4/40 நரசிம்ம அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷச்சார்
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
கேள்வி: நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் என்ன?
பதில்: ஹிரண்யகசிபுவை அழிப்பது. பக்த பிரகலாதனுக்கு அருளுவது.
கே: அதனால் நமக்கு என்ன பயன்?
ப: நம் இதயத்தில் இருக்கும் ஹிரண்யகசிபுவை அழிப்பதற்காகவும்; பக்த பிரகலாதனுக்கு அருளுவதற்காகவும் - என்பதாக நினைக்கவேண்டும்.
கே: மன்னிக்கவும். புரியவில்லை.
ப: ஹிரண்யகசிபு என்றால் தங்கத்தினாலான படுக்கை. நமக்குள் இருக்கும் ஆசையே ஹிரண்யகசிபு. அதை அழிக்கவேண்டும். நாம் ஸ்ரீஹரியின் தாசன் என்னும் சிந்தனையால் மகிழ்ச்சி அடைவதே பிரகலாதன். இதற்காகவே நமக்கு நரசிம்ம அவதாரம் தேவை.
கே: நரசிம்மரின் ரூபம் எப்படி இருக்கிறது?
ப: சிம்மத்தின் தலை. மனிதனின் உடல். இரண்டும் சேர்ந்ததுபோல் உள்ளது.
கே: ஓஹோ. அப்படியென்றால் சில படங்களில் சிங்கத்தின் தலை இருப்பதில்லையே?
ப: அப்படிப்பட்ட தப்பான படங்களை கண்டிப்பாக பார்க்கவேண்டாம். முகம் சிங்கத்தைப் போன்றே இருக்க வேண்டும். முகத்தில் மேல் பாகமும் கீழ் பாகமும் வெவ்வேறாக இருக்க வேண்டும். ஒரு முறை சிங்கத்தின் முகத்தைப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
கே: நரசிம்மரின் உருவம் எப்படி இருக்கும் என்பதை சற்று விளக்குங்களேன்.
ப: தொட்டால் சுடும் நெருப்பைப் போன்ற மூன்று கண்கள். கோரமான அடர்ந்த பிடரிமயிர். பிரம்மாண்டத்தையே தின்றுவிடுவதைப் போல் பெரிய வாய். கூர்மையான பற்கள். கூர்மையான கத்தியைப் போன்ற நாக்கு. கண்களுக்கேற்ப புருவங்கள். குகைகளைப் போன்ற மூக்கு துவாரங்கள். வானிலுள்ள நட்சத்திரங்களே மாலைகள் என்பது போல உயரமான தேகம். ஆயிரமாயிரம் கைகள். வஜ்ராயுதங்களையே பொடிபொடியாக்கும் நகங்கள். இவரின் தொடைமேல் ஹிரண்யகசிபு. குடலை உருவி மாலையாக அணிந்து கொண்ட தேகம். மலையைப் போன்ற இந்த உடலால், கோடி அசுரர்களை நொடியில் கொல்லும் வலிமையுடைய இந்த ரூபம். அற்புதம். அதி அற்புதம்.
கே: பாவம். குழந்தையான பிரகாலதனுக்கு இந்த கோரமான ரூபத்தைக் கண்டு பயம் உண்டாகியிருக்குமே?
ப: இல்லையாம். ஸ்ரீஹரியிடம் ‘உன்னுடைய இந்த கோர ரூபத்தினால் எனக்கு பயம் ஏற்படவில்லை. சம்சார சுழற்சியைக் (பிறப்பு / இறப்பு) கண்டே நான் பயப்படுகிறேன்’ என்றானாம் குழந்தை பிரகலாதன்.
கே: சம்சார சாகரத்தில் மூழ்கியிருக்கும் நமக்கு இதன் பொருள் விளங்கவில்லை. நரசிம்மரின் அருளுக்கு பாத்திரராவதற்கு என்ன சொல்லி ஸ்துதிக்கவேண்டும்?
ப: நமோ பகவதே துப்யம் புருஷாய மஹாத்மனே |
ஹரயே அத்புதஸிம்ஹாய ப்ரஹ்மணே பரமாத்மனே ||
என்று நரசிம்மரை வணங்கவேண்டும்.
கே: நரசிம்ம மந்திரத்தைப் பற்றி சற்று சொல்லவும்.
ப: ஓம் நமோ பகவதே நரசிம்மாய தேஜஸ்தேஜஸே ஆவிராவிர்பாவ வஜ்ரநக கர்மாஷயாத் ரந்தய கந்தய தமோ க்ரஸ ஸ்வாஹா அபயமாத்மனே பூமிஷ்டாத் ஓம் ஹோம் (மாலா மந்திரம்)
இதைத் தவிர, உக்ரம் வீரம் ஆகிய 32 எழுத்துக்களின் மாலாமந்திரம், 24 எழுத்துக்களின் மந்திரம், நரசிம்ம காயத்ரி, ஏகாக்ஷர மந்திரம், மன்யு சூக்தம், வஜ்ரநகாய எனத் துவங்கும் மந்திரம் ஆகியவை மிகவும் மகிமையுள்ளவை. ஆசார்யரின் நகஸ்துதி, த்ரிவிக்ரம பண்டிதரின் நரசிம்மஸ்துதி, விஜயீந்திரரின் பூகண்டம் ஆகிய ஸ்தோத்திரம், நரசிம்மரைப் பற்றிய பாடல்கள், நரசிம்ம சூளாதிகள் ஆகியவை மக்களுக்குப் பிடித்தவை.
கே: அனைவரும் மேற்கண்ட மந்திரங்களை சொல்லலாமா?
ப: அல்ல. விரத அனுஷ்டானங்களைச் செய்யும் சத்பிராம்மணர்களுக்கு மட்டுமே இவற்றைச் சொல்லலாம். அவர்களுக்கும் குரு உபதேசம் தேவை மற்றும் 100க்கு மேல் ஜபிக்க வேண்டுமெனில் ஸ்ரீஹரியிடமிருந்து ஒப்புதல் வரவேண்டும்.
கே: அனுஷ்டானங்கள் இல்லாதவர்கள் இவற்றை ஜபித்தால் என்ன ஆகும்?
ப: சோதனை செய்து பார்க்கவேண்டுமெனில் செய்து பாருங்கள். எனக்குத் தெரியாது. ஆனால் ஓரிருவர் இவற்றை கழுத்தளவு நீரில் நின்று ஆயிரக்கணக்கில் ஜபித்து, பின்னர் அவர்களுக்கு மனநோய் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே: நரசிம்ம மந்திரம், நரசிம்மர் உருவச்சிலை, நரசிம்ம சாலக்கிராமம் ஆகியவை மிகவும் பயம் தரக்கூடியவை என்கிறார்கள் சிலர். நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள். ஆகவே இவைகளின் சகவாசமே நமக்கு வேண்டாம்.
ப: நியமங்களை சிரத்தையுடன் பின்பற்றி பூஜித்தால் நரசிம்மரின் அருளைப் பெறலாம். நியமங்களை மீறினால் அவை நமக்கு பாதகமானவை.
கே: லட்சுமி, பிரம்மா முதலான தேவர்களைவிட ஸ்ரீஹரி பிரகலாதனையே அதிகம் விரும்பினார். ஆனால், பிரகலாதன் 19ம் வகுப்பை (தாரதம்ய வகுப்பு) சேர்ந்தவர். இது எப்படி?
ப: ஏகத்ர ஏகஸ்ய வாத்ஸல்யம் விசேஷாத் தர்சயேத் ஹரி: |
அவரஸ்யாபி மோஹாய க்ரமேண்யைவாஸி வத்ஸல: ||
என்கிற ஸ்ரீமதாசார்யரின் வாக்கியத்தின்படி, அசுர மோகனத்திற்காக ஸ்ரீஹரி அவ்வப்போது அவர்களின் மேல் அதிக பிரியத்தைக் காண்பிக்கிறார். அல்லது, அதிக மக்களை உடைய தாயானவள், நோயினால் துன்பப்படும் ஒரு குழந்தையிடம் மட்டும் அதிக பிரியம் காட்டுவதைப் போலவே ஆகும்.
கே: ரத்தம் தோய்ந்த சடலத்தை தன் மடியில் போட்டுக்கொண்டு, குடலை மாலையாக அணிந்து, ரத்தத்தை பிடரிமயிரில் நனைத்த நரசிம்மருக்கு தீட்டு ஏற்படவில்லையா?
ப: இத்தகைய நுட்பமான கேள்விகளுக்கும் ஸ்ரீமதாசார்யர் பதில் அளித்திருக்கிறார். ‘அதிபலதிதிசுத ஹ்ருதயவிபேதன ஜய ந்ருஹரேமல பவ மம சரணம்’ எந்தவித தோஷமும் இல்லாத பரிசுத்தமான நரசிம்மனை சரணடைவோம் என்கிறார்.
கே: எந்த மன்வந்தரத்தில் எந்த யுகத்தில் இந்த அவதாரம் நடைபெற்றது?
ப: வைவஸ்வத மன்வந்தரம் நான்காவது யுகத்தில் இந்த அவதாரம் நடைபெற்றது.
கே: எந்த மாதம், திதி, நட்சத்திரம் மற்றும் கிழமை?
ப: வைசாக மாதம் சதுர்தசி சித்ரா நட்சத்திரம் வெள்ளிக்கிழமை
கே: மாலையிலா?
ப: அல்ல. அதற்கு முன்னர்.
கே: அனைவரும் மாலையில்தான் நடைபெற்றது என்கிறார்களே?
ப: மாலைக்கு முன்னரே தூணிலிருந்து வெளிப்பட்டு, மாலை வேளையில் ஹிரண்யகசிபுவைக் கொன்றார். ஆகையால் மாலை வேளையில் நரசிம்மரின் பூஜை செய்வது விசேஷமானது. மாலைக்கு சற்று முன்னரிலிருந்து மாலை வரை, பூனை எலியை துரத்துவதைப் போல் ஹிரண்யகசிபுவை துரத்தி பின்னர் கொன்றார் என்று பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
கே: நரசிம்மர் விசேஷமாக எங்கு இருக்கிறார்?
ப: ஹரிவர்ஷ கண்டத்தில் பிரகலாதனிடம் பூஜை செய்துகொள்பவனாக இருக்கிறார். மற்றும் மாலை வேளைகளில், சந்தி எழுத்துக்களில், வேதங்களின் சம்ஹிதை சந்திகளில், நம் கஷ்ட காலங்களின் சந்தியிலும் கூட நரசிம்மர் இருக்கிறார்.
கே: நரஹரியை தினமும் எங்கு, எப்படி நினைக்கவேண்டும்?
ப: நம் உடலில், இதயத்தின் மத்தியில் வெள்ளை வண்ணத்தில், அணுவை விட குறைந்த அளவில் வீற்றிருக்கும் நரசிம்மர் ‘க்ஷ’ என்னும் எழுத்திற்கு உரிய தேவதையைக்கு உரியவராக இருக்கிறார். வீட்டை விட்டு கிளம்பும்போது ஏதும் விக்னங்கள் வராமலிருக்க அவரின் கருணை நிறைந்த முகத்தினை நினைக்காதவனின் இந்தப் பிறவி வீண்தானே?
கே: பிரகலாதனுக்கு நரசிம்மர் அளித்த உபதேசங்களில் தற்போதைய மக்களுக்கு இருக்கும் செய்திகள் என்ன?
ப:
1. நாம் விரும்புவதை வேண்டிக்கொள்வதே ஸ்ரீஹரிக்கு செய்யும் பிரார்த்தனையாகும்.
2. பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று இன்றைய பள்ளிகள் சொல்லிக் கொடுப்பதே கல்வி.
3. வயதானபிறகு (வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு) சர்வமூல கிரந்தங்கள் படிப்பது
இப்படி தவறாக சிந்திப்பவர்களே இன்று பலர் இருக்கின்றனர். ‘குரோக்தமபி ந க்ராஹ்யம்’, ‘கௌமாரே ஆசரேத் ப்ராக்ஞ:’, ‘யஸ்த ஆசிஷ ஆஷாஸ்தே’ என்று பிரகலாத ராஜர் சொல்வது, மேற்கண்ட மக்களுக்கு சவுக்கடி.
கே: தந்த்ரசாரசங்கரஹ கிரந்தத்தின்படி நரசிம்மரை எப்படி வணங்கவேண்டும்?
ப:
த்யாயேன் நரசிம்மம் முருவிருத்தி ரவி த்ரிநேத்ரம்
ஜானு ப்ரசக்த கர யுக்ம மதாபராப்யாம்
சக்ரம் தரஞ்ச தததம் பிரியயா ஸ்வமேதம்
திக்மாம்ஷுகோட்யதிக தேஜ சமக்ர்ய சக்திம் ||15||
மிகப் பெரியதான வட்டவடிவ சூரியனைப் போல் ஒளிரும் மூன்று கண்கள் உடைய, இரண்டு கைகளை இடுப்பில் வைத்தவரான, சக்ர சங்கத்தினை ஏந்தியவரான, கோடி சூரியனைவிட அதிக ஒளியைக் கொண்டவரான நரசிம்மர். அருகில் லட்சுமி. இப்படிப்பட்ட உத்தமமான உருவத்தை உடைய நரசிம்மரை நினைக்கவேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment