8/40 கிருஷ்ண அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர் : பெம்மத்தி வெங்கடேஷச்சார்
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
கேள்வி: ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணனாக அவதரித்தது எதற்காக?
பதில்: துஷ்டர்களைக் கொன்று, பக்தர்களை காப்பாற்றுவதற்காக.
கே: இதற்கு எதற்கு பூலோகத்திற்கு வரவேண்டும்? அனைத்திலும் வல்லவரான ஸ்ரீஹரி, இருந்த இடத்திலிருந்தே இதை செய்திருக்கலாமே?
ப: இதுவே அனைவருக்கும் இருக்கும் கேள்வி. ஆனால் இதற்கான விடை மிகவும் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கும்.
கே: அது என்ன?
ப: தன் பற்பல லீலாவினோதங்களையும், விளையாட்டு குணங்களையும் காட்டுவதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும். அவதாரம் செய்யவில்லையென்றால், பக்தர்கள் ஸ்ரீஹரியின் லீலைகளை, சரித்திரங்களை தாமே எப்படி நினைத்துப் பார்க்க முடியும்? ஸ்ரீக்ருஷ்ணனின் கதை மிகவும் அழகானது. சுவாரசியமானது.
கே: இரவு வேளையில் தைத்யரின் கட்டுப்பாட்டிலிருந்த சிறையில் ஏன் அவதரித்தார்?
ப: இந்த சம்சார வாழ்க்கையே ஒரு சிறைச்சாலை. இங்கு இருட்டில் சிக்கிக்கொண்ட பக்தர்களை தான் இங்கேயே வந்து காப்பேன் என்று தெரிவிக்கிறார். அரக்கர்களின் காலமான இரவு வேளையில் பிறந்து, நான் யாருக்கும் பயப்படுபவன் இல்லை என்றும் தெரிவிக்கிறார்.
கே: ராமாவதாரத்தில் தாடகை என்னும் பெண்ணை முதலில் கொன்றார். கிருஷ்ணாவதாரத்திலும் பூதனி என்னும் பெண்ணையே முதலில் கொன்றார். இப்படி ஸ்த்ரி-ஹத்யா செய்வது தப்பில்லையா?
ப: துஷ்ட பெண்களை கொல்லாமல் விடக்கூடாது என்னும் உத்தேசத்துடன், விஷத்தைக் கொடுக்கவந்த பெண்ணிடம் அதையே திருப்பிக் கொடுத்தான்.
கே: பூதனி யார்?
ப: தாடகை என்னும் அரக்கியே பூதனியாக வந்தாள். குபேரனிடம் சாபம் பெற்ற ஊர்வசி இந்த உருவத்தில் இருந்தாள். பூதனியைக் கொன்று, ஊர்வசியை சாபத்திலிருந்து விடுவித்தார் கிருஷ்ணர்.
கே: பால், தயிர், வெண்ணெய் இவற்றையெல்லாம் திருடுவது, இவரின் மகிமைக்கு இழுக்கு அல்லவா?
ப: பக்தர்கள் தன் பால்ய லீலைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடையவேண்டும். பாடி நடனமாட வேண்டும். இந்த உத்தேசத்துடன் ஸ்ரீஹரி பாலலீலைகளின் மூலம் மனங்களை குளிர்வித்தான். மற்றும் உலகத்தின் அனைத்து பொருட்களும் அவனுடைய சொத்தே ஆனதால், திருடுவது என்பதே இல்லை.
கே: 16,108 பெண்களை திருமணம் செய்து கொள்ள என்ன கட்டாயம்?
ப: நரகாசுரனை கொன்று, 16108 பெண்களை சிறையிலிருந்து மீட்டார். ஆனால் சமுதாயத்தில் அனைவரும் அந்தப் பெண்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றனர், அவர்களை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. அந்த எல்லாப் பெண்களின் வாழ்க்கையுமே அழியும் நிலை ஏற்பட்டது. ஆகையால், ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் தானே திருமணம் செய்துகொண்டு, தன் பட்டத்து அரசிகளாக்கிக் கொண்டான். இவரின் இந்த கருணை யாருக்கு வரும்?
கே: கிருஷ்ணனைப் போல நாமும் பற்பல பெண்களை ஏன் திருமணம் செய்யக்கூடாது?
ப: கிருஷ்ணன் சர்வதந்த்ர ஸ்வதந்திரன். அவர் செய்ததை அஸ்வதந்த்ரர்களான நாம் செய்யவே கூடாது. அவரைப் போல் ஆயிரம் ரூபங்களை எடுக்கும் சாமர்த்தியம் நமக்கு எங்கு உள்ளது? பெரியவர்கள் செய்வதை நாமும் செய்யவேண்டும் என்றில்லை. சரி, ருத்ரதேவர் விஷம் குடித்தார். நாமும் முதலில் விஷம் குடிப்போமா? பிறகு மற்றதை பார்ப்போம்.
கொஞ்சமாவது கிருஷ்ணனின் கதையை புரிந்துகொள்ளாமல், அவரை கேலி பேசினால், அவரது லீலைகளைப் புரிந்துகொள்ளாமல் தப்பு அர்த்தம் கொண்டு, பல பெண்களை திருமணம் செய்தால், கடும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.
கே: ஸ்ரீஹரிக்கு எதற்கு பல பெண்களுடன் திருமணம்?
ப: மகாலட்சுமியை விட்டு வேறு எந்த பெண்ணுடனும் ஸ்ரீஹரி திருமணம் செய்துகொள்லவில்லை. இந்த எல்லா பெண்களிடமும் லட்சுமியின் திவ்ய சன்னிதானம் இருந்தது. லட்சுமியின் சன்னிதானம் இருந்ததாலேயே, கிருஷ்ணன் அவர்களை திருமணம் செய்துகொண்டார்.
கே: தாய் மாமனான கம்சனை ஏன் கொல்ல வேண்டியிருந்தது?
ப: காலநேமி என்னும் மகா தைத்யனே கம்சன். பூதனி, சகடாசுரன், த்ருணாவர்த, பஸ்மாசுரன், பகாசுரன், உக்ராசுரன், தேனுகாசுரன், ப்ரலம்பாசுரன், சங்கசூடாசுரன், அரிஷ்டாசுரன், கேஷி, வ்யோமாசுரன் ஆகிய அசுரர்களை கம்சன், கிருஷ்ணனை கொல்வதற்காக அனுப்பினான். அது மட்டுமல்லாமல் 20 அக்ஷோஹிணி சேனையை கிருஷ்ணனுக்கு எதிராக போர் புரிய அனுப்பினான். அபலையான தன் தங்கை தேவகியை சிறையில் அடைத்தான். இவன் ஒருவனை கொல்லாமல் உலகில் அமைதி நிலவ வாய்ப்பில்லை.
கே: காலயவனனுக்குப் பயந்து ஓடியது எதற்காக?
ப: கிருஷ்ணன் நிராயுதபாணியாக காலயவனனின் மூன்று கோடி அக்ஷோஹிணி சைன்யத்தை வென்றார். பிறகு தன் பக்தனான முசுகுந்தனை ரட்சிப்பதற்காக மற்றும் காலயவனனை அவன் மூலம் கொல்வதற்காக, காலயவனனை கொல்லாமல் முசுகுந்தனின் குகைக்கு ஓடிப் போனார்.
கே: கிருஷ்ணனைக் கொல்லும் மகன் பிறக்கட்டும் என்று கர்காச்சாரியருக்கு ருத்ரதேவர் வரம் அளித்திருந்தார். அதன்படி பிறந்த காலயவனன், கிருஷ்ணனை கொல்லவேயில்லை. வரம் வேலை செய்யவில்லையே?
ப: கிருஷ்ணன் காலயவனனுக்கு ஒரு பாம்பினை அனுப்பிவைத்தார். அதன் பெயரும் கிருஷ்ணன். பல எறும்புகளைக் கொண்டு காலயவனன் அந்த பாம்பினைக் கொன்றான். கிருஷ்ணன் என்னும் பாம்பினைக் கொன்றதால், ருத்ரதேவரின் வரம் வேலை செய்தது என்றே கொள்ளவேண்டும்.
கே: ருக்மிணியை கடத்திச் சென்ற சம்பவம். இந்த கால வாலிபர்களுக்கு கெட்ட வழியைச் சொல்வது போல் உள்ளதே?
ப: லட்சுமி மற்றும் விஷ்ணுவினை பிரிக்கும் சாமர்த்தியம் யாருக்கும் இல்லை. ஆனால், ருக்மி, சிசுபாலன் ஆகியோர் கெட்ட ஆலோசனைகளின்படி இத்தகைய செயலைச் செய்ய முயன்றனர். ருக்மிணி, கிருஷ்ணனை மட்டுமே தன் மனதில் வரித்திருந்தாள். கிருஷ்ணனும் ருக்மிணியை தன்னவளாக ஸ்வீகரித்து அருளினார்.
கே: ருக்மிணியை கிருஷ்ணன் ஏன் கடத்தினார்?
ப: இதிலிருந்து ஒரு பெரிய எச்சரிக்கையை விடுக்கிறார். ஸ்ரீஹரியை விட்டு லட்சுமியை மட்டும் பூஜித்தால் அல்லது ஸ்ரீஹரியை மறந்து செல்வத்தை மட்டும் சேர்த்தால் அப்படிப்பட்ட செல்வம் அனைத்தும் அழிந்துபோகும். விஷ்ணு மற்றும் மகாலட்சுமியை ஜோடியாக பூஜிக்கவேண்டும். சம்பாதித்த செல்வத்தை நற்காரியங்களுக்கு செலவழிக்கவேண்டும். ருக்மிணியை கடத்தியதிலிருந்து இந்த செய்திகள் நமக்கு தெரியவருகிறது.
கே: ருக்மிணி கல்யாணம் பற்றி சொல்லுங்கள்.
ப: பீஷ்மகனின் மகள் சாக்ஷாத் ஸ்ரீமகாலட்சுமி. இவளை ஸ்ரீஹரிக்கே சமர்ப்பணம் செய்யவேண்டும். ஆனால் ஜராசந்தன், ருக்மி ஆகியோர் ருக்மிணியை ஸ்ரீஹரிக்கு சமர்ப்பணம் செய்யாமல், சிசுபாலனுக்குக் கொடுத்து திருமணம் செய்ய முயன்றனர். ருக்மிணியை அபகரித்ததன் மூலம், ஸ்ரீஹரி அனைத்து துஷ்ட ராஜர்களின் வாழ்க்கையையும் அழித்தார். இதுவே அனைத்து மக்களுக்கும் ஸ்ரீகிருஷ்ணனின் எச்சரிக்கை / செய்தி. லட்சுமியை மட்டும் தனியாக பூஜை செய்வோருக்கு துக்கமே பிறக்கும். விஷ்ணுவுடன் லட்சுமியை பூஜித்தால் மட்டுமே வேண்டியவற்றைப் பெற முடியும் என்று நிரூபித்தார்.
வாழ்க்கையில் நாம் பல்வேறு செல்வங்களை / பொருட்களைப் பெறுகிறோம். அவை அனைத்திற்கும் லட்சுமிதேவியே அதிகாரி. சம்பாதித்த அனைத்தையும் பக்தியுடன் ஸ்ரீஹரிக்கே சமர்ப்பணம் செய்யவேண்டும். லட்சுமியின் ஆசியுடன் வந்த செல்வங்களை ஸ்ரீஹரிக்கு சமர்ப்பணம் செய்வது நம் அனைவரின் கடமை. நாம் சம்பாதிக்கும் ஞானத்தையும்கூட, விஷ்ணுவின் மகிமையை பரப்பும் வண்ணம் செலவிடவேண்டும். பணம் செல்வங்களை விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் செலவழிக்கவேண்டும். பெற்ற புகழை, கர்வம் கொள்ளாமல், ஸ்ரீஹரியின் ஸ்வாதந்த்ரிய குணங்களை மேலும் அறிவதில் செலவழிக்கவேண்டும்.
இப்படி அனைத்து வகை செல்வங்களையும் ஸ்ரீஹரிக்கே சமர்ப்பணம் செய்வதால், லட்சுமி நாராயணரின் திருமண மகிமை புரிய வரும். இப்படிப்பட்ட சிந்தனையே ஸ்ரீகிருஷ்ணன் - ருக்மிணியின் திருமண மங்களோத்ஸவம். இப்படிப்பட்ட உன்னத சிந்தனைகள் இல்லாமல், வெறும் சிலைகளை வைத்துக்கொண்டு, லட்சுமி நாராயணரின் திருமண உற்சவங்களைக் கொண்டாடினால், எந்தவித நற்பலன்களும் கிடைக்காது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
கே: ஸ்யமந்தகமணியை திருடியவன் என்று கருதப்படுபவனுக்கு ஏன் இவ்வளவு புகழ்?
ப: பழி கொண்ட பக்தரின் பாவ பரிகாரத்திற்காக ஸ்யமந்தகமணி திருடியதாக ஸ்ரீகிருஷ்ணன் ஒரு நாடகம் ஆடினார். பிறகு பழி வந்தபோது அதை எப்படி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் காட்டினார். இதனால், ஸ்ரீகிருஷ்ணனின் புகழ், பெருமை இவையெல்லாம் குறையவில்லை.
கே: ஸ்ரீகிருஷ்ணன் கௌரவர்களின் இல்லங்களை ஏன் தன் சூழ்ச்சியினால் அழித்தார்?
ப: பல தேவதைகள் மற்றும் தைத்யர்கள் உலகில் அவதாரம் செய்கின்றனர். தைத்யர்களைக் கொன்று, தேவதைகளுக்கு அருளுவதே ஸ்ரீகிருஷ்ணனின் வேலையாகும்.
கே: உறவினர்களுக்கிடையே கலகத்தை ஏற்படுத்துவது தப்பு இல்லையா?
ப: உறவினால் சேர்ந்தால் அதனால் எந்த பலனும் இல்லை. மனதால் ஏற்படும் சம்பந்தமே முக்கியம். துஷ்டர்கள், உறவினால் மட்டுமே சேர்ந்த உறவினர் ஆவர். தன் மனங்களில் பரம விரோதிகள். ஸ்ரீஹரியை வெறுப்பவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய விரோதிகள் எங்கிருந்தாலும் ஸ்ரீஹரி விடுவதில்லை. கிருஷ்ணாவதாரம் நடைபெற்றதே இத்தகைய துஷ்டர்களை அழிப்பதற்காகத்தான்.
பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே ||
கே: பல துஷ்டர்களை ஸ்ரீகிருஷ்ணன் முறையற்ற (நேர்மையற்ற) வழியில் கொன்றிருக்கிறார். அல்லது கொல்வதாக முடிவு செய்கிறார். இது தப்பு இல்லையா?
ப: பயங்கரவாதிகளை, திருடர்களை பிடிக்கும்போது சட்டம் எந்தவித தடைகளையும் போடுவதில்லை. அநியாய மார்க்கத்தில் அவர்களை கொன்றாலும் தப்பில்லை என்னும் சிந்தனை இன்றும் உள்ளது. அநியாய வழியில் வாழ்ந்தவர்களை அநியாய வழியிலேயே கொல்ல வேண்டும் என்பது ஸ்ரீஹரியின் சட்டம்.
கே: ஜரா என்னும் வேடனின் அம்பிற்கு உயிரை விட்ட ஸ்ரீகிருஷ்ணனை எப்படி தேவன் என்று சொல்வது?
ப: ப்ராக்ருத (அழியும்) உடல் இல்லாத ஸ்ரீகிருஷ்ணன், அஞ்ஞானிகளின் மோகத்திற்காக இத்தகைய நாடகங்களை பலமுறை நடத்தியிருக்கிறார். பரந்தாமத்திற்கு நுழையும்போது, ஒரு அழியும் உடலை உருவாக்கி, ஒரு அரச மரத்தின் கீழ் வைத்துவிட்டு, அப்ராக்ருத (அழிவில்லாத) உடலில் வைகுண்டத்தை அடைந்தார். அந்த ப்ராக்ருத உடலையே பிறகு அர்ஜுனன் எரித்தான். இதனை அறியாத அஞ்ஞானிகள், ஸ்ரீகிருஷ்ணனை சாதாரண மனிதன் என்று நினைத்து, அப்படி நினைத்ததாலேயே பெரிய துக்கங்களில் போய் வீழ்வார்கள்.
கே: கிருஷ்ணன் எவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருந்தார்?
ப: 106 ஆண்டுகள் 2 மாதங்கள் ஸ்ரீகிருஷ்ணன் இந்த பூவுலகில் தன் மகிமைகளை லீலைகளை செய்தவாறு இருந்தார்.
கே: கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி முழுமையாக தெரிவிக்கும் கிரந்தம் எது?
ப: பாகவதத்தில் கிருஷ்ணனின் பால லீலைகள் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகான கதைகள், மகாபாரதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல், அனைத்து புராணங்கள், வேதங்களிலும் கிருஷ்ணனின் கதைகளைக் காணலாம். ஸ்ரீகிருஷ்ணனின் நிர்துஷ்ட குணங்களை, ஸ்ரீமதாசார்யரின் தாத்பர்ய நிர்ணயத்தில் மிகத் தெளிவாக சொல்லியிருப்பதை படிக்கலாம்.
கே: கிருஷ்ணனை மகிழ்ச்சிப்படுத்த நாம் என்னென்ன செய்யவேண்டும்?
ப: பகவத்கீதை கிருஷ்ணனின் வாக்கு. அதிலும் 15வது அத்தியாயம். அதிலும் ‘த்வாயியௌ புருஷௌ லோகே’ என்னும் 4 ஸ்லோகங்கள் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தவையாகும். இந்த 4 ஸ்லோகங்கள் சொல்லும் பொருளை அறிந்துகொண்டு, வாழ்க்கையில் விஷ்ணு சர்வோத்தமத்வத்தை அறிந்து, இப்பிறவியை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.
கே: ஸ்ரீகிருஷ்ணனை எப்படி நினைக்கவேண்டும்?
ப: த்யாதேத்Sரின்மணினிபம் ஜகதேகவந்த்யம்
சௌந்தர்யசாரம் அரிஷங்க வராபயானி |
தோபிர்ததானமஜிதம் சரசம் ச பைஷ்மீ
சத்யாசமேதம் அகிலப்ரதம் இந்திரேசம் || 40 ||
இந்திரநீல மணிக்கு ஒப்பானவர். அனைத்து உலகமும் வணங்கக்கூடியவர். 4 கைகளில் சக்ர, சங்கு, வர, அபய முத்திரைகளை தரித்திருப்பவர். யாராலும் வெல்லப்பட முடியாதவர். பக்தர்களுக்கு அருளுபவர். ருக்மிணி, சத்யபாமாவுடன் இருப்பவர். இத்தகைய ஸ்ரீலட்சுமிபதியான ஸ்ரீஹரியை தியானிக்க வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment