Thursday, March 15, 2018

11/12 பாரதி தேவியின் அவதாரங்கள்

11/12 பாரதி தேவியின் அவதாரங்கள்

ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்



கேள்வி: சரஸ்வதி மற்றும் பாரதியரைப் பற்றி தெரிந்துகொண்டோம். இவர்கள் பூமியில் எவ்வளவு முறை அவதரித்திருக்கின்றனர்?

பதில்: பிரம்மனைப்போலவே சரஸ்வதிதேவிக்கும் பூலோகத்தில் அவதாரமில்லை. பாரதிதேவிக்கு அவதாரம் இருக்கிறது. இவர் ஐந்து அவதாரங்கள் செய்திருப்பதற்கு ஆதாரம் உள்ளது. 

கே: அந்த அவதாரங்கள் எவை?

ப: 
1. விப்ரகன்யா
2. நாளாயினி
3. திரௌபதி
4. காளி
5. சந்திரா

கே: இந்த அவதாரங்கள் எப்போது நடைபெற்றன?

ப: வாயுதேவரு ஹனுமந்தனாக அவதரித்தபோது, பாரதிதேவி ‘விப்ரகன்யா’ அல்லது ‘ஷிவகன்யா’ என்ற பெயரில் அவதரித்தார். த்வாபரயுகத்தில் நளதமயந்தியரிடம் ’இந்த்ரசேனையாக’, த்ருபதராஜனின் மகளாக ’திரௌபதி’ என்றும், காசிராஜனின் மகளாக ’காளி’ என்றும், கலியுகத்தில் வாயுதேவர் மத்வராக அவதரித்தபோது ‘சந்திரா’ என்ற பெயரில் அவதரித்தார். 

கே: இந்த ஐந்து அவதாரங்களும் பாரதிதேவியின் சுத்த அவதாரங்களா அல்லது வேறு தேவதைகள் யாரும் அதே உடலில் இருந்தனரா?

ப: காளி என்பது மட்டும் பாரதிதேவியின் சுத்தமான அவதாரம். மற்ற நான்கிலும், பார்வதி, சசி, ஸ்யாமளா, உஷா - என்ற நான்கு தேவதைகளுடன் சேர்ந்து இருந்தார். 

கே: பாரதிதேவியின் ஐந்து அவதாரங்களிலும் வாயுதேவர் அவரது கணவராக வந்திருந்தாரா?

ப: காளியை பீமசேனதேவர் மட்டும் மனைவியாக ஏற்றுக்கொண்டார். திரௌபதியை மற்ற பாண்டவர்களுடன் சேர்ந்து பீமர் மனைவியாக ஏற்றுக்கொண்டார். 

கே: அப்படியென்றால், இந்த்ரசேனை, விப்ரகன்யா, சந்திரா இந்த மூன்று அவதாரங்களும் பிரம்மசாரிணியாக இருந்தனரா?

ப: முத்கல ரிஷிக்குள் இருந்த வாயுதேவர், இந்திரசேனையில் இருந்த பாரதிதேவியை மணம் புரிந்தார். ஆனால் ஹனுமந்த அவதாரத்தில், பாரதிதேவி விப்ரகன்யையாக அவதரித்தபோது, அவர்கள் மணம் முடிக்கவில்லை. ஹனுமந்தரைப் போலவே விப்ரகன்யையும் பிரம்மசாரிணியாகவே இருந்தார். அதைப்போலவே, கலியுகத்திலும் சந்திரா கூட பிரம்மசாரிணியாகவே இருந்தார். 

கே: ஹிடிம்பை, பாரதிதேவியின் அவதாரம் இல்லையா?

ப: ஹிடிம்பை, ‘ஸ்ரீ’ என்னும் ஸ்வர்கத்தின் அதிதேவதை. ஒரு சாபத்தினால் அசுர பிறவியை அடைந்தார். 

கே: அப்படியென்றால் பீமசேனதேவர் இவரை எப்படி மணம் முடித்தார்?

ப: 
ஸா பாரதீ வரமீமம் ப்ரததாவமுஷ்ட்யை
ஸ்வாவேஷமாத்மதயிதஸ்ய ச ஸங்மேன |
ஷாபத்விமுக்திமதிதீ ப்ரதப: ப்ரஸன்னா
தீனாஹ ஸா நிஜதனும் பவமானஸூனோ: ||

ஸ்ரீ என்னும் ஸ்வர்க்கத்தின் அதிதேவதை, பாரதிதேவியைக் குறித்து தவம் புரிந்தார். அப்போது பாரதிதேவி அவளுக்கு தரிசனம் அளித்து, உன்னில் நான் தோன்றுவேன். பிறகு என் கணவரால் உன் சாபம் தீரும் என்று வரம் அளித்தார். இந்த பாரதிதேவியின் வரத்தினால் பீமசேனதேவர் ஹிடிம்பையில் கலந்திருந்த பாரதிதேவியை மணம் புரிந்தார். 

கே: காளி என்பவரிடமும் இப்படி பாரதிதேவியின் சன்னிதானம் இருந்தது என்று ஏன் சொல்லக்கூடாது? இந்த அவதாரத்தை மட்டும் பாரதியின் சுத்தமான அவதாரம் என்று ஏன் சொல்கிறீர்கள்?

ப: ’ஸா கேவலா பாரதி நான்யதேவ்யஸ்தத்ரா விஷ்டாஸ்தத் க்ருதே காஷிராஜ:’ (தாத்பர்ய நிர்ணயம் 20-13) என்ற வாக்கியத்தின்படி காளியில் வேறு யாருடைய ரூபமும் சேர்ந்திருக்கவில்லை. தன்னுடைய விசேஷ சாதனைக்காக பாரதிதேவி காளியாக அவதரித்தார். 

கே: ஹிடிம்பையிடம் யார் பிறந்தனர்? காளியிடம் யார் பிறந்தனர்?

ப: நிர்ருதி, கடோத்கஜனாக ஹிடிம்பை - பீமசேனதேவரிடம் பிறந்தார். காளியிடம் ‘சர்வ-த்ராதா’ என்னும் பெயரில் ஸமானவாயு பிறந்தார். 

கே: ஸ்ரீமதாசார்யர் பிறந்தபோது பாரதிதேவி சந்திரா என்ற பெயரில் அவதரித்தார் என்று எப்படி சொல்லமுடியும்?

ப: 
சதுர்ஜன்யபவேத்பூமௌ த்வாம் நான்யோ மாருதாத் ப்ரஜேத் |
நியமோSயம் ஹரேர்யஸ்மாத நாதிர்நித்ய ஏவ ச || 
(தாத்பர்ய நிர்ணயம் 18-114)

இந்த வாக்கியத்தில், நான்கு பிறவிகள் மட்டுமே என்று சொல்கிறார். கலியுகத்தில் நான்காவது பிறவி இல்லை என்று சொல்லவில்லை. பல உரையாசிரியர்கள், கலியுகத்தில் பாரதிதேவி இந்த நான்கு பேருடன் அவதரித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். பிருஹதாரண்யக பாஷ்யத்தில் ‘ஷிவகன்யா இந்த்ரஸேனா ச திரௌபதி காளி ச ததா சந்த்ரேத்யாதி ஸ்வர்ணபாமா:’ என்று சொல்லியிருப்பதும் இந்த கேள்விக்கு ஆதாரமாக இருக்கிறது.

கே: பாரதி, இந்த நான்கு தேவதா-ஸ்த்ரியர்களுடன் அவதரிப்பதற்கு என்ன காரணம்?

ப: பார்வதி, ஸ்யாமளா, சசி மற்றும் உஷா இவர்களுக்கு பிரம்மதேவரின் சாபம் இருந்தது. இவர்கள் பூமியில் நான்கு முறை அவதரிப்பதற்கான நிலை உண்டாயிற்று. அப்போது அவர்கள் பாரதிதேவியைக் குறித்து தவம் செய்து வரம் வேண்டினர்.

கே: பிரம்மன் இவர்களுக்கு ஒரே ஒருமுறை மட்டுமே சாபம் கொடுத்திருப்பார். நான்கு முறை பிறவிகள் வருவதற்கு என்ன காரணம்?

ப: பிரம்மன் இவர்களுக்கு இரு முறை சாபம் அளித்தார். முதல்முறை பார்வதி, சசி, ஸ்யாமளா, உஷா ஆகிய நால்வரும் மற்றவர்கள் பார்க்குமாறு தம் கணவர்களுடன் கூடினர். இதைக் கண்ட பிரம்மன், ’உங்களுக்கு மனிதஜென்மம் கிடைக்கட்டும். இன்னொரு ஆணுடன் உங்களுக்கு மணம் நடக்கட்டும்’ என்று கடுமையான சாபத்தைக் கொடுத்தார். 

ஒரு முறை இவர்கள் நால்வரும், ஒரே தேகத்தில் நுழைந்து, பிரம்மனை பரிட்சை செய்வதற்காக, மூன்று முறை அவரிடம் சென்றனர். அவர்களிடம் இருந்த அசுர-ஆவேசமே இதற்குக் காரணம். அப்போது பிரம்மன் ‘மூன்று முறை என்னை மயக்க வந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் மனிதப்பிறவி எடுத்து ஒரே தேகத்தில் மூன்று முறை பிறக்கக்கடவீர்’ என்று சாபம் அளித்தார். 

இந்த சாபங்களையும் பார்க்கும்போது மொத்தம் நான்கு முறை இவர்கள் பூமியில் பிறக்கவேண்டிய நிலை வந்தது என்று தெரியவருகிறது. 

கே: நான்கு பிறவிகளில் எந்தப் பிறவியில் இன்னொரு ஆணுடன் இவர்களுக்கு சங்கமம் ஆயிற்று?

ப: இந்தக் கேள்வி, பார்வதி சசி ஆகியோருக்கும்கூட தோன்றியது. அதற்கான விடையை அறிந்துகொள்வதற்காக, அவர்கள் ஓராயிரம் ஆண்டுகள் பாரதிதேவியைக் குறித்து தவம் செய்தனர். அவர்களுக்கு தரிசனம் அளித்த பாரதிதேவியிடம், எங்களுக்கு மற்ற ஆண்களுடன் சங்கமம் ஆகக்கூடாது. ஆகவே நான்கு பிறவிகளிலும் நாங்கள் நால்வரும் உங்களுடனேயே ஓருடலில் இருக்கவேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றனர். 

கே: மேற்சொன்ன இரண்டாவது சாபத்தின்படி, ஒரே தேகத்தில் இவர்கள் இருக்கவேண்டியது மூன்று பிறவிகளில் மட்டுமே. மற்ற ஆணுடனான சம்பந்தமும் ஒரே ஒரு பிறவியில் மட்டுமே. இப்படியிருக்கும்போது, நான்கு பிறவிகளிலும் ஒரே தேகத்தில் இருப்பதாக ஏன் வரம் பெற்றனர்?

ப: எந்தப் பிறவியில் பிற ஆணுடன் சங்கமம் நடக்கப்போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே நான்கு பிறவிகளிலும் பாரதிதேவியுடனேயே இருக்கவேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றனர். 

கே: மத்வ அவதாரத்தின்போது, திரௌபதி, சந்திரா என்னும் பெயரில் அவதரித்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

ப: 
ததைவ கிருஷ்ணாSபி புவி ப்ரஜாதா ப்ரீத்யை ஹரேரந்தரமஸ்ய பாதயத் |
மஹாஸுராத் விஷ்ணுபரார்ஜுனாத்யா: க்ருதே ப்ரஜாதா ஹரிதோஷணாய |
புனஸ்ச தே ஸ்தானமவாப்ய ஸர்வே ஸ்வேயம் பராந்தே து விமுக்திமாப்னுயு: ||

பீமசேனதேவர் மத்வராக அவதரித்தபோது க்ருஷ்ணை, சந்திராவாக அவதரித்தார். (தாத்பர்ய நிர்ணயம் 32-132) இங்கு திரௌபதியே அவதரித்திருக்கிறார் என்று சொல்லியிருப்பதால் பார்வதி, சசி ஆகிய நான்கு பேருடன் சேர்ந்தே அவதரித்திருக்கிறார் என்று சொல்லலாம். 

கே: முதல் அவதாரத்தில் விப்ரகன்யையாக பாரதிதேவி என்ன செய்தார்?

ப: பார்வதி முதலான நான்கு பேருடன், பாரதி ஒரு பிராமணரின் மகளாகப் பிறந்தார். சிவனைக் குறித்து இவர்கள் கடுந்தவம் புரிந்தனர். மற்ற நால்வரும் சிவனைக் குறித்து தவம் செய்ய, பாரதிதேவி சிவனில் இருக்கும் ஸ்ரீஹரியைக் குறித்து தவம் செய்தார். இப்படி அந்த பிறவி முழுவதையும் தபஸ்வினியாகவே கழித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ஹனுமந்ததேவர் பிரம்மசாரியாக இருந்தார். அதற்குத் தக்கவாறு பாரதிதேவியும், தவத்திலேயே மூழ்கியிருந்தார். 

கே: சிவனில் இருந்த ஸ்ரீஹரி பாரதிதேவிக்கு என்ன வரம் அளித்தார்? பார்வதி முதலானவர்களுக்கும் சிவன் என்ன வரம் அளித்தார்?

ப: கணவரான வாயுதேவருடன், ஸ்ரீஹரியை மகிழ்ச்சி அடையச் செய்யவேண்டும் என்ற வரத்தினை ஸ்ரீஹரி அளித்தார். மற்றவர்களுக்கும் அவரவர் கணவருடன் சேர்ந்திருக்குமாறு சிவன் வரம் அளித்தார். 

கே: அப்படியென்றால் பாரதிதேவிக்கு அனைத்து பிறவிகளிலும் வாயுதேவரே கணவராக வந்தார்தானே?

ப: கணவருடன் சேர்ந்து விஷ்ணுவின் பூஜையை செய்யும் பாக்கியம் கிடைக்கட்டும் என்றே பாரதிதேவிக்கு ஸ்ரீஹரி வரம் அளித்தார். தாம்பத்யம் செழிக்கட்டும் என்று வரம் அளிக்கவில்லை. மற்ற நால்வரில், திரௌபதிக்கு மட்டும் தன் கணவருடன் தாம்பத்ய பாக்கியம் கிட்டியது. மூன்று முறை பிரம்மனை இவர்கள் பரிட்சை செய்ததால், மற்ற மூன்று பிறவிகளில் தம் கணவருடன் வாழும் பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கவில்லை. 

கே: இந்திரசேனை என்றால் யார்? யாரிடம் அவதரித்தார்? இவரது கணவராக யார் இருந்தார்?

ப: த்வாபரயுகத்தில், நளதமயந்தியரிடம் பாரதிதேவி நான்கு தேவதா பெண்களுடன் இந்திரசேனையாக அவதரித்தார். நளனின் மகளானதால், நளநந்தினி அல்லது நாளாயினி என்று அழைக்கப்பட்டார். முத்கலரை மணம் புரிந்தார். 

கே: இந்திரசேனை என்றால் என்ன? முத்கல என்றால் என்ன?

ப: இந்திர என்றால் முக்யபிராண அல்லது நாராயண என்று பொருள். அவரையே தலைவனாக நினைத்துக் கொண்டதால், இவருக்கு இந்திரசேனை என்று பெயர் வந்தது. எப்போதும் ஸ்ரீஹரியின் பூஜையை செய்து, அதனால் மகிழ்ச்சியடைவதால் அந்த முனிவருக்கு முத்கல என்ற பெயர் வந்தது.

கே: முத்கலர் ஒரு சாதாரண முனிவர். பாரதிதேவி வாயுதேவரின் மனைவி. இந்திரசேனையில் இருந்த பாரதிதேவி இந்த முத்கலரை மணம் புரிந்தது எப்படி சாத்தியம்?

ப: இதற்கு ஒரு கதை உள்ளது. 

பிரம்மதேவர் சரஸ்வதியை விரும்பினார் என்று பொதுவாக அறியப்படும் கதையைக் கேட்ட முத்கலர், பிரம்மதேவரை மரியாதைக்குறைவாக நினைத்தார். ஆகவே, பாரதி மற்றும் ஐந்து ரூபங்களைக் கொண்ட ஒருவருடன் சேர்ந்து பேரழிவை சந்திப்பீர் என்று பிரம்மனே இவருக்கு சாபம் கொடுத்தார். இதனால் மிகவும் துக்கமடைந்த முத்கலர், பிரம்மனைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். இந்த தவத்தால் மனமகிழ்ந்த பிரம்மன், அவருக்கு சாபத்திற்கான பரிகாரத்தை தெரிவித்தார். நீ அந்த ஐந்து பெண்கள் சேர்ந்து இருக்கும் ரூபத்தை சேர்வதில்லை. உன் தேகத்தில் இருக்கும் வாயுதேவர், இந்திரசேனையுடன் சேர்கிறார். உனக்கு அப்போது மயக்க நிலை இருக்கும். அதனால் உனக்கு பாவம் வருவதில்லை. இதன்படியே, முத்கலர் இந்திரசேனையுடன் கிருஹஸ்தாஸ்ரமத்தை அனுசரிக்கவில்லை. முத்கலரில் இருந்த வாயுதேவர், இந்திரசேனையுடன் கிருஹஸ்தாஸ்ரமத்தை அனுசரித்தார். 

கே: இந்திரசேனையின் பிறவிக்குப் பிறகு, திரௌபதியின் பிறவியில் ஐந்து கணவர்கள் வருவதற்கு என்ன காரணம்? இந்திரசேனைக்கு இருந்ததைப் போல ஒருவரே இங்கும் கணவராக ஏன் இல்லை?

ப: பல காலங்களுக்கு வாயுதேவர் இந்திரசேனையில் இருந்து, பின் தனது லோகத்திற்கு திரும்பினார். அப்போது முத்கலரும் தவத்திற்கு கிளம்பினார். இந்திரசேனை கணவரிடமிருந்து பிரிந்தாள். அவளும் கடுந்தவத்தை புரிந்தாள். பார்வதி முதலானவர்களும் ருத்ரரைக் குறித்து தவம் மேற்கொண்டனர். பாரதிதேவி, ருத்ரரில் இருக்கும் ஸ்ரீஹரியைக் குறித்து தவம் மேற்கொண்டாள். ஸ்ரீஹரி அவருக்கு தரிசனம் அளித்தபோது ‘பதிம் தேஹி’ (ஒரு கணவரைக் கொடுக்கவும்) என்ற வரத்தை பாரதிதேவி கேட்டார். ஐந்து பேரும் ‘பதிம் தேஹி’ என்று கேட்டதால், வரத்தைக் கேட்டும் குரல் ஐந்து முறை கேட்டது. பாரதிதேவிக்கு ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஸ்ரீஹரியும், மற்ற நால்வருக்கு, ருத்ரரும் வரம் அளித்தனர். இதன்படியே, இந்திரசேனைக்கு ஐந்து கணவர்கள் அமைந்தனர். ஆகவே, திரௌபதி அவதாரத்தில் ஐந்து கணவர்கள் அமைந்தனர். 

கே: ஒரு பெண்ணுக்கு ஐந்து பேர் கணவர்கள் என்றால், அது முறைதவறிய உறவு அல்லவா?

ப: இந்தக் கேள்வி பார்வதி முதலானவர்களுக்கும் வந்தது. அதற்காக அவர்கள் சத்தமிட்டு அழுதனர். வரம் அளித்த ருத்ரர் மேல் இந்திரன் கோபப்பட்டான். 

கே: ருத்ரரின் மேல் தேவேந்திரன் கோபப்பட்டது சரியா?

ப: ஆம். சிவனின் சாபத்தால் தேவேந்திரன் பூலோகத்தில் பிறவி எடுத்து, திரௌபதியின் கணவனாக வேண்டியிருந்தது. ஸ்ரீஹரியின் அருளால் அர்ஜுனனாக அவதரித்தான். பிரம்மனிடம் கேட்காமல், ருத்ரர் தானாகவே வரம் அளித்ததால், பிரம்மன் ருத்ரருக்கு சாபம் அளித்தார். நீ பூலோகத்தின் மனிதனாகப் பிறக்கும்போது, மனைவியை அடையமாட்டாய் என்று சாபம் இட்டார்.

கே: திரௌபதிதேவியில் பாரதி, பார்வதி, சசி, ஸ்யாமளா, உஷா என்று ஐந்து பேர் இருக்கின்றனர். மற்ற பெண்கள் தமது கணவருடன் கூடினாலும், பார்வதி மட்டும் ஏன் தன் கணவருடன் கூடவில்லை?

ப: மேலே சொன்னதைப்போல, பிரம்மனின் சாபமே இதற்குக் காரணம். ருத்ரர் அஸ்வத்தாமனாக அவதரித்தார். அஸ்வத்தாமர் திருமணம் செய்யாமல், பார்வதியிடமிருந்து விலகியிருந்து, பிரம்மசாரியாகவே இருந்தார். ஆகையால், திரௌபதிதேவியின் தேகத்தில், பார்வதிதேவி உறங்கும் / செயலற்ற நிலையில் இருந்தார். 

கே: திரௌபதியின் தந்தையான த்ருபதன், அவருக்கு திரௌபதி என்றே பெயர் வைத்தாரா, அல்லது வேறு பெயரும் இருக்கிறதா?

ப: துருபதனின் மகளாகையால் இவருக்கு திரௌபதி என்றே பெயர். ஆனால், தந்தை வைத்த பெயர் ‘கிருஷ்ணா’ என்பதே. இவர் மிகவும் அழகானவராக இருந்தார். பெண்களிலேயே மிகவும் உத்தமமானவராக, மிகவும் அழகானவராக இருந்ததால் இவருக்கு ‘கிருஷ்ணா’ என்ற பெயர் மிகவும் பொருத்தமாக இருந்தது. இதைப்போலவே பார்வதி, யாக்ஞசேன, பாஞ்சாலி என்னும் பெயர்களும் இவருக்கு இருந்தது. 

கே: திரௌபதி துருபதனின் மகளாகப் பிறக்கவில்லை. நெருப்பிலிருந்து பிறந்தவர் என்று கேள்விப்படுகிறோம். இது சரிதானே?

ப: துருபதன் செய்த யாகத்தின் பிரசாதத்தைப் பெறுவதற்கு அவனின் மனைவி தடைபோட்டார். அங்கிருந்த பிராமணர்கள், அந்த பிரசாதத்தை யக்ஞ நெருப்பிலேயே போட்டார்கள். அப்போது, அக்னி குண்டத்திலிருந்து அக்னியின் அவதாரமான த்ருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி அவதரித்தனர். திரௌபதி, ஒரு வளர்ந்த கன்னியாகவே நெருப்பிலிருந்து வந்தார். நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். விஷ்ணு துரோகிகளை அழிப்பதற்காகவே இவர் அவதரித்திருக்கிறார் என்று அசரீரி கேட்டது. 

கே: திரௌபதியைப் பற்றி கூறவும்.

ப: திரௌபதி, பாரதிதேவியின் அவதாரம். ருஜுகணஸ்தர். சத்வகுணங்களால் நிரம்பியவர். 32 லட்சணங்களையும் கொண்டவர். நோய், நொடி ஆகிய எந்தவித தோஷங்களும் இல்லாதவர். பிறந்ததிலிருந்து இறுதிவரை இளம்பெண்ணாகவே இருந்தவர். இத்தகைய உத்தமமான தேகத்தில், மற்ற நான்கு பெண்களும் வசித்தனர். இது அவர்களின் பாக்கியம். ‘யத்ர ரூபம் தத்ரகுணா:’ என்பதுபோல், உருவத்திற்குத் தக்க குணங்கள் அவர்களில் நிரம்பியிருந்தன. 

கே: திரௌபதியின் சுயம்வரத்தின் விதிகளை த்ருபதன் அறிவித்தபோது, கர்ணனும் அந்தப் போட்டியில் பங்கேற்க வந்தான் என்று திரௌபதி ‘நாஹம் வரயாமி சுதம்’ என்கிறாரே, இது சரியா?

ப: தாக்‌ஷிண்யாதி பாடங்களில் (தென்னிந்தியாவில் இயற்றப்பட்ட கிரந்தங்களில்) இந்த வசனம் வரவில்லை. ஆனால் இது மிகவும் சுவாரசியமான ஒரு சம்பவம். 

கே: சுயம்வரத்தில் அர்ஜுனன் தன் பாணத்தால் அந்த மீனை துளைத்து போட்டியில் வென்றபோது, திரௌபதி அவரின் கழுத்தில் மாலையை அணிவித்தார். இதனால் அர்ஜுனனே தனது கணவன் என்று தீர்மானித்தாள். இப்படியிருக்கும்போது, தம்பியின் மனைவியை அண்ணன்களான பீமன் மற்றும் தர்மராஜர் எப்படி மணம் முடித்தனர்?

ப: சுயம்வரத்தில் அர்ஜுனனின் கழுத்தில் திரௌபதி அணிவித்த மாலையானது, திருமண மாலையல்ல. அது போட்டியில் வெற்றி பெற்றதால் போட்ட வெற்றி மாலை மட்டுமே. அப்போது திருமணம் நடக்கவில்லை என்றே நினைக்கவேண்டும். பின்னர் அனைவரின் சம்மதத்துடன், வேதவியாஸரின் ஒப்புதலைப் பெற்று, ஐந்து பாண்டவர்களும் திரௌபதியை மணம் முடித்தனர். 

கே: தன்னுடைய ஒரே மகளை, ஐந்து பேருக்கு திருமணம் செய்துகொடுக்க துருபதன் எப்படி சம்மதித்தார்? அப்போதைய காலகட்டத்தில் இது விவாதிக்கப்படவில்லையா?

ப: பெரிய குழப்பமே நேர்ந்தது. திருஷ்டத்யும்ன மற்றும் துருபதன் இருவருக்கும் பெருங்குழப்பமே நேர்ந்தது. யுதிஷ்டிரன், குந்தி ஆகியோர் என்ன சொன்னாலும் கேட்பவரில்லை. இறுதியில் வேதவியாஸரே வந்து திருமணம் செய்யுமாறு பணித்தார். 

கே: திரௌபதிக்குள் ஐந்து பேர் இருந்ததால், ஒருவருடன் கூடும்போது மற்றவர்களுடன் முறை தவறிய உறவு என்பதான தோஷம் வரவில்லையா?

ப: 
கன்யைவ ஸாSபவதத: ப்ரதிவாஸரம் ச |
ஜன்மாபவத்யபிமதே: ப்ருதகேவ நாஷாத் ||

ஒவ்வொரு நாளும் திரௌபதி கன்னியாகவே இருந்தார். ஆகவே தன் கணவர்களுடன் கூடும்போது, ஒவ்வொரு முறையும் புதிய பிறவியே வந்திருந்தது. இதை காந்தர்வ விவாக முறை என்று கூறலாம். எந்த கணவருடன் கூடினாரோ, அப்போது அந்த கணவரின் மனைவி மட்டுமே அந்த தேகத்தில் நிலைத்திருந்தார். மற்றவர்கள் மயக்க / செயலற்ற நிலையில் இருந்தனர். ஆகையால் கணவருக்கு பிறர் மனைவியை கூடிய தோஷம் வரவில்லை. பெண்களுக்கு பிற கணவரைக் கூடிய தோஷம் வரவில்லை. 

கே: பாரதிதேவிக்கு ‘நித்ராவஸ்தா’ (மயக்க / செயலற்ற நிலை) இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்றானபிறகு, அவருக்கு பிற கணவருடன் கூடிய தோஷம் வரவில்லையா?

ப: ஒவ்வொரு முறை திரௌபதி தன் கணவர்களுடன் கூடியபோதும், அவரின் தேகத்திலிருந்த பாரதிதேவி மற்றும் தர்மராஜன் முதலானவர்களின் தேகத்திலிருந்த வாயுதேவர்க்கு மட்டுமே சங்கமம் நடந்தது. ஆகையால் பிற கணவருடன் கூடிய தோஷம் பாரதிதேவிக்கு வரவில்லை. 

ஏவம் ஸ வாயுரனு விஷ்ட யுதிஷ்டிராதி பீமாத்மனைவ ரமதே ஸததம் தயைக: |
அன்யாத்ருஷா ஹி ஸுரபுக்திரதோ Sன்யன்யரூபா மானுஷ்யபுக்திரிதி நாத்ர விசார்யமஸ்தி ||

வாயுதேவர், தர்மராஜர் முதலானவர்களிடம் நான்கு ஆவேசரூபத்திலும், பீமசேனராகவும், பாரதிதேவியுடன் எப்போதும் நிலைகொண்டிருந்தார். தேவதைகள் கூடும் விதமே வேறு. ஆகையால் இந்த விஷயத்தில் மேலும் விவாதிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை. 

கே: திரௌபதிதேவி, மகாராணி ஆனபோது அவரின் கடமையை எப்படி சரிவர செய்தார்?

ப: மகாராணி ஆனபோது, திரௌபதிதேவிக்கு அனைத்து செயல்களை நிர்வகிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. தினமும் அவர் அரண்மனையில் 90,000 முனிவர்கள், 10,000 யதிகள் ஆகியோருக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொருவருக்கும் 300 பேர் அளவுக்கு குடும்பம் இருந்தது. இந்த மாபெரும் வேலை திரௌபதிதேவியின் மேற்பார்வையிலேயே நடந்து வந்தது. இவருக்கு உதவி செய்வதற்கு லட்சம் பேர் இருந்தனர். இவ்வளவு பேர் இருந்தாலும், தன் கணவர்கள் மற்றும் மாமியாரின் சேவைகளை தானே செய்துவந்தார். 

கே: ஒவ்வொரு பதிவிரதையும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை திரௌபதி சொல்லிக் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இதை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?

ப: சாட்சாத் லட்சுமியின் ஸ்வரூபமான சத்யபாமா, ஒருமுறை திரௌபதியிடம் ‘எல்லா கணவர்களுக்கும் நீ எப்படி அன்பு செலுத்துகிறாய்? இதன் ரகசியம் என்ன?’ என்று கேட்டார். சாதாரண மக்களுக்குப் புரியவைப்பதற்காக சத்யபாமா இப்படி கேட்டார் என்று அறிந்துகொண்ட திரௌபதி, ஒவ்வொரு மனைவியும் தம் கணவருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மிகவும் விவரமாகத் தெரிவித்தார். இந்தக் கதையானது, மகாபாரதத்தில் ஒரு உப-பர்வத்தில் முழுமையாக விளக்கப்பட்டிருக்கிறது. 

கே: மய-சபையில் ஒரு வெற்றிடத்தை தண்ணீர் நிரம்பியிருக்கிறது என்று தவறாக எண்ணி, துரியோதனன், ஆடைகளை சிறிதே தூக்கி நடந்தான். இன்னொரு இடத்தில் நிலம் என்று எண்ணி, தண்ணீரில் விழுந்தான். இந்த சமயங்களில், பீமன், திரௌபதி ஆகியோர் பலமாக சிரித்தனர். இங்கு பீமன் மற்றும் திரௌபதி ஏன் சிரிக்கவேண்டும்? துரியோதனனின் மேல் இருந்த பகையே இதற்கு காரணம். அல்லது அவருக்கு அவமானம் செய்யவேண்டும் என்பதே இதன் காரணம். ஆகையால் திரௌபதி செய்தது தவறுதானே?

ப: ஸ்ரீகிருஷ்ணன் செய்த குறிப்பினால் முதலில் சிரித்தது பீமன். கூடவே திரௌபதியும் சிரித்தார். மற்றவர்களும் பலமாக சிரித்தனர். பூமியின் பாரத்தைக் குறைக்க இது ஒரு துவக்கப்புள்ளி என்று இவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் இப்படி சிரித்ததில் அவமானப்பட்ட துரியோதனன், இவர்களை நாட்டை விட்டு துரத்தவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் இவர்களுடன் சூதாட்டம் ஆடினான். இது துரியோதனின் தவறு மட்டுமே தவிர, பீமன், திரௌபதியின் தவறு அல்ல.

கே: சூதாட்டம், மகாபாரதத்தில் ஒரு முக்கியமான கட்டம். அந்த சமயத்தில், பரசுக்ல-த்ரயர்களில் ஒருவரான பாரதிதேவியை துச்சாதனன் முதலானோர் தொடுவதற்கு எப்படி சாத்தியம் ஆயிற்று? மற்றும் அவரை துகிலுறியும் தகுதி அவர்களுக்கு இருந்ததா?

ப: வாயுதேவரைப் போலவே பாரதிதேவியும் ‘அகணாஷ்மஸமள்’ (யாராலும் வெல்லப்பட முடியாதவர்). இவரை கெட்ட நோக்கத்துடன் பார்க்கும் சக்தியும்கூட துச்சாதனர்களுக்கு இல்லை. தொடுவது என்பது சாத்தியமே இல்லை. ஆகவே, சூதாட்ட கட்டத்தின்போது, அவமானம் ஏற்பட்டது சசி முதலானவர்களுக்கே தவிர பாரதிதேவிக்கு அல்ல. 

கே: துச்சாதனன் சபைக்கு இழுத்து வந்த சமயத்தில், திரௌபதி விழுப்புடன் இருந்தார் என்றும், அந்த சமயத்தில் இருக்கவேண்டிய ஒரு ஆடையை மட்டுமே அணிந்திருந்தார் என்றும் சொல்கின்றனர். இதை எப்படி அறிந்துகொள்ள வேண்டும்?

ப: சம்பிரதாயத்தை பின்பற்றிவரும் பெண்கள் இன்றும்கூட விழுப்பு சமயத்தில், ஒரு ஆடையை மட்டுமே அணிந்திருக்கின்றனர். அப்படியென்றால் மூன்று நாட்களும் ஒரே ஆடையை அணிந்தவராகின்றனர். ஆடையை மாற்றிக்கொள்வதில்லை. இந்த வழக்கத்தை உடையவர்களையே ‘ஏகவஸ்த்ரதாரிணி’ (ஒரு ஆடையை அணிந்தவர்) என்று அழைக்கின்றனர். பிறந்தது முதல் ஒரு ஆடையை அணிந்தவர்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது. 

கே: அணிந்திருந்த ஒரே சேலையை துச்சாதனன் இழுத்தான். அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருந்தது என்கிறார்களே. அது எப்படி?

ப: 
புன: புனஸ்சைவ விகர்ஷமாணே
து:ஷாசனேSன்யானி ச தாத்ருஷானி |
பபூவுரந்தம் ந ஜகாம பாப: 
ஷ்ராந்தோ ந்யஷேதத் ஸ்வின்னகாத்ர: ஸபாயாம் 
(தாத்பர்ய நிர்ணய 21-365)

தாத்பர்ய நிர்ணயத்தில் சொல்லியிருப்பதைப் போல, துச்சாதனன் அந்த சேலையை இழுக்கத் துவங்கிய அந்த நேரத்திலேயே, திரௌபதியின் உடலில் மேல் அந்த சேலையைப் போன்றதொரு ஆடை இருந்தது. இப்படி பல சேலைகளை துச்சாதனன் இழுத்தான் என்றுதான் பொருளே தவிர, ஒரே சேலையை இழுத்தான் என்பதல்ல. மேலும் எந்த சந்தர்ப்பத்திலும், திரௌபதி ஆடையில்லாமல் இருக்கவில்லை. 

கே: பீஷ்ம, துரோணாதிகள் சேர்ந்த சபையில், ‘யுதிஷ்டிரர் முதலில் தான் தோற்று, பின் என்னை பணயத்தில் வைத்தாரா? அல்லது முதலில் என்னை தோற்று பிறகு அவர் பணயமாக தோற்றுப் போனாரா?’ என்று திரௌபதி கேட்டார். இது சரியான கேள்வியா? வேறுதும் கேட்கத் தோன்றாமல், இதை கேட்டாளா?

ப: இதற்கு தாத்பர்ய நிர்ணயத்தில் அழகான பதில் உள்ளது. தன் மனைவியை பணயத்தில் வைத்து, தோற்று, அவளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதற்கு கணவனுக்கு என்றைக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் தோற்றால், அவனுடன் திரௌபதியும் சேர்ந்து தோற்றாற்போலவே ஆகும். தவிர, திரௌபதியை தனியாக பணயம் வைக்க யுதிஷ்டிரனுக்கு அதிகாரம் இல்லை. 

கே: மகாபதிவிரதையான திரௌபதி, துச்சாதனனுக்கு சாபம் கொடுத்திருக்கலாம். அதன் மூலமாக தர்மத்தையும் நிலை நாட்டியிருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை?

ப: திரௌபதியின் பதிவிரதம் உலகப் புகழ் பெற்றது. கணவர்களின் மனதிற்கிணங்க நடப்பவள். ஆகையால் எந்த சந்தர்ப்பத்திலும் திரௌபதி சாபம் கொடுப்பதில்லை. கீசகனால் தொந்தரவு கொடுக்கப்பட்ட சமயத்திலும், அவனுக்கு சாபம் கொடுக்கவில்லை. எந்த துஷ்டராலும், பாரதிதேவியை தொடுவதற்கு சாத்தியமில்லை. பாரதிதேவிக்கு அவமானம் செய்ததற்கான பாவத்தை மட்டும் அவர்கள் பெறுகின்றனர். தங்களின் பாவத்தை மேலும் அதிகரித்துக் கொள்கின்றனர். இந்த உத்தேசத்தினாலேயே இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. 

கே: வனவாச சமயத்தில் யுதிஷ்டிரருக்கும் திரௌபதிக்கும் ஒரு முறை ஒரு விவாதம் நடந்தது. அதில் ஜீவகர்த்ருத்வ விஷயம் பேசப்பட்டது. அப்போது திரௌபதி சொல்லிய ஜீவகர்த்ருத்வத்தை சுருக்கமாகச் சொல்லவும். 

ப: 
ப்ரத்யக்‌ஷமேதத் புருஷஸ்ய கர்ம
தேனானுமேயா ப்ரேரணா கேசவஸ்ய |
ஸ்நகர்ம க்ருத்வா விஹிதம் ஹி விஷ்ணுனா
தத்ப்ரேரணேத்யேவ புதோSனுமன்யதே ||

ஜீவகர்த்ருத்வ (ஜீவனால் ஒரு வேலையை செய்யமுடியும் திறன்) நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் பின் இருக்கிற விஷ்ணுவின் நோக்கத்தையும் நாம் ஆராய்ந்து அறியவேண்டும். அவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே ஜீவனால் எந்த வேலையையும் செய்ய முடிகிறது என்று நிரூபித்தார் திரௌபதி.

கே: பாரதிதேவியின் அவதாரங்களில் முக்கியமானது எது?

ப: பாரதிதேவி பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது திரௌபதி அவதாரம் ஆகும். மொத்த மகாபாரதத்தின் நாயகி இவரே ஆகும். இவரே வித்யாபிமானினி. இத்தகைய வித்யாபிமானினியான பாரதியின் சரித்திரமே மகாபாரதம் ஆயிற்று. திரௌபதிக்கு அவமானம் செய்தால், அது வேத வித்யைகளுக்கு அவமானம் செய்தது போன்றதாகும். இத்தகைய அவமானத்தை பாண்டவர்கள் என்றும் மறக்கவில்லை. இறுதியில் வேத வித்யைக்கு அவமானம் செய்தவர்களை கொன்றொழித்தனர். இன்றும் உலகத்தில் யாராவது வேதவித்யைக்கு அவமானம் செய்தால், அவர் அழிந்துபோவதில் சந்தேகமே இல்லை. ஆகையால் வேதவித்யைக்கு அபிமானினியான திரௌபதியின் மகிமைகளை அறிந்து, வேண்டி, வணங்கி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வோம். 

கே: பாரதிதேவியின் அவதாரங்கள் எவ்வளவு?

ப: பாரதிதேவி ஐந்து அவதாரங்களை எடுத்திருக்கிறார். த்ரேதாயுகத்தில் ஒரு பிராமணரிடத்தில் அவதரித்து ஷிவகன்யா என்று அழைக்கப்பட்டார். திருமணம் ஆகாமல் தபஸ்வினியாக இருந்தார். இரண்டாம் அவதாரம், நளதமயந்தியரிடம் பிறந்து இந்த்ரசேன என்று அழைக்கப்பட்டார். முத்கல்யரிடம் இருந்த வாயுதேவரை மணந்தார். மூன்றாம் அவதாரமாக த்ருபதனிடம் திரௌபதியாக அவதரித்தார். காசிராஜனின் மகளாக காளி என்ற பெயரில் அவதரித்தார். ஹிடிம்ப என்னும் ஆவேச அவதாரத்தை தரித்தார். கலியுகத்தில் சந்திரா என்னும் பெயரில் பிறந்தார். சிலர் இவரை கல்யாணிதேவி என்று அழைக்கின்றனர். இந்த அனைத்து அவதாரங்களையும் நினைத்து தன்யர் ஆவோமாக. 

கே: திரௌபதியின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.

ப: த்ருபதன் தனக்கு வாரிசு பிறக்கவேண்டுமென்று ஒரு யாகத்தை செய்ய முடிவு செய்தான். யாஜோபயாஜர் புரோகிதர் ஆனார். மகன், மகள் பிறக்கவேண்டி குடிக்கவேண்டிய ஹவிஸ்ஸை (பிரசாதத்தை) குடிப்பதற்கு அவரின் மனைவி சரியான நேரத்திற்கு வரவில்லை. அதனால் அந்த ஹவிஸ்ஸை ஹோமத்திலேயே போட்டுவிட்டனர். அதனால் ஹோமத்தின் அக்னியிலிருந்து திருஷ்டத்யும்னன் வெளியில் வந்தான். பிறகு அக்னியிலிருந்து திரௌபதி வந்தார். பிறந்தபோதே வாலிப வயது, மிகவும் அழகான உடல், பீதாம்பர ஆபரணங்களினால் ஜொலிக்கும் அழகினைக் கொண்டிருந்தார். அழகில் இவரை மிஞ்ச வேறு யாரும் இருக்கவில்லை. துஷ்ட க்‌ஷத்திரியர்களின் நாசத்திற்காக அக்னிகுண்டத்திலிருந்து வெளிவந்தார்.

திரௌபதியை மணம்புரிய இந்திரன், க்‌ஷத்திரியர்களிடம் வந்தான். ஆனால், சுயம்வரத்தில் நடந்த போட்டியில் வென்ற அர்ச்சுனனுக்கு திரௌபதி மாலை அணிவித்தாள். பிறகு பாண்டவர்களுடன் அவளது திருமணத்தை விமரிசையுடன் செய்வித்தான் த்ருபதன். திரௌபதி ஒருவருக்கு ஐந்து பாண்டவர்களுடன் திருமணம் நடந்தது. உதாரண பதிவிரதையாக அனைவரும் மெச்சும்படியாக இருந்தார் திரௌபதி. இவரது அழகு, வீரம், குணம் இவைகளைப் பார்த்து துரியோதனாதிகள் பொறாமைப்பட்டனர். வஸ்திராபரணம் முதலான பல சமயங்களில் அவரை அவமானப்படுத்த முயன்றனர். ஸ்ரீகிருஷ்ணனின் அருள் இருந்த காரணத்தால் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை. ஒவ்வொரு நொடியும் தர்மசாதனை செய்து, விஷ்ணு சர்வோத்தமத்வத்தை, வாயு ஜீவோத்தமத்வத்தை நிறுவினார். வேதாபிமானினியான திரௌபதியின் மனதை அறிந்த பாண்டவர்கள், துஷ்ட க்‌ஷத்திரியர்களை அழித்தனர். மகாபாரத யுத்தத்தின் மூலம் கௌரவர்களை அழித்து, அதர்மத்தை அழித்தனர். இதற்கெல்லாம் திரௌபதியே காரணம் என்பதால், அவரே மகாபாரதத்தின் கதாநாயகி எனப்படுகிறார். 

இத்தகைய திரௌபதியின் அருள் நமக்கு எப்போதும் இருக்கவேண்டும். நற்கல்வியைப் பெற்று ஸ்ரீஹரியிடம் நாம் போய் சேர அவரது அருளே உதவியாக இருக்கும். 

***

பஞ்சபரிசுத்த தேவதைகளை உரையாசிரியர்கள் ‘பரசுக்ல த்ரயர்கள்’ என்று அழைக்கிறார்கள். மோட்சத்தை அடைவதற்கு இவர்களின் ஸ்வரூபத்தை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆகையால், பற்பல கிரந்தங்களின் ஆதாரத்தில், இந்த பஞ்சபரிசுத்த தேவதைகளைப் பற்றி பல  விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவர்களின் அருளைப் பெற்று, அதன் மூலம் ஸ்ரீஹரியின் பிரசாதத்தைப் பெற்று, நமக்கு தத்வஞானம் கிடைக்கட்டும் என்று வேண்டுமோமாக. 

***

அஸ்மத் குருஅந்தர்கத பாரதிரமண முக்யபிராணாந்தர்கத ஸ்ரீராமகிருஷ்ண வேதவியாஸாத்மக லட்சுமிஹயக்ரீவாத்மக மத்வபதி ஸ்ரீகோபாலகிருஷ்ண: ப்ரியதாம்

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment