14/40 மஹிதாஸ அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: ஸ்ரீஹரியின் அவதாரத்தின் பெயர் ஐதரேய’வா? அல்லது மஹிதாஸ’வா?
பதில்: மஹிதாஸ என்பதே சரியான பெயர். ‘ஐதரேய’ என்பதற்கு ஐதராதேவியின் மகன் என்பதே பொருள். ‘ஜாபாலசத்யகாம’ என்று சொன்னால் ஜாபால என்னும் ரிஷியின் மகன் சத்யகாம என்று எப்படி பொருள் வருகிறதோ அப்படியே ‘ஐதரேய-மஹிதாஸ’ என்றால் ஐதராதேவியின் மகன் மஹிதாஸ என்று பொருள்.
கே: மாண்டோகி மற்றும் ஐதரா ஆகியோருக்கு பிறந்தவன் மஹிதாஸ. இவன் தவம் செய்து ரிஷி ஆனவன். வாசுதேவ த்வாதசாக்ஷர மந்திரத்தின் பலனாக ஹரிமேத என்னும் பிராமணரின் மகளை திருமணம் செய்து கிருஹஸ்தாஸ்ரமம் பெற்றுக்கொண்டு பற்பல யாகங்களைச் செய்து மகன்களைப் பெற்று, உலகப் புகழ் பெற்றான். இவனிடமிருந்தே ஐதரேய உபநிஷத் பிறந்தது. என்ற கதையைக் கேட்கிறோம். ஆனால் நீங்கள் ஸ்ரீஹரியே ஐதரேய என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
ப: ஐதரேய என்று ஒரு முனிவர் இருப்பது நிஜம். அதனால் ஸ்ரீஹரியின் ஐதரேய அவதாரம் இல்லை என்று சொல்வது தவறு. இந்த முனிவரின் பெயர் ஐதரேய. ஸ்ரீஹரியின் அவதாரத்தின் பெயர் மஹிதாஸ. ஐதரேய என்னும் முனிவர் இருந்ததைப் போல, மஹிதாஸ என்னும் முனிவரும் இருந்ததாக எங்கும் சொல்லப்படவில்லை.
கே: ஸ்ரீஹரியின் மஹிதாஸ அவதாரம் நடந்தது எப்போது?
ப: ஸ்வாயம்புவ மன்வந்தரத்தின் முதலாம் பாகத்தில்.
கே: இவரின் பெற்றோர்?
ப: பிரம்மனின் மகன் விஷாலராஜன் மற்றும் ஐதராதேவி இவர்களின் மகன் மஹிதாஸ.
கே: ஐதரேய என்றால் ஐதராதேவியின் மகன் என்று பொருள். மஹிதாஸ என்றால்?
ப: மஹத்ஸுராணாம் தாஸத்வத: ஸ: மஹிதாஸ இதி ப்ரஸித்த: என்கிற ரிக் சம்ஹிதையின் வாக்கியத்தின்படி பிரம்மாதி தேவர்கள் இவரின் தாசராக இருந்ததால் மஹிதாஸ என்று பெயர்.
கே: பூமியிலிருந்து பெறப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தவர் ஆகையால் மஹிதாஸ என்றோ - அல்லது - தன் வளர்ப்புத் தாயின் கர்வத்தை அழித்ததால் மஹிதாஸ என்றோ அழைக்கிறார்களே?
ப: ஆம். அனைவரும் இந்த பொருள்களிலேயே மஹிதாஸ என்று அழைக்கின்றனர். அவர் கதைகூட இப்படியே பிரபலம் ஆகியிருக்கின்றது. ஐதரேயோபநிஷத்தின் உரையாசிரியரான ஷட்குருசிஷ்ய என்பவரும் இப்படியே சொல்லியிருக்கிறார். ஆனால் இதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை.
கே: ஏன் ஆதாரமில்லை? பத்மபுராணத்தில் இந்தக் கதை இருக்கிறதுதானே?
ப: பத்மபுராணத்தில் இந்தக் கதை மிகவும் சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு முனிவருக்கு இரு மனைவிகள் இருந்தனர். ஒருவர் ப்ரியா. இன்னொருவர் ஐதரா. இருவரிடமிருந்தும் முனிவருக்கு வாரிசுகள் உண்டாயின. ஐதரையின் மகனே ஐதரேய. இவன் குழந்தையாக இருந்தபோது ஒரு முறை மிகவும் அழுதுகொண்டிருந்தான். அப்போது அவன் தாய் - வாயை மூடு என்றாள். அப்போது வாயை மூடியவன் பிறகு வாயை திறக்கவேயில்லை. பல ஆண்டுகள் கழித்து, ப்ரியாவின் மகன் தன் வேதாப்பியாசத்தை முடித்து முனிவரின் விரும்பத்தக்கவன் ஆனான்.
ஒரு முறை ஒரு யாகத்திற்காக அவனை அவன் தந்தை அழைத்துக்கொண்டு போனபோது, ஐதராதேவி தன் மகனின் நிலையைக் கண்டு வருத்தமடைந்தாள். ’நீ ஒரு ஊமை. உனக்கு வாயே இல்லை. நீ பேசினால் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைவேன்’ என்றாள். மகன் உடனடியாக பேசத் துவங்கினான். ‘எனக்கு வேதாப்பியாசமே ஆகவில்லை என்று நீ வருத்தப்படாதே’ என்று தாயை சமாதானப்படுத்தினான். தாய் தன் மகனை யாகம் நடக்கும் இடத்திற்கு அழைத்துப் போனபோது, தன் தந்தையின் தொடை மேல் அமரப் போனான். தந்தையோ அவனை தடுத்து, கீழே தள்ளினான். அப்போது பூமியே உடைந்து, அவனுக்கு ஆசனம் அளித்தது. பிரம்மாதி தேவர்கள் அனைவரும் அவனை வணங்கினர். அப்போது அவனிடமிருந்து வெளிவந்ததே ‘ஐதரேய உபநிஷத்’. ஸ்ரீஹரியின் அவதாரமான மஹிதாசனின் கதை மிகவும் சுவாரசியமானது.
பத்மபுராணத்தின் இந்த கதை ஸ்ரீஹரியின் அவதாரத்தையே சொல்கிறது என்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை. ஆகையால் இந்த கதை ஸ்ரீஹரியின் அவதாரத்தை சொல்கிறதா? அல்லது ஐதரேய என்னும் ரிஷியின் கதையை சொல்கிறதா? என்பதை விவாதிக்க வேண்டியது அவசியமாகின்றது.
கே: இந்த அருமையான கதையை ஏன் மறுக்கவேண்டும்? இதே கதை ஸ்ரீஹரியைப் பற்றி சொன்னதாக ஏன் இருக்கக்கூடாது?
ப: சரியான கேள்வி. ஆனால் தனது ஐதரேய உபநிஷத் பாஷ்யத்தின் துவக்கத்தில் ஸ்ரீமதாசார்யர் மஹிதாஸனின் கதையை நம் மனம் கவரும் வகையில் வர்ணித்திருக்கிறார். ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கும் கதையை உண்மையென்று நம்பினால், பத்மபுராணத்தின் கதை அதற்கு எதிர்ப்பதமாக இருப்பதால் அதை ஆதாரம் என்று தீர்மானிக்க முடியாது என்பதே நம் கருத்து.
கே: ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கும் கதைக்கும் பத்மபுராணத்திலிருக்கும் கதைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
ப: பிரம்மனின் மகனான விஷால என்னும் ராஜனுக்கு இதரா என்னும் மனைவி இருந்தாள். ஸ்ரீஹரியைப் போல் ஒரு மகனைப் பெறவேண்டுமென்று இதரா கடும்தவத்தை மேற்கொண்டாள். இவளின் தவத்தை மெச்சி, ஸ்ரீஹரி தானே இவளின் மகனாக அவதரித்தார். ஒரு முறை தேவதைகளின் யாக சாலையில் ஐதரேயன் நுழைந்தபோது, இவரின் தேஜஸ்ஸை எதிர்கொள்ள முடியாமல் தேவர்கள் சிலையானார்கள். பிரம்மதேவர் மட்டும் மயங்காமல் இருந்தார். அப்போது ஸ்ரீஹரி அனைத்து தேவர்களுக்கும் புரியும் வகையில், ஐதரேய உபநிஷத்தை ஸ்ரீலட்சுமிக்கு உபதேசித்தார். இதையே பின்னர் ரிக்-சாகாவை சேர்ந்தவர்கள் படித்தனர். அதுவே ஐதரேய உபநிஷத் என்று பெயர் பெற்றது. இந்த கதையே ஆதாரபூர்வமானது.
கே: மஹிதாஸனின் கதையை விரிவாக விளக்குங்கள்?
ப: பிரம்மனுக்கு விஷால என்னும் ஒரு மகன் இருந்தார். இவர் இதரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதரா ஒரு மிகப்பெரிய தபஸ்வினி. ஸ்ரீஹரியைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். இவரின் பக்தியை மெச்சிய ஸ்ரீஹரி தோன்றி ‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். ஸ்ரீஹரியின் அழகைக் கண்டு மயங்கிய இதரா, ‘உங்களைப் போலவே எனக்கு ஒரு மகன் வேண்டும்’ என்று வரம் கேட்டார். ‘என்னைப் போல் இருப்பவன், நானே ஆதலால், நானே உனக்கு மகனாகப் பிறக்கிறேன்’ என்று ஸ்ரீஹரி வரமளித்தார். ஸ்ரீஹரியின் வரத்தைப் பெற்ற இதரா மிகவும் மகிழ்ந்தார். சிறிது காலம் கழித்து, விஷாலனுக்கு இதரா மூலமாக ஸ்ரீஹரி அவதரித்தார். இதரையின் மகனாததால் ஐதரேய என்று அழைக்கப்பட்டார். இவரின் நிஜமான பெயர் மஹிதாஸ.
ஒருமுறை தேவர்கள் அனைவரும் ஸ்ரீஹரியைக் குறித்து ஒரு யாகத்தை மேற்கொண்டனர். யக்ஞமண்டபத்திற்கு இந்த மஹிதாஸன் வந்தார். இவரின் தேஜஸ்ஸினைக் கண்ட தேவர்கள் அனைவரும் சிலையானார்கள். பிரம்மதேவர் மட்டும் ஸ்ரீஹரியின் தேஜஸ்ஸை அறிந்தவர் ஆகையால், மயங்கவில்லை. கண்குளிர அவரைக் கண்டு மகிழ்ந்து, வாய் நிறைய அவர் புகழ் பாடினார். பிரம்மனின் வேண்டுதலுக்கு ஸ்ரீஹரி மெச்சினார்.
லட்சுமிதேவியும் வேத உபதேசங்களைச் செய்யவேண்டுமென்று ஸ்ரீஹரியிடம் வேண்டினார். தேவர்கள் நிறைந்த அந்த சபையில், லட்சுமிதேவிக்கு ஸ்ரீஹரி, மொத்த ரிக் வேதத்தையும் உபதேசித்தார். அதனாலேயே, ரிக் வேதத்திற்கு ஐதரேயவேத என்னும் பெயர் வந்தது. ’ஆரண்யக சம்ஹிதை’ மூன்று பாகங்களின் ரிக்வேதத்தை உபதேசித்து, தத்வங்களை நிர்மாணித்தார். பின்னர் இதையே பிரம்மனின் மூலமாக அனைவரும் அத்யயனம் செய்யத் துவங்கினர்.
இப்படி அனைத்து ரிக்வேதத்திற்கும் மூலகுருவாக இருக்கின்ற மஹிதாஸனை சாஷ்டாங்கமாக வணங்குவோம்.
கே: ஐதரேயன், யாக்ஞவல்க்ய ரிஷியின் மகன் என்று சொல்கிறார்களே?
ப: ஆம். ஷட்குருசிஷ்ய என்னும் உரையாசிரியரும் இதையே சொல்கிறார். ஆனால் இவர் சொல்லும் கதையின் போக்கிலும் சிறிது வேறுபாடு இருக்கிறது. ஆகையால், ஐதரேயனைப் பற்றி மொத்தம் மூன்று விதமான கதைகள் இருக்கின்றன. மூன்று கதைகளும் சுவாரசியமாக இருந்தாலும் ஸ்ரீமதாசார்யர் ஐதரேயோபநிஷத்தில் சொல்லியிருக்கும் கதையையே சரியான ஆதாரமாக எடுத்துக் கொள்ளவேண்டும். மற்ற கதைகள், ஸ்ரீஹரியின் அவதாரங்கள் என்று எண்ணாமல், முனிவர்களின் அவதாரங்கள் என்றே எண்ண வேண்டும்.
கே: ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கும் கதையில் இதராதேவியை ரிஷி ஒதுக்கி வைத்ததாக இல்லை. சரிதானே?
ப: ஆம். இதராதேவி பெரிய தபஸ்வினி. தன் தவத்தினால் ஸ்ரீஹரியையே நேராக கண்டு வரம் பெற்ற மகாதேவி. இவரை ரிஷி ஒதுக்கி வைப்பதற்கான சாத்தியமே இல்லை.
கே: மஹிதாஸ ரூபத்தில் ஸ்ரீஹரி உபதேசித்த உபநிஷத்கள் எவை?
ப: ரிக்வேத சம்ஹிதையில் 64 அத்தியாயங்கள் உள்ளன. இதில் 40 அத்தியாயங்கள் பிராமண பாகம். 15 அத்தியாயங்கள் ஆரண்யகம். இந்த 15 அத்தியாயங்களைக் கொண்ட ஆரண்யகத்தில், 6 முதல் 14ம் அத்தியாயம் வரையிலான 9 அத்தியாயங்கள் ‘ஐதரேய உபநிஷத்’ என்று அழைக்கப்படுகின்றது. இதில் 6 அத்தியாயங்கள் ஆத்மனைப் பற்றி, 3 அத்தியாயங்கள் சம்ஹிதையைப் பற்றி சொல்வதால், இரண்டையும் சேர்த்து ’மஹைதரேயோபநிஷத்’ என்று பெயர் பெற்றது.
கே: இந்த 9 அத்தியாயங்களை (மஹைதரேயோபநிஷத்தை) மட்டும் ஐதரேயன் உபதேசித்தார். அப்படிதானே?
ப: அப்படியில்லை. முழுமையான ரிக்வேதத்திற்கு சம்பந்தப்பட்ட சம்ஹிதா, ஆரண்யக, பிராம்ஹண இப்படி அனைத்து பாகங்களையும்கூட லட்சுமிதேவிக்கு உபதேசித்தார் என்று அந்த உபநிஷத்தின் துவக்கத்தில் வருகிறது. அதனாலேயே ரிக்வேதத்திற்கு ஐதரேய சம்ஹிதா என்றே பெயர் வந்தது.
கே: பாகவதத்தில் மஹிதாஸ என்னும் அவதாரத்தைப் பற்றி விளக்கவே இல்லை. ஆகையால் இதை ஸ்ரீஹரியின் அவதாரம் என்று எப்படி சொல்கிறீர்கள்?
ப:
துப்யம் ச நாரத ப்ருஷம் பகவான் விவ்ருத்த
பாவேன ஸாதும் பரிதுஷ்ட உவாச யோகம் |
ஞானம் ச பாகவதமாத்மஸுதத்வதீபம்
யத் வாஸுதேவசரண விதுரஞ்சஸைவ ||
நாரத, உனக்கும் எனக்கும், மஹிதாஸ ரூபியான ஸ்ரீஹரி, கர்மயோகத்தை, ஸ்ரீஹரியின் ஸ்வரூபத்தை தெளிவாகப் புரியவைக்கும் ஞானயோகத்தை உபதேசித்தார். விஷ்ணுவின் பரமபக்தர்கள் மட்டுமே அவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இப்படி பாகவதத்தின் இரண்டாம் ஸ்கந்தத்தில் மஹிதாஸரைப் பற்றிய குறிப்புகள் தெளிவாக உள்ளன.
கே: இந்த ஸ்லோகம் ஸ்ரீஹரியின் ஹம்ஸ அவதாரத்தைப் பற்றி சொல்கின்றன. நீங்கள் எப்படி இதை ‘மஹிதாஸ’ அவதாரத்தைப் பற்றியது என்று சொல்கிறீர்கள்?
ப: பாகவதத்தின் இந்த ஸ்லோகத்திற்கு, பிரம்மபுராணத்தில் மிக அருமையான உரை உள்ளது. இதிலிருந்து இந்த ஸ்லோகம் மஹிதாஸ அவதாரத்தைப் பற்றியதே என்று கண்டிப்பாகக் கூறலாம். பிரம்ம புராணத்தில் இப்படி வருகிறது.
ஐதரேயோ ஹரி: ப்ராஹ நாரதாய ஸ்வகாந்தனும் |
யத் ப்ராபுர்வைஷ்ணவா நான்யா யத்ருதே ந சுகம் பரம் || இதி ப்ராம்ஹே ||
மஹிதாஸ ரூபத்தில் ஹரி, நாரதருக்கு தன் ஸ்வரூபத்தை உபதேசித்தார். அதை விஷ்ணு பக்தர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இதனை அறிந்துகொள்ளாமல், மோட்சம் கிடைக்காது என்று பிரம்ம புராணம் சொல்கிறது.
கே: மஹிதாஸனை எப்படி வணங்க வேண்டும்?
ப: முழுமையான ரிக்வேதத்தை உபதேசித்ததால் ஸ்ரீஹரியின் இந்த ரூபமே நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான குருஸ்வரூபமாக இருக்கிறது என்று நினைத்து வணங்கவேண்டும். மற்றும் நாராயண வர்மத்தில் சொல்லியிருப்பதைப் போல், பிற தேவர்களை பூஜை செய்வதினால் வந்த தோஷங்களின் நிவர்த்திக்காக மஹிதாஸரின் பூஜையை செய்யவேண்டும். இத்தகைய மஹிதாஸரின் அருள் நம் அனைவருக்கும் நிரந்தரமாக இருந்து ஞானாம்ருதத்தைப் பொழியட்டும் என்று வணங்குவோம்.
கே: மஹிதாஸ அவதாரம் சொல்லும் செய்தி என்ன?
ப: இதராதேவி ஸ்ரீஹரியை முழுமையாக நம்பினார். அதற்காக ஸ்ரீஹரி அவரிடம் மகனாகப் பிறந்து ஐதரேய என்று பெயர் பெற்றார். பிரம்மாதி தேவர்கள் கூட, ஸ்ரீஹரியின் ரூபமான ஐதரேயனை மலையாக நம்பினர். அதற்காக அவர்களுக்கு முழுமையான வேத உபதேசங்களைச் செய்து அனைவருக்கும் அருளினார். மஹிதாஸரை நம்பாத மற்றவர்கள் அதோகதிக்குச் சென்றனர். அதனால் ‘நம்பி கெட்டவரில்லவோ’ என்பதே மஹிதாஸ அவதாரம் சொல்லும் செய்தியாகும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment