Saturday, July 1, 2017

ஆச்சார்ய மத்வர்

ஆச்சார்ய மத்வர்

வித்யாலயாவின் 20வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் வந்த கட்டுரை
கன்னடத்தில் : திருமதி ஜலஜா என். ராவ்
தமிழில் : திருமதி சுமதி ராவ்

***



பிரம்மாந்தா குருவஸ்ஸாக்‌ஷாத் இஷ்டம் தைவ: ஶ்ரீய:பதி:
ஆச்சார்ய: ஶ்ரீமதாசார்யா: சந்துமே ஜன்ம ஜன்மனி

ஆன்மீக வானத்தில் ஜொலிக்கின்ற தத்வவாத நட்சத்திர மண்டலத்திற்கு ஶ்ரீமன் மத்வாச்சார்யார் சூரியனைப்போல திகழ்கிறார். அவர் உதித்ததால், வாடியிருந்த வைணவ தாமரைகள் மலர்ந்து நின்றன. அவற்றின் நறுமணம் திசைகள் எங்கும் பரவியதில் வைணவ உள்ளங்களில் உல்லாசமும் பக்தியும் நிறைந்து வழிந்தன. கருகி விட்ட வைணவ கொடி, ஆசார்யரின் தேஜோமயமான உஷ்ணத்தால் மீண்டும் பசுமை நிறைந்து, நியாயமான தத்துவங்களின் ஆதரவு பெற்று மிக அழகாக காணப்பட்டது.

ஶ்ரீமத்வாசார்யார் தோன்றிய காலத்தில் மக்கள் தத்துவ சாஸ்திரங்களின் நிஜமான பொருள் புரியாமல் சந்தேகங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள். பரமாத்மாவையும் அவன் உண்மையான அடையாளத்தையும் அறிந்து கொள்ளாமல், நடைமுறையில் இருந்த பழக்க வழக்கங்களே எல்லாவற்றிற்கும் தீர்வு என்று தவறாக நினைத்து பிரமித்திருந்தனர். நாத்திக வாதமும் தலை தூக்க ஆரம்பித்த நேரத்தில் சூன்ய வாதமும் ஒரு மதம் என்ற எண்ணம் கோலோச்சிக் கொண்டிருந்தது.

இந்த இருண்டு போன சமூகச்சூழலில் ஆசார்யார் தோன்றி ஆன்மிக அழிவுக்கு காரணமான உலக மரத்தின் வேரை ஆராய்ந்து, அதற்கு தீர்வு பக்தி மார்க்கம்தான் என்று முடிவுக்கு வந்தார். சனாதன தர்மத்திற்கு மறுவாழ்வு அளித்து அதை மீண்டும் நிறுவினார்.

பரமாத்மா சர்வ வல்லமை படைத்தவன். எல்லா ஜீவராசிகளும் அவனின் தாசர்கள். கண்ணிற்கு புலப்படும் இந்த உலகம் நிஜம். ஆனாலும் படைத்தல் காத்தல் அழித்தல், ஞானம், பந்தம், மோக்ஷம் இவற்றிற்கு பரமாத்மாவே காரணம் . அவன் ஞானானந்தமான அழகான வடிவுள்ளவன். அவன் எல்லா நற்குணங்களும் நிறைந்தவன். அவனுக்கு வடிவமுண்டு. இத்தகைய பரமாத்மாவை ஆராதித்து அவனின் எள்ளளவு கருணையால் மட்டுமே மனிதர்கள் விரும்பிய எல்லாவற்றையும் பெறலாம். 

இதற்கு ஒரே வழி பக்திதான். அபார பக்தியால் மட்டுமே அவனின் கருணை பெற முடியும். பரமாத்மாவின் அற்புதமான விவரிக்க இயலாத மகத்தான காரியங்களை அறிவதன் மூலம் பக்தி வலுவடையும்.மனைவி - குழந்தை - உற்றாரிடம் கொள்ளும் பாசத்தை விட பரமாத்மாவிடம் அதிகமான பாசம் கொண்டு மனிதன் தன் கடமைகளை பற்றற்று செய்ய வேண்டும். பொருட்களிலிருந்து கிடைக்கும் சுகம் நிரந்தரமில்லை என்று அறிந்து, கடமை நிறைவேற்றுவது போல் வாழ்க்கையை நடத்தி அதன் பலனை பரமாத்மாவிற்கு சமர்பித்து, சுயநலமற்ற வழியில் நடந்தால் மனிதனின் அகம்பாவம் அழியும். உள்மனம் சுத்தமாகும், பரமாத்மாவில் நிலைக்கும். இதற்கு மாறாக நடந்தால் விருப்ப வெறுப்புகளின் ஈர்ப்புக்கு பலியாகி, மமதையில் சிக்கி தீய எண்ணங்களுக்கு அடிமையாகி பிறப்பு இறப்பு சக்கரத்தில் மாட்டிக்கொண்டு நரக வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார். 

ஹரிதாஸ சாகித்ய மஹாவித்யாலயா தங்களின் 20வது ஆண்டு விழாவை கொண்டாடுவது சந்தோஷமான விஷயம். இன்னும் நிறைய மாணவர்கள் சேர்ந்து தங்களின் ஹரிதாச இலக்கியத்தை பரப்பும் காரியம் அபாரமாக முன்னேற பிரார்த்திக்கிறேன்.

ஜலஜா என். ராவ்
முன்னாள் மாணவி
பெங்களூரு.

***

No comments:

Post a Comment