20/40 யக்ஞ அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: யக்ஞ அவதாரம் நடந்தது எப்போது?
பதில்: ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில். சுமார் 185 கோடி ஆண்டுகளுக்கு முன்.
கே: தற்போது இருப்பது வைவஸ்வத மன்வந்தரம். ஸ்வாயம்புவ மன்வந்தரம் இருந்தது எப்போது?
ப: முதலில் துவங்கியதே ஸ்வாயம்புவ மன்வந்தரம்.
கே: மொத்தம் எவ்வளவு மன்வந்தரங்கள்? அவற்றின் பெயர்கள் என்ன?
மொத்தம் 14 மன்வந்தரங்கள்.
1. ஸ்வாயம்புவ
2. ஸ்வாரோசிஷ
3. உத்தம
4. தாபஸ
5. ரைவத
6. சாக்ஷுஷ
7. வைவஸ்வத
8. ஸாவர்ணி
9. பௌத்ய
10. ரௌச்ய
11. ப்ரம்மஸாவர்ணி
12. ருத்ரஸாவர்ணி
13. மேருஸாவர்ணி
14. தக்ஷஸாவர்ணி
கே: இந்த 14 மன்வந்தரங்களிலும் தேவர்களின் பதவிகள் ஒரே மாதிரி இருக்கின்றனவா?
ப: இல்லை. ஒவ்வொரு மன்வந்தரங்களுக்கும் பதவிகள் மாறுபடுகின்றன. முதலாம் மன்வந்தரமான ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் ‘யக்ஞ’ என்னும் ஸ்ரீஹரியே இந்திர பதவியில் இருந்தார். இரண்டாம் மன்வந்தரத்தில், ‘ரோசன’ என்னும் பெயரில் வாயுதேவர், இந்திர பதவியில் இருந்தார். இதைப் போல் வெவ்வேறு மன்வந்தரங்களில், சப்தரிஷிகளும் மாறுபடுகின்றனர். தேவதா கணமும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
கே: ஸ்வாயம்புவ மன்வந்தரத்திற்கு எதற்கு அந்தப் பெயர்?
ப: ஸ்வாயம்பு என்றால் சதுர்முக பிரம்மா. இவரின் மகனுக்கு ‘ஸ்வாயம்புவ’ என்று பெயர். இவன் முதலாம் மன்வந்தரத்திற்கு அதிபதி ஆனதால், ‘ஸ்வாயம்புவ மன்வந்தர’ என்று அந்த மன்வந்தரம் பெயர் பெற்றது.
கே: யக்ஞரூபியான ஸ்ரீஹரி எங்கு அவதரித்தார்?
ப: ருசி பிரஜாபதி மற்றும் ஆகுதி என்னும் தம்பதியரிடம் அவதரித்தார்.
கே: ஆகுதி என்றால் யார்?
ப: சதுர்முக பிரம்மனின் மகனான ஸ்வாயம்புவ மனுவிற்கு ஆகுதி, ப்ரஸூதி, தேவஹுதி என்று மூன்று பெண் வாரிசுகள் மற்றும் உத்தானபாத, ப்ரியப்ரத என்று இரு ஆண் மகன்கள். மூத்தவளான ஆகுதியை ருசி ப்ரஜாபதிக்கு கொடுத்து திருமணம் செய்வித்தனர்.
கே: ப்ரஸூதி, தேவஹுதியர்களிடமும் ஸ்ரீஹரி அவதரித்தாரா?
ப: தேவஹூதியை கர்தம ரிஷி திருமணம் செய்துகொண்டார். இவர்களிடத்தில் கபிலரூபியான ஸ்ரீஹரி, ஸ்வாயம்புவ மன்வந்தரத்திலேயே அவதாரம் செய்தார். ப்ரஸூதியை தக்ஷ பிரஜாபதி மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 16 பெண்கள் பிறந்தனர். கடைசிப் பெண்ணான மூர்த்தி என்பவளுக்கு, ஸ்ரீஹரி, நர, நாராயண, ஹரி, கிருஷ்ண என்று நான்கு ரூபங்களில் அவதரித்தார்.
கே: அப்படியென்றால், யக்ஞரூபியான ஸ்ரீஹரி, ஸ்வாயம்புவமனுவிற்கு பெண்வழிப் பேரன் ஆகிறார். அல்லவா?
ப: ஆம். ஸ்வாயம்புவமனுவின் பெண்ணான ஆகுதியின் மகனாததால், அவருக்கு பேரன் ஆகிறார். அது மட்டுமல்லாமல், ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் தானே இந்திர பதவியில் இருந்து, அந்த மன்வந்தரத்தை அருளினார்.
கே: யக்ஞ ரூபியான ஸ்ரீஹரி, ஸ்வாயம்புவ மனுவிற்கு எப்படி அருளினார்?
ப: தவத்தில் இருந்த ஸ்வாயம்புவ மனுவை, பற்பல அரக்கர்கள் சூழ்ந்து தாக்க முற்பட்டபோது, யக்ஞ ரூபியான ஸ்ரீஹரி வந்து அவர்களை விரட்டினார். தன் தாத்தாவான ஸ்வாயம்புவ மனுவை யக்ஞ ரூபியான ஸ்ரீஹரி காப்பாற்றினார்.
கே: ஸ்வாயம்புவ மனு, ஏன் தவம் மேற்கொண்டிருந்தார்?
ப: காமம் முதலான போகங்களை விடுவதற்காக ஸ்வாயம்புவ மனு மற்றும் ஷதரூபாதேவியர், தனது அரசாட்சியை உத்தானபாத மற்றும் ப்ரியவிரதருக்குக் கொடுத்துவிட்டு, வானப்ரஸ்த ஆசிரமத்தை ஏற்றனர். ஸ்ரீஹரியின் அருளினை வேண்டி, காட்டிற்குச் சென்று தவம் செய்ய முற்பட்டனர்.
கே: ஸ்வாயம்புவ மனு எங்கு மற்றும் எப்படி தவம் மேற்கொண்டார்?
ப: ‘சுனந்தா’ என்னும் நதிக்கரையில், ஒரே காலில் நின்றவாறு நூறு ஆண்டுகள் கடுந்தவத்தை மேற்கொண்டார். அப்போது ஈசாவாஸ்ய உபநிஷத்தை பாராயணம் செய்தவாறு ஸ்ரீஹரியை வணங்கினார்.
கே: யக்ஞ அவதாரத்தின் கதையை விளக்கவும்.
சதுர்முக பிரம்மனுக்கு 14 பேர் மகனாகப் பிறந்தனர். அவர்களில் மூத்தவரே ஸ்வாயம்புவமனு. இவருக்கு ப்ரியப்ரத, உத்தானபாத என்று இரு மகன்கள் பிறந்தனர். ஆகுதி, தேவஹூதி, ப்ரஸுதி என்று மூன்று பெண்கள் பிறந்தனர். ஆகுதியை ருசி பிரஜாபதிக்கு, தேவஹுதியை கர்தம பிரஜாபதிக்கு, ப்ரஸூதியை தக்ஷ பிரஜாபதிக்கும் கொடுத்து மணம் செய்வித்தார். ஆகுதிக்குப் பிறந்தவரே யக்ஞரூபியான ஸ்ரீஹரி. தன் பேரன், சாட்சாத் ஸ்ரீஹரியே என்பதை அறிந்து, ஸ்ரீஹரியின் கருணையை நினைத்து, ஸ்வாயம்புவ மனு அவரைக் குறித்தே தவம் செய்தார். தன் அரசாட்சியைத் துறந்து, விரக்தியடைந்து, தன் மனைவியான ஷதரூபாதேவியுடன், தவம் மேற்கொள்ள காட்டிற்குப் போனார். வானபிரஸ்த ஆசிரமத்தை மேற்கொண்டு, நூறு ஆண்டுகள், யக்ஞ ரூபியான ஸ்ரீஹரியை நினைத்து தவம் செய்தார். தனக்கு மற்றும் தன்னைப் போன்ற சாதகர்களுக்கு மோட்சத்தை அளிக்கவேண்டும் என்று வேண்டி, ஈசாவாஸ்ய உபநிஷத்தை பாராயணம் செய்து வணங்கினார்.
அப்போது, ருத்ரதேவரிடம் சாகாவரம் பெற்ற அரக்கர்கள் இவரைக் கொல்வதற்கு ஓடி வந்தனர். அப்போது, யக்ஞரூபியான ஸ்ரீஹரி அவதாரமெடுத்து, அந்த அரக்கர்கள் அனைவரையும் கொன்று, தன் பக்தனான ஸ்வாயம்புவ மனுவிற்கு அருளினார். மோட்சத்தை வேண்டும் தன் பக்தர்களை ஸ்ரீஹரி ஓடோடி வந்து அருளுவான் என்று இந்த சம்பவத்தின் மூலம் நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
இத்தகைய யக்ஞ ரூபியான ஸ்ரீஹரியை நாம் அனைவரும் வணங்குவோமாக.
கே: ஸ்வாயம்புவமனு, ஈசாவாஸ்ய உபநிஷத்தை பாராயணம் செய்தார் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கிறது?
ப: பிரம்மாண்ட புராணத்தில்.
ஸ்வாயம்புவ: ஸ்வதௌஹித்ரம் விஷ்ணும் யக்ஞாபிதம் மன: |
ஈஷாவாஸ்யாதிபிர் மந்த்ரை: துஷ்டாவாவஹிதாத்மனா ||
தன் பேரனான யக்ஞ ரூபியான ஸ்ரீஹரியை, ஸ்வாயம்புவமனு, ஈசாவாஸ்ய உபநிஷத் முதலான ஸ்தோத்திரங்களினால் வணங்கினான்.
கே: யக்ஞரூபியான ஸ்ரீஹரி, ஸ்வாயம்புவ மனுவிற்கு எப்படி அருளினார்?
ப: தன்னைப் போன்ற சாதகர்களுக்கு மோட்சம் கிடைக்கவேண்டுமென்று, ஸ்வாயம்புவ மனு, யக்ஞரூபியான ஸ்ரீஹரியை, ஈசாவாஸ்ய உபநிஷத் முதலான ஸ்லோகங்களினால் வேண்டினார். அப்போது அவரை கொல்வதற்காக பற்பல அரக்கர்கள் ஓடி வந்தனர். அப்போது யக்ஞரூபியான ஸ்ரீஹரி தோன்றி அனைத்து அரக்கர்களையும் கொன்றார். தன் தாத்தாவான ஸ்வாயம்புவமனுவை காப்பாற்றினார்.
கே: தன்னை அரக்கர்கள் கொல்ல வருகிறார்கள் என்று ஸ்வாயம்புவ மனுவிற்கு தெரிந்ததா இல்லையா?
ப: யக்ஞரூபியான ஸ்ரீஹரியை வேண்டியவாறு, தியானத்தில் இருந்த ஸ்வாயம்புவ மனுவிற்கு, அரக்கர்கள் வந்ததுகூட தெரியவில்லை. ஒருமனத்துடன் யக்ஞரூபியான ஸ்ரீஹரியையே வேண்டிக்கொண்டிருந்தார். இவரின் நலத்தை பார்த்துக் கொண்டிருந்த, யக்ஞரூபியான ஸ்ரீஹரி, ஓடோடி வந்து அரக்கர்களைக் கொன்றார்.
கே: சதுர்முக பிரம்மனின் மகன் மற்றும் பதினான்கு மனுவிற்கு மூத்தவரான ஸ்வாயம்புவ மனுவை கொல்லும் சக்தி அரக்கர்களுக்கு எப்படி வந்தது?
ப: ருத்ரதேவரின் வரத்தினால் இத்தகைய சக்தியை அந்த அரக்கர்கள் பெற்றிருந்தனர். சாகாவரம் பெற்றிருந்தனர். அதனால், சாட்சாத் ஸ்ரீஹரியே யக்ஞ ரூபியாக வந்து அவர்களைக் கொன்றார்.
கே: ஸ்வாயம்புவ மனு கூறிய ஈசாவாஸ்ய உபநிஷத் அதற்கு முன் இருக்கவில்லையா?
ப: த்யங்-அதர்வண என்ற ரிஷி மற்றும் அகஸ்த்ய ரிஷி இருவரும் இந்த மந்திரத்தை ஏற்கனவே துண்டுதுண்டாக சொல்லியிருந்தனர். ஸ்வாயம்புவமனு இதனை ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்தார். மேலும் ஒரே மந்திரத்தை பல ரிஷிகளும் சொல்லலாம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
கே: ஈசாவாஸ்ய உபநிஷத்தில் எவ்வளவு மந்திரங்கள் உள்ளன? யாரை அந்த உபநிஷத் வணங்குகிறது?
ப: மொத்தம் 18 மந்திரங்கள் உள்ளன. யக்ஞ நாமகனான ஸ்ரீஹரியையே இந்த உபநிஷத் கொண்டாடுகின்றது. அதுமட்டுமல்லாமல், வாழ்க்கையில் கண்டிப்பாக அடையவேண்டியதான, விஷ்ணுவின் சரணாரவிந்தங்களை, மிகவும் அழகாக வர்ணிக்கிறது.
கே: ஈசாவாஸ்ய உபநிஷத்தில் மிகவும் முக்கியமான ஸ்லோகம் என்ன?
ப:
ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் |
தேன த்யக்தேன புஞ்சிதா: மா க்ருத: கஸ்யஸ்வித் தனம் ||
இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களும் கடவுளால் படைக்கப்பட்டு, அவற்றில் ஸ்ரீஹரி நீக்கமற நிறைந்திருக்கிறான். அனைத்திற்கும் ஸ்ரீஹரியே உரிமையானவர். நமக்கென ஸ்ரீஹரியால் கொடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டுதான் நாம் பற்றற்று இருக்கவேண்டும். பிறர் பொருட்களை விரும்பக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
கே: யக்ஞரூபியான ஸ்ரீஹரியை பூஜிக்கும் வழக்கம் நம்மிடம் இருக்கிறதா?
ப: இரேபடித்தாய என்னும் வம்சத்தில் வந்த ஒரு கிருஹஸ்தருக்கு, ஸ்ரீமதாசார்யர் யக்ஞநாராயணரின் உருவச்சிலையை கொடுத்திருக்கிறார். அதன்மூலம் யக்ஞரூபியான ஸ்ரீஹரியை பூஜிக்க வேண்டுமென்று தெரியப்படுத்துகிறார். இத்தகைய யக்ஞரூபியான ஸ்ரீஹரியைப் பற்றி அறிந்து, பூஜை செய்து, தன்யர் ஆவோமாக.
கே: ‘யக்ஞஸ்ச லோகாதுத தத்க்ருதான்ன:’ என்னும் நாராயணவர்ம ஸ்லோகத்தின் பொருள் என்ன?
ப: யக்ஞ நாமகனான ஸ்ரீஹரி கெட்ட மனிதர்களிடமிருந்தும், கெட்ட காரியங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றட்டும் என்று நாராயண வர்மத்தில் யக்ஞரூபியான ஸ்ரீஹரியைக் குறித்து வேண்டியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் நமக்கு வரும் கெட்ட சிந்தனைகளை, கெட்ட மனிதர்களின் நட்பை, விலக்கவேண்டும் என்றால் யக்ஞனையே சரணடையவேண்டும். அதாவது, நம் அனைவரின் கடமைகளும் யக்ஞம் ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும் செய்யும் கர்ம-தர்மங்கள் அனைத்தும் யக்ஞம் ஆகவேண்டும். நம் மொத்த வாழ்க்கையே யக்ஞம் ஆக வேண்டும். அப்போது யக்ஞரூபியான ஸ்ரீஹரி, மிகவும் மகிழ்ந்து நமக்கு அருளுவார்.
கே: யக்ஞ அவதாரத்தின் மூலம் நமக்குத் தெரியவரும் செய்தி என்ன?
ப: ‘ந மே பக்த: ப்ரணஷ்யதி’- ஹரிபக்தனுக்கு என்றும் அழிவில்லை. ஒருமனத்துடன் யக்ஞரூபியான ஸ்ரீஹரியைக் குறித்து தவம் செய்துகொண்டிருந்த ஸ்வாயம்புவமனுவைக் கொல்வதற்கு பல அரக்கர்கள் வந்தனர். அப்போது அவதாரம் செயத யக்ஞரூபி, அந்த அரக்கர்களைக் கொன்று ஸ்வாயம்புவமனுவை காப்பாற்றினார். ’ந மே பக்த: ப்ரணஷ்யதி’ என்னும் கீதையின் ஸ்லோகத்திற்கு இதைவிடவும் வேறொரு சரியான உதாரணம் தேவையில்லை. ஸ்வாயம்புவமனுவை காப்பாற்றியது மட்டுமல்லாமல், அந்த மொத்த மன்வந்தரத்திற்கும் தானே இந்திரனாக இருந்து அனைவரையும் காப்பாற்றினார்.
நாமும்கூட ஸ்வாயம்புவ மனுவைப் போல, உலகத்தை மறந்து, ஸ்ரீஹரியின் தியானத்தில் மூழ்கவேண்டும். அப்படிச்செய்தால் நமக்கு என்றென்றும் அழிவில்லை.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***