Monday, March 12, 2018

8/12 சர்வமூல கிரந்தங்கள்

8/12 சர்வமூல கிரந்தங்கள்

ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்



கேள்வி: ஸ்ரீமதாசார்யரின் சர்வமூல கிரந்தங்களை பெண்கள் படிக்கலாமா?

பதில்: கண்டிப்பாக படிக்கக்கூடாது.

கே: சில கல்லூரிகளில் பெண்களுக்கும் சர்வமூல கிரந்தங்களை சொல்லிக் கொடுக்கிறார்களே?

ப: இது தவறு.

கே: வேதத்திற்கு சம்பந்தப்பட்டவற்றைத் தவிர இதர சர்வமூல கிரந்தங்களை படிக்கலாம் என்கிறார்களே?

ப: சர்வமூல கிரந்தங்கள் அனைத்தும் வேதங்களுக்கு சமம் என்றே கருதப்படுகின்றன. பெண்கள், நான்காம் வர்ணத்தவர்கள் மற்றும் பிரம்மபந்துகளுக்கு (பிறப்பால் பிராமணராக இருந்தாலும், அதற்கான தகுதியை இழந்தவர்கள்) சர்வமூல கிரந்தங்களைப் படிப்பதற்கு அதிகாரமில்லை. 

கே: ’க்ராமே க்ராமீணஸாமான்யே’ (மத்வவிஜய, 15-1) என்னும் ஸ்லோகத்தைப் பார்த்தால், ஸ்ரீமதாசார்யரே பொதுமக்களின் முன் சர்வமூல கிரந்தங்களின் உபன்யாசத்தை செய்திருக்கிறார் என்று தெரிகிறதே?

ப: உபன்யாசத்தின் மூலம் அனைத்து சர்வமூல கிரந்தங்களையும் அனைவரும் கேட்கலாமே தவிர, புத்தகம் வைத்துக்கொண்டு பாடம் படிப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதே இதன் பொருள்.

கே: த்வாதச ஸ்தோத்திரத்தை மட்டும் பெண்கள் ராகத்துடன் பாடலாம் என்கிறார்களே?

ப: த்வாதச ஸ்தோத்திரம் சர்வமூல கிரந்தத்தில் சேர்த்தி இல்லை என்று அவர்கள் நினைத்தார்களேயானால், தாராளமாகப் பாடட்டும். 

கே: சர்வமூல கிரந்தங்கள் என்றால்?

ப: ஜகத்குரு ஸ்ரீமதாசார்யர் இயற்றிய கிரந்தங்களுக்கு சர்வமூல கிரந்தங்கள் என்று பெயர். 

கே: எவ்வளவு கிரந்தங்கள்?

ப: சரியான பதில் அளிப்பது கஷ்டம்.

கே: அப்படியென்றால் சர்வமூல கிரந்தங்கள் மொத்தம் 37 என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதில்லையா?

ப: 37 கிரந்தங்களே சர்வமூலம் என்று யார் சொல்கிறார்களோ, அவர்களே இன்னும் அதிக கிரந்தங்கள் உள்ளன என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆகையால் ஸ்ரீமதாசார்யர் நிறைய கிரந்தங்கள் எழுதியிருக்கிறார் - அவற்றில் நமக்குக் கிடைத்தது 37 மட்டுமே என்று அறியவேண்டும். 

கே: நீங்கள் இப்படி சொல்வதற்கு என்ன ஆதாரம்?

ப: நானாசுபாஷிதஸ்தோத்ர காதாதிக்ருதிஸத்க்ருதீ: |
த்வயி ரத்னாகரே ரத்னஷ்ரேணீர்வா கணயந்தி கே ||
(மத்வ விஜய 15-84)

ஸ்ரீமதாசார்யரின் கிரந்தங்களை எண்ணுவதற்கு யாராலும் சாத்தியமில்லை என்று நாராயண பண்டிதர் கூறுகிறார். பல கிரந்தங்களை ஆசாரியரின் சிஷ்யர்கள் படி எடுத்துள்ளனர். பற்பல கிரந்தங்களை அவர்களால் படியெடுக்க முடிந்திருக்கவில்லை.

கே: நமக்குக் கிடைத்த கிரந்தங்களை மட்டும் கணக்கிட்டு மொத்தம் 37 சர்வமூல கிரந்தங்கள் என்று சொல்லலாமல்லவா?

ப: சொல்லலாம். ஆனால் மேலும் கிரந்தங்கள் கிடைத்தால், அவற்றை ஒப்புக்கொள்ளும் பரந்த மனம் வேண்டும். 

கே: ஹ்ருஷிகேச தீர்த்தரின் கையெழுத்துப் பிரதியில் 51 கிரந்தங்கள் கிடைத்துள்ளன என்கிறார். அந்த மிச்ச 14 கிரந்தங்கள் எவை?

ப: கந்துக ஸ்துதியையும் சேர்த்து மொத்தம் 38 கிரந்தங்கள் என்பது வாடிக்கை. இதனுடன் நியாய பத்ததி மற்றும் திதி நிர்ணய கிரந்தங்களைச் சேர்த்தால் 40 ஆகிவிடும். த்வாதச ஸ்தோத்திரங்களை தனித்தனி கிரந்தங்களாக கணக்கிட்டால் மொத்தம் 51 என்று சொல்லலாம். ஆனால், நாராயண பண்டிதர், ஸ்ரீமதாசாரியரை ‘ஷத கிரந்தகர்த்ரு’ (நூறு கிரந்தங்கள் எழுதியவர்) என்கிறார். முன்னர் சொன்ன ஸ்லோகத்தில் ‘அஸங்க்ய கிரந்தகர்த்ரு’ (எண்ணிக்கையில்லாத கிரந்தங்கள் எழுதியவர்) என்றும் சொல்லியிருக்கிறார். 

கே: சர்வமூல கிரந்தத்தில் எந்த கிரந்தத்தை நாராயண பண்டிதர் அதிகமாகப் புகழ்ந்திருக்கிறார்?

ப: அனைத்தையுமே சரிசமமாகவே புகழ்ந்திருக்கிறார். ஒன்பதாம் சர்க்கத்தில், பிரம்மசூத்திர பாஷ்யத்தை பற்பல ஸ்லோகங்களின் மூலம் வர்ணித்திருக்கிறார். 

கே: பிரம்மசூத்திர பாஷ்யத்தின் சிறப்பு என்ன?

ப: மோட்ச சாஸ்திரம் என்றே இதற்குப் பெயர். ’மஹானந்த தீர்த்தஸ்ய யே பாஷ்யபாவம்’ என்னும் மத்வவிஜய ஸ்லோகம் - மோட்சம் வேண்டுமென்றால் இந்த கிரந்தத்தை முழுவதுமாக படிக்கவேண்டியது அவசியம் - என்கிறது. இந்த சிறப்பான கிரந்தத்தை, ஸ்ரீமதாசார்யர், பத்ரி நாராயணரின் சன்னிதியில் இயற்றியிருக்கிறார். 21 குபாஷ்யங்களில் இருக்கும் தோஷங்களை கவனித்து, பிரம்மசூத்திரத்தின் சரியான பொருளை அனைவரும் தெரியப்படுத்துவதற்காக இந்த கிரந்தத்தை இயற்றியிருக்கிறார். 

அனைத்து வேதங்களையும் ஸ்ரீஹரியிடம் சமர்ப்பிப்பதன் மூலம் அவரின் குணபரிபூர்ணத்தை நிறுவினார். அத்தகைய ஸ்ரீஹரியிடம் ஒரு துளி தோஷம் இருப்பதற்கும் சாத்தியம் இல்லை என்று நிரூபித்து, வாழ்க்கையில் முக்கியமான சாதனையைப் பற்றி தெரிவித்து, மோட்ச ஸ்வரூபத்தை மிகவும் அற்புதமாக இந்த கிரந்தத்தில் நிர்ணயம் செய்திருக்கிறார். 

இதே பிரம்மசூத்திர பாஷ்யத்தை பாடம் எடுக்கும்போது, சனகாதி ரிஷிகள், சேஷாதி தேவதைகள் ஆகியோர் வந்து அந்த பாடத்தை கேட்பர் என்று பண்டிதர் எழுதியிருக்கிறார். 

கே: உபநிஷத்களில் ஆசார்யருக்கு மிகவும் பிடித்தமான உபநிஷத் எது?

ப: ஐதரேய உபநிஷத் ஆசார்யருக்கு மிகவும் பிடித்ததாகும். அவர் தன்னுடைய அவதார வேலையை முடிக்கும் அந்த இறுதிக் கணத்திலும், அனந்தேஷ்வரத்தில், இந்த உபநிஷத்தையே பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். இது ரிக்வேதத்தை சேர்ந்தது. நாராயண தத்வத்தின் ரகசியம் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த உபநிஷத்தை பிரம்மதேவர், ரிஷிபரம்பரைக்கு உபதேசிப்பதாக உள்ளது. 

கே: பத்து உபநிஷத்களின் விவரங்களைக் கூறவும்.

ப: 
1. ஐதரேய உபநிஷத்
2. ப்ருஹதாரண்யக உபநிஷத் - இது சுக்ல யஜுர்வேதத்தை சேர்ந்தது. சூர்யதேவர் இதை கற்று, யக்ஞவால்க்யருக்கு உபதேசித்தார். இதை காண்வோபநிஷத் என்றும் அழைக்கிறார்கள்.
3. சந்தோக்ய உபநிஷத். ஹயக்ரீவ தேவரின் வாயிலிருந்து வந்த இந்த உபநிஷத்தை, சேஷசாயியான ஸ்ரீஹரியைக் குறித்து ரமாதேவி துதிக்கிறார்.
4. தலவகாரோபநிஷத். பிரம்ம-ருத்ரர் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதைப் போல் இருக்கும் இந்த உபநிஷத், சாமவேதத்தை சேர்ந்தது. 
5. காடகோபநிஷத். மிகவும் பிரபலமான நசிகேதனின் கதை இதில் உள்ளது. யஜுர்வேதத்தைச் சேர்ந்தது. 
6. தைத்திரிய உபநிஷத். இது கிருஷ்ண யஜுர்வேதத்தை சேர்ந்தது. இதில் ஸ்ரீஹரியின் ஐந்து ரூபங்களை பூஜிக்கும் விதம் மற்றும் அதன் சிறப்புகளும் உள்ளது. 
7. அதர்வண உபநிஷத். இது அதர்வண வேதத்தை சேர்ந்தது. பர-அபர வித்யைகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக இது பிறந்தது.
8. ஷட்ப்ரஷ்னோபநிஷத். இது அதர்வண வேதத்தை சேர்ந்தது. முக்தியிலும்கூட ஜீவர்கள் தாஸ்ய-பாவத்திலேயே இருக்கிறார்கள் என்று வர்ணிக்கிறார்கள்.
9. ஈசாவாஸ்யோபநிஷத். இது சுக்லயஜுர் வேதத்தை சேர்ந்தது. மிகவும் சிறிய உபநிஷத் ஆனாலும், தத்வங்களின் மிகச் சிறந்த விஷயங்களைப் பற்றி பேசுகிறது. 
10. மாண்டுகோபநிஷத். இது அதர்வண வேதத்தை சேர்ந்தது. ஸ்ரீஹரியின் ரூபத்ரய (மூன்று ரூபங்கள்) பற்றி இதில் சிறந்த தகவல்கள் உள்ளன. 

இந்த 10 உபநிஷத்களுக்கும் ஸ்ரீமதாசார்யர் உரை எழுதியிருக்கிறார். இதற்கு ‘உபநிஷத் ப்ரஸ்தான’ என்று பெயர். இவற்றிக்கு ஸ்ரீமதாசார்யர் உரை எழுதியதின் மூலம், இவற்றைப் படிப்பதற்கு மிகவும் எளிய வழியை சொல்லித் தந்திருக்கிறார். 

கே: வேதபிரவசனாச்சார்யர் என்று பெயர் பெற்றிருக்கும் ஸ்ரீமதாசார்யர், வேதத்திற்கு உரை எழுதியிருக்கிறாரா?

ப: வேத அர்த்தங்களை நிர்ணயம் செய்வதற்காக ஸ்ரீமதாசார்யர், ரிக் பாஷ்யம் எழுதியிருக்கிறார். 40 ஸ்லோகங்களுக்கு பொருளை எழுதி, மொத்த வைதிக உலகத்திற்கும் அதன் உட்கருத்தை தெரிவித்திருக்கிறார். அனைத்து கிரந்தத்திற்கும் முடிவுரை இருந்தும், ரிக் பாஷ்யத்திற்கு மட்டும் ஸ்ரீமதாசார்யர் முடிவுரை எழுதவில்லை. இதிலிருந்து, இன்னும் சில வேத பாகங்களுக்கு அவர் உரை எழுதியிருக்கலாம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

கே: கீதா ப்ரஸ்தானம் என்றால் எந்த கிரந்தங்கள்? அவற்றின் சிறப்பு என்ன?

ப: முதன்முதல் கிரந்தமாக ஸ்ரீமதாசார்யர் எழுதிய கிரந்தமே - கீதா பாஷ்யம். முதலாம் பத்ரி பயணத்தில், நாராயணனுக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று கொண்டு சென்ற கிரந்தமே இந்த கீதா பாஷ்யம். மற்றொரு கிரந்தம் கீதா தாத்பர்ய நிர்ணயம். கீதையின் சாராம்சத்தை, அதன் தத்வத்தை அனைவரும் அறியுமாறு இந்த கிரந்தத்தை இயற்றியுள்ளார். கீதா தாத்பர்யம் மற்றும் கீதா பாஷ்யம் இந்த இரண்டு கிரந்தங்களும், சூரிய சந்திரர்களைப் போல, மொத்த உலகத்திற்கும் ஒளியைத் தருகின்றன என்று வர்ணிக்கிறார் நாராயண பண்டிதர்.

கே: புராண மற்றும் இதிகாச கிரந்தங்களை நாம் எப்படி படிக்கவேண்டுமென்று ஸ்ரீமதாசார்யர் ஏதேனும் வழி காட்டியிருக்கிறாரா?

ப: இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்காகவே ஸ்ரீமதாசார்யர், மகாபாரத தாத்பர்ய நிர்ணய கிரந்தத்தை எழுதியிருக்கிறார். இது வெறும் மகாபாரத்தின் பொருளை நிர்ணயம் செய்வதற்காக எழுதப்பட்டது அல்ல, மொத்த சாஸ்திரங்களின் பொருளை நிர்ணயம் செய்வதற்காக எழுதப்பட்டது என்று ஸ்ரீமதாசார்யர் அவரே ‘சமஸ்த சாஸ்த்ரார்த வினிர்ணயோSயம்’ சொல்கிறார். இரண்டாம் முறையாக பத்ரி யாத்திரை செய்தபோது, அங்கு நாராயணரின் ஆசிரமத்தில், வேதவியாசரின் கட்டளைக்கிணங்க, ஸ்ரீமதாசார்யர் எழுதிய கிரந்தமே இது. அதனாலேயே இந்த கிரந்தம் மிகச் சிறப்பு வாய்ந்தது என்று கருதலாம். இதனை படிக்காதவர்கள் மாத்வர் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது என்னும் வாக்கியம் பிரபலமாக இருக்கிறது. 

கே: பாகவத கிரந்தத்தை படிப்பதற்கு ஸ்ரீமதாசார்யர் என்ன வழி காட்டியிருக்கிறார்?

ப: 18 புராணங்களில், பாகவத புராணத்திற்கு ஸ்ரீமதாசார்யர் பொருள் எழுதியிருக்கிறார். அனைத்து புராணங்களையும் எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று இதிலிருந்து வழி காட்டியிருக்கிறார். ரகசிய, தத்துவ, சாராம்ச வாக்கியங்களை அறிந்து புராணங்களை எப்படி படிக்கவேண்டும் என்பதை இந்த கிரந்தத்தில் மூலம் தெரிவிக்கிறார். மிகவும் சுருக்கமான உரையானாலும், இது ஒரு பெரிய கிரந்தம் ஆகும். 

கே: வாஸ்து சாஸ்திரம், சில்ப சாஸ்திரம், ஜப-தபம், ஆசார-விசாரம் இதற்கு சம்பந்தப்பட்டவாறு எந்த கிரந்தத்தை எழுதியிருக்கிறார்?

ப: இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக, தந்திரசார சங்க்ரஹம் என்னும் கிரந்தத்தை எழுதியிருக்கிறார். தேவதைகள் எப்படி கல்பவிருக்‌ஷத்தை வேண்டி தமக்கு வேண்டியதை பெறுகின்றரோ, அப்படியே தந்திரசார என்னும் கல்பவிருக்‌ஷத்தை படிக்கும் சாதகர்கள் தாங்கள் வேண்டியவற்றைப் பெறுகின்றனர், என்கிறார் நாராயண பண்டிதர். இந்த கிரந்தத்தில் மொத்தம் 400 ஸ்லோகங்கள் உள்ளன. அஷ்டமஹா மந்திரங்கள், தேவரபூஜை, ஆலய நிர்மாண விதிகள், பிரம்மகலச, உற்சவம், சிற்பக்கலை, 70 மந்திரங்கள், ஜபம், தியானம், யந்திரம், ஹோமவிதிகள் - ஆகிய அனைத்தைப் பற்றியும் இந்த கிரந்தத்தில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். 

கே: ப்ரகரண கிரந்தங்கள் என்றால் எவை என்று சொல்லுங்கள்.

ப: மொத்தம் 10 ப்ரகரண கிரந்தங்கள் உள்ளன. 

1. ப்ரமாண லக்‌ஷணம்: பிரமாணம் இரு வகைப்படும். வெறும் பிரமாணம். அனுபிரமாணம். இதைப் பற்றி இந்த கிரந்தத்தில் விளக்கியிருக்கிறார். எந்தவொரு விஷயத்தையும் விளக்குவதற்கு, கொடுக்கப்படும் ஆதாரங்களைப் பற்றி தெரியவேண்டுமென்றால், நமக்கு இருப்பது இந்த ஒரே ஒரு கிரந்தம் மட்டுமே. 

2. கதாலக்‌ஷணம்: 24 ஸ்லோகங்கள் கொண்டது. அல்லது ஹ்ருஷிகேச தீர்த்தரின் பாடத்தின்படி, 32 ஸ்லோகங்களைக் கொண்டது. வாதவிவாதங்கள் எப்படி இருக்கவேண்டும், சிஷ்யருடன் எப்படிப் பேசவேண்டும், ஒரு பெரிய சபையில் எப்படி பேசவேண்டும், ஒரு சபையை எப்படி நடத்தவேண்டும், எதிராளியை எப்படி வாதத்தில் வீழ்த்தவேண்டும் - இவற்றைப் பற்றி தெரியவேண்டுமென்றால், கதாலக்‌ஷண கிரந்தத்தைப் படிக்கவேண்டும். 

3. விஷ்ணுதத்வ நிர்ணயம்: இருக்கும் விஷயத்தினாலும் மற்றும் அளவினாலும் இது மிகப்பெரிய கிரந்தம். இதில் மூன்று பாகங்கள் உள்ளன. வேதங்களின் துவக்கம், வர்ண நிர்ணயம், பிரபஞ்ச சத்யத்வ (உலகம் உண்மை) ஆகிய விஷயங்களைப் பேசும் கிரந்தம் இது.

4. தத்வோத்யோத: இந்த கிரந்தத்திற்கு வாதம் என்றே பெயர். காசர்கோடில் விஷ்ணுமங்கள என்னும்  கிராமத்தில் பத்மதீர்த்தருடன் செய்த வாத விவாதத்தின் விவரங்கள் இதில் உள்ளது. மாயாவாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இந்த கிரந்தத்தில் விளக்கியுள்ளார். 

5. மாயாவாத கண்டனம்: எந்த அஞ்ஞானத்தினால் அத்வைத மதம் ஆகியிருக்கிறதோ, அந்த அஞ்ஞானத்தை கண்டனம் செய்து, அதன் மூலம் அனைத்து அத்வைத மதங்களையும் ஒதுக்கிய மிக அற்புதமான கிரந்தம் இது. 

6. உபாதி கண்டனம்: அஞ்ஞானம் என்னும் உபாதி நீங்கினால், ஜீவபிரம்ம ஐக்யம் ஏற்படுகிறது என்பது அத்வைதிகளின் வாதம். இந்த வாதத்தை ஸ்ரீமதாசார்யர் பல்வேறு நிலைகளில் கண்டனம் செய்கிறார்.  ஜீவனுக்கும் பரமாத்மாவிற்கும் ஸ்வபாவத்திலேயே வேறுபாடு உள்ளது. இவை எப்போதும் ஒன்றாகவே முடியாது என்கிறார். அத்வைதிகள் சொல்லும் உபாதியை கண்டனம் செய்வதற்கு வந்த கிரந்தமே இது. 

7. மித்யாத்வ அனுமான கண்டனம்: அத்வைதிகள் உலகத்தை ‘வித்யாபூத’ என்கிறார்கள். மித்யாத்வத்தை கண்டனம் செய்வதன் மூலம், ஜகத்-சத்யம் என்பதை நிரூபிக்க இந்த கிரந்தம் பிறந்திருக்கிறது. இந்த மூன்று கிரந்தங்களை கண்டய-த்ரய என்று அழைக்கின்றனர். ஹ்ருஷிகேச தீர்த்தரின் புத்தகத்தில் மாயாவத தூஷண, உபாதி தூஷண, மித்யாத்வ அனுமான தூஷண என்று இவற்றின் பெயர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

8. தத்வசங்க்யான: வெறும் 12 ஸ்லோகங்கள் மட்டுமே உள்ள சிறிய கிரந்தம். ஆனால் உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் ’இதமித்தம்’ என்று பிரித்து விளக்கியிருக்கிறார். 

9. தத்வ விவேக: 11 ஸ்லோகங்கள் மட்டுமே உள்ள சிறிய கிரந்தம். தத்வசங்க்யான என்னும் மூல கிரந்தத்தின் தொகுப்பு என்று இந்த கிரந்தத்தை சொல்லலாம். தத்வசங்க்யான கிரந்தத்தில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு இதில் ஆதாரங்கள் இருக்கின்றன. 

10. கர்ம நிர்ணயம்: இந்த கிரந்தம் தச-பிரகரணத்தில் சேர்ந்ததில்லை. ஸ்ருதி-பிரஸ்தானத்தில் சேர்ந்தது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்களின்படி 9 பிரகரண கிரந்தங்களே உள்ளன. (கர்ம நிர்ணயத்தைப் பற்றி பின்னர் பார்க்க உள்ளோம்). 

கே: கீதா பிரஸ்தானம், உபநிஷத் பிரஸ்தானத்தைப் பற்றி சொன்னீர்கள். சூத்திர பிரஸ்தானத்தைப் பற்றி விளக்குவீரா?

ப: பிரம்மசூத்திர பாஷ்யம், அனுவியாக்யானம், அணுபாஷ்யம், நியாயவிவரண இந்த நான்கு கிரந்தங்களும் சூத்திர பிரஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் பிரம்மசூத்திர பாஷ்யத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.

அடுத்தது அனுவியாக்யானம். த்ரிவிக்ரம பண்டிதர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஸ்ரீமதாசார்யர் இதை இயற்றியிருக்கிறார். ஒரே சமயத்தில், நான்கு சிஷ்யர்களுக்கு நான்கு அத்தியாயங்களை படி எடுக்குமாறு சொல்லி, இயற்றப்பட்ட கிரந்தம் இது. இந்த கிரந்தத்தில் இல்லாத விஷயமே இல்லை. நாராயண பண்டிதர் இந்த கிரந்தத்தை பூலோகத்தின் அமிர்தம் என்றே அழைக்கிறார். ஆகவே, டீகாக்ருத்பாதர், நியாயசுதா என்னும் டீகையை (உரையை) இதற்கு எழுதியுள்ளார். பிரம்மசூத்திரத்தின் தத்வங்களை விளக்குவதோடு மட்டுமல்லாமல், துர்வாதிகளின் கர்வத்தை உடைக்கும் வஜ்ராயுதமாகயிருக்கிறது. 

அணுபாஷ்யம். சர்வ-சாஸ்திரார்த்த-சங்க்ரஹம் என்பது இதன் மற்றொரு பெயர். தன் சிறிய வாயில் ஸ்ரீகிருஷ்ணன் மொத்த உலகத்தையே காட்டியதுபோல், இந்த சிறிய கிரந்தத்தில் பற்பல விஷயங்களை ஸ்ரீமதாசார்யர் காட்டியிருக்கிறார். பிரம்மசூத்திரத்தின் ஒவ்வொரு அதிகரணத்தின் சாரத்தையும் சரியாக புரிந்துகொண்டு, அதன்மூலம் ஸ்ரீஹரியை பூஜிப்பதற்காக இயற்றப்பட்ட கிரந்தம் இது.

4. நியாயவிவரண. அனுவியாக்யானத்தின் பிற்சேர்க்கை என்று அறிஞர்கள் இந்த கிரந்தத்தை கூறுகின்றனர். ஒவ்வொரு அதிகரணத்திலும் தெரியவேண்டிய முன்னுரை மற்றும் அதன் சித்தாந்தத்தையும் இந்த கிரந்தத்தில் சேகரித்துள்ளார். ‘அனுவியாக்யான - ந்யாயவிவரணமாலிகா’ என்பது இந்த கிரந்தத்தின் மற்றொரு பெயர். 

கே: ஸ்ரீமதாசார்யர், வேதத்தின் ஒரு பகுதியான கர்மகாண்டத்தை அறிவாரா? அல்லது வெறும் ஞானகாண்டத்தை மட்டும் முக்கியமானதாக கருதி, கர்மகாண்டத்தை அவ்வளவு முக்கியம் இல்லையென்று சொல்லியிருக்கிறாரா?

ப: ஒரு முறை பல அறிஞர்கள், கர்மகாண்டத்தின் மூலம் ஸ்ரீமதாசார்யரை வென்றுவிடலாம் என்று எண்ணி வந்தனர். அப்போது, கர்மகாண்டத்தை ஞானகாண்டத்துடன் பொருந்துமாறு பொருள் கூறி, கர்மநிர்ணயம் என்ற கிரந்தத்தை இயற்றினார் மத்வர். இதை ‘கண்டார்த்த நிர்ணயம்’ என்றுகூட அழைக்கின்றனர். இது மற்றும் ரிக்பாஷ்யம் என இரு கிரந்தங்களும் சேர்ந்து, ஸ்ருதிபிரஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றன. பிரஸ்தானங்கள் மூன்று என்றால் சிலர் நான்கு என்கின்றனர்.

கே: மத்வாசார்யருக்கு கவிதை/பாடல் எழுதும் திறன் இருக்கிறதா இல்லையா என்று பல அறிஞர்களுக்கு சந்தேகம் வந்தது. அப்போது ஒரு சபையில் அவரை ஒரு சித்ரகாவியம் எழுதுமாறு பணித்தனர். அப்போதே யமகபாரதத்தை இயற்றினார் என்று சொல்கிறார்கள். இதன் சிறப்பு என்ன?

கே: 18 பர்வங்கள் உள்ள மொத்த மகாபாரதத்தின் சாரத்தை வெறும் 81 ஸ்லோகங்களில் இயற்றியிருக்கிறார். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் மிகவும் அழகான எதுகை மோனையுடன் எழுதியிருக்கிறார். யமகம் என்றால் சமஸ்கிருதத்தில் ஒரு காவிய அலங்கார வகையாகும். ஒரு பாடலில் ஒரே சொல்லானது, மறுபடி இன்னொரு முறை வந்து வேறொரு பொருளை கொடுக்கும். இந்த கிரந்தம் முழுவதுமே இது போன்ற சொல்-அலங்காரங்களினால் ஆனதால், இது யமகபாரதம் என்று அழைக்கப்படுகிறது. நன்கு கற்றறிந்த அறிஞர்களும் மிகவும் வியப்புடன் படிக்கும் மிகவும் அற்புதமான சித்ரகாவியம் இது. 

கே: சிறுவர்களுக்கு வைஷ்ணவ-தீட்சை வருவதற்கு அவர்கள், ஆசார்யரின் எந்த கிரந்தத்தைப் படிக்க வேண்டும்?

ப: இதற்காகவே ‘கிருஷ்ணாம்ருத மஹார்ணவ’ என்னும் 229 ஸ்லோகங்களைக் கொண்ட கிரந்தத்தை ஸ்ரீமதாசார்யர் இயற்றியிருக்கிறார். அனைத்து புராணங்களின் சாரத்தைக் கொண்ட காவியம் இது. இரேபடித்தாய என்னும் பண்டிதருக்கு யக்ஞநாராயண உருவச்சிலையை ஆசிர்வதித்துக் கொடுக்கும்போது ஸ்ரீமதாசார்யர் இந்த கிரந்தத்தை இயற்றினார். இந்த கிரந்தத்தைப் படிப்பதின் மூலம், வைஷ்ணவ தீட்சையை எப்படிப் பெறுவது என்பதை விளக்கியிருப்பார்.

கே: காலையிலிருந்து இரவு வரை நம் நித்யானுஷ்டாங்கள் (கடமைகள்) எப்படி இருக்கவேண்டும் என்று ஆசாரியர் எந்த கிரந்தத்தில் விளக்கியிருக்கிறார்?

ப: இதற்காகவே சதாசாரஸ்ம்ருதி வெளிவந்திருக்கிறது. தர்ம, அதர்மங்களின் நிர்ணயங்களுடன், நம் தினப்படி கடமைகளைப் பற்றி உபதேசிக்கும் அபூர்வமான கிரந்தம் இது. எப்போதும் ஸ்ரீஹரியின் சிந்தனையே தர்மம், அவரை மறப்பதே அதர்மம் என்னும் முக்கிய தத்வத்தை விளக்கியிருக்கும் தர்மசாஸ்திரம் இது. 

கே: துவாதச ஸ்தோத்திரத்தை நைவேத்திய காலத்திலேயே ஏன் படிக்கவேண்டும்?

ப: சாப்பிடும் பொருட்களிலிருக்கும் விஷங்கள் மற்றும் கெட்டுப்போன தன்மைகள் ஆகியவற்றை விலக்கும் / தீர்க்கும் சக்தி இந்த துவாதச ஸ்தோத்திரத்திற்கு உண்டு என்று நம் சம்பிரதாயம் தெளிவாக அறிவிக்கிறது. ஆகையால் துவாதச ஸ்தோத்திரத்தை கண்டிப்பாக நைவேத்திய காலத்தில் சொல்லியே ஆகவேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த ஸ்தோத்திரத்தை பாடலாகவும் கருத வாய்ப்புள்ளது. இதே துவாதச ஸ்தோத்திரம், பின்னர் வந்த தாச பரம்பரைக்கு மூல கிரந்தமாக ஆனது. இந்த துவாதச ஸ்தோத்திரங்களை தனித்தனி கிரந்தங்கள் எனவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

கே: ஸ்ரீமதாசார்யரின் மற்ற கிரந்தங்கள் எவை?

ப: 
1. ஜயந்திகல்ப - 12 ஸ்லோகங்களைக் கொண்ட மிகச்சிறிய கிரந்தமே ஆனாலும், கிருஷ்ணாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜயந்தியை எப்படி கொண்டாடவேண்டும் என்பதை விளக்குவதற்காக வந்த கிரந்தம் இது. ஆகவே கிருஷ்ணாஷ்டமி பூஜையானது நம்மில் இத்தனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

2. யதிப்ரணவகல்ப - யதிகளின் (சன்யாசிகள்) நடத்தை விதிகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை விளக்கும் 25 ஸ்லோகங்களினாலான சிறிய கிரந்தம். ‘விஷ்ணோ: ஸர்வோத்தமத்வம் ச ஸர்வதா ப்ரதிபாதய’ என்னும் புகழ்பெற்ற வாக்கியம் இந்த கிரந்தத்திலேயே உள்ளது. 

3. ந்யாஸபத்ததி - 12 ஸ்லோகங்களைக் கொண்ட இந்த கிரந்தம் சன்யாசிகளின் தினப்படி கர்மங்களை (செயல்களை) சுருக்கமாக விளக்கும் கிரந்தமாகும். 

4. திதிநிர்ணயம் - 28 ஸ்லோகங்களைக் கொண்ட, கணிதத்தின் அடிப்படையிலான கிரந்தம். பஞ்சாங்கத்திற்கு அடிப்படையான சூர்ய ஸ்புடம், சந்திர ஸ்புடம் ஆகியவற்றை வரையறுக்கும் சிறிய கிரந்தம் இது.

5. நகஸ்துதி - த்ரிவிக்ரம பண்டிதர் வாயுஸ்துதியை இயற்றியபோது அதன் முதலிலும் கடைசியிலும் சொல்லவேண்டும் என்று அருளிய கிரந்தமே நகஸ்துதி.

6. கந்துகஸ்துதி - சிறிய வயதில் பந்து விளையாடும்போது ஆசாரியர் இயற்றிய ஸ்துதி இது. கந்துக-சந்தஸ்ஸிலேயே (மெட்டு) இருக்கும் இந்த ஸ்தோத்திரம் மிகவும் அழகானது. (சாட்சாத் ஹ்ருஷீகேச தீர்த்தரே தன் கைப்பட எழுதிய பிரதியை முழுவதுமாக படித்து, சர்வமூல கிரந்தங்களை நாம் தவறின்றி புரிந்துகொள்ள வித்வான் பன்னஞ்சே கோவிந்தாசாரியர் செய்த உதவியை நாம் இந்த நேரத்தில் நினைக்கவே வேண்டும்). 

கே: சர்வமூல கிரந்தங்களைப் பற்றி விளக்கினீர்கள். அவரது பரம்பரையைப் பற்றி சொல்வீர்களா?

ப: ஸ்ரீமதாசார்யரின் பரம்பரையை நாராயண பண்டிதர் நன்கு புகழ்ந்திருக்கிறார். கண்டிப்பாக இதைப் பற்றி தெரிந்துகொள்ளவே வேண்டும். 

கே: தத்வபிரசாரத்திலேயே காலம் கழித்த ஸ்ரீமதாசார்யர், இவ்வளவு மடங்களை ஏன் நிறுவினார்?

ப: ஸ்ரீமதாசார்யரின் வாழ்க்கையை கவனமாக பார்த்தால், அவர் சிறிதளவு பணத்தைக்கூட சம்பாதித்ததாக எங்கும் தெரியவில்லை. அதைப்போலவே மடங்களைக் கட்டியதைப் போலவும், செல்வம் சேர்த்ததாகவும் எங்கும் தகவல் இல்லை. உண்மையான விரக்தியுடைய துறவி ஒருவர் எப்படியிருக்க வேண்டுமென்று நமக்குக் காட்டிய பரமஹம்ஸர் ஸ்ரீமதாசார்யர்.

கே: அப்படியென்றால் இவ்வளவு மடங்களை யார் துவக்கினர்?

ப: எந்த மடங்களையும் ஸ்ரீமதாசார்யர் துவக்கவில்லை. கிருஷ்ணனின் பூஜைக்காக எட்டு பாலகர்களுக்கு சன்யாச ஆசிரமம் கொடுத்து, பூஜை விதிகளைக் கொடுத்து அதை பின்பற்றிவரச் சொன்னார். அப்படியே இன்னும் பலர் ஸ்ரீமதாசார்யரிடம் சன்யாச ஆசிரமத்தை தங்களின் விருப்பத்துடன் பெற்று சன்யாசிகள் ஆனார்கள்.

கே: ஸ்ரீமதாசார்யரிடம் சன்யாச ஆசிரமம் பெற்ற சிஷ்யர்கள் யார்?

ப: கோதாவரி நதிக்கரையில் புகழ்பெற்ற பண்டிதரான சோபனபட்டர், ஸ்ரீமதாசார்யரிடம் சிஷ்யராக சேர்ந்து சன்யாச ஆசிரமத்தைப் பெற்றார். இவரே ஸ்ரீபத்பனாப தீர்த்தர் என்று பெயர்பெற்று அனைத்து மடங்களின் மூலபுருஷராக இருக்கிறார். ஸ்யாமா சாஸ்திரி என்னும் இன்னொரு அத்வைத பண்டிதர், ஸ்ரீமதாசார்யருடன் வாதம் செய்து, அதில் தோற்று அவரின் சிஷ்யரானார். இவரும் சன்யாச ஆசிரமம் பெற்று, ஸ்ரீநரஹரிதீர்த்தர் ஆனார். விஷ்ணு சாஸ்திரி என்னும் இன்னொரு அத்வைத பண்டிதர், வாதத்தில் தோற்று, ஸ்ரீமதாசார்யரின் சிஷ்யராகி, மாதவதீர்த்தர் என்று பெயர் பெற்றார். கோவிந்தசாஸ்திரி என்ற அத்வைத பண்டிதர், வாதத்தில் தோற்று, சிஷ்யராகி, அக்‌ஷோப்யதீர்த்தர் என்று பெயர் பெற்றார். 

கே: இவர்களெல்லாம் வெறும் ‘பிடி சன்யாசி’ ஆனவர்களே தவிர, பீடாதிபதிகள் ஆகவில்லை. அப்படித்தானே?

ப: இவர்கள் அனைவருக்கும் ஸ்ரீமதாசார்யர் சன்யாச ஆசிரமம் மட்டும் கொடுக்கவில்லை. வேதாந்த சாம்ராஜ்யத்தில் பட்டாபிஷேகம் செய்து, தீர்த்தர் எனும் பதவியைக் கொடுத்தார். ஆகையால், வேதாந்த சாம்ராஜ்யாதீஷ்வரரான இவர்களுக்கு பின்னர் நம் சம்பிரதாயத்தில் பீடாதிபதி ஆகும் வழக்கம் வந்தது. ஸ்ரீவாதிராஜரின் காலத்தில், அனைத்து மடங்களை பிரிப்பது மற்றும் பீடாதிபதி பதவியைப் பற்றிய கருத்துகள் அதிகம் பரவின.

கே: சங்கராசார்யரின் மடம், ராமானுஜாசார்யரின் மடம் என்று இன்றும் இருப்பதைப் போல, மத்வாசார்யரின் மடம் என்றே இருக்கவேண்டும். ஆனால் இவ்வளவு மடங்கள் இருப்பது அநாவசியம் என்றே நம் அனைவரின் அபிப்ராயம்.

ப: இன்றைய தினத்தில் இவ்வளவு மடங்கள் இருப்பது நமக்கு உதவியாகவே இருக்கிறது. ஒரே மடம் இருந்திருந்தால், அதிக பிரச்னைகளே இருந்திருக்கும். பல மடங்கள் இருப்பதால், நம் மாத்வ சமாஜத்தை அனைவரும் பல வழிகளில் முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய காலத்தில், மாத்வ மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்று அந்த எண்ணிக்கை அதிகமானதால், 20க்கும் அதிகமான மடங்கள் இருந்து, அவர்கள் செய்யும் செயல்கள் மிகவும் அற்புதமானவையாகவே இருக்கிறது. ஆனால் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் அதிகம் இருக்கின்றன. 

கே: இன்றைய பீடாதிபதிகள், மகாசமாராதனைகளையும், ராயரின் ஆராதனை விழாவையும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். ஆனால் மத்வ நவமியை அவ்வளவு விமரிசையாகக் கொண்டாடுவதில்லை. இது தவறுதானே?

ப: மத்வாசாரியரை மறந்தோ அல்லது மத்வாசாரியருக்கு சமர்ப்பணம் செய்யாமல் மகாசமாராதனையை செய்திருப்பார்களேயானால், அது கண்டிப்பாக தவறுதான். தாம் செய்யும் அனைத்து ஆராதனைகளும் மத்வாசார்யருக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்ற எண்ணத்துடனேயே, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன ஆகையால் இது தவறு இல்லை. மத்வநவமியை இன்னும் அதிக விமரிசையுடன் கொண்டாடவேண்டும் என்பது நிஜம்தான். ஆனால், மத்வநவமியைவிட, ராயர் ஆராதனை பற்பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை தவறு என்று நினைக்கக்கூடாது . எந்த தேவதைக்கும் கொடுக்காத சிறந்த பதவியை, மரியாதையை, பக்த பிரகலாதனுக்குக் கொடுத்ததைப் போல, ஸ்ரீஹரி ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கு இத்தகைய மரியாதையைக் கொடுக்கிறார். இவை அனைத்தும் ஸ்ரீஹரியின் விருப்பமே என்று எண்ணவேண்டும். 

கே: ஆசாரியரின் தம்பியான விஷ்ணு தீர்த்தரைப் பற்றி சொல்வீர்களா?

ப: 'எங்களை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லை. இருந்த ஒரே மகனும் சன்யாசி ஆகிறான்’ என்று மத்யகேஹ பட்டர் தம்பதிகள் வருந்தினர். அப்போது வாசுதேவன் ‘உங்களை பார்த்துக்கொள்ள இன்னொரு மகன் வரும்வரை நான் சன்யாசி ஆவதில்லை’ என்று வாக்கு கொடுக்கிறார். அதன்படி, மத்யகேஹபட்டருக்கு அடுத்த ஒரு ஆண்டில் இன்னொரு மகன் பிறக்கிறான். அவர் தாய்தந்தையரின் இறுதிக்காலம் வரை அவர்களுடனே இருந்து அவர்களது சேவை செய்கிறார். அதன்பிறகு, ஸ்ரீமதாசார்யரிடம் வந்து சன்யாச-ஆசிரமம் பெற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷ்ணுதீர்த்தர் என்று புகழ்பெற்றார். இலை பழங்களை மட்டுமே தின்று, பின் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யம், பிறகு அதையும் துறந்து கடுந்தவம் புரிந்து, கலியுகத்திலேயே மிகப்பெரிய தபஸ்வி ஆனார். அண்ணனுக்கு சரியான தம்பி என்றால் அது இவர் மட்டுமே. இவரே பிறகு சோதே மற்றும் சுப்ரமண்ய மடங்களின் மூலபுருஷர் ஆனார்.

கே: தென் கர்நாடகத்தில் எட்டு மடங்கள் மட்டுமல்லாது, வேறு சில மடங்களும் வளர்ந்தன. அவற்றின் வரலாறு என்ன?

ப: தென் கர்நாடகத்தில் எட்டு மடங்களைத் தவிர இன்னும் வேறு நான்கு மடங்கள் உள்ளன. 1. சுப்ரமண்ய மடம் 2. பண்டாரகெரெ மடம் 3. பீமனகட்டே மடம் 4. சித்ராபுர மடம். சுப்ரமண்ய மடம் விஷ்ணுதீர்த்தரிடமிருந்து துவங்கியது. ஆசார்யரின் குருகளான அச்யுதப்ரக்ஞரின் பரம்பரையில் பண்டாரகெரெ மற்றும் பீமனகட்டே மடங்கள் பிரிந்து வளர்ந்தன. சித்ராபுர மடமானது, பேஜாவர் மடத்திலிருந்து பிரிந்த ஒரு கிளை என்று அனைவரும் சொல்கின்றனர். 

கே: கௌட சாரஸ்வதியர்கள் மாத்வர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். இவர்களின் மடம் எது?

ப: கோகர்ண-பர்த-காளி-ஜீவோத்தம மடம், மற்றும் காசிமடம் இந்த இரண்டு மடங்களையும், கௌட சாரஸ்வதியர்கள் பின்பற்றுகின்றனர். மத்வாசாரியரே தங்களின் குரு என்று இவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். பலிமார் மடத்தில் பத்தாவது துறவியான ராமசந்திர தீர்த்தரிடமிருந்து சன்யாசத்தைப் பெற்ற நாராயண தீர்த்தர், இந்த மடத்தின் மூல புருஷர் ஆவார்.

கே: இஸ்கான் மதத்தினர் தாங்களும் மாத்வர்களே என்கிறார்கள். இது எப்படி?

ப: மத்வகௌடிய என்று வங்காளத்தில் ஒரு மாத்வ பீடம் இருந்தது. இந்த மடத்திற்கு அச்யுதசரண என்னும் ஒரு சன்யாசி வந்தார். இவரே பக்திவேதாந்தபிரபு என்று தன்னை அழைத்துக்கொண்டு, ஹரே கிருஷ்ணா மடத்தின் இஸ்கான் அமைப்பை நிறுவியவராவார். இவர்கள் மத்வாசாரியரையே மூலகுருகள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

கே: மூலபரம்பரையிலிருந்து வளர்ந்த மடங்கள் எவ்வளவு? அவை எப்படி வளர்ந்து வந்தன?

ப: ஸ்ரீபத்பனாப தீர்த்தர், ஸ்ரீநரஹரிதீர்த்தர், ஸ்ரீமாதவதீர்த்தர், ஸ்ரீஅக்‌ஷோப்யதீர்த்தர் என்று மூல பரம்பரையிலிருந்து எட்டு மடங்கள் பிரிந்து வளர்ந்தன. 

1. ஸ்ரீபாதராஜ மடம்
2. ராயர மடம்
3. உத்தராதி மடம்
4. சோசலெ வியாசராஜ மடம்
5. குந்தாபுர வியாசராஜ மடம்
6. மஜ்ஜிகெஹள்ளி மடம்
7. கூடலி மடம்
8. பாளகாரு மடம்

ஸ்ரீவியாசராஜரின் குருவான ஸ்ரீபாதராஜர், இந்த மடத்தின் பரம்பரையில் வந்த சிறந்த துறவியாவார். வியாசராஜ மடத்தில் ஒரு பரம்பரை, குந்தாபுரத்தில் ஒரு மடத்தை நிறுவி குந்தாபுர-வியாசராஜ மடம் என்று அழைத்துக் கொண்டது. மாதவதீர்த்தரின் பரம்பரையிலிருந்து மஜ்ஜிகெஹள்ளி மடம் பிரிந்து வளர்ந்தது. அக்‌ஷோப்யதீர்த்தரிடமிருந்து இன்னொரு கிளை பிரிந்து பாளகாரு மடம் என்று பெயர் பெற்றது. 

கே: மத்வவிஜயத்தில் இதைப்பற்றி ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

ப: ’மத்வப்ரதிஷ்ட்யா பஹவோ ஷிஷ்யா ஏஷாம் முஹுஸ்ததா அலஞ்சக்ருரலம் ப்ருத்வீம் ஸர்வே ஸத்குணபூஷணா:’. மத்வரின் சிஷ்யர்கள் பற்பல விதங்களில் இந்த பூமியை அலங்கரிக்கின்றனர். அவர்கள் அனைவரும் நற்குணங்களைக் கொண்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் துர்வாதிகளின் துர்-வாதங்களை கண்டனம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று மத்வவிஜயத்தில் வர்ணிக்கிறார். அதுமட்டுமல்லாமல், பல கிருஹஸ்த (குடும்ப வாழ்க்கையில் இருந்த) சிஷ்யர்களும் மத்வாசார்யரின் சிஷ்யர்களாக தத்வஞானத்தை பிரசாரம் செய்துவந்தனர்.

கே: சர்வமூல கிரந்தங்களை ஏன் படிக்கவேண்டும்?

ப: ஸ்ரீஹரியை அறிந்தால் மட்டுமே இந்த வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபடுவது சாத்தியம். இந்த உலகத்தைப் பற்றி எவ்வளவே ஆராய்ச்சி நடந்தாலும் அது எப்போது முழுமையடைவதில்லை. நம் வாழ்க்கையை ஸ்ரீஹரியிடம் அழைத்துச் செல்லும் தத்வமே பிராணதத்வம். இதனைப் பற்றிய அறிவே ஜீவோத்தமத்வ. இந்த பிராணதத்வமே, மத்வர் என்னும் ரூபத்தில் அவதரித்தது. மத்வரின் ஒவ்வொரு வாக்கியமும் அதிஅற்புதம். மனசாட்சிக்கு எதிராக யார் சொன்னாலும், எந்த சாஸ்திரம் சொன்னாலும் அதை ஒப்பாமல், வேதத்தில் சொன்ன தத்வத்தையே மனசாட்சிக்கு சரியானது என்று அறியவேண்டும். இப்படி ஸ்ரீஹரியை ஆதாரத்தினால் தெரிந்துகொண்டு, அவரை நிரந்தரமாக சரணடைய வேண்டும். சரணாகதி அடைந்து, ஞானத்தைப் பெற்று மறுபடி சரணாகதி அடையவேண்டும். இதற்காக சர்வமூல கிரந்தங்களை படிக்கவேண்டும். 

கே: வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய உண்மையான வழி எது?

ப: சர்வமூல கிரந்தங்கள் மக்களுக்கு உண்மையான ஞானத்தை வழங்குகின்றன. நாட்டில் பரவிவரும் அஞ்ஞான மூடப் பழக்கவழக்கங்களை மொத்தமாக கண்டனம் செய்யும் சாமர்த்தியத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் இவ்வளவு வெவ்வேறு மதங்கள் எப்படி பரவியுள்ளன? இதற்கான காரணத்தை ஸ்ரீமதாசார்யரே தனது கிரந்தத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். 

‘தௌர்லப்யாத் சுத்தபுத்தீனாம் பாஹுல்யாத் அல்பவேதினாம் |
துராக்ரஹ கைஹேதத்வாத் வர்தந்தே சமயா: சதா ||

பகை / பொறாமை இல்லாமல் நற்புத்தியுடன் யோசனை செய்யும் மனிதர்கள் எந்தக் காலத்திலும் குறைவே. அரைகுறையாகப் புரிந்துகொண்டு அவற்றைப் பேசித்திரிபவரே அதிகம். தம்முடைய மதமே சிறந்தது என்று சொல்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள். உண்மையான வழியை அறிந்து அதன்படி நடப்பதே சிறந்ததாகும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***


No comments:

Post a Comment