1/12 மகாலட்சுமி
ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம் : பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ’ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
கேள்வி: லட்சுமியை வணங்கினால் வேண்டியதெல்லாம் கிடைக்கும். காசு-பணம், வீடு-நிலம், ஆஸ்தி-பாஸ்தி, மனைவி-மக்கள், வேலை-வாழ்க்கை இவற்றில் எது வேண்டுமென்றாலும் லட்சுமியையே வணங்கவேண்டும். ஆகையால், நாம் அனைவரும் லட்சுமியின் பக்தர்களாகி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், லட்சுமியை வணங்குவதே தவறு என்று கற்றறிந்த அறிஞர்கள் கூறுகின்றனர். இது சரியா?
பதில்: லட்சுமியை மட்டும் தனியாக பூஜிப்பது கண்டிப்பாக தவறு. அதனால் நமக்கு பலன்கள் கிடைத்தாலும், அவை துக்கத்திற்கு வழிவகுக்கும். விஷ்ணுவுடன் மட்டுமே லட்சுமியை வணங்க வேண்டும். அப்போது அவர் மகிழ்ச்சியடைந்து மேலும் அதிகமான சுகங்களைக் கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல், வெறும் ஐஹிக (சம்சார / தற்காலிக) சுகங்களை வேண்டி, லட்சுமியை வணங்கினீர்கள் என்றால், துக்கத்தின் குழியில் விழுவது கண்டிப்பாக நடக்கும் என்று ஸ்ரீகிருஷ்ணனே சொல்கிறார். ‘க்லேஷோS திகதர ஸ்தேஷாம் அவ்யக்தா ஸக்த சேதஸாம்’.
கே: அப்படியென்றால் நம் தேவைகளுக்காக லட்சுமியை வணங்குவதே தவறா?
ப: ‘விஷ்ணுனா ஸஹிதா த்யாதா ஸாபி துஷ்டிம் புராம் ப்ரஜேத்’ என்ற வாக்கியத்தின்படி, வெறும் லட்சுமியின் பூஜைவிட, தன் கணவரான விஷ்ணுவையும் சேர்த்து பூஜித்தால், லட்சுமி எப்போதுமில்லாத மகிழ்ச்சியை அடைவார்.
கே: தர்மங்கள், சம்பிரதாயங்களை தவறாது பின்பற்றுவதால், எனக்கு திருமணமே அமைவதில்லை. தர்மத்தைக் கடைபிடிக்கக்கூடிய ஒரு பெண், திருமணத்திற்கு கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. லட்சுமியை பூஜிப்பதினால் எனக்கு இந்த பிரச்னை தீருமா?
ப: ஹரிபக்தரான உங்களைப் போன்றவர்களின் பிரச்னைகளை தீர்த்துவைப்பதற்கென்றே, லட்சுமியானவர் - சீதா, ருக்மிணி, பத்மாவதி போன்ற அவதாரங்களை எடுத்து, தன் கணவரை திருமணம் செய்திருக்கிறார். மிகுந்த பக்தியுடன் நீங்கள் ஒரு வேலை செய்யுங்கள். தினமும் காலை விடியும் வேளையில், பாகவதம் பத்தாம் ஸ்கந்தத்தில் இருக்கும் ருக்மிணி கல்யாணத்தை பாராயணம் செய்யுங்கள். மாலையில் சந்தியா நேரத்தில் பாகவதம் எட்டாம் ஸ்கந்தத்தில் இருக்கும் லட்சுமி கல்யாணத்தை பாராயணம் செய்யுங்கள். மதிய நேரத்தில், தாத்பர்ய நிர்ணயத்தில் இருக்கும் சீதா கல்யாணத்தை பாராயணம் செய்வது, இன்னும் அதிக நலம் பயக்கும். மிகுந்த பக்தியுடன், ஒருமனதுடன் இந்த வேலைகளைச் செய்துபாருங்கள். பகலானது, இரவாவது எவ்வளவு நிச்சயமோ, உங்களுக்கு நற்பலன் கிடைப்பதும் அவ்வளவே நிச்சயமானதுதான். லட்சுமியின் மகிமையை அறிந்து நீங்களே மகிழ்ச்சியடைவீர்கள்.
கே: தினந்தோறும் லட்சுமி சோபானையை பாராயணம் செய்தே வருகிறோம். ஆனாலும் நாம் நினைத்ததைப்போல் வரன் அமையவில்லை. இதன் பரிகாரமாக நாமும் பாகவத பாராயணத்தை செய்யலாமா?
ப: பெண்கள் பாகவத பாராயணத்தை செய்யலாகாது. அதற்குப் பதிலாக - காலை மற்றும் மாலை வேளைகளில், வீட்டில் ஸ்ரீஹரியின் முன் நெய் தீபம் ஏற்றி, உங்களின் வேண்டுதல்களை அவரிடம் ஒப்பித்து, மிகுந்த பக்தியுடன் லட்சுமி சோபான பாடலைப் பாடுங்கள். உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உறுதி.
கே: லட்சுமிதேவியை வணங்குவதற்காக என்ன ஸ்லோகங்களை, பாடல்களை சிறார்களுக்கு கற்றுத்தரவேண்டும்?
ப: லட்சுமி சோபான, துர்கா சுளாதி, ஸ்ரீஷகுணதர்பண, ஹரிதாசர்கள் இயற்றியிருக்கும் ஸ்ரீனிவாஸ கல்யாண, தத்வசுவ்வாலியில் துர்கா ஸ்துதி மற்றும் ருக்மிணி விலாஸ, வெங்கடேச பாரிஜாத, லட்சுமி லீலாம்ருத - இவை அல்லாது, லட்சுமியைக் குறித்த ஹரிதாசர்கள் இயற்றியிருக்கும் பற்பல பாடல்களைச் சொல்லித் தரலாம். இவற்றை சிறார்களுக்கு கற்றுத்தந்தே ஆகவேண்டும். நீங்களும்கூட தினந்தோறும் சொல்லலாம்.
கே: சிலர் துர்கா சப்தசதியை பாராயணம் செய்யலாம் என்கிறார்கள். சிலர் செய்யக்கூடாது என்கிறார்கள். 700 ஸ்லோகங்களில் லட்சுமியின் கதை இருக்கிறது. இதை பாராயணம் செய்யலாமா கூடாதா?
ப: தவறு இல்லை. ஆனால், ஸ்ரீஹரியை விட்டுவிட்டு, லட்சுமியை மட்டும் முதலிலிருந்து இறுதிவரை வர்ணிக்கும்போது, ஸ்ரீஹரியை மறந்ததாக ஆகிவிடுகிறது. அதனாலேயே, சில ஹரிபக்தர்கள் சப்தசதி பாராயணம் செய்வதை விட்டிருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீஹரியின் மகிமைகளை மறக்காதவர்கள், சப்தசதியை பாராயணம் செய்வதால், அவர்கள் வேண்டுவது அனைத்தும் கண்டிப்பாக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கே: சண்டிகா ஹோமம், துர்காநமஸ்கார ஆகிய லட்சுமி பூஜையின்போது நாம் என்னவென்று நினைத்து வணங்கவேண்டும்?
ப: லட்சுமிதேவியின் மூலம் ஸ்ரீஹரியையே வணங்கவேண்டும். அனைவரின் தாய் தந்தையான லட்சுமி நாராயணரின் பூஜை என்று நினைக்கவேண்டும். ஸ்ரீஹரியை மறந்து லட்சுமியையே நினைத்து செய்யும் சண்டிகா ஹோமம், துர்காநமஸ்கார ஆகியவை அசுப பலன்களையே கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கே: லட்சுமி தத்வத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவும்.
ப: இரண்டாம் கக்ஷையில் (தாரதம்ய வகுப்பில்) வரும் ரமாதேவி நித்யமுக்தர் (எப்போதும் முக்தி நிலையில் இருப்பவர்) ஆவார். எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் ஸ்ரீஹரியுடனேயே வாசம் செய்பவர். ருஜுகளைவிட கோடி குணங்கள் அதிகம் கொண்டவள். இவரைவிட விஷ்ணு எண்ணிக்கையற்ற குணங்கள் அதிகம் கொண்டவர். ஜயந்தி, ஜானகி, சத்யபாமா, ருக்மிணி ஆகிய பற்பல அவதாரங்களைக் கொண்டவர். மூல ரூபம் மற்றும் அவதார ரூபங்களில் எவ்வித பேதமும் இல்லாதவர். ஸ்ரீஹரியை மட்டும் போற்றக்கூடிய வேதங்களைத் தவிர, மற்ற அனைத்து வேதங்களாலும் போற்றப்படுபவர்.
அழிவில்லாத, ஞானானந்தமயமான சரீரத்தைக் கொண்டவர். எப்போதும் விஷ்ணுவைப் பூஜித்துக்கொண்டு, அவருடனேயே இருப்பவர். விஷ்ணு இல்லாமல் லட்சுமியை துதித்தால், அது லட்சுமிதேவிக்குப் பிடிப்பதில்லை.
கே: துளசி சாட்சாத் லட்சுமி ரூபமில்லை. ஷண்மஹிஷியரில் ஒருவரான ஜாம்பவதியே துளசி. ஆனால் நீங்கள் துளசியையே லட்சுமிரூபம் என்கிறீர்கள். இது எப்படி சரியாகும்?
ப: லட்சுமியுடையதே ஆன துளசி ரூபம் ஒன்று இருக்கிறது. இதைத் தவிர, லட்சுமியே, சம்பிகை, மல்லிகை, தாமரை முதலான ரூபங்களை எடுத்து, ஸ்ரீஹரியை பூஜிக்கிறார். இதையும் தவிர, ஜாம்பவதியின் துளசி ரூபமே வேறு இருக்கிறது. அதிலும்கூட லட்சுமியின் விசேஷ சன்னிதானம் இருப்பதால், ஸ்ரீஹரியுடன் துளசியையும் பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது.
கே: ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவி - இந்த ரூபங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவும்.
ப:
ஸ்ரீதேவி: நாராயணனின் வலது பக்கத்தில் இருப்பவர். விஷ்வனின் மனைவி. ஜாக்ர-அவஸ்தையின் (முழித்திருத்தல்) அபிமானி. பிரளய காலத்தில் ஜல ரூபத்தில் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர். தன் அருளினாலேயே, பிரம்ம ருத்ராதிகளை பிறக்கச் செய்தவர். ‘ஸ்ரீயத்கடாக்ஷ்ய பலவத்யஜிதம் நமாமி’. படைத்தலுக்குத் தேவையான இச்சா சக்தி ஸ்வரூபம் கொண்டவர். ஸ்ரீஹரியின் இதயத்தில் எப்போதும் நிலைத்திருப்பவர். சாட்சாத் ருக்மிணியாக அவதரித்தவர். ஸ்ரீஹரி ஏந்தியிருக்கும் சங்கு என்றால் அது இவர்தான்.
பூதேவி: நாராயணனின் இடது பக்கத்தில் இருப்பவர். தைஜஸனின் மனைவி. ஸ்வப்ன-அவஸ்தையின் (கனவு நிலை) அபிமானி. பிரளய காலத்தில் ஆல இலையின் ரூபத்தில் இருப்பவர். படைத்தலுக்குப் பிறகான காத்தல் வேலையை செய்பவர். தன் அருளினால் அனைவரையும் காப்பவர். படைத்தலுக்குத் தேவையான க்ரியா-சக்தி ரூபமானவர். சீதா, சத்யபாமா ஆகிய அவதாரங்களை எடுத்திருப்பவர். ஸ்ரீஹரி ஏந்திருக்கும் தாமரை மலர் இவரே.
துர்காதேவி: நாராயணனின் எதிரில் இருப்பவர். ப்ராக்ஞனின் மனைவி. ஸுஷுப்தி-அவஸ்தையின் (தூக்க நிலை) அபிமானி. பிரளய காலத்தில் இருட்டாக அவதரிப்பவர். படைத்தல்-காத்தலுக்குப் பிறகு, அனைவரையும் அழித்தல் வேலையைச் செய்பவர். படைத்தலுக்குத் தேவையான ஞான-சக்தி ஸ்வரூபமானவர். கிருஷ்ணாவதாரத்தின் காலத்தில் துர்கையாக அவதரிப்பவர். ஸ்ரீஹரி ஏந்தியிருக்கும் சக்கரம் இவரே.
கே: ஸ்ரீஹரியின் மார்பில் ஸ்ரீதேவி இருக்கிறார் என்றீர்கள். ஆனால், தனது தத்வப்ரதீப கிரந்தத்தில் த்ரிவிக்ரம பண்டிதர், லட்சுமி, ஹரியின் மார்பில் இல்லை, தொடையில் அமர்ந்திருக்கிறார் என்கிறாரே?
ப: ஸ்ரீஜயதீர்த்தர் தனது பூஜையில், ஸ்ரீஹரியின் இதயத்தில் ஸ்ரீதேவியையும், தொடையில் லட்சுமியையும் கண்டார். த்ரிவிக்ரம பண்டிதர், இதயத்தில் லட்சுமியையும், தொடையில் ஸ்ரீதேவியையும் கண்டார். இப்படி பூஜிப்பதில் வித்தியாசமே தவிர, வேறொன்றும் இல்லை. லட்சுமியின் பல்வேறு ரூபங்களில் எந்த வித்தியாசமும் இல்லை. அவை அனைத்திலும் மிகவும் அற்புதமான சக்தியும் உள்ளது. லட்சுமி ரூபத்தை ஸ்ரீஹரியின் இதயத்தில் நினைக்கும்போது, ஸ்ரீதேவியின் ரூபத்தை தொடையில் நினைக்கவும். ஸ்ரீதேவியின் ரூபத்தை இதயத்தில் நினைக்கும்போது, லட்சுமியின் ரூபத்தை தொடையில் நினைக்கவும்.
கே: ஸ்ரீபூதுர்காவின் ரூபங்களை விளக்கியதைப் போல, லட்சுமி ரூபத்தின் மகிமைகளைப் பற்றியும் சற்று விளக்குங்கள்.
ப: பாற்கடல் கடையும்போது அமிர்தம் வருவதற்குமுன், அங்கிருந்து உதித்தவர் லட்சுமி. நாராயணன் ஒருவரையே நினைத்து, அவரைத் தவிர மற்ற அனைத்தும் தோஷம் நிரம்பியவை என்பதை நிரூபித்து, நாராயணனின் கழுத்தில் மாலை அணிவித்தார். இவரின் எட்டு ரூபங்களை விசேஷமாக பூஜிக்கிறார்கள்.
1. ஆதிலட்சுமி
2. வித்யாலட்சுமி
3. சௌபாக்யலட்சுமி
4. அம்ருதலட்சுமி
5. காமலட்சுமி
6. சத்யலட்சுமி
7. போகலட்சுமி
8. யோகலட்சுமி
இந்த எட்டு ரூபங்களினால் நாராயணனை வணங்குகிறார்.
கே: என்னுடைய வியாபாரம் செழித்து வளர ஏதேனும் மந்திரத்தை சொல்லிக் கொடுங்கள்.
ப: கீழுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் சந்தேகமில்லை.
லட்சுமீம் லட்சண சம்பன்னாம் லட்சணாக்ரஜ காங்க்ஷிணீம் |
லட்சயாமி க்ஷணம் லட்சவித்ததாத்ரீம் கடாட்க்ஷைத: ||
கே: ஸ்ரீஹரியின் தொடையில் அமர்ந்திருக்கும் மற்றும் அவருக்கு மிகவும் நெருங்கிய லட்சுமியின் ரூபம் எது?
ப: யக்ஞ என்னும் ரூபத்தில் லட்சுமிதேவி, ஸ்ரீஹரியின் தொடையில் அமர்ந்திருக்கிறார். வேதா என்னும் ரூபத்தில், சற்று தூரத்தில் நின்று ஸ்தோத்திரம் செய்கிறார். தக்ஷிணா என்னும் ரூபத்தில் ஸ்ரீஹரியின் இடதுபக்கத்தில் மிகவும் அருகில் நின்று மிகுந்த சுகத்தை அனுபவிக்கிறார்.
கே: ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு லட்சுமியின் ரூபமும் ஸ்ரீஹரியின் இடது பக்கத்தில் நின்றிருக்கின்றன என்று சொல்கிறார்கள். இப்படியிருக்கும்போது, தக்ஷிணா என்னும் ரூபத்திற்கு அதிக சுகம் கிடைப்பது எப்படி சாத்தியம்?
ப: ’விசிஷ்டா தக்ஷிணா சுகே’ என்று பாகவத தாத்பர்யத்தில் சொல்லியிருப்பதைப்போல, ‘தக்ஷபாகே ஸ்திதா சதா’ என்று ஐதரேய பாஷ்யத்தில் சொல்லியிருப்பதைப்போல, தக்ஷிணா என்னும் ரூபத்திற்கு மட்டும் அதிக சுகம் கிடைப்பது சாத்தியமே.
கே: ஸ்ரீஹரியின் பல்வேறு ரூபங்களில் எந்த வித்தியாசமும் இல்லை. இதைப்போலவே லட்சுமியின் பல்வேறு ரூபங்களிலும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் இப்போது தக்ஷிணா என்னும் ரூபத்திற்கு மட்டும் அதிக விசேஷம் / சிறப்பு என்று எப்படி சொல்ல முடியும்?
ப: ஸ்ரீஹரியின் அனைத்து ரூபங்களும் பரிபூர்ணமே ஆகியிருந்தாலும், ராம கிருஷ்ண முதலான ரூபங்களினால் பல(bala) காரியமும், தத்த வியாச முதலான ரூபங்களினால் ஞான காரியமும் செய்வதைப்போல, லட்சுமிதேவியின் தக்ஷிணா ரூபத்திற்கு அதிக சுகம் என்று சொல்வது ஸ்ரீஹரியின் லீலைகளில் ஒன்று. இருக்கும் வேறுபாடுகளுக்கெல்லாம் லட்சுமிதேவியே பிரதிநிதி என்றாலும், இவரது பற்பல ருபங்களில் எவ்வித பேதமும் இருப்பதில்லை என்பதை அறியவேண்டும்.
கே: நாராயணனின் கால் நகத்தின் நுனியில் இருக்கும் துகளின் ஒரு பாகத்தில் உள்ள அவரது குணங்களை அநாதி காலங்களிலிருந்து (தொடக்கம் இல்லாத காலங்களிலிருந்து) எண்ணிக்கொண்டே இருக்கிறார். ஆனால், அதை இன்னும் எண்ணி முடிக்கவில்லை என்று மத்வவிஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்ன?
ப: ஸ்ரீஹரியின் ஒவ்வொரு அவயவங்களிலும், ஒவ்வொரு துகள்களிலும் பற்பல குணங்கள் நிரம்பியிருக்கின்றன. ஆகையால் அந்த ஒரு துகளை, லட்சுமிதேவி முழுமையாக அறிவதற்கு சாத்தியமில்லை. ஸ்ரீஹரியின் மகிமையே மிகவும் அற்புதமானது. இந்த பொருளிலேயே மத்வவிஜயகாரரும் சொல்லியிருக்கிறார்.
கே: விஷ்ணுஸ்துதியில் த்ரிவிக்ரம பண்டிதர், ‘நவ நவ சுவிசேஷோபலம்பேன’ என்னும் ஸ்லோகத்தில், ஸ்ரீஹரியின் விஷயத்தில் லட்சுமி எப்போதும் புது விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறார் என்கிறார். அப்படியென்றால், லட்சுமிதேவிக்கும் ருஜுயோகிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாகிறது. ருஜுயோகிகளுக்கும் ஸ்ரீஹரியைப் பற்றி அறிவு வளர்ந்துகொண்டே இருக்கிறது அல்லவா?
ப: ’பிரம்மாதீனாம் அப்ராப்தஞானம் உத்பத்யதே ஸ்ரீயஸ்து ஸர்வதா வித்யதே இதி விவேகே?’ என்று ஈசாவாஸ்ய உபநிஷத் பாஷ்யத்தில் சொல்லியிருப்பதைப்போல், லட்சுமியின் ஞானம் அழிவில்லாதது என்கிறார்கள்.
கே: அப்படியென்றால், லட்சுமிதேவியானவர், ஒவ்வொரு கணமும் ஸ்ரீஹரியின் குணங்களைக் கண்டு, வியப்படைகிறார் என்பதற்கு என்ன பொருள்?
ப: லட்சுமிதேவி நித்யமுக்தர் ஆவார். சம்சார வாழ்க்கை அவருக்கு இல்லை. ஒவ்வொரு கணமும், ஸ்ரீஹரியின் குணங்களை அறிந்து மகிழ்ச்சி அடைபவர். புதுப்புது குணங்களை அறிந்து, மகிழ்ச்சியடைந்து, அதன்மூலமாக அவர் புதிய நிலை எதையும் அடையப்போவதில்லை என்றாலும், வியப்படைவதை நிறுத்துவதில்லை என்று அறியவேண்டும்.
கே: ’தத: சஹஸ்ரகுணிதா ஸ்ரீ:’ என்று கீதா தாத்பர்யத்தில் சொல்லியிருப்பதைப்போல, பிரம்ம வாயுகளைவிட, லட்சுமிதேவி ஆயிரம் குணங்கள் அதிகம் கொண்டவள் என்று தெரியவருகிறது. ஆனால், தாரதம்ய-பத்யத்தில், ‘கோடி குணகளிந்ததிக ஷக்தளு ஸ்ரீரமா’ என்று புரந்தரதாசர் கூறுகிறார். இவற்றில் எது சரி?
ப: கோடிகுணாதிக - என்பதே சரி. கீதா தாத்பர்யத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘சஹஸ்ர’ என்னும் சொல்லிற்கு ‘கோடி’ என்று பொருள் கொள்ளவேண்டும்.
கே: மோட்சமானது சிதாத்மகமானது என்று சில இடங்களிலும், லட்சும்யாத்மக என்று சில இடங்களிலும், அழிவில்லாத சத்யாத்யமக-ஜடம் என்றும், ஞானாத்மகம் என்றும் சில இடங்களில் சொல்லியிருக்கின்றனர். இவற்றில் எது சரி, எது தப்பு?
ப: இவற்றை கூர்ந்து கவனிக்கவேண்டும். ஸ்ரீஹரி வசிக்கும் கோயில், அவர் அணியும் ஆடை- அணிகலன்கள் மற்றும் உணவுகள் அனைத்தையும் லட்சும்யாத்மக என்று சொல்லலாம். ஆனால், மற்ற அனைத்தையும் லட்சும்யாத்மக என்றால், முக்தஜீவர்கள் அனுபவிக்கும் விஷயங்கள்கூட லட்சும்யாத்மகமே என்று சொல்வது போலாயிற்று. இது ஒரு வகையில், லட்சுமிதேவிக்கு அபசாரம் செய்தது போலவே ஆகிறது.
கே: அனைத்து கிரந்தங்களிலும் லட்சும்யாத்மக என்றே சொல்லியிருக்கிறார்கள். யுக்திமல்லிகையில் ஸ்ரீவாதிராஜர், சிதாத்மக என்று சொல்கிறார். இவர் சொன்னதை தவறு என்று சொல்லலாமா?
ப: மோட்சமானது லட்சும்யாத்மக அல்லது சிதாத்மக என்று சொன்னால், அது லட்சுமியிடமிருந்து மட்டும் சம்மதம் பெற்றது என்று பொருள். பிற தேவதைகளும்கூட பல விஷயங்களுக்கு அபிமானி தேவதைகளாக இருக்கின்றனர். மோட்சத்தில் இதர தேவதைகள் யாருமே அபிமானிகளாகாமல், லட்சுமிதேவி மட்டும் அபிமானினி ஆகியிருக்கிறாள். இந்த நுட்பமான விஷயத்தை நாம் கண்டிப்பாக அறிந்திருக்கவேண்டும்.
கே: சத்தத்வ-ரத்னமாலா கிரந்தத்தில் மோட்சத்தை லட்சும்யாத்மக என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால் நீங்கள் அதற்கு எதிர்ப்பதமாக ஜடம் என்கிறீர்கள். இது எப்படி?
ப: சத்தத்வ-ரத்னமாலாவை இயற்றியவர், மோட்சத்தை லட்சும்யாத்மக என்று உறுதியுடன் சொல்லவில்லை. பல-ப்ரகரணத்தில் 534-535 ஸ்லோகத்திற்கு உரை எழுதுகையில், மோட்சம் லட்சும்யாத்மக என்னும் விஷயத்தை விளக்கியிருக்கிறார். லட்சுமியின் ஸ்வரூபமான ஜல-பானாதிகளை முக்தஜீவர்கள் பயன்படுத்தினால், லட்சுமியை பயன்படுத்தியதாக ஆயிற்றல்லவா? என்று கேள்வி கேட்டுக்கொண்டு, தாயின் மடியில் இருக்கும் குழந்தை அவளிடம் பால் குடிப்பதைப்போல, லட்சுமிதேவி அனைவருக்கும் பாதுகாவலராக இருப்பதால், அவரது ஸ்வரூபமான ஜல-பானாதிகளை முக்தஜீவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று பதில் அளிக்கிறார். பிறகு அங்கிருக்கும் பொருட்கள் அனைத்தும் சுத்த-சத்யாத்மக என்றே தெளிவாக கூறுகிறார். அதனால், தாய் என்னும் உதாரணத்தை வைத்துக்கொண்டு, மோட்சமானது லட்சும்யாத்மக என்று சொல்லும் மற்றொரு சாராரும் உள்ளனர். ஆனால் அதைவிட, சுத்த-சத்யாத்மக என்று சொல்வதே அனைத்து விதங்களிலும் சரியானதாக இருக்கும்.
கே: மோட்சத்தை ஜடம் என்பவர்களைப் பற்றி? அது ஜடம் என்றால், இந்த உலகத்திற்கும், மோட்சத்திற்கும் என்ன வித்தியாசம்?
ப: மோட்சமும் மோட்சத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் லட்சுமி ஸ்வரூபமாவதற்கு சாத்தியமே இல்லை. அதுவே மற்ற தேவதைகளின் ஸ்வரூபம் என்றுவிட்டால், மோட்சமே அநித்ய (தற்காலிகமானது) என்று ஆகிவிடும். ஆகவே, அதை ஜடம் என்றே சொல்லவேண்டும்.
கே: மோட்சத்தை ஜடம் என்றால், அது வாழ்க்கையைப் போல அழியக்கூடியதா?
ப: ஜடம் என்று சொன்னபடியால், அதுவே இறுதி முடிவு என்று சொல்வதற்கில்லை. வர்ணங்கள், வேத, அவ்யாக்ருத ஆகாசம் இவைகள் அனைத்தும் ஜடமே ஆகிருந்தாலும் அவை அழியக்கூடியது இல்லை என்பது நிரூபணமாகிருக்கிறது. அதைப்போலவே மோட்சமும்கூட அழியாத ஜடம் என்று சொல்வதற்கு எந்த பிரச்னையும் இல்லை.
கே: மோட்ச மற்றும் போகப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், இவை அனைத்தும் அழியாத ஞானஸ்வரூபம் என்று சொல்லலாம் அல்லவா? மற்றும் இவை அனைத்தும் ஜடம் என்றுவிட்டால், ஸ்ரீஹரி இருக்கும் இடம், அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும்கூட அழியாத ஜடரூபமாகவே இருக்கிறது அல்லவா?
ப: மோட்சம் மற்றும் அங்கிருக்கும் பொருட்களை ஞானானந்தாத்மக என்று சொல்வதற்கு தகுந்த ஆதாரம் இல்லை. சேதனர்கள் ஞானஸ்வரூபம் ஆகமுடியுமே தவிர, கற்பதின் மூலம் ஞானஸ்வரூபம் ஆவதற்கு சாத்தியம் இல்லை. ஸ்ரீஹரியின் ஸ்தானம் மற்றும் அவரின் ஆபரணங்கள், லட்சும்யாத்மக என்று சொல்வதற்கு ஆதாரங்கள் உள்ளன. லட்சுமிதேவியே தன் வெவ்வேறு ரூபங்கள் மூலமாக வீடு, ஆசனம், பாதுகை, ஆடை, ஆபரணம், உணவு, இந்த அனைத்து ரூபங்களையும் எடுத்து ஸ்ரீஹரியின் சேவையை செய்துவருகிறார்.
கே: ஸ்ரீஹரி தானே தன்னுடைய ஆடை, அணிகலன்களாக இருக்கிறார், தானே தன்னுடைய நகைகளாக இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் நீங்கள் அவை லட்சும்யாத்மக என்று சொல்கிறீர்களே?
ப: ஆம். ஸ்ரீஹரிக்கு தன்னுடைய ஸ்வரூபத்தினால் ஆன ஆடை மற்றும் ஆபரணங்கள் உள்ளன. ஆனால், லட்சுமிக்கு மகிழ்ச்சி தரவேண்டும் என்பதற்காக அவரையும் தன்னுடைய ஆபரணங்களாக தரித்துள்ளார்.
கே: ஸ்ரீஹரிக்கு இப்படி சொல்லமுடியும் என்றால், அவரின் பிரதிபிம்பர்களான மற்ற ஜீவிகளுக்கும் தங்களின் ஸ்வரூபத்தினால் ஆன ஆபரணங்கள் உள்ளன என்று சொல்லமுடியும்தானே?
ப: ஆம். கண்டிப்பாக சொல்லமுடியும். ஒவ்வொரு முக்தருக்கும், தங்களின் ஸ்வரூபத்தினால் ஆன, ஆபரணம், ஆடை மற்றும் தாங்கள் நினைத்த ரூபத்தை தரிக்கும் சாமர்த்தியம் இருப்பதால், தங்களின் மனைவியை ஆடை, ஆபரணம், வீடு இத்தகைய ரூபங்களில் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இந்த கோணத்தில், மோட்சம் சிதாத்மக என்று சொல்லலாம். ஆனாலும் இத்தகைய சக்தி அனைவருக்கும் எப்போதும் இருப்பதில்லை. தாரதம்யத்தைப் பொறுத்தே அமைகிறது.
கே: ஸ்ரீஹரி, லட்சுமியை தன் ஆபரணங்களாக தரித்திருக்கும்போது, லட்சுமியும் ஸ்ரீஹரியை ஏன் தன் ஆபரணங்களாக தரித்திருக்கக்கூடாது?
ப: ஆம். லட்சுமியின் மாங்கல்ய சரடில் கேசவன், தாலியில் நாராயணன், பதக்கங்களில் மாதவன், சம்பிகைப்பூவில் கோவிந்தன், ரத்ன குண்டலங்களில் விஷ்ணு, மாணிக்க நகைகளில் மதுசூதனன், வளையல்களில் த்ரிவிக்ரமன், நாமங்களில் வாமனன் - இப்படி லட்சுமிதேவியின் ஆபரணங்களில் ஸ்ரீஹரியின் ரூபங்கள் இருப்பதாக தாசராயர் வர்ணிக்கிறார்.
கே: தேவபூஜையின் சந்தர்ப்பத்தில் லட்சுமிதேவையை எப்படி சிந்தனை செய்யவேண்டும்?
ப: ஸ்ரீஹரிக்கு உபசார பூஜைகளைச் செய்வதற்கு அதிகாரம் இருப்பது, ஸ்ரீலட்சுமிக்கு மட்டுமே. பிரம்மன் முதலான தேவர்கள் அனைவரும் லட்சுமிதேவிக்கு உதவி செய்பவர்கள் மட்டுமே. தேவதைகள், ருஜுகள், கந்தர்வர்கள் ஆகியவரின் பற்பல சேவைகளின் நடுவில், லட்சுமிதேவி மிகவும் விமரிசையாக ஸ்ரீஹரியை பூஜிப்பவர். இதை அப்படியே நினைத்துக் கொள்வதே நம் கடமை ஆகும். இதைத்தவிர, நாம் செய்யும் அனைத்து பூஜைகளும் வெறும் பாவனை மட்டுமே.
கே: நம் நற்காரியங்கள் ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிக்கும்போது, லட்சுமிக்கும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டுமா, இல்லையா?
ப: நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் வாயுதேவருக்கு சமர்ப்பிக்கவேண்டும். வாயுதேவர், லட்சுமிதேவியின் மூலமாக ஸ்ரீஹரிக்கு அவற்றை சமர்ப்பிக்கிறார் என்று சிந்தனை செய்யவேண்டும். லட்சுமிதேவியே ஸ்ரீஹரியின் நேரடி பிரதிபிம்பராக இருக்கிறார். ஆகையால், அவரை விட்டு எதையும் நேரடியாக ஸ்ரீஹரியாக சமர்ப்பிக்கக்கூடாது.
கே: லட்சுமியின் சன்னிதானம் இருக்கும் இடங்கள் எவை?
ப: அவ்யக்ததத்வ, ஸ்ரீஹரியின் பூஜை பாத்திரங்கள், நெய், வீட்டில் நிலைப்படி, சாணம், செல்வம், தாமரை, கமலாக்ஷிமணி, மஞ்சள், குங்குமம், அந்தி நேரங்கள், சுமங்கலி, தாம்பூலம் இத்தகைய பொருட்களில் லட்சுமிதேவியின் விசேஷ சன்னிதானங்கள் உள்ளன.
கே: லட்சுமியின் ரூபங்கள் எவை?
ப:
கேசவனுக்கு ஸ்ரீ, நாராயணனுக்கு லட்சுமி, மாதவனுக்கு கமல என்று 24 ரூபங்களுக்கும், மத்ஸ்யாதி தசாவதாரங்களுக்கு வேதா முதலிய ரூபங்கள், விஸ்வாதி ஆயிரம் ரூபங்களுக்கு ஸ்ரீ ஆகிய தனித்தனி ரூபங்கள் உள்ளன. வாசுதேவனுக்கு மாயா, சங்கர்ஷணனுக்கு ஜயா, ப்ரத்யும்னனுக்கு க்ருதி, அனிருத்தனுக்கு சாந்தி என்ற பல ரூபங்களை எடுத்து, இந்த உலகத்தின் ஸ்ருஷ்டிக்கு காரணமானவர்.
கே: தினந்தோறும் இப்படி நினைப்பதால் லட்சுமிதேவிக்கு மகிழ்ச்சி கிடைக்குமா?
ப:
நானா குஸுமகளிந்த மாடித மாலெய ஸ்ரீநாரி தன்ன கரதல்லி |
பேன கந்தரன த்ரிவிக்ரமராயன கொரளின மேலிட்டு நமிஸிதளு ||
லட்சுமிதேவி சுயம்வரத்திற்குத் தயாரானார். லட்சுமி என்றால் அனைத்து அழகு லட்சணங்களையும் கொண்டவர். நிரந்தரமாக அழகான உடலைப் பெற்றவர். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர். வெளிப்புற அழகுடன், மனதிலும் நற்குணங்கள் நிரம்பியவர். பற்பல பூக்களால் செய்யப்பட்ட மாலையை, நானே சர்வோத்தமன் என்று நிரூபித்த ஸ்ரீஹரியின் கழுத்தில் போட்டு, அவரை வணங்கினார். லட்சுமிநாராயணரின் இந்த அழகான காட்சியின் சிந்தனையை நாம் தினந்தோறும் நினைப்போமாக.
கே: இதிலிருந்து தெரியும் முக்கியச் செய்தி என்ன?
ப: கணவன் உயிரோடு இருந்தால் மனைவிக்கு - தாலி, மஞ்சள், குங்குமம், வளையல், தோடு, இவை அனைத்தும் இருக்கின்றன. இவை இருந்தால் மட்டும் மனைவியானவள் பாக்கியசாலி என்று சொல்லிவிட முடியாது. கணவனின் பிரியம் கண்டிப்பாக இருக்கவேண்டும். இதுவே உண்மையான மாங்கல்யம். இது மட்டும் இல்லையென்றால், மனைவி அணிந்திருக்கும் தோடு, மாங்கல்யம் இவை அனைத்தும் வெறும் பொருட்களே. மாங்கல்யத்திற்காக உலகத்தின் அரசியான ஸ்ரீமகாலட்சுமியின் கருணையைப் பெறவேண்டும். அதற்காக லட்சுமிநாராயணரின் பாதங்களை என்றைக்கும் சரணடைய வேண்டும்.
கே: லட்சுமியின் கதையை சுருக்கமாகக் கூறவும்?
ப: பாற்கடலைக் கடையும்போது லட்சுமிதேவி அதிலிருந்து தோன்றினார். சமுத்திரராஜனின் மகளான இவரை அனைத்து ருஜுகள், தேவதைகள், நதி அபிமானி தேவதைகள் அனைவரும் திரண்டு வந்து, தங்கக் கலசத்தின் மூலம் அபிஷேகம் செய்தனர். பசுக்கள் பஞ்சகவ்யத்தையும், வசந்தகாலம் தேனையும், பூதேவி தான்யங்களையும் அபிஷேகத்திற்காக கொடுத்தனர். கந்தர்வர், அப்சரஸ் முதலானவர்கள் நடனமாடினர். வேதாபிமானிகள் மங்கள வாத்தியங்களை இசைத்தனர். முனிவர்கள் வேத மந்திரங்களை ஓதினர். திக்கஜர்கள் சுத்தமான நீரினால் ஸ்நானம் செய்வித்தனர். சமுத்திரராஜன், இரு பட்டுச் சேலைகளுடன், வைஜயந்தி மாலையையும் கொடுத்தான். விஸ்வகர்மன் அனைத்து ஆபரணங்களைக் கொடுத்தான். சரஸ்வதி முத்து மாலையையும், பிரம்மன் தாமரையையும், நாகங்கள் கர்ண குண்டலங்களையும் கொடுத்தனர்.
புண்யாஹவாசனம் மிகவும் விமரிசையாக நடந்தது. சுயம்வர மாலையைப் பிடித்து, சபையில் அமர்ந்திருக்கும் அனைத்து தேவதைகள், முனிவர்கள், கந்தர்வர், மனுஷ்யோத்தமர்கள் இவர்கள் அனைவரில் யார் உத்தமர் என்று உலகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்று நினைத்தார். இவர்கள் அனைவரிடமும் காமாதி தோஷங்கள் இருந்தன என்று அறிந்தார். ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே தோஷமற்றவர், குணபரிபூர்ணர் என்று தீர்மானித்தார். அனைவரிலும் உத்தமரான நாராயணனே, தனக்கு கணவன் என்றும், அவருக்கே தான் நியதபத்னி என்றும் அறிந்து, அவரின் கழுத்தில் மாலை அணிவித்தார். உலகத்திற்கே அதிபதியான ஸ்ரீஹரி, லட்சுமிதேவியை தன் இதயத்திலேயே அமர்த்திக் கொண்டார். ஸ்ரீஹரியின் இதயத்தில் அமர்ந்த ஸ்ரீதேவி, அனைத்து தேவதைகளுக்கும், ரிஷி, முனி, கந்தர்வ ஆகியவர்களை தன் கருணைப் பார்வையால் பார்த்தார். அனைவரும் அனைத்துவித செல்வங்களையும் அடைந்தனர். அப்போது தேவதைகள் ஸ்ரீசூக்தம் ஆகியவற்றைச் சொல்லி புஷ்பவ்ருஷ்டி செய்தனர். இத்தகைய லட்சுமியின் கருணைப்பார்வை நம் மேலும் விழுமாறு, நாம் அவரை வணங்கி தன்யாராவோமாக.
கே: தந்த்ரசார சங்க்ரஹத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கும் லட்சுமிதேவியின் தியானரூபம் எது?
ப:
கௌசேய பீத வஸநாம் அரவிந்த நேத்ராம்
பத்மத்வயாபய வரோத்யத பத்ம ஹஸ்தாம் |
உத்யச்சராத்க ஸத்ருஷாம் பரமாங்க ஸம்ஸ்தாம்
த்யாயேத் விதீஷ நத பாத யுகாம் ஜனித்ரீம் ||
மஞ்சள் வண்ணத்தில் 2 பட்டு ஆடைகள் உடுத்திருப்பவர். தாமரை இதழ்களைப் போன்ற 2 கண்கள் உடையவள். 2 தாமரைகள், அபய, வர சின்னங்களை 4 கைகளிலும் ஏந்தியிருப்பவர். ஸ்ரீஹரியின் தொடையில் அமர்ந்திருப்பவர். பிரம்ம, ருத்ராதி தேவர்களால் வணங்கப்படும் இரு பாதங்களை உடையவர். உலகத்திற்கே தாய் அவர். இவ்வாறான லட்சுமிதேவியை தியானிப்போமாக.
கே: நாம் நினைத்து பூஜிப்பதற்கு, மிகவும் சிறந்த லட்சுமியின் ரூபம் எது?
ப: நம் வலது கண்ணில் ஸ்ரீஹரி விஸ்வ நாமகனாக நிலைத்திருக்கிறார். இவரைச் சார்ந்து, ரஜ்ஜு ருபத்தில் லட்சுமியும் நிலைத்திருக்கிறார். இவரையே அம்ப்ரிணி என்று உபநிஷத்கள் சொல்கின்றன. வலது கண்ணில் அம்ப்ரிணியை நினைத்து பூஜிப்பதால் அறிவுத்திறன் வளரும். மற்றும் நம் இதய கமலத்தில் நிலைத்திருக்கும் ப்ரக்ஞ என்னும் ஸ்ரீஹரிக்கு, ரமாதேவி தன் ஓரக் கண்களாலேயே தீப ஒளியைக் காட்டுகிறார். இந்த அழகினைக் கண்டு தன்யராவோமாக.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment