Monday, April 11, 2022

ஸ்லோகம் #48: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #48: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

[ஸ்லோகம் 48]

பது3மனாமக1னோர்வ து3ருளனு தத3னுக3னு புஸ்தகஸமூஹ

கதி3யலிவரனு நிர்ப்ப4யதி3 2ண்டி3ஸித3ராக்ஷணதி3 |

பெ33ரித3ரு து3ர்ஜனரு வேக3தி3 சத3ரித3ரு மெரயாகெ3 விஸ்தர

ஹ்ருத3யதே3வாலயவ ஸேரித3 ப்ராக்3யவாடத3லி ||48 

பதுமனாமகனோர்வ - பத்மதீர்த்த என்னும் ஒருவன்; துருளனு - கெட்டவன்; ததனுகனு - அவனுடைய நண்பனான சங்கராசார்யர்; புஸ்தகஸமூஹ - (வைத்திருந்த) கிரந்தங்களை; கதியலு - திருடிச்செல்ல; இவரனு - இவர்களை; நிர்ப்பயதி - எவ்வித தயக்கமும் இன்றி; ஆக்ஷணதி - அதே நொடியில்; கண்டிஸிதரு - வாதத்தில் வென்றார்; துர்ஜனரு - கெட்டவர்கள்; பெதரிதரு - நடுங்கினர்; வேகதி - வேகமாக; மெரயாகி - (ஸ்ரீமதாசார்யரின் கண்களிலிருந்து) மறைந்து; சதரிதரு - பாய்ந்து ஓடினர்; விஸ்தர ஹ்ருதய - விசாலமான ஹ்ருதயத்தைக் கொண்டவர்; ப்ராக்யவாடதலி - ப்ராக்யவாட என்னும் ஊரின்; தேவாலயவ - தேவாயலத்தை; ஸேரித - சேர்ந்தார். 

பத்மதீர்த்த மற்றும் அவனது நண்பனான சங்கராசார்யர் செய்த கெட்ட செயல்களைப் பற்றி இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

பத்மதீர்த்த என்னும் ஒருவன், அவனுடைய நண்பனான சங்கராசார்யருடன் சேர்ந்து, ஆசார்யரின் கிரந்தங்களை திருடிச் செல்ல, இவர்களை எவ்வித தயக்கமும் இன்றி, அதே நொடியில் ஆசார்யர் வாதத்தில் வென்றார். கெட்டவர்கள் நடுங்கினர். வேகம் வேகமாக அவரின் பார்வையிலிருந்து மறைந்து பாய்ந்து ஓடினர். விசாலமான ஹ்ருதயத்தைக் கொண்டவரான ஆசார்யர், ப்ராக்யவாட என்னும் ஊரில் உள்ள தேவாலயத்திற்கு வந்து சேர்ந்தார். 

மத்வ விஜயத்தில் இந்த சம்பவம் 12-44 ஸ்லோகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. 

துஷ்டாத்மாsஸௌ பத்ரமேகாகினம் : க்ஷேப்தும் ஹேது: ஸௌக்யதாக்யம் பபூவ |

ஹர்யஷோsயம் தம் சக்ஷாம பூய: தோகே ஸன்னே ஸூகரம் கேஸரீவ ||12-44 

தனது குட்டியைக் கொன்ற பன்றியை சிங்கம் எப்படி மன்னிக்காதோ அதைப் போல; தனது மகனான அபிமன்யுவை கொன்ற ஜயத்ரதனை தான் கொல்வேன் என்று எப்படி அர்ஜுனன் சபதம் செய்தானோ, அதைப் போல - தனது நண்பனான சங்கராசார்யருடன் சேர்ந்து, ஆசார்யரின் கிரந்தங்களை திருடிச் சென்ற பத்மதீர்த்தனை, தான் வாதத்தில் வெல்வேன் என்று தீர்மானம் செய்தார். 

விஷ்ணோர்பூய: ஷோபயத்பி: பதாந்தம் பாரம்பர்யேணேர்ய மாணைரவார்யை: |

கோவ்ராதைஸ்தம் தாரயித்வா ந்யக்ருண்ஹாத் கஞ்சாக்யானம் ஸிந்துபம் மத்வ பார்த்த: || 12-46 

அர்ஜுனன், வானை ஒளிர்விப்பதான தனது பாணங்களால் எப்படி ஜயத்ரதனைக் கொன்றானோ அதைப் போல, ஆசார்யரும் ஸ்ரீஹரியின் ஸ்வரூபத்தை விளக்கக்கூடியதான வாக்கியங்களை தொடர்ந்து கூறத் தொடங்கினார். 

பின் ஆசார்யரின் சிஷ்யர், மாயாவாதிகளைக் குறித்து இவ்வாறு கூறினார். ’ப்ராப்த: காலோ த்ராக் குஹாந்தம் ப்ரவேஷ்டும் ||’ (12-47) ஹே மாயாவாதிகளே! மத்வாசார்யர், பிரம்மஸ்வரூபத்தை அனைத்து இடங்களிலும் பரப்பியவாறு சூரியனைப் போல ஒளிர்கிறார். சூரிய உதயத்தின்போது இருட்டு அழிகின்றது. மத்வர் என்னும் சூர்யோதயத்தினால் அஞ்ஞானம், தவறான ஞானம் ஆகியவை நாசமடைகிறது. வேகமாகப் போய் குகைக்குள் ஒளிந்து கொள்ளுங்கள். உங்களை வெல்வதற்கு ஆசார்யர் சப்த-ஆகமங்களை ஏந்தி அவதரித்திருக்கிறார். கருடனைப் பார்த்து பாம்பு ஓடிப்போவதைப் போல, கருடோத்தமரான மத்வரைப் பார்த்து ஓடிப் போய்விடுங்கள் மாயாவாதிகளே. ஏனென்றால் - ‘மத்வாதித்யம் சம்ஸ்ரிதம் கோSபிதத்தே |’ (12-50) ’மத்வ சூரியரை யாரால் மூடமுடியும்?. சூரிய ஒளியினால் இருட்டு அழிவது சகஜம்தானே. 

விதாவத விதாவத த்வரிதமத்ரி வாதாசுரா (12-51) 

ஜீவ-ஈஸ்வரனில் பேதங்கள் இல்லையென்று சொல்லி, உண்மையை மறைத்து, அனைவரின் அனுபவத்திற்கும் வரும் இந்த உலகினை பொய் என்று வாதிக்கும் மாயாவாதிகளே! ஸ்ரீமதானந்த தீர்த்தர் என்னும் நரசிம்மன் வருகிறார். ஆதாரங்கள் என்னும் கூரிய நகங்கள் அவரிடம் உள்ளன. இவற்றினால் அவிவேகிகளான குவாதிகளை, தமது வியாக்யானம் என்னும் பயங்கரமான கர்ஜனையின் உதவினால் கிழித்துவிடுவார். ஆகையால், மாயாவாதிகளே வேகமாக இங்கிருந்து ஓடிவிடுங்கள். இரு நாக்குகள் உடைய பாம்பினைப் போன்றவர்கள் நீங்கள். சத் சித்தாந்தத்தை நிரூபித்த ஸ்ரீமதானந்ததீர்த்தர் கருடனைப் போன்றவர். மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய சித்தாந்தத்தை நிறுவியவாறு, உங்களையும் கண்டிக்கிறார். வேகமாக ஓடி குகைகளில் ஒளியுங்கள். 

ஸ்ரீமன்மத்வாசார்யரை ஸ்ரீமன் நாராயணனுக்கு ஓப்பிடுகிறார். நாராயணன் அசுரர்களை வதம் செய்கிறார் என்றால், மத்வர் மாயாவாதிகளை கண்டிக்கிறார். வேதங்கள் சுதர்சன சக்ரத்தைப் போன்றதாகும். பிரம்மதர்க்கம் சங்கினைப் போன்றதாகும். வேதவியாசரின் புராணங்கள் கௌமோதகீ கதையைப் போன்றதாகும். பஞ்சராத்ரங்கள் ஷார்ங்க ஆகும். பிரம்மசூத்ரங்களை பாணங்களாக, மூல ராமாயண பாரதாதிகள் வாள் என்றும், மாயாவதிகளை முழுமையாக நிராகரிக்க, ஆசார்யர் என்னும் நாராயணன் வருகிறார். ஆகையால் உடனடியாக ஓடிப்போய் ஒளியுங்கள் என்று சிஷ்யர்கள் மாயாவாதிகளை எச்சரித்தனர்.  

இத்துடன் மத்வ விஜய பன்னிரெண்டாம் சர்க்க விஷயங்கள் முடிந்தன. அடுத்த ஸ்லோகத்திலிருந்து பதிமூன்றாம் சர்க்கத்தினை துவக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

No comments:

Post a Comment