Thursday, June 21, 2018

7/360 சாது சங்கவாகலி

ஜ்யேஷ்ட சுத்த அஷ்டமி
7/360 சாது சங்கவாகலி

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்





அச்யுதாங்க்ரி நிஷ்டர யத்ருச்சாலாப துஷ்டர |
நிஸ்சய ஞானவந்தர அச்ச பாகவதர நித்ய ||
சங்கவாகலி சாது சங்கவாகலி || -- ஸ்ரீ பிரசன்ன வேங்கட தாசர்

சுகமான வாழ்க்கை அமையவேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் இந்த சுகம் எப்படி கிடைக்கும் என்று அறிவது முக்கியம். யாரின் நட்பின் மூலம், யாரின் வழிகாட்டுதலில், யாரின் நடவடிக்கைகளால் இந்த சுகம் கிடைக்கும் என்று தாசர் இந்தப் பாடலில் கோடிட்டுக் காட்டுகிறார். 

அச்யுத (அழிவு இல்லாதவன்; என்றும், யாராலும் அழிக்க முடியாதவன்) என்னும் ஸ்ரீஹரியை, மற்றும் அவனை நம்பி நடக்கும் சஜ்ஜனர்களின் நட்பு - அனைத்திற்கும் மூல காரணமாக இருக்கிறது. ‘அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம’ என்று அவனே கதி என்று அறிந்தவர்கள் மற்றும் ‘தேனத்யக்தேன புஞ்சீதா:’ என்று ஸ்ரீஹரி கொடுத்ததில் திருப்தி அடைந்து - அதாவது மற்றவரிடத்தில் எப்போதும் கையேந்தாமல் இருப்பவர்களின் நட்பை இழக்காதீர்கள் என்று கூறுகிறார். இவர்களால் நம் வாழ்க்கை நல்வழியில் செல்லும். வேத சாஸ்திரங்களை ஆதாரமாக அறிந்தவர்கள் ‘உண்மையான ஞானம் கொண்டவர்கள்’. இவர்களுக்கு சந்தேகம், பிரமை என்றும் இருக்காது. ஸ்ரீஹரியின் இருப்பை, அவனின் பக்தர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்திருப்பர். இத்தகையவரின் நட்பு, பழக்கவழக்கத்தினால் மட்டுமே உண்மையான ஞானம் கிடைக்கிறது. என்றால் வாழ்க்கையில் இத்தகைய மஹபுருஷர்களின் பழக்கம் முக்கியம். அதற்கே தாசர் இவர்களின் நட்பில் இரு என்றார்.

தாசரின் இன்னொரு சுவாரசியமான சொல் - ‘அச்ச பாகவதர’. இவரை பாகவதோத்தமர், பாகவத அர்த்தத்தை அறிந்தவர் என்று அழைக்கிறார். உண்மையில் இவரே சாது. உத்தமர். ஸ்ரீஹரிக்கு அருகில் இருப்பவர். பொறாமையற்று, ஸ்ரீஹரியிடம் மனதைக் கொடுத்து, அனைத்திலும் ஸ்ரீஹரியைக் கண்டு, அவனின் ஆணைப்படி வாழ்பவராக இருக்கிறார். இத்தகையவரின் பழக்கம், நட்பு, இங்கும் மறுஉலகத்திலும் சுகத்தையே அளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதற்கே தாசர் ‘சங்கவாகலி சாது சங்கவாகலி’ என்று நமக்கு சரியான வழியைக் காட்டுகிறார். 

***

No comments:

Post a Comment