Saturday, February 3, 2018

23/40 மோகினி அவதாரம்

23/40. மோகினி அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்




பெண்களின் கேள்வி: ஆண்கள் தங்கள் இதயத்தில் இருக்கும் பிம்பரூபியான ஸ்ரீஹரியை வணங்குகிறார்கள். நாங்கள் என்ன செய்வது?

பதில்: நீங்களும் அப்படியே செய்யுங்கள்.

பெ.கே: இல்லை. ’பதி அந்தர்கத பிம்பரூபியை’ வணங்குங்கள் என்கிறார்கள். அப்படியென்றால் எங்களுக்கு இதயகமலம் இருக்கா இல்லையா? அல்லது எங்களுக்கு பிம்பரூபி இருக்கிறாரா இல்லையா? இதுவே எங்களின் குழப்பம். 

ப: இந்தக் குழப்பம் ஆண்களுக்குமே இருக்கிறது. அவர்களும் தங்கள் ‘குரு அந்தர்கத பிம்பரூபியை’ வணங்கவேண்டுமா இல்லையா?

பெ.கே: அப்படியென்றால் ஆண்களும் தங்கள் இதயத்தில் இருக்கும் ஸ்ரீஹரியை தியானம் செய்யக்கூடாதா?

ப: ஆ! அப்படி பொருள் வந்துவிட்டதா? ஆண்கள் தங்கள் இதயகமலத்தில் இருக்கும் பிம்பரூபியையே தியானிக்க வேண்டும். தியானம் செய்யும்போது தங்கள் குருவின் அந்தர்யாமியாக நினைக்கவேண்டும். இதேதான் உங்களுக்கும். 

பெ.கே: விளங்கவில்லை. அப்படியென்றால் எங்களுக்கும் இதயகமலம் உள்ளதா? நாங்களும் தியானம் செய்யலாமா?

ப: ஆம். ஏன் குழப்பம்? இதயம் இருக்கும்போது இதயகமலம் இல்லாமல் இருக்குமா? சுஷும்னா நாடியில் இருக்கும் இதயகமலத்தில் பிம்பனை தியானிக்கும்போது பதி-அந்தர்கதனாக நினைக்கவேண்டும் என்பதே இங்கே சொல்ல வந்தது. புரிந்ததா?

பெ.கே: அப்படியென்றால், பதி-அந்தர்கத இல்லாமல் வேறொரு பிம்பன் நம்மிடம் நியாமகனாக இருக்கமுடியுமா? அந்த பிம்பன் எப்படி இருப்பான்? அவனின் சாட்சாத்காரம் எப்படி?

ப: பெண்களின் இதயகமலத்தில் இருக்கும் பிம்பரூபியான ஸ்ரீஹரி, நாம் நினைப்பதுபோல் இருப்பதில்லை. ஆனால் இதைப் பற்றிய தகவல் தியானம் செய்யும் பெண்களிடம் இருப்பதேயில்லை. 

பெ.கே: அப்படியில்லை. பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் - ’அம்பேகாலு கிருஷ்ணா, உடுப்பி கிருஷ்ணா அல்லது கோபாலகிருஷ்ணா என்று யாராவது ஒருவரை தியானியுங்கள்’ என்று. ஆகவே இந்த ரூபங்களையே நாங்கள் தியானம் செய்கிறோம். 

ப: ஸ்ரீஹரியின் சாட்சாத்காரம் வேண்டுபவர்களுக்கு, ஸ்ரீகிருஷ்ணனை உபாசனை செய்யுங்கள் என்று சொல்வது சாதாரண உபதேசம். அபரோக்‌ஷ ஞானத்திற்கான காலம் கனியும்போது அந்தந்த ஜீவிகளின் ஸ்வரூபகுருவானவர் ‘பிம்ப ரூப’ யார் என்று தெரிவித்து, உபதேசம் செய்வித்து, உபாசனை செய்யுமாறு வழிகாட்டுகிறார். பெண்களுக்கான பிம்பருபம், ஸ்ரீஹரியின் பெண்ரூபமாக இருக்கவேண்டுமென்று விதி இல்லை. எந்த ரூபமாகவும் இருக்கலாம். 

பெ.கே: பெண்களின் ஜீவஸ்வரூபத்தில் பெண்களே இருக்கவேண்டும் என்பதில்லை. ஆண்களாகவும் இருக்கலாம் இல்லையா?

ப: சாத்தியமே இல்லை. பெண்களுக்கு எப்போதும் ஆண்களின் ஜென்மம் இல்லை. ஆண்களுக்கு எப்போதும் பெண்களின் ஜென்மம் இல்லை. விதிவிலக்காக ஆண்களுக்கு பெண்களின் தேகம் வந்தாலும், பெண்களுக்கு மட்டும் ஆண்களின் ஜென்மம் வருவதற்கான சாத்தியமே இல்லை. 

கே: பாற்கடலை கடையும்போது மோகினி என்னும் பெண் ரூபத்தை தரித்திருகிறார். ஸ்ரீஹரியின் பெண் ரூபம் என்பது இது மட்டும்தானே?

ப: இல்லை. மெய் எழுத்துக்களில், 36,000 பகல் பொழுதுகளில், சூரியனில், நம் உடலின் இடது பாகத்து நாடிகளில் - இப்படி ஒவ்வொருவரிடமும் ஸ்ரீஹரி 36,000 ஸ்ரீரூபங்களில் வியாபித்திருக்கிறார். மெய் எழுத்துக்களில் இருக்கும் பெண் ரூபங்கள், உயிர் எழுத்துக்களில் இருக்கும் ஆண் ரூபங்களுடன்  சேரும்போது, பகல்களில் இருக்கும் பெண் ரூபங்கள், இரவுகளில் இருக்கும் ஆண் ரூபங்களுடன் சேரும்போது, இடது பாகத்தில் இருக்கும் பெண் ரூபங்கள், வலது பாகத்தில் இருக்கும் ஆண் ரூபங்களுடன் சேரும்போது, ஸ்ரீஹரி அவனது லீலாவினோதங்கள் மூலம் அங்கு இருக்கிறார்.

கே: மிகவும் ஆச்சரியமான விஷயங்கள். இவை எந்த கிரந்தங்களில் இருக்கின்றன?

ப: ஸ்ரீஹரியின் புருஷ ரூபங்கள் கணக்கற்றவையாக இருப்பதைப் போல, ஸ்ரீஹரியின் பெண் ரூபங்களும் கணக்கற்றவையாக இருக்கின்றன. இவற்றை விளக்குவதற்காகவே, ‘அர்தநாராயணீ’ என்று ஒரு தத்வகிரந்தம் இருக்கிறது. இந்த கிரந்தத்தை ஸ்ரீமதாசார்யர், ஐதரேய பாஷ்யத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறார். 

கே: அப்படியென்றால், ‘நைனம் வாசா ஸ்த்ரீயம் ப்ருவன்’ என்னும் ஸ்லோகத்தில் ‘ஸ்ரீஹரி பெண்ணும் அல்லன்; ஆணும் அல்லன்’ என்று சொல்லியிருக்கார்கள் அல்லவா? ஸ்ரீஹரிக்கு எதற்கு பாலினம்?

ப: ஸ்ரீஹரி வெறும் ஆண் மட்டும். என்றைக்கும் அவன் ஆண் மட்டுமே. பெண் ரூபங்கள் இருக்கின்றன அவ்வளவே. தற்போது இருக்கும் ஆண், பெண்களிடமிருந்து வேறுபட்டவன் என்பது மட்டுமே இந்த ஸ்லோகத்தின் பொருள். அவர் பெண்களுக்கு பெண். ஆண்களுக்கு ஆண்.

கே: மூன்றாம் பாலினத்தவர்க்கு?

ப: இந்த கேள்விக்கு ஸ்ரீமதாசார்யர், ஐதரேய பாஷ்யத்தில் பதில் கொடுத்திருக்கிறார். ’ந ச நபும்சகருபம் பகவத: குத்ரசிதுக்தம் ப்ரஸித்தமேவ ச ரூபத்வயம்’. ஸ்ரீஹரிக்கு மூன்றாம் பாலினம் எங்கும் சொல்லப்படவில்லை. ஆண் மற்றும் பெண் ரூபங்கள் மட்டுமே சாஸ்திர கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்வரூபத்தில் நபும்சகனே இல்லாதிருக்கும்போது நபும்ஸக பிம்பரூபி இருக்கும் சாத்தியமே இல்லையே.

கே: ஸ்ரீஹரியின் பெண் ரூபங்கள் எவ்வளவு இருக்கிறது?

ப: தாத்பர்ய நிர்ணயத்தில் இரண்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறதைப் போல - ’ஸ்த்ரீரூபோ ஹயஷீர்ஷாவான் ததைவ படவாவக்த்ர:’- படவாவக்த்ர என்னும் பெண் ரூபம் உள்ளது. இதையே ‘பெண் ரூபி ஹயக்ரீவ’ என்று சிலர் சொல்கிறார்கள். இந்த விஷயம் இன்னும் ஆராயப்பட வேண்டும். 

கே: ‘எடவா / படவா’ என்னும் சொல்லிற்கு பெண்-குதிரை என்னும் பொருள் உண்டு. ஆகையால் இது குதிரையின் ரூபமாக இருக்கலாம் அல்லவா?

ப: ஆம். சாந்தோக்ய உபநிஷத்தில் - ‘வாசி சம்ஸ்தஷ்ச ஸ்த்ரீரூபோ ஹயஷேர்ஷக:’ என்று சொல்லியிருப்பதைப்போல், ஸ்ரீஹரி பெண் ஹயக்ரீவ ருபத்தில் வாக்-அபிமானினியாக நிலைத்திருக்கிறார். இதையே ‘படவாவக்த்ர’ என்று சொல்லலாம். 

கே: ’வடவாவக்த்ர’ என்பதற்கு கடலில் இருக்கும் நெருப்பில் நிலைத்திருக்கும் ரூபம் என்று சிலர் சொல்கிறார்களே?

ப: கடலில் இருக்கும் நெருப்பில், நரசிம்மரும் நிலைத்திருக்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். ‘நாராயணோ லோகஹிதார்தம் வடமுகோ நாம பரமர்ஷி: பபூவ’ என்னும் சாந்திபர்வத்தின் வாக்கியமே இதற்கு ஆதாரம். ஆகையால், ஸ்ரீஹரியின் வடவாவக்த்ர என்னும் புருஷரூபமும் இருக்கிறது. பெண்ரூபமும் இருக்கிறது என்று தெரியவேண்டும். அதுமட்டுமல்லாமல், காயத்ரி, ப்ருதிவி ஆகிய பெண்ரூபங்களும் இருக்கின்றன.

கே: ஸ்ரீஹரியின் பெண் ரூபங்களை பூஜிக்கும், வணங்கும் வழக்கம் நம்மில் இல்லையே?

ப: தேவரபூஜையின் துவக்கத்தில், அனைவரும் ஸ்ரீஹரியின் எட்டு பெண்ரூபங்களை வணங்குகிறார்கள். மற்றும் இதயகமலத்தில் அதையே வணங்குகிறார்கள்.

கே: அந்த ரூபங்களின் பெயர்கள் என்ன? இதைப்பற்றி கேள்விப்பட்ட்தே இல்லையே?

ப: இதயக் கமலத்தில் எட்டு தளம் கொண்ட தாமரை உள்ளது. ஒவ்வொரு தளத்திலும், ஸ்ரீஹரி ஒவ்வொரு பெண் ரூபத்தில் நிலைத்து, பிம்பரூபத்திற்கு ஒவ்வொரு விதமான சேவையை தானே செய்துகொள்கிறான்.

யோகா - என்னும் ரூபத்தினால் பாடுவது
ப்ரஹ்வீ - என்னும் ரூபத்தினால் நடனமாடுவது
ஸத்யா - என்னும் ரூபத்தினால் வாத்தியங்களை வாசிப்பது
ஈஷானா - என்னும் ரூபத்தினால் ஸ்தோத்திரங்களைச் சொல்வது
விமலா - என்னும் ரூபத்தினால் குடை பிடிப்பது
உத்கர்ஷிணி - என்னும் ரூபத்தினால் காற்று வீசுவது
ஞானா - என்னும் ரூபத்தினால் விசிறி வீசுவது
க்ரியா - என்னும் ரூபத்தினால் கண்ணாடி பிடிப்பது
அனுக்ரஹா - என்னும் ரூபத்தினால் அனைத்து சேவைகளையும் சமர்ப்பணம் செய்வது.

இவற்றை அனைவரும் ‘பீடபூஜை’ சமயத்தில் நினைத்தலே வேண்டும். 

கே: ஸ்ரீஹரியின் எந்த பெண் ரூபத்தினைப் பார்த்து, ருத்ரர் மயங்கினார்?

ப: ஸ்ரீஹரியின் மோகினி ரூபத்தைக் காண ருத்ரர் விருப்பப்பட்டார். ஸ்ரீஹரி, ஒரு அழகிய பெண் வடிவத்தில் தோட்டத்தில் காண்பித்துக் கொண்டார். அருகிலிருந்த பார்வதியையும் மறந்து, ருத்ரர் அந்த பெண் ரூபத்தைக் கண்டு மயங்கினார். உடனே ஸ்ரீஹரி ஆணாக மாறியதைக் கண்டு திடுக்கிட்டார்.

கே: ‘ஹரிஹர்புத்ர ஐயப்பா’ என்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் ஐயப்பன் பிறந்தானா?

ப: இதற்கு எந்த வித சாஸ்திர ஆதாரங்களும் இல்லை. மோகினியின் ரூபத்தைக் கண்டு ருத்ரருக்கு, வீர்யஸ்கலிதம் ஆயிற்று. அந்த வீர்யம் விழுந்த இடங்களிலெல்லாம் சிவலிங்கங்கள் தோன்றின. அவை விழுந்த இடங்கள் அனைத்தும் சிவக்‌ஷேத்ரங்கள் ஆயின என்று சாஸ்திரங்களில் உள்ளது. அந்த இடங்களில் தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் நிறந்திருந்திருந்தன என்று பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

கே: மோகினியின் கதையைச் சொல்லுங்கள்.

ப: கடையப்பட்ட பாற்கடலிலிருந்து காமதேனு, உச்சைஸ்ரவஸ், ஐராவத, பாரிஜாத, அப்ஸரஸ் ஆகியோர் வந்தனர். சாக்‌ஷாத் மகாலட்சுமியும் அதிலிருந்து தோன்றினாள். இறுதியில், அமிர்த கலசத்தினை கையில் ஏந்தி, தன்வந்திரி பாற்கடலிலிருந்து தோன்றினார். 

அவரிடமிருந்து கலசத்தை அசுரர்கள் பறித்துக்கொண்டனர். ஸ்ரீஹரி தேவர்களை சமாதானப்படுத்தினார். உடனே மோகினி அவதாரத்தை எடுத்தார். மோகினியின் அழகினைக் கண்டு மயங்கிய அசுரர்கள், அமிர்தத்திற்காக சண்டை போடுவதை விட்டு, மோகினியின் பின் சுற்றிவந்தனர். அமிர்தகலசத்தை மோகினியின் கைகளிலேயே கொடுத்தனர். ‘நீ என்ன சொல்கிறாயோ அதற்கு எங்களின் பரிபூர்ண சம்மதம் இருக்கிறது’ என்று அவளுக்கு வாக்கு கொடுத்தனர். 

தேவர்கள், புத்தாடை அணிந்து, ஹோமங்களை வளர்த்து, கோ-பிராமணர்களுக்கு தானங்களைக் கொடுத்து, புண்யாஹவசனங்களை செய்து, அலங்காரங்களைச் செய்துகொண்டு, கிழக்கு நோக்கி போடப்பட்டிருந்த தர்ப்பாசனத்தின் மேல், அமிர்தத்தைக் குடிப்பதற்காக அமர்ந்தனர். 

அழகான மோகினி, அமிர்தகலசத்தை ஏந்தியவாறு மண்டபத்தில் நுழைந்தாள். அசுரர்களைப் பார்த்து புன்னகை புரிந்தவாறு, இந்த அமிர்தத்தை அசுரர்களுக்கு வழங்கினால், பாம்பிற்கு பால் வார்த்ததைப் போல ஆகிவிடும் என்று தெரிந்து, தூரத்தில் அமர்ந்திருந்த தேவர்களுக்கு அமிர்தத்தை பகிர்ந்தளிக்கத் துவங்கினாள். நடுநடுவே அசுரர்களிடம் வந்து, அவர்களிடம் மயக்கும் வார்த்தைகளைப் பேசி, அமிர்தத்தைக் கொடுக்காமல் ஏமாற்றினாள். 

அமிர்தத்தை முதலில் தமக்குக் கொடுக்குமாறு அசுரர்கள் வேண்டினாலும், மோகினியின் நாடகத்தில் மயங்கியதால், தேவர்களுக்கு கொடுத்ததில் சண்டை போடவில்லை. அசுரர்களில் ராகு மட்டும், தேவர்களைப் போல் வேடமிட்டு, தேவர்களின் வரிசையில் வந்து அமர்ந்து, அமிர்தத்தைப் பெற்று குடித்துவிட்டான். இதனை சந்திர சூரியர்கள் மோகினிக்கு தெரியப்படுத்தினர். உடனே மோகினி, ஸ்ரீமகாவிஷ்ணுவின் ரூபத்தை எடுத்து, ராகுவின் தலையைக் கொய்தார். அந்தத் தலை, ராகு கேது என்று இரு கிரகங்களுக்கும் பொதுவானதாயிற்று. முண்டமானது சுத்தோதகரின் கடலில் விழுந்தது. அமிர்தத்தைக் குடித்ததால், அந்த முண்டபாகம் இன்றும் பாழாகாமல் இருக்கிறது. இந்த ராகு வேறு யாரும் இல்லை. பிரகலாதனின் சகோதரியான சிம்ஹிகையின் மகனே ஆவான்.

இப்படியாக ஸ்ரீஹரி, மோகினி அவதாரத்தை எடுத்து, அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்து, அவர்களை அமரர்களாக ஆக்கி, அசுரர்களுக்கு அமிர்தத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி, பின் மஹாவிஷ்ணுவின் ரூபத்தை எடுத்து கருடவாகனத்தில் ஏறி புறப்பட்டார். இந்த மோகினி, நம் அனைவரின் பேராசைகளைக் குறைத்து, அமிர்தமயமான மோட்சத்தைக் கொடுத்து அருள்புரியட்டும் என்று வேண்டுவோமாக.

கே: மோகினி அவதாரத்தில் ஸ்ரீஹரி என்ன செய்தார்?

ப: தன்வந்திரியே மோகினியாக வந்தார். மோகினி நடனமாடிக் கொண்டிருக்கிறாள். தன் வலது கை  விரல்களால் நிலவைக் காட்டியவாறு நடனமாடி, மற்றொரு கையால் தோளினை ஆட்டியவாறு, ஒரு குதிகாலால் மணலை அளந்தவாறு, இன்னொரு முழங்காலை மென்மையாக ஆட்டியவாறு நின்றாள். அசுரர்களுக்கு ஆசை காட்டி, எப்படியாவது அவளை கட்டி அணைக்கவேண்டும் என்ற ஆசையை தூண்டுமாறு, அவர்கள் அனைவரையும் பைத்தியம் பிடிக்கச் செய்தாள். அவர்கள் தன் கையைப் பிடிக்க வந்தாலும் பிடிகொடுக்காமல், தொட வந்தாலும் ஏமாற்றி, அசுரர்களை மாயத்தில் சிக்கவைத்து, அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கினாள். மோகினியின் இத்தகைய அபாரமான உதவியின் கடனை தீர்ப்பதற்கு எந்த தேவர்களால் முடியும்? 

நம்மில் இருக்கும் பேராசையை மண்ணைக் கவ்வச் செய்து, இந்த மோகினியானவள், நமக்கு அமிர்த தத்வத்தை ஊட்டி நமக்கு அருளட்டும். ஸ்ரீஹரி பாற்கடலை கடையும் நேரத்தில் மோகினியாக அவதரித்தார். ருத்ரதேவரின் ஆசைக்கிணங்க இன்னொரு முறையும் மோகினியாக காண்பித்துக் கொண்டார். சுகாசார்யரை சோதிப்பதற்காக இன்னொரு முறையும் மோகினியாக வந்தார். இது மட்டுமல்லாமல், ஹயக்ரீவ என்னும் பெண் ரூபத்தையும் எடுத்தார். 

மேலும் உபநிஷத்கள் சொல்வதைப்போல, 36,000 பெண் ரூபங்களிலும், 36,000 ஆண் ரூபங்களிலும் நம் உடலிலேயே வசிக்கிறார். ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுபவரை நாம் பூஜித்து வணங்கினால், ஸ்ரீஹரியின் 36,000 ரூபங்களையும் பூஜித்ததாக ஆகிறது என்ற நம்பிக்கை நம்மில் வளர்ந்து வந்துள்ளது. இதற்காகவே, ஸ்ரீஹரியின் புருஷ ரூபத்தை நாம் பூஜிப்பதுபோல, அவரின் பெண்ரூபங்களையும் பூஜித்து தன்யராவோமாக. 

கே: மோகினி அவதாரம் சொல்லும் செய்தி என்ன?

ப: இதயம் என்னும் கடலில், வேதாந்தம் என்னும் மலைக்கு, பிரம்மசூத்ர என்னும் வாசுகியைக் கட்டி, பூர்வபக்‌ஷ சித்தாந்தம் என்னும் அசுரர் மற்றும் தேவர்கள் கடைந்தபோது, தத்வஞானம் என்னும் அமிர்தம் உதயமாகின்றது. அப்படிக் கிடைத்த தத்வஞானத்தை, ஸ்ரீஹரியை விட்டு வேறு எங்காவது பயன்படுத்தினால், அது அசுரர்களுக்கு உதவியதாக ஆகின்றது. ஸ்ரீஹரி நமக்கு அருளிய தத்வஞானத்தை, நம் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்றால், ஸ்ரீஹரி மோகினியாக நம் இதயத்தில் அவதரித்து, பேராசை என்னும் அசுரரைக் கொன்று, நமக்கு அந்த தத்வஞான அமிர்தத்தைக் கொடுக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் மோகினியை சரணடைவோமாக. 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***

No comments:

Post a Comment