Tuesday, January 30, 2018

19/40 தாபஸ அவதாரம்

19/40 தாபஸ அவதாரம்.
தாபஸ = Thaapasa.

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கே: கஜேந்திரனுக்கு வரம் அளித்து கஜேந்திரவரதன் என்ற அழைக்கப்பட்ட ஸ்ரீஹரியின் அவதாரத்திற்கு என்ன பெயர்?

ப: ஹரி என்று பெயர். தாபஸ மன்வந்தரத்தில் அவதரித்ததால் ‘தாபஸ-ஹரி’ என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பெயர். ஆனால் பொதுவாக கஜேந்திரவரதனை நாராயண என்றே அழைக்கின்றனர்.

கே: தாபஸ-ஹரி அவதாரம் அந்த க்‌ஷணத்தில் நடந்ததா? அல்லது ராம கிருஷ்ணாதி அவதாரங்களைப் போல, தாய் தந்தையரை நியமித்து அவர்களிடத்தில் நடந்த அவதாரமா?

ப: பொதுவாக அனைவரும் சொல்வது - கஜேந்திரனின் அபயக்குரலுக்கு ஸ்ரீஹரி உடனடியாக வந்தார் என்பதே. ஆனால், ஹரிமேதா மற்றும் ஹரிணி தம்பதியருக்குப் பிறந்த ஹரி, கஜேந்திர வரதனாக வந்து, கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றினார் என்று பாகவதம் சொல்கிறது. 

கே: சில இடங்களில் இவரை தாமஸ என்று அழைக்கின்றரே?

ப: தாமஸ என்று அழைப்பது தவறு. தாபஸ என்பதே சரி.

கே: கஜேந்திர மோட்சம் நடைபெற்றது எப்போது?

ப: தாபஸ மன்வந்தரத்தில். மூன்று மன்வந்தரங்களுக்கு முன். சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு முன்.

கே: இந்த அவதாரம் இதே ஸ்வேதவராஹ கல்பத்தில் நடைபெற்றதா அல்லது வேறு கல்பத்திலா?

ப: இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சதுர்முகப் பிரம்மனின் நாளுக்கு (பகல்) ஸ்வேதவராஹ கல்பம் என்று பெயர். இதில் இருக்கும் 14 மன்வந்தரங்களில் 7வது மன்வந்தரம் தற்போது நடைபெறுகிறது. 4வது மன்வந்தரத்தில் கஜேந்திர மோட்ச அவதாரம் நடைபெற்றது.

கே: பிரம்மனின் ஒரு நாள் என்றால் என்ன? பிரம்மனின் ஆயுள் எவ்வளவு ஆண்டுகள்? ஒரு மன்வந்தரம் எவ்வளவு ஆண்டுகள்?

ப: ஒரு மன்வந்தரம் என்றால் 30,85,75,000 ஆண்டுகள். ஒரு மன்வந்தரத்தில் 71 மகா யுகங்கள் இருக்கின்றன. இப்படி 14 மன்வந்தரங்கள் செல்லவேண்டும். இதுவே பிரம்மனின் ஒரு பகல். மொத்தம் 432,00,00,006 ஆண்டுகள். இதுவே தின-கல்பம். இந்த தினகல்பத்தில் ஸ்ரீஹரியின் தசாவதாரங்கள் மற்றும் இதர அவதாரங்களும் நடைபெறுகின்றன. மொத்தம் பிரம்மனின் ஆயுள் மனிதனின் ஆண்டுக்கணக்கில் 31,104 கோடி ஆண்டுகள்.

கே: 432கோடி ஆண்டுகள் என்னும் பிரம்மனின் பகலில், எவ்வளவு ஆண்டுகள் கழிந்தபிறகு கஜேந்திர மோட்ச அவதாரம் ஆனது என்று அறியவேண்டும்?

ப: ஆம். இது 7வது மன்வந்தரம். சுமார் 200 கோடி ஆண்டுகள் தற்போது ஆகியிருக்கின்றன. இதில் சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு முன் கஜேந்திர மோட்ச அவதாரம் நடைபெற்றிருக்கிறது (என்று பொதுவாக சொல்லலாம்).

கே: ராம கிருஷ்ண அவதாரங்கள் நம் பாரதத்தில் இந்தப் பகுதிகளில் நடைபெற்றிருக்கிறது என்று குறிப்பாக சொல்லமுடியும். இதைப்போல் கஜேந்திரமோட்சம் நடந்த இடம் எதுவென்று சொல்ல முடியுமா?

ப: இதைப் பற்றி தகவல்களும் உள்ளன. ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் பாரத தேசத்திலோ, ஜம்புத்வீபத்திலோ நடைபெற்ற அவதாரம் அல்ல இது. பாற்கடலைச் சுற்றி இருக்கும் புஷ்கர தீரத்தில், நமக்குத் தெரிவது ஜம்புத்வீபம் மட்டுமே. மற்ற த்வீபங்கள் நம் கண்ணிற்குத் தெரிவதில்லை.

கே: அந்த த்வீபங்களில் மனிதர்கள், பசு, விலங்குகள், பறவைகள் என யாரும் இருப்பதில்லையா?

ப: மனிதர்கள் இருப்பதில்லை. ஆனால் மற்றவைகள் இருக்கின்றன. சில த்வீபங்கள் தேவர்களுக்கு சம்பந்தப்பட்டுள்ளன. இந்த புஷ்கர த்வீபம், வருண தேவனுடயதாகும். 10,000 யோஜன உயரமிருக்கும் த்ரிகோண பர்வதத்தில் இவன் வசிக்கிறான். இந்த த்வீபத்தில் ருதுமந்த என்னும் தோட்டம் இருக்கிறது. பல பெண் யானைகளுடன் கஜேந்திரன் ஒரு முறை அங்கே வந்தான்.

கே: த்ரிகூட பர்வதம் 10,000 யோஜனை உயரம் இருப்பது எப்படி சாத்தியம்? 10,000 யோஜனை என்றால் நம் கணக்குப்படி சுமார் 1,60,000 கிலோ மீட்டர்கள். மலைகள் இவ்வளவு உயரம் இருப்பது சாத்தியமா?

ப: பூலோகத்தில் இதுபோன்றதை கண்டதில்லை. நிஜம். புஷ்கர த்வீபத்தில் இவ்வளவு உயரமான மலை இருப்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அல்லது சாஸ்திரங்களில் ஒரு முழம் அளவை ஒரு யோஜனை என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. த்ரௌபதி சுயம்வர சமயத்தில், பீமன் 10 யோஜனை உயரமுள்ள மரத்தைக் கொண்டு போர் புரிந்தான் என்பதற்கு, 10 முழ உயரம் என்று உரை எழுதியிருக்கிறார்கள். அப்படியே இங்கேயும் இருக்கும் என்று சொல்லலாம். 

கே: த்ரிகூட என்று மலைக்கு பெயர் வருவதற்கு என்ன காரணம்?

ப: அந்த மலையில் மூன்று சிகரங்கள் உள்ளன. இரும்பு, வெள்ளி மற்றும் தங்க சிகரங்கள்.

கே: த்ரிகூட பர்வதத்தில் கஜேந்திரனை முதலை கடிக்கும் நிலைமை எப்படி வந்தது?

ப: பல பெண் யானைகளுடன் சுற்றித்திரிந்த கஜேந்திரன், நீர் குடிப்பதற்காக அந்த ஏரிக்கு வந்து, ஏரியின் நீரை விளையாட்டாக கலக்கினான். அங்கு இருந்த முதலை இதனால் ஆத்திரமடைந்து கஜேந்திரனின் காலைக் கவ்வியது.

கே: முதலையைவிட யானைக்கு சக்தி அதிகம் என்பதால், தன் காலை உடனே விடுவித்திருக்கலாமே? அங்கிருந்த பெண் யானைகள் ஏன் கஜேந்திரனுக்கு உதவவில்லை?

ப: நீரில் இருக்கும்போது முதலைக்கு அதிக பலம். நீருக்கு வெளியே யானைக்கு அதிக பலம். ஆகையால் முதலையிடமிருந்து யானையால் தப்ப முடியவில்லை. பெண் யானைகளும் கஜேந்திரனை தப்புவிக்க முயன்று தோற்றன. ஆனாலும், விடாமல் தொடர்ந்து போராடியது கஜேந்திரனின் வீரத்தைக் காட்டுகிறது.

கே: கஜேந்திரனுக்கும் முதலைக்கும் எவ்வளவு நாட்கள் போர் நடந்தது?

ப: மனித வாழ்க்கைக் கணக்கின்படி சுமார் 1000 ஆண்டுகள் இருவருக்கும் போர் நடந்தது. இவர்களின் போரினைக் கண்டு தேவர்களும் ஆச்சரியமடைந்தனர். இறுதியில் கஜேந்திரனின் சக்தி மிகக் குறைந்து, முதலையின் சக்தி அதிகமடைந்தது.

கே: கஜேந்திரனுக்கு ஸ்ரீஹரியின் நினைவு வரக் காரணம் என்ன?

ப: ஸ்ரீஹரியின் விருப்பப்படியே நான் முதலை வாயில் சிக்கியிருக்கிறேன். பிரம்மாதி தேவர்களையும்கூட அடக்கியாளும் ஸ்ரீஹரியை நானும் சரணடைய வேண்டும் என்று போன பிறவியில் செய்த நற்காரியங்களினால் கஜேந்திரனுக்கு ஹரிஸ்மரணை வந்தது. கஜேந்திரனுக்கு வந்த ஹரிஸ்மரணையினால், கஜேந்திர மோட்சம் என்பது இவ்வளவு புகழ் அடைந்திருக்கிறது.

கே: பாகவதத்தில் கஜேந்திரன் செய்த ஸ்தோத்திரம் மிகப் பெரியதாக இருக்கிறது. மிகவும் கருத்துச் செறிவுடனும், சாஸ்திரங்களின் சுருக்கம் என்பதாகவும் இருக்கிறது. ஒரு விலங்கானது இவ்வளவு அற்புதமாக ஸ்தோத்திரம் சொல்வதற்கு சாத்தியமா என்ன?

ப: முந்தைய பிறவியில் ஒரு சிறந்த விஷ்ணு பக்தரிடமிருந்து இந்த கஜேந்திரன் ஸ்ரீஹரியைப் பற்றி அறிந்திருந்தான். செய்த நற்காரியங்களால் அவரது நினைவுகூட அவனுக்கு இருந்தது. அதனாலேயே, முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திரன் - ’ஓம் நமோ பகவதே தஸ்மை யத ஏதத் சிதாத்மகம் | புருஷாயாதி பீஜாய பரேஷாயபி தீமஹி’ - என்று ஸ்தோத்திரம் செய்யத் துவங்கினான். 

கே: 25க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களினால் கஜேந்திரன் ஸ்ரீஹரியை வணங்கினான். இதில் நாம் முக்கியமாக நினைவில் வைக்கவேண்டிய ஸ்லோகம் என்ன?

ப:
ஸோந்தஸ்ஸரஸ்யு ருபலேன கைஹீத ஆர்தோ
த்ருஷ்ட்வா கருத்மவதி ஹரின் க உபாத்தசக்ரம் ||
உத்க்‌ஷிப்ய ஸாம்புஜகரம் கிரமாஹ க்ருச்ச்ரான்
நாராயணா அகிலகுரோ பகவன் நமஸ்தே ||

ஏரியில் முதலையிடம் அகப்பட்டிருந்த கஜேந்திரன், கருட வாகனான, சக்ர தாரியான, ஸ்ரீஹரியைக் கண்டு, மிகுந்த பக்தியுடன் தாமரைப்பூவினை அர்ச்சித்து - ’சர்வேஸ்வரனான ஸ்ரீஹரி நாராயணனே, உனக்கு அனேக வந்தனங்கள்’ - என்றான்.

கே: இந்த கஜேந்திர மோட்சத்தின் ரூபத்தை எப்படி நினைக்க வேண்டும்? சற்று விவரமாக விளக்கவும்.

ப: கருடனின் மேல் அமர்ந்து, கஷ்டத்தில் சிக்கியிருக்கும் பக்தனின் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு, ’மணிமய கிரீடகுண்டல ஹார கௌஸ்துப மினுகுதிஹ வைஜயந்திய பூஷணாங்கத ஹணெய கஸ்தூரி திலகத நாமதிந்த எஸகுதிஹ வரஷங்க சக்ரதிந்த ஜணஜணத நூபுரத தந்தபங்க்திய க்ருபேக்‌ஷணத ஸிரிமொகத பீதாம்பராலங்க்ருத’ என்று புரந்தரதாசர் வர்ணிப்பதைப் போல் நினைக்கவேண்டும். 

பொருள்: மணிகள் பொருந்திய கிரீட குண்டலங்கள், மாலை, கௌஸ்துபங்கள் மினுமினுக்கும் வைஜயந்திமாலையுடன் அலங்கரித்து, நெற்றியில் கஸ்தூரி திலகம் தரித்து, சங்கு, சக்ரத்துடன், ஜணஜண என்று ஒலிக்கும் கைவளைகளுடன் கருணை நிறைந்த முகத்துடன், பீதாம்பரம் அணிந்துகொண்டவர்.

கே: தாபஸ-ஹரி கஜேந்திரனை எப்படி அருளினார்?

ப: கருடனின் மேல் அமர்ந்து பறந்துவந்த ஸ்ரீஹரிக்கு, கருடனின் வேகம் குறைவாகப்பட்டது. தானே இறங்கி ஓடிவந்து, கஜேந்திரனுக்குக் கை கொடுத்து மேலே தூக்கினார். நீரிலிருந்து முதலை வெளியே வந்தபிறகு, யானையின் சக்தி அதிகமாயிற்று. முதலையின் சக்தி குறைந்தது. கஜேந்திரன் மூலமாகவே முதலை தோற்கும்படி செய்தார். பிறகு சக்கரத்தைப் பிரயோகித்து, முதலையின் வாயை கத்தரித்தார்.

கே: தாபஸ-ஹரியின் அவதாரத்தின் கதையை தெரிவிப்பீரா?

ப: ஹஹு என்னும் ஒரு கந்தர்வன் இருந்தான். தேவல-முனிவரின் சாபத்தினால் அவன் முதலையாக பிறந்திருந்தான். மந்திரத்யும்னன் என்று இன்னொரு ராஜன் இருந்தான். ஸ்ரீஹரியின் பூஜையில் ஈடுபட்டு, வந்திருந்த முனிவரை சரியாக உபசரிக்காததால், ‘அதிதி-ஸத்கார’ என்னும் பாவத்திற்கு ஆளாகி, அகஸ்த்ய முனிவரின் சாபத்தினால், யானையின் ஜென்மத்தைப் பெற்றிருந்தான். ஸ்ரீஹரியை நினைத்திருந்த பலனால், முந்தைய பிறவியின் நினைவு இவனுக்கு இருந்தது. ஏரிக்கு வந்த இந்த யானையின் காலை, ஹுஹு என்னும் கந்தர்வனான முதலை கவ்வியது. இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. ஆயிரமாண்டுகள் நடந்த அந்த போரில், யானை முழுவதுமாக தோற்றது. வேறு யாரும் கஜேந்திரனின் உதவிக்கு வரவில்லை. முதலையின் மூலமாக எனக்கு இந்தத் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பது நாராயணனே ஆவார். அவரையே நான் சரணடைகிறேன் என்று கஜேந்திரனுக்கு அறிவுக்கண் திறந்தது. கஜேந்திரனின் வாயிலிருந்து ஸ்தோத்திரங்கள் புறப்பட்டன.

கஜேந்திரனின் அபயக்குரலைக் கேட்ட ஸ்ரீஹரி, கருட வாகனமேறி ஓடி வந்தார். ஸ்ரீஹரியைக் கண்ட கஜேந்திரனுக்கு பக்திப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த ஏரியில் இருந்த தாமரையையே பிய்த்து அதை ஸ்ரீஹரிக்கு சமர்ப்பித்து - ‘நாராயணா அகிலகுரோ பகவன் நமஸ்தே’ - என்று சமர்ப்பித்தான். பக்தியுடன் ஒரு புஷ்பத்தை சமர்ப்பித்தாலே போதும், என்னையே நான் தருவேன் என்று இந்த கஜேந்திர மோட்ச சம்பவத்தின் மூலம் ஸ்ரீஹரி செய்துகாட்டினார். கருடன் மேல் ஏறி வந்த ஸ்ரீஹரி தனது சக்ரத்தின் மூலம் முதலையின் வாயை கத்தரித்தார். முதலைக்கும் பாப விமோசனம் அளித்தார். இந்த கஜேந்திர வரதனின் கருணையைக் கண்ட தேவர்கள் பூமாரி பொழிந்தனர். நமோ நமோ என்று அவரை வணங்கினர்.

கே: லட்சுமியுடன் இருக்கும் நாராயணன், கருடன் மேல் அமர்ந்து, ஆகாயத்திலிருந்தே சக்கரத்தை முதலை மேல் ஏவினார் என்று வரைபடங்களிலிருந்து தெரியவருகிறதே. இதற்கு என்ன பொருள்?

ப: ஆம். ஆனால் இந்த மாதிரியான கதை அனைத்து இடங்களிலும் இல்லை. ஸ்ரீஹரி முதலில் கருடன் மேலிருந்து இறங்கி, ஏரியிலிருந்து யானையை மேலே இழுத்து, பின்னரே முதலை மேல் சக்கரத்தைப் ஏவினார்.

கே: அனைத்து இடங்களுக்கும் ஸ்ரீஹரி கருட வாகனத்தில் வருவதற்கு என்ன காரணம்?

ப: கருடன் என்றால் வேதம் என்று பொருள். வேதாபிமானியான கருடனின் மேல் அமர்ந்து வருவதனால், தான் எப்போதும் வேதப்ரதிபாத்யன் (வேதங்களால் விளக்கப்படுபவன்) என்று தெரிவிக்கிறார் என்பதே இதன் பொருள்.

கே: கஜேந்திரனைக் காப்பாற்றும் பொருட்டு, முதலைக்கு மோசம் செய்தாரா ஸ்ரீஹரி?

ப: கஜேந்திரனுக்கு மட்டும் அவர் அருளவில்லை. முதலைக்கும்கூட அருளினார். ஆனால், தன் கைகளால் கஜேந்திரனுக்கு அருளி, சக்கரத்தால் முதலைக்கு அருளினார் என்பதை மட்டும் மறக்கக்கூடாது.

கே: சக்கரத்தை ஏவியதற்கான காரணம்?

ப: ஸ்ரீஹரி சக்கரத்தை ஏவுவது வெறும் கொல்வதற்காக மட்டும் அல்ல. பிறருக்கு அருளுவதற்கும் ஆகும். ஸ்ரீகிருஷ்ணன், ஜாம்பவந்தன் மேல் சக்கரத்தை ஏவி, அவனை குறை ஒன்றுமில்லாத அழகிய வாலிபனாக மாற்றினார் என்னும் கதையை நாம் கேட்டிருக்கிறோம். அதைப் போலவே, இங்கும் முதலை மேல் சக்கரத்தை ஏவி, முதலைக்கும் அருளினார். முதலையாக இருந்த அந்த கந்தர்வன், மகிழ்ச்சியில் ஸ்ரீஹரியின் புகழை ஆடிப்பாடியவாறு அங்கிருந்து கிளம்பினார்.

கே: முந்தைய பிறவியில் கஜேந்திரன் மற்றும் முதலை இரண்டும் என்னவாக இருந்தன?

ப: கஜேந்திரன் தனது முந்தைய பிறவியில், பாண்ட்ய தேசத்தின் மந்திரத்யும்னன் ராஜனாக இருந்தான். அகஸ்த்ய முனிவரின் சாபத்தினால் யானைப் பிறவியை பெற்றிருந்தான். ஹஹு என்னும் கந்தர்வன், தேவல என்னும் ரிஷியின் சாபத்தினால் முதலைப் பிறவியை பெற்றிருந்தான்.

கே: ராஜனின் பெயர் இந்திரத்யுமனன் என்றே அனைவரும் சொல்கிறார்கள். மற்றும் கந்தர்வனின் பெயர் ஹோஹு என்கிறார்கள். ஆனால் நீங்கள் மந்திரத்யுமனன் என்றும் ஹஹு என்றும் சொல்கிறீர்கள். இது எப்படி?

ப: இந்திரத்யும்னன் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தாலும், பழைய உரைகளில் மந்திரத்யும்னன் என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் கந்தர்வர்களின் பெயர்களை ஹாஹு, ஹோஹு என்கிறார்கள். ஆனால் அவர்களின் நிஜமான பெயர் ஹஹ மற்றும் ஹஹு என்பதே ஆகும். 

கே: ’ஹாஹா ஹூஹூ ஸ்சைவ மாத்யா:’ என்று அமரகோசத்தில் இருக்கிறதே?

ப: அமரகோசத்திற்கும் முந்தைய பாடங்களில் ஹஹ ஹஹு என்றே அந்த கந்தர்வர்களின் பெயர்கள் இருக்கின்றன. சங்கீதத்திலிருந்து இவர்கள் தங்கள் பெயர்களைப் பெற்றிருக்கிறார்கள். ஹஹ மற்றும் ஹஹு என்பது அவ்யயங்களே தவிர ஷப்தங்கள் அல்ல. 

அவ்யய = முன்னிடைச்சொல் / வினைஉரிச்சொல் (Preposition/adverb)
ஷப்த = பெயர்ச்சொல் (Noun).

ஸ்ரீஹரியைத் தவிர வேறு யாருக்காவது அவ்யயங்களுடன் கூடிய பெயர் இருக்கிறது என்றால், அது கந்தர்வர்களுக்கு மட்டுமே ஆகும். 

கே: யானைப் பிறவியில் முந்தைய பிறவியின் நினைவுகள் எப்படி சாத்தியமாயிற்று?

ப: அகஸ்தியர், மந்த்ரத்யும்ன ராஜனுக்கு யானையாகக் கடவாய் என்று சாபம் கொடுத்திருந்தாலும், ஸ்ரீஹரியை வணங்கியதன் பலனாக யானைப் பிறவியிலும் முந்தைய பிறவியின் நினைவுகள் அவனுக்கு இருந்தன. 

கே: சாபத்தைப் பெறுபவர்கள், பாவம் செய்தவர்கள்தானே?

ப: அப்படியில்லை. அவர்களே புண்ணியம் செய்தவர்கள். சாபம் பெற்றவர்களை ஸ்ரீஹரி வேறுவிதமாக அருளுகிறார். பற்பல கதைகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. சாபம் கொடுத்தவர்கள் தங்கள் தவவலிமையை இழக்கிறார்கள். ஆனால் சாபம் பெற்றவர்கள் தங்கள் நற்காரியங்களால் ஞானத்தைப் பெற்று அவன் அருளைப் பெறுகிறார்கள். இதுவே சாபத்தின் விதி. ஆனால் இது அயோக்கியர்களுக்கு பொருந்துவதில்லை.

கே: கஜேந்திர மோட்சத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

ப: 
யோ மாம் ஸ்துவந்த்யனேனாங்க ப்ரதிபுத்ய நிஷாத்யயோ |
தேஷாம் ப்ராணாத்யயோஹம் வை ததாமி விமலாம் கதிம் ||

விடியற்காலையில் எழுந்து யார் கஜேந்திர மோட்ச ஸ்தோத்திரத்தின் மூலம் என்னை வணங்குகிறார்களோ, அவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு சத்கதியைக் கொடுப்பேன் என்று கஜேந்திர வரதனான நாராயணன் தானே கூறுகிறார். அதனால் ஒவ்வொருவருக்கும் கஜேந்திர மோட்சமே கதி.

கே: அப்படியிருக்கும்போது ஏன் இது நம்மிடம் பழக்கத்தில் இல்லை?

ப: பழக்கத்தில் இருக்கிறது. இன்னும் அதிகபேரிடம் போய்ச் சேரவேண்டும். கும்பகோணத்தில் காவேரி ஸ்நானத்திற்குப் போகும்போது ஸ்ரீராகவேந்திரர், கஜேந்திர மோட்சத்தைச் சொல்லிக்கொண்டே போகிறார் என்று ராகவேந்திர விஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், தினமும் காலையில் கஜேந்திர மோட்சத்தை பாராயணம் செய்தே ஆகவேண்டும். 

கே: கஜேந்திர மோட்சத்தைப் பற்றி காலையில் நினைத்தால் போதும்தானே?

ப: இல்லை. இதே கஜேந்திரமோட்ச சந்தர்ப்பத்தில், சாட்சாத் தாபஸரூபியான ஸ்ரீஹரி, காலை வேளையில் யானையை நினைக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஸ்ரீஹரியின் ஆயுதங்கள், அனைத்து தேவர்கள், அனைத்து ரிஷிகள், நதி தேவதைகள் - இந்த அனைவரையும் நினைக்க வேண்டும். இதை ‘லட்சுமீர்யஸ்ய பரிக்ரஹ’ என்னும் மங்களாஷ்டக ஸ்லோகங்களில் ராஜராஜேஸ்வர தீர்த்தர் சொல்லியிருக்கிறார். ஆகையால் அனைவரும் ‘லட்சுமீர்யஸ்ய’ என்னும் மங்களாஷ்டக ஸ்லோகங்களை, கஜேந்திர மோட்ச ஸ்தோத்திரங்களுடன் பாராயணம் செய்தலே வேண்டும்.

மேலும் ‘நாராயண நமோ நாகேந்த்ரஷயனாய’ என்று ஸ்ரீபுரந்தரதாசர், பதினொன்று சரணங்களில் பாடியுள்ளதையும் சொல்லவேண்டும். பாகவதத்தின் எட்டாவது ஸ்கந்தத்தில் கஜேந்திர மோட்சம் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கு நான்கு அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கும் கஜேந்திர மோட்சத்தின் சாரத்தை தாசர் இந்தப் பாடலில் கொண்டு வந்திருக்கிறார். 

ஸ்ரீமதாசார்யார் த்வாதச ஸ்தோத்திரத்தில் ‘அந்த்யகாலே விசேஷத:’ என்று இறுதிக்காலத்தில் ஸ்ரீஹரியை நினைக்கவே வேண்டும் என்று கூறுகிறார். இறுதிக்காலத்தில் ஸ்ரீஹரியின் நினைவு வரவேண்டுமென்றால் கஜேந்திர மோட்சத்தை தினந்தோறும் படிக்கவேண்டும் என்று ஸ்ரீதாசர் ‘சுஞான பதவித்து தேஹாவஸானதொளகே ஸ்ரீவாஸுதேவ ஆஞாபிஸி’ என்று பாடியிருக்கிறார். ஆகையால் தினந்தோறும் தாசரின் இந்தப் பாடலைப் படித்து நாம் அனைவரும் தன்யர் ஆவோமாக.

கே: கஜேந்திரவரத அவதாரத்தின் மூலம் நாம் அறியும் செய்தி என்ன?

ப: கஜேந்திரனின் கதை நம் கதையே ஆகும். கஜேந்திரனின் இடம் த்ரிகூட பர்வதம். சாத்விக, ராமஸ மற்றும் தாமஸ என்று மூன்று குணங்களும் நிரம்பிய நம் உடலும் த்ரிகூடமே ஆகும். த்ரிகூடத்தில் யானை எந்தவித பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் திரிந்ததைப் போல், நாமும் கூட இங்கிருக்கும் இன்பங்களில் நம்மை இழந்திருக்கிறோம். முதலை யானையைக் கடித்து இழுத்ததைப் போல், நம்மையும் வாழ்க்கை / சம்சாரம் என்னும் கடலில், நோய், நொடி, மரணம் ஆகிய பயங்கர விலங்குகள் உள்ளே இழுக்கின்றன. இவற்றிலிருந்து தப்பிக்க, ஸ்ரீஹரியே கதி என்று நம்ப வேண்டும். 

அனைத்தையும் மறந்து, பக்தியை கைகொண்டு, அனைத்தையும் நாராயணனுக்கு அர்ப்பணம் செய்து ‘நாராயண அகிலகுரோ பகவன் நமஸ்தே’ என்று வணங்கவேண்டும். அப்போது நம் கஷ்டங்கள் நீங்கும். வாழ்க்கையும் நலமாகும்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment