Wednesday, August 16, 2017

ஸ்ரீமுத்துமோகனவிட்டலதாசர் - பாகம் ஒன்று

ஸ்ரீமுத்துமோகனவிட்டலதாசர் - பாகம் ஒன்று

ஸ்ரீமுத்துமோகனவிட்டலதாசர்
தொட்டபெல்லாபுரத தாசர்
ராகவேந்திர தாசர்

என்று பல பெயர்களால் அழைக்கப்படும் தாசரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு, இங்கே பாகம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் இயற்றிய பாடல்கள், உகாபோகங்கள் அடுத்த பாகத்தில் வரும்.

கன்னட மூலப் புத்தகத்தின் முன் அட்டை


**

கன்னட முலம்: திரு.A.N. அனந்தஸ்வாமி ராவ். இவரது அங்கிதம் அனந்தவிட்டலா.
வெளியிட்டவர்கள்: தாச கூட சபா, தேவராயனதுர்கா
தமிழில்: திருமதி. ஜெயஸ்ரீ ராம்
சரிபார்த்தல்: T.V.சத்ய நாராயணன்
தமிழில் மொழிபெயர்த்து, தளத்தில் வெளியிட அனுமதி அளித்தவர்: திருமதி. சுபத்ரா, தாச கூட சபா. இவர் தந்தேமுத்துமோகனவிட்டலதாசரின் வம்சத்தை சேர்ந்தவர்.

பதிப்பாளர், விலை மற்றும் இதர விவரங்கள்


**

கி. பி. 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தென் கர்நாடகத்தில் ஹரிதாச மார்க்கம் சற்று சரிவடைந்திருந்தது. அதை மறுபடியும் உயிர்ப்பித்து வலுவான அடித்தளத்தின் மேல் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இருந்தது.  இந்த சமயத்தில்தான் முத்துமோகனதாசரின் அவதாரம் ஆனது.  

பெங்களூர் ஜில்லா, தொட்டபெல்லாபுரம் என்ற ஊரில் மாத்வ வைஷ்ணவ பாஷ்டிக வம்சத்தில் ஹூலுபண்டெ குடும்பத்தவரான, வசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த ராகவேந்திரப்ப தம்பதிகள் வசித்து வந்தனர்.  மைசூர் ராஜ்யத்தின் முதல் குடியுரிமையாளராக நியமனம் செய்யப்பட்ட க்லோஸ் ஸாஹேபருக்கு (Close Saheb) மிகவும் வேண்டிய எழுத்தராக (clerk) ராகவேந்திரப்பன் இருந்ததாக தெரிகிறது.  பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட க்லோஸ் ஸாஹேப், ராகவேந்திரப்பனை தனது கீழ் அதிகாரியாக நியமித்தார். ராகவேந்திரப்பன், தனது அரசு வேலை நிமித்தம் பாரத தேசத்தை மூன்று முறை சுற்றி வந்து, பல கிரந்தங்களை சேகரித்து, தன்னுடைய பயணத்தில் தினமும் எழுதிய நாட்குறிப்புகளிலிருந்து, “ஸாரஸ்வத பரிணய” என்ற காவியத்தை இயற்றியதாக தெரிய வருகிறது.  

தாசகூட சபாவினர் நிர்மாணித்திருக்கும் தாசரின் சிலை வடிவம்


அதே வம்சத்தில் சுமார் கி. பி. 1830ல் ராகவேந்திரதாசர் பிறந்தார். இவருடைய தாய், தந்தை பற்றிய விவரங்கள் தெரியவில்லை.  ராகவேந்திரப்பன் தன் குலத்திற்கேற்ப கல்வி மற்றும் சாஸ்திர பாடங்களை கற்றிருந்தார். ஹரிதாசர்களின் பாடல்களினால் உந்தப்பட்டு பகவானின் நாமாக்களை சரளமாக பாடிக் கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.   

ராகவேந்திரப்பனுக்கு சுமார் 18 வயதானபோது இவரது தாய் தந்தையர் காலமாகி விட்டனர்.  பன்னிரண்டு வயதான தனது தம்பி வெங்கடராயனை வளர்க்கும் பொறுப்பு அவரைச் சேர்ந்தது.  எந்த குறிக்கோளும் இல்லாமல் வழி தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருந்த ராகண்னுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து, அவனுடைய உறவினர்கள் அவர்களிடம் இருந்த ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினர்.  ஆனால் ராகண்ணனோ வைராக்கியசாலியாக இருந்து, பிறவியிலேயே பார்வையற்ற அக்கண்ணம்மை என்ற பெண்ணை நல்ல எண்ணத்தில் திருமணம் புரிந்தார். பார்வையற்ற மனைவியே ஆனாலும், அவர் பக்கம் ராகண்ணன் திரும்பியே பார்க்கவில்லை. கடைசி வரை பிரம்மச்சர்யத்தை கடைப்பிடித்தார். இதற்கு அவரது மனைவியும் அனுகூலமாக இருந்ததாக தெரிகிறது.  

தொட்டபெல்லாபுரத்தின் ஸ்ரீவிஜயவிட்டல ஆலயம்


ராகண்ணனின் மனைவி அக்கண்ணம்மையின் தங்கையும் ஒரு நல்ல குடும்பத்திற்கு மருமகளாகச் சென்றபின், பார்வையற்ற அக்கண்ணம்மைக்கு ஒரு பெண் துணையின் அவசியம் இருந்ததால் ராகண்ண தம்பதிகளும், வெங்கடராயனும் அந்த குடும்பத்தின் உதவியை நாடினர்.  

மனைவிக்கு தங்கையின் துணை கிடைத்தபிறகு, ராகண்ணனுக்கு சஞ்சாரம் செய்ய இருந்த தடைகள் விலகி, தம்முடைய தம்பியுடன் தீர்த்தயாத்திரை செல்ல ஆரம்பித்தார்.  பொதுவாக அந்த காலத்தில் கால்நடையாகவே பயணிக்க வேண்டியிருந்தது. 

சகோதரர்கள் தம்முடைய முதல் சுற்றுப்பயணத்தில் வடக்கு கர்நாடகம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், வங்கதேசம், ஒரிசா முதலான இடங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்று, சுமார் இரண்டு வருடங்களில் ஊர் திரும்பினர்.   தம்முடைய இரண்டாவது சுற்றுப்பயணத்தில் உடுப்பி மற்றும் சுற்றியுள்ள க்ஷேத்ரங்களை தரிசித்து, இரண்டு மாதங்கள் கழித்து திரும்பினர். 

ஸ்ரீமுத்துமோகனவிட்டலதாசர்


உடுப்பி யாத்திரை முடிந்து வந்த ராகண்ணன், சில மாதங்கள் தன் மனைவியுடன் இருந்து பின்னர் விஜயராயரகட்டெ இருக்கும் சிப்பகிரி மற்றும் மந்திராலய க்ஷேத்ரங்களை தரிசிக்க புறப்பட்டார். 

சிப்பகிரியில் விஜயதாசரின் ஆராதனை பொருட்டு, வழக்கப்படி, ஹரிதாச பரம்பரையில் வந்திருந்த ஸ்ரீவரவிட்டலதாசர் என்பவரின் ஹரிகதா காலக்ஷேபம் நடந்துகொண்டிருந்தது. தாசர் அவர்கள், அங்கிதத்தின் மகத்துவத்தை விவரித்ததை கேட்டு, ராகண்ணனும் அங்கிதம் பெறவேண்டும் என்று விரும்பினார்.  தாசரின் (ஸ்ரீவரவிட்டலதாசரின்) இயற்பெயர் ஸௌதி ராமசந்திரப்பா என்பதாகும். 

ஸ்ரீநிதிவிட்டலதாசரின் அனுக்ரஹத்தினால் அங்கித உபதேசம் பெற்றிருந்த, ஸ்ரீவரவிட்டலதாசர், தகுந்த ஒரு சீடனை தேடிக்கொண்டு இருந்தார். ஹரிகதையின் சுவையில் தீவிரமாக இருந்த ராகண்ணனை கண்ட தாசர், தமக்கு தகுந்த சிஷ்யன் கிடைத்து விட்டதாக எண்ணினார்.  

உடுப்பி கிருஷ்ணன் சன்னிதியில் தாசர் கைப்பட எழுதிய உகாபோகம்


அன்றிரவு கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ராகண்ணனின் கனவில் விடியற்காலை விஜயதாசர் தோன்றினார். இந்த நல்ல சகுனத்தினால் உற்சாகமடைந்த ராகண்ணன், மறுநாள் காலை ஏகாதசி அன்று தனது காலை ஆன்ஹிகங்களை முடித்து கொண்டு தாசரிடம் வந்து, அவரை வணங்கி, தன்னை உத்தரிக்க வேண்டினார்.  இதற்கிடையே, குரு சிஷ்யர் பரம்பரைக்கான சோதனைகள் நடந்து முடிந்திருந்தன. இப்படியாக,  ராகவேந்திரப்பனுக்கு, மின்னல் வேகத்தில் அங்கித உபதேசம் செய்து,   தாசபரம்பரையை வளர்க்க உத்தரவிட்டார், ஸ்ரீவரவிட்டலதாசர். இவருடைய அங்கிதம் இப்படியாக இருக்கிறது.   

முத்துமோகனவிட்டல சலஹோ       || ப ||

சிரி மனோஹர நின்ன ப்ரார்திசுவே நிருத||அப||

சிரி பொம்ம மொதலாத சுரரிந்த சேவிதனே
பரம கருணாளு ஹரி கரிவரதனே
நிருததலி நின்ன நாம ஸ்மரணெயித்து
கருணதலி ரக்ஷிசோ பரம பாவனனே ||1||

குரு ஹிரியரலி பகுதி விஷயதலி விரகுதி
பிரிதாத பஞ்சபேதவனு அருபி
கரிவரதனே நின்ன நாமாம்ருத சார உணிசோ
துரிதகள பரிஹரிசோ பரம பாவனனே ||2||

நானு நன்னது எம்ப துரபிமானவன்னு பிடிசோ
சானுராகதலி தாரதம்யகள திளிசோ
மானநிதி நீனே சர்வோத்தமனெம்பந்த
ஞானதாயகனாகோ ஸ்ரீவரவிட்டலா ||3||

அன்று இரவு தாசர் தன்னுடைய புதிய சிஷ்யன் மற்றும் அவனுடைய சகோதரன் வெங்கடராயனுடன் இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனைக் குறித்துப் பாடினார்.  மறு நாள் துவாதசி அன்று விஜயதாசரின் உத்தர ஆராதனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.

12இதழ்கள் கொண்ட தாமரை - கல்லில் செய்தது


இப்படியாக ராகவேந்திரப்பன்,  முத்துமோகனவிட்டலதாசர் என்ற பெயர் பெற்றவராக,  தன்னுடைய சகோதரனுடன் பண்டரிபுரத்திற்கு புறப்பட்டார்.   செல்லும் வழியில் தம்புரா ஒன்றை வாங்கிக் கொண்டு,  சலங்கை, ஜால்ரா, யாசகம் (பிக்ஷை) பெறுவதற்கான ஒரு பாத்திரம் ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டார்.   தம்புராவிற்கு ஐந்து தந்திகள் இருந்தன. பயணம் செய்யும் காலத்தில் தமது தோள்களில் எளிதாக சுமந்து செல்லும் வகையில், இரண்டு பக்கமும் இரும்பு வளயங்களை பூட்டி,  பகவானின் பன்னிரு நாமங்கள் மற்றும் வைணவ சின்னங்களினால் அலங்கரித்திருந்தாராம். தற்போது அந்த தம்புரா, அதே பரம்பரையில் வந்த குருகோவிந்தவிட்டலதாசரால்,  மைசூர் கிருஷ்ணமூர்த்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீவிட்டல மந்திரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.   

முத்துமோகனவிட்டலதாசர், பண்டரிபுரத்திலிருந்து பிரயாகை, வாரணாசி, கயா முதலான திவ்ய தேசங்களில் பகவானை நன்கு தரிசித்து அந்தந்த தேசங்களில் விதிக்கப்பட்ட உகந்த கர்மங்களை செய்து முடித்து மந்த்ராலயம் வழியாக தம்முடைய ஊருக்கு திரும்பினார்.   

தாசர் தேசசஞ்சாரம் செய்வதில் விருப்பமுடையவராகி, மூன்று, நான்கு முறை காசி யாத்திரை சென்று வந்தார். நான்காவது முறையாக காசியிலிருந்து திரும்பும் பொழுது, விசுவநாதன் சன்னதியிலிருநது ஒரு லிங்கத்தை கொண்டு வந்தார்.  தாசருக்கு அப்பொழுது சுமா‌ர் 45 வயதிருக்கும்.  ஒவ்வொரு வருடமும் திருப்பதி சென்று வந்தார்.  அவ்வப்போது சிப்பகிரி, மந்த்ராலயம், உடுப்பி முதலான திவ்ய தேசங்களுக்கும் சென்று வந்தார்.  தாசர், சிவமொக்கா வழியாக உடுப்பி செல்லும்போது, தம்முடைய சிஷ்யரான பாவகட (Paavagada) கோபால்ராவ் என்பவரின் வீட்டில் இறங்கி கொள்வது வழக்கம்.  

சுமா‌ர் 65 வயதான கோபாலராவ் என்பவரால் சமஸ்கிருத எழுத்துக்களில் எழுதிவைக்கப்பட்ட தாசரின் தேவரநாமாக்களை, ஸ்ரீகுருகோவிந்தவிட்டல தாசர் கிபி 1942ல் சேகரித்துள்ளார். தாசர், உடுப்பி  கிருஷ்ணனின் சந்நிதியில் இயற்றி தன்னுடைய கையெழுத்திலேயே எழுதியுள்ள ஒரு உகாபோகத்தை கோபாலராவிடமிருந்து பெற்றிருந்தார். அதன் புகைப்படம் இங்கே தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. 

முத்துமோகனதாசர், வயதான பிறகு தம்முடைய சுற்றுப்பயணங்களை குறைத்துக்கொண்டு, அருகில் இருந்த தேவராயனதுர்காவில் நடைபெறும் தேர் திருவிழாவிற்கு மட்டும் சென்று வந்ததாக தெரிகிறது.  

தாசர், தாம் அதிக சிஷ்யர்களை பெறுவதைவிட திறமைமிக்க ஒரு சில சிஷ்யர்களை பெற்று, அவர்களின் மூலம் தாசதர்மத்தை எங்கும் பரப்பும் எண்ணம் உடையவராக இருந்தார்.  கிடைத்திருக்கும் தகவலின்படி அவருடைய சிஷ்யர்களின் எண்ணிக்கை 11 மட்டுமே.  அவர்களில் மிக முக்கியமானவர், தேவராயனதுர்காவின் “பரமப்ரிய” சுப்பராயதாசர். இவர் மிக பிரபலமடைந்து, ‘தாசமார்க்கத்தை’ எங்கும் பிரச்சாரம் செய்தார்.  இவருக்கு அங்கித உபதேசம் நடைபெற்ற சூழ்நிலை பின்வருமாறு இருந்தது. 

கரகிரி க்ஷேத்ரம் என்று பெயர் பெற்ற தேவராயனதுர்காவில் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் தேர் திருவிழா நடைபெறும் பங்குனி மாதம் அது.  மேலும் சுப்பராயர் அருகில் இருக்கும் தம்முடைய ஊரான நரசிபுரத்தில் இருந்து தேர் திருவிழாவில் கலந்து கொள்ள தம்புராவுடன் புறப்பட்டார். 

திருவிழாவின்போது ஒரு அந்தணரை சந்திக்க நேர்ந்தது. அதுவரை அங்கிதம் கிடைக்கப் பெறாது இருந்த சுப்பராயருக்கு, தொட்டபெல்லாபுரதாசர் என்று பெயர் பெற்ற,  க்ஷேத்ர பயணத்தில் இருக்கும் மகிமை வாய்ந்தவரே குரு என்றும், அவரை தரிசித்த மாத்திரத்தில் அங்கித உபதேசம் பெறுமாறு குறிப்பிட்டு உடனே மறைந்தார், அந்த அந்தணர்.  தேர் திருவிழா முடிந்த பின்னர் அவருடைய குருவை தேடும் படலம் ஆரம்பம் ஆனது. 

அதே சமயத்தில் சுப்பராயருடைய மனைவியின் சீமந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன.  தொட்டபெல்லாபுரத்தின் ராகவேந்திரதாசர், நரசிபுரத்திற்கு - தன் இரு சிஷ்யர்களுடன், குதிரையில் எழுந்தருளினார்.   கிருஷ்ணான்ஜினத்தின் சட்டை அணிந்து மற்றும் பூஜை மணி, தோள்களில் சுமந்து செல்லும் வகையில் இரும்பு வளையங்கள் பூட்டிய ஐந்து தந்திகள் உடைய தம்புரா முதலானவற்றை உடன் வைத்திருந்தார். அவரைக் கண்டவுடன் சுப்பராயதாசர், தமக்கு குரு கிடைத்து விட்டதாக ஆனந்தம் அடைந்தார்.  தயை கூர்ந்து அங்கித உபதேசம் மற்றும் தாசதீக்ஷையை அளிக்கும்படி வேண்டினார்.  குரு சேவை செய்த பிறகே தக்க நேரத்தில் தீக்ஷை கிடைக்கும் என்று தாசர் சுப்பராயரை சமாதானப்படுத்தினார். 

அன்றைய தினம் உபசரிப்புகளை ஏற்றுக்கொண்டு மறுநாள் காலை தம்முடைய பயணத்தைத் தொடர ஆயத்தமானார்.  தாசர் குதிரையில் அமர்ந்து தம்முடைய சிஷ்யருடன் புறப்பட்டபோது அவருக்கு வழி காட்டும் பொருட்டு, சுப்பராயரும் உடன் சென்றார்.  நெடுஞ்சாலையை அடைந்தவுடன் தாசர், சுப்பராயரை திரும்பிச் செல்ல பணித்தார்.  

சுப்பராயர் மிகு‌ந்த வேதனையுடன் தனக்கு தாச தீக்ஷையை அளிக்கும்படி மன்றாடி வேண்டினார்.  அவரை சமாதானப்படுத்தும் வகையில் தாசர் குதிரையில் இருந்து கீழே இறங்கியவுடன், சுப்பராயர், தாசரின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க சிஷ்யத்வத்தை வேண்டினார். முதல் நாள் இரவு, தாசரின் பயணக் களைப்பைப் போக்க பாதசேவை செய்ததன் பலனாக, தகுதி பெற்ற சுப்பராயரை மேலும் சோதிக்க விரும்பாமல், மறுநாள் தும்கூர் வியாஸராய மடத்திற்கு வரும்படி கட்டளையிட்டு,  தாசர் தம் பயணத்தை தொடர்ந்தார்.  

தாசரின் கட்டளைப்படி, தும்கூரின் வியாஸராய மடத்திற்கு வந்த சுப்பராயருக்கு, ஸ்ரீமுத்துமோகனதாசர், சுபமுகூர்த்தத்தில் தத்வ உபதேசம் செய்து “தந்தெமுத்துமோகன விட்டல“ என்ற அங்கிதத்தை அதிகாரபூர்வமாக வழங்கினார்.  

ஸ்ரீமுத்துமோகன தாசரின் ஏனைய சிஷ்யர்களில் பாலகிருஷ்ணதாசர், கரிவரத விட்டலதாசர் மற்றும் கருணாகர விட்டலதாசர் ஆகியோர், ஹரிகதாகாலக்ஷேபம் செய்வது, பாடல்களை இயற்றுவது ஆகியவை மூலமாக தாசதர்மத்தை பரப்பினர்.  

தாசரின் தினப்படி நடவடிக்கைகளுக்கு ஒரு இடம் / நிலம் தேவைப்பட்டது. அதற்காக ஒரு நிலத்தை வாங்கி, விட்டலனின் சிலையை ப்ரதிஷ்டாபனம் செய்ய தீர்மானித்தார்.  பக்தர்கள் தாமாகவே கொடுக்கும் பணத்தை சேகரிக்க ஆரம்பித்தார். 

இந்த சமயத்தில் சில சிஷ்யர்களின் விருப்பப்படி தாசர், தம்முடைய தம்பியான வெங்கடராயனுடன் உடுப்பி யாத்திரைக்கு புறப்பட்டார்.  செல்லும் வழியில், தும்கூரில் திவான் பூர்ணய்ய அவரின் வம்சத்தவரும் அந்த ஜில்லா அதிகாரியுமான சர். P.N. கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு, விட்டலனுக்கு கோவில் கட்டுவது குறித்து விவரித்தார்.  கோவில் திருப்பணி உதவிக்கான உறுதிமொழி பெற்றுக் கொண்டு, உடுப்பி பயணத்தை தொடர்ந்தார்.  தாசர் உடுப்பி யாத்திரையை முடித்துக் கொண்டு தொட்டபெல்லாபுரத்திற்கு திரும்பும் வழியில் மறுபடியும் தும்கூருக்கு வந்து, கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உறுதிமொழியின்படி, விட்டலன் கோவில் திருப்பணிக்கான உதவியை பெறுவதற்கு முயற்சித்தார்.  

இதற்கிடையே  கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது ஒரே மகனுக்கு வெகு விமரிசையாக உபநயனம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று அவருடைய மகன் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டான். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அக்கறையின்றி தாசருக்கு தகுந்த மரியாதை அளிக்காததால் மன அழுத்தத்திற்கு உள்ளான தாசர், தொட்டபெல்லாபுரத்தின் சன்னதியில் தமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு அமர்ந்தார்.  

இந்த சமயத்தில் சரியாக தும்கூரில் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தான் தாசருக்கு அளித்த உறுதிமொழி நினைவிற்கு வந்தது. தாசர் தம்மிடம் வந்த பொழுது உரிய மரியாதையை அளிக்காததற்கு வருந்தினார்.  தாசர், தரபனஹள்ளியில் (Tharabanahalli) முகாம் இட்டிருப்பதை அறிந்து, உடனடியாக தம்முடைய பரிவாரத்துடன் ஓடிச் சென்று மன்னிப்பு கோரினார். உபவாஸத்தை நிறுத்த வேண்டிக்கொண்டு, பின்னர் தாசரை உணவருந்தச் செய்தார்.  

பின்னர், விட்டலனின் கோவில் திருப்பணிக்கான பணத்தை அர்ப்பணித்துவிட்டு திரும்பினார்.  தாசர், தரபனஹள்ளியின் பக்தர்களிடம் இருந்து கோவில் கட்டுவதற்காக பொருள் உதவி பெற்றுக் கொண்டு, தொட்டபெல்லாபுரத்திற்கு திரும்பினார்.  

கோவில் நிலத்திற்காக பலவாறாக யோசித்து, இறுதியில் தம் திருமணத்திற்கு தம்முடைய மாமனாரிடமிருந்து பெற்ற பூர்வீக சொத்தான காலி நிலத்திலேயே கோவில் கட்டினார். சுமார் கி.பி. 1888 ல் ஒரு சுபதினத்தன்று முதலிலேயே தயாராகி இருந்த விட்டலன் சிலையை ப்ரதிஷ்டாபனம் செய்தார். ஏற்கனவே தாம் காசியிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை, விட்டலனின் இடது பக்கம் ப்ரதிஷ்டாபனம் செய்தார். அன்றிலிருந்து தாசருடைய கடைசி காலம் வரை,  விட்டலனின் கோவிலே அவருடைய பஜனை மற்றும் ஆராதனை முதலான நடவடிக்கைகளின் மையமானது. 

தாசர் திரண்ட தோள்கள் உடையவராகி, வசீகரமான முகம் மற்றும் கருமை கலந்த செந்நிற மேனியுடையவராக இருந்தார்.  அடர்ந்த மற்றும் நீண்ட தாடியுடன் ஜடாதாரிகளாக இருந்தார்.  முழங்கால் வரை வேட்டி, கழுத்தில் துளசி மற்றும் கமலாக்ஷி மாலைகள் அணிந்து, நெற்றியில் பளிச்சென்று தெரியும் அங்கார அக்ஷதைகளை இட்டுக் கொண்டு காவியுடை போர்த்திக் கொண்டு தாசர், ரிஷிகளைபோல காட்சி அளித்தார்.  

தாசர் குடும்பஸ்தராக இருந்த போதிலும் துறவிகளைபோல வாழ்க்கை முறையை கடைபிடித்து, தம்முடைய உணவை தாமே சமைத்து கொள்ளும் வழக்கம் உடையவராகிருந்தார்.  சகோதரனான வெங்கடராயனும் சமையல் செய்து கொண்டிருந்தார்.  அவர் இல்லாத நேரத்தில் தாமே சமைத்து கொண்டிருந்தார்.  ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு, இரவு பலகாரம் சாப்பிட்டு வந்தார்.  முறைப்படி பூஜை விதிகளை பின்பற்றினார்.  பூஜை நேரத்தில் மேளம், சங்கு, தம்புரா முதலானவற்றை வாசித்தார்.  

சஞ்சாரம் செய்யும் காலத்தில் இடுப்பு வரையிலான கிருஷ்ணான்ஜின சட்டை, தொப்பி, தலையில் காவி துண்டினாலான முண்டாசு முதலானவற்றை அணிந்து, தோள்களில் சுமந்து செல்லும் வகையில் முனைகளில் இரும்பு வளையங்கள் பூட்டப்பட்ட, ஐந்து தந்திகள் உடைய தம்புரா, தாளம் மற்றும் கால்களில் சலங்கை முதலானவற்றை அணிந்திருந்தார்.  குதிரையின் மீது ஏறி பயணம் செய்து வந்தார். 

மொதலகல்லு சேஷதாசருடனான சம்பந்தம்

தாசருடைய சிஷ்யர்களில் ஒருவரான, கரிவரதவிட்டல அங்கிதம் உடையவரான ராமதாசர் என்பவரின் கூற்றின்படி, தாசருக்கும், மொதலகல்லு சேஷதாசருக்கும் (கி.பி. 1801 - 1885)  நெருங்கிய தொடர்பு இருந்தது.  தாசர், பலமுறை மொதலகல்லு சென்று சேஷதாசரை சந்தித்து சேவை புரிந்து வந்துள்ளார். 

பிறவியிலேயே பார்வையற்றவரானாலும், மங்கையர் குலதிலகமாக திகழ்ந்த மனைவியும், அந்த ஜென்மத்தில் ப்ரம்மசாரியாகி - தன்னுடைய சகோதரன் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் பணிவிடை செய்வதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்த வெங்கடராயனும், முதுமையில் தாசருக்கு பணிவிடை புரிந்து வந்தனர்.  காலப்போக்கில் வெங்கடராயனும் இறந்து விட்டான். பிறகு தாசரின் சிஷ்ய வட்டாரத்தில் இருந்த ஊதுகட்டி ஹனுமனந்தராயர் என்பவர், தாசருக்கு பணிவிடை புரிந்து வந்தார். தாசர், விட்டலனின் பூஜையை மட்டும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தாமே செய்து வந்தார்.  

கி.பி. 1898 ல் தொட்டபெல்லாபுரத்தில் ப்ளேக் காய்ச்சல் தொந்திரவு தலை தூக்கியபோது, மக்கள் ஊருக்கு வெளியே முகாமிட்டனர்.  ஆனால் தாசர் மட்டும் விட்டலனின் பூஜையை நிறுத்த மனமின்றி ஊரிலேயே தங்கினார். இந்த சமயத்தில் ஒரு நாள், ஊதுகட்டி ஹனுமனந்தராயரை அழைத்த தாசர், தம்முடைய இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை கூறி, தமக்கு மக்கள் இல்லாததால் தம்முடைய அந்திமக்ரியைகளை செய்வதற்கான உறுதிமொழி பெற்றுக் கொண்டார்.  

கி.பி.  1898ல் சில நாட்களில் தாசரின் உடல்நிலை குன்றிய அந்த நிலையிலும் ஸ்நானம் மற்றும் பூஜைகள் செய்து வந்தார்.  சாலிவாஹன சக1820 (கி.பி. 1898) விளம்பி நாம சம்வத்சரத்தில் கார்த்திகை மாதம் பகுள சதுர்தசியன்று காலை, விட்டலனுக்கு அர்ச்சனை, நைவேத்யம், மங்ளாரத்தி ஆகியவற்றை முடித்துக் கொண்டு பிரதிமைகளை எடுத்து வைப்பதற்கு முன் மிகவும் களைப்புற்றார்.  இப்படிப்பட்ட நிலையில் கோவில் கர்ப்பகிரகத்தில் இருப்பது சரியல்ல என்று தீர்மானம் செய்து கோவிலின் வெளிப்புறத்திற்கு வந்தார்.  அங்கு தம்மாலேயே கல்லில் செதுக்கப்பட்ட பன்னிரு இதழ் தாமரையின் மேல் அமர்ந்து கொண்டு, நாராயணனை தியானித்துக் கொண்டு, சுமா‌ர் 11.15 மணிக்கு தேகத்தியாகம் செய்தார்.  தாம் அளித்த உறுதிமொழியின்படி ஊதுகட்டி ஹனுமனந்த ராயர், ஏனைய சிஷ்யர்கள் மற்றும் ஊர் மக்களுடன் இணைந்து, தாசரின் அந்திம க்ரியைகளை செய்து முடித்தார். இப்பொழுது தகுந்த பராமரிப்பு இல்லாததால், தாமரை செதுக்கப்பட்ட கல் காணப்படவில்லை. ஸ்ரீகுருகோவிந்தவிட்டல தாசர் சேகரித்த தாமரை செதுக்கப்பட்ட கல்லின் வரைபடம் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.  

தாசரின் சிஷ்யரான ஸ்ரீகுருகோவிந்த விட்டல தாசர், முத்துமோகனதாசரின் வாழ்க்கை வரலாற்றை “முததிபாலிசோ/ முத்துமோகனராயா..... “ என்ற பாடலில் எளிமையாகவும், அழகாகவும், விரிவாகவும் எடுத்துரைத்துள்ளார்.  அதை பின் வரும் பக்கங்களில் காணலாம்.  

முத்துமோகனதாசர், பங்கநாம திம்மண்ணதாசரின் (வேணுகோபாலவிட்டல தாசரின்) பரம்பரையை சேர்ந்தவர் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.  ஆனால் இவர் மோகனதாசரின் பரம்பரையை சேர்ந்தவர் என்றும் ஒரு தரப்பினர் கூறுவதுண்டு.  

ஸ்ரீபாகேபள்ளி சேஷதாசரின் சிஷ்யரும், ஸ்ரீநிதி மோகன விட்டலாங்கிதருமான ஸ்ரீநந்தகுடி ஷ்யாமதாசர், தம்முடைய சொந்த கையெழுத்திலேயே எழுதி வைத்திருக்கும் “குருபேளிகெ (குருபரம்பரை) ” பின்வருமாறு உள்ளது.  

ஸ்ரீநிதி மோகனவிட்டல ப்ரசன்ன ஸ்ரீகுருப்யோ நமஹ : ஹரி: ஓம். 

“குருபேளிகெ “

ஸ்ரீபதிய நாபியிந்த அஜ ஜனிசிதனு.
அஜனமான சபுத்ரரே சனகாதிகளு.
சனகாத்யர சிஷ்யரே துர்வாசரு.
துர்வாசர சிஷ்யரே கருடவாஹன தீர்த்தரு.
கருட வாஹன தீர்த்தர சிஷ்யரே க்ருபல்ய தீர்த்தரு.
க்ருபல்ய தீர்த்தர சிஷ்யரே ஞானேச தீர்த்தரு.
ஞானேச தீர்த்தர சிஷ்யரே பர தீர்த்தரு.
பரதீர்த்தர சிஷ்யரே சத்யப்ரக்ஞ தீர்த்தரு.
சத்யப்ரக்ஞ தீர்த்தர சிஷ்யரே ப்ராக்ஞ தீர்த்தரு.
ப்ராக்ஞ தீர்த்தர சிஷ்யரே அச்யுத ப்ரேக்ஷாச்சார்யரு.  
அச்யுத ப்ரேக்ஷாச்சார்யர (சிஷ்யரே) கரகமலத சஞ்ஜாதரே நம்ம பூர்ணப்ரக்ஞரு.
பூர்ணப்ரக்ஞரே நம்ம ஸ்ரீமதானந்த தீர்த்த குரு மத்வரு.
ஸ்ரீமதானந்த தீர்த்தர ப்ரதம சிஷ்யரே பத்மநாப தீர்த்தரு.
பத்மநாப தீர்த்தர சிஷ்யரே லக்ஷ்மிதர தீர்த்தரு.
லக்ஷ்மிதர தீர்த்தர சிஷ்யரே சங்கருஷண தீர்த்தரு.
சங்கருஷண தீர்த்தர சிஷ்யரே பரசுராம தீர்த்தரு.
பரசுராம தீர்த்தர சிஷ்யரே ஆதிராஜ தீர்த்தரு.
ஆதிராஜ தீர்த்தர சிஷ்யரே சத்யவ்ரத தீர்த்தரு.
சத்யவ்ரத தீர்த்தர சிஷ்யரே சுவர்ணவர்ணதீர்த்தரு.
சுவர்ணவர்ணதீர்த்தர கரகமல சஞ்ஜாதரே நம்ம ஸ்ரீபாதராஜ தீர்த்தரு
ஸ்ரீபாதராஜதீர்த்தர சிஷ்யரே ஸ்ரீவ்யாஸராஜ யோகீந்த்ரரு.
ஸ்ரீவ்யாஸராஜர சிஷ்யரே புரந்தரதாசரு.
புரந்தரதாசராயர சிஷ்யரே விஜயதாசரு.
விஜயதாச ராயர சிஷ்யரே மோகனதாசரு.
மோகனதாசர சிஷ்யரே திம்மண்ணதாசரு.
திம்மண்ண தாசர சிஷ்யரே தாசாசார்யரு.  (கத்வாலி பூவராஹ ரகுபதி விட்டல தாசர்).
இவர சிஷ்யரே ஸ்ரீபதி விட்டல தாசர்.
இவர சிஷ்ய தந்தெ ஸ்ரீபதி விட்டலதாசர்.
இவர சிஷ்யரு தொட்டபெல்லாபுரத முத்துமோகனவிட்டல தாசர்.
இவர சிஷ்யரே ப்ராணநாத விட்டல தாசாசார்யரு.
இவர சிஷ்யரே ஸ்ரீநிதிமோகன விட்டலதாசர்.

அஸ்மத் குருவந்தர்கத பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத ஸ்ரீநிதிமோகனவிட்டலதாசர தாசரிகெ நமோ நமோ நமஹ. :  “ஸ்ரீஸ்ரீஸ்ரீ “.

(மேற்கண்ட குருபேளிகே - கீழே தமிழில்)

ஸ்ரீபதியான நாராயணனின் நாபியிலிருந்து அஜ (பிரம்மா) பிறந்தார்.  
பிரம்மாவின் மானச புத்ரரே சனகாதிகள்.
சனகாதிகளின் சிஷ்யரே துர்வாசர்.
துர்வாசரின் சிஷ்யரே கருடவாஹன தீர்த்தர்.
கருடவாஹன தீர்த்தரின் சிஷ்யரே க்ருபல்ய தீர்த்தர்.
க்ருபல்ய தீர்த்தரின் சிஷ்யரே க்ஞானேச தீர்த்தர்.
க்ஞானேச தீர்த்தரின் சிஷ்யரே பரதீர்த்தர்.
பரதீர்த்தரின் சிஷ்யரே சத்யப்ரக்ஞ தீர்த்தர்.
சத்யப்ரக்ஞ தீர்த்தரின் சிஷ்யரே ப்ராக்ஞ தீர்த்தர்.
ப்ராக்ஞ தீர்த்தரின் சிஷ்யரே அச்யுத ப்ரேக்ஷாச்சார்யர்.
அச்யுத ப்ரேக்ஷாச்சார்யரின் (சிஷ்யரே) கரகமல சஞ்ஜாதரே நம்முடைய பூர்ணப்ரக்ஞர்.
பூர்ணப்ரக்ஞரே நம்முடைய ஸ்ரீமதானந்ததீர்த்த குரு மத்வர்.
ஸ்ரீமதானந்ததீர்த்தரின் முதன்மை சிஷ்யரே பத்மநாப தீர்த்தர்.
பத்மநாப தீர்த்தரின் சிஷ்யரே லக்ஷ்மிதர தீர்த்தர்.
லக்ஷ்மிதர தீர்த்தரின் சிஷ்யரே சங்கருஷண தீர்த்தர்.
சங்கருஷண தீர்த்தரின் சிஷ்யரே பரசுராம தீர்த்தர்.
பரசுராம தீர்த்தரின் சிஷ்யரே ஆதிராஜ தீர்த்தர்.
ஆதிராஜ தீர்த்தரின் சிஷ்யரே சத்யவ்ரத தீர்த்தர்.
சத்யவ்ரத தீர்த்தரின் சிஷ்யரே சுவர்ணவர்ண தீர்த்தர்.
சுவர்ணவர்ண தீர்த்தரின் கரகமல சஞ்ஜாதரே நம்முடைய ஸ்ரீபாதராஜர்.
ஸ்ரீபாதராஜரின் சிஷ்யரே ஸ்ரீவ்யாஸராஜ யோகீந்த்ரர்.
ஸ்ரீவ்யாஸராஜரின் சிஷ்யரே புரந்தரதாசர்.  
புரந்தரதாசராயரின் சிஷ்யரே விஜயதாசர்.
விஜயதாசராயரின் சிஷ்யரே மோகனதாசர்.
மோகனதாசரின் சிஷ்யரே திம்மண்ணதாசர்.
திம்மண்ணதாசரின் சிஷ்யரே தாசாசார்யர் (கத்வாலி பூவராஹரகுபதிவிட்டல தாசர்).
இவருடைய சிஷ்யரே ஸ்ரீபதி விட்டலதாசர்.
இவருடைய சிஷ்யரே தந்தெஸ்ரீபதி விட்டலதாசர்.
இவருடைய சிஷ்யர் தொட்டபெல்லாபுர முத்துமோகனவிட்டல தாசர்.
இவருடைய சிஷ்யரே ப்ராணநாத விட்டலதாசாசார்யர்.
இவருடைய சிஷ்யரே ஸ்ரீநிதி மோகனவிட்டல தாசர்.

அஸ்மத் குருவந்தர்கத பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத ஸ்ரீநிதி மோகனவிட்டல தாசரின் தாசருக்கு நமோ நமஹ. :   “ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ “.

இந்த சமயத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவது அவசியமானது என்று தோன்றுகிறது.

ஸ்ரீதந்தெமுத்துமோகன தாசரின் பரம்பரையை பல இடங்களில் ஸ்ரீவேணுகோபாலதாசரின் (பங்கநாம திம்மண்ணதாசரின்) பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற கருத்தை ஆங்காங்கே காணலாம். ஆனால் ஸ்ரீஷ்யாமதாசர் எழுதி வைத்திருக்கும் ‘குருபேளிகெ‘யின்படி,  ஸ்ரீமோகனதாசரிலிருந்து பரம்பரை தொடர்வதாக தெரிகிறது.  இது, ஸ்ரீதந்தெவெங்கடேசவிட்டல அங்கிதரான, சித்ரதுர்காவை சேர்ந்த ஸ்ரீ ஆர். ராமச்சந்திரதாசர் (கி.பி.1907 – 1982), “தந்தெமுத்து மோகன அஸ்மத் குரோர் குரு” என்ற ஸ்தோத்ர பாடலில் “மோகனவிட்டல வம்ச தொளகுத்பவிசி” என்று கூறியுள்ளதற்கு பொருந்துகிறது.  

பாரமார்த்த சந்த்ரோதயாவில் வெளியிடப்பட்ட சில கட்டுரைகளில் தாசரின் பரம்பரையை, ஸ்ரீமோகனதாசருடையதென்றும், இன்னும் சில கட்டுரைகளில் ஸ்ரீபங்கநாமத திம்மண்ண தாசருடையதென்றும் (ஸ்ரீவேணுகோபால தாசர்) கூறியிருப்பதைக் காணலாம். ஆனால் வேணுகோபால தாசரிலிருந்து, முத்துமோகன தாசர் வரையிலான பரம்பரையை சேர்ந்த எல்லா தாசர்களின் அங்கிதங்களும் கிடைத்திருப்பதால், இவருடைய பரம்பரை வேணுகோபால தாசருடையதே என்று கூறவேண்டியுள்ளது.

இதுவரை கிடைத்திருக்கும் தாசரின் பதினெட்டு பாடல்களில், பதினொன்று உகாபோகங்கள், ஒரு சுளாதி, மூன்று ஸ்தோத்ர பாடல்கள் மற்றும் இரண்டு அங்கித பாடல்கள். இவற்றை காணும் போது,  தாசருக்கு பல வகையான காவியங்கள் இயற்றும் திறமை இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் தாசர்கள், யதிகள் மற்றும் தேவதைகள் குறித்து பல்வேறு ஸ்தோத்ரங்கள் இயற்றியிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவைகள் தற்போது நடைமுறையில் இல்லை.  தாசருடைய எழுதும் பாணி எளிமையாக இருப்பதுடன், பாடல்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளன.  

ஸ்ரீ முத்துமோகன தாசர், மந்திராலயத்தின் ராகவேந்திர ஸ்வாமிகளின் அம்சமாக நம்பப்படுகிறார்.  

கி.பி. 2000 ல் தேவராயனதுர்காவின், தாச கூட சபா நூற்றாண்டு சமிதியினர் அர்ப்பித்திருக்கும் ஸ்ரீதாசரின் மாதிரி நினைவுச் சிலை, தொட்டபெல்லாபுரத்தில் ஸ்ரீவிஜயவிட்டலனின் கோவிலில் நிறுவப்பட்டுள்ளது.  இதன் பின்னர், பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ஸ்ரீவிஜயவிட்டலனின் கோவில், உள்ளூர் ஸ்ரீமாத்வ சங்கத்தினரின் ஆர்வம் மற்றும் விடாமுயற்சியினாலும் மறுபடியும் இயக்கப்பட்டு இப்பொழுது, மத சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு ஒரு மையமாக உள்ளது.  

ஸ்ரீதாசரைப் பற்றி மேலும் தகவல் அறிய விருப்பம் உடையவர்கள், குருகோவிந்தவிட்டல தாசர் எழுதியுள்ள “தொட்டபெல்லாபுரத ஸ்ரீமுத்துமோகன தாசர் (1965)” என்ற புத்தகத்தை பார்க்கலாம்.

ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணம்..   

No comments:

Post a Comment