9/12 சரஸ்வதி தேவி
ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
கேள்வி: தன் தந்தையையே மணந்துகொண்டவர் சரஸ்வதி. இது எப்படி சரியாகும்?
பதில்: சரஸ்வதி என்றதுமே பலருக்கு எழும் கேள்வி இதுவே. மேலும் இந்தக் கேள்வியைத் தவிர, சரஸ்வதியின் மகிமைகள் பற்றியும் யாருக்கும் தெரிவதில்லை. அவர் தன் தந்தையை மணம் புரியவில்லை. அவர் நான்முகப் பிரம்மனின் அனாதி-பத்னியாக (எல்லா காலங்களில் இவரே அவரின் மனைவி) இருக்கிறார் என்று பிரம்மனின் கதையைப் பார்க்கும்போது கவனித்தோம். அதையே மறுபடி இங்கே பார்க்கவேண்டுமென்றால், அரைத்த மாவையே மறுபடி அரைத்தது போலாகும்.
கே: தன்னிடமிருந்தே என்னைப் பிறப்பித்து, என்னையே மணம் செய்துகொண்டிருக்கிறாரே என்று சரஸ்வதி நான்முகப் பிரம்மனைக் குறித்து ஆச்சரியப்படுகிறாரே? இந்த விஷயம் ‘கதம் நு மா ஆத்மன ஏவ ஜனயித்வா ஸம்பவதி, ஹந்த திரோSஸானி’ என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் இது மற்றவர்களுக்கு வந்த சந்தேகம் இல்லை. சரஸ்வதிதேவிக்கே வந்த சந்தேகம் இது. இதற்கு என்ன பதில்?
ப: சரஸ்வதியானவர் பரசுக்லத்ரயரில் ஒருவராக இருப்பதால், அஞ்ஞானம், விபரீதஞானம், பயம் ஆகிய எந்த தோஷமும் இவருக்கு இல்லை. ஆனால் ஒரு முறை நான்முகப் பிரம்மனிடத்தில் இந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். ஏனென்றால் இவருக்கு இரண்டு நோக்கங்கள். பெண்களுக்கே உண்டான வெட்கத்தை வெளிப்படுத்தினார். அப்படியே பயத்தையும் காட்டினார். இவரிடமிருந்தே வெட்கம் மற்றும் பயம் இரண்டும் பிறந்தன. துஷ்டர்களுக்கு இவரைப் பற்றிய உண்மையான அறிவு பிறக்கக்கூடாது என்பதே இவரது இரண்டாவது நோக்கம்.
கே: நான்முகனிடமிருந்து சரஸ்வதி எப்படி பிறந்தார்?
ப: பிருஹதாரண்ய உபநிஷத்தில் சொல்லியிருப்பதைப் போல, அர்த்தநாரீஸ்வர ரூபத்தைப் போல, நான்முகனின் பாதி உடலே சரஸ்வதியின் உடலாக இருக்கிறது. இத்தகைய சரஸ்வதியை பிரம்மன் மணந்து, அனைத்து தேவதைகளையும் படைத்தார்.
கே: ஆண் மற்றும் பெண் கூடினால் வாரிசு உண்டாகும் என்பது நான்முகன் - சரஸ்வதி இவர்களிடமிருந்தே தோன்றியது அல்லவா?
ப: ஆம். முக்கியமாக ஸ்வாயம்புவ மனு மற்றும் ஷதரூபாதேவிகள் பிறந்ததே, நான்முகன் - சரஸ்வதி இவர்களின் சங்கமத்தில்தான். இதிலிருந்தே ஆண்-பெண் கூடினால் வாரிசு மற்றும் குடும்பம் என்னும் முறைகள் வந்தன.
கே: பிரம்மனின் உடலிலிருந்தே சரஸ்வதி பிறந்தார் என்றால், சரஸ்வதி வாக்-இந்திரியத்திலிருந்து பிறந்தார் என்று சிலர் சொல்கின்றரே?
ப: இது தவறல்ல. இதைப் பற்றி பாகவதத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஹ்ருதி காமோ ப்ருவோ: க்ரோதோ லோபஸ்சாதரதஸ்ச தாத் |
ஆஸ்யத்வாக் ஸிந்தபோ மேட்ரா நிர்ருதி: பாயோரகாஷ்ரய: ||
பாகவதம் 3-13-26
நான்முகனின் இதயத்திலிருந்து காமம், இமைகளிலிருந்து க்ரோதம், கீழ் உதட்டிலிருந்து லோபம், வாக்-இந்திரியத்திலிருந்து சரஸ்வதி, ரகசிய இந்திரியங்களிலிருந்து வருணன், ஆசனவாயிலிருந்து நிரருதி ஆகியோர் பிறந்தனர்.
கே: அப்படியென்றால் சரஸ்வதி இருமுறை பிறந்தாரா?
ப: ஆம். ஒருமுறை பாதி-உடலாகப் பிறந்தார். இன்னொருமுறை வாக்-இந்திரியங்களிலிருந்து பிறந்தார். இது பிரம்மாண்டத்தின் உள்ளே நடந்த ஸ்ருஷ்டி. பிரம்மாண்டத்தின் வெளியே நேராக ஸ்ரீஹரியின் உடலிலிருந்தே பிறந்தார். உத்தம தேவதைகள் அனைவரும் மொத்தம் 14 வகைகளில் பிறப்பர். (இது பொதுவான விதி). தேவதைகள் 14 வகைகளாகப் பிறப்பதால், இவர்களுக்கு அதிக சாதனை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதே இதன் ரகசியமான பொருள்.
கே: சரஸ்வதிதேவியை அனைவரும் கல்விக்கு அபிமானி தேவதை என்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
ப: நான்முகனின் நாக்கிலிருந்து பிறந்ததால், வாக்-அபிமானினி எனப்படுகிறார். அனைத்து வித்யைகளுக்கும் நாக்கு மூலகாரணம் ஆகையால் வித்யாபிமானினி எனப்படுகிறார். இந்த சரஸ்வதியைப் பற்றி தண்டி என்னும் கவி ஒருவர் மிகவும் அழகாக வர்ணிக்கிறார். ‘இதமந்தந்தம: க்ருத்ஸ்னம்ஞ்யாயோத புவனத்ரயம் | யதி ஷப்தாஹ்வயம் ஜ்யோதி: ஆஸம்சாரம் ந தீப்யதே’ - சப்தத்திற்கு அபிமானினியான சரஸ்வதி இல்லையென்றால் மூன்று லோகங்களும் இருள் சூழ்ந்து காணப்படும் என்கிறார். ஆகையால் தெரியவருவது என்னவென்றால் - இந்த சரஸ்வதியே நம் வாழ்க்கைக்கும், இந்த மூன்று உலகங்களுக்கும் ஒளி கொடுக்கும் விளக்கு.
கே: சரஸ்வதி என்னும் சொல்லிற்கு மூலம் எது? அதன் பொருள் என்ன?
ப: மரியாதை என்னும் பொருள் உள்ள ஸ்ரு என்பதே இதன் மூலம். நிரந்தரமாக பாய்ந்து கொண்டிருப்பவள் என்று பொருள். பேச்சு, மொழி, வேத, புராணம், இதிகாசம் என்று அனைத்து ரூபங்களிலும் எந்நேரமும் ஓடிக்கொண்டிருப்பவள். அதுமட்டுமல்லாமல், சங்கீதம், சாகித்யம், நாட்டியம், சிற்பக்கலை, ஓவியம் இவையும் குருபரம்பரையின் மூலமாகவே வந்துள்ளன. இவை அனைத்திற்கும் ஊற்று சரஸ்வதியே. ‘சரஸ்’ என்றால் அறிவைக் கொடுக்கும் கல்வி/கலைகள் என்று பொருள்.
1. ஸராம்ஸி அஸ்யாம் அஸீதி சரஸ்வதி - அனைத்து வித்யைகளும் இவளிடத்தில் இருப்பதால், இவளுக்கு சரஸ்வதி என்று பெயர்.
2. ஸராம் வாதீதி சரஸ்வதி - எப்போதும் ஸ்ரீஹரியிடம் வசிப்பதால் இவளுக்கு சரஸ்வதி என்று பெயர்
3. ஜலானி அஸ்யாமஸ்தீதி சரஸ்வதி - ஆறுகளில் சிறந்தவள் என்பதால் இவளுக்கு சரஸ்வதி என்று பெயர்.
என்று மூன்று வகையான பொருளைக் கூறலாம்.
கே: சரஸ்வதியின் மக்கள் யார்?
ப: அனைத்து தேவதைகளும் சரஸ்வதியின் மக்களே ஆவர். அதுமட்டுமல்லாமல், குதிரை, கழுதை, யானை, விதவிதமான விலங்குகள், பூச்சிகள், பசுகள், பறவைகள், எறும்பு ஆகியவற்றின் ரூபங்களை சரஸ்வதியே எடுத்து, மொத்தம் 84 லட்சம் யோனிகள் பிறப்பதற்கு முக்கிய காரணமாகியிருக்கிறார். இப்படியே 84 லட்சம் யோனிகளின் ரூபங்களை எடுத்திருக்கிறார். இதுவே சரஸ்வதியின் சிறப்பு. நான்முகப் பிரம்மனும் சரஸ்வதி எடுக்கும் அதே ரூபத்தில் அவரது கணவனாக வந்து படைத்தலுக்குக் காரணமானார்.
கே: வாயுதேவருக்கு அஞ்ஞானம், தவறான ஞானம் ஆகியவை இருப்பதில்லை. ஆனால், அவருக்குக் கீழான தாரதம்யத்தில் (படிநிலையில்) இருக்கும் சரஸ்வதி பாரதியருக்கு அஞ்ஞானம் மற்றும் தவறான ஞானங்கள் இருக்கின்றனவா?
ப: இதற்கான பதில் ஹரிகதாம்ருதசாரத்தில் இருக்கிறது. ‘சதுரவதனன ராணி அதிரோஹித விமலவிஞ்ஞானி’. சரஸ்வதிதேவியின் தூய்மையான ஞானத்திற்கு என்றும் அழிவு / குறைவு இல்லை. மேலும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் சிறந்த அறிவைக் கொண்டிருக்கிறார். என்றைக்கும் இவருக்கு கலியின் தொந்தரவு இல்லை. ஸ்ரீஹரியை நினைக்காமல் ஒரு நொடியும் இவர் இருப்பதில்லை. ஆகையாலேயே, அனைத்து தேவதைகளுக்கும் இவரே அபிமானினியாகிருக்கிறார்.
கே: ஹரிகதாம்ருதசாரத்தில் சரஸ்வதிதேவியை ஜனனி என்று அழைக்கின்றனர். ஜனனி என்று நாம் எப்படி பூஜை செய்யவேண்டும்?
ப: பிருஹதாரண்யக உபநிஷத்தில் இதற்கான பதில் மிகவும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
’யஸ்தே ஸ்தன: ஷஷயோ யோ மயோபூ: யேன விஷ்வா புஷ்யஸி வார்யாணி |
யோ ரத்னதா வசுவித்ய: சுதத்ர சரஸ்வதி தமிஹ தாதமே க: ||’
அனைத்து தேவதைகளும், சரஸ்வதியின் குழந்தைகளே. அந்த அனைத்து குழந்தைகளுக்கும், சரஸ்வதி முலைப்பால் கொடுத்து, அதன் மூலம் நல்லறிவு முதலான குணங்களைப் புகட்டினார். வெறும் தேவதைகளுக்கு மட்டுமே இப்படி செய்யாமல், அனைத்து விலங்குகளுக்கும் தன்னுடைய ஸ்தனங்களினாலேயே அறிவுத்திறனைப் புகட்டினார். இப்படி அனைத்து உயிரினங்களும் நன்கு பெருகி வளர்ந்து வருவதற்கு சரஸ்வதிதேவியே காரணம். ஆகையாலேயே, தாசர் சரஸ்வதியை ஜனனி என்று மிகச் சரியான பெயரை வைத்து அழைக்கிறார்.
கே: தினமும் நாம் சரஸ்வதியை வணங்கவேண்டுமெனில் எந்த ஸ்லோகத்தை சொல்லவேண்டும்?
ப: ஸ்ரீவாதிராஜர் தனது சரஸபாரதி விலாஸத்தில், சரஸ்வதிதேவியை மிகவும் அற்புதமாக வர்ணித்திருக்கிறார். கீழ்க்கண்ட இரு ஸ்லோகங்களைப் படித்தால் போதுமானது.
நமாமி வாணீம் ப்ரம்மாணீம் கல்யாணீம் சுத்ததர்மிணீம் |
அகௌகஹாரிணீம் நித்யதருணீம் முக்திகாரிணீம் ||
ஹரௌ பக்திமதீம் பாக்யவதீம் சதத்ருதே: ஸதீம் |
சரஸ்வதீம் புண்யவதீம் ஸ்மராமீந்து சமத்யுதீம் ||
பிரம்மனின் மனைவி, மங்களத்தைத் தருபவர், குறைகளில்லாத தர்மங்களைக் கொண்டவர், பக்தர்களின் பாவங்களை போக்குபவர், எப்போதும் இளமையானவர், முக்திக்கு காரணமானவர், ஸ்ரீஹரியிடம் பக்தி கொண்டவர், செல்வங்களை வழங்குபவர், நற்குணங்களைக் கொண்டவர், நிலவைப் போன்ற ஒளியுடையவர், இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட சரஸ்வதியை வணங்குகிறேன்.
கே: ரிக்வேதத்தில் ‘சரஸ்வதி ரகஸ்யோபநிஷத்’ மிகவும் அபூர்வமானதாகும். இதைப் பற்றி அதிக விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசை இருக்கிறது. தயைகூர்ந்து சொல்வீரா?
ப: அனைத்து ரிஷிகளும் ஒருமுறை ஆஷ்வலாயனரிடம் போய் - ஸ்ரீஹரியின் தத்வஞானத்தைப் பெறுவதற்கு நாங்கள் எந்த தேவதையை பூஜிக்க வேண்டும் - என்று கேட்டனர். அப்போது ஆஷ்வலாயனர் உபதேசித்த மந்திரமே ‘சரஸ்வதி ரகஸ்யோபநிஷத்’. இதை தினந்தோறும் படிப்பதனால் சிறந்த மெய்யறிவு கிடைக்கிறது. சொல்வதெல்லாம் நடக்கும் சக்தி கிடைக்கிறது. இதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
கே: அவ்வளவு பெரிய உபநிஷத்தை, அவ்வளவு நேரம் இல்லாத நாம் எப்படி படிப்பது?
ப: உபநிஷத் என்று பெயர் பெற்றிருந்தாலும், மிகவும் சிறியதான மந்திரம் இது. ‘ப்ரணோ தேவி சரஸ்வதி வாஜீர்பிர் வாஜினீவதி’ என்று துவங்குகிறது. மற்றும் வேத அத்யயனத்தின் துவக்கத்தில் அனைவரும் சொல்லும் ‘பாவகா ந: சரஸ்வதி வாஜீர்பி வாஜினீவதி’ என்னும் மந்திரமும் இதில் இருக்கிறது. ‘அம்பிதமே நதீதமே’ என்பது இதன் இறுதியில் உள்ள மந்திரம். ஒவ்வொரு மந்திரமும் மிகவும் பொருள் நிரம்பிய, மிகவும் சுவையானதாகும். சரஸ்வதிதேவியின் மகிமையை கொண்டாடுகிறது.
கே: உபநிஷத்தினை முழுமையாக படிக்க முடியாத பட்சத்தில், நாம் சொல்லவேண்டிய ஒரே ஒரு உபநிஷத் மந்திரம் என்னவென்று சொல்வீர்களா?
ப: இறுதியான மந்திரத்தை தினந்தோறும் சொல்லவேண்டும்.
அம்பிதமே நதீதமே தேவிதமே சரஸ்வதே |
அப்ரஷஸ்தா இவ ஸ்மஸி ப்ரஷஸ்திமம்ப நஸ்க்ருதி ||
கே: இந்த மந்திரத்தின் பொருள் என்ன?
ப:
அம்பிதமே = அனைத்து தாய்களுக்கும் தாயான சரஸ்வதியே
நதீதமே = அனைத்து ஆறுகளிலும் உத்தமமானவளே
தேவிதமே = அனைத்து தேவியர்களில் முதலாமவளே
சரஸ்வதே = எப்போதும் ஸ்ரீஹரியைப் பற்றி நினைப்பவளே
அப்ரஷஸ்தா இவ ஸ்மஸி ப்ரஷஸ்திமம்ப நஸ்க்ருதி = ஞானம், அறிவுத்திறன், புகழ் ஆகிய குணங்கள் இல்லாமல் ஆத்மா கெட்டுப்போயிருக்கிறது.
ஆகையால் ஸ்ரீஹரியிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டோம். ஏ சரஸ்வதியே, என் எல்லா தடைகளையும் நீக்கி, நற்குணங்களை என்னிடம் விதைத்து, ஸ்ரீஹரியின் தத்வஞானத்தை எனக்கு அருள்வாயாக.
கே: ஆறுகளில் சரஸ்வதியே மிகச் சிறந்தவர் என்றீர்கள். இவர் ஆறானது எப்போது?
புராணங்களில் இதற்கு ஒரு சுவையான கதை உள்ளது. செல்வத்திற்கு அபிமானியான லட்சுமிக்கும், கல்விக்கு அபிமானியான சரஸ்வதிக்கும் வேடிக்கையான வாக்குவாதம் நடந்தது. அப்போது லட்சுமி, சரஸ்வதியிடம் ‘நீனு நீராகு’ (நீ நீராகி விடு) என்கிறார். சரஸ்வதி லட்சுமிக்கு ‘கிடவாகு’ (மரம் ஆகிவிடு) என்கிறார். ஆகையினாலேயே, லட்சுமி துளசிச் செடியானார். சரஸ்வதி ஆறாகி பாய்ந்தார்.
கே: சரஸ்வதி ஆறு எங்கு பாய்கிறது?
ப: பிரயாக க்ஷேத்திரத்தில் கங்கை, யமுனைக்கு நடுவே மண்ணுக்கடியில் பாய்கிறாள். ஏனென்றால், முன்னர் ஒரு முறை தன் கணவரான நான்முகப் பிரம்மன், இதே க்ஷேத்திரத்தில் பத்து அஸ்வமேத யாகத்தை செய்திருந்தார். மேலும் பழைய காலத்தில் இந்த ஆற்றங்கரையில் அனைத்து ரிஷிமுனிகளும் யக்ஞ, யாகங்களை செய்து வந்தனர் என்று சரஸ்வதி ஆற்றினை அழகாக வர்ணித்திருக்கின்றனர்.
கே: இந்த ஆற்றின் சிறப்பு என்ன?
ப: ரிக்வேதத்தின் 1,3,7,8 மற்றும் 10வது மண்டலங்களில் இந்த ஆறு மிகவும் அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. 10வது மண்டலத்தின், 75வது சூக்தமானது முழுவதுமாக இந்த ஆற்றையே புகழ்கிறது. ஆற்றின் வர்ணனையுடன், சரஸ்வதியின் வர்ணனையையும் காணமுடிகிறது. சரஸ்வதி மற்றும் ரிஷத்வதி ஆறுகளின் நடுவில் இருக்கும் இடம் ’விலாஸ்யபத’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தின் மேல் போகும் ரேகைக்கோடு, இந்தியாவின் நட்டநடுவான இடமாகும் என்று வான்வெளி சாஸ்திரத்தின்படி சொல்கின்றனர். இன்றும் இப்படியே சொல்லும் வழக்கம் இருக்கிறது. நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றில் மிகவும் அகன்றதான இந்த சரஸ்வதி ஆறு, சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டது என்று சொல்கின்றனர். தற்போது பிரயாகையில் பூமிக்கு அடியில் ஓடிக்கொண்டிருப்பது நமது பாக்கியமே ஆகும்.
கே: சரஸ்வதி என்று ஆறு மட்டும் இல்லை. மரம்கூட கேள்விப்படுகிறேன். இதற்கும் சரஸ்வதியே அபிமானினி அல்லவா?
ப: ஆம். இந்த செடியினை பயன்படுத்துவதனால், மனோ நோய்கள் பரிகாரம் ஆவதுமட்டுமல்லாமல், நற்புத்தியும் வளர்கிறது. ஞாபகமறதி முதலான பிரச்னைகள் சரியாகின்றன. இந்த சரஸ்வதி மரத்தை ‘ப்ராம்ஹி’ என்று அழைக்கின்றனர். கன்னடத்தில் ‘ஒந்தெலக’ என்கிறார்கள். கிருஷ்ண யஜுர்வேதத்தின் வரும் ‘மேதாம் தேவி சரஸ்வதி’ என்னும் மேதா சூக்தத்தைச் சொல்லி, இந்த இலையின் சாற்றினை குடிக்கவேண்டும். இதனால் அறிவுத்திறன் வளர்கின்றது.
கே: சரஸ்வதியின் ரூபம் எப்படியிருக்கிறது? இவருக்கு மொத்தம் எவ்வளவு ரூபங்கள் உள்ளன?
ப: சரஸ்வதிக்கு ஆயிரமாயிரம் பெயர்கள் உள்ளன. ஆனால் புராணங்களில் 12 ரூபங்களை மிகவும் சிறப்பாக வர்ணித்துள்ளனர். அந்த 12 ரூபங்களும், அவை கைகளில் தரித்திருக்கும் பொருட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. மஹாசரஸ்வதி - துளசிமாலை, தாமரை, வீணை, புத்தகம்
2. சரஸ்வதி - துளசிமாலை, வீணை, புத்தகம், தாமரை
3. கமலா - வரத ஹஸ்தம், துளசிமாலை, தாமரை, புத்தகம்
4. ஜயா - வரத ஹஸ்தம், தாமரை, புத்தகம், துளசிமாலை
5. விஜயா - வரத ஹஸ்தம், துளசிமாலை, புத்தகம், தாமரை
6. சாரங்கி - வரத ஹஸ்தம், புத்தகம், துளசிமாலை, தாமரை
7. தும்புரி - அபய ஹஸ்தம், துளசிமாலை, வீணை, புத்தகம்
8. நாரதி - வரத ஹஸ்தம், புத்தகம், வீணை, தாமரை
9. சர்வமங்கள - வரத ஹஸ்தம், தாமரை, புத்தகம், அபய ஹஸ்தம்
10. வித்யாதரெ - தாமரை, துளசிமாலை, வீணை, புத்தகம்
11. சர்வவித்யா - துளசிமாலை, தாமரை, புத்தகம், அபய ஹஸ்தம்
12. சாரதா - அபய ஹஸ்தம், தாமரை, புத்தகம், துளசிமாலை
கே: சரஸ்வதி வைத்திருக்கும் வீணையின் சிறப்பு என்ன?
ப: ’கச்சபே’ என்பது அந்த வீணையின் பெயர். ‘வல்லகே’ என்று இன்னொரு வீணையையும் வைத்திருக்கிறார் என்று சொல்கின்றனர். தேவதைகளில் அனைவரும் ஒவ்வொரு வீணையை ஏந்தியிருக்கின்றனர்.
சிவனின் வீணை ருத்ரவீணை.
நாரதரின் வீணை மஹதி.
தும்புருவின் வீணை கலாவதி.
விஷ்வாவசுவின் வீணை ப்ருஹதி.
ஸ்யாமளாதேவியின் வீணை மாணிக்ய.
தக்ஷனின் வீணை தும்புரு.
உதயனனின் வீணை கோஷவதி என்று சொல்கின்றனர்.
பழைய கிரந்தங்களில் சொன்னபடி மொத்தம் 19 வீணைகள் உள்ளன. வீணையின் நாதமானது பத்து விதமான தெய்வீக நாதங்களில் ஒன்றானதாகும். இப்படி சங்கீத உலகத்தில் வீணைக்கு மேன்மை வந்துள்ளது.
கே: சரஸ்வதியின் வாகனம் எது?
ப: இவரது வாகனம் அன்னப்பறவை. ஹம்ஸவாஹினி என்று இவரை புராணங்களில் வர்ணிக்கின்றனர். மயில்கூட இவரின் வாகனம் என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இதற்கு எங்கும் சரியான ஆதாரம் காணப்படவில்லை.
கே: சரஸ்வதிதேவி வெறும் வித்யைக்கு (கல்வி) அபிமானினியா?
ப: ’சங்கீதமபி ஸாஹித்யம் சரஸ்வத்யா ஸ்தனத்வயம்’ என்னும் பிரபல வசனத்தின்படி சங்கீதம், சாகித்யம் என்ற இரண்டும் சரஸ்வதியும் ஸ்தனங்கள். இதன்படியே கல்வியின் பரம்பரை வளர்ந்து வந்துள்ளது. அதனால் வெறும் வேதங்களின் கல்விகளுக்கு மட்டுமல்லாமல், சங்கீதம், நாட்டியம், சிற்பக்கலை, வரைக்கலை, ஆகிய பல விதமான கலைகளும் சரஸ்வதியிடமே தோன்றிவந்தன. அவை அனைத்திற்கும் இவரே அபிமானினியாக இருக்கிறார்.
கே: சரஸ்வதிதேவி பிறந்தது எப்போது?
ப: மாக சுத்த பஞ்சமியன்று சரஸ்வதி தோன்றினார் என்று சொல்கின்றனர். அன்றைய தினம், சரஸ்வதி கோயில்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
கே: ஆஸ்வின மாதத்தில் வரும் நவராத்திரியில், அனைவரும் சரஸ்வதி பூஜை செய்கின்றனர். சரஸ்வதிதேவி அப்போதுதான் பிறந்தாரா?
ப: நவராத்தியில், சஷ்டி திதியில், மூலா நட்சத்திரத்தன்று துவங்கி சரஸ்வதியை விசேஷமாக பூஜிக்கின்றனர். இது சரஸ்வதி தோன்றிய நாள் அல்ல. புராணங்களில் சொல்லியவாறு, இது சரஸ்வதியின் விரதம் மட்டுமே. விரதம் என்பது வேறு, தோன்றிய (அவதரித்த) நாள் என்பது வேறு. இதை அனைவரும் பின்பற்றியே ஆகவேண்டும்.
கே: நவராத்திரி தினங்களில் சரஸ்வதிக்கு பூஜை செய்வது ஏன்?
ப: சரஸ்வதியின் மற்றொரு பெயர் சாரதா. சரத் காலத்திற்கு இவரே அபிமானினி ஆனதால் சாரதா எனப்படுகிறார். குமரி முதல் இமயம் வரை அனைவரும் நவராத்திரி விழாவைக் சிறப்புடன் கொண்டாடுகின்றனர். நவராத்திரிக்கு இத்தகைய மேன்மை வந்திருப்பதே, சரஸ்வதி பூஜையால்தான்.
கே: நவராத்திரி விழாவின்போது சரஸ்வதிதேவியை எப்படி பூஜிக்கவேண்டும்?
ப: சரஸ்வதியின் சிலையென்றால் அது புத்தகமே. நற்சாஸ்திரங்களின் புத்தகங்களை வைத்து அன்று பூஜிக்கவேண்டும். தியான, ஆவாஹன முதலான 16வித உபசார பூஜைகளை செய்யவேண்டும். ஒவ்வொரு உபசாரங்களின்போது, சரஸ்வதி சம்பந்தமான ஸ்லோகங்கள் உள்ளன. அங்கபூஜை, புஷ்பபூஜை, பத்ரபூஜை மற்றும் அஷ்டோத்தர நாமாவளி பூஜைகளை செய்யவேண்டும். இறுதியில், ‘சதுர்தஷஸு வித்யாஸு ரமதே யா சரஸ்வதே, சதுர்தஷஸு லோகேஷு ஸா மே வாசே வஸேத் ஸதா’ என்று பக்தியுடன் வணங்கவேண்டும்.
கே: மூலா நட்சத்திரத்தன்று மட்டும் சரஸ்வதி பூஜை செய்தால் போதுமல்லவா?
ப: ’மூலேனாவாஹயேத் தேவீம் ஸ்ரவணேன விசர்ஜயேத்’. மூலா நட்சத்திரத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, பூஜையை துவக்கி, ஸ்ரவண நட்சத்திரம் வந்தபோது விசர்ஜனம் செய்யவேண்டும். பொதுவாக சஷ்டியன்று சரஸ்வதி பூஜை துவங்கினால், விஜயதசமியன்று முடிவடைகிறது. இப்படி தினமும் பூஜை செய்யவேண்டும். முடியாவிட்டால், மூலா நட்சத்திரத்தன்று விசேஷ பூஜை செய்து, மற்ற நாட்களில் சுருக்கமாக பூஜை செய்யலாம்.
கே: சரஸ்வதி பூஜையன்று புதிய கல்வி / படிப்பை துவங்கலாம் அல்லவா?
ப: தவறு. அனைத்து புத்தகங்களையும் பூஜையில் வைத்து, அன்று அனத்யயனத்தை (படிக்கக்கூடாத நாள்) பின்பற்ற வேண்டும். அன்று புதிய கல்வியை / படிப்பை துவக்கக்கூடாது. வெறும் மந்திர-ஜபம், பாராயணங்களை மட்டுமே செய்வதற்கு அன்று அனுமதி.
கே: சரஸ்வதிதேவி பூமியில் எப்போது அவதரித்தார்? அவரது அவதாரங்கள் எவ்வளவு?
ப: நான்முகப் பிரம்மனுக்கு எப்படி பூமியில் அவதாரம் இல்லையோ, அதைப்போல சரஸ்வதிதேவிக்கும் பூமியில் அவதாரம் இல்லை. பக்தர்களுக்காக பலமுறை மூலரூபத்திலேயே வந்து அருள்கிறார்.
கே: ஸ்ரீமா சாரதாதேவி என்று சரஸ்வதிதேவியை 1850ம் ஆண்டில் அவதரித்தவர் என்று ராமகிருஷ்ண ஆசிரமத்தினர் சொல்கிறார்களே?
ப: ராமகிருஷ்ணரின் மனைவியான சாரதாதேவியை சாட்சாத் சரஸ்வதிதேவியின் அவதாரம் என்று ராமகிருஷ்ண ஆசிரமத்தினர் சொல்கின்றனர். ஆனால் இதற்கு புராணங்களில் ஆதாரம் இல்லை. தேவதைகளின் அவதாரங்களைப் பற்றி வேதவியாஸரோ அல்லது ஸ்ரீமதாசார்யர் சொன்னவை மட்டுமே சரியான ஆதாரங்கள் ஆகும்.
கே: சங்கராச்சாரியரை பின்பற்றுபவர்கள் சரஸ்வதியை விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். இதற்கு பின்புலம் என்ன?
ப: ’காஷ்மீரபுர வாஸினி’ என்பதுபோல, காஷ்மீரத்தில் சாரதாபீடம், அவர்களது சக்திபீடமாக இருக்கிறது. ஹம்ஸ நாமக பரமாத்மனிடமிருந்து பரமஹம்ஸ பரம்பரை வளர்ந்து வந்திருக்கிறது என்று நாம் எப்படி சொல்கிறோமோ, அது போல காஷ்மீரத்து சக்திபீடத்திலிருந்து பரம்பரை வளர்ந்து வந்திருக்கிறது என்கிறார்கள். ’சாரதாம்பா’ என்னும் பெயரிலேயே பல கோயில்களை கட்டியிருக்கின்றனர். அவற்றை சாரதாபீடம் என்று பெயரிட்டே அழைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மதுசூதன சரஸ்வதி என்பதுபோல் சரஸ்வதி என்னும் பெயரையும் வைத்துக்கொள்கின்றனர்.
கே: சிருங்கேரி க்ஷேத்திரத்திற்கும் சரஸ்வதிக்கும் என்ன சம்பந்தம்?
ப: காஷ்மீரத்திலிருந்து சாரதாதேவியை சங்கராச்சாரியர் அழைத்து வந்தபோது, முன் செல்லும் சங்கராச்சாரியர் எங்கு தன்னை திரும்பிப் பார்க்கிறாரோ தான் அங்கேயே நின்றுவிடுவேன் என்று கறாராகச் சொன்னாராம். ஆனால், கூடலி அருகில் வந்தபோது, தேவியின் கொலுசு சத்தம் கேட்காததால், சங்கராச்சாரியர் திரும்பிப் பார்த்திடவும், அவர் அங்கேயே நின்றுவிட்டாராம். ஆகையால், கூடலியில் மற்றும் சிருங்கேரியில் சரஸ்வதி நிலைத்திருக்கிறார் என்பது அவர்களின் கருத்து.
கே: சங்கராச்சாரியாரின் சம்பிரதாயத்தில் சரஸ்வதி பூஜை எப்படி செய்கின்றனர்?
ப: நாம் சரஸ்வதிதேவியை பரசுக்ல-த்ரயர் என்றும், ருஜுகளில் உத்தமரான பிரம்மனின் மனைவி என்றும் அழைக்கின்றோம். ஆனால் அவர்கள் அவரை அப்படி நினைப்பதில்லை. இவரை ஆதிசக்தி என்று சொல்கின்றனர். மேலும் லட்சுமியுடன் இவரை சேர்த்து, ஒரே தாரதம்யத்தில் பூஜிக்கின்றனர். இதெல்லாம் நம்முடைய சாஸ்திரத்திற்கு எதிராக இருக்கிறது.
கே: ராமகிருஷ்ண ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஆகட்டும், ஸ்மார்த்தர் ஆகட்டும் சரஸ்வதியை விடாமல் பூஜிக்கின்றனர். ஆனால் நம்மிடம் இந்த வழிமுறையே இல்லை. இது தப்புதானே?
ப: நான்முகப் பிரம்மனுக்கு தனியான பூஜை என்பது நம் வழிமுறையில் இல்லை. ஆகையாலேயே, அவரின் மனைவியான சரஸ்வதிதேவிக்கும் தனியாக பூஜை செய்வதென்பது நம் வழக்கத்தில் வரவில்லை. ஆனால், பாரதிதேவிக்கு விதிகளின்படி பூஜை செய்யும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. முக்யபிராணரின் பிரதிமையில் (உருவச்சிலையில்), பிரம்மன் வசிப்பதைப்போல், பாரதிதேவியின் பிரதிமையில் சரஸ்வதிதேவி வசிக்கிறார். ஆகையால் பாரதிதேவிக்குப் பூஜை செய்யும்போது சரஸ்வதிதேவிக்கும் சேர்த்து பூஜை செய்வது நம் சம்பிரதாயம். அதுமட்டுமல்லாமல், எந்த நற்காரியத்தையும் துவக்கும்போது ‘வாணீ ஹிரண்யகர்பாப்யாம் நம:’, என்று சொல்லி நான்முகப் பிரம்மன் மற்றும் சரஸ்வதிதேவிக்கு அந்தச் செயலை சமர்ப்பிக்கும் வழக்கமும் நம்மில் உள்ளது.
கே: நம் நாட்டில் சரஸ்வதிதேவிக்கு கோயில் இருக்கிறதா?
ப: முன்னர் சொன்னதுபோல், ஸ்மார்த்தர் கட்டிய கோயில்கள் பல உள்ளன. சரஸ்வதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல், ஜைனர், பௌத்தர்கள்களில்கூட சரஸ்வதியை வணங்கும் வழக்கம் உள்ளது. சரஸ்வதிக்கு அவர்கள் கட்டிய கோயில்களும் உள்ளன.
கே: சரஸ்வதிக்கு மூன்று ரூபங்கள் உள்ளன. அவை காயத்ரி, சாவித்ரி மற்றும் சரஸ்வதி. ஆகையால், தினமும் காயத்ரி ஜபம் செய்யும்போது நாம் சரஸ்வதியை நினைக்கவேண்டும் என்று ஸ்மார்த்தர் சொல்கின்றனர். இது சரியா?
ப: தவறு. காயத்ரி மந்திரத்தில் சூர்யநாராயணனே வணங்கப்படும் தெய்வம் என்று ஸ்ரீமதாசார்யர் தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆகையால் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கும்போது, நான்முக பிரம்மனின் மனைவியான சரஸ்வதியை நினைப்பது அநாவசியம்.
கே: அப்படியென்றால், சரஸ்வதிதேவிக்கு மேலே கூறிய மூன்று ரூபங்கள் இல்லையா?
ப: அப்படியில்லை. மூன்று ரூபங்கள் உண்டு. ஆனால் அந்த ரூபங்களில் அந்தர்யாமியாக ஸ்ரீஹரியே இருக்கிறான் என்று நினைக்கவேண்டும். காயத்ரி என்னும் ரூபத்தினால் காலையில், சாவித்ரி என்னும் ரூபத்தினால் மதியத்தில், சரஸ்வதி என்னும் ரூபத்தினால் மாலையில், நான்முகனின் மனைவியான தேவி அபிமானினியாக இருக்கிறாள்.
கே: அப்படியென்றால், சரஸ்வதியின் காயத்ரி ரூபத்தை, காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது அபிமானினி என்று நினைக்கலாமா?
ப: கண்டிப்பாக நினைக்கலாம். இதையே ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தில், ஸ்ரீமதாசார்யர் தெரிவிக்கிறார் - ‘அபிமானினீ து காயத்ர்யா முக்யா ஸ்ரீ: பரிகீர்திதா |’ காயத்ரி மந்திரத்திற்கு லட்சுமியே முக்கியமான அபிமானினி. சரஸ்வதி அ-முக்கியமான அபிமானினி என்று இதன் பொருள். இப்படி நினைத்து பூஜிப்பது தவறில்லை. ஆனால் சூரியநாராயணனை மறந்து, சரஸ்வதி ஒருவரே காயத்ரி மந்திரத்தின் அதிபதி என்று நினைத்து ஜெபிப்பது தவறு என்பது ஸ்ரீமதாசார்யரின் அபிப்பிராயம்.
கே: சரஸ்வதிதேவிக்கு காயத்ரி முதலான பெயர்கள் எப்படி வந்தன?
ப: ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் இதைப் பற்றி பல விவரங்கள் உள்ளன. சரஸ்வதியின் மகிமைகளைப் பற்றி அங்கு பல இடங்களில் புகழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரியின் காயத்ரி முதலான ரூபங்களை ஆதரிப்பதால், இவருக்கு காயத்ரி ரூபங்கள் வந்திருக்கின்றன என்று பொதுவாக சொல்லலாம்.
கே: சரஸ்வதியையே மகாகாளி, துர்கா, பார்வதி என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே? இது சரியா?
ப: இது தவறு. துர்காசப்தசதி, சரஸ்வதியை புகழ்கிறது என்றும் சிலர் சொல்கின்றனர். ஆனால் ஸ்ரீஹரியின் மனைவியான துர்கையே வேறு, நான்முகனின் மனைவியான சரஸ்வதி வேறு, ருத்ரரின் மனைவியான பார்வதி வேறு. இம்மூவரையும் ஒன்று என்று எப்போதும் அறியக்கூடாது. அப்படி ஒருவேளை இவர்களில் ஒற்றுமையைக் கண்டால் அவர்களுக்குள் இருக்கும் அந்தர்யாமியை நினைக்கவேண்டும். அதிக பலன் வேண்டுமென்றும், விரைவான பலன் கிடைக்கவேண்டுமென்றும், மூன்று தேவியரையும் சேர்த்து வணங்கச் செய்யும் தந்திரங்கள் இவை. இந்த தந்திரத்தின்படி இவர்களைப் பூஜித்தாலும் இவர்களுக்கு ஸ்வரூப-ஐக்கியம் (இவர்கள் மூவரும் ஒன்றாகமுடியாது) என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
கே: சரஸ்வதிதேவியை எப்படி வணங்கவேண்டும்?
ப: நான்முகனின் நாக்கிலிருந்து பிறந்த சுத்த-சாத்வீகளான சரஸ்வதி, நம் நாக்கிலும் நிரந்தரமாக நிற்கட்டும் என்று வணங்கவேண்டும். ராகவேந்திர ஸ்வாமியின் நாக்கில் சரஸ்வதியின் சன்னிதானம் இருக்கிறது என்று மிகவும் அழகாக வர்ணிக்கிறார். மோட்சம் கிடைக்கவேண்டுமென்றால் சரஸ்வதியின் அருள் நமக்கு கண்டிப்பாகத் தேவை. அவரின் அருள் இல்லையென்றால், நாம் அதோகதிக்கு போகவேண்டியிருக்கும். மேலும் ஒவ்வொருவரும் வித்யாரம்பக் காலங்களில் சொல்லும் ஸ்லோகம் - ‘சரஸ்வதி நமஸ்தும்பம் வரதே காமரூபிணி, வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே சதா’. இந்த ஸ்லோகத்தினால் சரஸ்வதியை வணங்கி, ஸ்ரீஹரியின் தத்வத்தை அறிய முற்படவேண்டும். அதற்காக சரஸ்வதியின் அருளை வேண்டுவோமாக.
கே: சரஸ்வதியை பூஜிக்கும்போது கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன?
ப: அஞ்ஞானம், தவறான ஞானங்களை சரஸ்வதிதேவியிடம் காணமுடியாது. ஆகையினாலேயே இவர் பரசுக்லத்ரயரில் சேர்ந்தார். மிகுந்த சக்தி/கருணை மிக்கவர் என்று அறியப்படுபவர். காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கும்போது, சரஸ்வதியே காயத்ரி மந்திரத்தின் அதிபதி (போற்றப்படுபவர்) என்று அறியக்கூடாது. அப்படியே, லட்சுமி மற்றும் பார்வதியுடன் சரஸ்வதியும் ஐக்கியம் (ஒரே தாரதம்யத்தைச் சேர்ந்தவர்கள்) என்று நினைக்கக்கூடாது. இப்படி உண்மையான ஞானத்தைப் பெற்று பூஜித்தால் மட்டுமே, சரஸ்வதிதேவியின் பரிபூர்ண அருள் நமக்குக் கிடைக்கும். அப்போது மட்டுமே சரஸ்வதி தேவி ஞானத்தை வழங்குபவர் ஆகிறார்.
கே: சரஸ்வதிதேவியின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.
ப: படைப்பின் துவக்கத்தில், நான்முகப் பிரம்மன் படைப்பதைத் துவக்கினார். அப்போது அவரின் ஒவ்வொரு உறுப்பிலிருந்து ஒவ்வொரு தேவதைகள் பிறந்தனர். அவரது நாக்கிலிருந்து சரஸ்வதி பிறந்தார். வாக்கிற்கு அபிமானியான இவர் மிகவும் அழகாக இருந்தார். அப்போது நான்முகன் இவரை விரும்பியதாக, அசுர மோகனத்திற்காக ஒரு நாடகமாடினார். மகளை விரும்பியது தவறு என்பதாக மரீசி முதலானவர்கள் நான்முகனுக்கு உபதேசம் செய்தனர். இதுவும் ஒரு நாடகமே. இதைக் கேட்ட நான்முகன் சரஸ்வதியை திருமணம் செய்யாமல் ஒதுக்கினார். அப்படி ஒதுக்கியவரை துர்ஜனர்கள் ஸ்வீகாரம் செய்தனர். ஆனால், இவர் பிரம்மனின் உண்மையான மனைவி அல்ல. இவரே துஷ்சாஸ்திரங்களுக்கு மற்றும் துர்ஜனர்களுக்கு அபிமானியாகி இருக்கிறார். லௌகிக விஷயங்களில் மிகவும் ஆசைப்படுபவராக இருக்கிறார். இவரையே பிரம்மன் விரும்பியதாக நாடகம் ஆடினார்.
வேதங்களுக்கு அபிமானியான சரஸ்வதியே வேறு. இவர் பிரம்மனின் பாதி-உடலிலிருந்து பிறந்தவர். இவர் பிரம்மனின் நியத-பத்னி (எந்தக் காலத்திலும் எப்போதும் இவரே அவரின் மனைவி), பிரம்மனிடம் போய் சேர்ந்தாள். பிறகு பிரம்ம-சரஸ்வதியர் வெவ்வேறு ரூபங்களை தரித்து, பின் இணைந்தனர். இவர்கள் இணைந்ததில் இரு ஜீவன்கள் பிறந்தன. பிறந்த ஆண் ஜீவனே ஸ்வாயம்புவ மனு. பெண் ஷதரூபாதேவி ஆவார். பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து, இவர்களது பரம்பரை வளர்ந்தது.
பல விலங்குகள், பறவைகளின் ரூபங்களை சரஸ்வதி ஏற்றார். அதற்கேற்றாற்போல், பிரம்மனும் அந்தந்த விலங்குகள், பறவைகளின் ஆண் ரூபங்களை ஏற்றார். பிறகு அவர்கள் இருவரும் இணைந்ததால் அந்தந்த விலங்குகள், பறவைகளின் கூட்டம் பெருகியது. இப்படி படைப்பிற்கு முக்கியப் பங்கு வகித்த சரஸ்வதிதேவியின் மகிமை மிகவும் அபாரமானது. அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் கல்வியறிவு அளிப்பவரும் இவரே ஆவார். இத்தகைய சரஸ்வதியின் அருள் நமக்கு நிரந்தரமாகக் கிடைக்கட்டும்.
கே: நம் உடலில் சரஸ்வதி எங்கிருக்கிறார்? அவரை எப்படி நினைத்து வணங்கவேண்டும்?
ப: ‘இடா பாகீரதீ நாம்னே பிங்களா யமுனா ஸ்ம்ருதா தயோர்மத்யே கதனாடி சுஷும்னாக்யா சரஸ்வதி’ என்ற வாக்கியத்தின்படி இடா நாடியில் கங்கா, பிங்களா நாடியில் யமுனா, சுஷும்னா நாடியில் சரஸ்வதி ஆகியோர் நிலைத்திருக்கிறார்கள். எப்படி கங்கா, யமுனைக்கு நடுவில் சரஸ்வதி நதியும் ரகசியமாக ஓடிக்கொண்டிருக்கிறாரோ, அதேபோல் நம் உடலிலும்கூட கங்கா-யமுனைகளின் நடுவில் சரஸ்வதியும் ஓடிக்கொண்டிருக்கிறார். சுஷும்னா நாடியின் வழியே இறந்தாலே அது மோட்சத்திற்கான வழியாகும். ஆகையால் மோட்சத்தை விரும்புபவர்கள், சுஷும்னா நாடியில் இருக்கும் சரஸ்வதியை எந்நேரமும் நினைத்து பூஜிக்கவேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment