Saturday, January 27, 2018

16/40 வாசுதேவ அவதாரம்

16/40 வாசுதேவ அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்




கேள்வி: 24 ரூபங்களில் இருக்கும் வாசுதேவ என்பவர் யார்? இப்போது நாம் பார்க்கவிருக்கும் வாசுதேவ யார்?

பதில்: 24 ரூபங்களில் இருக்கும் வாசுதேவன் வேறு. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாசுதேவன் வேறு. இப்போது பார்க்கவிருக்கும் வாசுதேவ அவதாரம் வேறு. ஸ்ரீஹரியின் அவதாரங்களில் பேதம் (வேறுபாடு) கிடையாது. அந்த அவதாரங்கள் தோன்றிய நோக்கத்தில் மட்டும் வேறுபாடு உண்டு. அவர்களின் சிறப்புகளுக்கும் ஒற்றுமை உண்டு என்பது பொதுவான கருத்து.

கே: வாசுதேவ அவதாரம் நடைபெற்ற காலம்?

ப: ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில்.

கே: அவதாரம் என்றால் தாய், தந்தையரை தீர்மானித்து, பூலோகத்தில் அவதரித்து, பல ஆண்டுகள் அந்த ரூபத்திலேயே இருக்கவேண்டும். ஆனால் வாசுதேவ ரூபம், த்ருவன் ஒருவனுக்கு மட்டும் காட்சி கொடுத்த ரூபம். இதை அவதாரம் என்று எப்படி சொல்கிறீர்கள்?

ப: அப்படியொன்றும் விதியில்லை. நரசிம்ம, ஹம்ஸ ஆகிய அவதாரங்களில் தாய் தந்தையரே இருக்கவில்லை. பல ஆண்டுகள் இங்கேயே இருந்து நற்செயல்களைச் செய்ததாகவும் இல்லை.

கே: வாசுதேவ அவதாரத்தின் நோக்கம் என்ன?

ப: சின்னஞ்சிறுவனான த்ருவனுக்கு அருளுவது. சாதனையின் படியில் வாசுதேவ மந்திரத்தை ஜபம் செய்யும் அனைவருக்கும், அவர்களது ஆத்மவிசாரம் புலப்படுமாறு அருள்வதே இந்த அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும். 

கே: த்ருவனுக்கு அருள்வதற்காக வந்த வாசுதேவ அவதாரத்திற்கும், ஸ்ரீபாதராஜருக்கும் என்ன சம்மந்தம்?

ப: எந்த த்ருவன், வாசுதேவ என்னும் அவதாரத்திற்கு காரணமாக இருந்தானோ, அவனே நடைபெறும்  கலியுகத்தில் ஸ்ரீபாதராஜராகி அவதரித்தான்.

கே: இதற்கு என்ன ஆதாரம்?

ப: ஐதீகம்.

கே: ஐதீகம் என்றால்?

ப: வேதங்களின் ஒரு பகுதியே (பிரிவு) ஐதீகம் என்று ஸ்ரீமதாசார்யர் தெரிவிக்கிறார். ஐதீகம் என்றால் முன்னோர்களின் சம்பிரதாயத்தில் வந்திருப்பது. அபரோக்‌ஷ ஞானிகள் என்று புகழ்பெற்ற தாசர்கள் தம் பாடல்களில் ‘ஸ்ரீபாதராஜரு த்ருவனின் அவதாரம்’ என்று பாடியிருக்கின்றனர். 

கே: தம் த்ருவ அவதாரத்தைப் பற்றி ஸ்ரீபாதராஜர் சொல்லியிருக்கிறாரா?

ப: தெளிவாகக் கூறவில்லை. ஆனால், ஸ்ரீபாதராஜர் இயற்றியிருக்கும், ‘அத்யாத்ம மாலா’ என்னும் பாடலில், தாம் த்ருவ அவதாரத்தில் எந்த கிரமத்தில் தியானம் செய்தார் என்பதை ஒரு ஊகமாக சொல்லியிருக்கிறார். 

கே: த்ருவன் ஏன் தவம் செய்யப் புறப்பட்டான்?

ப: தந்தை உத்தானபாதனுக்கு சுநீதி வேண்டாதவள் ஆனாள். சுநீதியின் மகன் த்ருவனும் வேண்டாதவன் ஆனான். சுருசியே வேண்டியவள். ஆகவே த்ருவன் ஸ்ரீஹரியைப் பார்க்க நடந்தான்.

கே: இதனால் தெரியும் செய்தி என்ன?

ப: நமக்கும் சு-நீதி வேண்டாததாக இருக்கிறது. சு-ருசியே பிடிக்கிறது. நல்ல கலாச்சாரம், பண்பாடு, நடவடிக்கை, பழக்கங்கள் என்னும் சு-நீதிகளை புறக்கணிக்கும்போது, த்ருவன் என்னும் ஹரிபக்தன், வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுகிறான்.

கே: காட்டிற்குப் புறப்பட்ட சிறுவனை, சுநீதி ஏன் தடுக்கவில்லை?

ப: தன் மகனை காட்டிற்கு அனுப்பிய சுநீதியின், அந்த தார்மிக தாயின் மனது இங்கிருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. நமது வீட்டில் சிறுவர்கள், ஏகாதசி உபவாசம் செய்கிறேன், சந்தியாவந்தனம் செய்கிறேன் என்று சொன்னால், நீ இன்னும் சிறியவன், இதையெல்லாம் இப்போது செய்யவேண்டாம், பெரியவனாக ஆனபிறகு செய்தால் போதும் என்று மக்களின் ஆன்மீக / தார்மிக ஆசைகளுக்கு / உற்சாகத்திற்கு தடை போடும் தாய்கள், சுநீதியைப் போன்ற வீரமிக்க பெண்களின் சரித்திரத்தை ஒரு முறை நினைத்துப் பார்க்கவேண்டும். 

கே: த்ருவன் தவம் செய்யும்போது, தேவர்கள் அவனின் சிந்தனையை கலைப்பதற்காக பல இடையூறுகளை செய்கின்றனர். பாம்பு, யானை, சிங்கம் ஆகிய விலங்குகளை அவன் மேல் தாக்க விடுகிறார்கள். நல்ல விஷயங்களுக்கு ஏன் தேவர்கள் தடை போடுகிறார்கள்?

ப: நல்ல விஷயங்களுக்கு தடை போடுவதென்பது தேவர்களின் நோக்கமல்ல. த்ருவனின் சிரத்தையை அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும். அவனின் தவவலிமையை உலகத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்காகவே அவனுக்கு பல சோதனைகளைத் தருகின்றனர். இதை பிரம்மாண்ட புராணம் தெளிவாகச் சொல்கிறது.

யத்ர தேவை: க்ருதே விக்னே கண்டிதோ ந புமான் பவேத் |
தத்ர தத்யஷஸே விக்னம் குர்மு: நது விக்னாதனே ||

நாம் செய்யும் சத்காரியங்களுக்கு தேவர்கள் தடை செய்தால், அது நமது நல்லதுக்காகவே; அந்த செயல்களை கெடுப்பதற்காக அல்ல என்னும் பேருண்மையை இதிலிருந்து அறியலாம். 

கே: தவத்தை முடித்து த்ருவன் திரும்பியபோது அவனது தந்தையான உத்தானபாதன் அவனை ஒரு பெண் யானையின் மேல் ஏற்றி விமரிசையுடன் கூட்டிவந்தான் என்று தெரியவருகிறது. ஆண் யானையின் மேல் ஏன் ஊர்வலம் நடத்தவில்லை? உத்தானபாதன் செய்தது தப்பில்லையா?

ப: ஆம். பாகவதத்தின் உரையாசிரியர் வீரராகவன் இந்த சந்தர்ப்பத்தில், ‘கரிணீம்’ என்று பாகவதத்தில் சொல்லியிருப்பதை, ‘கரிணம்’ என்று கொண்டு தவறாக உரை எழுதியிருக்கிறார். 

ஆனால், ‘கலபஸ்சைவ கன்யானாம் கரிணீ பாலமங்களா’ என்று ராஜநீதி சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதைப் போல, பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஆண் யானை நல்லது என்றும் ஆண் சிறுவனுக்கு பெண் யானை நல்லது என்றும் சொல்லப்படுகிறது. த்ருவனுக்கும் நல்லதே நடக்கட்டும் என்ற எண்ணத்தில் பெண் யானையின் மேல் ஏற்றி ஊர்வலம் நடத்தினான். 

கே: ஸ்ரீஹரியின் அருளுக்குப் பாத்திரமான த்ருவன், த்ருவ லோகத்திற்கு அதிபதி ஆனான். இந்த த்ருவ லோகத்தை ஞானிகளும் புகழ்ந்திருக்கின்றனர். சிலர் த்ருவ லோகத்தை தூரத்திலிருந்து பார்ப்பதாகவும், வேறு சிலர் த்ருவ லோகத்தின் உள்ளேயே சென்று பார்த்ததாகவும் சொல்கிறார்கள். இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்?

ப: விடை சுலபம். ஒவ்வொரு ஞானிகளும் த்ருவன் சென்ற பாதையில் சென்றே, மோட்சத்தை அடைகிறார்கள். தேவர்கள் அல்லாதவர்கள் மோட்சப் பாதையில் செல்லும்போது, த்ருவ லோகத்தை தூரத்தில் நின்றே பார்த்து, ஆச்சரியமடைகிறார்கள். தேவர்கள் த்ருவ லோகத்தின் உள்ளே சென்று, பிறகு தம் மோட்சப் பாதையில் முன்னேறுகிறார்கள். 

கே: வாசுதேவனிடமிருந்து வரத்தைப் பெற்றபிறகு த்ருவன் மிகவும் துக்கமடைகிறான். அழியக்கூடிய த்ருவ பதவியைக் கேட்ட தன் ஆசையை திட்டுகிறான். அவனுக்கு விஷ்ணு லோகமும் கண்டிப்பாக கிடைக்கும் என்று தெரியவருகிறது. ஸ்ரீஹரியின் அருளால் கிடைத்த த்ருவ லோகத்தின் மேல் ஏன் த்ருவன் வருத்தப்பட்டான்?

ப: ஸ்ரீஹரியுடன் தனக்கு இருக்கும் சம்பந்தத்தை ஒரு பக்தன் வியாபாரம் ஆக்கக்கூடாது. அவனது அருளை விட்டு வேறு எதையும் கேட்கக்கூடாது என்பது ஒரு நல்ல பக்தனுக்கு அழகு. இந்த விஷயத்துக்காக த்ருவன் வருத்தப்பட்டானே தவிர, தனக்கு விஷ்ணு லோகம் கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை.

கே: த்ருவனின் வெறும் ஆறு மாத கால தவத்திற்கு, ஸ்ரீஹரியின் வாசுதேவ அவதாரம் எப்படி சாத்தியம்?

ப: இந்த கேள்விக்கு விஷ்ணு புராணத்தில் சுவாரசியமான பதில் உள்ளது. முந்தைய பிறவியில் த்ருவன் ஒரு பிராமணராக இருந்தான். பற்பல ஆண்டுகள் தவம் செய்தான். வெறும் ஆறு மாத கால தவம் மிச்சம் இருந்தபோது, அவனது மரணம் நிகழ்ந்தது. ராஜகுமாரனை நினைத்தவாறே இறந்ததால், இப்பிறவியில் த்ருவனாக பிறந்து, அந்த ஆறு மாத கால தவத்தினை செய்தான். ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெற்றான். ஆகையால் ‘பஹுனாம் ஜன்மநாமந்தே’ என்னும் வாக்கு உண்மையாயிற்று.

கே: குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்தன. இப்போது வாசுதேவனைப் பற்றி சிறிது விளக்குங்கள்.

ப: மிகவும் கடினமான தவத்தை மேற்கொண்ட சின்னஞ்சிறு சிறுவனின் பக்திக்கு மெச்சி, கருட வாகனத்தில் வாசுதேவன் தாவிப் பறந்து வந்தார். சங்கு, சக்ரம், கதா, பத்மம் ஆகியவற்றை ஏந்தி, த்ருவனின் முன் வந்து தரிசனம் தந்த ரூபமே, வாசுதேவ அவதாரம்.

கே: ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெற்ற த்ருவனுக்கு திக்பிரமை (சுய உணர்வு இழத்தல்) பிடிக்கவில்லையா?

ப: ஆம். ஸ்ரீஹரியின் தரிசனத்தால், த்ருவனுக்கு திக்பிரமையுடன் மகிழ்ச்சியும் உண்டானது. பேச்சே வரவில்லை. கண்களின் நீர் நிரம்பியது. தொண்டை வரண்டது. நாக்கு சிக்கிக்கொண்டது. ஸ்ரீஹரியை  சாஷ்டாங்கமாக வணங்கி, கட்டித் தழுவினான். எப்படி போற்றிப் பாடவேண்டும் என்பதையே மறந்து சிலையாக ஆனான்.

கே: பிறகு என்ன ஆயிற்று?

ப: வாக்கிற்கு அபிமானியான லட்சுமிதேவியின் ரூபமான சங்கு மூலம், த்ருவனின் தலையை ஸ்ரீஹரி தொட்டார். உடனடியாக சிறுவனின் வாயிலிருந்து ஸ்லோகங்கள் வெளிவந்தன. 

யோந்த: பிரவிஷ்ய மம வாசமிமாம் ப்ரசுத்தாம்
சஞ்சீவயத்யகில சக்தி தர:ஸ்வதாம்னா |
அன்யாம்ஸ்ச ஹஸ்தசரண ஷ்ரவணத்வகாதீன்
ப்ராணான் நமோ பகவதே புருஷாய துப்யம் ||

பேச்சு வராத எனக்கு பேச்சை வரவைத்தவனே. அனைத்து இந்திரியங்களும் அசைவற்றுப் போன எனக்கு சுயஉணர்வை தந்தவனே, என்னுள்ளே அந்தர்யாமியாக இருக்கும் அனைத்து நற்குணங்களும் நிரம்பிய வாசுதேவனே ! உனக்கு என் வணக்கங்கள்.

கே: ஞானியான த்ருவன் இப்படி தன்னை வணங்கியதும், வாசுதேவன் அவனுக்கு என்ன வரத்தை அளித்தார்?

ப: 'மகனே த்ருவா. உன் பக்தியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இன்றுவரை யாருக்குமே கிடைக்காத ஒரு மிகச்சிறந்த இடத்தை உனக்கு அருள்கிறேன். சப்தரிஷிகள் அத்ரி, கஷ்யப முதலான ரிஷிகள் எந்த லோகத்தை நிரந்தர பிரதட்சணம் செய்து வருகிறார்களோ அத்தகைய திவ்யமான இடத்தை உனக்கு அருள்கிறேன். செக்கிலிருந்து எண்ணெய் எடுக்க எருதுகள் எப்படி சுற்றுகின்றனவோ, அதேபோல் உன் லோகத்தையும் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை சுற்றும். நானும் ‘சிம்சுமார’ என்னும் ரூபத்தில் உன் த்ருவ லோகத்தை தாங்கிப் பிடிப்பேன். 36,000 ஆண்டுகள் நீ அந்த உலகத்தில் தர்மத்துடன் ஆட்சி செய்வாயாக. அதன்பிறகு சிரஞ்சீவியாக அதே த்ருவ லோகத்தில் வாழ்வாயாக. இனி நீ எப்போதும் சம்சார வாழ்க்கைக்கு திரும்பமாட்டாய்.

கே: ஹா. வாசுதேவன் எவ்வளவு கருணையுள்ளவன். இவனது அருளைப் பெறுவதற்கு நாம் எவ்வாறு அவனை வணங்க வேண்டும்?

ப: ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்னும் வாசுதேவ மந்திரத்தை சாஸ்திரபூர்வமாக தினமும் ஜெபிக்கவேண்டும். சங்கு சக்ர கதா பத்ம ஆகியவற்றை ஏந்தி, கருட வாகனத்தில் எழுந்தருளியிருக்கும், த்ருவனுக்கு அருளிய வாசுதேவ ரூபத்தை தினமும், எந்நேரமும் நினைத்திருந்தால் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

கே: இது என்ன வாசுதேவ மந்திரம்?

ப: தந்த்ரசார சங்க்ரஹத்தில் ஸ்ரீமதாசார்யர், வாசுதேவ த்வாதசாக்‌ஷர மந்திரத்தைப் பற்றி விளக்கியிருக்கிறார். ஒவ்வொரு சாதகரும் இந்த மந்திரத்தை கண்டிப்பாக சொல்ல வேண்டும். ஆகவே இதனை உபதேசம் செய்துகொள்ள வேண்டும். 

கே: சற்று விவரமாக விளக்கவும்.

ப: அஷ்ட மஹாமந்திரங்களில் வாசுதேவ மஹா மந்திரமும் ஒன்று. 

1. ஓம்காரம்
2. வியாஹ்ருதி
3. நாராயண அஷ்டாக்‌ஷர மந்திரம்
4. வாசுதேவ மஹா மந்திரம்
5. காயத்ரி மந்திரம்
6. மாத்ருகா மந்திரம்
7. புருஷ சூக்தம்
8. விஷ்ணு ஷடக்‌ஷர மந்திரம்

இந்த மந்திரங்களை ஒவ்வொரு சாதகரும் ஒவ்வொரு நாளும் ஜபிக்க வேண்டும். அதிலும், வாசுதேவ த்வாதசாக்‌ஷர மந்திர உபதேசத்தைப் பெறாதவன், தேவர பூஜை செய்யவும், ஔபாசனை, வைஸ்வதேவ ஹோமங்களைச் செய்யவும், வேறு எந்த சத்காரியங்களைச் செய்யவும் தகுதி அற்றவனாகிறான். 

இதை கவனத்தில் வைத்துக்கொண்டு, வாசுதேவ த்வாதசாக்‌ஷர மந்திரத்தை அனைவரும் ஜபிக்க வேண்டும். ஜபிக்காமல் விடவே கூடாது. இதைப்போல், வாசுதேவ சஹஸ்ர நாமத்தையும் படிக்கவேண்டும். இவற்றினால் வாசுதேவன் மகிழ்ந்து, நமக்கு அருளி, நம்மை காப்பாற்றுவார்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment