3/12 பிரம்மதேவர்
ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
கேள்வி: நம் அனைவருக்கும் மிகவும் பிரியமான மோட்சத்திற்கு அழைத்துச்செல்பவர் நான்முக பிரம்மன். இவர் நமக்கு எப்படி எப்போது மோட்சத்தைக் கொடுக்கிறார்?
பதில்: நாம் அபரோக்ஷ ஞானிகளாகி, நம் பிராரப்த கர்மங்களை தீர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு சத்யலோகத்தில், பிரம்மதேவரின் உபதேசத்திற்காக பலகாலம் காத்திருக்க வேண்டும். பிரம்மகல்பத்தின் இறுதியில், பிரம்மதேவர் அனைவரையும் அழைத்து, அவரவரின் தகுதிக்குத் தக்கவாறு உபதேசம் செய்கிறார். அவரது உபதேசமே இறுதியானது. ஆகையால் இவரே உத்தமோத்தம குரு ஆகிறார். பிறகு, விரஜா நதியருகில் அழைத்துப்போய், அவருடன் ஸ்நானம் செய்விக்கிறார். அப்போது, ஆதியிலிருந்து நம்முடனேயே இருந்த லிங்கதேகம் பங்கமாகிறது. பிறகு மோட்சத்திற்கு அழைத்துப் போகிறார்.
கே: பிரம்மகல்பத்தில் இறுதியில், விரஜா நதியில் ஸ்நானம் செய்த உடனேயே நமக்கு மோட்சம் கிடைப்பதில்லையா?
ப: இல்லை. ‘அவ்வளவுதானே, மோட்சம் கிடைத்தாயிற்று’ என்று தீர்மானமாக நம்பியிருந்தாலும், அப்போதே ஸ்ரீஹரி மோட்சத்தைக் கொடுப்பதில்லை. பிரளய காலம் முழுவதும் முடிந்தபிறகு, அடுத்த கல்பத்தின் துவக்கத்தில் ஸ்ரீஹரி மோட்சத்தைக் கொடுக்கிறார். ஆகையால் மோட்சம் கிடைப்பதற்கு லிங்கதேகம் மட்டுமே தடையல்ல. ‘ஸ்ரீஹரியின் விருப்பம்’ என்னும் இன்னொரு விஷயமும் இதற்கு தடையாக இருக்கிறது. இந்த கல்பத்தின் இறுதியில் லிங்கதேகம் நாசமானாலும்கூட, ஸ்ரீஹரியின் விருப்பம் என்னும் விஷயம் அடுத்த கல்பத்தின் துவக்கத்தில்தான் கிடைக்கும். அதன்பிறகு ஜீவனுக்கு மோட்சம் கிடைக்கிறது. ஆகையால், பிரம்மதேவர், ஸ்ரீஹரியின் கட்டளைப்படி, விரஜா நதியில் ஸ்நானத்தை செய்வித்து, வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுவிக்கிறார். பிறகு ஸ்ரீஹரி மோட்சத்தைக் கொடுக்கிறார்.
கே: நம்மைப் படைத்தவர் பிரம்மதேவர். நம்மை சாதனை (நற்செயல்கள்) செய்ய வைத்தவரும் அவரே. இறுதியில் நமக்கு உபதேசம் செய்வித்து, விரஜா நதியில் ஸ்நானம் செய்வித்து, வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து நாம் விடுபடவும் அவரே உதவுகிறார். இப்படியிருக்கும்போது, வாயுதேவரை ஏன் நாம் குரு என்று நினைத்து வணங்கவேண்டும்? நம் சாதனைகளுக்கு வாயுதேவர் எப்படி முக்கியமான காரணம் ஆகிறார்?
ப: நம் சாதனைகளுக்கு பிரம்மதேவர் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவே வாயுதேவரும் முக்கியப் பாத்திரத்தை வகிக்கிறார். வாயுதேவரை பூஜிக்காமல், பிரம்மதேவரிடமிருந்து உபதேசம் பெறுவது சாத்தியமே இல்லை. இதைப் பற்றிய ஆதாரங்களை பின்வரும் பகுதியில் பார்க்கலாம்.
கே: நான்முக பிரம்மன், பூலோகத்தில் எவ்வளவு முறை அவதரித்திருக்கிறார்? ஸ்ரீஹரி, ராம கிருஷ்ண அவதாரங்களை எடுத்தபோது, பிரம்மனும் கூடவே அவதரித்தாரா? மற்றும் அவரின் அம்சாவதாரங்கள் எவ்வளவு? அவரின் விசேஷ ரூபங்கள் எவ்வளவு உள்ளன?
ப:
’பிரம்மா சதுர்முகோ தாதா விதாதா விதிரேவ ச |
கர்தா விரிஞ்சோ பூதேஷ: ஷதானந்தஷ்ச தா நவ ||
பிரம்மா, சதுர்முக, தாத்ரு, விதாத்ரு, விதி, கர்த்ரு, விரிஞ்ச, பூதேஷ, ஷதானந்த - என்று பிரம்மதேவரின் ஒன்பது ரூபங்களை பாகவத தாத்பர்யத்தில் ஸ்ரீமதாசார்யர் எழுதியிருக்கிறார். பூஜை செய்யும்போது இந்த ஒன்பது ரூபங்களையும் நாம் கண்டிப்பாக நினைக்க வேண்டும். இவற்றைத் தவிர இன்னும் பல ரூபங்கள் உள்ளன. ஆனால் ஸ்ரீஹரியின் விருப்பத்திற்கேற்ப, நான்முக பிரம்மனுக்கு அவதாரங்கள் இல்லை.
கே: அத்ரி, அனுசூயா தம்பதியினரிடம் பிரம்மதேவர் சோம என்னும் ரூபம் கொண்டு அவதரித்தார். ‘சோமோSபூத் பிரம்மணோம்Sஷேன தத்தோ விஷ்ணோஸ்து யோகவித் | துர்வாஸ: ஷங்கரஸ்யாம்Sஷோ நிபோதான்கிரஸ: ப்ரஜா ||’ என்று பாகவதத்தின் நான்காம் ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கும்போது அவருக்கு அவதாரமே இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
ப: ’சோமோSபூத் பிரம்மணோம்Sஷேன’ என்னும் வாக்கியத்திற்கு, ஸ்ரீமதாசார்யர் ‘ப்ரஹ்மணோ நாவதாரோSஸ்தி ஸன்னிதானம் து கேவலம்’ என்று பதில் அளித்திருக்கிறார். பிரம்மதேவருக்கு அவதாரம் இல்லாத காரணத்தினால், சோமனிடத்தில் பிரம்மனின் சன்னிதானம் இருப்பதாக மட்டுமே நினைக்கவேண்டும். ஆகையால், பூமியில் நான்முக பிரம்மனுக்கு ஸ்வரூபாவதாரம் இருப்பதில்லை. அம்சாவதாரம்கூட இருப்பதில்லை. பாண்டவர்கள் கதை, ஸ்ரீகிருஷ்ணனின் கதை, ராமாயணம் இப்படி எவற்றிலாவது பிரம்மதேவருக்கு அவதாரம் இருக்கிறது என்று படித்தால், அது அஞ்ஞானிகளின் மோகனத்திற்காக நடத்தப்பட்ட விளையாட்டு என்றே நினைக்கவேண்டும்.
புராணங்களில் அப்படி காணப்பட்டால், அவை கல்பபேதத்தினால் வந்தவை என்று ஸ்காந்தபுராணம் மற்றும் வராக புராணங்களின் ஆதாரத்தில் ஸ்ரீமதாசார்யர் நிர்ணயிக்கிறார்.
கே: பிரம்மதேவருக்கு அம்சாவதாரம், ஆவேச அவதாரங்கள் மட்டுமல்ல. அவருக்கு பூலோகத்தில் பூஜையும்கூட கிடையாது என்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
ப: ப்ருகு ரிஷிகளின் மற்றும் ருத்ரதேவரின் சாபமே இதற்கு காரணம். மும்மூர்த்திகளில் யார் உத்தமர் என்று பார்க்கப் போயிருந்தபோது, பிரம்மதேவர் தம்மை அவமதித்தார் என்பதற்காக அவருக்கு பூலோகத்தில் பூஜை கிடையாது என்று ப்ருகு முனிகள் சாபமிட்டார். ஆகையாலேயே, பிரம்மதேவருக்கு பூலோகத்தில் பூஜைகள் இருப்பதில்லை. நாம் பிராணதேவரின் பிரதிமையை (உருவச்சிலையை) வைத்து பூஜிப்பதுபோல, பிரம்மதேவரின் பிரதிமையை வைத்து பூஜிக்கும் வழக்கமும் இல்லை.
கே: நான்முக பிரம்மரின் சன்னிதானம், புஷ்கர க்ஷேத்திரத்தில் இருப்பதற்கு என்ன காரணம்? வராகன் எங்கு ஏன் புஷ்கர ஏரியில் பிரவேசித்தார்?
ப: ஸ்ருஷ்டியின் துவக்கத்தில், ஆதி ஹிரண்யாக்ஷன் தொந்தரவு கொடுத்தபோது, நான்முக பிரம்மன், ஸ்ரீஹரியைக் குறித்து தவம் செய்தார். அப்போது பிரம்மனின் மூக்கு துவாரங்களிலிருந்து வராகன் அவதரித்தார். பிறகு இந்தக் குளத்தில் பிரவேசித்தார். ஆகையால், புஷ்கர க்ஷேத்திரமே பிரம்மன் தவம் மேற்கொண்ட தலம் எனக் கருதப்படுகிறது. இதே ஏரியில் வராகன் தோன்றி, ஆதிஹிரண்யாக்ஷனை கொல்வதற்காக பிரவேசித்தார்.
கே: தமிழ்நாடு, கேரளா, கோவா, கர்னாடகா என்று பல மாநிலங்களில் பல இடங்களில் நான்முக பிரம்மனுக்கு கோயில் உள்ளது. அவற்றில் சில மிகப் பழமையானதும்கூட. அப்படியென்றால் இந்தக் கோயில்கள் சாஸ்திரங்களுக்கு எதிரானவை அல்லவா? இந்தக் கோயில்களுக்கு நாம் சென்று, பிரம்மதேவரை பூஜிக்கலாமா?
ப: பிரம்மதேவருக்கு சிலைவைத்து பூஜிப்பதில்லை என்பதற்கு ப்ருகு ரிஷிகளின் சாபம் காரணமாக இருந்தாலும், அது ஸ்ரீஹரியின் விருப்பமாகவே உள்ளது. ஆகையால், ஸ்ரீஹரியின் விருப்பத்தை பிரம்மன் கண்டிப்பாக நிறைவேற்றுகிறார். சாஸ்திரங்களுக்கு எதிராக கோயில்களை அமைத்து அவரை பூஜித்தால், பிரம்மதேவருக்கு அது ஒப்புவதில்லை. ஆகையால் அந்தக் கோயில்களுக்குப் போய் நாம் பிரம்மதேவரை பூஜித்தால், அது அவருக்கு திருப்தியைக் கொடுப்பதில்லை. ஆகவே, யார் பிரம்மதேவருக்குப் பூஜை செய்ய விரும்புகிறாரோ, அவர் முக்யபிராணரின் சன்னிதானம் இருக்கும் இடங்களுக்குப் போய், முக்யபிராணதேவருக்கு மட்டுமே பூஜை செய்யவேண்டும். ஸ்ரீஹரியின் விருப்பத்தின்படி பிரம்மதேவருக்கும்கூட அது திருப்தியையே அளிக்கிறது.
கே: நான்முக பிரம்மனுக்கு பூஜைகள், உற்சவங்கள் எதுவும் நடைபெறாது என்று ருத்ரர் ஏன் சாபமிட்டார்? இதற்கு என்ன பின்புலம்?
ப: ஒரு முறை சிவன், பிரம்மனைவிட தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார். அப்போது பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தார். இதே சமயத்தில், உனக்கு பூலோகத்தில் பூஜைகள், உற்சவங்கள் நடைபெறாது என்று பிரம்மனுக்கு சாபம் கொடுத்தார். இன்னொரு சமயத்தில், ப்ருகு முனிகளும் இதே போல் சாபம் அளித்தார்.
கே: பிரம்மன் பிறக்கும்போது அவருக்கு ஒரு முகம் இருந்தது என்று சிலர் சொல்கின்றனர். சிலர் நான்கு என்றும் சிலர் ஐந்து முகம் என்றும் சொல்கின்றனர். இதில் எது சரி? எது தவறு?
ப: ஆம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இதைச் சொல்கின்றனர். விஷ்ணுவின் நாபி-கமலத்திலிருந்து பிறக்கும்போது பிரம்மனுக்கு ஒரே ஒரு முகம் இருந்தது. நான்கு திசைகளையும் பார்ப்பதற்கு நான்கு முகங்களைப் பெற்றார். முதலிலிருந்த முகத்தையும் சேர்த்து, மொத்தம் ஐந்து முகங்கள் ஆயின என்கின்றனர். ஆனால், பிரம்மன் பிறக்கும்போது நான்கு முகங்கள் இருந்தன. ஐந்தாவது முகம் என்பது சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே தோன்றுகிறது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கே: பிரம்மனின் ஐந்தாவது முகத்தை ருத்ரர் பிய்த்து எறிந்தார் என்று சொல்கிறார்கள். இதற்கு ஆதாரம் உள்ளதா? இதை நாம் ஏன் ஒப்பவேண்டும்?
ப: தன்னைப் போல பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் என்பதை அறிந்த ருத்ரருக்கு கோபம் வந்தது. ஆகவே அந்த ஐந்தாவது முகத்தை அறுத்து, அவரை நான்முகனாக்கினார். இதுவே ‘பிரம்மகபால’ என்று ஆகியது என்ற கதைகளை லிங்கபுராணத்தில் படிக்கலாம். ஆனால் இது பிரம்மதேவருக்கு ஸ்ரீஹரி இட்ட கட்டளை. ஸ்ரீஹரியின் கட்டளையை பிரம்மதேவர் பின்பற்றுகிறார். இப்படி, உள்ளர்த்தத்தை தெரிந்து கொள்ளவேண்டுமே தவிர அந்த கதையை ஆதாரமில்லாதது என்று சொல்ல முடியாது. பிரம்மத்விஷே என்னும் ஸ்ருதிக்கு உரை எழுதும்போது, ஸ்ரீபத்பநாபதீர்த்தரே முதன்முதலில் பிரம்மகபாலத்தைப் பற்றி எழுதினார்.
கே: அப்படியென்றால் பிரம்மர் உடல்-ஊனமுற்றவர் என்று சொல்லலாமா? அவருடைய உடல் சூக்ஷ்மமானது என்றானபிறகு இத்தகைய சம்பவம் நடைபெறுவது சாத்தியமா?
ப: ஆம். ஆகையாலேயே இதை தற்காலிமான சம்பவம் என்று சொல்லவேண்டும். அவருக்கு நான்கு முகங்களே இருந்தன. ஐந்தாவது தலையானது, ருத்ரதேவரின் பிரம்ம-கபாலத்திற்காக மட்டுமே உருவானதாகும். ஆகையால் அவர் உடல்-ஊனமுற்றவர் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை.
கே: ரமாதேவியிடமிருந்து பிறந்த நான்முகனை ஸ்ரீஹரி தின்பதற்கு எப்படி சாத்தியம்? மகனை தந்தை தின்பது சரியாகுமா?
ப: சதுர்முகப் பிரம்மனுக்கு ‘சம்வத்ஸர’ என்று இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட பிரம்மனின் அழகினைக் கண்டு ம்ருத்யுநாமகனான ஸ்ரீஹரி அவரை தின்பதற்காக வாய் திறந்தார். அப்போது பயந்த பிரம்மன் ‘பாண்’ (BaaN) என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். இதிலிருந்தே சரஸ்வதி பிறந்தார். சரஸ்வதியின் பிறப்பிற்காக ஸ்ரீஹரி நடத்திய நாடகமே இது. அதுமட்டுமல்லாமல், பிரம்மன் தனக்கு சரியான உணவு ஆகமாட்டார், ஆகையால் அவர் மூலமாக உலகத்தைப் படைத்து, அந்த பிரம்மாண்டத்தில் பல ஜீவராசிகளை மற்றும் பொருட்களைப் படைத்து, அந்தப் பொருட்களை தின்றால் வயிறு நிறையவேண்டும் என்று ஸ்ரீஹரி நினைத்து, பிரம்மனின் மூலமாக மொத்த உலகத்தையும் படைத்தார். ஆகையால் பின்னர் உலகம் பிறப்பதற்கு இது ஒரு நடத்தப்பட்ட நாடகம் என்றே நினைக்கவேண்டும்.
கே: தன்னிடமிருந்து பிறந்த சரஸ்வதியை நான்முகப் பிரம்மன் தானே திருமணம் செய்தார். மகளை மணம் புரிவது என்ன நியாயம்?
ப: பல அறிஞர்கள் இதனை கடுமையாக ஆட்சேபிக்கின்றனர். ஆனால் சரஸ்வதி இந்த ஜென்மத்தில் மட்டும் பிரம்மனுக்கு மனைவி அல்ல. அனாதி அனந்த காலம் வரைக்கும் அவரே பிரம்மனின் மனைவி ஆவார். எப்படி லட்சுமியானவர் ஸ்ரீஹரியின் மனைவியாக அனாதி அனந்த காலத்தில் இருக்கிறாரோ அதைப்போலவே, சரஸ்வதிகூட பிரம்மனின் நியதபத்னி ஆகிறார். ஆகையால், சரஸ்வதியை பிரம்மனின் மகள் என்று எப்போதும் நினைக்கக்கூடாது.
கே: தன் மனைவியை பிரம்மன் ஏன் மகளாகப் பிறப்பித்தார்? வேறு வழியில் பிறக்கவைத்து, திருமணம் செய்திருக்கலாமல்லவா?
ப: துஷ்ட-காமத்தை பிரம்மன் படைக்க வேண்டியிருந்தது. அதற்காக தன் மனைவியையே மகளாக பிறக்கவைத்து, துஷ்ட-காமம் என்னும் பொருளை இதிலிருந்து படைத்தார்.
கே: துஷ்ட-காமத்தை ஏன் படைத்தார்? அதற்காக இந்த நாடகத்தை ஏன் நடத்த வேண்டும்?
ப: உலகத்தைப் படைக்கும் ஒரு அங்கமாக, காமம், பயம், அஞ்ஞானம், பொறாமை ஆகியவற்றைப் படைக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு தோஷங்களைக் காட்டியவாறு, அந்தந்த விஷயங்களை பிரம்மன் படைத்தார். உதாரணத்திற்கு, தனது மானச புத்திரர்களான சனகாதிகள், படைத்தல் தொழிலை முன்னெடுத்து நடத்தவில்லை என்று அவர்கள் மேல் கோபம் கொண்டார். இதிலிருந்து கோபம் என்னும் விஷயம் உண்டாயிற்று.
கே: தன்னிலிருந்து பிறந்த மகளை திருமணம் செய்துகொள்ள தயாரானார் பிரம்மன் என்று பாகவத மூன்றாவது ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மரீசி முதலான ரிஷிகள் எதிர்த்தபோது, அவளை தியாகம் செய்தார். அப்போது கெட்டவர்கள் அவளை ஏற்றுக்கொண்டனர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுவே சரியான கதை. இதற்கு எதிராக, மகளை திருமணம் செய்துகொண்டார் என்று எப்படி சொன்னீர்கள்?
ப: இதற்கு பாகவத தாத்பர்யத்தில் தெளிவான பதில் உள்ளது. மனைவி வேண்டுமென்ற ஆசையில், பிரம்மன் தனது உடலை இரண்டு பாகங்களாகப் பிரித்தார். அந்த உடலில் இடது பக்கத்திலிருந்து சரஸ்வதி பிறந்தார். தானே இவரைத் திருமணம் செய்துகொண்டார். இன்னொரு சமயத்தில், ஒரு துஷ்டளான சரஸ்வதியை பிறக்கவைக்கிறார். இவள் துஷ்ட சாஸ்திரங்களுக்கு மற்றும் துர்விஷயங்களுக்கு அபிமானினியாக இருக்கிறார். லௌகிக விஷயங்களில் ஆசைகொண்ட இவரை பிரம்மன் காதலிப்பதாக நாடகம் ஆடினார். அதை மரீசி முதலான ரிஷிகள் எதிர்த்தபோது, அவரை தியாகம் செய்து, துர்ஜனர்களிடம் அனுப்பினார். துர்ஜனர்கள் இவரின் வருகையால், கெட்ட வழியில் நடக்கத் துவங்கினர் என்று சொல்கின்றனர்.
இதிலிருந்து, வேதங்களுக்கு அபிமானினியான சரஸ்வதியை தான் மணம் புரிந்துகொண்டு, கெட்ட சாஸ்திரங்களுக்கு அபிமானினியான சரஸ்வதியை திருமணம் செய்துகொள்ளாமல் துஷ்டர்களிடம் அனுப்பினார் என்ற உண்மையை அறியவேண்டும்.
கே: தனது நான்கு முகங்களிலிருந்து பிரம்மன் என்னென்ன விஷயங்களைப் படைத்தார்?
ப: நான்கு வேதங்கள், நான்கு ரித்விஜர்கள், நான்கு திசைகள், நான்கு ஆசிரமங்கள், நான்கு ஜாதிகள், நான்கு சாஸ்திரங்கள், நான்கு சந்தஸ்கள் ஆகியவற்றை - கிழக்கிலிருந்து துவங்கி, வரிசையாக உள்ள தனது நான்கு முகங்களிலிருந்து படைத்தார்.
கே: ஆண் பெண் கூடினால் சந்ததி உண்டாகும் என்னும் விஷயத்தை எப்படி படைத்தார்?
ப: பிரம்மனின் உடலின் ஒரு பாகம் சரஸ்வதியாகி, மற்றொரு பாகம் தானாகவே இருந்து, தன் மனைவி தனது மறுபாதி என்று சொல்வதின் மூலம் தம்பதிகளின் அந்நியோன்யத்தை ஸ்தாபித்தார். இதன் மூலமாகவே சந்ததி உண்டாக்குவதை தடையின்று நடக்குமாறு செய்தார். அது மட்டுமல்லாமல், அர்த்தநாரிநர ரூபத்தினால் ஒன்றாகி இருந்த பிரம்ம சரஸ்வதி இருவரும் வெவ்வேறு உடல்களைப் பெற்று, பின் ஒன்று கூடினர். அப்போது இன்னொரு ஆண்-பெண்ணின் ஜோடி பிறந்தது. அந்த ஆண் - ஸ்வாயம்புவ மனு. பெண் - ஷதரூபாதேவி. இந்த ஸ்வாயம்புவ மனு, ஷதரூபாதேவியை திருமணம் செய்து, பிரியம்வ்ரத, உத்தானபாத ஆகிய என்று அந்த வம்சம் துவங்கியது. தேவலோகத்தில் கருட, சேஷ, ருத்ரர் முதலானவர்கள் பிரம்மனிடமிருந்தே பிறந்து, சந்ததிகளை துவக்கினர்.
கே: ஸ்ரீஹரியின் நாபிகமலத்திலிருந்து பிறந்தபோது, பிரம்மன் தனது படைப்புத் தொழிலை துவக்கினார் அல்லவா?
ப: நாபிகமலத்திலிருந்து பிரம்மன் பிறந்தபோது, அவருக்கு படைப்புத் தொழில் செய்வதற்கு அதிகாரம் இருந்திருக்கவில்லை. ஸ்ரீஹரியே அனைத்தையும் தனது உறுப்புகளிலிருந்து படைத்து வந்தார்.
கே: பிரம்மன் சரஸ்வதியை போகிப்பதற்காக சென்றபோது, சரஸ்வதி பெண் மானின் உருவம் கொண்டு சிவனிடம் அபயம் வேண்டி ஓடினார். அப்போது சிவன் அந்த மானை தன் தொடையின் மேல் வைத்து காப்பாற்றினார். பிரம்மனை அடித்துத் துரத்தினார் என்ற கதையை சைவர்கள் சொல்கின்றனர். இது சரியா?
ப: இந்த கதையும் லிங்கபுராணத்தில் இருக்கிறது. மானின் உருவத்திலிருந்த சரஸ்வதியை காப்பாற்றியதாலேயே, சிவனுக்கு மிருகதர, மிருகாலய என்றெல்லாம் பெயர்கள் வந்தன. ஆனால், வேதாபிமானினியான சரஸ்வதி பெண் மானின் ரூபத்தில் சிவனிடம் ஓடவே இல்லை. அது வேறு ஒருவள்.
கே: சரஸ்வதியின் விலங்கு ரூபங்களைப் பற்றி, உபநிஷத்களில் அல்லது வேறு சாஸ்திர கிரந்தங்களில் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா?
ப: ஆம். பிருஹதாரண்யக உபநிஷத்தில் மிகத் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ’தன்னிந்தலே நன்னன்னு ஹுட்டிஸி, நன்னன்னு மதுவெ ஆகுத்திருவனல்லா?’ (தன்னிடமிருந்தே என்னைப் பிறப்பித்து, என்னை திருமணமும் செய்துகொண்டாரே?) என்று சரஸ்வதி ஆச்சரியப்பட்டு, பசுவாக மாறினார். அப்போது பிரம்மன், எருதாக மாறி, இருவரும் சேர்ந்து, பசுக்கள் முதலானவைகளைப் படைத்தனர். பிறகு சரஸ்வதி பெண் குதிரையாக மாறினார். அப்போது பிரம்மன் ஆண் குதிரையாக மாறினார். சரஸ்வதி பெண் கழுதையானபோது, பிரம்மன் ஆண் கழுதையானார்.
இப்படி பல்வேறு விலங்குகளின் ரூபங்களை சரஸ்வதி எடுத்தபோது, அதற்கேற்ப தானும் அந்தந்த விலங்குகளின் ரூபத்தை எடுத்து, உலகத்திலுள்ள அனைத்து விலங்குகளையும் படைப்பதற்கு காரணமாயினர். இதுவே சரஸ்வதி விலங்கு ரூபங்களை எடுத்ததற்கான காரணமே தவிர, தனக்கு பிரம்மன் வேண்டாம் என்று அவள் விலங்கு ரூபத்தை எடுக்கவில்லை.
கே: பிரம்மதேவர் இந்த உலகத்திற்கு உபதேசித்த புராணங்கள் எவை?
ப: பதினெட்டு புராணங்களில் முதலாவது பிரம்ம புராணம். இதை பிரம்மன், நாரதருக்கு உபதேசித்தார். வால்மிகி முனிவருக்கு ராமாயணம் எழுதுமாறு கட்டளையிட்டார். மகாபாரதத்தை எழுதுமாறு வேதவியாஸ தேவரிடம் வந்து வேண்டினார். நாராயணனிடமிருந்து பாகவதத்தை உபதேசம் பெற்று, அதை உலகத்தில் பிரசாரம் செய்தார். இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு புராணங்களிலும், ஆங்காங்கு வரும் உபதேசங்களுக்கு இந்த நான்முக பிரம்மதேவரே காரணமாக இருக்கிறார்.
கே: பிரம்மதேவர், ஸ்ரீஹரியின் எந்தெந்த ரூபங்களிலிருந்து எவ்வளவு முறை அவதரித்தார்? எந்த பெயர்களைப் பெற்றார்?
ப:
1. படைப்பின் துவக்கத்தில் பிரம்மாண்டத்தின் வெளியே ஸ்ரீஹரியின் நாபி-கமலத்திலிருந்து முதன்முதலில் தோன்றினார். பிரம்மா என்னும் பெயரைப் பெற்றார்.
2. பிரம்மாண்டத்தின் உள்ளே ஸ்ரீஹரி-ஸ்ரீதேவியிடம் ஒரு ஆண்டு காலம் கர்ப்பத்தில் இருந்து, சம்வத்ஸர என்னும் பெயர் பெற்று பிறந்தார்.
3. வாசுதேவ-மாயாதேவியரிடம் விரிஞ்ச என்னும் பெயரில் பிறந்தார்.
4. சங்கர்ஷண-ஜயாதேவியரிடம் சூத்ர என்னும் பெயரில் அவதரித்தார்.
5. அனிருத்த-சாந்திதேவியரிடம் மஹான் என்னும் பெயரில் அவதரித்தார்.
6. பிரத்யும்னன்-க்ருதிதேவியரிடம் புருஷ என்னும் பெயரில் அவதரித்து, மொத்த பிரம்மாண்டத்தையே படைத்தார்.
இன்னும் பலமுறை ஸ்ரீஹரியிடமிருந்து அவதரித்திருக்கிறார். ஆத்மா, சுமனா, நான்முக, பூர்வஜ இவையும் பிரம்மனின் பெயர்கள் என்று ஷப்தநிர்ணய கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
கே: பிரம்மதேவரிடம் நாம் முக்கியமாக வணங்கவேண்டிய குணம் எது?
ப: பிரம்மதேவர், ஸ்ரீஹரியின் நேரடி பிரதிபிம்பராக இருக்கிறார். இந்த பிரம்மனிடம், ருத்ரதேவர் எப்போதும் ஸ்ரீஹரியைக் குறித்து வேண்டியபடியே இருக்கிறார். இத்தகைய சிறப்புமிக்க பிரம்மதேவரின் அந்தர்யாமியாக இருக்கும் ஸ்ரீஹரியைக் கண்டு வணங்கி, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்வோம்.
கே: பிரம்மதேவரின் அருளை நாம் எப்படி பெறவேண்டும்?
ப: மொத்த பிரம்மாண்டத்தில் எவ்வளவு மணல் துகள்கள் உள்ளன? என்று கேட்டால் யாராலும் பதில் சொல்வது சாத்தியமில்லை. ஆனால், பிரம்மதேவர் ஒரே நொடியில் அனைத்தையும் எண்ணி சொல்லிவிடுவார். இதுமட்டுமே அவரது சாமர்த்தியமில்லை. பற்பல பிரம்மாண்டத்திலிருக்கும், மொத்த மண்ணின் துகள்களை ஒரு நொடியில் எண்ணும் சாமர்த்தியம் அவருக்கு உண்டு. இத்தகைய அவரது சாமர்த்தியத்தை ஊகிப்பதற்கும் நம்மால் முடியாது. நம் சக்திக்கேற்ப, ஸ்ரீஹரியின் குணங்களைப் பற்றி புதிதுபுதிதாக தெரிந்துகொள்ளலே வேண்டும். அப்போது மட்டுமே, நம்மை படைத்ததற்கு ஒரு அர்த்தம் உள்ளது என்று அறிந்து, பிரம்மன் நமக்கு அருளுவார்.
கே: நம் வாழ்க்கையை நாம் எப்படி அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்?
ப: நமது வாழ்க்கையின்படி 864 கோடி ஆண்டுகள் கழிந்தால் அது பிரம்மதேவருக்கு ஒரு நாள். இத்தகைய 100 ஆண்டுகள் கழிந்தால், அவருக்கு ஒரு கல்பம். அவரது சாதனை 200 கல்பம். அந்த 200 கல்பத்தில், ஒரே ஒரு நொடிகூட அவர் ஸ்ரீஹரியை நினைக்காமல் இருப்பதில்லை. சம்சாரத்தில் மூழ்கியிருக்கும் நாம், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஸ்ரீஹரியை நினைக்க வேண்டும். பிரம்மதேவரின் சாதனையை, த்ருவ நட்சத்திரமாக வைத்துக்கொண்டு, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்வோம்.
கே: நான்முக பிரம்மனின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.
ப: பிரளய காலத்தில் சேஷனின் மேல் நாராயணன் தனியாகப் படுத்திருந்தார். பிரளய காலம் முடியும்போது, அவரின் வயிற்றிலிருந்து உலகம் தோன்றியது. அதிலிருந்தே ஒரு தாமரை மலர்ந்தது. அந்த தாமரையில் நான்முகன் பிறந்தார். பிறந்தவுடனேயே அனைவரும் ஸ்ரீஹரியைக் காணாமல், தாமரையின் தண்டின் உள்ளே தேடினர். அங்கும் ஸ்ரீஹரியை காணாமல் பாற்கடலில் தேடினர். இறுதியில், ஸ்ரீஹரியைக் குறித்து பல்வேறு ஸ்தோத்திரங்களைச் செய்து பாடி வேண்டினர்.
நான்முகனின் பிரார்த்தனையில் மனமுருகி ஸ்ரீஹரி அவர் முன் தோன்றி, ‘தப தப’ என்று கட்டளையிட்டு மறைந்தார். 50 ஆண்டுகள் பிரம்மன் கடுந்தவம் புரிந்தார்.
பிரளய காலத்து நீர், காற்றினை உட்கொண்டு, தாமரையை பதினான்கு லோகங்களாகப் பிரித்தார். பத்து விதமான ஸ்ருஷ்டிகளைத் துவக்கினார். முதலில் பஞ்சபர்வ அவித்யைகளைப் படைத்து (தமஸ், மோஹ, மகாமோஹ, தமிஸ்ர, அந்ததமிஸ்ர என்று ஐந்து அவித்யைகள் உள்ளன), பிறகு மனதிலிருந்து சனகாதி முனிவர்களைப் படைத்தார்.
சனகாதிகள் உலகத்தை மேற்கொண்டு படைப்பதற்கு ஒப்பவில்லை. ஆகவே கோபம் கொண்டு ருத்ரரை படைத்தார். ருத்ரரும் மிக பயங்கரமான பூத, ப்ரேத, பிசாசுகளை படைத்தபோது, அதுவும்கூட பிரம்மனுக்கு திருப்தி அளிக்கவில்லை. இறுதியில் தன்னுடைய உறுப்புகளிலிருந்தே தேவதைகளை, நாரதர் முதலான முனிவர்களை படைத்தார். தன்னுடைய முகத்திலிருந்து வேதாபிமானினியைப் படைத்து, அவளை திருமணம் செய்துகொண்டார். அசுரமோகனத்திற்காக, துஷ்ட-வாக்- அபிமானினியைப் படைத்து, அவளை விரும்பியதாக நாடகமாடி, பின் அவளைத் துறந்தார். நான்கு வேதங்கள், நான்கு ஆசிரமங்கள் ஆகியவற்றைப் படைத்து, தன் மக்களான மரீசி ஆகியோர் செய்த படைப்புகளிலும் திருப்தி அடையாமல், மறுபடி தன் உடலையே ஆண்-பெண் என்று பிரித்து, ஸ்வாயம்புவ மனு, ஷதரூபாதேவியரை படைத்தார். இப்படியாக பல்வேறு விதங்களில் தன் படைப்புத் தொழிலை செய்தார் நான்முகன். அதே நான்முகனின் படைப்பில் பிறந்த நாம், அவரை பிதாமகன் என்றும், நான்முகன் என்றும் அவரை வணங்குவோமாக.
கே: தந்த்ரசார சங்க்ரஹத்தில் பிரம்மதேவரின் தியானம் எப்படி செய்யவேண்டுமென்று ஸ்ரீமதாசார்யர் தெரிவிக்கிறார்?
ப: த்யாயேன் னிஷண்ணமஜயச்யுத நாபி பத்மே
ப்ரோத்யத்திவாகர ஸமூஹ நிகாஷமக்ர்யம் |
மாத்ருப்ரகார கரமுத்தம காந்திமத்பி
ர்வக்த்ரை: ஸ்ருஜந்தமபிலை: பரமார்த வித்யாம் ||
ஸ்ரீஹரியின் நாபியில் அமர்ந்திருப்பவர், உதயசூரியனைப் போல ஒளிரும் ஜீவோத்தமர், தன் தாய் ரமாதேவியைப் போல தானும் இரு கைகளில் தாவரங்களையும், வர-அபய முத்திரைகளையும் தரித்திருப்பவர், பர-வித்யையான அனைத்து வேதங்களையும் உச்சரிப்பவர். அ-கார நாமகனான ஸ்ரீஹரியிடமிருந்து பிறந்து அஜ என்ற பெயரைப் பெற்றவரான நான்முக பிரம்மனை நாம் தியானிப்போமாக.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment