Sunday, March 11, 2018

7/12 மத்வ அவதாரம்

7/12 மத்வ அவதாரம்

ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்



கேள்வி: ஹனுமந்ததேவர் இன்றும்கூட கிம்புருஷ கண்டத்தில் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கிறார். மத்வாச்சார்யர் பத்ரிகாஸ்ரமத்தில் நாராயணரிடம் பாடம் படித்தவாறு, சிரஞ்சீவியாக இருக்கிறார். ஆனால், மகாபாரதத்தில், அனைவருடனும் பீமசேனதேவர் தன் இறுதிக்காலத்தை அடைகிறார் என்று இருக்கிறது. இதிலிருந்து, பீமசேனரின் ரூபம் சிரஞ்சீவி இல்லை என்றாகிறது அல்லவா?

பதில்: ஸ்ரீமதாசார்யரின் பாஷ்யத்திற்கு உரை எழுதிய ஸ்ரீத்ரிவிக்ரம பண்டிதரின் தத்வப்ரதீப கிரந்தத்தின் மங்களாசரணத்தைப் பார்த்தால், இந்த கேள்விக்குப் பதில் கிடைக்கும். மங்களாசரணத்தின் 6வது மற்றும் 7வது ஸ்லோகத்தில், பீமசேனதேவரே ஸ்ரீமதாசார்யராகப் பிறந்திருக்கிறார் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். முன்னர், மணிமந்தன் முதலான தைத்யர்கள் பீமசேனதேவரின் கதையினால் கொல்லப்பட்டாலும், ஸ்ரீஹரியின் நற்குணங்களை சரியாக புரிந்துகொள்வதற்காக மறுபடி பூமியில் மாயாவாதிகளாகப் பிறந்தனர். அவர்களைக் கொல்வதற்காக, அதே பீமசேனதேவர் மத்வராகி அவதரித்தார் என்று சொல்கிறார். பீமசேனதேவரின் உடல் மட்டுமே முன்னர் அழிந்தது. வாயுதேவரின் எந்த அம்சம் பீமசேனரில் இருந்ததோ, அதே அம்சம் பிறகு மத்வாசாரியர் என்று அழைக்கப்பட்டது. 

கே: மத்வர் பிறந்தது மாக சுத்த சப்தமி என்கிறார்கள் சிலர். சிலர் விஜயதசமி என்கிறார்கள். இவற்றில் எது சரி? மேலும் திங்கட்கிழமை அவதரித்தார் என்கிறார்களே?

ப: வாயுபுராணத்தில் இருக்கும் அணுமத்வ சரித்திரத்தில் ‘ஆஸ்வின சுக்ல தசமி திவஸே புவி பாவனே’ என்று விஜயதசமி அன்றே அவதரித்தார் என்று மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஜாதோ மத்யான்ஹ வேலாயாம் புதவாரே மருத்தனு:’ என்றதினால் புதன்கிழமை மதிய வேளையில் அவதரித்தார் என்றும் கூட அங்கேயே சொல்லப்பட்டிருக்கிறது. 

கே: ஸ்ரீமதாசார்யர் பூமியில் எவ்வளவு ஆண்டுகள் மக்களின் கண்களுக்குக் காண்பித்துக் கொண்டார்?

ப: 
‘ஏகோனாஷீதி வர்ஷாணி நீத்வா மானுஷத்ருஷ்டிக: |
பிங்கலாப்தே மாகசுத்த நவம்யாம் பதரீம் யயௌ ||

மொத்தம் 79 ஆண்டுகள் பூமியில் தன்னை காண்பித்துக் கொண்டார். பிங்கள ஆண்டு மாக சுத்த நவமி அன்று பத்ரிகாஸ்ரமத்திற்கு புறப்பட்டார். 

கே: மத்வாசாரியர் அவதரித்து எவ்வளவு ஆண்டுகள் ஆயிற்று?

ப:
‘த்ரிஷதாப்தோத்தர சது:ஸஹஸ்ராப்தேப்ய உத்தரே |
ஏகோனசத்வாரிம்ஷாப்தே விலம்பி பரிவத்ஸரே ||

என்று அணுமத்வவிஜயம் இதற்கு தெளிவாக பதிலை அளிக்கின்றது. கலியுகம் துவங்கி 4339ஆம் ஆண்டு ஆசாரியர் அவதரித்தார். இப்போது 5117 ஆகியிருக்கிறது. இதன்படி இன்று ஆசாரியர் அவதரித்து, 779 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இது 780ம் ஆண்டு. அல்லது ஆசாரியர் அவதரித்தது கிபி 1238ம் ஆண்டு. தற்போது 2018 என்றால் 780 ஆண்டுகள் ஆயிற்று என்று தெரிந்துகொள்ள வேண்டும். 

கே: ஆசாரியர் அவதரித்த இடம்?

ப: உடுப்பியிலிருந்து சுமார் 8-10 கிமீ தூரத்தில் உள்ள பாஜக க்‌ஷேத்திரம். 

கே: ஆசாரியர் நம் கர்நாடகத்தில் பிறந்தது நமக்குப் பெருமைதானே?

ப: மொத்த உலகிற்கும் தத்வஞானம் என்னும் விளக்கினை ஏற்றிய ஞானசூரியன் உதித்தது மிகவும் புனிதமான பாஜகத்தில். ராமனின் தூதனாக ஹனுமந்ததேவர் நிலைத்திருப்பதும்கூட இதே கர்நாடகத்தில் ஹம்பியில். கர்நாடகத்தின் இத்தகைய சிறப்புகளை அறிந்து மக்கள் பெருமை கொள்ளவேண்டும். 

கே: ஆசாரியரின் தந்தையின் பெயர் மத்யகேஹபட்டர் அல்லவா?

ப: மத்யகேஹ என்றால் ‘நடுவில் இருக்கும் வீட்டினர்‘ என்று மட்டுமே பொருள். இது அவரது இயற்பெயர் அல்ல. ஒரு காரணப்பெயர் மட்டுமே.

கே: தந்தை நாராயணபட்டர் தாய் வேதவதி என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இதைப்பற்றி மத்வவிஜயத்தில் எதுவும் தெளிவாக இல்லைதானே?

ப: ஆம். ஆனால் பல்வேறு தாசர்களின் பாடல்களில், வேதவதியே தாய் என்றும் நாராயணபட்டரே தந்தை என்றும் பாடியிருக்கின்றனர். மற்றும் பிரபல சம்பிரதாயமும் இதையே சொல்கிறது. 

கே: ஆசிரமம் ஸ்வீகரித்தது 9வது வயதில் அல்லவா?

ப: சுமார் 8-9ம் வயதில். வாழ்க்கையில் விரக்தியடைந்து சன்யாசத்திற்குப் புறப்பட்டார். ஆனால், தன் பெற்றோருக்கு இன்னொரு மகன் பிறக்கும்வரையில் காத்திருந்து 11ம் வயதில் ஆசிரமத்தை ஏற்றார். 

பூசுரேந்த்ரோபனீதோ யஸ்தத ஏகாதஷாப்தகே |
சௌம்யே ஜக்ராஹ பகவான்ஸ்துரீயாஸ்ரமயுத்தமம் ||

கே: சன்யாச ஆசிரமத்தில் நுழையும்போது வாசுதேவனுக்கு வைத்த பெயர் மத்வாசாரியர் தானே?

ப: சன்யாச ஆசிரமத்தில் நுழையும்போது அச்யுதப்ரேக்‌ஷர் வைத்த பெயர் பூர்ணப்ரக்ஞர். பட்டாபிஷேகம் செய்தபிறகு வைத்த பெயர் ‘ஆனந்ததீர்த்த’. ஆசாரியர் தனக்குத்தானே வைத்துக்கொண்ட பெயர் மத்வாசாரியர்.

கே: இவரின் குருவின் பெயர் அச்யுதப்ரேக்‌ஷர் தானே?

ப: இவர் பூர்ணப்ரக்ஞர் ஆனதினால், இவரது குருவின் பெயர் அச்யுதப்ரக்ஞர். இவரின் பரம்பரையில் வந்த சத்யப்ரக்ஞரின் பெயரே இதற்கு ஆதாரம். அச்யுதப்ரேக்‌ஷர் என்னும் சொல்லிற்கு அச்யுதப்ரக்ஞர் என்று பொருள் என்று நாராயண பண்டிதரே தனது உரையில் தெரிவித்திருக்கிறார். வேதாங்க தீர்த்தரும் அச்யுதப்ரக்ஞர் என்றே தனது உரையில் எழுதியிருக்கிறார். 

கே: நாராயண பண்டிதரின் கிரந்தத்திற்கு சுமத்வவிஜயம் என்று சொல்லவேண்டுமா அல்லது ஸ்ரீமத்வவிஜயம் என்று சொல்லவேண்டுமா?

ப: மத்வவிஜயம் என்று சொல்லுங்கள். இந்த பெயரில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. 

கே: அத்வைத மதத்தை எதிர்ப்பதற்கு வாயுதேவரே அவதரிக்க வேண்டியதாயிற்றா? மற்ற தேவர்களுக்கு அந்த சாமர்த்தியம் இருந்திருக்கவில்லையா?

ப: அத்வைத மற்றும் இதர துர்மதங்களை எதிர்த்து, பின்னர் வைஷ்ணவ மதத்தை நிறுவி ஜகத்குரு பதவிக்கு வரும் அருகதை உள்ளவர் வாயுதேவர் மட்டுமே. மற்ற தேவர்களுக்கு கலிபிரவேசம் ஆகியிருப்பதால் அவர்களுக்கு இந்த தகுதி இல்லை. கலியினால் பாதிக்கப்படாத ஜீவோத்தமர் என்றால் அது வாயுதேவர் மட்டுமே. ஆகையால் அவரே அவதரிக்க வேண்டியதாயிற்று. 

கே: ஜகத்குரு ஆவதற்கு ஏன் கலி பிரவேசம் ஆகியிருக்கக்கூடாது?

ப: கலியின் பாதிப்பு இருந்தால் மற்றவரை ஏமாற்றும் வாய்ப்பு வருகின்றது. ருத்ரர் முதலான தேவதைகள் சில சமயங்களில் விஷ்ணு சர்வோத்தமத்திற்கு எதிராகப் பேசியிருக்கின்றனர். நடந்திருக்கின்றனர். அத்தகைய ருத்ரர் முதலான தேவதைகள் இங்கு அவதரித்து, சர்வமூல கிரந்தங்களை இயற்றியிருந்தால் பாசுபதம் முதலான சாஸ்திரங்களைப் போல, நமக்கு அவற்றிலும் ஆதாரம் இல்லாத விஷயங்கள் தென்படும் என்கிற காரணத்தால், சர்வமூல கிரந்தங்களை இயற்றுவதற்கு - ஜகத்குரு என்பவருக்கு - இறந்த, நிகழ் மற்றும் எதிர்காலங்களில் ஒரு நொடியும்கூட கலியின் பாதிப்பு இருக்கக்கூடாது. இப்படி இருந்தால் மட்டுமே ஒருவர் ஜகத்குரு பதவிக்கு வருவதும் சாத்தியம். 

கே: அப்படியென்றால் இன்று பலர் தங்களை ஜகத்குரு என்று அழைத்துக் கொள்கிறார்களே, அவர்களை நாம் ஜகத்குரு என்று சொல்லலாமா?

ப: அவரின் உலகத்திற்கு மட்டும் அவர் குரு. 14 லோகத்திற்கும் அவர் குரு ஆவதற்கு சாத்தியம் இல்லை. ஒரு நொடிகூட சந்தேகம், தவறான ஞானம் இல்லாமல் யாரொருவர் அடுத்தவரின் சந்தேகம், தவறான ஞானத்தைப் போக்குபவராக இருக்கிறாரோ அவர் மட்டுமே ஜகத்குரு ஆவதற்கு சாத்தியம். இத்தகைய ஜகத்குருவின் பதவிக்கு வருவதற்கு தகுதியானவர் வாயுதேவர் மட்டுமே. ருத்ரர் முதலான தேவதைகள் அல்ல. மனிதர்கள் நினைத்துப் பார்க்கவே தேவையில்லை. 

கே: இந்த ஜென்மத்தில் ஸ்ரீமதாசார்யர் குருகளாகி இருக்கிறார் என்றால் வேறொரு ஜென்மத்தில் வேறொருவர் குருகளாக இருப்பதற்கு சாத்தியம் உள்ளதா?

ப: இல்லை. ஒவ்வொரு ஜென்மத்திலும் ஸ்ரீமதாசார்யரே குருவானவர். அதுமட்டுமல்லாமல், மோட்சத்திலும்கூட ஸ்ரீமதாசார்யரே குருகளாகி இருக்கின்றார். இதைப் பற்றி பின்வரும் பாகங்களில் நாம் பார்க்க இருக்கின்றோம். 

கே: ஸ்ரீமதாசார்யரின் சர்வமூல கிரந்தங்களை மனிதர்கள் மட்டும்தான் படிக்கிறார்களா?

ப: இல்லை. சனக முதலான முனிவர்கள், சேஷ முதலான தேவதைகள் ஆகியோரும் ஸ்ரீமதாசார்யரின் சர்வமூல கிரந்தங்களின் பாடத்தைக் கேட்பதற்கு மிகவும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீமதாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அனைத்து தேவதைகளும் வானில் வந்து, மிகுந்த பக்தியுடன் பாடம் கேட்டுக்கொண்டிருந்தனர் என்று மத்வவிஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

கே: சன்யாசிகளை ஆசார்ய என்று அழைப்பதில்லை. கிருஹஸ்தர்களை மட்டும் ஆசார்ய என்று அழைக்கிறோம். இப்படியிருக்கும்போது, ஸ்ரீமதாசார்யரை மட்டும் ஏன் ஆசார்யரு என்று அழைக்கவேண்டும்?

ப: 
ஆசினோதி ஹி சாஸ்த்ரார்த்தான் ஆசாரான் க்ராஹயத்யுத |
ஸ்வயமாசரதே யஸ்து தமாசார்யம் ப்ரசக்‌ஷதே ||

அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்து, அவற்றைப் பின்பற்றி, பிறருக்கும் உபதேசிக்கும் ஒருவரே ஆசார்யர் என்று அழைத்துக்கொள்ளும் தகுதி உடையவர். இந்த குணங்கள் உடைய எவரையும் ஆசார்யர் எனலாம். இந்த ஆசார்யத்வ என்னும் குணம், பரிபூர்ணமாக இருப்பது ஸ்ரீமதாசார்யருக்கு மட்டுமே.

கே: ஸ்ரீமதாசார்யர், பரமஹம்ஸராகியே ஏன் ஜகத்குருவாக ஆகவேண்டும்? கிருஹஸ்தராக ஆகியிருக்கலாமே?

ப: மொத்த உலகமும் பரமஹம்ஸ பதவிக்கே தலைவணங்கியது. ஆகையால், பற்பல அயோக்கியர்களும் பரமஹம்ஸ பதவியை ஏற்றிருந்தனர். தமது நற்குணங்களால், அந்த பரமஹம்ஸ ஆசிரமத்தை தூய்மையாக்குவதற்கு வாயுதேவர் பரமஹம்ஸர் ஆனார். துஷ்டர்களால் அந்த பரமஹம்ஸ பதவிக்கு வந்த தோஷங்கள் இதனால் நீங்கி, அது மிகவும் பரிசுத்தம் ஆயிற்று. மக்களுக்கு நிஜமான பரமஹம்ஸ எப்படியிருக்கவேண்டும் என்று வாழ்ந்து காட்டினார். 

கே: இப்போதைய பரமஹம்ஸர்கள் ஆசிர்வதித்துக் கொடுக்கும் மந்திராட்சதைக்கு எவ்வளவு நற்பலன்கள் கிடைக்கின்றன. ஆனால், அப்போது ஸ்ரீமதாசார்யர் கொடுத்த மந்திராட்சதையைப் பற்றி எங்கும் சொல்லப்படவே இல்லையே?

ப: மந்திராட்சதையைப் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை என்றாலும், அவரின் கையிலிருந்து எதைக் கொடுத்தாலும் அது பக்தர்களுக்கு மிகவும் நற்பலன்களைக் கொடுத்திருந்தது என்று அதைக் கண்ணாரக் கண்ட த்ரிவிக்ரம பண்டிதர் சொல்கிறார்.

ஸ்ப்ருஷ்ட்யம் கரேண விஷயப்யம்ருதாய த்ருஷ்ட்யம்
யஸ்த்யோதய: ஸ பகவான் யது ராதி கிஞ்சித் |
தத் பேஷஜம் கதவதாம் ப்ரதிக்ல்ருப்தமாயு
ர்வேதே ஸுசித்தமமுனேத்ய விசார்யமேதத் ||

ஹாலாஹல விஷம் கூட முக்யபிராணரின் கை பட்டால் அமிர்தம் ஆகிவிடும் என்று ஸ்ருதிகள் சொல்கின்றன. அதே முக்யபிராணர் தற்போது மத்வரூபத்தில் வந்து முழுநிலவைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். ஆறு நற்குணங்களினால் நிரம்பிய இவர், ரோகிகளுக்குக் கொடுக்கும் பல - மந்திராட்சதைகளும் அமிர்தத்தைப் போல, நோய் தீர்க்கும் மருந்தினைப் போல ஆகின்றது என்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆயுர்வேதத்தில் எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த மருந்துகள் சொல்லப்பட்டிருக்கின்றதோ, அவை அனைத்தையும் இந்த வாயுதேவரே சரக - சுஸ்ருதர்களில் நின்று நமக்குத் தெரிவிக்கிறார். இந்த விஷயத்தில் கடுகளவும் சந்தேகமில்லை. 

கே: ஸ்ரீமதாசார்யர் த்வைத சாஸ்திரத்தை நிறுவியிருக்கிறார். ஆனால், ஜோதிட சாஸ்திரங்களைப் பற்றி கர்மசூத்ர, க்ருஹ்யசூத்ர, கல்பசூத்ரங்களைப் பற்றி சொல்லியிருப்பதாக எங்கேயும் தெரியவில்லையே?

ப: இந்த கேள்விக்கும் த்ரிவிக்ரம பண்டிதரே பதில் அளிக்கிறார். ‘ஜ்யோதிஷ சாஸ்திரம் யதேதம் பவதி புவி பவிஷ்யத்யதீதி ச சாட்சாத்’. ஜோதிட சாஸ்திரத்தைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பவர் என்றால் அது ஸ்ரீமதாசார்யர் மட்டுமே என்று தீர்மானமாகச் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், கர்மசூத்ர, க்ருஷ்யசூத்ர, கல்பசூத்ரங்களை சிஷ்யர்கள் கேட்டுக் கொண்டால் தாமே இயற்றும் திறன்  படைத்திருந்தார் என்பதை ‘கர்மணாம் சத்பிரயோகம் ந்யாயானாம் சூத்ரஜாதம் யதி ச புத ஜன்யைரத்யதே கிம் ந குர்மாத்’ என்று தெரிவிக்கிறார். ’ஸர்வஞாமன்ய மனவேக்‌ஷ்ய சர்காயவீர்யம் ஸ்மேரானனோ புவனஜீவன மாபபாஷே’, ‘ஸர்வதா சதஸி ஸர்வபுதானாம் ஸர்வவித்யதீரிதி ப்ரதிதோSபூத்’ ஆகிய வாக்கியங்களிலிருந்து ஸ்ரீமதாசார்யர் சர்வக்ஞரே (அனைத்தும் அறிந்தவர்) என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் அனைத்து விஷயங்களைப் பற்றியும் அறிந்திருந்தார் என்று மிகத் தெளிவாக அறிந்துகொள்கிறோம். 

கே: வாயுதேவர் ஸ்ரீமதாசார்யராக அவதரித்து எந்த இடத்தில்?

ப: மத்வவிஜயத்தில் ‘ஸரூப்யபீடே விஷ்ணும் ப்ரணம்ய’ என்று சொல்லப்பட்டிருப்பதைப் போல், உடுப்பியில் அனந்தாசனத்தில் வாயுதேவர் வந்து இறங்கினார். பிறகு பாஜக க்‌ஷேத்திரத்திற்கு வந்து, அப்போதே பிறந்திருந்த குழந்தையின் உடலிலிருந்த ஜீவனை மாற்றி தான் அங்கே நுழைந்தார். 

கே: வாசுதேவன், குருகுலத்தை முழுமையாக முடித்தானோ அல்லது பாதியிலேயே சன்யாசியாக ஆகிவிட்டானோ?

ப: 10ம் வயதில் குருகுலவாசம் முடிவுற்றது. 11வது வயதில் சன்யாசியானார்.

கே: பால-சன்யாசியான பூர்ணப்ரக்ஞர் தமது பாடம், உபன்யாசங்களை எப்படி துவக்கினார்?

ப: துவக்கத்தில் அத்வைத மதத்தைப் பற்றியே உபன்யாசம் செய்துவந்தார். பிறகு திடீரென்று ஒரு நாள் சங்கர பாஷ்யத்தின் வாக்கியங்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன என்று சொல்லி, பல தோஷங்களையும் எடுத்துக்காட்டி, அனைத்து சபையினரையும் ஆச்சரியப்படுத்தினார். 

கே: வாக்யார்த்தங்களில் எப்படி இருந்தார்?

ப: சன்யாசத்தைப் பெற்ற 11வது வயதிலேயே, வாசுதேவ பண்டிதன் என்னும் தார்கிக சிரோமணியை தோற்கடித்து தனது வாக்சாதுர்யத்தைக் காட்டினார். பிறகு, வாதிசிம்ம, புத்திசாகர ஆகியோரை தோற்கடித்து அவர்களை இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடுமாறு செய்தார். 

கே: இவரே வாயுதேவர் என்னும் விஷயம் அச்யுதப்ரக்ஞருக்கு தெரிந்திருந்ததா இல்லையா?

ப: ஒருமுறை ஸ்ரீமதாசார்யார் தமக்குக் கொடுக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட வாழைப்பழங்களைத் தின்று ஜீரணித்ததைக் கண்டு அச்யுதப்ரக்ஞர் வியந்தார். ஸ்ரீஹரியின் அருளால், மொத்த உலகத்தையும் காக்கும் திறன் தமக்கு இருப்பதாகவும், தாமே ஜீவோத்தமர் என்றும் ஸ்ரீமதாசார்யர் சொல்லிக்கொண்டபோது, இவரே வாயுதேவர் என்று அச்யுதப்ரக்ஞருக்கு தெரிந்தது.

கே: பயணத்தில் இருந்தபோது ஸ்ரீமதாசார்யர் எப்படி பிற வாதிகளை தோற்கடித்தார்?

ப: ஒரு முறை பயணத்தில் இருந்தபோது, விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஸ்ரீஹரியின் ஒவ்வொரு பெயருக்கும் நூறு அர்த்தங்கள் உள்ளன என்றார். அந்த நூறு அர்த்தங்களையும் சொல்லவும் என்று சபையினர் கேட்டுக்கொண்டதால், ஆசாரியரும் விஸ்வம் என்னும் சொல்லிற்கான நூறு அர்த்தங்களை சொல்லத் துவங்கினார். அந்த நூறு அர்த்தங்களை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அவற்றை திரும்பச் சொல்லமுடியாத பிற பண்டிதர்கள் தோற்றனர். இப்படி விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு 100 அர்த்தங்கள், மகாபாரத ஸ்லோகத்திற்கு 10 அர்த்தங்கள், வேதத்திற்கு 3 அர்த்தங்கள் உள்ளன என்னும் தத்வத்தை பிரசாரம் செய்தார். 

கே: ஸ்ரீமதாசார்யர் முதன்முதலில் எழுதிய கிரந்தம் எது?

ப: பகவத்கீதா பாஷ்யம். இதுவே ஸ்ரீமதாசார்யரின் முதல் கிரந்தம். இதை நாராயணனுக்கு சமர்ப்பிப்பதற்காகவே முதல் பத்ரி யாத்திரையை மேற்கொண்டார். இதனால் நாராயணன் திருப்தியடைந்து, மங்கள ஸ்லோகத்தில் இருந்த ‘சக்தித:’ என்னும் சொல்லை ‘லேஷத:’ என்று திருத்துமாறு சொல்லி ஆசிர்வதித்தார். 

கே: பிரம்மசூத்ர பாஷ்யத்தை எப்போது இயற்றினார்?

ப: ஸ்ரீமதாசார்யர் பத்ரிகாஸ்ரமத்திற்கு சென்றபோது அங்கிருந்த வேதவியாஸர், இவரை நரநாராயணரிடம் அழைத்துப் போனார். அங்கு நரநாராயணர், பிரம்மசூத்ர பாஷ்யத்தை இயற்றுமாறு ஸ்ரீமதாசார்யருக்கு கட்டளையிட்டார். அவரது கட்டளையின்படியே திரும்பிவந்ததும், பிரம்மசூத்ர பாஷ்யத்தை இயற்றினார். 

கே: தனது முதல் பயணமாகவே ஸ்ரீமதாசார்யர் பத்ரிக்குப் புறப்பட்டார் அல்லவா?

ப: இல்லை. தனது முதல் பயணமாக தென்னிந்தியாவில் ராமேஸ்வரம் வரை சென்று பிறகு உடுப்பிக்கு வந்து, கீதா பாஷ்யத்தை இயற்றி, அதன்பிறகே வட இந்தியாவிற்கு பயணம் செய்து, பத்ரிக்கு சென்றார். 

கே: அப்படியென்றால் ஸ்ரீமதாசார்யர், குமரி முதல் இமயம் வரை சென்று விஷ்ணு சர்வோத்தமத்வத்தை நிறுவினார் என்றாகிறது அல்லவா?

ப: ஆம். இப்படி செல்லும்போதுதான், கோதாவரி நதிக்கரையில் மிகுந்த திறன் படைத்த அத்வைதிகளான சோபனபட்டர், ஆசார்யரின் சிஷ்யரானார். 

கே: பயணத்தில் இருந்தபோது ஆசார்யர் சேர்த்த செல்வங்கள் என்ன?

ப: பல்வேறு தேசங்களில் சிஷ்யர்களை சேர்த்துக்கொண்டதே இவரது செல்வமாகும். உத்தமர்களுக்கு சாதனைகளை செய்வித்து, பின் உடுப்பிக்குத் திரும்பினார். இப்படி திரும்பிய மத்வாசார்யரைக் கண்ட அச்யுதப்ரக்ஞர் மிகவும் மகிழ்ந்தார். அவரும் நிறைந்த மனதுடன், ஸ்ரீமதாசார்யரின் தத்வத்தை பின்பற்றத் துவங்கினார். 

கே: உடுப்பி கிருஷ்ணனை எதற்காக பிரதிஷ்டை செய்தார்?

ப: முக்தியை விரும்புபவர்களுக்கு, நற்-சாஸ்திரங்களைக் கேட்பதற்கு எந்த பிரச்னைகள் வருகின்றனவோ அவற்றின் பரிகாரத்திற்காக மற்றும் அவர்கள் விரும்பிய முக்தி கிடைப்பதற்காகவும், உடுப்பி கிருஷ்ணனை பிரதிஷ்டை செய்தார். 

கே: ஒருமுறை மேற்கு கடற்கரையில் ஸ்ரீமதாசார்யர் தமது ஆன்ஹிகங்களுக்காக அமர்ந்திருந்தார். கடலில் ஒரு கப்பல் புயலில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீமதாசார்யர் தனது காவி ஆடையை ஆட்டி, படகை பத்திரமாக கரைக்கு வரவழைத்தார். இவர் விரும்பியதைக் கொடுக்கத் தயாரானான் அந்த மாலுமி. ஆனால் ஸ்ரீமத்வரோ கோபிசந்தனக் கட்டியை மட்டும் வாங்கிக்கொண்டார். அதற்குள் ஸ்ரீகிருஷ்ணன் இருந்தான் என்கிறார்கள். இது சரியான தகவல்தானா?

ப: இந்தக் கதை சம்பிரதாயத்தில் வந்திருக்கிறது. சம்பிரதாயத்தில் வந்ததும் ஆதாரமே. இதே கதையை பற்பல தாசர்கள் தங்கள் பாடல்களில் பாடியிருக்கின்றனர். அதனால் இதை கட்டுக்கதை என்று சொல்லலாகாது. ஆனால், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த, பலிமார் மடத்தின் பரம்பரையின் ரகுவர்யதீர்த்தர், தனது அணுமத்வ விஜயத்தில் இப்படி சொல்கிறார் - ‘த்வாரகாயாம் ருக்மிணீவனாக்ய ப்ரதேஷே கோபிசந்தனமத்யே லக்னாம் கோபிசந்தனபுத்தாயா ஸாம்யாத்ரிக்யைரானீதாம் ரூப்யபீடஸமீபே ப்லவே பின்னே ஜலதௌ மக்னாம் ஸ்ரீகிருஷ்ணப்ரதிமாயானீய... மடே ப்ரதிஷ்டாபயாமாஸ’. 

’த்வாரகையில் ருக்மிணி வனம் என்னும் பிரதேசத்தில் கோபிசந்தனத்தின் நடுவில் ஸ்ரீகிருஷ்ணனின் சிலை இருந்தது. சிலை இருப்பது தெரியாமல் வெறும் கோபிசந்தனம் என்று நினைத்து, கப்பலில் வைத்துக் கொண்டுவந்தார்கள். ரௌப்யபீடத்திற்கு அருகில் இருக்கும் கடலில் அந்தப் படகு மூழ்கியது. கிருஷ்ணனின் சிலையும் மூழ்கியது. இதை அறிந்த ஸ்ரீமதாசாரியர் அந்த கிருஷ்ணனின் சிலையை பெற்றுக்கொண்டு, உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார்’ என்றார். 

கே: தற்போது இருப்பதைப்போல் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், ஆசாரியர் காலத்திலும் இருந்தனரா?

ப: வடஇந்தியாவில் இஸ்லாமியர்கள் பரவியிருந்தனர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. மற்றும் ஜலாலுதீன் கில்ஜி மற்றும் அல்லாவுதீன் கில்ஜி அதே காலத்தின் அரசர்களாக இருந்தனர் ஆகையால் அவர்களுக்கு ஸ்ரீமதாசார்யருடன் சந்திப்பு நடந்திருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். 

கே: ஸ்ரீமதாசார்யருடன் அலாவுதீன் கில்ஜி பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம்?

ப: மத்வவிஜயத்தின் பத்தாவது சர்க்கத்தில் ‘ஸத்வகராஜ புருஷானுசிதவாசா’ என்று துருக்கி நாட்டு வீரர்களுடன் பேசி, பின்னர் அந்த அரசனுடையே பேசினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அரசர் ஒரு இஸ்லாமியர் ஆவார். 

கே: எந்த மொழியில் பேசினார்?

ப: ’இறைவனை நன்கு அறிந்தவர்களுக்கு எந்த மொழியாக இருந்தால் என்ன?’ என்னும் வாக்கியத்திற்கேற்ப பெர்ஷியன் மொழியிலேயே பதிலளித்தார். உலகத்தையே கட்டிக்காக்கும் அந்த சர்வோத்தமனின் அருள் இருப்பதால், நாம் அனைத்து மொழிகளிலும் பேசுகிறோம் என்றார். 

கே: வேறு எந்த மதங்கள் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தன?

ப: பெரும்பான்மையாக இஸ்லாமிய மதமே இருந்தது. அடுத்த நிலையில் கிருஸ்துவர்கள் இருந்தனர். கர்நாடகத்தில் ஜைன மதம், வீரசைவ மதம், அப்போது வளர்ந்துவந்தன. இந்தியா முழுவதுமாக அத்வைத மதமே பெரும்பான்மையாக இருந்தது.

கே: ஸ்ரீமதாசார்யர் வெறும் அத்வைத மதத்தை மட்டுமே எதிர்த்தாரா? வேறு எந்த மதங்களையும் ஏன் அவர் எதிர்க்கவில்லை?

ப: தத்வவாதத்திற்கு எதிரான மதங்கள் அனைத்தையும் ஸ்ரீமதாசார்யர் எதிர்த்திருக்கிறார். விஷ்ணு சர்வோத்தமத்வம், வாயு ஜீவோத்தமத்வம், பஞ்சபேத, தாரதம்ய இந்த தத்வங்களை முன்வைத்தார். இவற்றிற்கு எதிரான மதங்களின் கருத்துகளை முழுமையாக எதிர்த்தார். 

கே: அப்படியென்றால், அத்வைத மதத்தை எதிர்ப்பதற்காகவே ஸ்ரீமதாசார்யர் அவதரித்திருக்கிறார் என்று ஏன் சொல்கிறார்கள்?

ப: வேதத்தை ஒத்துக்கொள்கிறோம் என்று நாடகமாடி, பிரம்மனை ஒப்புக்கொள்கிறோம் என்று வெளியில் சொல்லி, உள்ளே அவரை நிர்குணன் என்று சொல்லி, நல்லவர் போல் தந்திரத்துடன் அனைவரையும் நம்பவைத்து மோசம் செய்வது அத்வைத மதம். மிகவும் அபாயமானது இது. இதை நிராகரிப்பதே முதல் கடமை. மேலும், த்வைத மதத்தைவிட்டு மற்ற அனைத்தும் அத்வைத மதத்தையே சேர்ந்தது என்று தவறாக எண்ணி, அனைவரும் அத்வைத மதத்தை நாடுகின்றனர். ஆகவே அத்வைத மதம் ஒன்றை நிராகரித்தார் என்றால், அனைத்து மதங்களையும் நிராகரித்தது போலாகும். 
கே: சங்கராச்சார்யர் ஒருவரை மட்டுமே ஸ்ரீமதாசார்யர் தனது கிரந்தங்களில் கண்டிக்கிறார். இது ஏன்?

ப: இப்படி நினைப்பது தவறு. ஸ்ரீமதாசார்யரின் கிரந்தங்களை சரிவர படித்தால், சங்கராசார்யரின் பெயரைச் சொல்லி ஒருமுறைகூட அவர் கண்டனம் செய்யவில்லை என்று தெரியவரும். அவர் எந்த மதாசார்யரின் பெயரைச் சொல்லியும் பேசவில்லை. பஞ்சபேதம், தாரதம்யம் ஆகிய விஷயங்களுக்கு எதிரானவைகளை மட்டுமே எதிர்ப்பது ஸ்ரீமதாசார்யரின் நோக்கம். இதுவே அவரது காம்பீர்யத்தின் உச்சம். 

கே: அப்படியென்றால், இன்றைய விஞ்ஞான மதத்தையும் ஸ்ரீமதாசார்யர் கண்டித்திருக்கிறாரா?

ப: ஆம். இயற்கையே அனைத்திற்கும் அடிப்படை. ஸ்ரீஹரியின் பங்கு இல்லாமலேயே, உலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இயங்குகின்றன என்றவாறு, வேதங்களையும் ஒதுக்கிவைக்கும் நாத்திகர்களின் வாதங்களை, ஸ்ரீமதாசார்யர் தனது கிரந்தங்களில் திட்டவட்டமாக கண்டிக்கிறார். 

கே: நீங்கள் சொல்லும் விஷயம், ஸ்ரீமதாசார்யரின் கிரந்தங்கள் எதிலுமே காணப்படவில்லையே?

ப: சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவர் ஆசாரியர். பக்கம்பக்கமாக விளக்க வேண்டிய விஷயங்களை ஒரே ஒரு வாக்கியத்தில் சொல்லும் திறன் படைத்தவர். அவரது கிரந்த நடை, எப்பேர்ப்பட்ட மேதாவிகளும் பின்பற்றக் கஷ்டப்படுவர்.

‘ப்ராந்திமூலதயா ஸர்வஸமயானுயமுக்தித: |
ந தத்விரோதத்வஜனம் வைதிகம் சங்க்யதாம் ப்ரஜேத் ||’

அணுபாஷ்யத்தின் இந்த வரியானது, உலகத்தில் உள்ள அனைத்து குபாஷ்யங்களை கண்டித்ததற்கு ஒரு சரியான உதாரணமாகும். 

கே: அத்வைத மதம் மட்டுமல்லாது இதர மதங்களை கண்டனம் செய்ததற்கு ஏதேனும் உதாரணம் இருக்கிறதா?

ப: மத்வவிஜயத்தில் 15ம் சர்க்கத்தில், த்ரிவிக்ரம பண்டிதருடன் வாதம் செய்யும் நேரத்தில், இதர பல மதங்களையும் கண்டனம் செய்ததற்கு உதாரணம் உள்ளது. 

கே: த்ரிவிக்ரம பண்டிதர் யார்?

ப: ஸ்ரீமதாசார்யரின் கிரந்தங்களைக் காப்பதற்காக சங்கர பண்டிதர் என்று ஒருவர் இருந்தார். அவரது சகோதரரே த்ரிவிக்ரம பண்டிதர். பஜத்தாய வம்சத்தில் பிறந்த இவர், குமரி முதல் இமயம் வரை பயணித்து, அத்வைத சாஸ்திரத்தை பிரசாரம் செய்வதில் மிகவும் முக்கியமானவராக இருந்தார். 

கே: அத்வைத சித்தாந்தத்தில் மூழ்கியிருந்த இவர், வாயுஸ்துதி இயற்றுவதற்கு எப்படி சாத்தியமாயிற்று?

ப: ஸ்ரீமதாசார்யருடன் வாதத்திற்கு இறங்கி, கேள்வி மழைகளைக் கேட்டு, பின் ஆசாரியரிடம் வாதத்தில் தோற்றுப் போனார். அதுமட்டுமல்லாமல் ஆசாரியரின் சித்தாந்தத்திற்கு ஒப்புதல் அளித்து, அவரின் சிஷ்யராகி, தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். ஆசாரியரின் சிஷ்யர்களில் இவர் தலைசிறந்தவர் ஆனார். ஸ்ரீமதாசார்யர் இவருக்கு செய்த உதவியை எண்ணி, தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டார். அவரிடம் மிகுந்த பக்தி கொண்டு, வாயுஸ்துதியை இயற்றி, அனைத்து மாத்வர்களுக்கும் மிகப்பெரிய உதவியைச் செய்தார். 

கே: தனது கிரந்தங்களை ஆசாரியர், மிகவும் கடினமான சொற்களால் / வாக்கியங்களால் எழுதியிருக்கிறார். ஏன்? இப்படி எழுதினால் மக்களுக்கு இவை போய் சேருவதில் கஷ்டம் இருக்கும்தானே?

ப: இதற்கான பதிலையும் ஸ்ரீமதாசார்யரே சொல்லியிருக்கிறார். தனது மூலகிரந்தங்களை சாதாரண மக்களிடம் போய் சேர்ப்பதற்கு, அவரே பல பாடல்களை இயற்றியிருக்கிறார். இதிலிருந்தே தாச-பரம்பரையும் தொடங்கியது. ஹ்ருஷிகேச தீர்த்தர் மற்றும் நரஹரி தீர்த்தர் இருவரும் அந்தப் பாடல்களினால் கவரப்பட்டனர். பிறகு, ஸ்ரீபாதராயர், ஸ்ரீவியாசராஜர், ஸ்ரீவாதிராஜர், மிகுந்த திறமைகளுடன் அந்த பாடல்களை வளர்த்தெடுத்தனர். இப்படியாக வியாஸ-பரம்பரை, தாச-பரம்பரை இரண்டுமே ஹரிசர்வோத்தமத்வத்தை நிறுவுவதற்காக எல்லா இடங்களிலும் வளர்ந்தது. புரந்தரதாசர், கனகதாசர், விஜயதாசர், கோபாலதாசர், ஜகன்னாததாசர் ஆகியோர் ஸ்ரீமதாசார்யர் போட்டுக்கொடுத்த பாதையிலேயே சென்று, வேதங்களின் பொருளை சாதாரண மக்களுக்கு தெளிவான கன்னடத்தில் விளக்கினர். இதெல்லாம் ஸ்ரீமதாசார்யரின் கொடையே அன்றி வேறெதுவும் இல்லை. 

கே: மத்வவிஜயத்தின் சாராம்சம் என்ன?

ப: 
ந மாதவ ஸமோ தேவோ ந ச மத்வஸமோ குரு: |
ந தத்வாக்யஸமம் சாஸ்திரம் ந ச தக்ஞ: ஸம: புமான் ||

நாராயணருக்கு நிகரான இன்னொரு தெய்வம் இல்லை. மத்வருக்கு நிகரான இன்னொரு குரு இல்லை. அவரது சொல்லிற்கு நிகரான இன்னொரு சாஸ்திரம் இல்லை. இவற்றைத் தெரிந்துகொண்ட புருஷருக்கு நிகரான இன்னொரு புருஷர் இல்லை.

இந்த விஷயத்தை மத்வர் தாமே, தமது சிஷ்யர்களுக்கு, அவர் மௌனவிரதத்தில் இருந்தபோது தெரியப்படுத்தியிருக்கிறார். ‘நேத்ருஷம் ஸ்தலமலம் ஷமலக்னம் நாஸ்ய தீர்தஸலிலஸ்ய ஸமம் வா: | நாஸ்தி விஷ்ணுஸத்ருசம் நனு தைவம் நாஸ்மதுக்திஸத்ருசம் ஹிதரூபம் || பத்ரிக்கு நிகரான இன்னொரு இடம் இல்லை. கங்கைக்கு நிகரான இன்னொரு தீர்த்தம் இல்லை. விஷ்ணுவிற்கு நிகரான இன்னொரு தெய்வம் இல்லை. நம் பேச்சிற்கு நிகரான இன்னொரு நற்சொற்கள் இல்லை. 

இந்த ஸ்லோகத்தில் மத்வர் தெரியப்படுத்தியிருக்கும் தத்வமே மிகவும் முக்கியமானதாகும். இதுவே நாராயண பண்டிதர் இயற்றியிருக்கும் மத்வவிஜயத்தின் சாராம்சம் ஆகும். இதனை நாம் நன்கு அறிந்து, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். 

கே: மத்வரே குருகளாவதற்கு என்ன பாக்கியம் செய்திருக்கவேண்டும்?

ப: 
ஸதிய ஜடரதொள் அவதரிஸி பாரதிரமண மத்வாபிதானபி
சதுரதசலோகதொளு மெரெவ அப்ரதிமக்பிவந்திஸுவே

மணிமந்தன் முதலான பல்வேறு அசுரர்கள் பூமியில் பிறந்து, 21 குபாஷ்யங்களை இயற்றினர். அப்போது த்ரைலோகாசார்யரான முக்யபிராணர், மத்யகேஹ பட்டரின் வீட்டில் பிறந்தார். மத்வ என்னும் பெயர் பெற்று, 14 உலகங்களிலும் புகழ்பெற்றார். இப்படியாக ஜகன்னாததாசர், மத்வரை வெறும் நம் உலகிற்கு குரு அல்ல, 14 உலகங்களுக்கும் குருவானவர் என்று நிறுவியிருக்கிறார். இத்தகையவரை நம் இந்த வாழ்க்கையில் குருவாகப் பெற்றதற்கு, ஆயிரமாயிரம் ஆண்டுகளில் நாம் செய்த நற்செயல்களே ஆகும் என்று மகிழ்ச்சியடைவோம். 

கே: மத்வாசாரியரின் கதையை சுருக்கமாகச் சொல்லவும். 

ப: தனக்கு நல்ல வாரிசு உருவாகவேண்டுமென்று, மத்யகேஹ பட்டர் உடுப்பியின் அனந்தேஸ்வர ஆலயத்தில் 12 ஆண்டுகள் பல்வேறு விரதங்களைச் செய்து வேண்டி வந்தார். இதன் பலனாக, ஜகத்குருவான வாயுதேவரே அவரிடம் அவதரித்தார். மத்யகேஹ தம்பதிகள் அந்த குழந்தைக்கு வாசுதேவ என்று பெயரிட்டனர்.

வாசுதேவன் குழந்தையாக இருந்தபோதே கொள்ளைத் தின்று ஜீரணம் செய்தான். மூன்று வயதிலேயே, தன் பெற்றோருக்குத் தெரியாமல், தன்னந்தனியாக காடுகளில் அலைந்து, உடுப்பி அனந்தேஸ்வர ஆலயத்திற்குச் சென்றான். புளியங்கொட்டையின் மூலம் தந்தை பட்ட கடனை அடைத்தான். இந்தக் குழந்தையைக் கொல்வதற்காக மணிமந்த அசுரன் பாம்பின் வடிவத்தில் வந்தபோது, அதை தன் கால் கட்டைவிரலால் நசுக்கிக் கொன்றான். 

ஐந்தாம் வயதில் அக்‌ஷராப்யாசம் ஆயிற்று. சரியான வயதில் உபநயனமும் ஆயிற்று. பத்து வயதில் குருகுலவாசமே முடிந்தது. பதினோறாம் ஆண்டில் சன்யாச ஆசிரமத்தை ஸ்வீகரித்து, வாசுதேவனே பூர்ணப்ரக்ஞனானார்.

பதினோறாம் வயதில் பூர்ணப்ரக்ஞருக்கு கங்கா ஸ்நானம் செய்ய விருப்பம் வந்தபோது, கங்காதேவியே மத்வசரோவரத்தில் வந்து இறங்கினாள். வாதிசிம்ஹ மற்றும் புத்திசாகரன் என்னும் அத்வைத பண்டிதர்களை வாதத்தில் தோற்கடித்தார். தென்னிந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். பிறகு கீதா பாஷ்யத்தை இயற்றி, வட இந்திய பயணத்திற்காகப் புறப்பட்டார். சர்வமூல கிரந்தங்களில் முதலாம் கிரந்தமான கீதா பாஷ்யத்தை பத்ரிஆசிரமத்தில் நாராயணனுக்கு சமர்ப்பித்தார். பிறகு மேல் பத்ரிக்குச் சென்று பிரம்மசூத்திரத்தின் முழுமையான பொருளை வேதவியாசரிடமிருந்து உபதேசம் பெற்றார். மறுபடி உடுப்பிக்கு வந்து, பிரம்மசூத்திர பாஷ்யம் மற்றும் பிற கிரந்தங்களை எழுதினார். அத்வைத மற்றும் பல துர்மதங்களைக் கண்டித்து, வைஷ்ணவ சித்தாந்தத்தை நிறுவினார். 

விஷ்ணுவே சர்வோத்தமன். வாயுவே ஜீவோத்தமன். பஞ்சபேதங்கள் இருப்பது உண்மையாகும். ஒவ்வொருவரிடமும் தாரதம்யம் (படிநிலை) உள்ளது. மோட்சத்திலும்கூட தாரதம்யம் உள்ளது. அனைத்து வேதங்களாலும் போற்றப்படுபவன், விளக்கப்படுபவன் விஷ்ணு மாத்திரமே. இவை போன்ற தத்துவங்களை உலகத்தில் நிறுவினார். இந்த தத்துவங்களை நான் உருவாக்கவில்லை. அனைத்தும் ஏற்கனவே ஸ்ருதி-ஸ்ம்ருதி, பிரம்மமீமாம்ச சாஸ்திரம் மற்றும் புராணங்களில் ஏற்கனவே நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது என்று நிரூபித்தார். இத்தனை சிறப்பு வாய்ந்த மத்வாசார்யரே நமது குரு. என்றென்றும் இவரே நம்மை கரை சேர்க்கக்கூடியவர். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***

No comments:

Post a Comment