6/12 பீம அவதாரம்
ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம் : பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ’ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
கேள்வி: பீமசேனதேவரின் அவதாரத்திற்கு காரணம் என்ன?
பதில்: பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக ஸ்ரீஹரி, கிருஷ்ண அவதாரம் எடுத்தார். அவரது சேவைக்காக பிராணதேவரும் பீமனாக வந்தார்.
கே: பீமசேனதேவர் அவதரித்த காலம்?
ப: கலியுகம் துவங்குவதற்கு 71 ஆண்டுகளுக்கு முன்னர். கிபி 2017ன் சித்திரை மாதத்துடன் 5188 ஆண்டுகள் ஆயிற்று.
கே: பீமசேனருக்கு இருந்த வலிமை வேறு யாருக்கும் இருக்கவில்லை என்று பொதுவாக சொல்லப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
ப: பீமசேனதேவர் குழந்தையாக இருந்தபோது ஒருமுறை குந்தி, அக்குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு புலி அருகில் வந்து கர்ஜித்தது. புலியைக் கண்டு பயந்த குந்தி எழுந்திருக்கும்போது, கைதவறி குழந்தை மலை மேல் விழுந்தது. குழந்தை விழுந்ததால் அந்த மலை, நூறு துண்டுகளாக உடைந்து, ஷதஸ்ருங்க என்று பெயர் பெற்றது. அப்போதே பீமசேனதேவரின் வலிமை எத்தகையது என்று அனைவருக்கும் தெரியவந்தது.
கே: பீமசேனதேவர் அவதரித்த இடம்?
ப: இமயமலைக் காடுகளில் ஒரு பகுதியில். அப்போதைய பத்ரி க்ஷேத்திரத்திற்கு அருகில். பிறந்து 15 ஆண்டுகள் வரை அங்கேயே வாசம் செய்தார். 15ம் வயதில் ஹஸ்தினாபுரம் வந்தார்.
கே: அவரின் படிப்பு / குருகுலம்?
ப: 15ம் வயதில் ஹஸ்தினாபுரம் வந்தபிறகு, அங்கு க்ருபாசார்யாரிடம் ஆயுதப் பயிற்சி. 21ம் வயதில் துரோணாச்சாரியாரிடம் குருகுலம். பிறகு மூன்று ஆண்டுகள் ஸ்ரீகிருஷ்ணனிடம் மேற்படிப்பு (பரவித்யா). அதே சமயத்தில் பலராமனிடம் கதாயுதப் பயிற்சி.
கே: பீமசேனதேவரிடம் துர்யோதனனுக்கு விரோதம் வரக் காரணம் என்ன?
ப: அனைவரும் சேர்ந்து ஆயுதப்பயிற்சி மேற்கொள்ளும்போது, பீமசேனதேவர் அனைவரையும் தோற்கடித்து வந்தார். இதனால் துரியோதனனின் பொறாமை, விரோதமாக மாறியது. மல்யுத்தத்தில், ஓட்டத்தில், விளையாட்டுகளில், நீச்சலில் இப்படி அனைத்திலும் பீமசேனதேவரே வென்று வந்தார். இதனாலேயே துரியோதனன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களுக்கு பீமசேனதேவர் மேல் விரோதம் வரத் துவங்கியது.
கே: குருகுலத்தில் இருந்தபோதே துரியோதனன் பீமசேனதேவரை கொல்வதற்கு முயற்சித்தானா?
ப: பீமசேனதேவரைக் கொல்லவேண்டுமென்பதே துரியோதனனின் விருப்பமாக இருந்தது.
1. ஒரு முறை பீமர் தூங்கும்போது விஷமுள்ள பாம்புகளைக் கொண்டு வந்து அவர் மேல் ஏவினான்.
2. இரும்புக் கம்பிகளால் பீமரைக் கட்டி, கங்கையின் வெள்ளத்தில் அவரை தள்ளி மூழ்கடித்தான்.
3. த்ருதராஷ்ட்ரனின் தாசியின் மகனான யுயுத்ஸு மூலமாக பீமருக்கு விஷத்தைக் கொடுக்க முயன்றான்.
4. துரோணர் ஏற்பாடு செய்த ஒரு போட்டியின்போது, பீமரைக் கொல்ல முயற்சித்தான்.
5. அரக்கு மாளிகையில் பீமசேனதேவருடன் பாண்டவர்களையும் கொன்றுவிட வேண்டும் என்று முயன்றான்.
இவையே முக்கியமான முயற்சிகள்.
கே: அரக்கு மாளிகையை கட்டியவர் யார்? அங்கு தங்கியிருந்த பாண்டவர்களைக் கொல்ல வந்தவர் யார்?
ப: ராமாயண காலத்தில் ப்ரஹஸ்தன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவனே தற்போது புரோசனனாக பிறந்து, இந்த அரக்கு மாளிகையைக் கட்டினான். இவன் துரியோதனனின் நண்பன். வாரணாவதத்தில் நடைபெறும் உற்சவத்தில் பங்கு கொள்ள வருமாறு, த்ருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு அழைப்பு விடுத்து, அப்படி வந்த அவர்களை அரக்கு மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தான் துரியோதனன். பாண்டவர்களைக் கொல்வதற்காக கொடுக்கப்பட்ட விஷ-லட்டுகளை தானே உண்டு, அனைவரையும் காப்பாற்றினார் பீமசேனதேவர்.
கே: ஒரு நொடியில் எரிந்து கருகிவிடும் அரக்கு மாளிகையை புரோசனனால் ஏன் தீ வைக்க முடியவில்லை?
ப: பாண்டவர்கள் தூங்கும்போது, அவர்களுக்குத் தெரியாமல் புரோசனன் அரக்கு மாளிகைக்கு தீ வைக்கவேண்டியிருந்தது. ஆனால், பீமசேனதேவர் மட்டும் எப்போதும் முழித்தே இருந்தார். ஆகையால் அவனால் தீ வைக்கமுடியவில்லை. பீமர் & புரோசனன் இருவரும் இப்படியே ஆறு மாதங்கள் வரை, ஒருவருக்கொருவர் தூங்கட்டும் என்று காத்திருந்தனர். புரோசனனின் அக்கா வந்தபிறகு, அவர்கள் அனைவரும் தூங்கியபோது, பீமசேனதேவரே அரக்கு மாளிகைக்கு தீ வைத்துவிட்டு, தன் தாய் மற்றும் சகோதரர்களை தூக்கிக்கொண்டு, அங்கிருந்த சுரங்கத்தின் வாயிலாக அங்கிருந்து புறப்பட்டு தப்பினார்.
கே: அரக்கு மாளிகையிலிருந்து பீமர் தப்பித்துச் சென்றால் போதுமானதே. அதற்கு ஏன் அந்தப் பெண் மற்றும் அவரின் வாரிசுகளை கொல்லவேண்டும்?
ப: தான் அதிதி ஆகவேண்டும் என்றும், தன் மக்கள் தேவதைகள் ஆகவேண்டும் என்று அந்தப் பெண் முன்னர் தவம் செய்துவந்தாள். புரோசனனின் அக்காவான இவள் மிகவும் துஷ்டளாகிருந்தாள். இத்தகைய துஷ்டளாக இருந்தவளைக் கொல்வதே பீமசேனதேவரின் கடமையாக இருந்தது.
கே: பீமசேனதேவர் ஹிடிம்பையைத் திருமணம் செய்தது என்ன நியாயம்? இவள் ஒரு நர-பட்சிணி (மனிதர்களை சாப்பிடுபவள்). அசுரர் குலத்தில் பிறந்தவள். இவளை பீமசேனதேவர் திருமணம் செய்தது, பாகவத தர்மத்திற்கு எதிரான செயல்தானே?
ப: ஹிடிம்பை ஒரு சாதாரணமானவள் அல்ல. இந்திரலோகத்தில் ஒரு தேவதையுடன் போட்ட ஒர் போட்டியின்படி, இந்திரனை மயக்க முயன்றபோது, சசிதேவியின் சாபத்தால் இந்த அரக்கியாகப் பிறந்திருக்கிறாள். பாரதிதேவியைக் குறித்து கடுந்தவம் புரிந்து, தன்னில் பாரதிதேவியின் ஆவேசத்தைப் பெற்று, பாரதிபதியின் சங்கமத்தினால் அந்த சாப விமோசனம் ஆகும் என்ற வரத்தைப் பெற்றவள். ஆகையால் இவளை பீமசேனதேவர் மணம் புரிந்ததில், பாகவத தர்மமே ஆகியிருக்கிறது. இதில் தவறு ஏதுமில்லை. மேலும், வேதவியாசதேவரின் ஆணைப்படியே இந்த மணம் நடந்ததால், இதில் பாகவத தர்மத்திற்கு எந்தக் குறையும் வரவில்லை.
கே: ஏகசக்ர நகரத்தில், பீமசேனதேவர் பகனைக் கொன்றார்? யார் இந்த பகன்?
ப: பகனுக்கு ருத்ரதேவரின் வரம் இருந்தது. இந்திராதி தேவர்களையும்கூட இவன் வென்று வந்தான். இவன் ராமாயண காலத்தவன். ராவணனின் தாய்மாமன் கைகசியின் சகோதரன். ஒருமுறை ராமபாணத்தால் அடி வாங்கியவன். ஸ்ரீராமனின் விருப்பப்படியே தற்போது பீமரின் கையால் மரணமடைந்தான்.
கே: அர்ஜுனன் வென்ற திரௌபதியை தானும் சேர்ந்து மணம் புரிந்தது எப்படி சரியாகும்?
ப: திரௌபதியில் பார்வதி, ஷ்யாமலே, பாரதி, சசி, உஷே என்று இவர்கள் அனைவரும் இருக்கின்றனர். அவரில் இருந்த பாரதியை மட்டும் பீமசேனதேவர் மணம் புரிந்தார். இந்திரனின் மனைவியான சசியை அவர் மணக்கவில்லை. இது ஒரு தேவரகசியம்.
கே: பீமசேனதேவரைப் பற்றி அதிக தகவல்கள், மகாபாரதத்தில் எந்த பர்வத்தில் காணக்கிடைக்கிறது?
ப: மொத்த மகாபாரதமுமே பீமசேனதேவரின் பாகவத தர்மம் மற்றும் வீரபராக்ரமங்களைப் பற்றி பேசவுமே பிறந்தது. அதிலும் விராட பர்வம், பீமசேனதேவரின் மகிமைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. உத்யோக பர்வம் ஸ்ரீகிருஷ்ணனின் மகிமைகளைப் பற்றி பேசுகிறது. ஆகையால், விராட பர்வம் மற்றும் உத்யோக பர்வம் இரண்டும், மகாபாரதத்தின் சாரம் ஆகும் என்று ஸ்ரீவேதவியாஸ தேவரே சொல்கிறார்.
கே: பீமசேனதேவர் வைத்திருந்த கதையை யார் அவருக்கு அளித்தது?
ப: இந்திரபிரஸ்தத்தில் மயசபையை நிர்மாணம் செய்த மயனே கொடுத்த கதை அது. வாயுதேவர் வைத்திருந்த கதையை, யௌவனாஷ்வ ராஜனின் அருளால் மயன் பெற்றிருந்தான்.
கே: கிருஷ்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த பீமசேனதேவரிடம், கிருஷ்ணன் எப்படி அன்பு செலுத்தினார்?
ப: இதற்கு ஒரு சுவாரசியமான சம்பவம் உள்ளது. ஜராசந்தனின் வீட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பத்தில், பீம அர்ஜுனர்களை அனுப்புவதற்கு தர்மராஜன் மறுக்கிறார். அப்போது கிருஷ்ணன் சொல்லும் விஷயம் மிகவும் அருமையானது.
யதி மே ஹ்ருதயம் வேத்ஸி யதி தே ப்ரத்யயோ மயி |
பீமார்ஜுனாவுபௌ ஷீக்ரம் ந்யாஸபூதௌ ப்ரதேஹி மே ||
என் மனதை நீ புரிந்துகொண்டிருந்தால், பீமன் மற்றும் அர்ஜுனரை என்னுடன் அனுப்பு. அவர்களுக்கு எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு. முடியாது என்றால் சொல், இப்போதே நான் புறப்பட்டுவிடுகிறேன். அப்போது தர்மராஜன், ‘யதா வதஸி கோவிந்தா’ (நீ எப்படி சொல்கிறாயோ, கோவிந்தா, அப்படியே ஆகட்டும்) என்று ஒப்புக்கொள்கிறான்.
கே: ஜராசந்தனை பீமசேனதேவரை பலமுறை அவனது உடலை பிய்த்துக் கொன்றபோதும், அவனது உடல் மறுபடி சேர்ந்துகொண்டது. அப்போது, ஸ்ரீகிருஷ்ணனின் யோசனையின்படி அவனது உடலை இரண்டாகக் கிழித்து, தலைகால் மாறிப் போட்டபோது, அவை ஒன்று சேரவில்லை. இது சரியா?
ப: இந்த கதைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஜராசந்தனுக்கு பிரம்மதேவர் சாகாவரம் அளித்திருந்தார். அந்த வரத்தை மதிக்கவேண்டி அவனுடன் 15 நாட்களுக்கு போர் புரிந்தார் பீமர். ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதைப்போல் அவனைக் கொன்றார். முதலில் ஞானயுத்தம் செய்து, பின்னர் உடல் பலத்தைப் பயன்படுத்தி, பின் அவனைக் கொன்றார். கதாயுதத்தினால் போர் புரிந்து, பின் மல்யுத்தம் செய்தனர். ஜரா எப்படி அவனின் உடலை சேர்த்தாளோ, அதே போல் இரு பாகங்களாக பீமர் அவனின் உடலை பிய்த்து எறிந்தார்.
கே: ராஜசூயா யாகத்திற்கு தயாராகும்போது, பீமசேனதேவர் தேவதைகளுடன் போர் புரிந்தார். தேவதைகள் பீமருடன் போர் புரிந்தனர் என்றெல்லாம் மகாபாரதத்தில் இருக்கிறது. இது சரியா? தேவதைகளுக்கு பிராணதத்வத்தை போதித்த பீமசேனதேவர், அவர்களுக்கெல்லாம் குருவாக இருந்தபோது, இந்த யுத்தம் எப்படி சாத்தியம்?
ப: இந்த கதை மகாபாரதத்தில் இருப்பது நிஜம். ஆனால் தேவதைகள் நிஜமான உணர்வுடன் போர் புரியவில்லை. பீமசேனதேவரின் அதிகமான பலத்தை உலகத்திற்குக் காட்டுவதற்காக தேவதைகள் செய்த நாடகமே இது. கருட-சேஷர் போர் புரிந்தனர். பின் அனைத்து தேவதைகளும் தோற்றுப்போய் ராஜசுயா யாகத்திற்கு மரியாதை செலுத்தி அவரை வழியனுப்பினர். இதிலிருந்து, ராஜசுயா யாகம் செய்வதற்கு வாயுதேவருக்கு மட்டுமே சாத்தியம் என்று தெரியப்படுத்தினர்.
கே: தர்மராஜன், திரௌபதியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோற்றபோது, அங்கேயே இருந்த பீமசேனதேவர் அவருக்கு அறிவுரை கூறவில்லையா?
ப: பீமசேனதேவரிடம் அறிவுரை / யோசனை கேட்காமலேயே, தர்மராஜன் திரௌபதியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோற்றார். ஆனால், பிறகு பீமசேனதேவர், அண்ணனை திட்டினார். திரௌபதியை பணயத்தில் வைத்ததற்கு உனக்கு மன்னிப்பே கிடையாது. இந்த தவறைச் செய்ததற்கு உன் கைகளையே தீயிலிட்டு பொசுக்கிவிடுவேன். ஹே சகதேவனே. நெருப்பு கொண்டுவா என்று உறுமினார். உத்தமர்கள் தவறு செய்தால் அவர்களை பேச்சிலேயே தண்டிக்கவேண்டும் என்ற நீதியை உலகிற்கு தெரியப்படுத்தினார். உத்தமர்கள் தவறு செய்தால், அவர்கள் பெரியவர்களே ஆகியிருந்தாலும், அமைதியாக அமர்ந்திருப்பது தர்மம் அல்ல.
கே: திரௌபதியை மிகவும் அவமானப்படுத்திய துரியோதனாதிகளை அன்றே கொன்றிருக்க வேண்டுமல்லவா?
ப: ஸ்ரீகிருஷ்ணனின் எண்ணத்தின்படியே நடப்பது பீமசேனதேவரின் பாகவததர்மம். துரியோதனாதிகளின் பாவமூட்டை அதிகரிக்கவேண்டும் என்பதற்காகவே, அவர்கள் திரௌபதியை அவமானப்படுத்தும் காட்சியே நடந்தது. அதற்காகவே, அவர்களை அன்றே கொல்ல முடிந்திருந்தாலும் பீமசேனதேவர் கொல்லவில்லை.
கே: திரௌபதியை மட்டுமாவது காப்பாற்றி இருக்கலாம் அல்லவா?
ப: திரௌபதிதேவிக்கு அநியாயம் நடந்தபோது மறைந்திருந்து அவளைக் காத்தவர் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா; அங்கிருந்தே காத்தவர் பீமசேனதேவர். அங்கே இருந்த துரியோதனாதிகளை அச்சுறுத்தி, அநியாயத்துக்கு எதிராக சூளுரைக்க யாருக்கும் தகுதியில்லாதபோது, பீமசேனதேவர் ஒருவரே கர்ஜித்தார். துரியோதனனின் தொடையை கிழிப்பேன், துச்சாதனனின் இதயத்தைக் கிழிப்பேன் என்று சபதம் செய்தார்.
கே: மகாபாரதப் போரின் முடிவில், துரியோதனின் தலையை பீமசேனதேவர் தன் காலைக் கொண்டு நசுக்குகிறார். ஒரு அரசனை இப்படி அவமானம் செய்யலாமா?
ப: திரௌபதி வஸ்த்ராபரண சமயத்தில் துரியோதனன் செய்த அவச்செயலுக்கான தண்டனையே இது. அவன் திரௌபதியை, பாண்டவர்களை மற்றும் இறுதியில் ஸ்ரீகிருஷ்ணனையும் அவமானம் செய்திருந்தான். ’நிம்ம ஸ்னேஹிதனாத கிருஷ்ணனன்னு பணக்கிட்டு பிடி’ (உங்கள் நண்பரான ஸ்ரீகிருஷ்ணரையும் பணயத்தில் வைத்துவிடுங்கள்) என்று கேலி பேசினான். அப்போதே பீமசேனதேவரின் கோபம் தலைக்கேறியது. எந்த வாயினால் ஸ்ரீகிருஷ்ணனை கேலி பேசினாயோ, அந்த வாயை என் இடது காலினால் நசுக்கி வீசுகிறேன் என்று சபதம் செய்திருந்தார்.
கே: பீமசேனதேவர் காட்டிற்குப் போவதற்கு என்ன காரணம்?
ப: அசுரர்களைக் கொல்வதற்கு ஸ்ரீராமன் எப்படி வனவாசம் போனாரோ, அதே காரணத்திற்காகவே பீமசேனதேவரும் காட்டிற்குப் போனார்.
கே: பீமசேனதேவர் காட்டில் முதன்முதலில் கொன்றது கிர்மீரன் என்பவனை. இவன் யார்?
ப: காட்டிற்கு வந்த மூன்றாவது நாளிலேயே கிர்மீரனைக் கொன்றார். இவன் பகனின் தம்பி. மற்றும் ஹிடிம்பனின் நண்பன்.
கே: வனவாச காலத்தில் பாண்டவர்கள் எங்கெங்கு சென்றனர்?
ப: பதரிகாஸ்ரமத்திலிருந்து துவங்கி, கன்யாகுமரி வரை இருக்கும் காடுகளில் சுற்றினர். பாஜக அருகில் இருக்கும் பாஷாண தீர்த்தத்திற்கும் வந்தார்கள் என்று சொல்கிறார்கள். தென்னிந்தியாவில் சுற்றியதற்கான ஆதாரம் மகாபாரத்தில் இருக்கிறது.
கே: கருடனின் இறக்கையிலிருந்து வந்த காற்றிற்கு பறந்து வந்த சௌகந்திகா புஷ்பத்தை கொண்டுவருவதற்கு பீமன் புறப்பட்டது குழந்தைத்தனமாக இல்லையா?
ப: வாயுதேவரின் சக்தியை வெளிக்காட்டுவதற்காக நடத்தப்பட்ட ஒரு நாடகமே இந்த சம்பவம். இதன் மூலம் பல லட்ச அசுரர்களை கொல்லவேண்டியதாக இருக்கிறது. இந்த விஷயம் திரௌபதிக்கும் தெரிந்திருந்தது. ஆகவே இது ஒரு நாடகம் என்று அறியவேண்டும்.
கே: வழியில் ஹனுமந்தரின் வாலினை தூக்கமுடியாத சம்பவம். என் வாலினை தூக்கு என்று சொல்வது இதெல்லாம் புத்திசாலித்தனமான செயல்களா?
ப: ’இதொந்து மூர்க்கதன என்ப பாவனெ துஷ்டரிகெ மூடலி’ (இது ஒரு முட்டாள்தனமான நாடகம் என்று நினைப்பு துஷ்டர்களுக்கு வரட்டும்) என்று சொன்னதைப்போல் இது ஒரு விளையாட்டே. ஹனுமந்தரும் பீமசேனதேவரும் வேறுவேறு அல்ல. இப்படிச் செய்வது வெறும் விளையாட்டு என்கிற அறிவு சஜ்ஜனர்களுக்கு வரட்டும் என்பதற்காக செய்ததாகும்.
கே: சௌகந்திகா புஷ்பத்தைக் கொண்டு வரப்போனபோது, குபேரனின் உதவியாளர்கள் பீமசேனதேவரை வழிமறித்தனர். இவரை ஒரு அசுரர் என்று எப்படி நினைத்தனர்?
ப: குபேரனின் உதவியாளர்கள் கோபத்திற்கு அடிமையானவர்கள் என்று பெயர். இவர்கள் அனைவரும் துஷ்டர்கள் ஆவர். லட்சக்கணக்கான இத்தகையவர்கள் அங்கு வசித்திருந்தனர். இவர்கள் அனைவரையும் கொன்று, பீமசேனதேவர் சௌகந்திகா புஷ்பத்தை திரௌபதிக்குக் கொண்டு வந்து கொடுத்தார்.
கே: அந்த புஷ்பத்தை கொண்டு வருவதற்கு இரு முறை போனார் என்று சொல்கிறார்களே. இது சரியா?
ப: ஜடாசுரனின் கதையை மகாபாரதம் சொல்கிறது. அப்போது இன்னொரு முறை புஷ்பத்தைக் கொண்டு வருவதற்கான சம்பவம் அங்கும் வருகிறது. முதல்முறை போனபோது, லட்சக்கணக்கான அசுரர்களைக் கொன்றார். இரண்டாம் முறை சென்றபோது, பத்மத்ரய எண்ணிக்கையில் அசுரர்களைக் கொன்றார். இரண்டாம் முறை போனபோது கொன்றவர்களில் முக்கியமானவன் மணிமந்தன். இவனிடம் வாக்குவாதம் செய்து பிறகு அவனுடன் போர் புரிந்தார்.
கே: பத்மத்ரய என்றால்?
ப: ஒரு பத்மம் என்றால், ஆயிரம் x கோடி. அப்படி பெருக்கினால் வருவதை பத்மம் என்று அழைக்கின்றனர். இப்படியாக மூன்று மடங்கு = பத்மத்ரய. இது கற்பனைக்கும் எட்டாத எண்ணிக்கை ஆகும்.
கே: அப்படியென்றால், 18 அக்ஷோஹிணி சைன்யத்துடன் போர் புரிந்தது ஒரு பெரிய விஷயமே இல்லை, அல்லவா?
ப: ஆம். இந்த அசுரர்களை கொல்வதற்கு முன், அவர்களுடன் வாக்குவாதம் செய்து, பிறகு நான்கு வித ஆயுதங்களாலும், பிறகு மல்யுத்தமும் செய்து அவர்களைக் கொன்றார். இவ்வளவு பெரிய சைன்யத்தைக் கொன்றது, இதிகாசத்தில் வேறெங்கும் கேட்டிராத செய்தி.
கே: பீமசேனதேவர், தனது ஞானகாரியங்களைக் காட்டியதைவிட, தனது உடல் பலத்தைக் காட்டிய சம்பவங்களே அதிகம் அல்லவா?
ப: அப்படியில்லை. அவரது ஞானகாரியங்களே அதிகம் என்று சொன்னாலும் அது தப்பில்லை. ஏனென்றால், வனவாச சமயத்தில் 80,000 ரிஷிகளுக்கு, 10,000 முனிவர்களுக்கு மற்றும் ஒவ்வொருவருக்கும் 300 உதவியாளர்கள் என இந்த அனைவருக்கும் பீமசேனதேவரே பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். இதைவிட பெரிய ஞானகாரியத்திற்கான உதாரணம் வேறென்ன வேண்டும்? அதுமட்டுமல்லாமல், ஜராசந்தன், மணிமந்தன் முதலான அசுரர்களைக் கொல்வதற்கு முன்னரும், அவர்களுடன் வாக்குவாதம் செய்து, விஷ்ணு சர்வோத்தமத்வத்தை நிர்ணயம் செய்து அவர்களை வென்றார்.
கே: அவ்வளவு ரிஷிமுனிவர்களுக்கிடையே யாரும் தகுதியற்றவர் இருந்தனரா?
ப: வைதிகரின் வேடம் பூண்டு, ரிஷிமுனிவர்களிடையே அமர்ந்து ஒருவன் பாடம் கேட்டு வந்தான். அவனே ஜடாசுரன். கற்றறிந்த அறிஞர் போல் திரிந்து வந்தான். ஒருமுறை திரௌபதியையே தூக்கிக் கொண்டு போக முயற்சித்தான்.
கே: பீமசேனதேவருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்ததா?
ப: பீமசேனதேவருக்கு அனைத்தும் தெரிந்திருந்தது. ஆனால், திரௌபதியை கொண்டு போகும் சமயத்திலேயே அவனைக் கொல்லவேண்டும் என்று தீர்மானித்து அமைதியாக இருந்தார். வெறும் கைகளாலேயே அவன் கழுத்தை நெறித்தார். அப்போது பாண்டவர்களின் வனவாசத்தில் ஆறு ஆண்டுகள் முடிந்திருந்தது.
கே: ஜயத்ரதனும்கூட திரௌபதியை அபகரித்துக் கொண்டு போனான் என்கிறார்கள். இது எப்போது நடந்தது? ஜயத்ரதன் யார்?
ப: துரியோதனனின் ஒரே தங்கையான துச்சலையின் கணவனே ஜயத்ரதன். சிவதேசத்தின் இளவரசனான கோடிகாஸ்யன் இவனது நண்பன். இவர்கள் இருவரும் சேர்ந்து திரௌபதியை அபகரித்தனர். அப்போது பீமசேனதேவர் ஜயத்ரதனை கொல்லவில்லை. அவனை வென்று, கத்தியினால் அவன் தலையிலிருந்த கூந்தலை கத்தரித்தார். திரௌபதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு செய்தார். இதனால் அவமானமடைந்த ஜயத்ரதன், சிவனைக் குறித்து தவம் செய்து, அர்ஜுனனைத் தவிர மற்ற பாண்டவர்களை ஒரே ஒரு நாள் போரில் தடுத்து நிறுத்துவதற்கான சக்தியை வரமாக அளித்தார்.
கே: யட்ச-பிரஸ்ன சமயத்தில் பீமசேனதேவருக்கும் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. இது ஏன்?
ப: இதில் இன்னொரு மர்மம் இருக்கிறது. உனது கல்வியை வெளிக்காட்டினால் பிழைப்பாய். இல்லையெனில் மரிப்பாய் என்று யட்சன் சொன்னபோது, என் பிழைப்பிற்காக கல்வியை பயன்படுத்தமாட்டேன் என்னும் பாகவத தர்மத்தை பீமசேனதேவர் பதிலளித்தார்.
கே: அப்படியிருந்தும் இறக்கவேண்டியிருந்ததே? பதில் அளிக்காமல் அப்படியே பிழைத்திருக்கலாமே?
ப: ஆம். இறக்கவில்லை. இது ஒரு தேவ-மாயை என்று தெரிந்து, ஒரு நொடியில் தூங்குவதைப் போல நடித்தார். அது பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் துவங்கும் நேரம். அதற்காக பாண்டவர்களுக்கு வரம் அளிப்பதற்காக யட்சன் நடத்திய நாடகம் இது. ஒரு நாழிகைக்கு மட்டும், யட்சனுக்கு வரம் அளிக்கும் சக்தி வந்தது.
கே: கீசகன், திரௌபதியின் புடவையை இழுத்து அவமானப்படுத்தியபோது, திரௌபதி ஓடி வந்து ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அரசவையில் கதறினார். பீமசேனதேவரும் அங்கேயே இருந்தார். அந்த நொடியிலேயே அவர் கீசகனை கொன்றிருக்க முடியும். ஆனால், அப்படி செய்தால், அஞ்ஞாத வாசம் முடிந்துவிடும் என்பதாலேயே அவர் அப்படிச் செய்யவில்லை. இது சரியா?
ப: பீமசேனதேவர் தன் அண்ணனாகிய தர்மருக்கு எதிராக எதையும் செய்பவரில்லை. சபையில் கீசகனை கொல்லக்கூடாதென்று தர்மர் சொன்னதாலேயே, பீமசேனதேவர் அமைதியாக இருந்தார். இல்லையென்றால் அந்த நொடியே அவர் கீசகனை கொன்றிருப்பார்.
கே: அப்படியென்றால் அடுத்த நாள் கீசகனை ஏன் கொன்றார்?
ப: சபையில் கீசகனை கொல்லவேண்டாம் என்று தர்மர் சொல்லியிருந்தார். மறுநாள் யாருக்கும் தெரியாமல் கீசகனை கொன்றார். ஆகையால் அண்ணனுக்கு எதிராக நடந்தது போல ஆகவில்லை. அதுமட்டுமல்லாமல் ‘விஷமாலோட்ய பாஸ்யாமி’ - கீசகனை கொல்லவில்லையென்றால் நான் விஷம் அருந்திவிடுவேன் என்று திரௌபதி சபதம் போட்டதால், கீசகனை உடனே கொல்லவேண்டியது அவசியமானது.
கே: கீசகனை கொல்லும்போது பீமர் சேலை உடுத்தியிருந்தார் என்கிறார்கள். அது எதற்கு?
ப: கீசகனை கொல்லும்போது பீமசேனதேவர் சேலை உடுத்தியிருந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அது மூல மகாபாரதத்திலும் இல்லை. வேடம் போட்டிருந்தார் என்று இருக்கிறது அவ்வளவே. அது சமையல்காரர் வேடத்தை விட்டு, கந்தர்வனாக வேடமணிந்தும் போயிருக்கலாம். சேலை அணிந்திருந்தாலும் அது கீசகனுக்கு பயந்து அல்ல. விரோதமே காரணம்.
கே: மகாபாரதப் போரில் பதினோரு அக்ஷோஹிணி சைன்யத்தில், பீமசேனதேவர் கொன்றது எவ்வளவு பேரை?
ப: பதினோறு அக்ஷோஹிணியில் ஆறு அக்ஷோஹிணி சைன்யத்தை பீமசேனதேவரே கொன்றார்.
கே: துரியோதனனுடன் போர் புரிந்தது போரின் இறுதி நாளில்தானே?
ப: 15 நாட்கள் வரை நடந்த போரில், துரியோதனன் மற்றும் பீமசேனதேவர் இருவரும் பலமுறை நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். முதல் நாளில் போர் துவங்கியதே இவர்கள் இருவருக்கும்தான். அப்போது பீஷ்மர் இவர்களை பிரித்து, தான் நடுவில் புகுந்து போர் புரிந்தார். அதனால் அன்று துரியோதனன் தப்பித்தான். ஆறாவது நாள் ‘அயம் ஸகாலம் ஸம்ப்ராப்த:’ - ’இவ்வளவு நாள் காத்திருந்த நேரம் இப்போது வந்திருக்கிறது. வா, துரியோதனனே, உன் கதையை இன்றே முடித்துவிடுகிறேன்’ என்று தன் கையால் பீமசேனதேவர் ஒரு குத்து விட்டார். துரியோதனன் கீழே விழுந்தான். க்ருபாசார்யர் முதலானவர்கள், துரியோதனனை ரதத்தில் ஏற்றி, தங்கள் இருப்பிடத்திற்குக் கொண்டு வந்து அவனை காப்பாற்றினர்.
கே: இறுதியில் துரியோதனனைக் கொன்றது எப்படி? தொடையில் அடித்தனர் என்று சிலரும், அடிக்கவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். எது சரி?
ப: பலராமன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பீமசேனதேவருக்கும் துரியோதனனுக்கும் போர் துவங்கியது. இடுப்பிற்குக் கீழ் கதாயுதம் உபயோகிக்கக்கூடாது என்பது போரின் விதி. அதன்படியே பீமசேனதேவர் துரியோதனின் தொடையில் அடிக்கவில்லை. ஆனாலும்கூட அவன் தொடையினை முறித்தார். முதுகுத்தண்டின் கீழ்ப்பாகத்தில் இருக்கும் நரம்பில், இரு கால்களின் நரம்புகளும் வந்து சேர்கின்றன. அந்த இடத்தில் சரியாக அடித்தால், அது தொடைகளுக்கும், கால்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்த பீமசேனதேவர் சரியாக அங்கேயே தன் கதையால் அடித்தார். இதனால் துரியோதனனின் இரு தொடைகளும் முறிந்தன.
கே: ஆனால், துரியோதனின் தொடைகளை முறித்தது தவறு என்று பலராமன் கோபப்பட்டாரா?
ப: பலராமனுக்கு கடைசி வரை சந்தேகம் இருந்து வந்தது. கிருஷ்ணனும் அதற்குத் தக்கவாறு பேசினார். ‘ஷடே ஷாட்யம் ஸமாசரேத்’. பொய்க்கு பொய்யே சரி. மோசத்திற்கு மோசமே பதில் என்று பதில் அளித்தார். பீமசேனதேவரும் மேலே சொன்னதைப்போல, முன்பு போட்ட சபதத்தின்படி, துரியோதனனின் தொடையை முறித்தார்.
கே: இது அண்ணனான பலராமனுக்கு கிருஷ்ணன் செய்த அநியாயமல்லவா?
ப: லட்சுமணனாக ஸ்ரீராமனுக்கு செய்த அதிக புண்ணியத்தை இதன் மூலம் சரிசெய்து கொண்டார், ஸ்ரீகிருஷ்ணன்.
கே: ‘ஜரடஸ்ய ஸுதா ஹதா:’. இதே என் தோள்களினால் இந்த கிழவனின் மகன்களை நான் கொன்றேன் என்று சொல்லி பீமசேனதேவர், திருதராஷ்டிரனை இகழ்ந்தார். தன் பெரியப்பாவிற்கு பீமர் செய்த அவமானம்தானே இது?
ப: இந்தக் கேள்விக்கு விதுரன் பதிலளிக்கிறார். ‘ஷுத்தே பாகவதே தர்மே நிரதோ யத் வ்ருகோதர:’ நிஜமான பாகவத தர்மத்தைப் பின்பற்றுபவரான விருகோதரனுக்கு, இனிமேலாவது திருதராஷ்டிரன் ஸ்ரீஹரியிடம் பக்தி செலுத்தட்டும் என்னும் முக்கிய சிந்தனை இருந்தது. ஆகவே இப்படி இகழ்ந்தார். பீமசேனதேவரின் பேச்சைக் கேட்டு, திருதராஷ்டிரன் தவம் செய்யப் புறப்பட்டார்.
கே: பீமசேனதேவரை பூஜிக்க வேண்டுமெனில் பெண்கள் எந்த ஸ்தோத்திரங்களை சொல்லவேண்டும்?
ப: ’திரௌபதி ரமண விஞ்ஞாபிசுவே நின்னடிகெ தாபத்ரயகள பய ஷோக பரிஹரிஸி ஸ்ரீபதிய த்யான ஸுகவீயோ’
ஏ பீமசேனதேவனே. உன் சரணாரவிந்தங்களில் பக்தியுடன் வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். ஆத்யாத்மிக, ஆதிதைவிக, ஆதிபௌதிக என்ற மூன்று தாபங்களை தீர்க்கவேண்டும். பயம், சோகம், துக்கங்களை தீர்ப்பாயாக. ஸ்ரீஹரியின் தியானரூபமான சுகத்தை எனக்கு அளித்து எப்போதும் எனைக் காப்பாயாக.
கே: பீமசேனதேவரை பூஜிக்க வேண்டுமெனில் ஆண்கள் எந்த ஸ்தோத்திரங்களை சொல்லவேண்டும்?
ப: ‘பக்திர்ஞானம் ஸவைராக்யம் ப்ரக்ஞா மேதா த்ருதிஸ்திதி: |
யோக: ப்ராணோ பலம் சைவ விருகோதர இதி ஸ்ம்ருத: ||
பக்தி, ஞானம் (தத்வஞானம்), வைராக்கியம், ப்ரக்ஞா (வேகமாக எந்த விஷயத்தையும் கிரகிக்கும் திறன்), மேதா (நினைவுத் திறன்), த்ருதி (தைரியம்), ஸ்திதி (அசையாத நம்பிக்கை), யோக, பிராண (உயிர் சக்தி), பல (உடற்சக்தி) என்று இந்த பத்து குணங்களைக் கொண்டவரே பீமசேனதேவர். பிரம்மஞானிகளில் உத்தமமான வாயுதத்வமே பீமசேனதேவர். இத்தகைய பீமசேனதேவரைப் பற்றி தெரிந்துகொள்வது நமது கடமை. ஹனும-பீம-மத்வ என்ற இந்த மூன்று ரூபங்களைப் பற்றி சரியாக தெரிந்துகொள்ளாதவன், நிஜமான ஹரிபக்தன் என்று சொல்லிக்கொள்வது சாத்தியமில்லை. ஆகையால், பீமசேனதேவரைப் பற்றிய விஷயங்களில் உள்ள பல குழப்பங்களை தீர்த்துக்கொண்டு, அவரைப் பற்றி உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.
கே: துச்சாதனனை பீமசேனதேவர் கொன்றது எப்படி என்னும் சிறு கதையை சொல்லவும்.
ப: துச்சாதனனை பீமசேனதேவர் கொன்ற கதையை வர்ணிப்பது சாத்தியமே இல்லை. அந்த பெரிய போர்க்களத்தில், ஆகாயமே இடிந்து வீழ்வது போல பீமர் கர்ஜித்தார். பாஞ்சாலி கையைப் பிடித்து இழுத்த உன்னைக் கொல்லும் காலம் இப்போது வந்துள்ளது. ஏ பாபி துச்சாதனனே, இங்கே வா! என்று உறுமினார். நூறு கருப்பு மேகங்கள் ஒன்று சேர்ந்து சத்தம் உருவாக்கியதைப் போல, பீமசேனர் உறுமியது மிகவும் பயங்கரமாக இருந்தது. மொத்த கௌரவ, பாண்டவ குலமே இவரின் கம்பீர கர்ஜனையைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றது. யாருக்கும் கண் தெரியவில்லை. பிரமை பிடித்தாற்போல் நின்றனர். எதிரிகள் எதிரிலேயே இருந்தாலும், அவர்களைத் தாக்கவேண்டுமென்று யாருக்கும் தோன்றவில்லை.
ஏ துச்சாதனனே, சிக்கினாயா? என்று கைதட்டியவாறு காலினால் பூமியில் இடித்தால், மொத்த பூமண்டலமே நடுங்கிற்று. அங்கிருந்த யானை, குதிரைகள்கூட மூர்ச்சை ஆயின. இதே மாதிரி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, துச்சாதனனை நெருங்கினார் பீமசேனதேவர். நொடியில் அவனை கீழே தள்ளி, கதாயுதத்தால் தாக்கத் துவங்கினார். அவன் கழுத்தில் தன் கால்களை வைத்து அழுத்தி, வயிற்றின் மேல் அமர்ந்து, மிகுந்த கோபத்துடன் அவனை நோக்கி, ஆகாயத்தைப் போல் நீலமாக இருந்த வாளை அதன் உறையிலிருந்து எடுத்து அவன் இதயத்தில் அதை சொருகினார். அவன் இதயத்திலிருந்து பொங்கி வந்த ரத்தத்தை, எடுத்து பருகலானார். இப்படியாக அவன் முன்னர் செய்த கெட்ட செயல்களை அவன் நினைவுக்குக் கொண்டு வந்தார்.
மனிதனின் ரத்தத்தைக் குடிக்கக்கூடாதென்று, பீமசேனதேவருக்கு தெரிந்திருந்ததால் அந்த ரத்தமானது அவரது பற்களைத் தாண்டி உள்ளே போகவில்லை. ஆனாலும், எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக அந்த ரத்தத்தை மறுபடி மறுபடி தன் கைகளால் எடுத்து குடிப்பதுபோல் நடித்தார். உலகத்தைக் காப்பாற்றுபவனான நரசிம்மரை மனதில் நினைத்தவாறு மன்யுசூக்தத்தை சொல்லத் துவங்கினார். மன்யு நாமக நரசிம்மரை ‘யஸ்தே மன்யோ’ என்ற சூக்தத்தினால் புகழ்ந்து, ரத்தம் என்னும் சோமரசத்தை யுத்த-யக்ஞத்தில் சமர்ப்பித்தார். ’இஹ’ என்னும் சாம-மந்திரத்தினால் அவன் இதயத்தை தன் கதையினால் பிளந்தார். ஜீவோத்தமரான பீமசேனதேவர், முன்னர் தான் செய்த சபதத்தை நிறைவேற்றி பின் இவ்வாறு கூறினார் - ”எந்த பெண்கள் முன்னர் கணவருடன் இருந்தனரோ, அவர்களுக்கு இன்று கணவர் இல்லை (கௌரவர்களின் மனைவிகள்). யாருக்கு முன்னர் கணவர் இல்லையோ, அவர்களுக்கு இன்று கணவர் இருக்கின்றனர் (திரௌபதி). சர்வோத்தமனின் அபாரமான சக்தியை பாருங்கள்”.
”நான் இப்போது துச்சாதனனை பிடித்துக்கொண்டிருக்கிறேன். இங்கு ஆண் என்று யாரும் இருந்தால் வந்து இவரை காப்பாற்றவும்”. இப்படி சொல்லியவாறு, ஸ்வர்க்க லோகத்தில் தேவேந்திரன் அமிர்தத்தைக் குடித்ததுபோல, பீமசேனதேவர் மறுபடி மறுபடி ரத்தத்தைக் குடிக்கலானார். உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் துச்சாதனனை விட்டு, எதிரிகளின் நடுவே போய் குதிக்கத் தொடங்கினார்.
இப்படி சொல்லியவாறு, எதிரிகளின் நடுவே தொடைகளைத் தட்டி குதித்தாடியவாறு, அவர்களை போருக்கு அழைத்தார். கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன் என்று யாருக்கும் பீமசேனதேவரை கண்ணெடுத்துப் பார்ப்பதற்கும் சக்தி இருந்திருக்கவில்லை. கர்ணனின் வில் பயத்தில் கீழே விழுந்தது. அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். சைல்யன் அவனை எச்சரித்ததும், அர்ஜுனனிடம் போகுமாறு சொல்லி போர் செய்யத் தயாராக நின்றான். அஸ்வத்தாமன் பீமசேனதேவர் இருந்த பக்கமே போகாமல் தூரத்தில் நின்றார். அப்போது பீமசேனதேவர் கூறினார் - ”யுத்த-யக்ஞத்தில் சோமபானம் குடித்திருக்கிறேன். இன்னும் துரியோதனன் என்னும் பசுவை இந்த யக்ஞத்தில் நான் கொல்லவேண்டும்” இப்படி சொல்லி, இறந்துவிட்ட துச்சாதனனை விட்டு, பயங்கர கோபத்தில் துரியோதனனை நோக்கி நடக்கலானார்.
பீமசேனதேவர் வருவதைக் கண்ட துரியோதனன் மிகவும் பயந்து அங்கிருந்து விலகி ஓடினான். கிருஷ்ண & அர்ஜுனனைத் தவிர, இரு சைன்யர் முழுவதும் பீமசேனதேவரைக் கண்டு பயந்து ஒதுங்கியது. ஒரு முகூர்த்த நேரத்திற்கு போர்க்களம் காலியாக இருந்தது. பீமசேனதேவர் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி ஒரு புலியைப் போல தாவத் துவங்கினார். எதிரிகள் பசுக்கள் போலவும் தான் ஒரு புலியைப் போலவும் நினைத்து, அவர்களை வேட்டையாடத் தயாரானதைக் கண்ட கிருஷ்ணன் நகைத்தார். அர்ஜுனனும் சிரித்தான். இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பீமசேனதேவரை புகழ்ந்தனர்.
கே: அர்ஜுனன் முதலானோர் வீழ்ந்தபோது பீமசேனதேவரும் வீழ்ந்ததாக மகாபாரதம் சொல்கிறது. அப்படியென்றால், மற்றவர்களைப் போல, பீமசேனதேவரும் இறந்தார் அல்லவா?
ப: பீமனாகப் பிறந்த தேகத்துடன், திவ்யலோகத்திற்குப் போவதற்கு பீமசேனதேவர் விரும்பவில்லை. வந்த வேலை முடிந்தபோது அந்தந்த தேகத்தை துறப்பது சாஸ்திரங்கள் ஒப்பும் விஷயமே. அதைப்போலவே, பீமசேனதேவரும் தன் தேகத்தைத் துறந்தார். வாயுதேவரின் எந்த அம்சமானது, பீமனாக அவதரித்ததோ, அதே அம்சம் மத்வாசாரியராக அவதரித்தது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment