Thursday, March 8, 2018

4/12 முக்யபிராணதேவர்

4/12 முக்யபிராணதேவர்

ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம் : பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ’ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்




கேள்வி: முக்யபிராணர் ஒருவரே நமக்கான குரு என்று ஏன் சொல்லவேண்டும்? வேறு தேவதைகள் அல்லது நம் கண்ணெதிரே இருக்கும் ஞானிகள் நமக்கு குரு ஆகமாட்டார்களா?

பதில்: மற்ற தேவர்கள் அல்லது நம்முடன் இருக்கும் ஞானிகள் சிறிது காலத்திற்கு மட்டுமே நம் குருவாக இருப்பர். முடிவில்லாத காலத்திற்கு நம் குருவாக இருப்பவர் முக்யபிராணர் ஒருவர் மட்டுமே. ஆகையால் அவரையே நாம் ஒப்பீடு இல்லாத குருவாக நினைத்து சரணடையவேண்டும். 

கே: முடிவில்லாத காலத்திற்கு முக்யபிராணர் குருவாவதற்கு எப்படி சாத்தியம்? அவரும் நம்மைப்போலவே சம்சாரியாக இருந்ததனால், முடிவில்லாத காலத்திற்கு அவர் இருப்பது சாத்தியமே இல்லையே? 

ப: ஆம். ஸ்ரீஹரி எப்படி எல்லா காலங்களிலும் ஞானானந்தாத்மகனாக பல்வேறு ரூபங்களைத் தாங்கியவாறு இருக்கிறாரோ, அதேபோல் முக்யபிராணதேவரும் இருக்கிறார் என்று சொல்வதற்கு சாத்தியமில்லை. ஆனால் எல்லா ஜீவர்களும் எப்படி நித்யமோ, அதுபோல் முக்யபிராணதேவரும் நித்யமாகி இருக்கிறார். ஆகையால், எல்லா காலங்களிலும் இவரே நம் குரு என்று சொல்லவேண்டும். 

கே: முஷ்டிஸ்ருஷ்டி ஆனபிறகே சாதனை துவங்குகிறது. லிங்கதேகம் அழிந்தபிறகு சாதனை செய்வதற்கு சாத்தியம் இல்லை. ஆகையால், நாம் சம்சாரத்தில் இருக்கும்போது மட்டுமே முக்யபிராணரை குரு என்று அழைப்பது சாத்தியம். அந்த சமயத்தில், மற்ற தேவதைகளையும்கூட அப்படியே குரு எனலாம். ஆனால், முக்யபிராணருக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு?

ப: முஷ்டிஸ்ருஷ்டி என்பதற்கான விளக்கம்: படைப்பின் துவக்கத்தில், ஸ்ரீஹரி தன் ஒரு முஷ்டியில் ஜீவர்களை அள்ளி அவர்களை சம்சாரத்திற்கு / இவ்வுலகத்திற்கு அனுப்புகிறார். இருக்கும் பற்பல ஜீவர்களில் ஒரு முஷ்டி அளவிற்கு எடுத்தாலும், தாரதம்ய முறைப்படி சரியான அளவிலேயே ஜீவர்கள் அதில் இருப்பார்கள் என்று அறியவேண்டும். இதுவே முஷ்டிஸ்ருஷ்டி எனப்படுகிறது.

கேள்விக்கான பதில்: இந்த குழப்பத்திற்காகவே ஞானிகள் ஏற்கனவே பல்வேறு விவாதங்களை செய்திருக்கிறார்கள். முஷ்டிஸ்ருஷ்டி ஆவதற்கு முன்னரும்கூட அந்த ஜீவன் சம்சாரத்திற்கு வருவதற்கு பக்குவம் தேவைப்படுகிறது. அந்த பக்குவத்தைக் கொண்டு தருவதற்காக ஒரு குரு தேவைப்படுகிறார். அதைப்போலவே, மோட்சத்தை அடைந்தபிறகும், ஸ்ரீஹரியின் பல்வேறு நற்குணங்களை உபதேசிக்கும் ஒரு குரு தேவைப்படுகிறார். அத்தகைய குருவே முக்யபிராணதேவர். 

கே: முஷ்டிஸ்ருஷ்டி ஆவதற்கு முன் முக்யபிராணரும் கூட ஸ்ருஷ்டி ஆவதில்லை. மேலும் நமக்கு மோட்சம் கிடைத்த நேரத்தில் அவர் நான்முக பிரம்மனின் பதவியில் இருப்பார். இப்படியிருக்கும்போது மோட்சத்தில்கூட இவரே குரு என்று எப்படி சொல்லமுடியும்?

ப: இந்த சந்தேகத்தை போக்குவதற்காகவே, ஸ்ரீமதாசார்யரின் நேரடி சிஷ்யரான ஸ்ரீநரஹரிதீர்த்தர், ஜீவ-ஸ்வரூபத்திற்குள் முக்யபிராணதேவரின் பிரவேசத்தை ஒப்புக்கொண்டார். ஜீவன் எப்படி அனந்தனோ (எல்லா காலங்களிலும் இருக்கிறானோ), அவனின் அந்தர்யாமியான முக்யபிராணதேவரும் எல்லா காலங்களிலும் அனந்தனாக, குரு ரூபத்தில் இருக்கிறார் என்று நிரூபணமாகிறது. 

கே: அப்படியென்றால் ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணருக்கு பிரவேசம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளலாமா?

ப: முன்பு சொன்னதுபோல், நரஹரி தீர்த்தர் முதலான பல ஞானிகள், ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணருக்கு பிரவேசம் இருக்கிறது என்று சொல்லியிருக்கின்றனர். இப்படி ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணருக்கு பிரவேசம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்வதால், அனந்தகாலத்திற்கும் (எல்லா காலங்களிலும்) முக்யபிராணரே குருவாக இருக்கிறார் என்று சொல்லலாம். ஒருவேளை ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணருக்கு பிரவேசம் இல்லை என்று ஒப்புக்கொண்டால், மற்ற தேவதைகளைப் போல முக்யபிராணரும் தற்காலிக குருவாக இருப்பாரே தவிர, நித்யகுருகள் ஆவதற்கு சாத்தியம் இல்லை. இப்படி பல விதங்களில் விவாதிக்கும்போது ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணருக்கு பிரவேசம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்வது கட்டாயமாகிறது. 

கே: ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணருக்கு பிரவேசம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

ப: 
வாயுர்ஹி ஸர்வஜீவானாம் அபிமானீ நியாமக: |
பலமேதாத்ருதீ ஸ்தைர்யத்யான வைராக்யமானவான் |
ஸஞ்ஞானானந்தபக்த்யாதி குணமானீ ஸ ஏகல: 
(சத்தத்வ ரத்ன மாலா)

எல்லா ஜீவர்களுக்கும் அபிமானி தேவதை முக்யபிராணதேவர் என்று இதிலிருந்து தெரிகிறது. ஜீவனின் உள் இவர் இல்லையென்றால், ஜீவனின் அபிமானி தேவதை ஆவதற்கு எப்படி சாத்தியம்? ஜீவனின் உள் நுழைவதற்கு சாமர்த்தியம் இல்லாதவர், அதனை கட்டுப்படுத்துவது எப்படி சாத்தியம்? ஆகையால், மேற்சொன்ன வாக்கியத்தின் ஆதாரத்தின்படி, முக்யபிராணருக்கு ஜீவஸ்வரூபத்தில் பிரவேசம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்வது சரியே என்று அறியவேண்டும். 

கே: முக்யபிராணருக்கு ஜீவஸ்வரூபத்தில் பிரவேசம் உள்ளது என்று அறிவது சரியல்ல. ஏனென்றால், ஸ்ரீஹரி நம்மை முஷ்டிஸ்ருஷ்டிக்கு கொண்டுவருவதற்கு முன்னரே அவர் பிறந்திருக்கிறார். நாம் மோட்சத்திற்குச் சென்றபிறகும் சம்சார வாழ்க்கையில் இருக்கிறார். ஒருவேளை ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணருக்கு பிரவேசம் இருந்தால், நாம் சம்சாரத்திற்கு வந்தபோது அவரும் வந்து, நாம் மோட்சத்திற்கு போகும்போது அவருக்கும் மோட்சம் என்றே இருக்கவேண்டுமல்லவா?

ப: இந்த ஒரு சந்தேகத்திற்காகவே, சங்கர்ஷண ஒடெயரு முதலான ஞானிகள், ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணரின் பிரவேசத்தை ஒப்புவதில்லை. ஒளிரூபத்தில் மட்டுமே பிரவேசிக்கிறார் என்கிறார்கள். ஆனால், ஸ்ரீஹரியின் விசேஷ சக்தியினால், ஜீவஸ்வரூபத்தின் உள்ளிருக்கும் முக்யபிராணர், ஒரு ரூபத்தில் சம்சாரத்தில் இருந்தாலும், ஜீவஸ்வரூபத்தில் அந்தர்யாமி ரூபத்தில் மோட்சத்திற்கு வருகிறார் என்று சில அறிஞர்கள் இதிலுள்ள வேறுபாட்டினை சுட்டிக்காட்டுகின்றனர். 

கே: ஜீவஸ்வரூபத்தில் இருக்கும் முக்யபிராணதேவருக்கு லிங்கதேகம் உள்ளதா இல்லையா?

ப: இதுகூட ஒரு பிரச்னைக்குரிய கேள்வி. முக்யபிராணதேவருக்கு லிங்கதேகம் எந்தவொரு காரணத்தாலும் நாசம் அடையாததால், ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணருக்கு லிங்கதேகம் இருக்கட்டும், இல்லாமல் போகட்டும், அது நமக்கு பிரச்னையில்லை. இதுகூட ஸ்ரீஹரியின் விசேஷமான சக்தியினாலேயே லிங்கதேகம் இல்லை என்று சிலர் சொல்கின்றனர். 

கே: முக்யபிராணரின் சில ரூபங்களுக்கு ‘தக்தபடாயமான’ முறையில் லிங்கதேகம் உள்ளது என்று சொல்கிறீர்கள். வேறு சில ரூபங்களுக்கு லிங்கதேகமே இல்லையென்றும் சொல்கிறீர்கள். இந்த வேறுபாடுகளை எப்படி ஒப்புக்கொள்வது?

ப: உலகத்தில் எல்லா இடங்களிலும் இருக்கின்ற வேறுபாடுகள், ஸ்ரீஹரியிடம் காணப்படுவதில்லை. இதுவே ஸ்ரீஹரியின் மிகவும் அற்புதமான சக்தி என்று சாஸ்திரங்களில் சொல்கின்றனர். நம் பார்வையில் இது மிகுந்த வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீஹரியின் அற்புதமான சாமர்த்தியத்தினாலேயே இத்தகைய வேறுபாடுகளை ஒப்புக்கொள்ளவேண்டும். 

கே: இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்தும் புரிந்தன. ஆனால், ஜீவஸ்வரூபத்தில் முக்யபிராணதேவருக்கு பிரவேசம் உள்ளது என்பதற்கு தகுந்த ஆதாரம் உள்ளதா?

ப: 
கருட சேஷ பவாதி நாமவ
தரிஸி பவன ஸ்வரூபதேஹதி
கரண நியாமகனு தானாகிப்ப ஹரியந்தே ||
ஹரி 9-12

ஸ்ரீஹரி எப்படி ஸ்வரூப தேகத்தில் இருக்கிறாரோ அதைப்போலவே முக்யபிராணரும் நிலைத்திருக்கிறார் என்று இந்த மேற்கண்ட ஸ்லோகத்தில் சொல்கிறார்.

ஈரெரடு தேஹதொளகித்து
ஸமீரதேவ ஷ்வாஸஜபனா
நூரதிகவாகிப்ப எம்பத்தாரு ஸாஹஸ்ர ||
ஹரி 12-44

ஸ்வரூப தேகத்திலிருந்தும் முக்யபிராணர் ஹம்ஸ மந்திர ஜபத்தை அனாதி காலத்திலிருந்து செய்துகொண்டே இருக்கிறார் என்று மேற்கண்ட ஸ்லோகத்தில் ஸ்ரீஜகன்னாததாசர் மிகத்தெளிவாக  சொல்லியிருக்கிறார். 

இதைவிடவும் சிறந்த ஆதாரம் வேறு என்ன வேண்டும்?

கே: மோட்சத்தில் முக்யபிராணர் நம் குருவாவதற்கு சாத்தியம் இல்லை. ஏனென்றால், மோட்சத்தில் முக்யபிராணரே இருப்பதில்லை. நான்முக பிரம்மன் ஆனபிறகே அவருக்கு மோட்சம் கிடைக்கிறது அல்லவா?

ப: முக்யபிராணர் பிரம்மனான பிறகே மோட்சத்தை அடைகிறார் என்பது உண்மையே. ஆனால், அடுத்த கல்பத்தின் சாதகர்களுக்கு இவர் பிரம்மன் ஆகிறார். நமது கல்பத்திற்கு சம்பந்தப்பட்டு, இவர் முக்யபிராண ரூபத்தில் நமக்கு தற்போது எப்படி குருவாக இருக்கிறாரோ, மோட்சத்திலும்கூட நமக்கு இவர் குருவாகவே இருக்கிறார். 

கே: மோட்சமும் இந்த சம்சாரத்தைப் போலவேதானா?

ப: ஆம். சம்சாரத்தில் எப்படியோ அப்படியே மோட்சத்திலும். மோட்சமானது நம் நினைப்பிற்கும் எட்டாதது. அனைத்து கல்பங்களின் சாதகர்களும் முக்தர்களாகும்போது, அந்தந்த கல்பத்தின் உத்தமர்கள் அந்த சாதகர்களுடனே மோட்சத்தில் இருக்கிறார்கள். வெவ்வேறு கல்பத்தின் சாதகர்களுக்கு ஒருவருக்கொருவர் சம்பந்தம் இருப்பதில்லை. ஆகையால் இந்த கல்பத்திலிருக்கும் தேவேந்திரன், கருடன், சேஷன் ஆகியோரும் இதே ரூபத்தில் நமக்கு மோட்சத்திலும் காட்சியளிக்கிறார்கள். வெவ்வேறு கல்பத்தின் கருட-சேஷாதிகளுடன் நமக்கு சம்பந்தம் இருப்பதில்லை. வேறு கல்பத்தினரை பார்ப்பதற்கு நாம் ஆசைப்பட்டால், ஸ்ரீஹரி அதற்கு ஒப்புதல் அளிக்கிறார் ஆனாலும் அப்படி ஆசைப்படுபவர்கள் மிகவும் குறைவு. அதைப்போலவே, இந்த கல்பத்திலும் நம்மை சாதனை செய்யத் தூண்டிக்கொண்டிருக்கும் முக்யபிராணரும், மோட்சத்திலும் இதே போலவே நமக்கு குருவாகவே இருக்கிறார். 

கே: நம் தேகத்தில் முக்யபிராணரை எப்படி உபாசிக்க வேண்டும்?

ப: இதயத்திலிருக்கும் ஆறு-இதழ்களைக் கொண்ட தாமரையில் மூலேஷன் என்னும் பிம்பரூபி இருக்கிறார். இவரின் பாதங்களின் அடியில், முக்யபிராணர் அமர்ந்து, ஹம்ஸமந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறார். இவரின் பாதங்களின் பெருவிரலில் இருக்கும் நாம், மோட்சத்தை அருளவும் என்று முக்யபிராணரை வணங்கவேண்டும். 

கே: இது மட்டுமல்லாமல் இன்னும் எந்தெந்த ரூபங்களில் நம் உடலில் நிலைத்திருக்கிறார்?

ப: அனைவருக்கும் ஸ்தூல தேகம், அனிருத்த தேகம், லிங்க தேகம், ஸ்வரூப தேகம் என்று நான்கு தேகங்கள் உள்ளன. இந்த நான்கு தேகங்களிலும் முக்யபிராணர் ஒவ்வொரு ரூபத்தில் நிலைத்திருக்கிறார். ஸ்வரூப தேகத்திலும் முக்யபிராணருக்கு ‘மாதரிஷ்வ’ என்று பெயர். ஸ்ரீஹரியின் பாத விரல்களில் நிலைத்திருக்கும் ரூபத்திற்கு ‘பவமான’ என்று பெயர் என்று ஞானிகள் சொல்கின்றனர். இதுமட்டுமல்லாமல், ஆறு-சக்கரங்களில் நிலைத்திருக்கும் ஸ்ரீஹரியின் ஒவ்வொரு ரூபங்களையும் பூஜிப்பதற்காக முக்யபிராணரின் தனித்தனி ரூபங்கள் இருக்கின்றன. 

கே: உணவு உண்ணும்போது பிராண, அபான, வியான, உதான, சமான என்னும் ஐந்து ரூபங்கள் நம் உடலில் இருக்கின்றன என்று ஏன் நினைக்கவேண்டும்?

ப: நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கையையும் முக்யபிராணதேவரின் ஐந்து ரூபங்கள் மூலமாக, ஸ்ரீஹரியின் ஐந்து ரூபங்களில் சமர்ப்பிக்கிறோம் என்று நினைக்கவேண்டும். முகத்தில் பிராண, கழுத்தில் அபான, இதயத்தில் & வயிற்றில் வியான, வயிற்றின் இடதுபக்கத்தில் உதான, வலதுபக்கத்தில் சமான ஆகியோர் - வாசுதேவ, ப்ரத்யும்ன, சங்கர்ஷண, அனிருத்த & நாராயண ரூபங்களில் சமர்ப்பணம் செய்கின்றார்கள். இந்த ஐந்து இடங்களில் ஆஹவனீய, கார்ஹபத்ய, தாக்‌ஷிணாத்ய, ஸத்ய, அவஸப்ய என்கிற ஐந்து அக்னிகள் (நெருப்புகள்) இருக்கின்றன. ஆகையால் நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும் ஐந்து இடங்களில் ஸ்ரீஹரியின் ஐந்து ரூபங்களில் போய் சேர்கின்றன. இதை முக்யபிராணதேவரே நின்று நடத்துகிறார் என்று சிந்தனை செய்யவேண்டும். 

கே: பிராணாபானாதி ரூபங்கள் மட்டுமல்லாது வேறு ஏதாவது ரூபங்கள் இருக்கிறதா?

ப: 
பிராணாதிபஞ்சகம் சைவ ததா நாகாதிபஞ்சகம்
ஸனாக கூர்ம கலதேவதத் ததனஞ்சயா: 
ஏவம் து தஷதா ப்ராண அத்யாத்மாதிதிதாSகிலா: ||
(பாகவத தாத்பர்ய)

வியோம சம்ஹிதையின் இந்த வாக்கியத்தை, பாகவத தாத்பர்யத்தில் ஸ்ரீமதாசார்யர் உதாரணம் செய்திருக்கிறார். இந்த வாக்கியத்தால், பிராண, அபான, வியான, உதான, சமான என்னும் ஐந்து ரூபங்களுடன் நாக, கூர்ம, க்ருகல, தேவதத்த, தனஞ்சய என்று மற்றொரு ஐந்து ரூபங்கள் நம் உடலில் இருந்து நம்மை காக்கின்றனர் என்று தெரிகிறது. நம் உடலில் அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வம் இருக்கிறது. இந்த மூன்றிலும் பிராணதேவர் தனித்தனியாக பத்து ரூபங்களில் வியாபித்திருக்கிறார். ஆகையால் மொத்தம் முப்பது ரூபங்களில் நம் உடலில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். மேலும் கால் கட்டைவிரலில் மூலஸ்வரூபத்தினாலான ரூபம் இருக்கிறது. ஆக மொத்தம், 31 முக்கிய ரூபங்களை நினைக்கவேண்டும். 

இதுமட்டுமல்லாமல், ஸ்ரீஹரி 72,000 நாடிகளில் 72,000 ரூபங்களில் வியாபித்திருக்கிறார். அங்கு முக்யபிராணதேவர் தானும் 72,000 ரூபங்களை தரித்து ஸ்ரீஹரியுடன் இருக்கிறார். ஆகையால் நம் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் முக்யபிராணர் பற்பல ரூபங்களை தரித்து, நம்மூலமாக சாதனைகளை / நற்செயல்களை செய்விக்கிறார் என்று நினைக்கவேண்டும். 

கே: முக்யபிராணர் ஹனும பீம மத்வ என்னும் ரூபங்களில் மட்டும் அவதரித்திருக்கிறார் அல்லவா?

ப: இந்த மூன்று ரூபங்களில் அவதரித்து, மிகுந்த பக்தியுடன் ஸ்ரீஹரியின் சேவையை செய்து, தம் சாதனையை செய்துவருகிறார். ஆனால் அவரின் ரூபங்கள் எண்ணில் அடங்காதவை. ‘த்ரிகோடிரூப: பவனஸ்சமே சுத:’ என்பதுபோல் ஸ்ரீஹரியை பூஜிப்பதற்காக மட்டும் முக்யபிராணர் மூன்று கோடி ரூபங்களை தரித்திருக்கிறார். அந்த மூன்று கோடி ரூபங்களில், ஒவ்வொரு ரூபத்தினாலும் ஸ்ரீஹரியை ஒவ்வொரு விதமாக நிரந்தரமாக பூஜை செய்துவருகிறார். மேலும் ஏழுகோடி மஹாமந்திரங்களை ஜெபித்து, அனைத்து மந்திரங்களின் பலனையும் முழுமையாக அடைகிறார். 

கே: முக்யபிராணதேவரின் ரூபங்களுக்கு எல்லை இருக்கிறது என்கிறார்கள். ஆனால் அவருக்கு எண்ணிக்கையில் அடங்காத ரூபங்கள் உள்ளன என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இது எப்படி?

ப: ’அனந்தானி அஸ்ய ரூபாணி த்ரிகோடீனி விசேஷத:’ என்னும் வசனத்தின்படி முக்யபிராணர் விசேஷமாக மூன்று கோடி ரூபங்களை தரித்திருக்கிறார். ஆனால் இவருக்கு கணக்கற்ற ரூபங்கள் உள்ளன என்று சாஸ்திரங்களில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். ஆகையால், முக்யபிராணரின் குணங்களை மற்றும் தோஷங்களை சிந்தனை செய்வதென்பது யாருக்கும் சாத்தியமில்லை. 

கே: ஸ்ரீஹரியின் உடலினுள் நுழைந்து முக்யபிராணர், சஹபோகம் அனுபவிக்கிறார் என்று கேட்டிருக்கிறோம். இதன் பொருள் என்ன?

ப: முக்யபிராணர் மட்டுமல்லாமல் அனைத்து தத்வாபிமானி தேவதைகள் அனைவருமே ஸ்ரீஹரியின் உடலில் நுழைந்திருக்கின்றனர். ஆனால், சஹபோகம் கிடைக்கும் அதிகாரம் முக்யபிராணருக்கு மட்டுமே. அந்தந்த முக்யபிராணதேவரைப் பின்பற்றுபவர்களின் நற்காரியங்களின் பலன்களை ஸ்ரீஹரி முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். அந்தந்த முக்யபிராணர் ஜீவோத்தமராகி அவருடனேயே இருந்து அதனை ஏற்றுக்கொள்கிறார். இதுவே சஹபோகம் என்பதின் பொருள்.

கே: ப்ராக்ருதமானவற்றை (இயற்கையாகக் கிடைப்பவற்றை) ஸ்ரீஹரி உண்ணுவதில்லை. அப்படியிருக்கும்போது, அதிலிருந்து கிடைக்கும் சுகத்தின் அனுபவம் முக்யபிராணதேவருக்கு வருவதற்கு எப்படி சாத்தியம்?

ப: அனைத்து சாதகர்களும் தாம் செய்யும் நற்காரியங்களை கிருஷ்ணார்ப்பணமஸ்து என்று சொல்லி, ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிக்கின்றனர். இதன் பலன்களை ஸ்ரீஹரி ஏற்றுக்கொள்ளும்போது, அதன் ஒரு பாகத்தை முக்யபிராணருக்கும் கொடுக்கிறார் என்பது அபிப்பிராயம். இதையே சஹபோகம் என்றும் அறியவேண்டும். 

கே: முக்யபிராணதேவருக்கு ஸ்ரீஹரியின் தேகத்தில் ஏன் பிரவேசம் இருக்கிறது என்று சொல்லவேண்டும்?

ப: எந்த தேவதைகளிடமிருந்தும் ஸ்ரீஹரிக்கு ஆக வேண்டிய வேலைகள் என்று எதுவும் இல்லை. ஆனாலும், அவர்களின் மகிழ்ச்சிக்காக ஸ்ரீஹரி சில லீலைகளை செய்கிறார். தன் தேகத்திலேயே லட்சுமி, முக்யபிராணர் முதலான உத்தம தேவதைகளுக்கு இடம் அளித்து அங்கேயே சுகபோகங்கள் கிடைக்குமாறு செய்கிறார். 

கே: அப்படியென்றால் லட்சுமிதேவியின் சஹபோகமும், முக்யபிராணரின் சஹபோகமும் ஒன்றே அல்லவா?

ப: அப்படியில்லை. அந்த கல்பத்தின் சாதகர்கள் அவர்களின் எந்த சாதனைகளை ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து என்று சொல்லி, அவருக்கு சமர்ப்பிக்கிறார்களோ, அதன் ஒரு பாகத்தை மட்டும் ஸ்ரீஹரி முக்யபிராணதேவருக்கு அளிக்கிறார். ஆனால், அனாதி காலத்திலிருந்து வரும் கல்பத்தின் சாதகர்களின் பலன்களை லட்சுமிதேவிக்கு அளித்துவருகிறார். இந்த வேறுபாட்டினை கவனமாகப் பார்க்கவேண்டும். 

கே: சாத்விகர்களுக்கு மட்டும் முக்யபிராணர் சாதனை செய்விக்கிறார். ராஜஸ, தாமஸர்களுக்கு சாதனை செய்விப்பதற்கு சாத்தியம் இல்லை அல்லவா?

ப: ‘ஜன்மாதி வியாத்யுபாதி’ என்னும் வாயுஸ்துதி ஸ்லோகத்தில் இதற்கான பதில் உள்ளது. சாதகர்களின் பிறவி, ஆதி, வியாதி இவற்றை பரிகரிக்கும் முக்யபிராணர், பல நற்குணங்களை அந்த சாதகர்களுக்கு வழங்குகிறார். அதுமட்டுமல்லாமல், இதே முக்யபிராணர் அவர்களுக்கு பல சுகங்களைத் தருகிறார். மோட்ச சாதகர்களுக்கு, சாதனை செய்வதற்கு யார் இடையூறு செய்கிறார்களோ, அந்த துஷ்டர்களில் அந்தர்யாமியாக இருந்து, பற்பல காலங்களுக்கு அவர்களுக்கு துக்கத்தைத் தருகிறார். அந்தந்தமஸ்ஸிற்கு தள்ளி அங்கும் தானே இருந்து அவருக்கு தண்டனையைத் தருகிறார். 

கே: மோட்சத்தைக் கொடுப்பவர் முக்யபிராணர் என்று தெரிகிறது. மோட்சத்தில் மகிழ்ச்சியையும் அவரே கொடுக்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இது உண்மையா?

ப: ஆம். நம்மை எப்போதும் நற்காரியங்களை செய்யவைக்கும் முக்யபிராணர், மோட்சத்தில் நமக்கு சுகம் அளிப்பதற்கு தகுதியானவர் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? யார் நன்றாக சாதனை செய்வித்திருக்கிறாரோ, அவரே பரிசுகளைக் கொடுத்து, சுகத்தையும் கொடுத்தால் - அப்போது மட்டுமே பரிபூர்ணத்வம் வருகிறது. ஆகையாலேயே த்ரிவிக்ரம பண்டிதர் ‘சிருமுதித சிதானந்த ஸந்தோஹதானாம்’ என்று சொல்கிறார். இதன் மூலமாக, முக்யபிராணதேவர், மோட்சத்தில் இருக்கிறார் என்பது மட்டுமல்லாமல், நம்மை மோட்சத்திற்கு அழைத்துப்போய், அங்கு பல காலத்திற்கு நம்முடனேயே இருந்து, ஞானத்துடன் சுகத்தையும் கொடுத்து மகிழ்விக்கிறார் என்று அறியவேண்டும். 

கே: அந்தம்தமஸ்ஸில் முக்யபிராணர் இருக்கிறார் என்று ஏன் சொல்லவேண்டும்?

ப: அனைத்து பிரம்மாண்டத்திலும் அனைத்து வேலைகளையும் ஸ்ரீஹரி, முக்யபிராணர் மூலமாகவே செய்விக்கிறார். ஆகையால், அந்தம்தமஸ்ஸில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும்கூட  முக்யபிராணரே பொறுப்பாக இருக்கிறார். ஆகையாலேயே, ‘தமஸி விதததாம்’ என்று த்ரிவிக்ரம பண்டிதர், அந்தம்தமஸ்ஸில் அனாதி காலம் வரை துக்கத்தைக் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அந்தந்தமஸ்ஸில் இருக்கும் முக்யபிராணருக்கு எவ்வித துக்கமும் வருவதில்லை. 

கே: வேதம் மற்றும் ஓங்காரத்தினால் புகழப்படுகிறார் ஸ்ரீஹரி என்பது சரி. ஆனால் முக்யபிராணரும் வேதங்களினால் புகழப்படுகிறார் என்றால் அது எப்படி?

ப: ஸ்ரீஹரி மற்றும் லட்சுமிதேவியை மட்டும் புகழும் வேதங்களை விட்டு, மற்ற அனைத்து வேதங்களும் முக்யபிராணரையே போற்றிப் புகழ்கின்றன. 

வேதானாம்சைவ லோகனாம் வ்யோமகாலாதிகஸ்ய ச |
ஸர்வதத்வாபிமானீ ச ஸர்வப்ராண கணாதிப: ||

வேதங்கள், உலகம், ஆகாயம், காலம், அனைத்து தத்வங்கள், அனைத்து ஜீவகணங்கள் என அனைவரையும் கட்டுப்படுத்துபவர் முக்யபிராணரே ஆகியிருக்கிறார். இவரால் கட்டுப்படுத்தப்படும் வேதங்கள் இவரை புகழ்ந்தே ஆகவேண்டும். ஆகவே, மிகவும் முக்கியமானவராக ஸ்ரீஹரி புகழப்பட்டாலும், முக்கியமானவராக முக்யபிராணரும் புகழப்படுகிறார் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். 

கே: ‘ஆகணாஷ்மசமர்’ என்று முக்யபிராணரை சொல்கிறார்கள். இதன் பொருள் என்ன?

ப: சாந்தோக்ய உபநிஷத், முக்யபிராணரை ஆகணாஷ்மசம என்று புகழ்கிறது. ஒரு முறை தேவர் - அசுரர்களுக்கு போர் நிகழ்ந்தபோது, ஸ்ரீஹரியை வணங்குவதற்காக ஒரு சிலையை தேவர்கள் தேடினர். அக்னி, சூரியன், சந்திரன், ருத்ரர், சேஷன், கருடன் இந்த அனைத்து தேவதைகளின் சிலையையும் வைத்து உத்கீதா என்னும் ஸ்ரீஹரியின் ரூபத்தை பூஜிக்க முற்பட்டனர். ஆனால், அந்த அனைத்து சிலைகளையும் அசுரர்கள் அழித்தனர். பிறகு முக்யபிராணரின் சிலையை வைத்துக்கொண்டு, உத்கீதனை பூஜித்தனர். அப்போது அந்த சிலையின் மேல் அசுரர்கள் பலவித ஆயுதங்களை பிரயோகித்தனர். ஆனால் அவை அனைத்தும் வீணாயின. ஒரு பாறாங்கல்லின் மேல் ஒரு களிமண் உருண்டையை அடித்தால், அந்த பாறாங்கல்லுக்கு எவ்வித சேதமும் இல்லாமல், அந்த களிமண் உருண்டையானது எப்படி பொடிப்பொடி ஆகின்றதோ, அப்படி அந்த அசுரர்கள் அந்த சிலையின் மேல் பிரயோகித்த அனைத்து ஆயுதங்களும் நஷ்டமாயின. அசுரர்களும்கூட அழிந்தனர். இதனால், வாயுதேவரே ஸ்ரீஹரியின் ‘ஸ்ரேஷ்ட-பிரதிமை’ என்று தேவதைகள் கோஷமிட்டனர். 

கே: முக்யபிராணதேவரிடத்தில் நாம் ஸ்ரீஹரியை ஏன் நினைத்து பூஜிக்கவேண்டும்? ருத்ராதி தேவதைகளில் ஏன் அப்படி நினைக்கக்கூடாது?

ப: நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத என்று ஸ்ரீஹரியை நினைத்தே பூஜிக்கவேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், நாம் செய்த அந்த செயல்கள் நாசமடைகின்றன. ஏனென்றால், மற்ற அனைத்து தேவதைகளிடமும் அசுரர்களின் பிரவேசம் இருக்கிறது. முக்யபிராணரிடம் அசுர பிரவேசத்திற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை. முன்னரே சொன்னதுபோல், முக்யபிராணரே ஆகணாஷ்மசமர் ஆனதால் (அனைத்து அசுரர்களும் சேர்ந்து எதிர்த்தாலும், வெல்லப்பட முடியாதவர்), இவரே ஸ்ரீஹரியின் பிரதிமை ஆவதற்கு சாத்தியம். ஸ்ரீஹரியும் முக்யபிராணரில் இருந்து நமக்கு அருளுவார். நாம் எங்கு ஸ்ரீஹரியை பூஜிக்கவேண்டுமென்றாலும், அதை முக்யபிராணதேவர் மூலமாகவே செய்யவேண்டும். 

கே: ருத்ராதி தேவதைகளில், அசுர பிரவேசம் இல்லாதபோது ஏன் ஸ்ரீஹரியை அவர்களிடத்தில் நினைத்து பூஜிக்கக்கூடாது?

ப: ’தஸ்மின் அபூ மாதரிஸ்வா ததாதி’ என்று ஈசாவாஸ்ய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து சாதகர்களின் நற்கர்மங்களை முக்யபிராணர் ஒருவரே சமர்ப்பணம் செய்கிறார். ஆகையால் நாம் அனைத்து செயல்களையும், பாரதிரமண முக்யபிரணாரில் அந்தர்யாமியாக இருப்பவருக்கே சமர்ப்பிக்கவேண்டும். ருத்ராதி தேவதைகளில் எப்போது அசுர ஆவேசம் இருக்கிறது, எப்போது அசுர ஆவேசம் இல்லை என்று நம்மால் தெரிந்துகொள்வது சாத்தியமில்லை. சாஸ்திர விதிகளுக்குட்பட்டு, ருத்ராதிகளை வணங்கவேண்டுமெனில், அவர்களிடத்தில் முக்யபிராணரையும், முக்யபிராணரிடத்தில் ஸ்ரீஹரியையும் சிந்தனை செய்தால், நம் செயல்கள் அசுர ஆவேசத்திற்கு உட்படாமல், பத்திரமாக ஸ்ரீஹரியைப் போய் சேர்கின்றன. 

கே: ஸ்ரீஹரியைப் போல வாயுதேவரும் அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவரா?

ப: 
முக்யபிராணோ மஹானேஷ யேன வ்யாப்தம் சராசரம்
தஸ்மின் ஒதமிதம் ஸர்வம் சேதனா சேதனாத்மகம் |
யதா ஸூத்ரே மணிகணா: ரதனாபாவரா யதா
யதா கந்தாபடா: ஸூத்ரே ஒதா:போதாஸ்ச ஸ்ம்ஸ்தா: ||
(பாகவத தாத்பர்ய)

ஜீவோத்தமரான வாயுதேவர் இந்த மொத்த உலகத்திலும் அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவர் என்பது இந்த ஆதாரத்தினால் தெளிவாகிறது. ஆனால் நவ-ஆவரணத்தினால் கூடிய இந்த பிரம்மாண்டத்தின் உள்ளே மட்டுமே முக்யபிராணர் வியாப்தர் என்று தெரியவேண்டும். நவ-ஆவரணத்தின் வெளியே முக்யபிராணர் இருப்பதில்லை. அங்கு லட்சுமி மற்றும் ஸ்ரீஹரி மட்டுமே வியாப்தராக இருக்கின்றனர். ஆகையால் முக்யபிராணரைக் காட்டிலும் லட்சுமி மற்றும் ஸ்ரீஹரி இருவரும் உத்தமர் என்று தெரியவேண்டும். 

கே: முக்யபிராணர் மனுஷ்யோத்தமர்களுக்கு மட்டுமே மோட்சத்தைக் கொடுக்கிறாரோ, அல்லது தேவதைகளுக்கும் கொடுக்கிறாரா?

ப: ஏகோ ஹி கர்தா ஸர்வஸ்ய ரமானாதப்ரஸதத: |
பதப்ரதஸ்ச தேவானாம் தத்தஸ்பக்தி ப்ரதஸ்ததா |
ததா ம்ருத்யுப்ரதஸ்சாயம் முக்தானாமபி ஜீவனம் |
(ஸ.ர.மா)

என்னும் வாக்கியத்தினால், ஸ்ரீஹரியின் பிரசாதத்தினால் தேவதைகளுக்கும்கூட முக்யபிராணர் மோட்சத்தைக் கொடுக்கிறார் என்று தெரியவருகிறது. ஆகையால் அனைத்து தேவதைகளும், முக்யபிராணரையே குருவாக நினைத்து பூஜிக்கின்றனர். 

கே: முக்யபிராணரிடம் எப்படி பக்தி செலுத்தவேண்டும், எப்படி பூஜை செய்யவேண்டும் என்பதை சொல்வீர்களா?

ப: திருப்பதி வெங்கடேசனைப் பார்ப்பதற்கு எப்படி ஒரு ஆவலுடன் நாம் போகிறோமோ, அதைப்போலவே தேவதைகளும் முக்யபிராணரின் தரிசனத்துக்காக ஆவலுடன் போகிறார்கள். அப்படிப் போய், முக்யபிராணரை சத்யலோகத்தில் பார்த்தபோது, அனைவரும் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டு அவரை வணங்குகின்றனர். அப்போது அவர்களின் கிரீடங்கள், முக்யபிராணரின் பாதபீடத்தில் பட்டு, அதிலிருந்து கிளம்பும் தூசு வானத்தில் பரவி, வானத்தையே வண்ணமயமாக்குகின்றது. 

இப்படியாக தேவதைகளுக்கு முக்யபிராணரிடத்தில் இருக்கும் பக்தியை, வாயுஸ்துதியில் த்ரிவிக்ரம பண்டிதர் மிகவும் அற்புதமாக வர்ணிக்கிறார். தேவதைகளே இவ்வளவு பக்தி செலுத்தும்போது, நாமும்கூட அதே போல பக்தி செலுத்தவேண்டும். அவரது பாததூளியை நம் தலையில் ஏந்தி தன்யர் ஆகவேண்டும். 

கே: வாயுதேவரை எப்படி நினைக்கவேண்டும்?

ப: 
‘த்ரிஜகத்குருவரேண்ய ருஜுகணாதிப பதாம்புஜயுக்மக்கெரகி பின்னைப இன்னேக மன்மனதி நிஜரூப தோரி ஸந்தைஸு’ (தத்வஸுவ்வாலி)

தேவஸ்ரேஷ்டஸ்ச மாருதி: - இத்தகைய ஆதாரங்கள் வாயுதேவரே ஜீவோத்தமர் என்பதை நிரூபிக்கின்றன. ‘இயதாமனனாத்’, ‘ஸ்ரேஷ்டஸ்ச’ ஆகிய பிரம்மசூத்திரங்களில் ஜீவோத்தம நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று லோகங்களுக்கும் இவரே குரு ஆவார். இத்தகைய வாயுதேவரின் ஜீவோத்தமத்வ பூஜையை, தினந்தோறும் எந்நேரமும் நினைத்து பூஜித்து நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வோமாக. 

கே: முக்யபிராணருக்கு என்றைக்கும் கலி பிரவேசம் கிடையாதா?

ப: மற்ற தேவதைகளை கவனித்தால், அவர்களிடத்தில் ஒருமுறையாவது கலி பிரவேசம் ஆகியிருக்கிறது. ஆனால், என்றைக்கும் கலிபிரவேசம் இல்லாத குரு என்றால் அது முக்யபிராணர் மட்டுமே. ஆகையால், அவதார ரூபங்களில் இவருக்கு, மூலரூபத்தில் இருக்கும் ஞானம், வலிமைகள் அப்படியே முழுமையாக இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும், மூலரூபத்தில் இருக்கும் வலிமையை இவர் தனது அவதார ரூபங்களில் வெளிப்படுத்த முடியும். இத்தகைய உத்தமரான முக்யபிராணரே, மத்வராகி நமது குருவாக கிடைத்திருப்பது நமது பற்பல ஜென்மங்களின் நற்பலனே ஆகும். இத்தகைய முக்யபிராணரின் பாதங்களில் நிரந்தரமாக சரணாகதி அடைவோமாக. 

கே: முக்யப்ராணரின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.

ப: ’நாம் எப்போதும் ஸ்ரீஹரியை நினைத்து பூஜிப்பதற்கு ஒரு பிரதிமை (உருவச்சிலை) வேண்டும். அதைப் பற்றி யாரிடம் கேட்பது?’ என்று ஒரு முறை அனைத்து தேவதைகளும் கூடி விவாதித்தனர். பூஜைக்காக அந்தப் பிரதிமை மிகவும் முக்கியமானதாக இருந்தது. கண், மூக்கு ஆகிய இந்திரியங்களின் அபிமானி தேவதைகளையும் பிரதிமையாகச் செய்து பூஜிக்கத் துவங்கினர். ஆனால், எப்போது பூஜையைத் துவக்கினரோ, அதே நேரத்தில் அசுரர்கள் வந்து, அந்த பிரதிமையை அழிக்கத் துவங்கினர். இப்படியாக அந்த பிரதிமை அசுத்தமானதால், தேவதைகள் ஸ்ரீஹரியை வணங்குவதற்கு  சாத்தியமே இல்லாமல் போயிற்று. 

பலமுறை இப்படியே தேவதைகளின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பிறகு முக்யபிராணரின் சிலையைச் செய்து வைத்தனர். அதில் ஸ்ரீஹரியை அந்தர்யாமியாக நினைத்து பூஜிக்கத் துவங்கினர். அசுரர்கள் அங்கேயும் வந்து தங்களின் தொந்தரவை தொடர்ந்தனர். பல்வேறு வழிகளில் அந்த பூஜையை நிறுத்த முயன்றனர். ஆனால் ஒரு பெரிய பாறாங்கல்லில் ஒரு களிமண் உருண்டையை ஓங்கி அடித்தால், அந்த பாறாங்கல்லுக்கு எவ்வித சேதமும் ஆகாது. கூடவே அந்த களிமண் உருண்டையானது இருக்கும் இடம் தெரியாமல் உடைந்து போகும். அதுபோலவே, முக்யபிராணரை அழிக்கவந்த அசுர சக்திகள் அவர் முன் தோற்று ஓடின. அந்த முக்யபிராணரின் சிலையை எந்தவொரு வழியிலும் அவர்களால் அழிக்க முடியவில்லை. 

இத்தகைய முக்யபிராணரின் சிலையில் தேவதைகள் ஸ்ரீஹரியின் ரூபத்தை தியானித்து, வெல்லமுடியாதவர்களாக ஆயினர். இப்படி எந்த அசுரசக்தியாலும் அழிக்கமுடியாத பரிசுத்த ஸ்வரூபத்தைக் கொண்ட முக்யபிராணதேவர் மட்டுமே, ஸ்ரீஹரியின் பூஜைக்கு முக்கிய காரணமானார். இவரை விட்டு வேறு யாரின் மூலமாகவும் நாம் ஸ்ரீஹரியை நினைக்கக்கூடாது. சாஸ்திரங்கள் சொல்லியிருக்கும் விதிகளின்படி வேறு ஏதாவது தேவதைகளை நாம் நினைத்து பூஜிக்க முற்பட்டாலும், அந்தந்த தேவதைகளில் முக்யபிராணரை, அந்த முக்யபிராணரில் ஸ்ரீஹரியை நினைத்து பூஜிக்கவேண்டும். முக்யபிராணரில் இருக்கும் ஸ்ரீஹரியை பூஜித்தால் எந்தவொரு பிரச்னை / தடையும் இல்லாமல் தூய்மையான மங்களகரமான மோட்சம் நமக்குக் கிடைக்கும். 

ஆகையால், முக்யபிராணரின் அந்தர்யாமியாக ஸ்ரீஹரியை பூஜித்து நாம் தன்யர் ஆவோமாக. 

கே: முக்யப்ராணரை நாம் எப்படி வணங்கவேண்டும்?

ப: தினமும் வாயுஸ்துதி பாராயணம் செய்து, ஒவ்வொரு பிராமணரும் ப்ராணமந்திரத்தை ஜெபிக்கவேண்டும். இதைத் தவிர, ஸ்ரீஹரியின் நாமஸ்மரணையுடன் ‘முக்யபிராணாய நம:’ என்று முக்யபிராணரின் நாமஸ்மரணையையும் செய்யவேண்டும். நிற்கும்போது, உட்காரும்போது, உண்ணும்போது, தூங்கும்போது, நடக்கும்போது, பயணிக்கும்போது - இப்படி எந்நேரமும் முக்யபிராணரின் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது. அப்போது முக்யபிராணரின் அந்தர்யாமியான ஸ்ரீஹரி நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி அருளுவார். 

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தில் முக்யப்ராணரைக் குறித்து ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருப்பது என்ன?

ப: உத்யத்ரவி ப்ரகரசன்னிப மச்யுதாங்கே
ஸ்வாஸீனமஸ்ய நுதிநித்ய வச: ப்ரவ்ருத்திம் |
த்யாயேத் கதாபயகரம் ஸுக்ருதாஞ்சலிம் தம்
ப்ராணம் யதேஷ்டதனுமுன்னத கர்மசக்திம் ||

உதயசூரியனைப் போன்ற ஒளியைக் கொண்டவர், ஸ்ரீஹரியின் தொடையின் மேல் அமர்ந்து எப்போதும் அவரைப் பற்றி துதித்துக் கொண்டிருப்பவர். ஒரு கையில் கதை, இன்னொரு கையில் அபய முத்திரையை தரித்து, இன்னும் இரு கைகளை ஸ்ரீஹரியை நோக்கி கும்பிட்டவாறு இருக்கிறார். நினைத்ததை நடத்தி முடிப்பவரான ப்ராணதேவரை தியானிப்போம். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***

No comments:

Post a Comment