10/40 கல்கி அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
கேள்வி: கல்கி அவதாரம் எப்போது?
பதில்: கலியுகத்தின் இறுதி காலத்தில்.
கே: ஸ்ரீஹரி எங்கு கல்கியாக அவதரிப்பார்?
ப: ஷம்பள க்ராமமுக்யஸ்ய ப்ராம்ஹணஸ்ய மஹாத்மன: |
பவனே விஷ்ணுயஷஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி ||
ஷம்பளம் என்னும் கிராமத்தில், விஷ்ணுயஷஸ் என்னும் பிராமணரின் வீட்டில் ஸ்ரீஹரி ‘கலி’ என்னும் ரூபத்தில் அவதரிப்பார்.
கே: அவதாரத்தின் நோக்கம் என்ன?
ப: கலியின் தாக்கத்தால் பூமியில் எல்லா இடங்களிலும் திருடர்களே நிறைந்திருப்பர். அவர்கள் அனைவரையும் கொல்வதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
கே: அவர்களை கல்கி எப்படி அழிப்பார்?
ப: குதிரையில் வாளை ஏந்தியவாறு, அனைத்து ஐஸ்வர்யங்களாலும் நிறைந்த கல்கியானவர், பூமியில் நிறைந்திருக்கும் திருடர்களை அழிப்பார்.
கே: எவ்வளவு நேரத்தில்?
ப: வெறும் 12 மணி நேரத்தில், லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்த கழிவுகளை துடைத்தெறிந்து, அனைத்து துஷ்டர்களையும் கொன்றழிப்பார்.
கே: சஜ்ஜனர்களின் நிலைமை?
ப: இரவு வேளையில் சஜ்ஜனர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, தன் உடலிலிருந்து சந்தனத்தை உற்பத்தி செய்து, அந்த சந்தனத்தால் சஜ்ஜனர்களின் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை துடைத்து அழிப்பார்.
கே: அனைத்து துஷ்டர்களும் அழிந்தபிறகு என்ன நடக்கும்?
ப: அடுத்த நாள் க்ருதயுகம் துவங்கும்.
கே: கலியுகத்தின் முடிவில் பிரளயம் வருமா?
ப: அல்ல. பிரளயம் வராது. பூமி அழியாது. கல்கி அனைத்து துஷ்டர்களையும் அழிப்பார். க்ருதயுகத்தின் துவக்கத்திற்கு உந்துசக்தியாக இருப்பார்.
கே: கல்கி அவதாரத்தின் கதையை சுருக்கமாக கூறவும்.
ப: கலியின் ஆவேசத்தால் எல்லா இடங்களிலும் அதர்மம் தலைவிரித்தாடும். பூமிதேவி மிகவும் துக்கமடைவாள். பூமிதேவியின் துக்கத்தை அறிந்து, பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீமன் நாராயணனிடம் சென்று முறையிடுவர். சஜ்ஜனர்களின் ரட்சணைக்காக ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்து ஸ்ரீஹரி பூமிதேவியின் துக்கத்தைப் போக்குவார்.விஷ்ணுவின் தசாவதாரங்களில் கடைசியானது கல்கி. கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் நடுவில் விஷ்ணுயஷஸ் மற்றும் சுமதி என்னும் தம்பதிகளுக்கு ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்வார். பரசுராமரிடமிருந்து அனைத்து கல்விகளையும் கற்று பெருமை அடைவார். இவரது பெருமையை மெச்சி, ருத்ரதேவர் இவருக்கு வாள் மற்றும் குதிரையை அளிப்பார். பின்னர் சிங்களத்தீவின் ராஜனான ப்ருஹத்ரதனின் மகளான பத்மாவதியை திருமணம் செய்வார்.பூமியின் அனைத்து பாகங்களிலும் வியாபித்திருக்கும் கலியை முற்றிலுமாக அழிப்பார். ஒரே நாளில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்தும் கல்கியின் சக்தி நம் கற்பனைக்கு எட்டாதது. கலியுகத்தின் கடைசி நாளில், கலியை அழித்து, க்ருதயுகத்தின் துவக்கத்தில் அனைத்து சஜ்ஜனர்களுக்கும் தர்மத்தின் வழியைக் காட்டும் அவதாரமே ‘கல்கி’.
கே: கல்கியை எப்படி பூஜிக்க வேண்டும்?
ப: ’கல்கி கலே: காலமலாத் ப்ரபாது’ கலியின் தாக்கத்தால் உருவான கழிவுகள் அனைத்தையும் துடைத்தெறிந்து, என்னை தூய்மைப்படுத்து என்று வணங்கவேண்டும். தசாவதாரத்தின் கடைசி ரூபத்தை பலமுறை வணங்குவோம். ஒவ்வொரு நொடியும் நமக்குள் தோன்றும் கெட்ட சிந்தனைகளை அழித்து, நல்ல எண்ணங்களை வளர்க்குமாறு அவனை சரணடைவோம்.
தசாவதாரத்தில் ஸ்ரீஹரி காட்டிய பல்வேறு லீலாவினோதங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நினைத்து மகிழ்ச்சியடைந்து, மனதில் ஸ்ரீஹரியையே நினைத்தவாறு, தசாவதாரத்தின் சிந்தனையை ஸ்ரீமத்வமடத்தின் ஸ்ரீகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்வோமாக.
கே: கல்கி அவதாரம் சொல்லும் செய்தி என்ன?
ப: அதர்மம் தலைவிரித்தாடும்போது, ஸ்ரீஹரி கல்கியாக அவதாரம் செய்து, தர்மத்தை நிலைநாட்டுவார். இது பிரம்மாண்டத்தைப் (உலகத்தைப்) பற்றிய விஷயம். பிண்டாண்டத்தில் (நம் உடலில்) பிரம்மாண்டத்த்தை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே அவதாரங்களைப் பற்றி சிந்தித்ததன் பலன் கிடைக்கும். நம் மனதில் இருக்கும் அதர்ம, அநியாய, ஆதாரம் இல்லாத சிந்தனைகள் ஆகிய கெட்ட குணங்கள் கலியாக தலைதூக்கும்போது, ஸ்ரீஹரி அவற்றை அழிப்பதற்காக கல்கியாக வரவேண்டும். பூமிதேவியைப்போல் நம் புத்தியும் (அறிவு), பிம்பரூபியான ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட வேண்டும். அப்போது, ஜீவாத்மா என்னும் குதிரையில் ஏறி, மெய்யறிவு (ஞானம்) என்னும் வாளை ஏந்தி, மனதில் தலைதூக்கும் கலியை அழித்து, ஸ்ரீஹரி கல்கியாக காட்சி தருவார். இத்தகைய கல்கியின் அவதாரத்தை தினமும் நம் மனதில் நினைத்து அவனை வணங்கவேண்டும்.
கே: கல்கி அவதாரத்தின் சிறப்பு என்ன?
ப: கலியை அழிப்பதனால் கல்கி என்னும் பெயரைப் பெற்றார். கலியுகத்தில் உள்ள அனைத்து சஜ்ஜனர்களுக்கும் இந்த கல்கிரூபியான ஸ்ரீஹரியே ஆதரவு/ கதியாக இருக்கிறார். கலியுகத்தின் சஜ்ஜனர்களுக்கு கல்கி அவதாரம் கடைசியானது. க்ருதயுகத்தின் சஜ்ஜனர்களுக்கு இதுவே முதலாவதாகும். த்வாபர மற்றும் கலியுகத்தின் சந்தியில், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார். கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் சந்தியிலும் இதே ஸ்ரீஹரி, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுபவரான கல்கி ரூபியான ஸ்ரீஹரியை நாம் எப்போதும் நினைக்கவேண்டும்.
நம் மனதில் தசாவதாரங்கள் நிலைத்திருக்க வேண்டும். முதலில், வேதங்களிலிருந்து ஞானத்தைப் பெற்று நம் மனதை நிறைக்கவேண்டும். அதற்காக மத்ஸ்யாவதாரம் ஆகவேண்டும். ஞானத்தின் எடையினால் மனம் அமிழ்கிறது. அதை மேலெடுக்க வேண்டுமெனில், கூர்மாவதாரம் ஆகவேண்டும். ஹிரண்யன் என்னும் கெட்ட சிந்தனையின் அழிப்பிற்காக வராகன் பிறக்கவேண்டும். பக்தி என்னும் பிரகலாதனை அருளுவதற்காக நரசிம்மர் அவதரிக்கவேண்டும். ஒவ்வொரு பொருளை சம்பாதிக்கும்போதும் உண்டாகும் கர்வத்தை அழிக்க, வாமனனின் சிறிய பாதங்கள் நம் மனதில் தோன்ற வேண்டும். பற்பல துர்குணங்கள் என்னும் க்ஷத்ரியர்களை அழிக்க கோடலி பிடித்த ராமன் ஓடி வரவேண்டும். பிறகு நம் மனதில் ராமன் மற்றும் கிருஷ்ணன் இருவரும் வந்து அமரவேண்டும். இவர்கள் நம் மனதில் இருப்பதற்கு பிரச்னை ஏற்பட்டால், புத்தன் மற்றும் கல்கி ரூபங்கள் நம்மை ரட்சிக்க வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment