10/12 பாரதி தேவி
ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
கேள்வி: பாரதிதேவியின் நைவேத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாமா?
பதில்: கண்டிப்பாக. நான் உண்ணும் ஒவ்வொரு உணவு பொருட்களையும் பிராணதேவருக்கு நைவேத்தியம் செய்வதைப்போல, பாரதிதேவிக்கும் நைவேத்தியம் செய்யவேண்டும்.
கே: ஸ்ரீஹரி இல்லாத பிற தேவதைகளின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டால், சாந்திராயன விரதத்தை செய்யவேண்டும் என்கிறார்களே?
ப: கலிபிரவேசம் ஆகக்கூடிய ருத்ரர் முதலிய தேவதைகளின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்கிறார்கள். ஆனால் எக்காலத்திலும் கலிபிரவேசம் செய்வதற்கு வாய்ப்பேயில்லாத, பரசுக்ல-த்ரயர்களின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்வதால் எந்தவித தோஷமும் வருவதில்லை.
கே: அப்படியென்றால், தினந்தோறும் பூஜை நேரத்தில், பாரதிதேவிக்கும் நாம் பூஜை செய்யவேண்டுமா?
ப: ஆம். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், எப்படி லட்சுமியை விட்டு எப்படி ஸ்ரீஹரியை தனியாக பூஜிப்பதில்லையோ, அப்படியே பிராணதேவரை விட்டு பாரதிதேவியை தனியாக பூஜிக்கக்கூடாது.
கே: அப்படியென்றால், லட்சுமிதேவியைப் போல, பாரதிதேவியும்கூட நித்யா-வியோகினியா? (கணவனை என்றும் பிரியாதவர்).
ப: லட்சுமியிடம் இருக்கும் மிகச்சிறப்பான குணங்கள், பாரதிதேவியிடம் இருப்பதற்கு சாத்தியமில்லை. ஆகையால், நித்யாவியோக என்று சொல்வதற்கு பதில், பிராணதேவரை விட்டு மற்றவர்களை கணவன் என்று எப்போதும் நினைக்காதவள் என்று சொல்லலாம்.
கே: ஸ்ரீமதாசார்யர் அவதரித்தபோது, பாரதிதேவியும் இவ்வுலகில் அவதரித்தாரா?
ப: கல்யாணிதேவியாக அவதரித்தார் என்று சிலர் சொல்கின்றனர். பாரதிதேவியின் அவதாரங்களைப் பற்றி வரும் பக்கங்களில் பார்ப்போம்.
கே: பாரதிதேவியை எப்படி அறியவேண்டும்?
ப: ‘சமஸ்தகுண சம்பூர்ண பாரதே ச சரஸ்வதே | சமஸ்ததோஷரஹிதா ஷர்வஷக்ராதிவந்திதா || சரஸ்வதி மற்றும் பாரதிதேவியர் இருவரும் அனைத்து நற்குணங்களால் நிரம்பியவர்கள். எந்தவித தோஷங்களும் இல்லாதவர்கள். பிரம்ம-ருத்ரர்களுக்கு சமமானவர்களாக சரஸ்வதி-பாரதியரும் அனைத்து நற்குணங்களால் நிரம்பியவர்கள். தாரதம்யத்தில் பாரதிதேவியை விட சரஸ்வதி சிறிது மேலே இருந்தாலும், ஸ்வரூப-யோக்யதைகளில் இருவரும் சமமாகவே கருதப்படுகின்றனர்.
கே: பாரதிதேவி எதற்கு அபிமானினியாக இருக்கிறார்?
ப: நம்பிக்கை, திருப்தி, அனுபவம், சுகபோகங்கள், குருபக்தி, ஹரிபக்தி ஆகிய சாத்விக குணங்களுக்கு பாரதிதேவி அபிமானினியாக இருக்கிறார். இந்த குணங்களைப் பெறவேண்டுமென்றால், பாரதிதேவியை சரணடையவேண்டும்.
கே: தத்வந்யாஸத்தில் ’பராய அவ்யக்தாத்மனே பிரம்மணே பாரதீப்யம் நம:’, ‘பராய மஹதாத்மனே ப்ரம்ஹவாயுப்யாம் நம:’ என்றிருக்கிறது. அவ்யக்த தத்வத்திற்கு சரஸ்வதி பாரதியர் அபிமானினியாக இருக்கின்றனர். மஹத் தத்வத்திற்கு பிரம்மவாயுகள் அபிமானியாக இருக்கின்றனர் என்று தத்வந்யாஸத்தில் சொல்லியிருக்கின்றனர். அத்தகைய அவ்யக்ததத்வத்திற்கு சரஸ்வதி பாரதியர் அபிமானினியர் என்று வணங்கி, பிறகு மஹத்தத்வத்திற்கு அபிமானியான பிரம்மவாயுகளை வணங்கவேண்டும் என்பது எப்படி சரியாகும்?
ப: இந்தக் குழப்பம் பலருக்கு உள்ளது. பதில் கீழ்வருமாறு. ‘மஹத்தத்வாதி ஜனனீ ப்ரக்ருத்யாத்யபிமானினி’ என்று சரஸ்வதி பாரதியர் அவ்யக்த தத்வத்திற்கு மட்டுமல்லாது அதற்கும் மூலகாரணமான ப்ரக்ருதிக்கும் அபிமானினியராக இருக்கிறார்கள் என்று பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ப்ரக்ருதிக்கும், அவ்யக்த தத்வத்திற்கும் லட்சுமிதேவியே அபிமானினியாக இருக்கிறார். சரஸ்வதி பாரதியர் தற்காலிக அபிமானினியாக இருக்கின்றனர். இந்த கோணத்திலேயே ‘அவ்யக்தாத்மனே ப்ரம்மணிபாரதீப்யாம் நம:’ என்கிறார்கள். மேலும் பிரம்ம வாயுகளை முதலில் சொல்லாமல், சரஸ்வதி பாரதியை வணங்கினால், அது தாரதம்யத்திற்கு எதிரானது ஆகும்.
கே: வாயுதேவர் மற்றும் பாரதிதேவி - இருவரும் எதில் சமம்? எதில் சமமில்லை?
ப: லட்சுமி நாராயணரிடம் எப்படி காலத்திற்கேற்றவாறு சமானம் இருக்கிறதோ, அதைப்போலவே, முக்யபிராணர்-பாரதியரிடமும் இருக்கிறது என்று தெரியவேண்டும். முக்தியில் இருவருக்கும் ஒரே இடம் இருந்தாலும், குணத்தில் வேறுபாடு இருப்பதால் ப்ராணதேவரிடம் இருக்கும் ஆனந்தம் / குணம், பாரதிதேவியிடம் இருப்பதில்லை. இதைப்போலவே பிரம்ம சரஸ்வதியிடமும் வேறுபாடு அறிந்துகொள்ள வேண்டும்.
கே: லட்சுமிதேவியிடம் இருக்கும் பல ரூபங்களில், தட்சிணா என்னும் ரூபத்திற்கு சிறந்த இடம் இருப்பதைப்போல, சரஸ்வதி பாரதியிடம்கூட சிறந்த ரூபங்கள் உள்ளனவா?
ப: ஆம். எப்போது பிரம்மனும் வாயுதேவரும் அர்த்தநாரி ரூபத்தை எடுக்கிறார்களோ, அப்போது மற்ற அனைத்து ரூபங்களின் ஆதிக்கமும் இவர்களிடத்தில் இருக்கிறது. ‘அர்த்தநாரீனரத்வேன யதா பர்த்ரா ஸஹ ஸ்திதா | ததோத்தமா தக்ஷிணாவத் ததன்யத்ராவரா மதா’.
கே: பாரதிதேவியின் தேகத்தின் லட்சணங்கள் என்ன? அவரின் ஆயுள் எவ்வளவு?
ப: சரஸ்வதி மற்றும் பாரதியரின் தேகங்கள் 32 லட்சணங்களினால் ஆனது. 96 அங்குல உயரம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ருத்ராதி அனைத்து தேவர்களால் என்றென்றும் முழுதாக அறியமுடியாத மகாமகிமையைக் கொண்டவர். மனிதர்களின் ஆயுளைப் போன்று 311 ட்ரில்லியன் ஆண்டுகள் ஆயுளைக் கொண்டவர்.
கே: பாரதிதேவி எப்படி சர்வக்ஞர் ஆகிறார்?
ப: உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் முழுமையாக அறிந்தவர் பாரதிதேவி. ஆனால் ஸ்ரீஹரியைப் பற்றி முழுவதுமாக இவர் அறிந்திருப்பதில்லை. கூடவே லட்சுமி, பிரம்மா, வாயு இவர்களைப் பற்றியும்கூட இவர் முழுவதுமாக அறிந்திருப்பதில்லை. ஆனால் மற்ற அனைத்து தேவதைகளைவிடவும் அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பவர்.
கே: ’உத்க்ராந்திகத்யாகதீனாம்’ என்னும் சூத்திரத்தில் சொல்லியிருப்பதைப்போல, பிரம்மா, வாயு, சரஸ்வதி மற்றும் பாரதி இவர்களின் ஸ்வரூபம் (தேகம்) அணுவைப் போல இருக்கிறது. இவ்வளவு சிறியதாக உள்ள அணு, அனைத்து இடங்களிலும் நிலைத்திருப்பதற்கு எப்படி சாத்தியம்? மேலும் அனைத்து ஞானங்களையும் பெறுவதற்கு எப்படி சாத்தியம்?
ப: நறுமணம் மிகுந்த கஸ்தூரியை வீட்டில் வைத்தால், வீடு முழுவதும் எப்படி அந்த நறுமணம் வீசுமோ, அப்படியே தேவதைகளும் அணு ரூபமே ஆனாலும் தங்களின் தாரதம்ய தகுதிக்குத் தக்கவாறு அனைத்து இடங்களிலும் நிலைத்திருப்பர். இதைப்போலவே, பாரதிதேவியும் அனைத்து பெண்- ஜீவர்களைவிட அதிக குணம் / ஞானங்களைப் பெறுபவளாகிறார்.
கே: ஸ்வரூபத்தில் பரிமாணாதிக்யவை (பரிமாணாதிக்யம் = வளர்வது அல்லது சுருங்குவது) ஒப்பினால் என்ன பிரச்னை?
ப: ஆம். ஸ்ரீஹரியின் மிகவும் அற்புதமான சக்தியினால், ஸ்வரூபத்தில் பரிமாணத்தை ஒப்பலாம். இதையே ப்ருஹத்பாஷ்யத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கிறார் - ’அல்பதேஜஸ்ததைவால்பம் ஜீவரூபம் ஹி ஸம்ஸ்ருதௌ | ததேவ ஸுமஹத்தேஜ: கரோதி பகவான் மஹத்’.
கே: விகாரத்தை ஒப்பினால் அநித்வத்வ (தாற்காலிக நிலைமை) என்று ஆகிறதா?
ப: விரிவடைவது - சுருங்குவது இவற்றை விகாரம் என்று சொல்லமுடியாது. இந்த விரிவடைதல் - சுருங்குதல் இவை ஸ்ரீஹரியின் அற்புத சக்தியினால் நடைபெறுகிறது. அணிமா முதலான யோக சித்திகளை, ஜீவர்கள் பெறுகிறார்கள். மேலும் முக்தியில் அனைவரும், மிகச் சிறியதான தன் ஸ்வரூபத்தை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால், அநித்வத்வ என்னும் சந்தேகத்திற்கு இடமில்லை.
கே: நம் வலது கண்ணில் வாயுதேவர் மிகவும் அழகான கோவத்ஸ ரூபத்தில் இருக்கிறார். அங்கு பாரதிதேவியை எப்படி நினைக்கவேண்டும்?
ப: தன் கணவரின் மிகவும் அழகான கன்றுக்குட்டியின் ரூபத்தைக் கண்டு, பாரதிதேவிக்கு மிகவும் அதிகமான பாசம், பக்தி உண்டாகிறது. தான் கண்ணின் மேல் பாகத்தில் அமர்ந்து, அந்த கன்றின் அழகினை முழுமையாக ரசிக்கிறாள். அது மட்டுமல்லாமல், அத்ரி என்னும் பெயரைக் கொண்டு, ஒரு மனதுடன் அந்தக் கன்றினையே தியானம் செய்கிறாள். இந்த கணவன் - மனைவியரின் ஒற்றுமை வேறெங்கும் காணமுடியாதது.
கே: நாம் மூச்சு விடுவதற்கு காரணம் பிராணதேவர். இவருடன் சேர்த்து பாரதிதேவியையும் சிந்திக்க வேண்டுமா?
ப: ’நாஸத்யதஸ்ரரு ஸ்வாஸமானி பாரதி’ (ஹரி-8-8) என்று சொல்லியிருப்பதைப் போல, அஸ்வினி தேவதைகளுக்குள் வாயுதேவர் மற்றும் பாரதிதேவி நிலைத்திருந்து நாம் சுவாசம் செய்யும் செயலை நடத்துகின்றனர்.
கே: அப்படியென்றால் பாரதிதேவியும், பிராணதேவருடன் சேர்ந்து ஹம்ஸமந்திரத்தை ஜெபிக்கிறாரா?
ப: ‘சுததியிம்தெடகொடி ஹம்ஸோபாஸனெய மாள்ப’ என்பதுபோல் பாரதிதேவியின் கூட இருந்து ஹம்ஸமந்திரத்தை பிராணதேவர் ஜெபிக்கிறார்.
கே: நம் தேகத்தில் பாரதிதேவியை எங்கு, எப்படி பூஜிக்கவேண்டும்?
ப: ‘த்விதளபத்மவு ஷோபிபுது கண்டதலி’ என்று சொல்வதைப்போல நம் கழுத்தில் இரண்டு இதழ்கள் உள்ள தாமரை உள்ளது. வாயுதேவர் அந்த தாமரையின் வலது இதழில் நிலைத்திருக்கிறார். இடது இதழில் பாரதிதேவி இருக்கிறார். இருவரும் தைஜஸ ரூபியான ஸ்ரீஹரியை நிரந்தரமாக பூஜித்து வருகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தவர்களான பிராண-பாரதியரை வணங்குவதைவிட சிறந்த காரியம் வேறு என்ன இருக்கப்போகிறது?
கே: பாரதியை வாக்-அபிமானினி என்கிறார்கள். ஆகையால் வாக்-இந்திரியத்திலும் (நாக்கு) பாரதி இருக்கிறாரா?
ப: ஆம். வாக்-இந்திரியத்தில் ஹயக்ரீவரூபியான ஸ்ரீஹரி பெண் ரூபத்தில் இருக்கிறார். இவரை பூஜித்தவாறு, பாரதிதேவி அங்கிருந்துகொண்டு, வாக்-அபிமானினியாக இருக்கிறார்.
கே: வலது கண்ணில், கழுத்தில், நாக்கினில் இப்படி மூன்று இடங்களில் நிலைத்து, பாரதிதேவி நம்மை ரட்சிக்கிறார் என்று கூறினீர். உடலின் வேறு பகுதிகளிலும் பாரதிதேவி இருக்கிறாரா?
ப: நம் உடலின் வலது பாகத்தில் இருக்கும் அனைத்து நாடிகளிலும்கூட பாரதிதேவியின் சன்னிதானம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாடிகளில் ஆறாகவும் பாய்ந்து நம்மை சுத்தப்படுத்துகிறார். பெண்-உடலுக்கு பாரதிதேவி முக்கிய அபிமானினியாக இருக்கிறார். இதனை பெண்கள் விசேஷமாக நினைத்துப் பூஜிக்கவேண்டும்.
சிரி சரஸ்வதி பாரதி சௌபர்ணி வாருணி பார்வதிமுகரு
இருதிஹரு ஸ்த்ரீயரொளு அபிமானி தாவெனிஸி (ஹரி-11-29)
கே: நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் பாரதிதேவியின் அபிமான்யத்தைப் பெற்றது எவை?
ப: ‘அன்னமானி சஷாங்கதொளு காருண்யசாகர கேசவனு பரமான்னதொளு பாரதியு’ (ஹரி-31-14) என்று சொல்வதைப்போல பரமான்னத்தில் (பாயசம்) பாரதிதேவி இருக்கிறார். ஆகவே அவர் சன்னிதானம் இருக்கும் பாயசத்தை, மிச்சம் வைக்காமல் சாப்பிடவேண்டும் என்றும்; இதர பொருட்களை சிறிதளவு மிச்சம் வைத்தே சாப்பிடவேண்டும் என்பதும் வழிவழியாக நம்மிடம் இருந்துவரும் ஒரு நம்பிக்கை. லட்சுமிசோபான’வில் முக்யபிராணரின் வீட்டில் பாரதிதேவி, நாராயணரூபியான ஸ்ரீஹரிக்கு, பாயசம் ரசான்னத்தை பரிமாறினார் என்று வருகிறது.
கே: நம் ஆயுளில், பாரதிதேவி எப்போது அபிமானினியாகிறார்?
ப: நம் ஆயுளில், 30 வயதுவரை பிரம்மதேவர், 57 வயதுவரை வாயுதேவர், 82 வயதுவரை சரஸ்வதிதேவி, 100 வயதுவரை பாரதிதேவி அபிமானினியாக இருக்கின்றனர். இப்படி அனைவரின் ஆயுளுக்குக் காரணமாகி, வாழ்க்கை என்னும் யக்ஞத்தை சமர்ப்பிப்பதற்கு பாரதிதேவி முக்கிய காரணம் ஆகிறாள்.
கே: பாரதிதேவியிடம், ஸ்ரீஹரியின் எந்த ரூபத்தை நினைக்க வேண்டும்?
ப: ‘பாரதி வாக்தேவி வாயு ஸரோருஹாஸனரல்லி னெலெஸிஹரெல்ல காலதலி’ (ஹரி-8-26) என்று சொன்னதைப்போல, அனிருத்த ரூபியான ஸ்ரீஹரி சக்திநாமகனாக பாரதிதேவியில் எப்போதும் நிலைத்திருக்கிறார். இதையே நாமும் நினைக்க வேண்டும்.
கே: பாரதிதேவி எப்படி பிறந்தார்?
ப: ஸ்ரீஹரியின் பிரத்யும்ன ரூபம் மற்றும் லட்சுமியின் க்ருதி ரூபத்திற்குப் பிறந்தவர் பாரதிதேவி. பிரத்யும்ன மற்றும் க்ருதிக்கு இரு பெண்குழந்தைகள் பிறந்தனர். முதலாமவர் சரஸ்வதி, அடுத்ததே பாரதி.
தாத்பர்ய நிர்ணயத்தில் ஸ்ரீமதாசார்யர் இதையே ‘சூத்ரம் ஸ வாயு: புருஷோ விரிஞ்சி: ப்ரத்யும்னதஸ்சாத் க்ருதௌ ஸ்த்ரீயௌ த்வே’ என்று விளக்கியிருக்கிறார்.
கே: பாரதிதேவியின் சாதனை எவ்வளவு கல்பங்கள்?
ப: பிராணதேவரைப் போலவே 200 கல்ப சாதனை. ஆனால், அவரை விட யோக்யதையில் சிறிது குறைவானவர்.
கே: ஸ்ரீஹரியை பாரதிதேவி எப்போதும் பார்த்தவாறு இருக்கிறாரா?
ப: சரஸ்வதி மற்றும் பாரதிதேவி இருவரும், ஸ்ரீஹரியை தங்களின் இதயத்தில் சந்திரனைப் போல பிம்பரூபியாக எப்போதும் நினைத்தவாறு பூஜித்துக் கொண்டிருக்கின்றனர்.
கே: ஜீவன-ஸ்வரூபத்தில் ப்ராணதேவருக்கு பிரவேசம் இருக்கிறது என்று சொல்வதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதேபோல, பல விவரங்களும் உள்ளன. ஆனால் பாரதிதேவிக்கு பிரவேசம் இருக்கிறது என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
ப: ஸ்வரூப-சரீரத்தில் பாரதிதேவிக்கு பிரவேசம் இல்லை என்று சொல்வதற்கு எங்கும் ஆதாரம் இல்லை. ஆனால், ‘பாரதி மஜ்ஜனனீ’ என்று ஜகன்னாததாசர் இயற்றிய பாடலில், மூன்று குணங்களால் ஆன லிங்க-தேகத்தில் அணுவின் அளவில் இருக்கிறார் என்று சொல்கிறார். இதைத்தவிர, ஹரிகதாம்ருதசாரத்தில் பல இடங்களில், பாரதிதேவிக்கு லிங்கதேகத்தில் பிரவேசம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
கே: எவ்வளவு குணங்களால், பாரதிதேவி வாயுதேவரைவிட குறைவானவர்?
ப: ஞான, ஆனந்தம் முதலான குணங்களில் 100 குணங்களால் குறைவானவர்.
கே: ஹரிகதாம்ருதசாரத்தில், விஜாதீய (நடப்பில் இல்லாத / அசாதாரண) 100 குணங்களால் வாயுதேவரைவிட பாரதிதேவி குறைந்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனா, ஞான, ஆனந்த முதலான குணங்களால் குறைவானவர் என்று நீங்கள் சொல்கிறீர்களே?
ப: பெல்லாரி ஆச்சாரியர் முதலான பல உரையாசிரியர்களும், ஞானம் முதலான குணங்களால் குறைவானவள் என்று சொல்கின்றனர். ‘உமா யாவதனந்தாம்ஷான்’ என்னும் அனுவியாக்யானத்தின் ஸ்லோகத்தை பார்க்கும்போதும் அப்படியே தெரியவருகிறது. ஆனால் இங்கிருக்கும் ‘அனந்த’ என்னும் சொல்லிற்கு 100 என்றே பொருள் கொள்ளவேண்டும்.
கே: பற்பல அம்சத்தினால் குறைந்தவர் என்று நினைத்தால் என்ன பிரச்னை?
ப: பிருஹதாரண்யக பாஷ்யத்தில் மற்றும் அனுவியாக்யானத்தில் ஸ்ரீமதாசார்யர் ‘சந்த்ரேத்யாதி ஸ்வரூபாஸ்தேப்ய: ஷதகுணாவரா:’ என்று மிகத் தெளிவாக, நூறு குணங்களால் குறைவானவள் என்று சொல்லியிருக்கிறார். பற்பல குணங்களால் குறைந்தவள் என்றால், பாரதிதேவிக்கும் மற்ற தேவதைகளுக்கும் தாரதம்யம் சரியாக வருவதில்லை.
கே: ஞானத்தில் பற்பல அம்சத்தினால் குறைந்தவள் என்றும் ஆனந்தத்தில் 100 அம்சத்தின் குறைந்தவள் என்று கூறினால் என்ன பிரச்னை?
ப: பாரதியின் ஞானத்தைவிட வாயுதேவரின் ஞானம் பற்பல அம்சத்தினால் அதிகம் என்று சொன்னால், ஆனந்தமும் அப்படியே சொல்லவேண்டியதாகிறது. ஏனென்றால், ஆனந்தத்திற்கு ஞானமே காரணமாகிறது. ஆனந்தம் 100 மடங்கு அதிகம் என்பதற்கு ஆதாரம் உள்ளது. அதற்குக் காரணமான ஞானமும் 100 மடங்கு அதிகம் என்பதே சரியாக இருக்கும்.
கே: ’ஷதாவரள்’ என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
ப: சாந்தோக்ய உபநிஷத்தின் பாஷ்யத்தில் ’ஷிவாதாஷா தத்தைவாஸ்யா: முக்யவாயு: ஷதோத்தர:’ என்றும் ஐதரேய பாஷ்யத்தில்
‘பிரம்மவாயு ச தத்பார்யே வீந்த்ரஷேஷௌ ச தத் ஸ்த்ரியௌ |
ஷிவஸ்தத்தயிதா ஷக்ரகாமௌ தத்தயிதாதய: ||
ஸர்வே ஸுரா: க்ரமேண்யைவ விஷ்ணோர்ஞாதா அபாகைகா: |
ஞானானந்தபலாத்யேஷு விஷ்ணுபக்தௌ ச ஸர்வஷ: |
ஹீனா: ஷதகுணேன்னைவ க்ரமேணானேன தே மதா: ||’
இத்தகைய ஆதார வாக்கியங்களை கவனமாகப் பார்த்தால், அனைத்து குணங்களை விடவும் 100 மடங்கு குறைவானவர் என்று அறியவேண்டும்.
கே: அனைத்து ஹரிபக்தர்களும் பாரதிதேவியை என்னவென்று சொல்லி பூஜிக்கவேண்டும்?
ப:
ஆசார்ய: பவனோஸ்மாகம் ஆசார்யாணீ ச பாரதீ |
தேவோ நாராயண: ஸ்ரேஷ: தேவி மங்களதேவதா ||
நம் அனைவருக்கும் ஆசாரியர் என்றால் அவர் ஸ்ரீமதாசார்யரே. ’ஆசார்யாணீ’ என்றால் அது பாரதிதேவி. சர்வோத்தமனான தேவன் என்றால் அவர் ச்ரேஷ. மங்களதேவதா என்றால் அது மகாலட்சுமி ஆவார். வித்யாரம்ப (புதிய கல்வியைத் துவக்கும்போது) பாரதிதேவியை ‘ஆசார்யாணீ’ என்று வணங்கவேண்டும் என்கிறார் ராஜர்.
கே: பாரதிதேவியை வேதங்களுக்கு அபிமானினி என்கிறார்கள். இதன் பொருள் என்ன?
ப: அபௌருஷேயமான (ஆதி காலத்திலிருந்து இருக்கும்) வேதங்கள் ஜடம் ஆகும். இத்தகைய ஜடமான வேதத்திற்கு பல தேவதைகள் அபிமானியாக இருக்கின்றனர். ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு வர்ணாபிமானி தேவதைகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் மேல், முக்கிய அபிமானி தேவதையாக இருப்பவரே பாரதிதேவி. இவரே அனைத்து தேவதைகளிலும் நின்று, ஸ்ரீஹரியை சர்வோத்தமன் என்று கொண்டாடுகிறார். இவரை மறந்து வேத-அத்யயனம் செய்தால், அந்த வேதங்களிலிருந்து தத்வஞானம் கிடைப்பது சாத்தியமே இல்லை.
கே: அனைத்து வேத மந்திரங்களும் ஸ்ரீஹரியைத் தவிர, வேறு விஷயங்களைப் பற்றியும் புகழ்ந்து பேசியுள்ளன. ஜகத்-மித்ய (உலகம் பொய்யானது) என்றுகூட வேதம் சொல்கிறது என்று அத்வைதிகள் சொல்கின்றனர். இப்படியிருக்கும்போது, அனைத்து வேத மந்திரங்களினால் பாரதிதேவி, ஸ்ரீஹரியையே சர்வோத்தமன் என்று எப்படி கொண்டாடுவது சாத்தியம் ஆகிறது?
ப: அனைத்து வேதங்களும், வேத மந்திரங்களில் இருக்கும் ஒவ்வொரு எழுத்து, சொல், வாக்கியம் ஆகிய அனைத்துமே ஸ்ரீஹரியையே புகழ்ந்து பாடியுள்ளன. இதனை அறியாத அஞ்ஞானிகள், வேதம் வேறு பல விஷயங்களையும் புகழ்கிறது என்கிறார்கள். அத்வைதிகள் நினைப்பதும் அப்படியே. இதெல்லாம் பாரதிதேவிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அவமானம் ஆகும். இப்படி தவறாக நினைத்து, பாரதிதேயின் அருள் நமக்கு கிடைக்காமல் போகக்கூடாதெனில், அனைத்து வேதங்களும் விஷ்ணுவையே புகழ்கின்றன என்று சரியாக நினைக்கவேண்டும்.
கே: வேதங்களில் இருக்கும் எந்த மந்திரங்கள் பாரதிதேவியை புகழ்கின்றன?
ப:
‘கௌரீர்மாய ஸலிலானி தக்ஷத்யேகபதி த்விபதி ஸாசதுஷ்பதி | அஷ்டாபதி நவபதி பபூவுஷீ சஹஸ்ரக்ஷரா பரமேவ்யோமன் ||’
‘யஸ்தே ஸ்தன: ஷதயோ யோ மயோபூர்யேன விஷ்வா புஷ்யஸி தமிஹ வார்யாணி | யோ ரத்னதா வஸுவித்ய: சுதத்ர: சரஸ்வதி தமிஹ தாதவே க: ||’
என்னும் இரு மந்திரங்கள் சரஸ்வதி மற்றும் பாரதி ஆகியோரை புகழ்கின்றன என்று தந்த்ரசார சங்க்ரஹத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்கிறார். முதலில் இவை ஸ்ரீஹரியையும், பின்னர் சரஸ்வதி, பாரதியையும் புகழ்கின்றன என்று சொல்கிறார். ஆகையால், யாருக்கு பாரதிதேவியும் அருள் வேண்டுமோ, அவர் இந்த இரண்டு மந்திரங்களைச் சொல்லி அவரை வணங்கவேண்டும்.
கே: பாரதிதேவியைப் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறதா?
ப: கருடபுராணத்தில், பாரதிதேவியின் பல ரூபங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் ‘புத்தி’ என்பதும் ஒரு ரூபம் ஆகும்.
‘ஸுபுத்தி ஜனகத்வாத்ஸா ஸஜ்ஜனானாம் ககேச்வர |
அதோ ஸா புத்தினாம்னேதி பாரதீ ஸம்ப்ரகீர்திதா’
என்று இவரை வர்ணிக்கிறார். மற்றும் அனைத்து வேதங்களுக்கு அபிமானினியாக இருப்பதால், இவரை ‘வேதாத்மிகா’ என்றும் கருடபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஸர்வவேதாபிமானித்வாத் ஸர்வவேதாத்மிகா ஸ்ம்ருதா ||’.
கே: பாரதிக்கு புத்தி என்னும் பெயரைப் போல வேறு என்ன பெயர் உள்ளது?
ப: இவரின் இன்னொரு பெயர் - அனுபூதி. ஸ்ரீஹரியின் தத்வஞானம் நம் அனுபவத்திற்கு வருமாறு செய்கிறார் ஆகையால் இவருக்கு அனுபூதி என்னும் பெயர் வந்தது என்று சொல்கிறார்கள். ‘யதானுபூதம் ச ஹரிம் ஸம்யக் தர்சயதி யத: | அதோSனுபூதிஸஞ்ஞா ஸா பாரதி பரிகீர்திதா ||’
கே: பாரதி என்னும் சொல்லின் பொருள் என்ன?
ப: பா என்றால் சுகம் என்று பொருள். எப்போதும் சுகரூபியான இவருக்கு பாரதி என்று பெயர். அல்லது பா என்றால் ஞானம் என்று பொருள். ஞானரூபியான வாயுதேவரின் மனைவியாக இருப்பதால் இவரை பாரதி என்று அழைக்கின்றனர். ‘ஞானரூபஸ்ய வாயோஸ்து பார்யா ஸா பரிகீர்திதா | ஸதா ஸுகஸ்வரூபத்வாத் பாரதீதி ஸுகாத்மிகா ||’
கே: ஹரிவாயுகளிடத்தில் பாரதிதேவி எப்படி பக்தி செய்கிறார்?
ப: மகாகுரு என்று அழைக்கப்படும் வாயுதேவரிடம், ஒரு கணமும் விடாமல் பாரதிதேவி பக்தி செய்கிறார். ஆகையால் இவருக்கு ‘குருபக்தி’ என்னும் பெயரை வேதவியாஸதேவர் கொடுத்தார். இதைவிட அதிக பக்தியை ஸ்ரீஹரியிடம் செய்வதால் ‘ஹரிப்ரீதி’ என்னும் பெயரையும் வேதவியாஸதேவர் கொடுத்தார்.
‘குருஸ்து வாயுரேபோக்த: தஸ்மின் பக்தியுதா ஸதா |
அதஸ்து பாரதீ நித்யம் குருபக்திரிதி ஸ்ம்ருதா |
மஹாகுரோஸ்து வாயோஷ்சபார்யா வை ஸம்ப்ரகீர்திதா |
ஹரௌ ஸ்னேஹயுதத்வாச்ச ஹரிப்ரீதிரிதி ஸ்ம்ருதா |
கே: வேதங்களுக்கு மட்டும் பாரதிதேவி அபிமானினியாக இருக்கிறார் அல்லவா?
ப: வேதங்களுக்கு மட்டும் அல்ல. அனைத்து மந்திரங்களுக்கும்கூட இவரே அபிமானினியாக இருக்கிறார். வேதங்களுக்கு அபிமானினியானதால் ‘வேதாத்மிகா’ என்னும் பெயரையும், அனைத்து மந்திரங்களுக்கும் அபிமானினியானதால் ‘சகலமந்திராத்மிகா’ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். ‘ஸர்வமந்த்ராபிமானித்வாத் ஸர்வமந்த்ராத்மிகா ஸ்ம்ருதா’.
கே: பாரதிதேவியின் அருள் எத்தகையது?
ப: ஒவ்வொரு ஆராய்ச்சியாளரின் தாய் பாரதிதேவி. இவரின் அருளால் பிறவி ஊமையும் பேச்சைப் பெறுகிறான். முட்டாள்கூட அறிவாளியாகிறான். இதைவிட பெரிய அருள் என்ன இருக்கப்போகிறது? இதற்கு எதிர்ப்பதமாக, பாரதிதேவியின் அருள் கிடைக்கவில்லையென்றால், அதோகதிக்கு செல்லவேண்டியதே ஆகும். அனைத்து வேதங்களுக்கும் அபிமானினியான பாரதிதேவியின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்.
கே: பாரதிதேவியின் மகிமையை சுருக்கமாகச் சொல்லவும்.
ப: ’பாரதீம் சுமதீம் கிருஷ்ணதீரதிம் ஸ்மரதாம் கதீம் இரதம்’ என்று சரஸபாரதிவிலாஸத்தில் ஸ்ரீவாதிராஜர் பாரதிதேவியை துதித்துள்ளார். உலக விஷயங்களில் விரக்தியையும், கிருஷ்ணபக்தியில் நற்புத்தியையும் கொடுத்து நம்மை காப்பாற்றட்டும் என்று வேண்டுகிறார். நம் அனிருத்த-சரீரம் மற்றும் லிங்க-சரீரத்திற்குள் நின்று நம்மை சாதனைகளை (நற்செயல்களை) செய்ய வைக்கிறார். முக்யபிராணருடன் சேர்ந்து ஹம்ஸமந்திரத்தை ஜபிக்கிறார். இவரைப் பற்றி மேலும் படிப்பதால், நம் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தம் பிறக்கிறது.
கே: பாரதிதேவியின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.
ப: படைப்பின் துவக்கத்தில் க்ருதி மற்றும் ப்ரத்யும்னரிடம் இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். மூத்தவர் சரஸ்வதி. இளையவர் பாரதி. படைப்பிற்குக் காரணமான பிரம்மனை சரஸ்வதி மணம் முடித்தார். அனைத்து தேவர்களுக்கும் குரு என்று அழைக்கப்பட்ட, அனைவரின் ஸ்வரூபோத்தாரகன் ஆன வாயுதேவரை பாரதி மணம்முடித்தார்.
முக்யபிராணதேவரின் மனைவியான பாரதிதேவியிடம், மகனாக ருத்ரர் பிறந்தார். பிறகு மற்ற தேவதைகளும் அவருக்கு மகனாகப் பிறந்தனர். ஆகையால் இவர் ‘தேவமாதா’ என்று அழைக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல், அனைத்து தேவதைகளுக்கும் குரு என்றும் அழைக்கப்பட்டார். அனைத்து தேவதைகளும், பாரதிதேவியிடம் பாடம் படித்து, பிறகு முக்யபிராணரிடம் பாடம் படித்து, ஸ்ரீஹரியை கொண்டாடினர். இந்த முறையில் ஸ்ரீஹரியை குரு என்று பூஜை செய்தால், மோட்சம் அடைவதற்கு சாத்தியமாகின்றது.
ரிக்வேத, யஜுர்வேத, ஸாமவேத, அதர்வவேத வேதங்களுக்கு பாரதிதேவி அபிமானினியாக இருக்கிறார். வேத-ஸ்வரூபளான இவர் ஒரு கணமும் விடாமல் ஸ்ரீஹரியை, வேதங்களினால் துதித்துக்கொண்டே இருக்கிறார். மற்றும் மகாலட்சுமியையும், நான்முக பிரம்மனையும், தன் கணவரான வாயுதேவரையும் வேதங்களினால் துதித்து, தானும் வேதங்களினால் போற்றப்படுபவர் ஆகிறார்.
அதுமட்டுமல்லாமல், அனைத்து புராண, இதிகாச, மூலராமாயண, மகாபாரத, பஞ்சராத்ர ஆகிய சாஸ்திரங்களுக்கும்கூட பாரதிதேவியே அபிமானினி ஆகியிருக்கிறார். இவரின் அருள் இருந்தால் மட்டுமே வாக்-சித்தி (சொல்வதெல்லாம் பலிப்பது) ஆவதற்கும், அந்த சாஸ்திரங்களின் அறிவைப் பெறுவதற்கும் சாத்தியம் ஆகும்.
இத்தகைய பாரதிதேவியை வணங்கி அவரின் அருளைப் பெறுவோமாக.
கே: தந்த்ரசார சங்க்ரஹத்தில் ஸ்ரீமதாசாரியார் பாரதிதேவியை எப்படி வர்ணித்திருக்கிறார்?
ப: உத்யத்திவாகர சமூஹநிபாம் ஸ்வபர்து
ரங்க ஸ்திதாமபயஸ்த்வர பாஹுமுக்மாம் |
முத்ராம் ச தத்வ த்ருஷயே வர புஸ்தகம் ச
தோர்யுக்மகேன தததீம் ஸ்மரதாSத்ம வித்யாம் ||
உதயசூரியனைப் போன்ற ஒளியைக் கொண்டவர், தன் கணவரின் தொடையில் அமர்ந்திருப்பவர், கீழ்க் கைகளில் அபய, வர முத்திரைகளை தரித்திருப்பவர், மேல் கைகளில் ஞான முத்திரை மற்றும் கிரந்தங்களைப் பிடித்துக்கொண்டிருப்பவர், கல்வியின் அபிமானினியாக இருக்கும் சரஸ்வதி பாரதியரை தியானம் செய்வோமாக.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment