Friday, January 12, 2018

மத்ஸ்யாவதாரம்


ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்

ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷச்சார்
தமிழில் : T.V.சத்ய நாராயணன்



***


மத்ஸ்யாவதாரம்

கேள்வி: ஸ்ரீஹரியின் தசாவதாரங்களை சிந்தித்து, அந்த சிந்தனையை அவனுக்கே சமர்ப்பிப்பது நம் அனைவரின் கடமை. இந்த அவதாரங்களைப் பற்றி சிந்திப்பதால் நமக்கு என்ன லாபம்?

பதில்: ‘அவதாரான் ஹரேர்ஞாத்வா’ என்று ஸ்ரீமதாசார்யார் சொல்வதுபோல், மோட்சமே நமக்குக் கிடைக்கும் பலன். ஸ்ரீஹரியின் அவதாரங்களைப் பற்றிய ஞானம் இல்லையென்றால், மோட்சம் கிடைப்பதற்கு சாத்தியமே இல்லை. ’ஜன்மகர்ம ச மே திவ்யம்’ ஸ்ரீகிருஷ்ணனும், தன் அவதாரங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். 

கே: இறைவன் (ஸ்ரீஹரி) என்றால் யார்? அவரின் லட்சணங்கள் என்னென்ன?

ப: ‘அதோசேஷ குணோன்னத்தம் நிர்தோஷம் யாவதேவ ஹி தாவதேவஸ்வயோ நாம’ - தோஷங்கள் எதுவும் இல்லாதவன், ஆறு நற்குணங்களுடன் கூடியவனாக இருப்பவன். அவனே இறைவன் (ஸ்ரீஹரி) என்று ஸ்ரீமதாசார்யார் கூறுகிறார். 

கே: ஸ்ரீஹரியின் முதல் அவதாரம் எது?

ப: மூலரூபியான ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து புருஷன் அவதரித்தான். 

கே: அப்படியா? நாராயண ரூபத்தைவிட மத்ஸ்ய அவதாரம் முதலாவது இல்லையா?

ப: இப்படி நினைப்பது தவறு. மூலரூபியான ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து புருஷ ரூபமே முதலில் தோன்றியது என்று ஸ்ரீமத் பாகவதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், மத்ஸ்ய அவதாரம் முதலாவது அவதாரமே அல்ல. அது இந்த மன்வந்திரத்தின் துவக்கத்தில் வந்த அவதாரம். அவ்வளவே. தசாவதாரங்களைச் சொல்லும்போது ‘மத்ஸ்ய’ அவதாரம் முதலாவது என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது. 

கே: அப்படியென்றால், மத்ஸ்ய அவதாரத்திற்கு முன்னர் தோன்றிய அவதாரங்கள் யாவை?

ப: ஹயக்ரீவ, சனத்குமார - ஆகிய பல அவதாரங்களை ஸ்ரீஹரி எடுத்திருக்கிறார். தசாவதாரங்களில் வரும் வராக, நரசிம்ம, வாமன, கூர்ம இந்த வரிசையில் அவதாரங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் பிறகு ‘மத்ஸ்யாவதாரம்’ தோன்றியது என்று புராணங்களின் ஆதாரத்தில் சொல்லலாம். 

கே: இந்த எல்லா அவதாரங்களும் மூலரூபியான நாராயணனிடமிருந்து தோன்றியவைதானே?

ப: கண்டிப்பாக இல்லை. மூலரூபியான நாராயணனிடமிருந்து துவக்கத்தில் புருஷ ரூபம் மட்டுமே தோன்றியது. அந்த புருஷ ரூபத்திலிருந்து இந்த எல்லா அவதாரங்களும் தோன்றியுள்ளன. 

கே: மொத்தம் ஸ்ரீஹரியின் அவதாரங்கள் எத்தனை? அவனது ரூபங்கள் எத்தனை?

ப: ஸ்ரீஹரியின் நாமங்களுக்கு, அவதாரங்களுக்கு, ரூபங்களுக்கு எண்ணிக்கையே இல்லை. ஸ்ரீமத் பாகவதத்தில் சுமார் 40 அவதாரங்களின் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர வேறு அவதாரங்களின் வரலாறு கிடைப்பது கடினம். ஆனால், தாச சாஹித்யத்தில் இன்னும் பல அவதாரங்களைப் பற்றிய தகவல்கள் உள்ளன. நம் உடலிலேயே ஸ்ரீஹரியானவன் வெவ்வேறு பெயர்களில் ஒரு கோடிக்கும் அதிகமான ரூபங்களில் வசிக்கிறான். 

கே: அனைவரைவிடவும் ஆற்றல் / திறமையுடைய ஸ்ரீஹரி, மீன் ரூபம் மற்றும் பல விலங்குகளின் ரூபங்களை / அவதாரங்களை ஏன் எடுத்தார்?

ப: ஸ்ரீஹரி இந்த உலகத்தை நேசிப்பவர். தான் உருவாக்கிய அனைத்து பொருட்களையும் விரும்புபவர். நீரில் வசிக்கும் விலங்காக இருந்தாலும், அதற்கும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கவேண்டி இந்த அவதாரம் எடுத்திருக்கலாம் என்று எண்ணலாம்.

கே: மத்ஸ்யாவதாரம் எப்போது எப்படி நடந்தது?

ப: முந்தின சாக்‌ஷுச மன்வந்திரத்தின் முடிவில், வைவஸ்வது மனு நதிக்கரையில் அர்க்யம் விட்டுக் கொண்டிருந்தபோது, தன் பாத்திரத்தில் ஒரு சிறிய மீனைக் கண்டான். அதுவே மத்ஸ்யாவதாரம். வைவஸ்வத மனுவிற்கு தத்வோபதேசத்தை உபதேசித்து, அடுத்த மன்வந்தரத்தை துவக்குவதற்காக மத்ஸ்யாவதாரம் நடந்தது. 

கே: இந்த வைவஸ்வத மன்வந்தரத்திற்கு காரணமானதால், மத்ஸ்யனை தசாவதாரத்தில் முதலாவதாக சொல்லப்பட்டிருக்குமோ?

ப: இதற்கு எங்கும் சான்றோ / மறுப்போ இல்லை. ஆகவே, அப்படியே சொல்லலாம். 

கே: தன் பாத்திரத்தில் மத்ஸ்ய ரூபியான நாராயணனைக் கண்ட வைவஸ்வத மனு என்ன செய்தார்?

ப: அந்த சிறிய மீனானது, வைவஸ்வத மனுவினை நோக்கி, தன்னை காப்பாற்றுமாறு வேண்டியது. ஆகவே, தன் கமண்டலத்தில் அந்த மீனை எடுத்துக் காப்பாற்றினார். ஒரே இரவில் அந்த மீன், கமண்டலத்தில் கொள்ளாதவாறு பெரிதாக வளர்ந்தது. ஆகவே ஒரு பெரிய பாத்திரத்தில் விடவும், அங்கும் அது மிகப் பெரியதாக வளர்ந்தது. ஆகவே அந்த மீனை எடுத்து, ஒரு ஏரியில் விடவும், 100 யோஜன அளவிற்கு அது பெரியதாக வளர்ந்தது.

கே: வைவஸ்வத மனுவிற்கு, அந்த மீன், சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனே என்று தோன்றவில்லையா?

ப: 100 யோஜன அளவிற்கு அந்த மீன் வளரும்வரை, அது நாராயணனே என்று வைவஸ்வத மனுவிற்கு தோன்றவில்லை. பிறகு ஸ்ரீமன் நாராயணனே தன்னை காப்பாற்ற மத்ஸ்ய ரூபத்தில் வந்திருக்கிறார் என்று அவருக்கு தோன்றியது. அதன் பிறகே ஸ்ரீஹரியை பல்வேறு ஸ்தோத்திரங்களைச் சொல்லி, தன்னைக் காக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். 

கே: வைவஸ்வத மனுவிடம் ஸ்ரீஹரி என்ன கூறினார்?

ப: இன்றிலிருந்து ஏழாவது நாள், சாக்‌ஷுச மன்வந்தரத்தின் பிரளயம் ஏற்படும். அந்த சமயத்தில் உனக்கு நான் தத்வோபதேசம் செய்கிறேன் என்று கூறினார். 

கே: மன்வந்தர பிரளயம் என்றால் என்ன?

ப: சாஸ்திரங்களில் 4 விதமான பிரளயங்களை சொல்கின்றனர். 

1. நித்ய பிரளயம்
2. நைமித்திக பிரளயம்
3. ப்ரக்ருதி பிரளயம்
4. அத்யந்திக பிரளயம்
(பாகவதம் 12-4-38).

இவற்றினை மகாபிரளயம், தினபிரளயம், மன்வந்திர பிரளயம் என்றும் சொல்லலாம். மகாபிரளயத்தில் பிரம்ம லோகத்திலிருந்து துவங்கி அனைத்து உலகமும் நாசமாகும். தின பிரளயத்தில் பூர்லோகம், புவர்லோகம், சுவர்லோகங்கள் மட்டும் நாசமாகும். மன்வந்தர பிரளயத்தில், கடல் நீரானது நிலத்தில் பாய்ந்து, வசிக்கும் மக்கள் / பிராணிகள் மட்டும் நாசமாகும். பிறகு மறுபடி முதலிலிருந்து மக்கள் பிறப்பு / தோன்றுதல் நடக்கும். இதுவே மன்வந்தர பிரளயம் ஆகும். 

கே: மன்வந்தர பிரளயம் எவ்வளவு காலம் நடந்தது? அந்த சமயத்தில் மத்ஸ்ய ரூபி ஸ்ரீஹரி என்ன செய்தார்?

ப: நான்கு யுகங்களும் 71 முறை துவங்கி முடிந்தபிறகு மன்வந்தர பிரளயம் நடைபெறுகிறது. மனிதனின் ஆயுள் கணக்கில் பிரளயகாலம் 1500 ஆண்டுகள். இப்படியாக சாக்‌ஷுச மன்வந்தரம் முடியும்போது, வைவஸ்வத மனுவிற்கு மத்ஸ்ய ரூபியான நாராயணன் தத்வோபதேசம் செய்தார். 

கே: பிரளய காலத்தில் பூமியில் யாருமே இருக்கமாட்டார்கள் எனும்போது, வைவஸ்வத மனு மட்டும் எப்படி இருந்தார்? அவருக்கு தத்வோபதேசம் எப்படி நடந்தது?

ப: சாக்‌ஷுச மன்வந்தரத்தின் முடிவில் வைவஸ்வத மனு மட்டும் இருக்குமாறு ஸ்ரீஹரி கருணை புரிந்திருந்தார். ஸ்ரீஹரியின் ஆணையின்படி, முந்தைய சிருஷ்டிக்குத் தேவையான விதைகள், தாவரங்கள் ஆகியவற்றை ஒரு பெரிய படகில் சேகரித்து, வைவஸ்வத மனு தயாராக வைத்திருந்தார். பிரளயம் துவங்கியபோது, சூறாவளில் தத்தளித்த அந்த படகினை, ஒரு பாம்பைக் கொண்டு மீனின் கொம்பில் மாட்டினார். பிறகு 1500 ஆண்டுகள் அந்த படகில் இருந்து, மத்ஸ்ய ரூபியான ஸ்ரீஹரியிடம் தத்வோபதேசத்தைக் கேட்டார். வைவஸ்வத மனுவிற்கு செய்த தத்வோபதேசமே ‘மத்ஸ்ய புராணம்’ என்று பெயர்பெற்றதாகும். 

கே: மத்ஸ்ய புராணம் பற்றி மேலும் சொல்லுங்களேன்?

ப: 18 புராணங்களில் மத்ஸ்ய புராணமே மிகப்பெரியது என்று பெயர் பெற்றது. ஆனால், இதில் இருப்பது 10,000 ஸ்லோகங்கள் மட்டுமே. வைவஸ்வத மனுவிற்கு சாட்சாத் மத்ஸ்ய ரூபியான ஸ்ரீமன் நாராயணன் தத்வோபதேசத்தை அளித்தார். அதுமட்டுமல்லாமல், சந்திர வம்சத்தைப் பற்றிய தகவல்களும் இந்த புராணத்தில் காணப்படுகின்றன. 

கே: ஹயக்ரீவாசுரனை கொல்வதற்காகவே தினபிரளயத்தின் இறுதியில் மத்ஸ்யாவதாரம் நடந்தது என்று பாகவதத்தின் எட்டாவது ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் எந்த ஆதாரத்தில் மேற்கண்ட வேறு மாதிரியான கதையை சொல்கிறீர்கள்?

ப: மத்ஸ்ய புராணத்தின் ஆதாரத்தின்படியே மேற்கண்ட கதையை சொல்லியிருக்கிறேன். தினபிரளயத்தின் முடிவில் மத்ஸ்யாவதாரம் நடந்திருக்கிறது என்ற தகவல் பாகவதத்தில் இல்லவே இல்லை. ‘ஆஸீததீத கல்பாந்தே ப்ராம்ஹே நைமித்திகோ லய:’ என்னும் பாகவத வாக்கியத்திற்கு தினபிரளயம் என்று பொருள் கொள்ளலாகாது.

கே: மிகவும் உன்னதமான பாகவதத்திற்கு, வேறு விதமான (எதிர்ப்பதமான) பொருள் கொள்ள என்ன அவசியமாகிறது?

ப: ‘அதீத கல்பாந்தே’ என்னும் சொற்களுக்கு தினபிரளயத்தின் முடிவில் என்னும் எதிர்ப்பதமான பொருளைச் சொன்னது நீங்கள்தான், நான் அல்ல. பாகவதத்தின் 8வது ஸ்கந்தத்தில் மிகவும் தெளிவாக, சாக்‌ஷுச மன்வந்தரத்தின் முடிவில் இந்த அவதாரம் நடந்திருக்கிறது என்றும், வைவஸ்வத மன்வந்தரத்தின் ஸ்ருஷ்டிக்காக இந்த மத்ஸ்யாவதாரம் நடந்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

கே: பாகவதத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கும், மத்ஸ்ய புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி சரிசெய்வது? மேலும், பாகவதத்திலேயே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதங்களாக சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை எப்படி சரிசெய்து புரிந்து கொள்வது?

ப: இந்த விஷயத்தை மேலும் விளக்குகிறேன். ’ஆஸீததீத கல்பாந்தே ப்ராம்ஹே நைமித்திகோ லய:’ என்னும் பாகவத வாக்கியத்தில் இருக்கும் ‘கல்பாந்தே’ என்னும் சொல்லிற்கு சாக்‌ஷுச மன்வந்தரத்தின் முடிவில் என்று பொருள் கொள்ளலாம். சாக்‌ஷுச மன்வந்தரம் கூட பிரம்ம கல்பத்தைச் சேர்ந்ததுதான். 

கே: பிரம்ம தேவருக்கு தூக்கம் வந்தபோது, ஹயக்ரீவ அசுரன் வேதங்களை அபகரித்துக் கொண்டு ஓடினான் என்று சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா?

ப: சாக்‌ஷுச மன்வந்தரத்தின் முடிவில் பிரம்ம தேவருக்கு தூக்கம் வருவதற்கு சாத்தியமே இல்லை. தினபிரளயத்தின் முடிவில் என்று பொருள் கொண்டால், அப்போது யாரும் பிழைத்திருக்கவே இல்லை. அப்படியிருக்கும்போது, ஹயக்ரீவ அசுரன் வருவதற்கு சாத்தியமே இல்லை.

கே: வராகாவதாரம் இரண்டு முறை நடைபெற்றிருக்கும்போது, மத்ஸ்யாவதாரமும் இரண்டு முறை ஏன் நடைபெற்றிருக்கக் கூடாது?

ப: வராகாவதாரம் இரண்டு முறை நடைபெற்றிருக்கிறது என்பதற்கு எங்கும் தெளிவான ஆதாரம் இல்லை. மத்ஸ்யாவதாரத்திற்கும் அப்படியே. தினபிரளயத்தின் துவக்கத்தில் ஹயக்ரீவாசுரனை கொல்வதற்காக ஒரு முறை மத்ஸ்யாவதாரம் நடந்திருக்கிறது என்றும் பிறகு சாக்‌ஷுச மன்வந்தரத்தின் முடிவில் மறுபடி மத்ஸ்யாவதாரம் நடந்திருக்கிறது என்பதை பாகவத எட்டாவது ஸ்கந்தத்தின் வாக்கியங்களின்படி சொல்ல முடியாது. மத்ஸ்ய புராணத்திலோ, பாகவதத்திலோ தினபிரளயத்தின் முடிவில் மத்ஸ்யாவதாரம் நடந்திருக்கிறது என்று சொல்லவேயில்லை. 

கே: மத்ஸ்யாவதாரத்தைப் பற்றி பிரச்னையில்லாத விஷயங்களைக் கூறவும்.

ப: வைவஸ்வத மனுவிற்கு தத்வோபதேசம் செய்வதற்கும், ஹயக்ரீவாசுரனைக் கொன்று வேதங்களைக் காப்பாற்றுவதற்குமே மத்ஸ்யாவதாரம் நடைபெற்றிருக்கிறது. இந்த விஷயத்தில் எந்தவித பிரச்னையும் இல்லை. 

கே: மத்ஸ்யாவதாரத்தைப் பற்றி எங்கெங்கு சொல்லப்பட்டிருக்கின்றன?

ப: மத்ஸ்ய புராணம், மகாபாரதத்தில் வனபர்வம், பாகவதத்தின் எட்டாம் மற்றும் இரண்டாம் ஸ்கந்தம் ஆகிய இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. தசாவதாரத்தின் மேல் பல ஸ்தோத்திரங்கள், பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தாச சாகியத்திலும் சொல்லப்பட்டுள்ளது. 

கே: மத்ஸ்யாவதாரத்தை பூஜிக்கும் வழிமுறை என்ன?

ப: படத்தை வைத்து பூஜிக்கும் வழிமுறை இல்லை. ஆனால், மத்ஸ்ய சாலிக்ராமம் மிகவும் அரிதானது. மத்ஸ்ய சாலிக்ராமத்தை பூஜிப்பதால் சிறந்த செல்வம் மற்றும் கல்வியை பெறலாம். வால் பகுதியில் ஒரு சக்கரம், வாய் பகுதியில் இரு சக்கரங்கள், கண்களைப் போல் நீளமாக இருந்தால், அதனை ‘மத்ஸ்ய சாலிகிராமம்’ என்று அழைக்கின்றனர். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment