ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
முன்னுரை
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள் என்னும் புத்தகம் வெளிவந்துவிட்டது. கேள்வி-பதில் வடிவத்தில் இருந்த அந்தப் புத்தகத்தை பலரும் பாராட்டினார்கள். ஆகவே, தாரதம்யத்தில் வரும் அனைத்து தேவதைகளைப் பற்றியும் அதே கேள்வி-பதில் வடிவத்தில் புத்தகம் வெளியிடவேண்டும் என்று விருப்பம் எனக்கு வந்தது. அதன் முயற்சியாக, இந்தப் புத்தகத்தில், லட்சுமிதேவி, நான்முகப் பிரம்மன், முக்யபிராணதேவர், சரஸ்வதி மற்றும் பாரதிதேவிகளைப் பற்றி பல விஷயங்களை சொல்ல முயன்றிருக்கிறேன்.
நாராயணனிடமிருந்து, பாரதிதேவி வரை அவர்களின் மகிமைகளை பல ஆதாரங்களின்படி இங்கே சொல்லியிருக்கிறேன். இவர்களைப் பற்றி கட்டுரை வடிவில் சுருக்கமாக படித்தால் போதும் என்று நினைப்பவர்கள், இந்த முன்னுரையைப் படித்தாலே போதுமானது. பல மேலதிகத் தகவல்கள் வேண்டும் என்பவர்கள், ’ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்’ மற்றும் ’ஐந்து பரிசுத்த தேவதைகள்’ என்ற இரு புத்தகங்களையும் முழுக்க படிக்கவேண்டும்.
ஸ்ரீமன் நாராயணன்
அனைத்து நற்குணங்களும் நிரம்பியவரும், எந்தவித தோஷங்களும் இல்லாதவரே ஸ்ரீமன் நாராயணன். நாராயணனிடமிருக்கும் குணங்களை லட்சுமிதேவியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது சாத்தியமில்லை. இவரிடமிருக்கும் குணங்கள் அனைத்துமே முழுமையானவையாகும். மோத, பிரமோத முதலான அனந்த குணங்கள், விக்ஞான, பிரக்ஞான முதலான ஞான குணங்கள் என்று ஸ்ரீஹரியின் அனைத்து குணங்களும் முழுமையானவையாகும். அவரின் ஒவ்வொரு ரூபமும் பல ரூபங்களைக் கொண்டவையாகும்.
நாராயணனின் குணம், செயல் ஆகிய அனைத்தும் முழுமையானவை. ஞானமானது ஆனந்தமயமானதைப் போல, ஆனந்தமும் ஞானமயமானதாகும். வேதங்களிலிருக்கும் ஆனந்தம் முதலான சொற்கள், ஸ்ரீஹரியின் ஆனந்தம் என்னும் குணத்தையே நமக்கு அறிமுகப்படுத்துகிறது. எல்லா குணங்களும் அனைத்து காலங்களிலும் இருப்பவை, மாறாதவை. விளக்குவதற்கு சாத்தியம் இல்லாதவை.
ஸ்ரீஹரி அனைத்து சுபகாரியங்களின் பலன்களை ஏற்றுக்கொள்பவராக இருக்கிறார். எவ்வித தற்காலிக அல்லது லௌகிக சுகங்களையும் இவர் விரும்புவதேயில்லை. ஒரே நேரத்தில் பற்பல ரூபங்களைக் கொண்டவராகிறார். அவரது அவதாரங்கள் நித்யமானவை (அழியாதவை). விகாரம் இல்லாதவை (அழகானவை). அப்ராக்ருதமானவை (இயற்கையானதல்ல). சச்சிதானந்தமயமானவை. ஒவ்வொரு அவதாரமும் அந்தந்த காலத்திற்கேற்ப, நேரத்திற்கேற்ப அனந்த அவதாரங்களானவை. உலகத்தைப் படைக்கும் பிரம்ம ருத்ரர்களையே நிர்வகிப்பவர் ஸ்ரீமன் நாராயணன்.
ஸ்ரீஹரி அணுவை விட அணுவாக சிறியதாக இருக்கிறார். பெரியதைவிட பெரியதாகவும் இருக்கிறார். பெரியது-சிறியது, தூர-அருகில், தெளிவான-தெளிவில்லாத என்று பல முரண்களாக (இரு விதமாகவும்) இருக்கிறார். இவை அனைத்தும் ஸ்ரீஹரியின் ஒப்பில்லா சக்தியினால் உண்டாகின்றன. ஆனால் இவரது பலவித ரூபங்களில் எவ்வித வேறுபாடுகளும் இருப்பதில்லை.
எப்படி சூரியனிடம் இருட்டிற்கு வேலையில்லையோ, அப்படி அனைத்து நற்குணங்களும் நிரம்பியவரான ஸ்ரீஹரியிடம் எவ்வித தோஷத்திற்கும் வேலையில்லை.
உலகத்தில் இருக்கும் பொருட்களைப் போல, ஸ்ரீஹரி வேறுபாடுகளைக் கொண்டவரல்ல. அவர் வேறுபாடுகள் இல்லாதவர், ஆனாலும் பல்வேறு ரூபங்கள் எடுத்து, வெவ்வேறாகக் காட்டிக்கொள்பவர். இத்தகைய அற்புத சக்தியை வேறு எங்கும் / யாரிடமும் காணமுடியாது. ஸ்ரீஹரியின் ஒவ்வொரு உறுப்புகளும்கூட தனித்தனி ரூபமாகவே ஆகியிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் இருக்கின்றது. இத்தகைய சிறப்பு மிக்க ஸ்ரீஹரி, உலகத்தின் உள்ளும் வெளியேயும் வியாபித்திருக்கிறார். ஆனாலும், தனக்கும் உலகத்திற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் தனித்திருக்கிறார். இந்த உலகத்தை ஸ்ரீஹரியின் ஸ்வரூபம் என்று அறியக்கூடாது. ஸ்ரீஹரியும் இந்த உலகத்தின் ஸ்வரூபம் என்று அறியக்கூடாது. உலகத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களின் வேலைக்கும் இவரே காரணமாக இருக்கிறார். அனைத்து எழுத்துக்களும் இவரையே குறிக்கின்றன. இதுவே ஸ்ரீஹரியின் விபூதி ரூபத்தின் சிறப்பு ஆகும்.
அனைவரின் முழிப்பு ஆகிய நிலைகளுக்கு இவரே தூண்டுகோலாக இருக்கிறார். அனைவரின் அனைத்து செயல்களும் ஸ்ரீஹரியின் இச்சைப்படியே நடக்கின்றன. ரமா, பிரம்மா முதலான தேவதைகளும்கூட ஸ்ரீஹரியின் கண்ணசைவின்படியே நடக்கும்படி, சுதந்திரம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஸ்ரீஹரியின் முழுமையான பிரதிபிம்பமாக (பிரதிபலிப்பு) இருக்கின்றனர். பொருள், செயல், காலம், உலகம், ஜீவன், கடமை, வாழ்க்கை, முக்தி ஆகிய அனைத்துமே ஸ்ரீஹரிக்கு கீழ்ப்படிந்தே இருக்கின்றன. அவரது கட்டளைப்படியே நடக்கின்றன. அவரின் அருளினாலேயே இவை செயல்படுகின்றன. இவர் விரும்பவில்லை என்றால் அவை இருப்பதில்லை. இந்த உலகத்தை படைத்ததால் ஸ்ரீஹரிக்கு எவ்வித பயனும் இல்லை. தன் லீலைகளைக் காட்டுவதற்காக அனைத்தையும் செய்கிறார். ஸ்ரீஹரியிடம் எதையும் / யாரையும் வேறுபடுத்திப் பார்க்கும் தோஷங்கள் இருப்பதில்லை. அந்தந்த பொருட்களின் சுபாவம் / தகுதிக்கேற்ப, அந்தந்த பொருட்களை கட்டுப்படுத்துகிறார்.
அஞ்ஞானம், துக்கம், கவலை ஆகிய தோஷங்கள் இவரிடம் அறவே இருப்பதில்லை. பற்பல உலகங்கள், இவரின் சரீரத்தில் இருக்கும் முடிகளில் இருக்கும் ஒரு சிறு துகளுக்கு ஒப்பானவை. உலகத்தின் படைப்புத் தொழிலை ஸ்ரீஹரியானவர் எப்படி செய்கிறார் என்பதை பிரம்மன் முதலான தேவதைகளும்கூட சரியாகப் புரிந்து கொள்வது சாத்தியம் இல்லை. ரமாதேவியாலும்கூட இது சாத்தியம் இல்லை. பற்பல உலகங்களில், பற்பல ரூபங்களினால் நிலைத்திருந்து, பற்பல லீலைகளைப் புரிந்து, தன் இஷ்டப்படி பற்பல ரூபங்களை நிறுத்துகிறார். இதுவே இவரது விளையாட்டு.
லட்சுமிதேவியுடனேயே எப்போதும் இருக்கிறார். லட்சுமிதேவிக்கு எப்போதும் இவரது இன்மை இருப்பதில்லை. அனைத்து இடங்களிலும் இருப்பவர், அனைத்தையும் நிர்வகிப்பவர், அனைத்து சுப - பதார்த்தங்களையும் ஸ்வீகரிப்பவராக ஸ்ரீஹரி இருக்கிறார். இவரது குணங்களை, மகிமைகளை முழுவதுமாக அறிவதற்கு சாத்தியமே இல்லை. ஸ்ரீஹரியை முழுவதுமாக அறிந்தவர் என முன்னர் யாரும் இருந்திருக்கவில்லை; தற்போதும் இல்லை; பின்னரும் யாரும் வரப்போவதும் இல்லை. எண்ணிக்கை இல்லாத காலங்களில் ஸ்ரீஹரியே சர்வோத்தமனாக இருக்கிறார். மிகவும் ஆச்சரியமான சக்திகளைக் கொண்டவர், அதி அற்புதமான சக்தி ஸ்வரூபன் இவரே.
இத்தகைய ஸ்ரீஹரியானவர், அனைத்து சாத்விகர்களுக்கும் மோட்சத்தைக் கொடுத்து, எண்ணிக்கையில்லாத சுகங்களைக் கொடுத்து அருள் பாலிக்கிறார்.
மகாலட்சுமி
பிரம்ம வாயுகளைவிட மகாலட்சுமி கோடி குணங்கள் அதிகம் கொண்டவர். விஷ்ணுவின் நற்குணங்களை ஒவ்வொரு கணமும் நினைத்துக் கொண்டே இருப்பவர். தினமும் புதிதுபுதிதாக காணும் குணங்களை வியப்புடன் பார்த்து, மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவர். மறுபடி ஸ்ரீஹரியின் குணங்களின் தியானத்திலேயே இருந்து, மறுபடிமறுபடி அதையே கண்டு வியப்பில் மூழ்குகிறார். எந்தவிதமான தற்காலிக குணங்களையும் கொண்டவரல்லர். விஷ்ணுவைப் பற்றிய ஞானத்தை ஒவ்வொரு நொடியும் பெற்றுக்கொண்டிருப்பவர். ஸ்ரீஹரியின் அருளால், படைத்தல், காத்தல், அழித்தல், ஞானம், அஞ்ஞானம், பந்தம், மோட்சம் முதலானவைகளை தன் பார்வையாலேயே நடத்தி வருபவர். வசு, ருத்ர, ஆதித்ய முதலான தேவதைகள் செய்யும் பூஜைகளை ஏற்றுக்கொள்பவர். சம்சாரிகளுக்கும் முக்தர்களுக்கும் அனைத்து வித உதவிகளையும் செய்யத் தகுந்தவர் இவரே.
இத்தகைய ரமாதேவியை சர்வ-சுதந்திரள் (தன்னிச்சையாக அனைத்தையும் செய்பவர்) என்று எப்போதும் எண்ணக்கூடாது. ஸ்ரீஹரிக்கு கட்டுப்பட்டே, அனைத்து திறனையும் பெற்றிருப்பவர். அழகானவர், குறை எதுவும் இல்லாதவர், சர்வமங்கள ரூபம் கொண்டவர், அனைத்து சுபகாரியங்களையும் ஏற்றுக்கொள்பவர் இவரே. எப்போதும் ஸ்ரீஹரியுடனேயே இருப்பவர். ஸ்ரீஹரிக்கு, லட்சுமிதேவியைவிட மிகவும் பிரியமான பொருள் என்று வேறு எதுவும் இல்லை. அந்தந்த தேசத்திற்கு, காலத்திற்கு ஏற்றாற்போல், ஸ்ரீஹரிக்கு சமமாக அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவர். ஆகையாலேயே, சமனா என்று அழைக்கப்படுபவர். அணுவை விட சிறியதாகவும், பெரியதைவிட பெரியதாகவும் ரூபத்தைக் கொண்டவர். ஸ்ரீஹரியை பற்பல ரூபங்களினால் பூஜிப்பவர் இவர். ஸ்ரீஹரி எந்தவித நற்செயல்களை செய்தாலும், தானும் அனைத்து விதங்களிலும் அவரை அனுசரித்துப் போகிறார்.
எண்ணிக்கையற்ற கல்யாண குணங்களைக் கொண்டவராக இருக்கிறார். பிரம்மாதி தேவதைகளைவிட அதிகமான மகிமைகளைக் கொண்டவர். தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவர், புத்தியினால் அறியப்பட முடியாதவராக பெரும் மகிமைகளைக் கொண்டவர். தியானத்திற்கு யோக்கியமான ரூபத்தை எடுத்திருக்கிறார். தனது அற்புதமான சக்தியினால், அனைத்து தர்மங்களையும் காக்கிறார்.
விஷ்ணுவை மட்டுமே புகழும் சில வேதங்களைத் தவிர, மற்ற வேதங்கள் அனைத்தாலும் புகழப்படுபவர். இந்த மகாலட்சுமியானவர், ருக்மிணி, சத்யபாமா, சீதா ஆகிய பற்பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். இவரின் மகிமைகளை சொல்லி முடிப்பதற்கு, தேவதைகள், ரிஷிகள், கந்தர்வர்கள் என யாராலும் சாத்தியமில்லை.
பிரம்ம-வாயுதேவர்
பிரம்ம பதவிக்கு தகுதியானவர்கள் ருஜுஜீவிகள் எனப்படுகின்றனர். ருஜுஜீவிகளுக்கு பரமோத்ஸாஹ என்னும் ஒரு வேறுபாட்டினை விட்டுவிட்டால், வேறு எந்த வேறுபாடுகளும் இருப்பதில்லை. அனைத்து நல்ல லட்சணங்களுடன் கூடியவர்கள். அனைத்து உலகத்தையும் ஆள்பவர்களாக இருக்கின்றனர். ஸ்ரீஹரியின் விருப்பத்தில் இவர்களின் தேகங்கள் அழிகின்றன. அனைத்து உலகங்களையும் எந்நேரமும் நினைத்துப் பார்க்கும் திறன் படைத்தவர்கள். இவர்களது அறிவு ஆகாயத்தைப் போல மிகவும் பரந்திருந்திருந்தாலும், ஸ்ரீஹரியைப் பற்றி முழுவதுமாக தெரிந்திருப்பவர்கள் அல்லர். இவர்களது அறிவு அனாதி நித்யவாக (தொடக்கம் இல்லா காலத்திலிருந்து, முடிவில்லா காலம் வரை) இருக்கிறது. முக்தர்கள் ஆகும்வரை ஸ்ரீஹரியைப் பற்றிய ஞானமானது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. முக்தியில் மட்டும் அந்த அறிவு ஒரேமாதிரியாக இருக்கிறது. ருஜுகளின் பரோக்ஷஞானமானது தொடக்கம் இல்லா காலத்திலிருந்து முழுமையாக இருக்கிறது. வேதங்களைவிட அதிகமான ஞானத்தைப் பெற்று மிகவும் திறமையாளர்களாக ஆகின்றனர்.
வாயுதேவர் அனைத்து ஜீவர்களுக்கும் அபிமானியாக இருக்கிறார். ஜீவஸ்வரூபங்களை நிர்வகிப்பவராக இருக்கிறார். புத்தி, பலம், தைரியம், ஸ்தைர்யம், ஞான, வைராக்ய, பக்தி ஆகிய குணங்களுக்கு அபிமானியாக இருக்கிறார். ஜீவர்களின் ஆனந்த-அனுபவத்திற்கும், அவர்களை மோட்சத்திற்குக் கொண்டுபோவதற்கும் அபிமானியாக இருக்கிறார். மற்றும் ஜகத்குருகளாகவும் இருக்கிறார். அசையும் மற்றும் அசையா பொருட்கள் அனைத்திற்கும் அபிமானியாக இருக்கிறார். மஹத் தத்வம் முதலான அனைத்து தத்வங்களுக்கும் அபிமானியாக இருக்கிறார். இந்திரியங்களின் வேலைகளை அந்தந்த இந்திரியங்களின் அபிமானியானவர்களின் மூலமாக செய்விக்கிறார்.
ஆவஹ, விவஹ, சம்வஹ, பராவஹ, ப்ரவஹ, உத்தவ, பரிவஹ ஆகிய ரூபவிசேஷங்களினால் லோகங்களை காக்கின்றனர். அண்டோகதத்தில் கூர்மரூபியாக இந்த உலகத்தை காக்கின்றனர். பஞ்சபேதங்கள், பஞ்சதன்மாத்ரங்கள், அனைத்து ஜீவர்களின் நடவடிக்கைகளும் இந்த பிரம்ம வாயுகளாலேயே நடக்கின்றன. ரமா நாராயணரின் அருளினால் அனைத்து செயல்களையும் செய்பவர்களாக இருக்கின்றனர். பிராணாபானாதி ரூபங்களினால், நாதக்ருகல ஆகிய ரூபங்களைக் கொண்டிருக்கின்றனர்.
அனைத்து தேவதைகளுக்கும் அவரவர் பதவிகளைக் கொடுத்து, அவர்களின் வேலைக்கேற்ப அதிகாரங்களை வழங்குகின்றனர். அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பவர்கள் மட்டுமல்லாமல், முக்தியையும் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். முக்தஜீவர்களுக்கு முடிவில்லாத மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். சூரியன், சந்திரன், அக்னி, பர்ஜன்ய, பிருத்வி, அன்னாதிகளில், அனைத்து திசைகளில், அனைத்து தேவதைகளில், ரிஷிகளில், பிருஹதி முதலான சந்தஸ்களில் நிலைத்திருக்கிறார்கள்.
விஷ்ணுவின் அனிருத்த முதலான ரூபங்களுடன், பிராணாதி ஐந்து ரூபங்களில் வியாபித்து, அனைத்தையும் அவர் ஆணையினால் நடத்தி, ஜாக்ரதாதி (முழிப்பு) முதலான அனைத்து நிலைகளுக்கும் அதிபதியாக இருக்கின்றனர். ரமா நாராயணருக்கு மட்டுமே இவர்கள் கீழ்ப்படிகின்றனர். சுபபதார்த்தங்களை மட்டுமே ஸ்வீகரிப்பவராக இருக்கின்றனர். 72,000 நாடிகளில் 77,000 ரூபங்களினால் நிலைத்திருக்கின்றனர். நாராயணர் மற்றும் மகாலட்சுமியை புகழும் வேதமந்திரங்களை விட்டு, மற்ற அனைத்து வேத மந்திரங்களினாலும் புகழப்படுபவர். பற்பல ரூபங்களை எடுத்திருக்கின்றனர். உலகத்தை வழிநடத்துபவர்களாக இருக்கின்றனர். மொத்தம் மூன்று கோடி ரூபங்களை எடுத்து உலகில் உள்ள சஜ்ஜனர்களுக்கு அருள்கின்றனர்.
பிராணாபானாதி ஐந்து ரூபங்களினால், நாக கூர்மாதி ஐந்து ரூபங்களினால், மொத்தம் பத்து ரூபங்களை தரித்து, ஆத்யாத்ம, அதிபூத, அதிதைவங்களில் நிலைத்திருக்கின்றனர். இந்த வாயுதேவருக்கு, ஹனுமந்தன், பீமசேனர், பூர்ணப்ரக்ஞர் என்று மூன்று அவதாரங்கள் இருக்கின்றன. இந்த அவதாரங்கள், பல (வலிமை), குணம் ஆகியவற்றால் மூலரூபத்திற்கு சமமாகவே இருக்கின்றன. பிரம்மனுக்கு மட்டும் பூமியில் அம்ச-அவதாரமே இருப்பதில்லை. இவர்களது தேகமானது பிராக்ருதமாக (இயற்கையான) இருந்தாலும், சுத்த சத்வாத்மகவாக இருக்கின்றது. மகாபிரளயத்தில் மட்டுமே நாசம் அடைகிறது. கர்வம், கோபம் ஆகிய தோஷங்களிலிருந்து எப்போதுமே தூரமாக இருக்கிறார். வாயுதேவரை வேதங்கள் அமிர்தம் என்று புகழ்கிறது. பிரளய காலத்தில் அனைவரும் தூங்கும் நிலையில் இருக்கும்போது, இவர் மட்டும் முழித்திருந்து, ஸ்ரீஹரியின் நற்குணங்களைப் பாடியவாறு இருக்கின்றார். ஸ்ரீஹரியை மகிழ்ச்சிப்படுத்தவேண்டியே அனைத்து செயல்களையும் செய்கிறார். இவரின் சாதனையை மெச்சி, ஸ்ரீஹரியானவர் இவருக்கு சஹபோக என்னும் சுகத்தைக் கொடுக்கிறார். வாயுதேவரே முந்தைய கல்பத்தில் பிரம்மதேவராக வருகிறார். அனைவருக்கும் குருவாகி, மோட்சத்திற்கு அழைத்துப் போகிறார்.
சரஸ்வதி - பாரதி தேவியர்
பிரம்மனின் மனைவி சரஸ்வதி. வாயுதேவரின் மனைவி பாரதிதேவி. இவர்களது தேகம் ப்ராக்ருதமாக இருந்தாலும்கூட, சுத்த-சாத்வீகாத்மகமாக இருக்கிறது. சர்வ-சத்குண-பரிபூர்ணமானவர்கள். எவ்வித தோஷமும் இல்லாதவர்கள். பிரளய காலத்தில் இவர்களின் தேகம் அழிகின்றன. ருத்ர-இந்திரன் முதலான தேவர்களால் வணங்கப்படுபவர்கள். சரஸ்வதிதேவி, ப்ரக்ருதிக்கு அபிமானினியாக இருக்கிறார். மஹத் தத்வம் முதலான தத்வங்களை உருவாக்குபவராக இருக்கிறார். அவற்றின் அழிவிற்கும் இவரே காரணமாகிறார். வாயுதேவரைவிட பிரம்மன் பதவியில் சிறிதளவு அதிகமான இடத்தில் இருப்பதைப்போல, சரஸ்வதிதேவியும் பாரதிதேவியைவிட பதவியில் சிறிதளவு அதிக இடத்தைப் பெற்றிருக்கிறார். யோக்யதையில் (தகுதி) இருவரும்கூட சமமானவராகவே இருக்கின்றனர். சரஸ்வதி - பாரதிதேவியின் மகிமைகள் எண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு அதிகமானவை. சிரத்தை, திருப்தி, சுகபோகம், குருபக்தி, ஹரிபக்தி போன்ற சுபதர்மங்களுக்கு அபிமானினியாக இருக்கின்றனர். பிரம்ம-வாயுகள் வேதங்களால் புகழப்படுவதைப்போல, இவர்களும் புகழப்படுகின்றனர். வேதங்களுக்கு அபிமானினிகளாக இருக்கின்றனர். பிரம்மரின் அர்த்தநாரி உடலின் இடதுபாகத்தில் நிலைத்திருக்கும் சரஸ்வதி, பிற ரூபங்களைவிட உத்தமளானவர். 32 லட்சணங்களைக் கொண்டு, வேதாபிமானி என்று பெயர்பெற்ற சரஸ்வதி பாரதியரின் மகிமை ஒப்பற்றது.
இந்தப் புத்தகத்தைக் குறித்து
மகாபாரதம் கிரந்தம் முழுக்கவே பீமசேனதேவரின் புகழையே சொல்கிறது. ராமாயணம் ஹனுமனின் மகிமையை புகழ்கிறது. மத்வவிஜயம் ஸ்ரீமதாசார்யரை பாடுகின்றது. இந்த மூன்று கிரந்தங்களிலும் ஹனும-பீம-மத்வ என்னும் மூன்று அவதாரங்களின் கதையும் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. லட்சுமிதேவியின் கதையானது எல்லா ஸ்ருதி-இதிகாச புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. சரஸ்வதி - பாரதிதேவியரின் கதைகூட அப்படியே. இந்த சிறிய புத்தகங்களில் மேற்சொன்ன அனைத்து கிரந்தங்களின் சாரத்தையும் கொண்டுவருவது கடினமான காரியம். அப்படி அவற்றை கொண்டுவரும் முயற்சியையும்கூட நான் செய்யவில்லை. அப்படி செய்வது முடியாத விஷயம். பரசுக்லத்ரயரைப் பற்றி யாருக்கு தெரிந்து கொள்ளவேண்டுமென்று ஆசை இருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகத்தை இந்தப் புத்தகம் தரும். சொல்லிய விஷயங்களுக்கு ஆதாரபூர்வமாக விளக்குவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு தேவதையைப் பற்றியும் தனியான புத்தகமே எழுதும் அளவிற்கு விஷயங்கள் உள்ளன. லட்சுமிதேவியைப் பற்றி இதில் மிக சுருக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. படிப்பவர்கள் மேற்சொன்ன விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
மகாபாரதம், ராமாயணம், பாகவதம், உபநிஷத்களில் இருக்கும் விஷயங்கள் மற்றும் ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. ஆனாலும், மேலும் படிக்க ஆர்வம் உள்ளவர்கள், மூலகிரந்தங்களையே நாடவேண்டும். இந்தப் புத்தகம் ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
‘ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்’ என்னும் புத்தகத்தைப் போலவே இதிலும் கேள்வி - பதில் வடிவமே உள்ளது. ஒவ்வொரு விஷயமும் அறிஞர்களிடம் கேட்டுத் தெளிந்தபிறகே சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உள்ள அனைத்து கட்டுரைகளும், ரங்கவிட்டல கன்னடப் பத்திரிக்கையில் ஏற்கனவே வெளிவந்து, பல்லாயிரம் பேர் படித்திருக்கின்றனர்.
வித்வான் பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
***