15/40 நர நாராயண அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
நர நாராயண (ஹரி கிருஷ்ண)
கேள்வி: நர நாராயண என்னும் அவதாரம் எங்கு நடைபெற்றது?
பதில்: யமதர்மராஜனுக்கு 13 பேர் மனைவிகள் இருந்தனர். அவர்களில் மூர்த்தி என்னும் மனைவியிடம், ஸ்ரீஹரி நர மற்றும் நாராயண என்னும் இரு ரூபங்களில் அவதரித்தார்.
கே: ராம கிருஷ்ணாதி ரூபங்களில் ஸ்ரீஹரி அவதரித்தபோது, அனைத்து சஜ்ஜனர்களும் ஆனந்தக்கடலில் மூழ்கினர். இந்த அவதாரம் நடந்தபோது சஜ்ஜனர்கள் எப்படி மகிழ்ச்சியடைந்தனர்?
ப: ராம கிருஷ்ணாதி ரூபங்களின் அவதாரங்களைப் போலவே, இந்த அவதாரங்கள் ஆனபோதும் சஜ்ஜனர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீஹரியை விதவிதமாக புகழ்ந்து மகிழ்ந்தனர். தேவாதிதேவர்கள் நர நாராயணரின் அருட்கடாட்சத்திற்காக காத்திருந்தனர். கந்தர்வர்கள் பாடினர், நடனமாடினர். இப்படி நர நாராயணரின் அவதாரம் ஆனபோது, அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
கே: நர நாராயணர் பிறந்தவுடன் என்ன செய்தனர்?
ப: வேதவியாஸ ரூபத்தைப் போலவே இவர்களும் பதரிகாஸ்ரமத்திற்கு புறப்பட்டனர்.
கே: எதற்காக?
ப: வாழ்க்கையில் தவம் செய்வதே முக்கியமானது. அத்தகைய தவத்தினை எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுப்பதற்காக. ஆகையால், நர மற்றும் நாராயண, இந்த இரண்டும் ஸ்ரீஹரியின் ரிஷிரூபங்களே ஆகும்.
கே: நர மற்றும் நாராயண. இவர்கள் இருவரும் ஸ்ரீஹரியின் சாட்சாத் அவதாரங்கள்தானே?
ப: கண்டிப்பாக இல்லை. நாராயண என்பது மட்டுமே ஸ்ரீஹரியின் சாட்சாத் அவதாரம். நர என்பது பலராமனைப் போல, ஆவேச-அவதாரம் ஆகும்.
நரே விஷ்ணு: ஸமாவிஷ்ட: ஸ்வயம் நாராயணோ ஹரி: |
அர்ஜுனே ச நராவேஷ: க்ருஷ்ணோ நாராயண: ஸ்வயம் ||
நாராயண ரிஷி சாட்சாத் ஸ்ரீஹரியே ஆகும். ஆனால், சேஷாவதாரமான நரனிடம் ஸ்ரீஹரியின் ஆவேசம் மட்டும் இருந்தது. அப்படியே கிருஷ்ணன் சாட்சாத் ஸ்ரீஹரி. ஆனால் இந்திர அம்சனான அர்ஜுனனிடம் நரனின் ஆவேசம் மட்டும் இருந்தது.
கே: யமதர்மராஜன் - மூர்த்தி இவர்களிடம் நர மற்றும் நாராயண இந்த இரண்டு அவதாரங்கள் மட்டுமே நடந்தனவா? அல்லது வேறு அவதாரங்களும் தோன்றினவா?
ப:
நரோ நாராயணாஸ்சைவ ஹரி: கிருஷ்ணஸ்ததைவ ச |
சத்வாரோ தர்மதனயா ஹரிரேவ த்ரயோ மத: |
அனந்தோ நரனாமாSத்ர தஸ்மின்ஸ்து நரனாமவான் |
விசேஷேண ஸ்வயம் விஷ்ணுர்னிவசத்யம்புஜேக்ஷண: |
தஸ்மாச்சதுர்தா தர்மஸ்ய ஜாதோ விஷ்ணுரிதீரித: |
நர, நாராயண, ஹரி, கிருஷ்ண என்னும் நான்கு ரூபங்களில் ஸ்ரீஹரி, மூர்த்திதேவியிடம் அவதரித்தார். இந்த நான்கினில் நாராயண, ஹரி, கிருஷ்ண ஆகியவை சாட்சாத் ஸ்ரீஹரியின் அவதாரங்கள் ஆகும். நர என்பவர், ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரம் ஆகும். ஷாட்குண்ய என்னும் கிரந்தம் இப்படிச் சொல்வதாக, ஸ்ரீமதாசார்யர் தெரிவிக்கிறார்.
கே: இந்த நான்கு அவதாரங்களில் வரும் கிருஷ்ணன், தசாவதாரத்தில் வரும் கிருஷ்ணன்தானே?
ப: கண்டிப்பாக இல்லை. வசுதேவரின் மகனாக பிறந்த கிருஷ்ண அவதாரமே வேறு. யமதர்மனின் மகனாக பிறந்த கிருஷ்ண அவதாரமே வேறு. ஆனால், யமனின் மகன்களான ஹரி மற்றும் கிருஷ்ணன் ஆகிய அவதாரங்களின் கதைகள், சாஸ்திர கிரந்தங்களில் அதிகமாக சொல்லப்படவில்லை. நர மற்றும் நாராயண ஆகியோரின் கதைகள்கூட சுருக்கமாக ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கின்றன.
கே: அப்படியென்றால், கிருஷ்ணன் என்னும் அவதாரங்கள் எவ்வளவு உள்ளன?
ப: யாதவ கிருஷ்ண, வாசிஷ்ட கிருஷ்ண, யமதர்மனின் மகன் கிருஷ்ணன் என்று மூன்று ரூபங்களில் கிருஷ்ண அவதாரம் நடைபெற்றிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், கேசவாதி 24 நாமங்களில் இருக்கும் கிருஷ்ண என்னும் ரூபமே வேறு. விஷ்ணுசஹஸ்ர நாமத்தில் சொல்லப்பட்டிருக்கும் கிருஷ்ண என்னும் ரூபம் வேறு. இப்படியாக மொத்தம் 3 அவதாரங்கள், 2 ரூபங்கள் என 5 கிருஷ்ணன் என்று நினைக்க வேண்டும்.
கே: நர என்னும் அவதாரம் ஸ்ரீஹரியின் அவதாரமே ஆகும் என்று ‘ஹரேரம்ஷௌ’ என்னும் பாகவதத்தின் வாக்கியத்திலிருந்து தெரிகிறது அல்லவா?
ப: ஆம். அதுமட்டுமல்லாமல், வீரராகவன் முதலான பல உரையாசிரியர்கள், நரன் என்பது சாட்சாத் ஸ்ரீஹரியின் அவதாரமே என்று வர்ணிக்கிறார்கள். ஆனால், ஸ்ரீமதாசார்யர் மிகவும் தெளிவாக, நரன் என்பது ஸ்ரீஹரியின் சாட்சாத் அவதாரம் அல்ல; ஆவேச-அவதாரமே என்று கூறியிருக்கிறார். ஒரு நதியினை கடலின் அம்சம் என்று எப்படி சொல்கிறோமோ அப்படியே நரன் என்பதும் ஸ்ரீஹரியின் அம்சம் என்று தெரிந்துகொள்ளவேண்டும். நதிக்கும் கடலுக்கும் எப்படி வேறுபாடு இருக்கிறதோ அதேபோல், நர என்னும் சேஷதேவருக்கும் ஸ்ரீஹரிக்கும் வேறுபாடு உள்ளது என்பதாக தெரிந்துகொள்ளவேண்டும்.
கே: அப்படியென்றால் நர என்பது சேஷரின் அவதாரமா?
ப: ஆம். நரன் என்பது சாட்சாத் சேஷதேவரின் அவதாரம். இதில் ஸ்ரீஹரி நர என்னும் ருபத்தில் நிறைந்திருக்கிறார். பலராமனிடத்தில் சுக்லகேஷி என்னும் ரூபத்தில் நிறைந்திருப்பதைப் போல.
கே: நர நாராயண அவதாரத்தின் கதையினை விவரிக்கவும்.
ப: டம்போத்பவ என்று ஒரு அரசன் இருந்தான். மொத்த பூலோகமும் அவனின் கீழ் இருந்தது. அவன் ஒரு நாள் தன் நாட்டு மக்கள் அனைவரையும் அழைத்து - நம்மைப் போல ஆயுதம் தரித்தவர்கள், போர் புரிபவர்கள் இந்த உலகில் வேறு யார் இருக்கிறார்கள் - என்று கேட்டான்.
ராஜனிடம் எல்லா நற்குணங்களும் இருந்தாலும், கர்வம் மிக அதிகமாக இருந்தது. தனக்கு சமமானவர் வேறு யாருமே இல்லை என்றே நினைத்திருந்தான். ஒரு முறை அல்ல, பல முறை தன் மக்கள் எதிரே இப்படி கர்வத்துடன் பேசிவந்தான். எரிச்சலடைந்த அந்த நாட்டு முனிவர்கள் ஒரு நாள் - உலத்தை வென்ற அரசர்கள் நீ மட்டும் அல்ல, இன்னும் பலர் இருக்கின்றனர் என்று ராஜனிடம் சொல்லியே விட்டனர்.
ரிஷிகளின் பேச்சைக் கேட்ட டம்போத்பவன் மிகக் கோபமடைந்தான். ’யார் இருக்கிறார்கள்? கூட்டி வாருங்கள் அவனை’ என்று ஆவேசம் கொண்டான். ரிஷிகள் நர நாராயணர்களின் பெயரைச் சொல்லி, இவர்களின் முன் நீ ஒரு புல்லுக்கட்டுக்குக்கூட சமானமில்லை என்றனர். அதைக் கேட்டதும், ராஜன், நர நாராயணர்களின் மேல் போர் புரிவதற்காக தன் சேனையுடன் புறப்பட்டுவிட்டான்.
நர நாராயணர்கள் கந்தமாதன பர்வதத்தில் தவம் புரிந்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு இடையூறு விளைவிக்குமாறு, ராஜன் போரை துவக்கிவிட்டான். நாங்கள் தபஸ்விகள். எங்கள் மேல் ஏன் போர் தொடுக்கிறாய்? பல துஷ்ட க்ஷத்ரியர்கள் பூலோகத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் போர் புரிவதுதானே என்று நர நாராயணர்கள் கேட்டனர். அதைக் கேட்காத டம்போத்பவ, திரும்பத்திரும்ப அவர்களையே போருக்கு அழைத்தான். அப்போது, நாராயணன் நரனுக்கு சைகை செய்து, ராஜனை அழிக்குமாறு கூறினார்.
தவத்திலிருந்த நரன் ஒரு புல்லினைப் பிய்த்து ராஜன் மேல் எறிந்தார். அதிலிருந்து பற்பல பயங்கரமான ரூபங்களைக் கொண்ட துர்க்கை தோன்றி, ராஜனின் மொத்த சேனையையும் அழித்துவிட்டாள். டம்போத்பவ ராஜன் மட்டுமே மிச்சம் இருந்தான். அப்போது அவனது கர்வம் முழுக்க அழிந்தது. நரனின் காலில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். ’இனி இப்படி வேறு யாரையும் கேலி பேசினால், உனது அழிவிலிருந்து நீ தப்பிக்க முடியாது’ என்று நரன் தெரிவித்தார்.
நர நாராயணரின் இந்தக் கதையை, கிருஷ்ண அர்ஜுனனுக்கு, உத்யோக பர்வத்தில் பரசுராமர் தெரிவிக்கிறார்.
கே: நர நாராயணர் பத்ரிகாஸ்ரமத்திற்குச் சென்று என்ன செய்தனர்?
ப: இவர்கள் இருவரும் ரிஷிகள் என்று பாகவத பதினோறாவது ஸ்கந்தம் தெரிவிக்கிறது.
தர்மஸ்ய தக்ஷதுஹிதர்யஜனி ஸ்வமூர்த்யா
நாராயணோ நர இதி ஸ்வத: ப்ரபாவ: |
நைஷ்கர்ம்ய லக்ஷணமுவாச சசார யோக
மத்யாபி சாஸ்த ரிஷிர்யனிஷேவிதாங்க்ரி: ||
எதையும் வேண்டாமல் தவம் செய்துவரும் நர நாராயணகள், ரிஷிகளால் வணங்கப்பட்டு, இன்றும் கூட ஆழ்ந்த தவத்தில் இருக்கின்றனர்.
கே: ஸ்வர்க்க பதவியை வேண்டியே ஸ்ரீஹரி நாராயண ரூபத்தில் தவம் செய்து வருகிறார் என்ற நம்பிக்கை இருக்கிறதே?
ப: நாராயணரின் தவத்தைக் கண்டு அஞ்சிய தேவேந்திரன், தன் ஸ்வர்க்க பதவியை நாராயணன் பறிக்கத்தான் இந்த தவத்தைச் செய்கிறார் என்று தவறாக எண்ணி, அவரின் தவத்தைக் கலைக்க அப்சரஸ்களை அனுப்புகிறார் என்னும் கதையும்கூட பிரபலமாகியிருக்கிறது.
கே: அப்சரஸ்களின் நடனத்தைப் பார்த்து நாராயணர் மனம் கலையவில்லையா? பிறகு என்ன ஆயிற்று?
ப: சிலர் காமத்திற்கு பலியாகின்றனர். காமத்தை வென்றவர்கள் கோபத்திற்கு பலியாகின்றனர். காமத்தை வெல்வது எவ்வளவு முக்கியமோ, கோபத்தை வெல்வதும் அதைவிட முக்கியம் என்பதை நாராயண ரூபியான ஸ்ரீஹரி இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டினார். அப்சரஸ்கள் வந்தபோது அவர்களை வரவேற்றுப் பேசினாலும், அவர்களிடம் மயங்கவும் இல்லை, அவர்களின் செயலுக்கு கோபம் கொள்ளவும் இல்லை.
கே: அப்சரஸ்களுடன் பேசியதால் நாராயணரின் தவத்திற்கு இடையூறு வரவில்லையா?
ப: ஸ்வர்க்க லோகத்தின் அப்சரஸ்களைக் கண்ட நாராயணர், தனது தொடையிலிருந்து ஆயிரமாயிரம் அற்புத அழகான வடிவினைக் கொண்ட பெண்களை உருவாக்கினார். அவர்கள் அனைவரும் தேவலோகத்துப் பெண்களைவிட பலமடங்கு அழகானவர்களாக இருந்தனர். இவர்களின் அழகினைக் கண்ட அப்சரஸ்கள், வெட்கமடைந்தனர். இப்படியாக நாராயணர் அப்சரஸ்களை தோற்கடித்து, அவர்களுக்கு புத்திமதி கூறி, திருப்பி அனுப்பினார்.
கே: ஊர்வசி பிறந்தது இந்த சமயத்தில்தானே?
ப: ஆம். நாராயணரின் ஊருவிலிருந்து (தொடையிலிருந்து) பிறந்ததால் இவளுக்கு ஊர்வசி என்று பெயர். தொடையிலிருந்து பிறந்த ஆயிரம் பெண்களிலிருந்து ஒருவரை மட்டும் ஸ்வர்க்க லோகத்திற்கு அனுப்பினார். தன்னிடமிருந்து பிறந்தவளின் அழகைக் காட்டுவதற்காக இவள் ஒருத்தியை மட்டும் தேவலோகத்திற்கு நாராயணர் அனுப்பிவைத்தார்.
கே: இந்த நாராயணரின் அவதாரமே பத்ரி நாராயண அவதாரம் என்கிறார்களே?
ப: ஆம். அப்படிச் சொல்லலாம். ஆனால் இன்றுகூட நாராயண ரூபியான ஸ்ரீஹரி தவத்தில் இருக்கிறார். அவர் இருக்கும் இடம், இன்றைய பத்ரிகாஸ்ரமம் அல்ல, அதற்கும் மேலே பெரிய பத்ரிகாஸ்ரமம் உள்ளது. அங்கு இவர் தவத்தில் இருக்கிறார் என்று மத்வவிஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
கே: வேதவியாஸ ரூபம் இருக்கும் இடத்தில்தான் நாராயண ரூபமும் இருக்கிறாரா?
ப: நர பர்வத, நாராயண பர்வத என்று இன்றும்கூட இருவேறு மலைகளை காட்டுகின்றனர். நர பர்வதத்தில் இருக்கும் ஸ்ரீஹரி தவம் செய்துகொண்டிருக்கிறார். நாராயண பர்வதத்தில், ஸ்ரீஹரி நாராயண ரூபத்தில் இருக்கிறார். இந்த இரு மலைகளுக்கு சிறிது தூரத்தில் வேறு மலையான வியாஸபர்வதம் இருக்கிறது. அங்கு வியாஸரூபத்தில் ஸ்ரீஹரி இருக்கிறார். ஆக, நர, நாராயண, வேதவியாஸ ரூபங்கள் மூன்றும் இருக்கும் இடங்கள் வெவ்வேறு ஆகும்.
கே: தவம் செய்துகொண்டிருக்கும் நாராயணரை இந்த கலியுகத்தில் யாரேனும் சந்தித்திருக்கிறார்களா?
ப: மனிதர்கள் செல்லமுடியாத வேதவியாஸர் இருக்கும் இடத்திற்கு, ஜகத்குரு ஸ்ரீமன் மத்வாசாரியர் சென்று, அங்கு வேதவியாஸ தேவரை தரிசித்து, அவரால் அழைத்துச் செல்லப்பட்டு, நாராயண பர்வதத்தில் தவத்தில் இருக்கும் நாராயணரூபினான ஸ்ரீஹரியை தரிசனம் செய்தார் என்று மத்வவிஜயத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நாராயண ரூபியான ஸ்ரீஹரியுடன் பேசவும் செய்தார்.
கே: நம் பாரதத்தின் மிக உயரமான இடம் என்றால் அது பத்ரி க்ஷேத்திரம். அங்கு வீற்றிருப்பவர் நாராயணன். அதனால் நம் மொத்த பாரதத்தின் ரட்சகன் மற்றும் பூஜிக்கப்படவேண்டிய தெய்வம் நாராயணன்தானே?
ப: ஆம். இந்த விஷயத்தில் கொஞ்சமும் சந்தேகமில்லை. இதை பாகவதமே மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறது.
பாரதேSபி வர்ஷே பகவான் நரநாராயணாக்ய ஆகல்பாந்த
முபசேததர்ம ஞானவைராக்ய ஐஸ்வர்யோ பஷமூபரமாத்மோபலம்போS
அனுக்ரஹா மத்மவதாரமனுகம்பயா தபூSவைக்தகதிஸ்சரதி ||
பாரத தேசத்தில் ஸ்ரீஹரி, நர மற்றும் நாராயண என்னும் இரு ரூபங்களில் இருக்கிறார். தர்ம, ஞான, வைராக்ய, ஐஸ்வர்ய, ஹரியிடம் பக்தி, இந்திரிய நிக்ரஹம், பரமாத்மாவை காண்பது ஆகிய தபஸ்விகளின் அனைத்து குணங்களையும், அவை இப்படிதான் இருக்கவேண்டும் என்று காட்டியவாறு, தன் பக்தர்களை தொடர்ந்து அருளுவதற்காக கல்ப முடிவு வரைக்கும் தவத்தினை செய்துவருகிறார்.
கே: நர நாராயணரின் தவத்தினை கலைப்பதற்கு தேவேந்திரன் என்னென்ன தடைகள் செய்தான்?
ப: இந்திரோபி நாக்யசுகமேஷ ஜிக்ருக்ஷதீதி
காமம் ந்யமங்க்த ஸகணம் ஸ பதர்யுபாக்யம்
கத்வாSப்ஸரோகணவஸம்த ஸுமந்தவாத்யை:
ஸ்த்ரீப்ரேக்ஷணேஷு பிரவித்யததன்மஹிஞா: ||
முக்யபிராண தேவர் ஒருவரைத் தவிர மற்ற அனைத்து தேவர்களுக்கும் அசுர ஆவேசம் இருக்கிறது என்று பாகவதத்தின் இந்த ஸ்லோகத்திற்கு பொருள் சொல்லும்போது, ஸ்ரீமதாசார்யார் சொல்கிறார். அதனால், அந்த சந்தர்ப்பத்தில் தேவேந்திரனுக்கு அசுர ஆவேசம் ஆயிற்று, ஆகவே தவத்திற்கு இடையூறு செய்திருக்கிறான் என்று கூறுகிறார்.
கே: நர நாராயண அவதாரம் சொல்லும் செய்தி என்ன?
ப: சில சாதகர்கள் தவம் செய்யவிரும்பி தோற்றிருப்பார்கள். சிலர் தவம் செய்யும் முயற்சியிலேயே தோற்றிருப்பார்கள். சிலர் சில காலம் தவம் செய்து, பின்னர் தொடர முடியாமல் தோற்றிருப்பார்கள். சிலர் பல காலம் கடுந்தவம் புரிந்து, பின் பெண்களின் அழகில் மயங்கி தோற்றிருப்பார்கள். சிலர் பெண்களின் செயல்களில் கோபப்பட்டு தோற்றிருப்பார்கள். தவத்தினை செய்வது காமத்தை வெல்வதற்காக மட்டுமல்ல. காமத்தைவிட கோபத்தை வெல்வதற்காக. இவை இரண்டையும் வென்று, தவத்தில் வெல்லும் சாதகர்கள் மிகமிகக் குறைவு. காமத்தை வென்று கோபத்தை வெல்லமுடியாதவர்கள், பசுவின் குளம்பில் தேங்கும் சேற்றில் விழுந்து நாசமடைவதைப்போல், நாசமடைவான். இந்த நீதியை தெரிவிப்பதற்காகவே நாராயணன் யமதர்மனின் மகனான அவதரித்தார்.
கே: ’மாமுக்ரதன்வாS கிலப்ரமாதாத் நாராயண: பாத்’ என்னும் நாராயணவர்ம வாக்கியத்தின் பொருள் என்ன?
ப: நாராயணன் எல்லாவித அபாயங்களிலிருந்து என்னை காப்பாற்றட்டும். ‘நரஸ்சஹாஸாத் பாது’ எனக்கு ஏற்படும் பரிகாசங்களிலிருந்து நரன் என்னை காப்பாற்றட்டும்.
ஸ்ரீஹரியை மறப்பது, தவறான ஞானம், படிக்காமல் இருப்பது, கெட்ட செயல்களைச் செய்வது இவற்றையே நமக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் என்று சொல்கிறோம். இத்தகைய அபாயங்களில் சிக்கிக் கொள்ளக்கூடாதென்றால், நாராயணனையே சரணடையவேண்டும் என்று நாராயண வர்ம எச்சரிக்கிறது. மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஆளாவதிலிருந்து, நாம் மற்றவரை பரிகாசம் செய்யக்கூடாதென்னும் குணத்தைப் பெறவேண்டும் என்றால், நர என்னும் ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரத்தை சரணடையவேண்டும். அப்படிச் செய்தால், சஜ்ஜனர்களுக்கு எப்போதும் அவமதிப்பு ஏற்படாதவாறு நர ரூபி ஸ்ரீஹரி அருளுவான்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
அதி அற்புதம் ஐயா நான் மஹாபாரத பிரியன் மேலும் இவர்களை பற்றிய தகவல் அறிய?
ReplyDelete