2/40 கூர்மாவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷச்சார்
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
கேள்வி: தசாவதாரத்தில் மத்ஸ்ய அவதாரத்திற்குப் பிறகு என்ன அவதாரம்?
பதில்: கூர்மாவதாரம்.
கே: கூர்மம் என்றால் என்ன?
ப: ஆமை.
கே: கூர்ம ரூபத்தின் சிறப்பு என்ன?
ப: ஆமையின் ஓடு மிகவும் கடினமாகவும், தட்டையாகவும் இருக்கும். மிகவும் எடையுள்ள மந்தர மலையைத் தூக்குவதற்கு, ஸ்ரீஹரி கூர்மாவதாரத்தை எடுத்தார். வேலைக்கு ஏற்ற அவதாரம் என்று தெரியப்படுத்தினார்.
கே: மந்தர மலையைத் தூக்குவதற்கு ஸ்ரீஹரியே வரவேண்டுமா?
ப: மந்தர மலை சாதாரணமானது அல்ல. நூறு யோஜனை அகலம், நூறு யோஜனை உயரமும் கொண்ட மலை அது. ஆகவே இந்த மலையைத் தூக்குவதற்கு வேறு யாராலும் சாத்தியம் இல்லை.
கே: ஒரு யோஜனை என்றால் எவ்வளவு?
ப: ஒரு யோஜனை என்றால் 14 கிலோமீட்டர்கள். 100 யோஜனை என்றால் 1400 கிமீ.
கே: 100 யோஜனை அகலமான மந்தர மலை, கூர்மனின் மேல் இருக்கும்போது (சுற்றிக்கொண்டிருக்கும்போது) ஸ்ரீஹரிக்கு கஷ்டமாக இருக்கவில்லையா?
ப: நம் முதுகின் மேல் மெதுவாக கைகளால் தடவிக் கொடுத்தால் நமக்கு சுகமாக இருப்பதைப் போல, ஸ்ரீஹரிக்கு அவர் மேல் மந்தர மலை சுற்றிக்கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
கே: பாற்கடல் கடைந்த இடம் தற்போதைய மங்கோலியா நாடு என்று சொல்கிறார்களே, இது சரியான தகவலா?
ப: மங்கோலியாவில் தற்போது இருக்கும் பாலைவனமே அந்த காலத்தில் பாற்கடலாக இருந்தது என சிலர் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். ஆனால் பூமியின் மேல் இருந்த பாற்கடலை கடைந்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. மேலும் மந்தர மலையும் பூமியின் மேல், நம் கண்களால் காணக்கூடியதாக இருந்திருக்கவில்லை. மேரு மலையைப் போல, மந்தர மலையும் நம் கண்ணிற்கு தெரியாது. ஏழு கடல்களில் பாற்கடலானது ஆறாவது ஆகும். அதனையே கடைந்தார்கள் எனத் தெரிந்து கொள்ளவேண்டும்.
கே: ஸ்ரீஹரி கூர்மாவதாரத்தை ஏன் எடுத்தார்?
ப: அமிர்தத்தை எடுப்பதற்காக தேவர்கள் பாற்கடலை கடைந்தனர். மந்தர மலையை மத்தாக பயன்படுத்தி, அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது, மிகுந்த எடையுடைய மலை, கடலில் மூழ்கத் தொடங்கியது. அப்போது வேறு வழி எதுவும் தோன்றாமல், பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீஹரியிடம் சரணடைந்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு செவிசாய்த்த ஸ்ரீஹரி ‘கூர்ம’ என்னும் ரூபத்தை எடுத்தார். பாற்கடலில் மலையானது மூழ்கிவிடாமல், அதை தூக்கி நிறுத்தினார்.
கே: மந்தரமலையை தூக்கி நிறுத்துவது மட்டுமே கூர்மாவதாரத்தின் வேலையா? அதைத்தவிர வேறு எதுவும் ஞான காரியங்களைச் செய்தாரா?
ப: மந்தரமலையை தூக்கி நிறுத்துவது மட்டுமல்லாமல், நாரதர் முதலான மகரிஷிகளுக்கு மற்றும் பிரம்மா முதலான தேவர்களுக்கு தத்வோபதேசத்தை வழங்கினார். அனைத்து தேவர்களும், கூர்மரூபியான ஸ்ரீஹரியை பல்வேறு ஸ்தோத்திரங்களால் பாடினர். அந்த சமயத்தில் அவர்களுக்கு ஸ்ரீஹரி செய்த உபதேசமே ‘கூர்ம மஹாபுராணம்’ என்று அழைக்கப்பட்டது.
கே: கூர்ம புராணத்தில் எவ்வளவு அத்தியாயங்கள் உள்ளன? எவ்வளவு ஸ்லோகங்கள் உள்ளன?
ப: 18 புராணங்களில் கூர்ம புராணமானது, மஹாபுராணம் என்றே அழைக்கப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள கூர்ம புராணத்தில் இருப்பது 6000 ஸ்லோகங்கள் மட்டுமே. ப்ராஹ்மி, பாகவதி, சௌரி, வைஷ்ணவி என்ற பெயர் கொண்ட நான்கு தொகுப்புகள் கிடைத்துள்ளன. இதில் மொத்தம் 99 அத்தியாயங்கள் உள்ளன. இதைப் படிப்பதால் தர்ம, அர்த்த, காம, மோட்ச ஆகிய பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன. கூர்மபுராணமே பிராஹ்மி தொகுப்பாக ஆகியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஸ்ரீஹரியின் பெருமைகளை மட்டுமே பேசுவதால், கூர்ம புராணமானது வேதங்களுக்கு சமானமானது ஆகும். யாரொருவர், கூர்ம புராணத்தை படிக்கிறாரோ, அவர் தர்ம, அர்த்த, காம, மோட்ச ஆகியவற்றின் சிறப்புகளை அறிந்து, மகாவிஷ்ணுவின் தத்வஞானத்தை முழுவதுமாக அடைபவராகிறார்.
கே: கூர்ம புராணத்தில், ஸ்ரீஹரியானவர் நாரதர் முதலான மகரிஷிகளுக்கு எதை உபதேசிக்கிறார்?
ப: உலகத்தின் ஸ்ருஷ்டி, பிரளயம், சூர்யவம்சம், சந்திரவம்சம், அனைத்து மன்வந்தரங்களின் விவரம், தர்ம, அர்த்த, காம, மோட்சம் - இப்படி அனைத்து விஷயங்களைப் பற்றியும் விவரமாக ஸ்ரீஹரியானவர் கூர்ம புராணத்தில் உபதேசிக்கிறார்.
கே: கூர்மாவதாரம் எத்தனை முறை நடைபெற்றிருக்கிறது?
ப: சஜ்ஜனர்களை காப்பதற்காகவும், துஷ்டர்களை வதைப்பதற்காகவும் ஸ்ரீஹரி எந்த ரூபத்தை எடுக்கிறாரோ அதை மட்டும் நாம் அவதாரம் என்று சொல்கிறோம். இந்த வகையில் சிந்தித்தால், கூர்மாவதாரம் நடைபெற்றது ஒரு முறை மட்டுமே. ஆனால், ‘ஆதிகூர்மம்’ என்று ஸ்ரீஹரியின் மற்றொரு ரூபமும் உண்டு. மொத்த உலகத்தையே தூக்கி நிறுத்திய ரூபத்தை ‘ஆதிகூர்மம்’ என்று அழைக்கிறோம்.
கே: ஆதிகூர்ம ரூபத்தின் வேலை என்ன? மற்றும் அதன் சிறப்பு என்ன?
ப: 50 கோடி யோஜனை தூரமுள்ள பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்துமாறு ஸ்ரீஹரி முதலில் சேஷதேவரிடம் கூறினார். ஆனால் சேஷதேவருக்கு அது முடியாமல் போனபோது, வாயுதேவர் கூர்மரூபத்தை எடுத்து, சேஷதேவரை தாங்கிப் பிடித்தார். அந்த வாயுதேவரை ஸ்ரீஹரி தன் கூர்மரூபத்தினால் தாங்கிப் பிடித்தார். ஸ்ரீஹரியின் கூர்மரூபத்தின் வால் பகுதியில் வாயுதேவர் நின்றிருக்கிறார். வாயுதேவரின் வால் பகுதியில், சங்கர்ஷண என்று அழைக்கப்படும் சேஷதேவர் நின்று, பிரம்மாண்டத்தை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ளவேண்டும். ஸ்ருஷ்டியின் துவக்கத்திலிருந்து பிரளயம் வரை இந்த கூர்ம ரூபமானது பிரம்மாண்டத்தை தாங்கிக் கொண்டிருக்கிறது.
கே: பாற்கடலை கடையும்போது கூர்ம ரூபத்தை எடுக்கும் முன்னர், யாருக்காவது கூர்ம ரூபத்தின் தரிசனத்தை ஸ்ரீஹரி காட்டினாரா?
ப: ஆம். இந்திரத்யும்னன் என்று ஒரு சிறந்த பிராமணன் இருந்தார். முந்தைய பிறவியில் மிகப்பெரிய சக்ரவர்த்தியாக இருந்த இந்திரத்யும்னனை, ருத்ரன் முதலான தேவர்கள் கூட வெல்ல முடியாததாக இருந்தது. அவனிடம் இருந்த ஞானம், பக்தி, வைராக்யம் ஆகியன மிகச் சிறந்ததாக இருந்தது. அந்த ராஜனுக்கு ஸ்ரீஹரி கூர்ம கூரூபியாக தரிசனம் அளித்திருந்தார். அது மட்டுமல்ல, கூர்ம புராணத்தை முதன்முதலில் அந்த ராஜனுக்கே உபதேசம் செய்திருந்தார் ஸ்ரீஹரி.
கே: இந்திரத்யும்னனுக்கு கூர்ம ரூபி ஸ்ரீஹரி அருளியது எப்படி?
ப: தற்போது நீ ராஜனாக இருந்தாலும், அடுத்த ஜென்மத்தில் ஒரு பிராமணனாக பிறப்பாய். அப்போது உனக்கு முந்தைய பிறவியின் நினைவு இருக்கும். தேவர்களுக்கெல்லாம்கூட தெரியாத சிறந்த தத்வ ரகசியங்களை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அந்த பிராமண பிறவியின் இறுதியில் நீ என்னிடம் வந்து சேர்வாய் - என்று ஸ்ரீஹரி இந்திரத்யும்னனுக்கு அருளினார்.
கே: கூர்ம புராணம் புத்தகமாக வந்துள்ளதா? அதில் விஷ்ணுவின் மகிமைகள் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றதா?
ப: கூர்ம புராணத்தை பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அனைத்து பதிப்புகளிலும் பற்பல தவறான கருத்துகளை பார்க்கலாம். எந்த புத்தகத்தைப் படித்தாலும் விஷ்ணுவின் மகிமைகளைத் தெரிந்து கொள்வது சாத்தியமே இல்லை. ஏனென்றால், கூர்ம புராணத்தில் பற்பல விசித்திரமான செய்திகள் உள்ளன.
1. ருத்ரதேவர், விஷ்ணுவின் அந்தர்யாமியாக பிரத்யட்சம் ஆகிறார்.
2. ருத்ரதேவர், மோக சாஸ்திரங்களை இயற்றுமாறு விஷ்ணுவிற்கு கட்டளை இடுகிறார்.
3. பிரகலாதன், பலிச்சக்கரவர்த்தி ஆகியோர் விஷ்ணுவிற்கு எதிராக போர் புரிகின்றனர்.
4. நரசிம்ம அவதாரம் முடிந்தபிறகு வராக அவதாரம் நடைபெறுகின்றது.
இப்படி பல குழப்பங்கள் இருக்கின்றன. ’தவறான பாடம், தவறான விவரிப்பு’ ஆகிய தோஷங்களை சரிப்படுத்திக்கொண்டு ‘சரியான பாடத்தை’ புரிந்துகொண்டு, ஸ்ரீமதாசார்யரின் ருஜு மார்க்கத்தின்படி பொருள் கொண்டால், ‘விஷ்ணு மகிமைகள்’ தெளிவாக புரியத்துவங்கும்.
கே: கூர்மாவதாரத்தில், மந்தர மலையைக் கொண்டு பாற்கடலைக் கடைந்தவுடன், ஸ்ரீஹரி நாரதர் முதலான மகரிஷிகளுக்கு தத்வோபதேசத்தை செய்தாரா?
ப: அப்படியில்லை. அவதாரம் செய்தவுடன் மந்தரமலைக்கு அருளினார். பின்னர் தேவர்கள் மற்றும் அசுரர்கள் பாற்கடலை கடைந்தனர். அதிலிருந்து லட்சுமிதேவி தோன்றினார். பிறகு அமிர்த கலசமும் தோன்றியது. தேவர்களுக்கு மோகினி ரூபத்தில் ஸ்ரீஹரி அமிர்தத்தைப் பகிர்ந்து அளித்தபிறகு, அசுரர்களுடன் போரிட்டு அவர்களை தேவர்கள் வென்றனர். இப்படியாக பாற்கடலை கடையும் நோக்கம் முழுமையாக முடிந்தபிறகு, அனைத்து தேவர்களும் தத்தம் இருப்பிடங்களுக்கு திரும்பும்போது, கடலின் அடியில் இருந்த கூர்மாவதாரம் மேலே வந்து, அவர்களுக்கு தத்வோபதேசம் செய்தார். அந்த சமயத்தில் ஸ்ரீமகாலட்சுமியும் அந்த இடத்தில் நிலை கொண்டிருந்தாள்.
கே: ஸ்ரீஹரியின் கூர்ம அவதாரத்தை தாங்கள் இதுவரை விளக்கினீர்கள். நாம் எந்த சந்தர்ப்பத்தில் இந்த கூர்ம ரூபி ஸ்ரீஹரியை நினைக்க வேண்டும்?
ப: தேவரபூஜைக்கு முன்னர் முதலில் ‘பீட பூஜை’ செய்ய வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில், பிரம்மாண்டத்தை வெளியிலிருந்து தூக்கி நிறுத்திய ஒரு ரூபம், பிரம்மாண்டத்தின் உள் இருக்கும் ஒரு ரூபம், இப்படி விஷ்ணுவின் 2 ரூபங்களாக கூர்ம ரூபத்தை அவசியம் நினைத்துக் கொள்ளவேண்டும். பாற்கடலை கடையும் சந்தர்ப்பத்தில் மந்தர மலையை தாங்கியிருக்கும் கூர்ம ரூபியை நம்முடைய கஷ்டமான காலங்களில் நினைத்துக் கொள்ளவேண்டும்.
கே: கூர்மாவதாரத்தை நினைத்துக் கொண்டால் என்ன பலன் கிடைக்கும்?
ப: இந்த வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். உடலின் மனதின் நோய்கள் பிரச்னைகள் தீரும். மறு வாழ்க்கையில் நரகம் ஆகியவை கிட்டாது. இந்த பலன்கள் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ‘கூர்மோ ஹரிர்மாம் நிரமாதசேஷாத்’ என்று நாராயண வர்மத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இதன் பொருள் - நரகம் முதலான அனைத்து தோஷங்களிலிருந்து கூர்ம ரூபியான ஸ்ரீஹரி என்னைக் காப்பாற்றட்டும்.
கே: கூர்மாவதாரத்தைப் பற்றி எந்தெந்த கிரந்தங்களைப் படித்து தெரிந்து கொள்ளலாம்?
ப: பாகவதம் எட்டாம் ஸ்கந்தம், ஏழாம் அத்தியாயம். மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் பத்தாவது அத்தியாயம். மற்றும் கூர்ம மகாபுராணம் - ஆகியவற்றில் சிறந்த தகவல்கள் கிடைக்கின்றன. தசாவதாரங்களைப் பற்றி விவரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பாகவத புராணத்தில் மட்டுமல்லாமல், எல்லா புராணங்களும் கூர்மாவதாரத்தை வர்ணிக்கின்றன. கூர்மாவதாரத்தைப் பற்றிய சிந்தனை, பூஜைகள் செய்யும் விதங்களைப் பற்றிய தகவல்கள் வேண்டுமென்றால், விஜயதாசர சூளாதிகளையே நாடவேண்டும். அவர் மட்டுமல்லாது இதர தாசர்களும்கூட தசாவதாரத்தைப் பற்றி பாடும்போது, பிண்டாண்டத்தில் (நம் உடலில்) நாம் செய்யவேண்டிய கூர்மாவதாரத்தின் சிந்தனையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.
கே: கூர்மாவதாரத்தின் பூஜையின் கிரமம் என்ன?
ப: ஸ்ரீஹரியின் ராம, கிருஷ்ண அவதாரங்களை விக்கிரகங்களாக நாம் பூஜை செய்கிறோம். அந்த வகையில் கூர்ம அவதாரத்தை பூஜிக்கும் வழிமுறை இல்லை. ஆனால் தசாவதாரங்களை பூஜிக்கும்போது இந்த அவதாரத்தையும் சேர்த்தே பூஜிக்கிறோம். ஆச்சரியம் என்னவென்றால், கூர்ம சாலிகிராமத்திற்கு மிக அதிகமான சிறப்புகள் உண்டு. மிகவும் அபூர்வமான இந்த சாலிகிராமத்திற்கு பால் அபிஷேகம் செய்வதினால், நினைத்த காரியங்கள் நிறைவேறுகின்றன என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு. உங்களிடம் கூர்ம சாலிகிராமம் இல்லையென்றால், அது எங்கு இருக்கின்றதோ, அங்கு பால் அபிஷேகம் செய்வியுங்கள். அபிஷேகம் செய்த அந்த பாலை குடித்தால், தேக சம்பந்தப்பட்ட பல நோய்கள் தீரும் என்பதில் சந்தேகமே இல்லை.
கே: கூர்மாவதாரம் எப்போது நடந்தது?
ப: வைவஸ்வத மன்வந்தரத்தின் தொடக்கத்தில் மத்ஸ்யாவதாரம் நடந்தது. கூர்மாவதாரம் முந்தைய சாக்ஷுச மன்வந்தரத்தின் தொடக்கத்தில் நடந்துள்ளது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட கூர்ம ரூபியான ஸ்ரீஹரியின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment