முன்னுரை - 2
இந்த முன்னுரை -2ல், ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தரின் மகிமைகளைப் பற்றி அறிந்துவிட்டு, அடுத்த பதிவிலிருந்து ஸ்ரீமத்வ விஜய ஸார ஸங்க்ரஹத்தின் ஸ்லோகங்களை பார்க்கத் துவங்குவோம்.
நன்றி. ஹரே ஸ்ரீனிவாஸா.
*****
ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்
(இந்த கட்டுரையை எழுதியவர்: திரு.லட்சுமிபதிராஜா, சென்னை அவர்கள்)
ஸ்ரீ மத் கிருஷ்ண பதாம்போஜ மானஸம் கவி புங்கவம்!
ஸ்ரீ மத் வித்யா ப்ரஸன்னாப்திம் குரும் வந்தே நிரந்தரம்!!
ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர் வியாசராஜ மடப் பரம்பரையில் 37 வது பீடாதீஸராக அலங்கரித்த மஹனீயர். இவரது காலம் 1940 முதல் 1969 வரை ஆகும் (பீடத்தில் இருந்த காலம்). இவர் பூர்வாஸ்ரமத்தில் வழக்கறிஞர் சமூக சேவகர், பல மொழிகளிலும் புலமை, ஸாஸ்திர ஞானம் என விளங்கியதோடு, பீடாதீஸராக அலங்கரித்ததுடன் ஹரிதாஸர் ஆகவும் பக்தி பிரச்சாரம் செய்த மஹா புருஷர். 'பிரஸன்ன' அங்கிதத்தில் கிருதிகளை ரசனை செய்து சமீபகாலத்தில் வாழ்ந்த ஸன்யாஸ தீக்ஷை பெற்ற ஹரி தாஸர் இவர். கிட்டத்தட்ட 30 வருடக்காலம் பீடத்தில் அமர்ந்து மூல கோபால கிருஷ்ணனை பூஜித்த மஹான். இவரது குரு ஸ்ரீவித்யா வாரிதி தீர்த்தர். இவரது ஆஸ்ரம சிஷ்யர் ஸ்ரீ வித்யா பயோநிதி தீர்த்தர். ஸ்ரீ ராகவேந்திர மடத்தின் ஸ்ரீ ஸுயமீந்திர தீர்த்தர், ஸ்ரீ ஸுஜயீந்திர தீர்த்தர், ஸ்ரீ பாதராஜ மடத்தின் ஸ்ரீ தயாநிதி தீர்த்தர், ஸ்ரீ ஸத்யநிதி தீர்த்தர் மற்றும் ஸ்ரீ உத்தராதி மடத்தின் ஸ்ரீ ஸத்யத்யான தீர்த்தர்' ஸ்ரீ ஸத்யாபிக்ஞ தீர்த்தர், ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த்தர் போன்றவர்களின் சமகாலத்தவர் இவர்.
பூர்வாஸ்ரமத்திலே இவரது பூர்வீகம் தமிழ்நாட்டிலே கோவை மாவட்டம் அவினாசிக்கு அருகில் உள்ள தெக்கலூர் என்பதாகும். இவரது மூதாதையர்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்ரீ வித்யா காந்த தீர்த்தர் காலத்தில் ஸோஸலேவிற்கு இடம் பெயர்ந்தனர். இவரது பூர்வாஸ்ரம தாய் தந்தையர்கள் ஸ்ரீமதி ஸத்யபாமா மற்றும் ஸ்ரீ அஹோபிலாச்சார் (பின்னர் ஸ்ரீ வித்யா ரத்னாகர தீர்த்தராக பட்டம் ஏற்றவர்) தம்பதிகள் நாமக்கல் நரஸிம்மரைத் துதித்து சேவை புரிந்ததினால், பல பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரே மகனாகப் பிறந்தார். நரஸிம்மனின் அருளால் பிறந்தமையால் "வெங்கட நரஸிம்மா" என்று பெயர் வைத்தனர். பின்னாளில் இவர் தெக்கலூர் வெங்கட நரஸிம்மாச்சார் (அ) T.V . நரஸிம்மாச்சார் என்றே பிரஸித்தியாக விளங்கினார்.
ஸ்ரீவித்யா ஸிந்து தீர்த்தர் (அக்கிபேளே ஸ்வாமிகள்) காலத்தில் மடத்தின் செல்வங்களையெல்லாம், பஞ்சத்தைப் போக்க, தான மாக அளித்து விட்ட சூழ்நிலையில், இவரது காலத்திற்குப் பின் ஸ்ரீ வித்யா ஸமுத்ர தீர்த்தர் காலம் வரை மடமானது பணப் பற்றாக்குறையினால் கடினமான சூழ்நிலையைக் கடந்து வந்த காலம் அது.
ஸ்ரீவித்யா ஸமுத்திரத் தீர்த்தர் தனக்குப் பிறகு பீடத்தை அலங்கரிக்க மிகச்சிறந்த பாண்டித்தியம் பெற்று விளங்கிய ஸ்ரீ அஹோபிலாச்சாரைத் தேர்ந்தெடுத்து, ஸன்யாஸம் அளித்து "ஸ்ரீ வித்யா ரத்னாகர தீர்த்தர் "என நாமம் சூட்டினார். மடத்தின் நிலைமை அறிந்து' மைசூர் மகாராஜா வும் மடத்தின் நிர்வாகத்திற்கு ஆகும் செலவினை ஏற்று நடத்த ஒப்புக் கொண்டார். மடத்தின் முன்னேற்றத்திற்காக அப்போது பல தரப்பட்ட சேவைகளையாற்றிய மகனீயர் ஸ்ரீ வித்யா ரத்னாகர தீர்த்தர். உத்தராதி மடத்தின் ஸ்ரீ ஸத்ய த்யான தீர்த்தர் முதலானோர் மெச்சிய ஞானம் கொண்ட தபோசீலர் இவர்.
ஸ்ரீவித்யா ரத்னாகர தீர்த்தர் பூர்வாஸ்ரமத்தில் (அஹோபிலா ச்சார்) T.V. நரஸிம்மாச்சாரை ஸாஸ்திரத்தில் மிகச் சிறந்த நிபுணத்துவம் பெற வைக்க வேண்டும் என்ற இச்சை கொண்டி ருந்தார். அவர் ஸன்யாஸ ஆஸ்ரமம் ஏற்க, ஸ்ரீமதி ஸத்யபாமா அவர்கள் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தியதுடன் தனது மகனை வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. இந்நிலையில், அவர் T.V. நரஸிம்மாச்சாரை லௌகிக கல்வி யிலும் மிகச் சிறந்ததாக தயார் செய்தார். ஆச்சார் பெங்களூரில் B.A Honors பட்டம் பெற்று, மேலும் படிப்பைத் தொடர்ந்து, சென்னையில் சட்டம் படித்து BA.B.L பட்டம் பெற்றார். மைசூரில் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்ட நரஸிம்மாச்சார், சிறிது காலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மடத்தின் சட்ட ஆலோசகராக செயல்புரிந்து, மடத்தின் சில நில ஆக்கிரமிப்பு விவகாரங்களில் சட்ட ரீதியாக வெற்றி கண்டு, நிலங்களையும் சொத்துக்களையும் மீட்டு எடுக்க உதவி புரிந்தார்.
இந்நிலையில் ஸ்ரீவித்யா ரத்னாகர தீர்த்தர் பிருந்தாவனஸ்தர் ஆகும் முன், ஸ்ரீ வித்யா வாரிதி தீர்த்தரிடம் சூசனை அளித்து, T.V. நரஸிம்மாச்சாரின் ஸ்வரூப யோக்கியதையை அறிந்து, அவரை ஸாஸ்திர பாடத்தில் சிறந்த வகையில் தயார் செய்யும்படி வழி வகைக் கூறி, உணர்த்தினார். குருவின் வழிகாட்டுதலின்படி நெடூர் கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரிடமும், வீரசோழபுரம் கிருஷ்ணா ச்சாரிடமும் ஸாஸ்திரப் பாடங்களை சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தார் நரஸிம்மாச்சார். அதே வேளையில் வியாஸராஜ மடத்தில் பல தரப்பட்ட நற்காரியங்களைப் புரிந்து வந்த ஸ்ரீ வித்யாவாரிதி தீர்த்தர், மூல கோபாலகிருஷ்ணனின் பூஜைக்காக தங்க மண்டபம், வெள்ளி மண்டபம், தங்கத் தொட்டில், பட்டாபி ராமனுக்கு தங்க கிரீடம், கவசம் முதலியவற்றை சமர்ப்பித்ததுடன், வியாஸராஜபுரத்தில் மடத்தை உருவாக்கி, 'வ்யாஸ யோகி சரித்திரம்' என்ற கிரந்தத்தின் ஆராய்ச்சிகளை விளக்குவித்தார். ஸ்ரீஹரிவாயுகுரு மஹனீயர்களின் ப்ரேரணை யினால், சூசனையாகி ஸ்ரீ வித்யா வாரிதி தீர்த்தர் 1935-ம் ஆண்டு T.V. நரஸிம்மாச்சாரியாருக்கு ஸன்யாஸம் அளித்து, 'ஸ்ரீ வித்யா பிரஸன்ன தீர்த்தர்' என்று நாமகரணம் செய்தார். பின்னர் பீடத்தை ஸ்ரீ வித்யா பிரஸன்ன தீர்த்தரிடம் ஒப்படைத்து 1939-ம் ஆண்டு பாத்ரபத மாஸ ஸுக்லபக்ஷ பஞ்சமியன்று ஸ்ரீரங்கத்தில் பிருந்தாவனஸ்தனார் ஸ்ரீ வித்யா வாரதி தீர்த்தர். ஸ்ரீ வித்யா பிரஸன்ன தீர்த்தர், தமது குருவிற்கு விஸேஷமாக வைபவங் களுடன் ஸமாராதனையை செய்து சேவை புரிந்தார்.
ஸ்ரீ வியாஸராஜ மடம் முக்கியமாக ஹரி தாஸ ஸாஹித்தி யத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்ததுடன், அத்தகைய தாஸ கான ஸேவை செய்பவர்களையும் விளக்குவிப்பதில் முக்கிய த்துவம் அளித்து வந்துள்ளது. ஸ்ரீ வியாஸராஜரிடம் இருந்து ஆரம்பித்து, ஸ்ரீ வித்யா காந்த தீர்த்தர், ஸ்ரீ வித்யா ரத்னாகர தீர்த்தர் வரை இத்தகைய சேவையை செய்து வந்ததை சரித்திரத்தில் காண முடிகிறது. அவ்வகையில் ஸ்ரீ மூல கோபால கிருஷ்ணனின் பரிபூர்ண அனுக்ரஹத்திற்குப் பாத்திரரான ஸ்ரீ வித்யா பிரஸன்ன தீர்த்தர் "பிரஸன்ன" என்று அங்கிதத்திலே (முத்ரையிலே) எத்தனையே க்ருதிகளை ரசனை செய்துள்ளார். ஸ்ரீ பாதராஜர், ஸ்ரீ வியாஸராஜர், ஸ்ரீ புரந்தரதாஸர் போல எந்தவொரு தலைப்பிலும் பலவித ராகங்களில் க்ருதி களை ரசனை செய்யும் திறமை உடையவராக விளங்கினார். ஸாஸ்திர விஷயங்களின் ஸாரத்துடன், பக்தி ரஸத்தையும் கலந்து மிக ரம்மியமான இசையில் அமைந்த பாடல்கள் இவருடையவை ஆகும். த்விபதி, சதுஷ்பதி, ஷட்பதி எனக் கடினமான இசை வகையிலும் கூட க்ருதிகளை படைத்துள்ளார். கன்னடத்தில் அமைந்த படைப்புகள் பலவற்றுள் "பதரிகாஸ்ரம வர்ணனை," "வைகுண்ட வர்ணனை," "ஸுமத்வ விஜய ஸார ஸங்க்ரஹம்" போன்றவை மிக முக்கியமானதாகும். அவருடைய ஸாஹித்தியங்களில் "ஹுபேகே பரிமளத", "குனி குனி யெளொ பால கோபால", "ஜனும ஜனுமதலி" போன்றவை மிக பிரபலமானவை. குரு மஹனியர் ஸமஸ்க்ருதத்திலும் க்ருதிகளை வழங்கியவர். ஆங்கிலத்திலும் மிகச் சிறந்த புலமை வாய்ந்த இவர், புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், மில்டர், கெய்த் போன்றவர்களின் படைப்புகளாலும், ஸமஸ்க்ருதத்தில் காளிதாசனின் படைப்புகளாலும் ஈர்க்கப்பட்டு தனக்கென ஒரு பாங்கினை உருவாக்கி பலதரப்பட்ட மேடை நாடக படைப்புகளை அளித்துள்ளார். அவற்றில் சில கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.
ஸ்வாமிகள் சமுதாய பிரச்சினைகளை நநோக்குவதிலும், சரி செய்வதிலும் முற்போக்கு சிந்தனையாளராக இருப்பினும், ஸம்பிரதாயங்களைக் கடைபிடிப்பதில் மிக கண்டிப்பாக இருந்தவர். ஸ்வாமிகளின் சமுதாயத் தொண்டும் ஞான காரியத்திற்கான சேவையும் அளவிட முடியாதது. அப்போதைய பேஜாவர் மடாதீசர் ஸ்ரீ விஸ்வேஸ தீர்த்த ஸ்ரீ பாதங்கள் உருவாக்கிய 'அகில பாரத மத்வ மஹா மண்டல' என்னும் மாத்வர்களை ஒருங்கிணைத்து ஸபைகளை அமைத்து தத்வ பிரசாரம் செய்யும் ஸத்காரியத்தில் , ஸ்ரீ வித்யா பிரஸன்ன தீர்த்தர் ஆரம்பம் முதலே, அவருடைய காலம் முழுவதும் வெவ்வேறு சபாக்களில் தலைமை பொறுப்பேற்று நடத்தியவர். இத்தகைய சபாக்களில் அவர் அளித்த சொற்பொழிவுகளின் தொகுப்பு கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. உதாரணத்திற்கு சென்னையில் தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடைபெற்ற சபாவில் மைசூர் மகாராஜா முதலியோர் கலந்து கொண்டு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. ஸ்வாமிகள் வியாசராஜபுரத்தில் உள்ள சந்த்ரிகா குருகுலத்தில் பயிலும் வித்யார்த்திகளுக்கு இலவசமாக உணவு விடுதிகளை ஏற்படுத்திக் கொடுத்து ஸ்ரீ மடத்தின் மூலமாக மாபெரும் சேவையாற்றியுள்ளார். முக்கியமாக கிரந்த பிரசாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குருமகனீயர் 'சந்த்ரிகா பதிப்பகம்' மூலமாக பல கிரந்தங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். முக்கியமாக பரமகுருவான ஸ்ரீ வித்யா ரத்னாகர தீர்த்தரின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டதுடன் "பாஷ்ய தீபிகா" முதலான கிரந்தங்கள் வெளிவர ஸ்ரீ மடத்தின் மூலம் பொருள் உதவியும் ஊக்குவிப்பும் நல்கியவர். 'தஸப்ரமதி தர்ஸன ப்ரகாசினி சபாவின்' மூலம் ஸத்காரியங்களை நடத்தி ஊக்குவித்தவர் ஸ்ரீ வித்யா பிரஸன்ன தீர்த்தர். தாம் பிருந்தாவனஸ்தராகும் காலம் நெருங்குவதை உணர்ந்து மடத்தின் சிஷ்யரான மிகச் சிறந்த பண்டிதரான ஸ்ரீ பூர்ணபோத ஆச்சாரைத் தேர்ந்தெடுத்து, 'ஸ்ரீ வித்யா பயோநிதி தீர்த்தர்' என்று நாமக்கரணம் செய்து ஸன்யாஸ தீக்ஷை வழங்கினார்.
ஸ்ரீ வித்யா பயோநிதி தீர்த்தர் பூர்வாஸ்ரமத்திலேயே
ஸ்வாமி க ளிடத்தில் அத்யயனம் செய்தவர். விஸேஷமாக தஸ ப்ரகர ணங்கள், ஸுத்ர பாஷ்ய தீபிகா, ப்ரமாண பத்ததி, தத்வ பிரகாசிகா போன்றவற்றை கற்றுத் தேர்ந்தவர். பெங்களூரில் ஸ்ரீ வியாஸ ராஜ
மடத்தின் திவானாகவும் ஸேவையாற்றியவர். அத்தகைய சிஷ்யருக்கு ஆஸ்ரமத்தை அளித்ததுடன், பீடத் தையும் ஒப்படைத்து, 1969-ம் ஆண்டு மார்கஸீர்ஷ மாஸ (மார்கழி)
பௌர்ணமி தினத்தன்று ஸோஸலேவில் பிருந்தாவனஸ்தரா னார் ஸ்ரீ வித்யா பிரஸன்ன
தீர்த்தர். இன்றும் தம்மை வேண்டும் பக்தர்களுக்கும், ஸேவை புரிவோருக்கும், ஞான, பக்தி, வைராக்கி யத்தையும், விஸேஷமான பாண்டித்தியத்தையும்
அருள்பவரான, இத்தகைய மகனியரின் பாதம் பணிந்து போற்றுவோமாக !
***
No comments:
Post a Comment