராபரண, கஜேந்திர மோக்ஷ, சுதாமா சரித்ரே, கேசவ நாம, விஜய கவச இவற்றையெல்லாம் கேட்டு / பாடிக்கொண்டே வேலைகளை செய்வது வழக்கமாக இருந்தது. வீட்டில் சாலிக்ராம பூஜை, வைச்வதேவம் ஆகியவை நடந்து கொண்டிருந்தன. தாரதம்ய பிரகாரம் ஹரி ஸ்தோத்திரங்கள், பஜனை செய்வது எனக்கு தெரிந்திருந்தது.

என் நண்பர் ஒருவர் ஹரிதாஸ சாகித்யத்தில் தேர்வுகள் எழுதினார் என்று கேள்விப்பட்டதும், மிகவும் சந்தோஷமடைந்து, நாமும் எழுதுவோம் என்று, உடனே நம் வித்யாலயாவுக்கு வந்து தேர்வுகள் எழுத ஆரம்பித்தேன்.

தேர்வுகளை தொடர்ந்து எழுத எழுத, ஹரிதாஸ சாகித்யத்தின் மகிமை, வீச்சு எனக்கு புலப்பட ஆரம்பித்தது. நம் குருவாகிய ஹரதி பிரகலாத் அவர்கள், ஒவ்வொரு தேர்வுக்கும் / சந்தேகத்திற்கும் கொடுக்கும் விளக்கமானது / உதவியானது, நமக்கு ஒரு விடிவிளக்கைப் போல் மிகவும் பயனுள்ளது.

தேர்வுகள் எழுத ஆரம்பித்தபின், அதற்காக படிக்கத் துவங்கியபின், ஒவ்வொரு தேவரநாமாவிற்கும் பொருள் விளங்கத் துவங்கியது. சம்பிரதாயமாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏன் அப்படிச் செய்கிறோம் என்று தெரிந்தது.

புரந்தரதாசர், விஜயதாசர், கோபாலதாசர், ஸ்ரீபாதராயர் என்று சில ஹரிதாசர்களின் பாடல்களையே பாடிக்கொண்டிருந்த எனக்கு, ஹரிதாஸ சாகித்யத்தின் பரம்பரையே தெரிய வந்தது. விஜயதாசருக்கு எப்படி மனக்கதவு திறந்து ஸ்ரீஹரியின் தரிசனம் கிடைத்ததோ, அதைப்போல எனக்கும் இந்த சன்மார்க்கத்தின் அறிமுகம் கிடைத்து, அதன்படி நடக்கவேண்டும் என்று தோன்றியது.

ஹரிதாச சாகித்யத்தின் அறிமுகம் கிடைத்தபின், ஒரு இருட்டறையிலிருந்து வெளியில் வந்து இந்த விசாலமான உலகத்தைப் பார்த்தது போன்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது. வியாசதத்வம் என்பது மக்களுக்கு புரியாமல் இருந்த காலத்தில், ஹரிதாசர்கள், வேதங்கள், உபநிஷத்துகள் இவற்றின் சாரத்தை எளிய பாடல்கள் மூலம் எழுதி, மக்களிடையில் பக்தி மார்க்கத்தை பரப்பினர்.

எந்த ஒரு கல்வியும் குரு இல்லாமல் கற்க முடியாது. தாசர் பாடல்கள் பற்றி தெரிந்திருந்தாலும், அவற்றின் பொருள் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. அவற்றைப் பற்றி மென்மேலும் படிப்பதால் மட்டுமே, ஹரிதாஸ சாகித்யத்தைப் பற்றி சிறிதேனும் புரிந்து கொள்ள முடியும். இந்த உதவியைத்தான் நம் குரு பிரகலாத் அவர்கள் மிகவும் சிறப்பாகச் செய்து வருகிறார்.

சிறப்பு மிக்க நம் வித்யாலயாவின் மாணவி என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிணற்றுத் தவளையாக இருந்த எனக்கு இந்த ஹரிதாஸ சாகித்யம் என்னும் பெருங்கடலை அறிமுகம் செய்துவைத்த நம் குருவிற்கு கோடானுகோடி நன்றிகள்.

திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி
தாச சாகித்யம் 10th semester மாணவி
விவேகானந்த நகர், பெங்களூரு

***

No comments:

Post a Comment