ஸ்ரீகுருப்யோ நம:
ஸ்ரீமத்வ விஜய ஸார
ஸங்க்ரஹ
முன்னுரை - 1
அப்ரமம் பங்கரஹிதம்
அஜடம் விமலம் சதா |
ஆனந்ததீர்த்த மதுலம்
பஜே தாபத்ரயாபஹம் ||
ஸ்ரீமத்வ விஜய ஸார
ஸங்க்ரஹ
இயற்றியவர் :
ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்
ஸ்லோகங்கள் : 65
மொழி : கன்னட
ஸ்லோகங்கள்
ஸ்ரீநாராயண
பண்டிதாசார்யர் இயற்றிய ஸ்ரீமத்வ விஜயத்தில் உள்ள 16 சர்க்கங்கள், 1008 ஸ்லோகங்களை சுருக்கி, நித்ய பாராயணத்திற்காக கன்னடத்தில்
இயற்றி நமக்குக் கொடுத்து பேருதவி செய்திருக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
முதலில் மத்வ
விஜயத்தைப் பற்றிய ஒரு அறிமுகமும், ஸ்ரீவித்யா பிரஸன்ன
தீர்த்தரைப் பற்றிய குறிப்புகளையும் பார்த்துவிட்டு, ஸார
ஸங்க்ரஹ ஸ்லோகங்களின் அனுவாதத்திற்குச் செல்வோம்.
மத்வ விஜயம்
ஸ்ரீமன்
மத்வாசார்யரின் திவ்யமான வாழ்க்கைச் சரிதத்தை வெளிப்படுத்திய சிறந்த கிரந்தம் -
சுமத்வவிஜயம். இதனை எழுதியவர் த்ரிவிக்ரம பண்டிதரின் மகனான நாராயண பண்டிதர். இது
ஒரு சாஸ்திர காவியமும் ஆகும். துல்லியமான ஆதாரமுள்ள கிரந்தமும் ஆகும். இதிகாசப்
பின்னணி கொண்ட கிரந்தம் எனப்படுகிறது. சமஸ்கிருத சாகித்ய உலகில் சிறப்பான இடத்தைப்
பெற்று மிகச்சிறந்த காவியம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சுமத்வவிஜயத்தின்
நாயகர், உலகத்தையே காப்பவரான, முக்யபிராணரின் அவதாரமான ஸ்ரீமதானந்த
தீர்த்தர். இவர் சர்வக்ஞர். அனைத்து நற்குணங்களையும் கொண்டவர். அனைத்து
தேவர்களாலும் வணங்கப்படுபவர். அனைத்து லட்சணங்களையும் கொண்டவர். அனைத்து
சாஸ்திரங்களிலும் வல்லவர். அனைவரையும் காப்பவர். துர்மதங்களை நிராகரிப்பவர்.
சர்வமூலங்களை இயற்றியவர். சர்வோத்தமனின் நிஜ தாசர். ஜீவோத்தமரான இவர், ஸ்ரீஹரியின் ஆணைப்படி சஜ்ஜனர்களை
காப்பாற்றுவதற்காக தரைக்கு இறங்கி வந்த மகானுபாவர். இவை அனைத்தையும் நிரூபிக்கும், மேலும் பல மகிமைகளை சுமத்வவிஜயத்தில், அழகுற விளக்கப்பட்டிருக்கின்றன. மந்திர
துல்யமான, அனைத்து வரங்களையும்
கொடுக்கவல்ல இந்த கிருதி தினமும் படிக்க, கேட்க, பாராயணம் செய்யப்படும் கிரந்தமாக நம்
பரம்பரையில் புகழ்பெற்றிருக்கிறது.
இதில் மொத்தம் 16 சர்க்கங்கள், 1008 ஸ்லோகங்கள் உள்ளா. ஸ்ரீமதாசார்யரின்
திவ்ய சரித்திரத்தின் மகிமையை வெவ்வேறு விதமாக வர்ணிக்கும் ஒரேயொரு கிரந்தமாக
இருக்கிறது சுமத்வவிஜயம். ஸ்ரீமதாசார்யரின் த்வைத சித்தாந்தத்தின் தத்வங்களையும்
நிரூபிக்கும் கிரந்தமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட சுமத்வவிஜயத்தை படித்தல், கற்பித்தல் ஒவ்வொரு மாத்வரின்
கடமையாகும். மூல குருவைப் பற்றியே அறியாதவர்கள், குரு
உபதேசத்திற்கு, குரு இயற்றிய
கிரந்தங்களை படிப்பதற்கு, நித்யகர்மானுஷ்டாங்களை
செய்வதற்கு அருகதை அற்றவர்கள்.
மத்வ விஜயத்தில் உள்ள
16 சர்க்கங்களின் ஸாரத்தினை இங்கு
பார்ப்போம்.
முதல் சர்க்கம்:
ஸ்ரீமன் நாராயணனை
வணங்கும் மங்களாசரணத்துடன் சுமத்வவிஜயத்தின் முதல் சர்க்கத்தை துவக்கும் நாராயண
பண்டிதாசார்யர், இந்த கிரந்தத்தின்
நோக்கம் மற்றும் பின்னணியை இங்கே விளக்கியிருக்கிறார். வாயுதேவரின் அவதாரங்களான
ராமாயணத்தின் ஹனுமந்த மற்றும் மகாபாரதத்தின் பீமசேனரின் கதையை சுருக்கமாக
வர்ணித்திருக்கிறார். மூன்றாம் அவதாரமான ஸ்ரீமதாசார்யரின் அவதாரத்தின்
பின்புலத்தின் விவரங்களும் இங்கு இருக்கின்றன.
இரண்டாம் சர்க்கம்:
இந்த சர்க்கத்தில், ஸ்ரீநாராயண பண்டிதாசார்யர், மத்வாசாரியரின் அவதாரத்தின் பின்புலம், ஸ்ரீஹரியின் ஆணை, மத்யகேஹ பட்டர் தம்பதிகளின் அறிமுகம், அவர்கள் அனந்தாசனத்தில் செய்த சேவை, மத்வரின் பிறப்பு, வாசுதேவனின் பற்பல பால்ய லீலைகள்
ஆகியவற்றை விவரித்திருக்கிறார்.
மூன்றாம் சர்க்கம்:
வளர்ந்து வந்த
வாசுதேவன், மக்களுக்கு தனது
பால்ய லீலைகளைக் காட்டினான். பாரதிபதி ஆனவனுக்கு அக்ஷராப்யாசம், வித்யாப்யாசம், வயதுக்கு ஏற்றாற்போல் பிரம்மோபதேசம். ’லிகுச’ சொல்லிற்குப்
பொருள் சொல்வது, பாம்பு வடிவில் வந்த
அசுரனைக் கொன்றது, ஜகத்குரு ஆனவனுக்கு
குருகுலவாசம், குருவின் மகனின்
தலைவலிக்கு தீர்வு, குருதட்சிணையாக்
ஐதரேய உபநிஷத்தினை நிரூபித்தல் - ஆகியவை இந்த சர்க்கத்தில் உள்ளன. சாதாரணமாக
இருந்து, அசாதாரண செயல்களைச்
செய்ததன்மூலம், தான் யார் என்பதை
ஒவ்வொரு கட்டத்திலும் தனது அற்புத லீலைகளினால் அறிவித்தான் வாசுதேவன்.
நான்காம் சர்க்கம்:
வாசுதேவன் சன்யாசி
ஆவதென்று முடிவு, அச்யுதப்ரேக்ஷரின்
பின்புலம், தடை போட தந்தை செய்த
முயற்சிகள் வீணானது, அச்யுதப்ரேக்ஷரைக்
காண வாசுதேவன் பயணம், சகோதரன் பிறப்பு, சன்யாசி ஆதல், ‘பூர்ணப்ரக்ஞ’ என்ற பெயர் பெறுதல், ரஜதபீடபுரத்து குளத்தில் கங்கை
தோன்றுதல், அச்யுதப்ரேக்ஷர்
மூலமாக இஷ்டசித்தி பாடம் கேட்டல், அதில் முதல்
ஸ்லோகத்திலேயே பூர்ணப்ரக்ஞர் 32 பிழைகளைக்
கண்டுபிடித்தல், வேதவியாசருக்கு
ஒப்புதலான ஸ்ரீமத்பாகவத பாடத்தை சொல்லுதல் - ஆகிய விஷயங்கள் இந்த சர்க்கத்தில்
சொல்லப்பட்டிருக்கின்றன.
ஐந்தாம் சர்க்கம்:
பூர்ணபிரக்ஞருக்கு
வேதாந்த சாம்ராஜ்யத்தில் அபிஷேகம், ஆனந்ததீர்த்தர்
என்னும் பெயர், வாதங்களில் வெல்லுதல், புத்திசாகர மற்றும் வாதிசிம்மனை
தோற்கடித்தல், சங்கரபாஷ்யத்தை
கண்டித்தல், சூத்ர வியாக்யான, கன்யாகுமரி வரையிலான தென்னிந்திய பயணம்
- முதலான விஷயங்கள் இந்த சர்க்கத்தில் வருகின்றன.
ஆறாம் சர்க்கம்:
இந்த சர்க்கத்தில் -
ஐதரேய சூக்தத்தின் பொருள், விஷ்ணு
சஹஸ்ரநாமத்தின் ‘விஸ்வ’ என்னும் சொல்லின் பொருள், தான சூக்தத்தின் பொருள், ‘அபாலா’ சொல்லின்
சிறப்புப் பொருள், கீதா பாஷ்யம்
இயற்றுதல், முதல் பத்ரி யாத்திரை, கீதா பாஷ்யம் சமர்ப்பித்தல், வியாசரின் பாராட்டு, ஆசார்யரின் மௌன விரதம், சிஷ்யர்களுக்கான செய்தி, வேதவியாசர் மேல் பத்ரிக்கு அழைத்தல், ஸ்ரீசத்ய தீர்த்தரின் குருபக்தி, அவருக்கு ஆசார்யரின் அருள் - ஆகிய
விஷயங்கள் இந்த சர்க்கத்தில் உள்ளன.
ஏழாம் சர்க்கம்:
தசபிரமதிகளான
பூர்ணப்ரக்ஞர் தென்னிந்தியாவின் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்.
வேதவியாசரிடமிருந்து பத்ரிக்கு வருமாறு அழைப்பு வந்தது. ஸ்ரீமதாசார்யர் பதரிக்குப்
புறப்பட்டார். பாதராயணரைப் பார்ப்பதற்கு சிஷ்யர்களை விட்டு முன்னே சென்றார். வியாச
ஆசிரமத்தை அடைந்தார். வேதவியாசரை கண்டார். இங்கு ஆசார்யரின் தேக வர்ணனை மற்றும்
வேதவியாசரின் தோற்ற வர்ணனை வருகிறது. இது படிப்பதற்கு மகிழ்ச்சியைக்
கொடுக்கக்கூடியது, என்றும் புதியது, ஞானத்தை தரக்கூடியது. இவ்விருவரின்
சந்திப்பைக் கண்ட ஞானிகளே தன்யர். இதை இந்த சர்க்கத்தில் அருமையாக
வர்ணித்திருக்கும் நாராயண பண்டிதாசார்யரின் திறன் அற்புதமானது.
எட்டாம் சர்க்கம்:
உத்தர-பதரியில்
வியாஸமத்வரின் சந்திப்பு. சர்வோத்தமரிடத்தில் ஜீவோத்தமரின் சிஷ்யத்வம். சிறிது
காலத்திலேயே பற்பல வேதங்களின் பொருளைக் கற்றார். இன்னொரு ரூபமான நாராயணரைக்
காண்பதற்கு, நாராயண ஆசிரமத்திற்கு
வியாசரே மத்வரை அழைத்துச் சென்றார். தவம் செய்து கொண்டிருந்த நாராயணரைக் கண்டார்.
எண்ணிக்கையற்ற ரூபங்களைக் கொண்ட ஸ்ரீஹரியின் திவ்யரூபங்களை சிந்தித்தார்.
மத்ஸ்யாதி பல ரூபங்களின் வர்ணனையை மிகச் சிறப்பாக கொடுத்திருக்கிறார் நாராயண
பண்டிதர். அனந்தரூபியான நாராயணன், மத்வரை பிரம்மசூத்ர
பாஷ்யத்தை இயற்றுமாறு கூறினார். வேதவியாஸ - நாராயண - மத்வர் ஆகியோர்
மூன்று-அக்னியைப் போல அமந்திருந்ததை இந்த சர்க்கத்தில் பார்க்கலாம்.
ஒன்பதாம் சர்க்கம்:
நாராயணரின்
ஆசிரமத்திலிருந்து வேதவியாசரின் ஆசிரமத்திற்கு திரும்பினார் மத்வர்.
வேதவியாசரிடமிருந்து தத்வோபதேசம். அக்னிசர்மா முதலான 5-6 பிராமணர்களிலிருந்து ஒரே நேரத்தில்
பிக்ஷை ஸ்வீகரித்தல். பதரியில் பிரம்மசூத்ர பாஷ்யம் இயற்றுதல். சத்யதீர்த்தர் அதை
ஆவணப்படுத்துவது. பாஷ்யத்தின் சிறப்பினை விவரித்தல். பதரியிலிருந்து கோதாவரி
நதிக்கரைக்கு மத்வர் வருகை மற்றும் அங்கு தத்வபிரசாரம். சோபனபட்டர் ஸ்ரீபத்பனாப
தீர்த்தர் என்று பெயர் பெற்று ஆசார்யரின் சிஷ்யராதல். உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ண
பிரதிஷ்டை. குரு புத்ரரினால் யக்ஞம். மத்வரின் இரண்டாவது பதரியாத்திரை. வேதவியாசரை
வணங்கி மறுபடி ரஜதபீடபுரத்திற்கு வருகை - ஆகிய விஷயங்கள் இந்த சர்க்கத்தில்
வருகின்றன.
பத்தாம் சர்க்கம்:
இரண்டாம் பத்ரி
யாத்திரையின்போது ஆசார்ய மத்வர் செய்துகாட்டிய பல மகிமைகள் இந்த சர்க்கத்தில்
விளக்கமாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமான விஷயங்கள் என்றால், ஸ்ரீமத்வர் தாம் பிராணதேவர் என்று
காட்டியது, துளுவ அரசனுடனான
சந்திப்பு, பயணத்தில் செய்து
காட்டிய விஷயங்கள், யோகசக்தியைக்
காட்டியது ஆகியன வந்திருக்கின்றன. மத்வரின் வெற்றிப்பயணம் மற்றும் தேக வர்ணனையானது
அற்புதமான காவிய நடையில் சொல்லப்பட்டிருக்கின்றன. பல நடைகளினால் நிரம்பிய இந்த
சர்க்கம் மத்வவிஜய-சுருக்கம் என்றே அழைக்கப்படுகிறது.
பதினொன்றாம்
சர்க்கம்:
ஸ்ரீமதாசார்யர்
இயற்றிய பிரம்மசூத்ர பாஷ்யத்தை கேட்பதன் பலன்,
ஸ்ரீஹரியின்
மற்றும் வாசுதேவனான வைகுண்டனின் வர்ணனை, முக்தர்களின் சாதனை
மற்றும் வைகுண்டத்தில் இருக்கும் கோயில், வீடு, பொருட்களின் வர்ணனை, அங்கு ரமாதேவியின் விசேஷ சேவையின்
வர்ணனை, முக்தர்களின் / முக்த
ஸ்திரீகளின் வர்ணனை, ஹரிமந்திரத்தின்
மகிமை - இந்த விஷயங்கள் அனைத்தும் இந்த சர்க்கத்தில் உள்ளன.
பன்னிரெண்டாம்
சர்க்கம்:
ஸ்ரீமத்வாசார்யரின்
தத்வவாதம் அனைத்து திசைகளிலும் பரவத் துவங்கியதும், அதை
தடுப்பதற்கும் கண்டிப்பதற்கும் மாயாவாதிகள் முயன்றனர். (மாயாவாதத்தின் சுருக்க
அறிமுகம் உள்ளது). ஸ்ரீமதாசார்யர் வேதங்களை
உச்சரிக்கும் முறை, பத்மதீர்த்தரினால்
மாத்வ கிரந்தங்கள் திருடப்படுவது, புண்டரீகபுரியை
ஆசார்யர் வாதத்தில் வெல்லுதல், ஆசார்யரின் மகிமையை
சிஷ்யர் விளக்குதல், ‘கோடிப்பாடி’ கிராமத்தில் மத்வரின் சாதுர்மாச விரதம்
- ஆகிய விஷயங்கள் இந்த சர்க்கத்தில் வந்துள்ளது.
பதிமூன்றாம்
சர்க்கம்:
ஸ்ரீமன் மத்வாசார்யர், ப்ராக்ர்யவாட கிராமத்தில் சாதுர்மாசத்தை
முடித்து சஹ்யாத்ரிக்கு வந்தார். ஜயசிம்ம ராஜனின் அழைப்பின் பேரில் அந்த
பிராந்தியத்திற்கு பிரயாணம். மதனேஸ்வர தேவாலயத்திலிருந்து வந்த, அழகான தேஜஸ்ஸினை உடைய ஆசார்ய மத்வருக்கு
ஜயசிம்ம்மன் செய்த அபூர்வமான வரவேற்பு, அனைத்து தேவர்களாலும்
வணங்கப்படும், சச்சிதானந்த
மூர்த்தியான ஸ்ரீமத்வரின் மங்கள உருவ வர்ணனை. பாகவத பிரவசன ரூபத்தில் மத்வவாணி, த்ரிவிக்ரம பண்டிதரின் பின்னணி, பாலலீலைகளுடன் அவரது சிறப்புகள், தத்வங்களை அறியவேண்டுமென்ற அவரது ஆவல், ஆசார்யருடன் சந்திப்பு - ஆகியவை இந்த
சர்க்கத்தில் உள்ளன.
பதினான்காம்
சர்க்கம்:
ஸ்ரீமதானந்ததீர்த்தரைக்
கண்ட ஜயசிம்ம பூபாலன், அவரின் அறிவு, திறன், தவம், தேஜஸ்ஸினைக் கண்டு மயங்கினான். பணிவுடன்
அவரது சேவகனானான். பத்மதீர்த்தரிடமிருந்து கைப்பற்றிய கிரந்தங்களை மறுபடி
ஆசார்யரிடம் ஒப்புவித்தான். சபையில் த்ரிவிக்ரம பண்டிதரின் வருகை. தேவதைகளும்
நினைக்கக்கூடிய ஸ்ரீமதானந்ததீர்த்தரின் தினப்படி செயல்களை நாராயண பண்டிதர் மிக அழகாக வர்ணிக்கிறார். அருணோதய
காலத்திலிருந்து துவங்கி மாலையில் ஆன்ஹிகங்களின் வரை அனைத்து செயல்களையும்
ஸ்ரீஹரியின் யக்ஞமாக நினைத்து, சஜ்ஜனர்களுக்கு
சிறந்த வழிகாட்டியாகவும், தேவதைகளாலும்
மதிக்கத் தக்கவராக இருந்தார் - என்ற விஷயங்கள் இந்த சர்க்கத்தில் உள்ளன.
பதினைந்தாம்
சர்க்கம்:
அமராலயத்தில்
தங்கியிருந்த ஆசார்யரிடமிருந்து சூத்ரபாஷ்யத்தின் அபூர்வமான சொற்பொழிவு, துர்மதங்களை கண்டித்தல், ஸ்வமதத்தின் சிறப்புகளை ஆசார்யரின்
முகத்திலிருந்து கேட்ட த்ரிவிக்ரம பண்டிதர் அத்வைத சித்தாந்தத்தை கைவிடுவதற்கு
தீர்மானித்தல். 15 நாட்கள்
வாதத்திற்குப் பிறகு, உண்மையை அறிந்து
ஆசார்யரின் சிஷ்யராதல். த்ரிவிக்ரம பண்டிதர் மூலமாக மாத்வ கிரந்தங்களின் வர்ணனை.
இவர் கேட்டுக்கொண்டதால், ஆசார்யர் அனுவியாக்யானத்தை
இயற்றினார். வைராக்ய மூர்த்தியான தனது சகோதரருக்கு அருளி, சன்யாச ஆசிரமத்தைக் கொடுத்து ‘விஷ்ணு தீர்த்தர்’ என்ற பெயரையும் சூட்டினார்.
விஷ்ணுதீர்த்தரின் சிறப்புகள் வர்ணிக்கப்பட்டுள்ளது. சித்தாந்த பிரசாரத்திற்காக
பத்பனாப தீர்த்தரை நியமித்தார். பல சன்யாசி சிஷ்யர்களைப் பெற்ற ஸ்ரீமதாசார்யரின்
மகிமைகள் மற்றும் சிஷ்யர்களின் சிறப்புகள் ஆகியவற்றை நாராயண பண்டிதர் இந்த
சர்க்கத்தில் விளக்கியுள்ளார்.
பதினாறாம் சர்க்கம்:
மகாவேதாந்த
காவியத்தின் இந்த சர்க்கத்தில் பண்டிதர் ஸ்ரீமதானந்ததீர்த்தரின் பல மகிமைகளை வர்ணித்திருக்கிறார்.
பத்தாவது சர்க்கத்தில் விளக்கியதைப் போல இங்கும் சித்தாந்தத்தின் சிறப்புகள்
விளக்கப்பட்டுள்ளன. இந்த பூர்ணப்ரக்ஞ விஜயம்,
ஸ்ரீமதாசார்யரிடம், அவர் நிறுவிய சித்தாந்தத்தில், நிர்மலமான பக்தியை வளர்த்து, ஸ்ரீஹரியின் அருளைக் கொடுக்கும்
என்பதில் சந்தேகமில்லை. ஆசார்ய மத்வர் தம் வாழ்க்கை முழுவதும் காட்டிய திவ்யமான, அற்புதமான, காணக்கிடைக்காத, ஸ்ரீஹரியின் மகிமைகளில், நாராயண பண்டிதர் சிலவற்றை மட்டும் இங்கு
தொகுத்து, அழகான நடையில்
விளக்கியிருக்கிறார். ஸ்ரீமதாசார்யரின் பல மகிமைகளை விவரிக்கும் இந்த சர்க்கத்தில்
ஸ்ரீமதாசார்யர், தேவதைகளால்
போற்றப்பட்டு, பார்வையிலிருந்து
மறைந்த காட்சியை வர்ணித்து, ஸ்ரீ
சுமத்வவிஜயத்தின் விஜயமகோத்ஸவமாக சொல்லியிருக்கிறார்.
***
இத்தகைய அற்புத மத்வ
விஜயத்தின் ஸார ஸங்க்ரஹத்தை இயற்றிய ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தரைப் பற்றி அடுத்த
பதிவில் பார்ப்போம்.
***
No comments:
Post a Comment