Thursday, June 15, 2017

மாத்வ சம்பிரதாயத்தில் அசம்பிரதாயங்கள் - Part One


மாத்வ சம்பிரதாயத்தில் அசம்பிரதாயங்கள் - Part One

2011ம்  ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம்
கன்னடத்தில் : ஹாரதி பிரகலாத்தாச்சார்
தமிழில் : T. V. சத்ய நாராயணன்

இங்கு புத்தகத்தின் முதல் பகுதி மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதி தனியாக வரும்.



***

கன்னடத்தில் 'சாதனே' என்பதை தமிழில் சாதனை அல்லது நற்செயல்கள் என்று மொழி பெயர்த்திருக்கிறேன். அவ்வாறே நினைவில் இருத்திக்கொண்டு மேற்கொண்டு படிக்கவும்.

சிஷ்யர்: குருவே, சாதனை / நற்செயல்கள் என்றால் என்ன? தயவு செய்து சற்று விளக்கவும்.

குரு: 'பகேகாணே என்னபஹுதே?' (BagekaaNa Ennabahudhe?) என்பது ஹரிதாசர்கள் வாக்கு.

சாதனை என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. நாம் நம் சித்தாந்தத்தின் வழிமுறைகளுக்கேற்ப பார்க்கவேண்டும்.

சிஷ்யர்: அப்படியென்றால், நம் சம்பிரதாயப்படி சாதனை என்றால் என்ன? எதுவெல்லாம் சாதனை? எதுவெல்லாம் சாதனை இல்லை?

குரு: தெரிந்து கொள்ளவேண்டும் என்று நீ கேட்ட இக்கேள்வியே ஒரு சாதனை ( நற்செயல்) தான். விடை கிடைத்தபிறகு, அவ்விடையை ஆராய்ந்து, அதன்படி நடப்பதும் ஒரு சாதனைதான்.

சிஷ்யர்: சரியாகப் புரியவில்லை குருவே. சிறிது விளக்கவும்.

குரு: காலை எழுந்தது முதல், இரவு படுக்கப் போகும் வரை செய்யும் வேலைகள், எப்படி பொழுது போக்குகிறோம் - இப்படி அனைத்திலும் சாதனை செய்யவேண்டும். அதையும், அனைத்து செயல்களையும், ஸ்ரீஹரியின் நினைவுடன், அவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவே சாதனையின் விதி.

1. விடியலில் எழுந்து கொள்வது ஒரு நற்செயல். எழுந்ததும், முகத்தைக் கழுவிக்கொண்டு, துளசிச் செடிக்கு நீர் ஊற்றி, அதிலிருக்கும் மிருத்திகையை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும்.

2. பிறகு, பசு & நவக்கிரக தேவதைகளை நினைத்துக் கொண்டு, ஸ்நானத்திற்குச் செல்ல வேண்டும்.

3. சங்கல்பம் செய்து கொண்டபிறகே ஸ்நானம் செய்ய வேண்டும். சங்கல்பம் செய்யாமல் ஸ்நானம் செய்தால், அந்த ஸ்நானத்திற்கு பலன் இல்லை.
முக்கியமான செய்தி: எந்தெந்த வேலைகளைச் செய்தால் எவ்வளவு புண்ணியம் வரும், எவ்வளவு பாவம் வரும் என்று தெரிந்து கொள்வதற்கு எந்த வழியும் இல்லை. ஆனால், மனிதன் தான் வாழும் காலத்தில் நற்செயல்களையே செய்ய வேண்டும். நற்செயல் செய்யும்போது ஸ்ரீஹரியின்
நினைவு இல்லாமல் செய்தால், பாவம் வந்து சேரும். ஸ்ரீஹரியை நினைத்தவாறே செய்தால், புண்ணியம் என்பது ஞானிகளின் வாக்கு. அதுமட்டுமல்லாமல், எந்தச் செயலை செய்தாலும், நமக்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

4. மூன்று வேளையும் சந்தியாவந்தனம், ஜபம், பாராயணம் செய்ய வேண்டும்.

5. தேவர பூஜை கட்டாயம் செய்ய வேண்டும். இதைச் செய்யவில்லையெனில், பாவம் வந்து சேரும்.

6. பூஜை முடிந்த பிறகு, நைவேத்தியம், வைஸ்வதேவம் & ஹஸ்தோதகம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

7. மனதை நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் (வைத்து மேற்படி பூஜை செய்ய வேண்டும்).

8. இப்படி செய்யாமல், மனம் போன போக்கில் (பூஜை செய்யாமல்) இருந்தால், பாவம் வந்து சேரும்.

9. விடுமுறை நாட்களிலாவது மூன்று வேளை சந்தியாவந்தனம், பூஜை, நைவேத்தியம் இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். இவையே புண்ணியம் சேர்ப்பதற்கான வழி.

10. பகவானின் கதைகளை தினந்தோறும் சிறிது நேரமாவது கேட்க வேண்டும்.

11. ஞானகார்யங்கள் (ஹோமம், உபன்யாசங்கள்) எங்கு நடந்தாலும் அங்கு கட்டாயம் போய் பங்கேற்க வேண்டும். உபன்யாசங்களைக் கேட்பதே நற்செயல் ஆகும். நம்மில் பலருக்கு இந்தப் பழக்கமே இல்லை. இதை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

12. சமயம் கிடைக்கும்போதெல்லாம், நம் மடத்தைப் பற்றி, நம் சித்தாந்தத்தைப் பற்றி, நம் சம்பிரதாயங்களைப் பற்றி, நம் குரு பரம்பரையைப் பற்றி, தகுதியானவரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும்.

13. நம் சம்பிரதாயத்தின் சின்னங்களை (கோபிசந்தனம், அங்கார & அக்‌ஷதை) தவறாமல் இட்டுக் கொள்ள வேண்டும். அவற்றை இட்டுக் கொண்டவர்களை பார்த்து பரிகாசம் செய்வது பாவச் செயலாகும்.

14. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும்.

15. திருமணம், உபநயனம், சிரார்த்தம், ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், அவற்றிற்கு உதவி புரிவதும் நற்செயல்.

16. மேற்படி விஷயங்களை நாமே செய்வது (ஆராதனை, பஜனை) மிகவும் உத்தமமான செயலாகும்.

17. கோபிசந்தனம், ஸ்ரீ வாதிராஜரின் மிருத்திகை, சந்தனம், அங்கார, அக்‌ஷதை இந்த சின்னங்களை இட்டுக் கொள்வது வைஷ்ணவ சித்தாந்தத்தின் விதிகள் ஆகும். பின்பற்ற வேண்டியது அவசியம்.

18. சாலிகிராமம், தந்தை, தாய், குரு, துளசி, நதி, கடல், அரச மரம் - இவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுத்து, இவர்களில் கடவுள் பிரத்யட்சமாக இருக்கிறான் என்று தெரிந்து கொள்வது அவசியம்.

19. சட்டை, ஜிப்பா இவைகளை விட்டு, துண்டு (உத்தரியம்) போர்த்திக் கொண்டு உணவு உண்ணல் வேண்டும். இதை மூன்று மடத்து மக்களும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

20. இறைவன், தர்மம், சம்பிரதாயம், (ஹரி, வாயு) குருகளிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பது மிகவும் உத்தமமான செயல்.

21. நைவேத்தியம் இல்லாத உணவை உண்டால், பாவம் வந்து சேரும்.

22. சட்டை, பேண்ட், பனியன் ஆகியவற்றை அணிந்து உணவு உண்ணுதல், மேஜை மேல் அமர்ந்து உண்ணுதல் - இவை நரகப் பிராப்தி தரும் பாவச் செயலாகும்.

23. பள்ளி, கல்லூரி, அலுவலகம், கோயில் இவற்றிக்குப் போகும்போது / வரும்போது, ஸ்ரீகிருஷ்ணரை நினைத்தவாறே இருக்க வேண்டும். ஓம் பூர் புவஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: பிரசோதயாத் - என்று எந்நேரமும் ஜபித்தவாறே இருக்கவும். இதுவே உத்தமமான செயலாகும்.

24. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் தர்மம், கர்மம் மற்றும் மடத்தைப் பற்றி அதிக விவரங்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான செயலாகும்.

25. வாழ்க்கையில் சந்திக்கும் பல மனிதர்களை உற்றுப் பாருங்கள். அவர்கள் செய்யும் நற்செயல்களை கவனியுங்கள். இது அவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியம்? எப்படி செய்கிறார்கள்? எனக்கு ஏன் செய்ய முடியவில்லை? எப்படி செய்வது? என்று எண்ணி, சரியான விஷயங்களை மட்டும் செய்யத் தொடங்குங்கள். நாம் செல்லும் வழிக்கு இதுவும் முக்கியமான செயலாகும்.

26. நாம் உண்ணும் சமையல் முழுவதும் ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிக்க முடியாமல் போனாலும், குறைந்த பட்சம் ஒரு சிறிய அளவில் அன்னத்தை வைத்து, சந்தியா / பூஜை வேளையில், அதை ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிக்கவும். அந்த அன்னத்தை உணவில் சேர்த்துக் கொள்ளவும். மனமிருந்தால், இது அனைவருக்கும் சாத்தியமே. இது ஒரு பெரிய நற்பலன்களைக் கொடுக்கக்கூடிய நற்செயல்.

27. நம் முன்னோர்கள், தாசர்கள், பீடாதிபதிகள் நமக்கு அளித்திருக்கும் நல்ல விஷயங்களைப் (புத்தகங்கள், பாடல்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியன) பற்றி நினைத்துப் பாருங்கள்.

28. அவர்களின் கிரந்தங்களைப் படியுங்கள், பாடல்கள், ஊகாபோகங்கள், சூளாதிகளை தெரிந்து கொள்ளுங்கள், கற்றுக் கொடுங்கள்.

29. விஷயம் தெரிந்தவர்கள் யாரேனும் அருகிலிருந்தால், உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளுங்கள். தெரியாதவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவற்றில் உள்ள கருத்துக்களை புரிந்து, நடைமுறைக்குக் கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள்.

30. சிறிய (மாத்வ சம்பிரதாயத்தில் வராத) கடவுளர்களுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டாம்.

31. சிறிய கடவுளர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியம், ஆகாரம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

32. எல்லா (சிறிய) கடவுள்களும், ஸ்ரீஹரி ஆக முடியாது. எல்லாம் அவன் நைவேத்தியம் ஆக முடியாது. இதை அறிந்து கொள்ளல் மிக அவசியம்.

33. எனக்கு எதுவும் தெரியவில்லை, புரியவில்லை என்பவர்கள், ஸ்ரீ ராகவேந்திரரின் படத்தை வைத்து, அவரை தினமும் வணங்கி வந்தால், அவர் கண்டிப்பாக வழிகாட்டுவார்.

34. வெட்டியாக பொழுதை கழிக்க வேண்டாம். யமராஜன் எப்போழுது வருவான் என்று யாருக்கும் தெரியாது. தொலைக்காட்சி பார்த்தவாறு காலத்தைக் கழிக்க வேண்டாம். இது பாவத்தை சம்பாதிக்கும் செயல்.

35. நாய் வளர்க்க வேண்டாம். அதற்கு செலவாகும் பணத்தை, கோசாலை இருக்கும் இடத்தில் கொடுத்து விடுங்கள். பசுவைக் காப்பற்றியதற்கான புண்ணியத்தில், வைதரிணி நதியை சுலபமாகக் கடக்க முடியும்.

36. நாய் வளர்த்து வந்தால், அது நரகத்திற்கே வழி வகுக்கும். இதைத் தவிர, அடுத்த ஜென்மத்தில், நாமும் நாயாகவே பிறக்க நேரிடும் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை.

37. மனதை விட பெரியது எதுவும் இல்லை. நமக்கு மனம் இருந்தால், சன்மார்க்கத்தில் ஈடுபட முடியும்.

38. 3 வேளை சந்தியாவந்தனம் செய்ய முடியவில்லையெனில், 2 வேளையாவது செய்யவும். 2 வேளை, முடியவில்லையெனில், 1முறையாவது செய்யவும். அதுவும் முடியவில்லையெனில், மும்முறை அர்க்யம் & 10 காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்.

39. தற்போது 1முறை சந்தியாவந்தனம் செய்பவர்கள், 2 முறை செய்யவும். 2 முறை செய்பவர்கள் மும்முறைக்கு முயற்சிக்கவும். இவை, ஸ்ரீகிருஷ்ணா வங்கியில் பணத்தைப் போட்டு வைப்பதைப் போல், வளர்ந்து வரும்.

40. 1முறை சந்தியாவந்தனம் செய்பவர்கள், 12 அர்க்யம் & 32x3=96 முறை காயத்ரி ஜபம் செய்யுங்கள்.

41. ஸ்நானம் செய்யும்போது நீர் - ஜடம். நாமும் ஜடம். அதனால், ஜடாபிமானி சங்கர்ஷண ரூபியாகிய ஹரியை நினைக்கவும். அவனுக்கு ஸ்நானம் செய்கிறேன் என்று நினைத்துக் கொள்ளவும். நல்ல பலன் கிடைக்கும்.

42. ஸ்ரீஹரிக்கு தீபம் ஏற்றும்போது, அதில் அவனின் 13 ரூபங்கள் உள்ளன என்று நினைத்துக் கொள்ளவும்.

43. ஸ்ரீ துளசியை சமர்ப்பிக்கும்போது, அதில் ஸ்ரீஹரியின் 5317 ரூபங்கள் உள்ளன என்று நினைத்துக் கொள்ளவும்.

44. பூக்கள் சமர்ப்பிக்கும்போது, அதில் ஸ்ரீஹரியின் 161 ரூபங்கள் உள்ளன என்று நினைத்துக் கொள்ளவும்.

45. நல்ல பூக்களை சமர்ப்பித்தால், நல்ல பலன் கிடைக்கும். பழைய / அழுகிய பூக்களை சமர்ப்பித்தால், அதற்கேற்ற பலனே கிடைக்கும்.

46. சமர்ப்பிக்கத் தகுந்த பூக்கள் : மல்லிகை, ஜாதி, செவ்வந்தி, அலரி, சம்பங்கி, தவனம், குலாபி, பாரிஜாதம், நந்தியாவட்டை, மரு, மனோரஞ்சிதம், சங்க புஷ்பம் ஆகியவை.

47. சமர்ப்பிக்கப் படக்கூடாத பூக்கள்: சாமந்தி, எருக்கம்பூ ஆகியவை.

48. இதைப் போலவே செடிகளிலும் சமர்ப்பிக்கத் தகுந்த பூக்களையே வளர்க்க வேண்டும்.

49. யாருக்கு நைவேத்தியம் செய்கிறோமோ, அவருக்குள் பிம்ப ரூபியாக (அந்தர்யாமியாக) இருக்கும் ஸ்ரீஹரிக்கே நைவேத்தியம் செய்கிறோம் என்ற சிந்தனை வரவேண்டும்.

50. ஸ்ரீஹரி, சாலிக்கிராமத்தில் 5535 ரூபங்களில் இருக்கிறார்.

51. ஸ்ரீஹரி, பிரதிமைகளில் 513 ரூபங்களில் இருக்கிறார்.

52. ஸ்ரீஹரி, தண்ணீரில் 24 ரூபங்களில் இருக்கிறார்.

53. ஸ்ரீஹரி, சந்தனத்தில் 403 ரூபங்களில் இருக்கிறார்.

54. பூஜைக்குப் பயன்படுத்தும் பொருட்களில் (பாத்திரங்களில்) ஸ்ரீஹரி 52115 ரூபங்களில் இருக்கிறார்.

55. வீட்டில் இருக்கும் ஸ்ரீஹரிக்கு (சாலிக்கிராமத்திற்கு) ஐந்து கிராம்’ல் தங்க ஆபரணம் செய்து அணிவிப்பது சிறப்பு.

56. ‘நான்’ என்னும் அகங்காரத்தை விட்டு, ‘நீ’ (ஸ்ரீஹரி) என்னும் சிந்தனை மிகவும் நல்லது.

57. ஸ்ரீஹரியின் ரூபங்கள் பல உள்ளன. ஆகையால், அவை எல்லாவற்றிலும் அவன் வேறு வேறாக (தனித்தனியாக) உள்ளான் என்று நினைக்கக்கூடாது.

58. பகவானின் எல்லா ரூபங்களும் ஒன்றே என்பது நற்சிந்தனை. மூலரூபியாத ஸ்ரீலட்சுமி நாராயணனே, கிருஷ்ணன், நரஹரி, பஸ்சிம ரங்கனாதன் என்று பல ரூபங்கள் எடுத்துள்ளான் என்று தெரிந்து கொள்வது மோட்சத்திற்கான சாதனை.

59. ஸ்ரீஹரியின் மூல பிரதிமைகளைப் பார்க்கும்போது, ‘முக்யப்ராணாந்தர்கத ஸ்வபிம்பனாத ஸ்ரீஹரி’ என்று நினைத்து நமஸ்கரிக்க வேண்டும்.

61. நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், குளிக்கும் தண்ணீர் இவை அனைத்தும் நம் இதயத்தில் அந்தர்யாமியாக  இருக்கும் ருத்ராந்தர்கத, முக்யப்ராணாந்தர்கத ஸ்ரீஹரிக்கு நைவேத்தியம் என்று சமர்ப்பணம் செய்யுங்கள். மனதிற்கு மிகவும் ஆனந்தம் அளிக்கும் செயலாகும் இது.

62. வெயில், மழை, காற்று, குளிர் ஆகிய காலங்களை திட்டக்கூடாது. அந்த காலங்களில் ஸ்ரீஹரியின் மகிமைகளை நினையுங்கள். அதுவே புண்ணியம். அவற்றைத் திட்டினால் பாவம் வந்து சேரும்.

63. கர்வத்தை அழித்தவர்கள் மகா யோகி எனப்படுவார்கள். ஆனால், சில மடாதிபதிகள், தங்கள் கர்வத்தை விடமுடியாமல், தங்கள் பேரர்களுக்கு ஆசிரமம் கொடுத்துப் போவது, எப்படி சரியான விஷயமாகும்? சிந்தியுங்கள். இது நரகத்திற்கான சாதனையே ஆகும்.

64. ஸ்ரீஹரியின் மேல் இருந்த ஆசையை விட்டு, பெண்ணின் மேல் ஆசை கொண்டு, புனிதமான சர்வக்ஞ பீடத்தை விட்டு வெளியே வந்து, சம்சார சாகரத்தில் வீழ்வது எப்படி சாதனையாகும்?

65. ஏனு மாடித கர்மகளு, லக்‌ஷ்மி நிவாஸனிகர்பிஸலு, சந்தான பூர்வதிந்த சந்தேஹிசத தினதினதி - நாம் எதைச் செய்தாலும், அதை எவ்வித சந்தேகமும் படாமல், உடனடியாக, ஸ்ரீ லக்‌ஷ்மி நிவாஸனாத ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

66. ஒரே குடும்பத்தைச் (ஒரே விதமான) சேர்ந்த பொருட்களில் - அவற்றிற்குள் தலை சிறந்த பொருளில் இருக்கக்கூடிய ஸ்ரீஹரியின் ரூபத்தை ‘விபூதி ரூபம்’ என்று அழைக்கிறார்கள்.

67. பசு, பிராமணன், பெண், யானை, புலி, சாலிகிராமம், அரச மரம், சன்யாசி, நதி, கடல், முனிவர், கோயில் - இவர்களில் ஸ்ரீஹரியின் விசேஷ குணங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

68. இவற்றில் இரண்டு விதங்கள் உண்டு.
அ. பிரத்யட்சமாக கண்ணில் தெரியும் விபூதி ரூபங்கள்: கபில, வியாச, கிருஷ்ணன் முதலியவை, ரமா, பிரம்மா முதலான ஜீவர்கள்.
ஆ. கண்ணிற்குத் தெரியாமல் மறைந்திருக்கும் விபூதி ரூபங்கள். இவற்றை ‘திரோஹித விபூதி ரூபம்’ என்கிறார்கள். ரமா, பிரம்மா முதலானவர்களில் அந்தர்யாமியாக மறைந்திருக்கும் ஸ்ரீஹரியும் ரூபம்.

69. எச்சில், மடி, விழுப்பு இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள் வேண்டும்.

70. இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளாதிருந்தால், அதுவே பாவத்தைக் கொண்டு வரும் செயல். இன்று இல்லாவிட்டாலும் பின்னர் ஒரு நாள் கெட்ட பலனைக் கொண்டு வரும். இது ஞானிகளின் வாக்கு.

71. கலியுகத்தில் மனிதனின் ஆயுள் சுமார் 100 ஆண்டுகள் என்று ஞானிகள் கூறியுள்ளனர். ஆண்டிற்கு 360 நாட்கள். ஆக, 360x100= 36000 பகல் மற்றும் 36000 இரவுகள். மொத்தம் 72,000. நம் உடலில் உள்ள 72,000 நாடிகளுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

72. நம் உடலில் உள்ள இந்த 72,000 நாடிகளில், இடது & வலது பாகத்தில் தலா 36,000 ஆக உள்ளது என்று தெரிந்து கொள்ளவும்.

73. ஜீவர்களுக்கு கஷ்டம், சுகம், நோய், சுகவீனம் இவையெல்லாம் எப்படி வருகின்றன? அந்தந்த ஜீவர்களின் யோக்யதை, குணம், அவர்கள் செய்த நற்செயல் ஆகியவையே இவற்றை தீர்மானிக்கின்றன.

74. இந்தப் பிறப்பை கொடுத்தது நீயே. ஆகவே, என்னை நற்செயல்களை செய்ய வைப்பதும் உன் கடமையே - என்று ஸ்ரீஹரியை வேண்டுவது வேண்டும்.

75. ஸ்ரீஹரியிடத்தில் எப்போதும் ஞான, பக்தி, வைராக்கியத்தையே கேட்க வேண்டும்.

76. ஒவ்வொரு ரூபத்திலும் அனந்த ரூபியாக ஸ்ரீஹரி இருக்கிறான். இது சாத்தியமா என்றால் சாத்தியமே. ஞானிகளின் வாக்கில் நம்பிக்கை வைத்துப் பார்த்தால், இது சாத்தியம். ஸ்ரீஹரி, கண்ணிற்கு காணாமல் இருக்கிறான் என்பதால், சூக்‌ஷ்ம ரூபத்தில் நம் உடலில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

77. இது எப்படி சாத்தியம்? நம் தலையில் எவ்வளவு முடி இருந்தாலும், அவை எப்போதும் தனித்தனியே நிற்கின்றன அல்லவா? அனைத்தும் சேர்ந்து கலந்து விடுவதில்லை. அப்படியே, அந்தர்யாமியான ஸ்ரீஹரியும் நம்முள் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

78. இந்த உடலில் 72000 நாடிகள் இருந்தாலும், அவை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணையாமல் தனித்தனியாக இருப்பதை போல், ஸ்ரீஹரியும் பல்வேறு ரூபங்களில் இருக்கிறான்.

79. நற்செயல்களை செய்ய வேண்டும் என்று நாம் முடிவெடுத்து விட்டால், அதற்கான வழிமுறைகளை, அது சிறியதோ பெரியதோ - மற்றவரின் உதவியை எதிர்பாராமல், நாமே செய்வது உத்தமமான செயலாகும்.

80. எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை நாடுபவர் எப்படி நற்செயல்களை செய்ய முடியும்? நாம் தேவர பூஜை செய்யவேண்டுமென்றால், நாமே இடத்தை சுத்தம் செய்து கொண்டு, கோலம் போட்டு, பூ / துளசி கொண்டு வந்து, குளித்து, நைவேத்யத்திற்கு அன்னம் தயார் செய்து கொண்டு, பூஜையை செய்ய வேண்டும். இதுவே உத்தமமான செயல். அனைவரும் இப்படியே சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால், தங்க மழையையும் பெய்யச் செய்யலாம்.

81. (பூஜை முதலியன செய்வதற்கு) மனைவி ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லக்கூடாது. நம் கடமையை நாமே செய்ய வேண்டும்.

82. கேட்டுக் கொண்டவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அவற்றில் மேலதிக ஆராய்ச்சி, சிந்தனை, விமர்சனம் ஆகியவற்றை செய்ய முயன்றால் அதுவே சாதனை.

83. உடம்புக்கு முடியவில்லை, கண் தெரியவில்லை, காது கேட்கவில்லை என்று சொல்லி எதையும் செய்யாமல் இருப்பது சாதனை அல்ல. ஓரிடத்தில் உட்கார்ந்து யாரிடத்திலும் பேசாமல், எப்போதும் காயத்ரி ஜபம், லக்‌ஷ்மி ஜபம், ராமகிருஷ்ண, தன்வந்திரி, லக்‌ஷ்மி நரசிம்ம நாமம் ஜபம் செய்யவும். மிகவும் உத்தமமான சாதனை.

84. பூஜையறையில் எப்போதும் தீபம் எரியுமாறு பார்த்துக் கொள்ளவும். இது இல்லாமல் சாப்பிட வேண்டாம்.

85. வாழ்க்கைக்கு, தர்மத்திற்கு, சம்பிரதாயத்திற்கு எவ்வளவு மடி தேவையோ அவ்வளவே செய்ய வேண்டும். இதற்கு அளவுகோல் கிடையாது. பலர் பலவிதமாக மடி செய்கின்றனர். மடி எதற்கு செய்கிறோம்? இதற்கான பதிலை அறிந்து செய்தால், அதிக பலன். பைத்தியக்காரத்தனமாக எப்போதும் மடி, மடி என்று இருந்தால், அது அந்த ஸ்ரீஹரியையே மறக்க வைத்துவிடும். பிறகு
நற்பலன் எப்படி கிட்டும்?

86. அவரவர் சித்தாந்தத்தின் பொருளை தெரிந்து கொள்ளல், அவரவர் மடாதிபதிகளின் கிரந்தங்களை படித்துத் தெரிந்து கொள்வது ஒரு நற்செயல்.

87. ஒவ்வொரு கிரந்தங்களாக படித்துத் தெரிந்து கொள்வது உத்தமமான சாதனை.

88. அனைத்து ஜீவரிடத்தும் ஸ்ரீஹரி அந்தர்யாமியாக இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

89. அனைவரின் பிம்பமே என் பிம்பமும். என் பிம்பமே அனைவரின் பிம்பம் என்ற சிந்தனை எப்போதும் நமக்கு இருக்க வேண்டும்.

90. பூஜையறையில் பூஜை செய்யும்போது மட்டுமே ஸ்ரீஹரியை நினைப்பது கூடாது. நாள் முழுவதும், நாம் செய்யும் அனைத்து வேலைகளின் போதும், அவனை நினைப்பது உத்தம சாதனை.

91.ஆசையே துன்பத்திற்குக் காரணம். பேராசை படவேண்டாம். கஞ்சத்தனம் கொண்டவன் சமூகத்தில் மதிப்பு இழப்பான்.

92. நைட்டி, சுடிதார், சட்டை, பேண்ட் ஆகியவை அணிந்து கொண்டு பெண்கள் நமஸ்கரிக்கக் கூடாது. ஸ்ரீஹரி வாயு குருகளின் சன்னிதானத்தில் என்ன ஆடை அணிந்து கொண்டு போகவேண்டுமோ, அவற்றை அணிவதே நற்சாதனை ஆகும். இந்துக்கள், இஸ்லாமியர்களைப் போல் வேடமிட்டு நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

93. இந்த காலத்தில் பெண்கள், வளையல், பூவுடன் சடை, குங்குமம் அணிவதை விரும்புவதில்லை. இவைகளை தவிர்ப்பது நரகத்திற்கான வழியே ஆகும். ஒருவேளை வருங்காலத்தில் விதவைக் கோலம் பூண நேர்ந்தால், அதற்காக இப்போதிருந்தே தயார் ஆகிறார்கள் என்று கொள்ளலாமா?

94. வீட்டில் முழு நாளும் படுக்கை விரித்து வைப்பது தவறான செயலாகும். அலங்காரமான படுக்கை, மெத்தை ஆகியவற்றை வாங்கி, அதை மடிக்காமல் பயன்படுத்துவது நாகரிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த செயல்களை தவிர்த்தால் அனைவரின் இல்லங்களிலும் ஆரோக்கியம் மேம்படும். செல்வம் பெருகும்.

95. இன்றைய காலத்தில் ஆண் பெண்கள் அதிகமான சம்பளம் பெறுவதால், தம் பேச்சைக் கேளாத பெற்றோரையே வேண்டாம் என்று தள்ளி வைத்துவிடுகின்றனர். துக்கத்தை நாமே வலிய வரவழைத்துக் கொள்ளும் செயலாகும் இது.

96. தம் மக்களை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காத பெற்றோர்களின் பாடு மிக்க கஷ்டமானதே. அதனால் அவர்கள் பிறகு செய்யும் கெட்ட செயல்களுக்கு, நாமே காரணம் என்று தோன்றுவதில்லையே, ஏன்?

97. எல்லா வேலைகளுக்கு நடுவிலும், சிறிது நேரம் கடவுளுக்கு ஒதுக்கி, அவரைப் பற்றி நினைத்தால், ஸ்ரீஹரி நம்மைக் காப்பாற்றுவான்.

98. நிறைய படித்து, மேன்மேலும் ஞானத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் ஆனந்தமான செயலாகும்.

99. புத்தகங்களை மனைவி போல் நேசியுங்கள். நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பரமானந்தத்தை அடையுங்கள்.

100. மனிதனாகப் பிறந்து, சும்மா உட்கார்ந்து உண்ணக் கூடாது. நமக்கு வயதாகிவிட்டது. ஏற்கனவே நிறைய செயல்கள் செய்துவிட்டோம் என்று நினைத்தால், அது தவறு. அதற்கு பதிலாக, உடம்புக்கு முடியாவிட்டால், உட்கார்ந்த இடத்திலேயே ஸ்ரீஹரியை நினைத்து, ஜபம் செய்யலாம். அரசாங்கத்திற்கு நாம் வரி கட்டுவதைப் போல், இறைவனின் பெயரைக் கூறி வணங்கி, அதை அவனிடத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும். இப்படி செய்தால் நமக்கு நன்மை வந்து சேரும். இப்பிறவியில் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.

101. குணம் என்றால் என்ன? நம் பார்வையில், பிறன்மனை நோக்காமல் இருப்பவரை, நற்குணம் கொண்டவர் என்று கூறுகிறோம். இது பொதுவான பதில். ஆனால், ஞானிகளைக் கேட்டால் - யாரொருவன், தினமும் குளித்து, சந்தியாவந்தனம், பூஜை ஆகியவற்றை செய்யாதிருக்கிறானோ, அவனே குணஹீனன் என்று கூறுவர்.

102. பெண்கள் தங்கள் கூந்தலை, பின்னாமலோ, ஜடை போடாமலோ - கத்தரித்துக் கொண்டால் அல்லது நீளமாக வீட்டுக் கொண்டால், அவர்கள் செய்த புண்ணியம் குறையும்.

103. ஆண்களுக்கு: Cutting, Shaving செய்த பிறகு, பாய்லர், கீசர் இவைகளைத் தொட்டு தாமே குளிக்காதீர்கள். இது பாவத்தைக் கொண்டு வரும். பிளாஸ்டிக் வாளி / சொம்பு இவைகளில் நீர் பிடித்து வைத்துக் கொண்டு, சவரம் செய்த பின்னர், பிடித்து வைத்த நீரில் குளித்து, பின்னர் கீசரிலிருந்து நீரைப் பிடித்து குளிக்கலாம். அல்லது இன்னொருவரை நீர் ஊற்றச் சொல்லி குளிக்கலாம். இதுவே நற்செயல்.

104. பெண்களுக்கு: அழகு நிலையத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழித்தாலும், அந்த ஸ்ரீஹரியின் அழகிற்கு இணையாக முடியாது. அழகு நிலையத்திலிருந்து நேராக திருமண நிகழ்ச்சிக்கு வந்து, அங்கிருக்கும் அனைவரையும் 'விழுப்பு' ஆக்கிவிடாதீர்கள். இது நரகத்திற்கு வழிவகுக்கும் செயல். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம். ஒருவரினால் பல பேருக்கு பாவம் வந்து சேரும்.

105. சாஸ்திரங்களைப் படிப்பது நற்செயல். நீங்கள் எந்த மொழி அறிந்திருந்தாலும், அந்த மொழியின் உதவியுடன் சாஸ்திரங்களை படிக்கவும்.

106. 100க்கு 80 பேர் கடவுள் மற்றும் தர்மத்தின் மேல் நம்பிக்கை வைப்பதில்லை. அதற்குப் பதில், மருத்துவர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர் சொல்கிறார் என்பதால் விடியலில் எழுந்து நடைப்பயிற்சிக்கும் கிளம்பிப் போகிறார்கள்.

107. அந்த சமயத்தில் (விடியலில்) குளித்து, சந்தியாவந்தனம், பூஜை செய்யலாமே என்றால், (மருத்துவர் சொல்படி) டயர் என்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு நரகமே பிராப்தி. இதிலிருந்து வெளியே வர முயலுங்கள்.

108.
1. நற்செயல்களை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. அவற்றை செய்ய முயற்சிக்க வேண்டும். இதுவே சாதனை அத்தியாயத்தின் சாரம் ஆகும்.

2. செய்யும் செயல்களின் பொருளை சரியாக தெரிந்து கொண்டு, அவற்றை செய்தவாறு, ஸ்ரீஹரியைப் பற்றி பாடிக் கொண்டிருப்பதே நற்செயல் ஆகும். இதுவே சமன்வய அத்தியாயத்தின் சாரம் ஆகும்.

3 . மேற்சொன்ன நல்ல விஷயங்களை நாம் செய்ய முற்படும்போது, பல்வேறு கஷ்டங்கள், இடர்கள், துக்கங்கள் வரலாம். அவற்றை எப்படியாவது களைந்து கொண்டால், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், இதுவே அவிரோத அத்தியாயத்தின் சாரம் ஆகும்.

4. எந்தவொரு செயலும், ஸ்ரீஹரியின் விருப்பத்தால் செய்து, ஸ்ரீஹரிக்கு ப்ரீத்தி (ஆனந்தம்) ஆகட்டும் என்று செய்து முடித்தால், அதற்கான நற்பலன்கள் வராது என்று சொல்ல முடியுமா? பலன்களை எதிர்பாராமல், பலன் மேல் ஆசை கொள்ளாதிருந்தால் நற்பலன்கள் வரும் - இதுவே பலஅத்தியாயத்தின் சாரம்.

மேற்கண்ட சிந்தனைகளை தொடர்ந்து வளர்த்து வந்தால், அதே வாழ்க்கையின் விதிகள் எனலாம். இப்படிப்பட்ட சிந்தனைகளை அனைவருக்கும் வர வேண்டும் என்பதே நம் சிந்தனை. இவை நிஜமாக நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்பதில் சந்தேகமென்ன?

குருவே, சாதனை என்றால் என்னவென்று இப்போது புரிந்தது. நன்றாக விளக்கிச் சொன்னதற்கு நன்றி. இன்னும் வேறு ஏதாவது கேள்வி இருந்தால், பிறகு கேட்கிறேன்.

சரி, போய் வாருங்கள். இப்போது சொன்னவற்றை பழக்கத்திற்கு கொண்டு வர முயலுங்கள்.

சுபமஸ்து.

***




No comments:

Post a Comment