3/40 வராக அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷச்சார்
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
கேள்வி: இரண்டு முறை வராக அவதாரம் நடைபெற்றிருக்கிறதா?
பதில்: சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன், ஸ்வாயம்புவ மன்வந்தரத்தின் துவக்கத்தில் ஸ்ரீஹரி வராக அவதாரத்தை எடுத்தார். வராக அவதாரம் நடைபெற்றது ஒரே ஒரு முறை மட்டுமே. இரண்டு முறை என்பது தப்பு.
கே: இரண்டு முறை வராக அவதாரம் செய்து, பூமியை ஸ்ரீஹரி காப்பாற்றியிருக்கிறார் என்று அனைவரும் சொல்கின்றனரே?
ப: ஆம். ஸ்வாயம்புவ மன்வந்தரத்தின் துவக்கத்திலும் ஸ்ரீஹரி பூமியை காப்பாற்றியிருக்கிறார். மறுபடி இதே வைவஸ்வத மன்வந்தரத்தின் துவக்கத்திலும் பூமியை காப்பாற்றியிருக்கிறார். ஒரே வராகனே இரு முறை பூமியை காப்பாற்றினாரே தவிர, இரு முறை அவதாரம் செய்யவில்லை.
கே: வராக அவதாரம் எப்படி நடந்தது?
ப: ஸ்ருஷ்டி துவங்கும்போது, பிரம்மதேவர், ஸ்வாயம்புவ மனுவிற்கு பூமியில் பல விஷயங்களை ஸ்ருஷ்டி செய்யுமாறு ஆணையிட்டார். ஆனால் திடீரென்று பூமி, தன் அச்சிலிருந்து கீழே விழத் துவங்கியது. ஸ்வாயம்புவ மனு, பிரம்ம தேவனிடம் இதைப் பற்றி முறையிடுகிறார். பிரம்மர், ஸ்ரீஹரியிடம் முறையிட, அப்போது பிரம்மரின் மூக்கிலிருந்து வராகன் வெளிப்படுகிறார். மிக அழகான வடிவம் கொண்ட சின்ன வராகனைக் கண்ட பிரம்மர், மிகவும் ஆச்சரியம் கொள்கிறார். அதே வராகன், தன் அச்சிலிருந்து கீழே விழுந்த பூமியை மறுபடி மேலே தூக்கி நிறுத்துகிறார்.
கே: ஆதி ஹிரண்யாக்ஷன் பூமியை கடலில் மூழ்கடிக்கிறான். அதை தூக்கி நிறுத்தவே வராக அவதாரம் எடுக்கப்பட்டது என்று சொல்கிறார்களே?
ப: இதுவும் சரியல்ல. பூமி தன் அச்சிலிருந்து கீழே விழுந்தது. அதை ஸ்ரீஹரி தூக்கி நிறுத்தும்போது, ஆதி ஹிரண்யாக்ஷன் தடை செய்கிறான். அப்போது, வராகன் தன் கோரைப் பற்களால், அந்த அசுரனை குத்திக் கொல்கிறார்.
கே: ஹிரண்யாக்ஷன் என்று இரண்டு பேர் இருந்தனரா?
ப: ஆம். ஆதி ஹிரண்யாக்ஷன் பிரம்ம தேவரிடமிருந்து பிறந்தவன். வைவஸ்வத மன்வந்தரத்தின் துவக்கத்தில் இருந்த ஹிரண்யாக்ஷன், கஸ்யபரின் மகன் ஆவான். இந்த ஹிரண்யாக்ஷன் பூமியை கீழே தள்ள முயல்கிறான். அப்போது, ஸ்ரீஹரி மறுபடி அதே வராக அவதாரத்தின் மூலம் பூமியை மேலே தூக்கி நிறுத்துகிறார்.
கே: இரண்டு ஹிரண்யாக்ஷகர்களையும் ஸ்ரீஹரி எப்படி கொன்றார்?
ப: ’தத்-ரக்த பங்காங்கிததுண்டகண்டோ’ (பாகவதம் 3-34) என்பதுபோல், ஆதிஹிரண்யாக்ஷனை தன் கோரப் பற்களால் கொன்றார். கஸ்யபரின் மகனான ஹிரண்யாக்ஷகனை ஸ்ரீஹரி ‘த்விதியோ கர்ணதாடனாத்’ என்பது போல் காதில் அடித்து கொன்றார். அந்த சமயத்தில், பூமியை தன் கோரைப் பற்களால் தாங்கிப் பிடித்திருந்தார்.
கே: ஸ்ரீஹரி பூவராகன் என்று அழைக்கின்றனர். லட்சுமிதேவியின் பூ (bhoo) ரூபமும் வராகனின் மனைவியா?
ப: லட்சுமி தேவியின் பூ ரூபத்தை வைத்து பூவராகன் என்று அழைப்பது தவறு. ப்ரித்விக்கு அபிமானி தேவதையான பூமிதேவியை காப்பாற்றி, அவளை திருமணம் செய்து கொள்கிறார் ஸ்ரீஹரி. இந்த பூதேவியில், லட்சுமி தேவியின் பூ ரூபத்தின் விசேஷமான சான்னித்யம் இருப்பதாக தெரிந்து கொள்ளவேண்டும். துளசியில் லட்சுமி தேவியின் சன்னிதானம் இருப்பது போலவே இதையும் நினைக்க வேண்டும்.
கே: பூதேவியிடமிருந்து ஸ்ரீஹரிக்கு குழந்தைகள் பிறக்கின்றனவா?
ப: ஆம். நரகாசுரன் மற்றும் வாஸ்து புருஷன். இந்த இரு அசுரர்களும் வராகனிடமிருந்து பிறந்தவர்கள்.
கே: நாம் அனைவரும் வாஸ்து பூஜை செய்கிறோம். சிறப்பான வழிபாட்டினை அவருக்கு வழங்குகிறோம். அப்படிப்பட்ட அவரை, அசுரன் என்று எப்படி அழைக்கின்றீர்?
ப: வாஸ்து புருஷன் தேவதை அல்லன். அவன் அசுரனே ஆவான். தேவர்கள் அனைவரும் சேர்ந்து, வாஸ்து புருஷனை தலை குப்புற விழுமாறு செய்தனர். ஈசான மூலைக்கு தலை, நைருத்ய திசைக்கு கால் வைத்து, ஒரு சதுர வடிவில் வாஸ்து புருஷன் விழுந்தான். பிறகு தேவர்கள் அனைவரும் அவன் மேல் அமர்ந்தனர். பிரம்ம தேவர் அவன் மத்திய பகுதியில் அமர்ந்தார்.
கே: அப்படியென்றால் வாஸ்து புருஷனை பூஜை செய்வது, ஒவ்வொரு ஆண்டும் அவனுக்கு ஆராதனை செய்வது தப்பான செயலா?
ப: வாஸ்து புருஷன் மேல் அமர்ந்திருக்கும் தேவதைகளுக்கு பூஜை செய்யவேண்டும். வாஸ்து புருஷனுக்கு பூஜை செய்தால், அது அசுரர்களுக்கு போய்ச் சேருமே தவிர, ஸ்ரீஹரிக்குப் போவதில்லை. ஆகவே, ஸ்ரீமதாசார்யர் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கிறார்.
பூஜயோத் வாஸ்துபுருஷன் யோபரிஸ்தாம்ஸ்து ஸர்வதா |
தேவான் பிரம்மாதிகான் வாஸ்துர்வராஹஸ்ய ஹரே: ஸுத: ||
கே: நரகாசுரனை யார் கொன்றார்கள்?
ப: ஸ்ரீகிருஷ்ணன், நரகாசுரனை கொன்று அவனிடம் சிறைப்பட்டிருந்த 16100 பெண்களை விடுவித்தார். அந்த நாளே ‘நரகசதுர்தசி’ என்று புகழ் பெற்றது. இன்றும், கிருஷ்ண ஜெயந்தியை எப்படி விமரிசையாக கொண்டாடுகின்றோமோ, அதே போல், நரகசதுர்தசியையும் ஸ்ரீகிருஷ்ணனின் ஆராதனை என்றே விமரிசையுடன் கொண்டாடுகிறோம். இரண்டு பண்டிகையும் ஸ்ரீகிருஷ்ணனின் ஆராதனையே என்பதை கவனிக்க வேண்டும்.
கே: வராக ரூபத்தினை எப்போது, எப்படி பூஜிக்க வேண்டும்?
ப: ’ரக்ஷத்வஸௌ மாத்வனி யக்ஞகல்ப: ஸ்வதம்ஷ்ட்ர யோன்னீததயோ: வராஹ:’ என்று நாராயண வர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நடந்து செல்லும்போது மற்றும் பிரயாணம் செய்யும்போது வராகனை நினைத்துக் கொள்ளவேண்டும். தன் கோரைப் பற்களினால் பூமியை தாங்கிப் பிடிக்கும் யக்ஞவராகன் என்று அழைத்துக் கொள்பவனை நம் மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும்.
ஸ்ரீமதாசார்யர், தன் பூர்வாசிரமத்தின் தம்பியான விஷ்ணுதீர்த்தருக்கு பிரணவத்திலிருக்கும் நாதத்தினால் ஆன வராகமூர்த்தியை வழங்கினார். ஸ்ரீமுஷ்ணம் க்ஷேத்திரத்தில் ஸ்ரீஹரியின் ரூபமான வராக ரூபம் இருக்கிறது. இத்தகைய மூர்த்திகளில் அந்தர்யாமியாக இருக்கும் வராகனை நினையுங்கள். அதுமட்டுமல்லாமல், பூவராகன் தன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு, தன் கோரைப் பற்களில் பூமியை தாங்கியவாறும், ஹிரண்யாக்ஷன் முதலான அசுரர்கள் நம் நாடிகளின் உள்ளே நுழையாதவாறு சுஷும்னா நாடியில் கீழிருந்து மேல் வரை பயணம் செய்தவாறும் நம்மை காத்து வருகிறார். இத்தகைய அழகிய ரூபத்தைக் கொண்ட வராக மூர்த்தியை தியானம் செய்ய வேண்டும்.
கே: தந்த்ரசார சங்க்ரஹத்தின்படி வராகனை எப்படி வணங்க வேண்டும்?
ப:
ஷ்யாம: சுதர்சன-தராபய-ஸத்வரேதோ |
பூம்யா யதோSகில- நிஜோக்த-பரிக்ரஹைஸ்ச |
த்வேயோ நிஜைஸ்ச தனுபி: ஸகலைருபேத:
கோலோ ஹரி: ஸகல-வாம்பித-ஸித்தயோSஜ: ||5||
நீல வண்ணத்தில் உடல். நான்கு கைகளில் சக்கரம், சங்கு, அபய, வர சின்னங்கள். பூமி மற்றும் தன் பரிவாரங்களான பிரம்மா முதலான தேவர்களுடன் கூடிய, மற்றும் தன் மற்ற அவதாரங்களுடன் கூடிய வராக ரூபியான ஸ்ரீஹரியை சகல அபீஷ்ட சித்திக்காக நினைக்கவேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment