Friday, March 9, 2018

5/12 ஹனுமந்த அவதாரம்

5/12 ஹனுமந்த அவதாரம்

ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம் : பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ’ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்




கே: ஹனுமந்ததேவரின் தாய் மற்றும் தந்தை?

ப: தந்தை கேசரி. தாய் அஞ்சனா.

கே: முக்யப்ராணரையே மகனாகப் பெற வேண்டுமெனில், இவர்களது தவவலிமை எத்தகையது?

ப: ஆம். வாயுதேவரே உனக்குப் பிறக்கட்டும் என்று பரத்வாஜர் முதலான முனிவர்கள், கேசரிக்கு வரமளித்தனர். அஞ்சனாதேவியும்கூட வாயுதேவரே வாரிசாகக் கிடைக்கவேண்டும் என்று தவம் செய்தார். இதன் பலனே ஹனுமந்ததேவர்.

கே: பரத்வாஜ முனிவர், கேசரிக்கு எதற்காக வரம் அளித்தார்?

ப: ஒருமுறை ஒரு அசுரன், யானை ரூபத்தில் பரத்வாஜ முனிவரைக் கொல்வதற்காக வந்தான். அப்போது கேசரி கபியானது, ஒரு சிங்கத்தைப் போல் வீரத்துடன் அந்த யானையைக் கொன்றது. இதனால் மகிழ்ந்த பரத்வாஜ முனிவர், ‘முக்யபிராணனே உனக்கு மகனாகப் பிறக்கட்டும்’ என்று வரம் அளித்தார். 

கே: கேசரி மற்றும் அஞ்சனா எங்கே வசித்திருந்தனர்? ஹனுமந்ததேவர் பிறந்த இடம் எது?

ப: ’சூர்யதத்தவர: ஸ்வர்ண: ஸுமேர்ருநாம பர்வத: | தத்ர ராஜ்யம் ப்ரஷாஸ்த்ருஸ்ய கேசரி நாம வை பிதா’. தங்கமயமான மேருபர்வதத்தில் சூரியனிடமிருந்து வரம் பெற்று, ஹனுமந்தனின் தந்தையான கேசரி அரசாட்சி புரிந்துவந்தார். இவரின் மனைவியே அஞ்சனா. ராமாயணத்தில் வரும் இந்த ஆதாரத்தின் அடிப்படையில், மேருபர்வதமே இவர்களது வசிப்பிடமாகவும், ஹனுமந்ததேவர் பிறந்ததும் மேருபர்வதத்திலேயே என்பதும் தெரியவருகிறது. ஆனால், பவிஷ்யோத்தர புராணத்தில், ஹனுமந்ததேவர் வேங்கடாசலத்தில் அவதரித்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வேறுபாட்டினை கல்ப-பேதம் என்று தெரிந்துகொள்ளவேண்டும். 

கே: ஹனுமந்ததேவர் பிறந்தது எப்படி?

ப: ஒரு முறை அஞ்சனாதேவி ருதுஸ்நானம் முடித்தவராக தோட்டத்தில் இருந்தபோது, மிகவும் அழகான முக்யப்ராணனைக் கண்டார். அப்போது முக்யபிராணர் அவரை ஆலிங்கனம் செய்தபோது, அவர் கர்ப்பவதியானார். 

கே: ருஜுஸ்ரேஷ்டரான முக்யபிராணர், மற்றவரின் மனைவியான அஞ்சனாதேவியை சுகித்தாரா?

ப: ஒவ்வொரு சாதகரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் இது. ஸ்ரீஹரி மற்றும் ருஜுகணஸ்தர்கள் - மற்ற பெண்டிரை சங்கமிக்க வாய்ப்பே இல்லை. அப்படி சங்கமித்த கதைகள் ஏதேனும் புராணத்தில் படித்தோமென்றால், அங்கே லட்சுமிதேவியின் மற்றும் பாரதிதேவியின் சன்னிதானம் இருந்ததாக அறிந்துகொள்ளவேண்டும். இங்கே, அஞ்சனாதேவியிடம், பாரதிதேவியின் ஆவேசம் இருந்தது. ஆகையினாலேயே ‘சம்ஸ்பர்ஷனம் நஸ்தவ தேவி பூத்யை’ என்னும் ஸ்லோகத்தில் ‘தேவி’ என்று அழைக்கப்படுகிறார். தேவி என்னும் சொல்லிற்கு பாரதிதேவி என்பதே நிஜமான பொருள். வெறும் பார்த்த மட்டிலேயே அஞ்சனாதேவியின் கர்ப்பத்தில் புகுந்தார் என்று பவிஷ்யோத்தர புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படியிருந்தாலும், பாரதிதேவியின் சன்னிதானம் இல்லாதிருந்தால், முக்யபிராணதேவர் எந்த வழியிலும் அவரின் சங்கமத்தை செய்திருக்கமுடியாது. 

கே: ’யோ வை சைகாதஷோ ருத்ரோ ஹனுமான் ஸ: மஹாகபி: அவர்தீண: ஸஹாயார்தம் விஷ்ணோரமிததேஜஸ:’ - ஸ்காந்த புராணத்தின் இந்த வாக்கியத்தின்படி பதினோறாவது ருத்ரனே ஹனுமந்தனாகி அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. இப்படியிருக்கும்போது வாயுதேவரே ஹனுமந்தன் என்று எப்படி சொல்லமுடியும்?

ப: அசுர-மோகனத்திற்காக புராணங்களில் இப்படிப்பட்ட வாக்கியங்கள் சொல்லப்படுகின்றன. இதிலிருந்து ஹனுமந்ததேவரை, ருத்ரரின் அவதாரம் என்று புரிந்துகொள்ளக்கூடாது. வாயுவே ஹனுமந்ததேவராக அவதரித்திருக்கிறார் என்று இந்த ஸ்லோகத்திற்கு பொருள் கொள்ளவேண்டும். 

கே: ஹனுமந்ததேவர் எப்படி பிறந்தார்?

ப: ஸ்ரீகிருஷ்ணன் எப்படி சகல ஆபரணங்களுடன் வசுதேவ - தேவகிக்குப் பிறந்தாரோ, அப்படியே ஹனுமந்ததேவரும் சகலாபரணங்களை தரித்துக்கொண்டு அவதரித்தார். பிறக்கும்போதே பூணூலையும் அணிந்திருந்தார். ஹனுமத்விலாசத்தில் இந்த விஷயத்தை மிகவும் விவரமாக, சுவாரசியமாக தெரிவித்திருக்கின்றனர். அவர் அணிந்திருந்த ஆபரணங்கள் யாருக்கும் புலப்படவில்லை. முதன்முதலில் அதைக் கண்டவர் ஸ்ரீராமர். ஆகையால் ஸ்ரீராமரையே அவரது தெய்வமாக ஹனுமந்ததேவர் ஸ்வீகரித்தார். 

கே: வாலி-சுக்ரீவர் இருவரும் ஹனுமந்ததேவரின் தாய்-மாமன் என்கிறார்கள். இது எப்படி?

ப: இதற்கு ஒரு சுவாரசியமான கதை உண்டு. பிரம்மதேவரின் கண்ணீரிலிருந்து ஒரு வானரன் பிறந்தான். மேரு பர்வதத்தில் இருந்த ஒரு ஏரியை அந்த வானரன் கண்டான். அந்த நீரில் தன்னுடைய பிரதிபலிப்பைக் கண்டான். அந்த ஏரியில் குளிக்க இறங்கியபோது, அந்த ஏரியின் மகிமையால் ஒரு அழகான பெண்ணாக மாறிவிட்டான். அந்தப் பெண் மேல் இந்திரன் ஆசைப்பட்டான். ஆதித்யனும் ஆசைப்பட்டான். இந்திரனின் வீர்யம், அந்தப் பெண்ணின் தலைமுடியில் விழுந்து, அங்கு வாலி பிறந்தான். (வால = முடி). சூரியனின் வீர்யம் கழுத்தில் விழுந்து சுக்ரீவன் பிறந்தான். மறுபடி அதே ஏரியில் குளித்தபோது, பெண் ரூபம் மறைந்து வானரனே ஆனான். 

இவனே ‘ருக்‌ஷரஜஸ்’ என்னும் அரசன் ஆவான். இவனுக்கும், இவனின் மனைவிக்கும் பிறந்தவரே அஞ்சனாதேவி. ஆகையால், வாலி சுக்ரீவர்கள் அஞ்சனாதேவியின் அண்ணன்கள் ஆவர். ஹனுமந்ததேவருக்கு இவர்கள் தாய்-மாமன் ஆவர். இந்தக் கதை ராமாயணத்தில், உத்தர காண்டத்தில் வருகிறது. ராமாயணத்திற்கு தமிழில் உரை எழுதியிருக்கும் ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவர், இந்தக் கதை நடுவில் சொருகப்பட்ட ஒன்று என்று சொல்கிறார். மேலும் பல உரை ஆசிரியர்களும் அப்படியே சொல்கின்றனர். 

கே: மார்கசிர மாதம் பௌர்ணமியன்று ஹனுமந்ததேவர் அவதரித்தார் அல்லவா?

ப: இல்லை. சைத்ர மாதம் பௌர்ணமியன்றே ஹனுமந்ததேவர், அஞ்சனாதேவியிடம் அவதரித்தார். மார்கசிர பௌர்ணமியன்று தர்மராஜர் ஆகியோர் ஹனுமத் விரதத்தை அனுஷ்டித்தனர். ஹனுமத் விரதத்தையே சிலர் தவறாக ஹனுமத்ஜெயந்தி என்று நினைத்து அன்றே ஹனுமத்ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். ஆனால் புராணங்கள் மிகத் தெளிவாக சைத்ர பௌர்ணமியே ஹனுமத் ஜெயந்தி என்று சொல்கின்றன. 

கே: பிறந்த உடனேயே ஹனுமந்ததேவர் சூரியனைத் தின்பதற்காக வானத்தில் தாவினார். இது என்ன விளையாட்டு?

ப: உதயசூரியனை ஒரு பழம் என்று எண்ணி ஹனுமந்ததேவர் வானத்தில் தாவினார் என்று தவறாக புரிந்துகொள்பவரே தவறானவர். ராகு-கிரகணத்திலிருந்து சூரியனைக் காப்பாற்றுவதற்காக ஹனுமந்ததேவர் வானில் தாவினாரே தவிர, பழம் என்று நினைத்து அதை தின்பதற்காக அல்ல. ஏனென்றால் பௌர்ணமியன்று சூரியகிரகணம் நடைபெறுவதே இல்லை. அது நடைபெறுவது அமாவாசை தினத்தில். ஆகவே, பிறந்த சில நாட்களில் வந்த அமாவாசையன்று நடந்த சூரியகிரகணத்தன்று இந்த சம்பவம் நடந்தது என்று வால்மிகி ராமாயணத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. 

கே: ஹனுமந்ததேவர் சூரியமண்டலத்திற்கு தாவியபோது, இந்திரன் ஏன் கோபம்கொண்டு அவரை தாக்கினான்?

ப: சூரியனை விழுங்குவதற்காக வந்த ராகுவை அழிப்பதற்காக ஹனுமந்ததேவர் வானத்தில் தாவினார். துஷ்ட காரியங்களை இவர் எப்போதும் சகிப்பதில்லை. அப்போது ராகு இந்திரனை சரணடைந்தான். அப்போது இந்திரன் வஜ்ராயுதத்தை பிரயோகித்தான். வஜ்ராயுதத்திற்கு மரியாதை கொடுப்பதற்காக மற்றும் பெரியவர்களுக்கு மரியாதை செய்யத் தவறினால் எப்படி பாவம் வந்து சேரும் என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக, ஹனுமந்ததேவர் கீழே விழுந்ததைப் போல் நாடகமாடினார். தன் மகன் மேல் வஜ்ராயுதம் பிரயோகித்ததைக் கண்டு வாயுதேவர் அதிர்ச்சியடைந்தார். உலகமே ஸ்தம்பித்தது. தேவதைகள் அனைவரும் பிரம்மனை சரணடைந்தனர். பாவத்தை செய்தவன் அதற்கான பலனை அனுபவிப்பான் என்பதற்கு இந்தக் கதையே உதாரணமாயிற்று. 

இந்திரன் செய்த பாவத்திற்கு மொத்த உலகமே துக்கத்தை அனுபவித்தது. உலகமே அழிந்துபோகும் நிலை வந்தது. தேவேந்திரனின் இந்த செயலைக் கண்ட பிரம்மனும் வருத்தமடைந்தார். பின் இந்திரனைக் கண்டு கடும் கோபத்தில் - முக்யபிராணதேவரே ஜீவோத்தமராக இருக்கிறார். இவர் யாருக்கும் அடிமை இல்லை. உபநிஷத்களால் வணங்கப்படுபவராக இருக்கிறார் - என்றார். இப்படி பிராணதேவரை துதித்து, அவரைக் கைப்பிடித்து மேல் எழுப்பினார். பிறகே மொத்த உலகமும் சகஜ நிலைக்குத் திரும்பியது. 

கே: ’ததோ கிரௌ பபாதேஷ இந்த்ரவஜ்ராபிதாதித: | பவமானஸ்ய சேதஸ்ய வாயோ ஹனுரபஜ்யத’ என்று வால்மிகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திரன் வஜ்ராயுதத்தால் அடித்ததால், ஹனுமந்ததேவரின் இடது தாடை (ஹனு) உடைந்தது என்று இதன் பொருள். இதனாலேயே இவர் ஹனுமான் என்று அழைக்கப்பட்டார் அல்லவா?

ப: இந்த ஸ்லோகத்திற்கு, நிர்ணயபாவசந்திரிகையில் கோவிந்தாசார்யர் மிகவும் அழகாக உரை எழுதியிருக்கிறார். ’அபஜ்யத?’ என்பது கேலியாக கேட்கப்பட்ட கேள்வி. ’ஹனுவை (தாடையை) உடைக்கவில்லை’ என்பதே இந்த ஸ்லோகத்தின் உள்ளர்த்தம். ஆகவே, சங்க்ரஹ ராமாயணத்தில் ‘பங்கே ப்ரஸக்தேSபி ந பங்கமாப ஹனு: ஷிஷோர்யத்தனுமானதோSயம்’, உடையும் நிலையில் அந்த குழந்தையின் தாடை இருந்தாலும், அது உடையவில்லை. ஆகையால் இவர் ஹனுமான் என்று பெயர் பெறட்டும் என்று தேவேந்திரன் தானே சொல்லி, ஹனுமந்ததேவரின் கழுத்தில் ஒரு அழகிய மாலையை சமர்ப்பித்தான். 

கே: ஹனுமான் என்றால்?

ப: ’ஹனு’ என்றால் இம்சை - தன்னை எதிர்ப்பவர்களுக்கு இம்சையைக் கொடுப்பவன் என்று பொருள். ‘ஹனு’ என்றால் ‘கதி’ என்று பொருள் கொண்டால் யாராலும் தடை செய்யப்பட முடியாதவன் என்றும் காற்றின் மூலமாக எல்லா இடங்களுக்கும் பயணிப்பவன் என்றும் பொருள் வரும். ‘ஹனு’ என்றால் ‘ஞானம்’ என்று பொருள் கொண்டால் என்றும் அழியாத உண்மையான ஞானத்தைப் பெற்றவன் என்று பொருள் வரும். துஷ்டர்களுக்கு இம்சை, சஜ்ஜனர்களுக்கு ஞானம் கொடுப்பவன் என்றும்கூட இந்தப் பெயரின் பொருள் ஆகும். 

கே: ஹனுமந்ததேவரின் குரு யார்?

ப: சூரியனே ஹனுமந்ததேவரின் குரு. ஸ்ரீகிருஷ்ணனுக்கு சாந்திபினி முனிவர் எப்படி குருவாக இருந்தாரோ, அப்படி சூர்யனின் அந்தர்யாமியாக இருந்த நாராயணனே இவரின் குருவாக இருந்தார்.

கே: சூரியனிடம் ஹனுமந்ததேவர் எப்படி பாடம் படித்தார் என்பதற்கு விவரங்கள் இருக்கின்றதா?

ப: மத்வநாமாவில் ஸ்ரீபாதராயர், ‘தரணிகபி முகவாகி ஷப்த சாஸ்த்ரவ படிஸி’ என்று விவரித்திருக்கிறார். சூரியனைப் பார்த்தவாறு, ஹனுமந்ததேவர் வியாகரண சாஸ்திரத்தை படித்தார் என்பதே மிகவும் சுவாரசியமான தகவல். சூரியன் முன்னேறி வரும்போது, அவனைவிட வேகமாக பின்னோக்கி நகர்ந்து போனார். இதனால் வேகத்தில் மட்டுமல்ல, நற்குணங்களிலும் ஹனுமந்ததேவர் சூரியனைவிட உத்தமமானவர் என்று நிர்ணயம் ஆகிறது. சூரியனில் அந்தர்யாமியாக இருக்கும் நாராயணனையே குருவாக ஸ்வீகரித்து, மகாவியாகரண முதலான சாஸ்திரங்களை தினமும் இன்றும்கூட கேட்டவாறே இருக்கிறார். சூரியநாராயணனிடம் பாடம் கேட்டுக்கொண்டிருக்கும் ஹனுமந்ததேவரின் இந்த காட்சியை, காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் நேரத்தில் கண்டிப்பாக நாம் நினைக்க வேண்டும். 

கே: ஹனுமத்விலாஸ என்னும் கிருதியை இயற்றியவர் யார்?

ப: இதை இயற்றியவர் திம்மண்ணதாசர். ஒரு சமயம் அவர் சிறையில் அடைபட்டிருந்தார். அப்போது ஹனுமந்ததேவரின் அருளால் அங்கேயே இந்த கிருதியை இயற்றினார். இதில் மிகவும் அபூர்வமான பல விஷயங்கள் உள்ளன. அப்படியே இதில் உள்ள தாளங்களும்கூட அபூர்வமானவையே.

கே: தாசர்களின் க்ருதிகளில், ஹனுமந்ததேவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில், எதைப் படிக்கவேண்டும்?

ப: ஸ்ரீபாதராஜர் மத்வநாமாவை இயற்றியிருக்கிறார். சாதகர்கள் இதை தினந்தோறும் படிக்கும் வழக்கத்தைக் கொள்ளவேண்டும். எந்தப் பெண், மத்வநாமாவை படிக்காமல் உண்கிறாரோ, அவர் சந்தியாவந்தனம் செய்யாமல் உண்ணும் ஆணுக்கு சமமானவர் என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஸ்ரீவாதிராஜ குருசார்வபௌமர் ‘சுவ்வீ ஹனுமந்த’ என்று துவங்கும் மத்வசுவ்வாலியில் மிகவும் அபூர்வமான தகவல்களை சொல்லியிருக்கிறார். ‘கரவமுகித முக்யபிராண’ என்று ஹனுமந்ததேவரை நினைப்பதற்கான பல பாடல்களும் உள்ளன. 

கே: மத்வநாமாவைப் படித்தால் என்ன பலன்?

ப: ஸ்ரீபாதராஜர் மத்வநாமாவை இயற்றினால், அதற்கு ஸ்ரீஜகன்னாததாசர் பலஸ்ருதியை இயற்றியிருக்கிறார். சூரியகிரகண காலத்தில், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட, ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்தால் எவ்வளவு பலன் கிடைக்குமோ அவ்வளவு பலன் மத்வநாமாவை படித்தால் கிடைக்கும். ஆகையால், மத்வநாமாவைப் படித்து மிகப்பெரிய பலன்களைப் பெறுவோமாக. 

கே: மூலரூபத்தில் இருக்கும் சக்தி, வலிமையானது ஹனுமன் முதலான அவதாரங்களில் இருப்பதில்லை என்று சிலர் சொல்கின்றனர். இது சரியா?

ப: இந்தக் கேள்விக்கு பளித்தா சூக்தமே பதிலாகும். மூலரூபத்தில் எவ்வளவு ஞானம் மற்றும் சக்தி இருக்கின்றதோ, அவை அனைத்தும் அப்படியே அவதாரங்களிலும் இருக்கிறது. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. 

கே: ஹனும பீம மத்வ அவதாரங்களில், ஞானம் மற்றும் சக்தி படிப்படியாக குறைந்து வந்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இவர்களின் கதையைப் படித்தாலும், அது உண்மையாக இருக்குமோ என்று நமக்குத் தோன்றுகிறது. இதற்கு என்ன பதில்?

ப: ’ஹனுமதாத்யவதாரகள பேதகள திளிவவ தனுஜ கோராந்ததமஸ்ஸிகே யோக்யனு ந ஸம்சய’ என்று ஹரிகதாம்ருதசாரத்தில் ஸ்ரீஜகன்னாததாசர் சொல்லியவாறு ஹனும பீம மத்வ இந்த அவதாரங்களில் யார் ஞான, சக்திகளில் வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறாரோ, அவர் தமோயோக்யனாகிறார்.

கே: அப்படியென்றால் ஹனுமந்தனின் வாலைத் தூக்குவதற்கு பீமசேனதேவரால் ஏன் முடியவில்லை?

ப: சௌகந்திகா புஷ்பத்தைக் கொண்டு வரச்சென்றபோது, பீமசேனதேவரால் ஹனுமனின் வாலை தூக்கமுடியவில்லை என்னும் கதை மகாபாரதத்தில் உள்ளது. ஆனால், இது ஒரு நாடகம் என்றே தெரிந்துகொள்ள வேண்டும். இதையே ‘க்ரீடாமாத்ரம்’ என்று வாயுஸ்துதியில் சொல்லப்பட்டிருக்கிறது. 

கே: ஆனாலும், ஹனுமந்ததேவரில் காணப்பட்ட சக்தி பீமசேனதேவரிடம் காணப்படவில்லை. பீமசேனதேவரிடம் காணப்பட்ட சக்தி மத்வரிடத்தில் காணப்படவில்லை. இதற்கு என்ன காரணம்?

ப: மூலரூபத்தில் காணப்பட்ட ஞானம் மற்றும் சக்தியை, வாயுதேவர் தனது அனைத்து அவதாரங்களிலும் அப்படியே கொண்டுவரும் சாமர்த்தியம் உள்ளவர். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஹனுமந்தனின் அவதாரத்தில் எவ்வளவு சக்தியை வெளிப்படுத்தினாரோ, அதை பீமசேன அவதாரத்தில் காட்டவில்லை. பீமசேனதேவராக காட்டிய சக்தியை, மத்வராக வெளிப்படுத்தவில்லை. இப்படி சக்தியை வெளிக்காட்டுவதில் வேறுபாடு இருக்கலாமே தவிர, அவர்களிடம் இருந்த சக்தியில் எந்தவித வேறுபாடும் இருக்கவில்லை.

கே: அப்படியென்றால் இந்திராதி தேவர்களின் அவதாரங்களும் இதேபோல்தானா?

ப: ருத்ர, இந்திர ஆகிய தேவர்கள் அவதரிக்கும்போது, மூலரூபத்தில் இருக்கும் ஞான, சக்திகள் அப்படியே அவதாரங்களிலும் கொண்டு வருவதற்கு சாத்தியம் இல்லை. மூலரூபத்தைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எப்போதும் இருக்கும் என்று விதி இல்லை. ஆனால், ருஜுஜீவிகள் அவதரிக்கும்போது அவர்களின் மூலரூபத்தைப் பற்றிய சிந்தனை அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. மூலரூபத்தில் இருக்கும் ஞான, சக்திகளையும் அப்படியே பெற்றுக்கொள்வதில் சாமர்த்தியம் உள்ளவர்களாக இருக்கின்றனர். 

கே: ஜராசந்தனை பீமசேனதேவர் கொல்லும்போது, தம்மிடம் இருந்த சக்தி போதாமல், தன்னுடைய மூலரூபத்திலிருந்து சக்தியை கொண்டுவந்து அதை பயன்படுத்தினார் என்று சிலர் சொல்கின்றனர். இது சரியா?

ப: சிலர் இப்படி சொல்கின்றனர். ஆனால் இதற்கு ஏதும் ஆதாரம் இல்லை. லட்சுமணன் இந்திரஜித்துடன் போர் புரிந்தபோது தன் மூலரூபத்தை நினைத்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதைப்போல், ஜராசந்தனுடன் போர் புரிந்தபோது பீமசேனர் தன்னுடைய மூலரூபத்தை நினைத்தார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ‘இச்சாவ்யக்தி: ப்ராயஷோ மாருதஸ்ய’ என்னும் வசனத்தில் சொல்லியவாறு, தம்மிடம் இருந்த அதிக சக்தியை அந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தினார் என்று மட்டுமே தெரியவேண்டும். 

கே: ஸ்ரீராமனை ஹனுமந்ததேவர் முதன்முதலில் பார்த்தபோது அவர் சன்யாசியாக இருந்தார் என்று சொல்கின்றனர். இது எப்படி?

ப: ’ஸ பிக்‌ஷுவேஷோ ஹனுமான் ஸ்வவேஷம் விஹாய விஷ்வேஸ்வர பார்ஷ்வமாப்ய’ என்று சங்க்ரஹ ராமாயணத்தில் இவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஹனுமந்ததேவர் தனது நிஜமான ரூபத்தை விட்டு ஒரு வறியவரைப் போல் வேடமிட்டு, ஸ்ரீராமனின் பாதங்களில் சாஷ்டாங்கமாக வணங்கினார் என்று தெரிகிறது. ஸ்ரீஹரியிடம் நாமும் அனைத்தையும் தியாகம் செய்து, அவர் பாதங்களைப் பற்றவேண்டும். அப்படியே ஹனுமந்ததேவரும் தன்னிடமிருந்த அனைத்தையும் தியாகம் செய்து, ஒரு துறவியைப் போல் வேடமிட்டு, தன்னை ஸ்ரீராமனிடம் சமர்ப்பணம் செய்தார் என்று தெரியவருகிறது. ‘சதா சமஸ்தஸ்ரமபாக் ஸுரேஷ்வரோ விசேஷதோ கல்ப பஜத்வராஷ்ரமம்’ என்பதற்கேற்ப இவர் எப்போதும் தன்னுடைய தர்மத்தை விடாமல் பின்பற்றிவந்தார். மேலும் த்ரிதண்டி சன்யாசிகள் ஆனார் என்றும் தெரியவருகிறது. த்ரிதண்டி சன்யாசிகளுக்கு குடுமி, பூணூல் ஆகியவை இருக்கும். 

கே: சன்யாசிகள், கிருஹஸ்தர்களை வணங்கக்கூடாதல்லவா?

ப: மேற்சொன்ன பதிலின்படி, ஹனுமந்ததேவர் சன்யாச ஆசிரமத்தை தரிக்கவில்லை, வெறும் சன்யாசியாக வேஷமிட்டுக் கொண்டார் என்றே தெரியவேண்டும். மேலும் அர்ஜுனன், த்ரிதண்டி சன்யாசி வேஷத்தை தரித்தபோது, அவனைவிட குணத்தில் பெரியவரான பலராமனை வணங்கியதைப் போல, இங்கேயும் ஸ்ரீராமன் தன்னைவிட அனைத்திலும் உத்தமர் என்பதால் ஹனுமந்ததேவர் ஸ்ரீராமனை வணங்கினார். 

கே: ஸ்ரீராமனை முதன்முதலில் கண்டபோது சுக்ரீவன் ஏன் பயந்து ஓடினான்?

சுக்ரீவன் மட்டுமல்ல வேறு யாராலும் ஸ்ரீஹரியை நேரில் காண்பதற்கு சாத்தியம் இல்லை. வாயுதேவரின் மூலமாகவே அவரைக் காண்பது சாத்தியம். ஆகையால், ஹனுமந்ததேவரே சுக்ரீவனை அழைத்துப் போய், ஸ்ரீராமனை சந்திக்க வைத்து, அவர்களிடையே நட்பு உண்டாக்கினார்.

கே: ஸ்ரீராமன், ஹனுமந்ததேவரை முதன்முதலில் பார்த்தபோது எப்படிப் புகழ்ந்து பேசினார்?

ப: ' ந ரிக்வேத வினீதஸ்ய ந யஜுர்வேததாரிண: ந சாமவேதவிதுஷ: ஷக்யமேவம் ப்ரபாஷிதும் நூனம் வ்யாகரணம் க்ருத்ஸ்னம் அனேன பஹுதாஷ்ருதம்’. ரிக்வேத, யஜுர்வேத, சாமவேத இவற்றை அத்யயனம் செய்தவர்களாலும் இவ்வளவு தெளிவாக பேசமுடியாது. வியாகரணத்தை பலமுறை இவன் படித்திருக்கிறான். இவனின் பேச்சில் ஒரே ஒரு தவறான் சொல்லும் கிடையாது. இவனது உடலில் எந்தவொரு தோஷமும் இல்லை. இவனது ஆபரணங்களும் இவனுடனேயே பிறந்தன. இப்படியாக ஸ்ரீராமன், ஹனுமந்தனைப் பற்றி புகழ்ந்து பேசினார்.

கே: ஹனுமந்ததேவருக்கு சமம் என்று வேறு யாருமே இல்லையென்றாலும், அவரின் பலம் அவருக்கே தெரியாதவாறு முனிவர்கள் அவருக்கு சாபம் கொடுத்திருந்தனர் என்று பகஸ்த்ய ரிஷிகள் ஸ்ரீராமனிடம் சொல்கிறார். இது எப்படி சாத்தியம்?

‘அமோகஷாப்யை: ஷாபஸ்து தத்தோSஸ்ய முனிபி: புரா |
ந வேத்தா ஹி பலம் ஸர்வம் பலே ஸன்னரிமர்தன: ||’

ப: ஆம். ராமாயணத்தில் இப்படி சொல்லியிருக்கின்றனர். ஹனுமந்தன் அவ்வப்போது ரிஷிகளின் ஆசிரமத்தில் புகுந்து, அங்கிருந்த யக்ஞ பாத்திரங்களையும், மற்ற பொருட்களையும் சேதப்படுத்திக் கொண்டிருந்தார். இதனை சகிக்காத ப்ருகு, அங்கிரஸ முதலான ரிஷிகள் அவருக்கு கீழ்க்கண்டவாறு சாபம் கொடுத்தனர்.

பாதஸே யத்ஸ்மாஷ்ரத்ய பலமஸ்மான் ப்லவங்கம |
தத்தீர்ககால வேத்தாஸி நாஸ்மாகம் ஷாபமோஹித: |
யதா தே ஸ்மார்யதே கீர்த்தி: ததா தே வர்ததே பலம் ||

ஏ கபியே, உன் சக்தியின் கர்வத்தில் எனக்கு தொந்திரவைக் கொடுக்கிறாய். இனி உன் சக்தியைப் பற்றிய அறிவே உனக்கு இல்லாமல் போகட்டும். யாராவது உனக்கு நினைவுபடுத்தினால் மட்டுமே உன் சக்தியைப் பற்றி உனக்கு தெரியட்டும் - என்று சாபமிட்டனர் என்ற கதை பிரபலமாக உள்ளது. ஆனால் இது வெறும் அலங்காரத்திற்காக எழுதப்பட்ட கதையாகும். இதையே உண்மை என்று அறியக்கூடாது. ராமாயணத்தில் ஆங்காங்கே இத்தகைய அலங்காரங்களை பயன்படுத்தியுள்ளனர். 

கே: இதனை உண்மையான கதை இல்லை என்று சொன்னால், வாலி-சுக்ரீவர்கள் அடிக்கடி போர் புரிந்தபோது, ஹனுமந்தன் ஏன் அவர்களை தடுக்கவில்லை? மேலும் ‘ரிஷிசாப ஹ்ருதபலஸ் ததைவ கபிஸத்தம: | ஸிம்ஹ: குஞ்சரருத்தோ வா ஆஸ்தித: ஸஹிதோ ரணே ||’ என்று முனிவர்களின் சாபத்தினால் ஹனுமந்தன் தன் சக்தியை உணரவில்லை. யானையின் எதிரில் சிங்கம் அமைதியாக இருப்பதைப்போல வாலி-சுக்ரீவரின் போரின்போது அமைதியாக நின்றிருந்தார் என்று ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே. இது எப்படி? 

ப: இதையுமே அலங்காரத்திற்காக எழுதப்பட்ட கதையென்றே அறியவேண்டும். ஸ்ரீராமனின் விருப்பத்தை அறிந்துகொண்டு ஹனுமந்தன் அமைதியாக இருந்தார். மேலும் ஸ்ரீராமனின் மூலமாக இவர்கள் இருவரின் போர் முடியவேண்டும் என்று தெரிந்ததாலேயே அமைதியாக இருந்தார். அவருக்கு போரை நிறுத்தக்கூடிய சாமர்த்தியம் இல்லை என்பதால் அல்ல. 

கே: இவற்றையெல்லாம் உண்மையான கதை அல்ல என்று சொல்லிவிட்டால், முனிவர்கள் கொடுத்த சாபம் வீணாகிப் போனதா?

ப: முக்யபிராணதேவரை உபநிஷத்கள் ’ஆகணாஷ்மசம’ என்று வர்ணிக்கின்றன. ஹனுமந்தனை யாருடைய சாபமும் பாதிப்பதில்லை. யார் கொடுக்கும் வரமும் பாதிப்பதில்லை. இப்படி சொல்லியதால், வரமோ சாபமோ, அது வீண் ஆவதில்லை. சாபம் கொடுத்தவர்களுக்கு அவர்களுடைய தவவலிமை குறைகிறது. இதனாலேயே, புராணங்களில் வரம் அல்லது சாபம் கொடுக்கிறார்கள் என்று அறியவேண்டும். 

கே: ஹனுமந்தருக்கு பற்பல வரங்களும் கிடைத்திருக்கின்றன. அவை அனைத்தும் வீணே என்று எப்படி சொல்ல முடியும்?

ப: ஆம். சூர்ய, வருண, யம, குபேர, ருத்ர முதலான பல தேவதைகள் மற்றும் ரிஷிமுனிவர்கள், ஹனுமந்தருக்கு வரங்களை அளித்துள்ளனர். அந்த வரங்களால் ஹனுமந்தருக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை. கோடீஸ்வரருக்கு சில சில்லறைகளைக் கொடுத்ததுபோல் அவை அனைத்தும் வீணே. ஸ்ரீஹரி மற்றும் லட்சுமிதேவி இவர்கள் இருவரும் கொடுத்த வரங்கள் மட்டுமே ஹனுமந்தரின் சிறப்புக்குக் காரணமாக இருக்கின்றன. மற்றவர்களின் வரங்கள், அவரவர்களின் நன்றிக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பரிசு எனலாம். 

கே: முக்யபிராணரின் அவதாரமான ஹனுமந்தர், லங்கா பட்டணத்தில் நுழைந்தபோது இரவு நேரத்தில் பல பெண்களை நிர்வாண கோலத்தில் கண்டார். இந்த சம்பவத்தைப் பார்த்தால், ஹனுமந்ததேவருக்கு அஞ்ஞானம் மற்றும் விபரீதஞானம் (தவறான அறிவு) இருந்ததென்று தெரிகிறதா?

ப: ஹனுமந்ததேவருக்கு ஒரு நொடிகூட அஞ்ஞானம், விபரீதஞானம் வருவதற்கு சாத்தியமே இல்லை. இதெல்லாம் வெறும் கற்பனை என்று அறியவேண்டும். 

கே: மண்டோதரியைப் பார்த்து சீதை என்று நினைக்கிறார். பிறகு சீதையின் பாதங்களில் இருக்கவேண்டிய தாமரை முதலான சின்னங்கள் இவருக்கு இல்லை என்பதால் இவர் சீதை இல்லை என்று தீர்மானிக்கிறார். மண்டோதரியை தவறாக சீதை என்று நினைத்த பாவம் போவதற்காக ஆயிரம் கோ-தானங்களை செய்கிறார் என்று ஸ்ரீவாதிராஜர் மத்வசுவ்வாலியில் தெரிவிக்கிறார். அவரது தவறான ஞானம் இல்லையென்றால், இதெல்லாம் எதற்கு செய்ய வேண்டும்?

ப: இதுவும்கூட ஒரு கற்பனை / அலங்காரம் என்று அறியவேண்டுமே தவிர உண்மையல்ல. சீதை எப்படிப்பட்டவர்? அவரது ஸ்வரூபம் எத்தகையது? இதைப்பற்றிய முழுமையான ஞானம் வாயுதேவருக்கு கண்டிப்பாக இருக்கிறது. அவர் செய்த ஒரு அலங்காரத்தை வாதிராஜரும் சுவ்வாலியில் அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறார். 

கே: லங்கா பட்டணத்தை நெருப்பால் சுடமுடியாது. வேறு எந்த விதத்திலும் அழிக்கமுடியாது என்று ஒரு வரம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, ஹனுமந்தரின் வாலில் இருக்கும் நெருப்பு அந்நகரத்தை எப்படி சுட முடியும்?

ப: ராவணன் பற்ற வைத்த நெருப்பு லங்கா பட்டணத்தை சுடுவதற்கு சாத்தியம் இல்லை. ஆகையால் தாத்பர்ய நிர்ணயத்தில் ‘அதஹ்யதாஸ்ய தேஜஸா’ என்று தம்மிடம் இருந்த சாமர்த்தியத்தினால் ஹனுமந்தர் லங்கா பட்டணத்தை சுட்டார் என்று அறியவேண்டுமே தவிர, அக்னிதேவதை சுட்டார் என்று அறியக்கூடாது. 

கே: ஹனுமந்ததேவரிடம் நாம் என்னவென்று வேண்ட வேண்டும்?

ப: விஜய ரகுபதி மெச்சி தரணிஸுதெயளிகேயெ 
பஜிஸி மௌக்திகத ஹாரவனெ படெத |
அஜபதவியனு ராம கொட பரலு ஹனுமந்த
நிஜபகுதியனு பேளி வரவ படெத ||

பதினோராயிரம் ஆண்டுகள் நல்லாட்சி புரிந்து, இறுதியில் ஸ்ரீராமச்சந்திரன் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை வழங்கினார். அப்போது ஹனுமந்தனை ஏதேனும் ஒரு வரம் கேட்கச் சொல்லி பணித்தார். என்ன வேண்டுமோ கேள் என்று சொன்னபோது, ஹனுமந்ததேவர் ‘ப்ரவர்த்ததாம் பக்திரலம் க்‌ஷணே க்‌ஷணே த்வயீஷ மே ஹ்ராஸ விவர்ஜிதா ஸதா’ என்று எப்போதும் உன்னையே நினைக்கும் பக்தி ஒன்றே எனக்கு வேண்டும். இதைத்தவிர வேறு ஆசை எதுவும் எனக்கு இல்லை என்று பிரார்த்தித்தார். ஹனுமந்ததேவரின் இந்த வேண்டுகோளையே நாமும் பின்பற்றி, தற்காலிக சுகங்களைத் தருவனவற்றை வேண்டாமல், பக்தி ஒன்றையே வேண்டுவோமாக. 

கே: ஹனுமந்ததேவரை பூஜிக்க எந்த ஸ்லோகத்தை சொல்லவேண்டும்?

ப: மஹாவ்யாகரணாம்போதி மந்தமானஸமந்தரம் |
கவயந்தம் ராமகீர்த்யா ஹனுமந்தம் உபாஸ்மஹே ||

மஹாவியாகரணம் ஒரு பாற்கடல். ஹனுமந்ததேவரின் மனதே அதைக் கடையும் மந்தாரமலை. ஸ்ரீராமனின் கீர்த்தனையே அதிலிருந்து வெளிவந்த அமிர்தம். இப்படி ராமசரிதாம்ருதத்தை அருளிய ஹனுமந்ததேவரை நிரந்தரமாக பூஜிப்போமாக. 

கே: ஹனுமந்ததேவரின் கதையை சுருக்கமாக சொல்லவும். 

ப: ஹனுமந்ததேவரின் தலைமையில் கபிகள் சீதையை கண்டுபிடிக்கக் கிளம்பினர். அலைந்து திரிந்ததில் ஏற்பட்ட பசியில் மயக்கம் ஏற்பட்டது. ஒரு பெரிய குகையினைக் கண்டனர். எங்கு தேடினாலும், பழம், நீர் எதுவும் கிடைக்கவில்லை. இந்த குகையிலாவது ஏதேனும் கிடைக்குமா என்று உள்ளே சென்றனர். உள்ளே அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. உள்ளே ஒரு பெரிய வனம். காய், பழங்களால் நிரம்பிய ஒரு அழகிய தோட்டம். அங்கு ஒரு அழகிய பெண் இருந்தாள். அனைத்துமே கபிகளின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. போன உயிர் திரும்பி வந்ததென்று நினைத்தன. அந்தப் பெண் வேறு யாரும் இல்லை. ஹேமா என்னும் அப்ஸரசின் தோழி ஸ்வயம்ப்ரபை. ஒவ்வொரு கபியையும் அழைத்து உபசரித்தாள். அவளின் உபசரிப்பில் கபிகள் மிகவும் மகிழ்ந்தன.

சிறிது நேரம் கழித்து, சீதாவை தேடும் படலத்திற்காக மறுபடி அங்கிருந்து கிளம்பவேண்டும் என்ற நேரம் வந்தது. அப்போது தாரா என்னும் கபி சொன்னது - ’சீதையை தேடுவது நம்மால் சாத்தியமில்லை. சீதையை கண்டுபிடிக்காவிட்டால் மரணதண்டனையிலிருந்து தப்பமுடியாது. ஆகையால் சிறிது காலம் இங்கேயே தங்கிவிடுவோம். இந்த அழகான தோட்டத்தை விட்டு மறுபடி கிஷ்கிந்தைக்குப் போகவே வேண்டாம்’. 

தாராவின் பேச்சைக் கேட்டு, ஜாம்பவந்த, அங்கத போன்ற கபிகள் சரி சரி என்று ஆமோதித்தனர். அப்படியே ஆகட்டும் என்று ஆனந்தக் கூத்தாடினர். ஆனால் ஹனுமந்ததேவர் மட்டும் இதற்கு ஒப்பவில்லை. அனைத்து கபிகளைக் கண்டு ஹனுமன் பேசத் துவங்கினார்.

‘நஹி வாயுஸூனு ராமப்ரதீபம் வசனம் ஸஹேத’ - ஸ்ரீராமனுக்குப் பிடிக்காத எந்த ஒரு செயலையும் இந்த ஹனுமந்தன் செய்வதில்லை - என்று கர்ஜித்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீராமனின் கட்டளையை / வேலையை ஹனுமன் மறக்கவில்லை. மற்றவர்கள் மறந்தபோது அவர்களை எச்சரிப்பவனும் ஹனுமனே ஆகியிருக்கிறார். 

கே: ஹனுமந்ததேவரிடம் நாம் என்னவென்று பிரார்த்திக்க வேண்டும்?

ப: 
ப்ரவர்ததாம் பக்திரலம் க்‌ஷணே க்‌ஷணே
த்வயேஷ மே ஹ்ராஸவிவர்ஜிதா ஸதா |
அனுக்ரஹஸ்தே மயி சைவமேவ
நிரூபதௌ தௌ மம ஸர்வகாம ||

ஒவ்வொரு கணமும் உன்னிடம் பக்தி வளர்ந்தவாறே இருக்கவேண்டும்; என்றும் அது குறைய  வேண்டாம். உன் அருளும் எனக்கு அப்படியே இருக்கட்டும். இந்த இரண்டும் தூய்மையாக இருக்கட்டும் என்று ஹனுமந்ததேவர் ஸ்ரீஹரியிடம் வேண்டுக்கொள்கிறார். நாமும் இதே பிரார்த்தனையை செய்வோமாக. 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***


No comments:

Post a Comment