Saturday, February 26, 2022

ஸ்லோகம் #4: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

 

ஸ்லோகம் #4: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

அரிஸமூஹவ பொஸகி1 தா யது3 வரன சரணாம்பு3ருஹ மது4கர

னுரு பராக்ரமவரிது தி3திஜரு மத்ஸரதி3 உரிது3 |

4ரணியலி புட்டித3ரு து3ர்மத ஸரணி ஹரடு3த ஸேட3னெஸக3லு

மருத3ம்ஷன பீ4மஸேனன சரணவே ஷரணு ||4 

அரி - எதிரி; சமூஹவ - கூட்டத்தினை; பொஸகி - அழித்து; தா - தான் (பீமசேனதேவர்); யது வரன = யது குலத்தில் சிறந்தவனான (ஸ்ரீகிருஷணனின்); சரணாம்புருஹ - பாத கமலங்களை; மதுகர - மலர்களை சுற்றி வரும் தேனியைப் போல; உரு பராக்ரமவரிது - (இத்தகைய பீமசேனதேவரின்) வீர பராக்கிரமங்களை அறிந்து; திதிஜரு - அசுரர்கள்; மத்ஸரதி உரிது - பொறாமையில் எரிந்து; தரணியலி - பூமியில்; புட்டிதரு - பிறந்தனர்; துர்மத ஸரணி - பல கெட்ட சாஸ்திரங்களை; ஹரடுத - பரப்பியவாறு; ஸேடனெஸகலு - பழிவாங்கும் செயலை செய்ய; மருதம்ஷன - வாயுதேவரின் அவதாரமான; பீமஸேனன - பீமசேனதேவரின்; சரணவே சரணு - பாதங்களை நான் வணங்குகிறேன். 

பீமசேனதேவரின் மகிமையை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். எதிரிகளின் கூட்டத்தினை அழித்து, பீமசேனதேவர், யது குலத்தில் சிறந்தவனான ஸ்ரீகிருஷ்ணனின் பாத கமலங்களை, மலர்களை சுற்றி வரும் தேனியைப் போல சுற்றி வந்து வணங்குகிறார். இத்தகைய பீமசேனதேவரின் வீர பராக்கிரமங்களை அறிந்த அசுரர்கள், மிகவும் துக்கமடைந்து, மறுபடி கலியுகத்தில் இதே பூமியில் பிறந்து, அவர்களின் ஸ்வபாவங்களுக்கேற்ப, பல கெட்ட சாஸ்திரங்களைப் படைத்து, தங்களின் பழிவாங்கும் செயலை செய்யத் துவங்கினர். இத்தகைய மகிமைகளைக் கொண்ட, வாயுதேவரின் அவதாரமான பீமஸேனதேவரின் பாதங்களை நான் வணங்குகிறேன் -- என்கிறார். 

கிருஷ்ணாங்க்ரி பங்கேருஹ ப்ருங்கராஜ:

கிருஷ்ணாமுகாம்போருஹ ஹம்ஸ ராஜ: || (1-43) 

மலர்களை சுற்றிவரும் தேனியைப் போல, ஸ்ரீகிருஷ்ணனின் பாத கமலங்களை பீமன் வணங்கினார். திரௌபதியின் முக கமலங்களுக்கு அன்னப்பறவையைப் போல இருந்தார். தனது ஆட்சியில் இருந்த மக்கள் என்னும் கமலங்களுக்கு, சூரியனைப் போல காட்சியளித்து, தனது சகோதரர்களுடன் ஒளிர்ந்தார் - என்கிறார் நாராயண பண்டிதாசார்யர். 

விஷ்வம் மித்யா விபுரகுணவான் ஆத்மனாம் நாஸ்தி பேதோ

தைத்யா இத்தம் வ்யததத கிராம் திக்‌ஷு பூய: ப்ரஸித்திம் || (1-55) 

பீமசேனதேவரின் வீர பராக்கிரமங்களை அறிந்த அசுரர்கள், மிகவும் துக்கமடைந்து, மறுபடி கலியுகத்தில் பிறந்து, தங்களது பழிவாங்கும் செயலை செய்யத் துவங்கினர். ஸ்ரீஹரி குணங்கள் இல்லாதவன். ஸ்ரீஹரி மற்றும் ஜீவர்களுக்கு பேதம் இல்லை என்னும் மாயாவாதிகளின் கருத்து மக்களிடையே பரவத் துவங்கியது. அனைத்து நற்குணங்களையும் பெற்றவனான ஸ்ரீஹரியை, சஜ்ஜனர்களின் மனதிலிருந்து மறையுமாறு அந்த அசுரர்கள் செய்தனர் - என்கிறது மத்வவிஜய முதலாம் சர்க்கத்தின் கடைசி ஸ்லோகம். 

இதையே ஸ்ரீஸ்ரீபாதராஜர் மத்வ நாமாவில் எப்படி சொல்லியிருக்கிறார் என்றால்: 

ஹரிக்ருபெய படெதிர்த்த பீம ஹுங்காரதிம்

தரிய திவ்யாஸ்த்ரகள நெரெ அட்டித ||19 

பீமசேனதேவர் சாட்சாத் முக்யபிராணரின் அவதாரம் என்று மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாயுதேவர் ருஜுகணஸ்தர். பா4வி (எதிர்கால) பிரம்மன். ஸ்ரீஹரி இவரின் மேல் வைத்திருக்கும் பிரியம் (லட்சுமிதேவியைத் தவிர), வேறு யாரின் மேலும் அவர் வைத்திருக்கவில்லை. 

தானவரு கலியுகதொளவதரிஸி விபுதரொளு

வேனன மதவ நருஹலதனரிது ||23 

28வது த்வாபர யுகத்தில் பீமசேனரின் பெருமையைக் கண்டு பொறுக்காமல், தைத்யர்கள் (தானவர்கள்) அந்த கோபத்தை எப்படியாவது தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று சிந்தித்தனர். ஸ்ரீகிருஷ்ணனின் உதவியால் பீமசேனர் முதலான பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். கலியுகத்தில் ஸ்ரீஹரி அவதரிப்பதில்லை. அப்போது நாமெல்லாம் அங்கு பிறந்து திரௌபதியின் ஸ்தானத்தில் இருக்கும் நற்சாஸ்திரங்களை தவறாக வியாக்யானம் செய்து பிரம்மன் நிர்குணன் என்று பரப்புவோம்என்று தீர்மானித்தனர். 

அதன்படியே தம் பகையை தீர்த்துக்கொள்ள கலியுகத்தில் பிராமண ஜாதியில் அவர்கள் பிறந்தனர். துஷ்ட சாஸ்திரங்களை இயற்றினர். சௌகந்திக வனத்தில் பீமனால் கொல்லப்பட்ட மணிமந்தன் என்னும் தைத்யன் கலியுகத்தில் மறுபடி பிறந்து, எல்லா இடங்களிலும் தவறான ஞானத்தை பரப்பினான். ருத்ர தேவரைக் குறித்து தவம் செய்து, வரம் பெற்று புகழடைந்தான். பிரம்மசூத்ரங்களுக்கு துர்பாஷ்யங்களை இயற்றி தத்வஞானம் மறையுமாறு செய்தான். பாகவத தர்மங்களை நாசப்படுத்தினான். 

இத்துடன் மத்வவிஜயத்தின் முதல் சர்க்கத்தின் ஸாரம் முடிவடைந்தது. அடுத்த ஸ்லோகத்திலிருந்து இரண்டாம் சர்க்கத்தின் விஷயம் தொடங்குகிறது. 

****

No comments:

Post a Comment