Wednesday, May 4, 2022

அறிமுகப் பதிவு-3: ஹரிதாஸ தர்பண

அறிமுகப் பதிவு-3: ஹரிதாஸ தர்பண

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

அங்கித உபதேசம்

ரெயில்வே துறையில் வேலை பார்த்திருந்த கிருஷ்ணராயருக்கு, அடிக்கடி பணி மாறுதல் வந்துகொண்டிருந்தது. அவரும், அனைத்து ஊர்களுக்கும் சென்று, அங்கு அருகில் இருந்த அனைத்து புண்ணிய க்‌ஷேத்திரங்களை தரிசித்தவாறு, லௌகிக வாழ்க்கையை, தம் தார்மிக வாழ்க்கைக்கு ஏறும் படிக்கட்டுகளாக செய்து கொண்டார். கிருஷ்ண ராயருக்கு குரு தரிசன மற்றும் குரு உபதேசங்கள் ஆகியவை அவரது பாட்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆயிற்று. 

அவர் பெங்களூரில் இருந்தபோது, தம் வீட்டிற்கு அவ்வப்போது வந்துகொண்டிருந்த ‘பரமப்ரிய’ தந்தெ முத்துமோகனதாசரின் அறிமுகம், பாட்டியின் மூலமாக ஆயிற்று. அந்த அறிமுகமே தொடர்ந்து கௌரவ, பக்திகளுக்கு வழி செய்து, கடைசியில் அவரிடம் அங்கித உபதேசம் பெறுவதாக ஆனது. தந்தெ முத்துமோகனதாசரே, கிருஷ்ணராயருக்கு ஸத்குருகளாகி, அவருடைய வாழ்க்கையின் கடைசி வரைக்கும், ஆபத்பாந்தவராகி, ஆத்யாத்ம பதத்தில் அவரை முன்னடத்தினார். 

தந்தெ முத்துமோகனதாசர், கிருஷ்ணராயரின் பாட்டி ருக்மிணி பாய் அவர்களுக்கு ‘ஸீதாபதிவிட்டலா’ என்னும் அங்கிதத்தைக் கொடுத்திருந்தார். அவருடைய தாயான பாரதி பாய் அவர்களுக்கு ‘யாதவேந்திர விட்டலா’, கிருஷ்ணராயரின் அக்காவான அம்பாபாய்க்கு ‘கோபால கிருஷ்ண விட்டலா’ என்னும் அங்கிதத்தைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். கிருஷ்ண ராயருக்கு தமது அக்காவின் வாழ்க்கை ஒரு விதத்தில் உதாரணமாக இருந்து, ஹரிதாச பரம்பரையில் நுழைவதற்கு காரணமாக இருந்தது. 

கோபாலகிருஷ்ண விட்டல அங்கிதரான அம்பாபாய் அவர்களுக்கு அவருடைய 12ம் வயதிலேயே கோபாலபுரத்தின் ஹனுமந்தாசார்ய என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் அவருக்கு தாம்பத்யம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அம்பாபாய்க்கு 16 வயதானபோது, ஊரில் வந்த ப்ளேக் நோய்க்கு ஹனுமந்தாசார்ய பலியானார். அந்த கால சம்பிரதாயத்தின்படி அம்பாபாய் மடி ஆனார். கணவன் வீட்டினை விட்டு மறுபடி அவர் பிறந்த வீட்டிற்கே வந்தார். சிறு வயதிலேயே இப்படிப்பட்ட நிலையை அடைந்துவிட்டாலும், அவர் கலங்கவில்லை. முற்பிறவியின் பலனால், அவருடைய மனதில் வைராக்கியம் நிறைந்திருந்தது. குருகளிடமிருந்து அங்கித உபதேசம் பெற்றபிறகோ, அவருடைய வாழ்க்கை, ஹரிதாச சாகித்ய சேவையில் முழுவதுமாக ஈடுபட்டது. அம்பாபாய் அதிகம் படிக்காதவரே ஆனாலும், பண்டிதர்களும் வியந்து பாராட்டுவதான அற்புத கீர்த்தனைகளை இயற்றினார். 

ஹரியின் மகிமைகளை விளக்கும்படியான, பக்திபூர்வகமான அவருடைய கிருதிகள் அவருடைய கவித்திறனுக்கு சாட்சியாக இருக்கின்றன. கிருஷ்ணனின் பால லீலைகளை வர்ணிக்கும் ஜோகுள பதங்கள், கன்னட வெங்கடேஷ ஸ்தோத்திரம் - இத்துடன் அம்பாபாய் அவர்கள் தம்முடைய பாட்டியான ஸீதாபதி விட்டலா அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும்படியான ‘போதெயா தாயி நீனீக திவ்ய மாதவனா புர ஸேரலு பேக’ என்னும் 49 நுடிகளைக் கொண்ட ஒரு தீர்க்க கிருதியை இயற்றியது அவருடைய கவிதைத் திறனுக்கு தெளிவான கண்ணாடியைப் போல உள்ளது. திருப்பதி ஸ்ரீனிவாஸனைக் குறித்து அவர் இயற்றியிருக்கும் ‘மூரு நாமகள தரிஸித காரணவேனு’ என்னும் கீர்த்தனைகூட தாச சாகித்யத்தில் ஒரு அற்புத இடத்தைப் பெற்றிருக்கிறது. 

பாட்டி மற்றும் அக்கா அவர்களின் தாச தீக்‌ஷை, தெய்வ பக்தி, கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை, எளிமை, ஆகிய அபூர்வ குணங்கள், கிருஷ்ணராயரில் குடிகொண்டு, அவருடைய பவ்ய ஜீவனத்திற்கு இவையே அடித்தளமாக இருந்தது. சில நாட்களில், கிருஷ்ண ராயருக்கு, தாமும் ஹரிதாசர் ஆகி, ஹரிகுருகளின் அருளுக்கு பாத்திரர் ஆகவேண்டும் என்னும் விருப்பம் வந்தது. ராயர் ஒரு முறை தமது வீட்டிற்கு வந்திருந்த, ஸ்ரீதந்தெ முத்து மோகன தாசரிடம், தம் விருப்பத்தை தெரிவித்துக் கொண்டார். துவக்கத்திலிருந்து, கிருஷ்ணராயரை கவனித்துக் கொண்டேயிருந்த தாசருக்கு அவருடைய பகவத் பக்தி, வினயாதி சத்குணங்களைக் கண்டு மகிழ்ந்திருந்தார். ஆகையால், கிருஷ்ணராயரின் விருப்பத்திற்கு செவிசாய்த்து, தந்தெமுத்து மோகனவிட்டல தாசர், 1924ல் ஒரு சுப நாளில், தம்முடைய பிம்பமூர்த்தியை இவ்வாறு பிரார்த்தித்து ‘ரமா காந்த விட்டலா’ என்னும் அங்கித உபதேசத்தை செய்தார். 

ரமாகாந்த விட்டலனே நீனிவர ஸலஹபேகோ ஹரியே ||ப

தீனநாதனே கைபிடிது உத்தரிஸு காபாடோ ஹரியே

மன்மனோரததாத ஸ்வாமி ஸ்ரீஹரியே காபாடபேகிவனா ||அப

ஹரிகுரு பக்தி மொதலாத ஸத்குணவனே கொட்டு

பரமதயதிந்த இஹபரதி காபாடோ ஹரியே |

கரிவரத காமிதார்த்தவனித்த

கருணதிந்தலி காபாடோ ஹரியே ||1

தோஷதூரனே கிருஷ்ண சேஷகிரிவாஸ கிருபாஸாந்த்ர

நீ ஸலஹபேகோ ஹரியே

சேஷபர்யங்க ஷயன ஸ்ரீஹரியே ஸம்

தோஷவனெ கொட்டு நீ காபாடோ ஹரியே ||2

தர்மகாமார்த்த மொதலாத புருஷார்த்தவனெ கொட்டு

ஸன்முததி காயோ ஹரியே |

மம ஸ்வாமி கைவல்யதாயக தந்தெ முத்துமோஹன விட்டலனே நீனிவன

நிர்மல மனதி நிந்து தர்மப்ரேரகனாகி ஸலஹோ ஹரியே ||3

அதே சமயத்தில் கிருஷ்ணராயரின் தர்மபத்னியான சுந்தரம்மா அவர்களும் பரமப்ரியரிடமிருந்து ‘சுரேஷவிட்டலா’ என்னும் அங்கித தீக்‌ஷையைப் பெற்றார். அடுத்து, ரமாகாந்தரின் மூத்த மகனான விட்டலனுக்கு ‘காந்தேஷ விட்டலா’ என்றும்; அடுத்த மகனான ஜயமாருதிக்கு ‘ஜய மாருதேஷ விட்டல’ என்னும் அங்கிதத்தை வழங்கினார். ரமாகாந்தரின் ஒரே மகளான ஸ்ரீரமாமணிக்கு, தந்தெ முத்துமோகன தாசரின் மூத்த சிஷ்யரான ஸ்ரீஉரகாத்ரிவாச விட்டலதாசர் ‘ரமா மதுசூதன விட்டல’ என்னும் அங்கிதத்தை வழங்கினார். 

தாச சாகித்ய சேவை

அங்கிதோபதேசம் பெற்ற பிறகு, ரமாகாந்த தாசர், புடத்தில் இட்ட தங்கம் போல தூய்மையடைந்தார். குருகளின் தத்வ போதனையினால் அவருடைய வாழ்க்கை மிகப்பெரிய மாற்றத்தை அடைந்தது. குரு அனுக்கிரகமானது, அவருடைய அந்தரங்கத்தின் கதவியை திறக்கும் சாவி ஆயிற்று. ஹரிகுருகளின் குண சிந்தனை, நாமஸ்மரணை, ஆகியவை, தாசருக்கு நித்ய ஷ்வாஸோச்ச்வாஸத்தைப் போல சகஜமான செயல்கள் ஆயிற்று. குருகள் உபதேசித்த அங்கித நாமத்தின் நிரந்தர ஜபமானது, பிம்பமூர்த்தியின் பாத த்வயங்களில் நிர்மலமான பக்தியை உருவாக்கியது. தாசர் தம்முடைய உடல், மனம், செல்வம் என அனைத்தையும் உலக நாயகனான ஸ்ரீஹரிக்கு சமர்ப்பித்து, தாச சாகித்ய சேவையை தொடங்கினார். 

மத்வ நவமி, ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை, ஸ்ரீபுரந்தரதாசரின் புண்ய தினம் ஆகிய தினங்களை, மிகுந்த சிரத்தையுடன் கொண்டாடினார். குருகள் நிறுவிய தாஸகூட சபா நடவடிக்கைகளின் பங்கேற்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் தேவராயன துர்காவில் நடந்துவரும் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி ரதோத்ஸவத்தில் பங்குபெற்று, நர்த்தன சேவை ஆகியவற்றை செய்து, தேக மோகத்தை வென்றார். 

ஹரிதாச சாகித்யத்தின் அத்யயனத்தினால் தாசரின் மனம் அத்யாத்ம உலகத்திலேயே சஞ்சரிக்கத் துவங்கியது. சஜ்ஜனர்களின் சகவாசமானது, வாழ்க்கையின் கஷ்டங்களை தைரியமாக எதிர்த்து நிற்கச் செய்து, சாதனையின் மார்க்கத்தில் நிரந்தரமாக அவரை இருக்கச் செய்தது. ஹரிகுருகளின் கருணா விசேஷத்தினால் அந்தரங்கத்தில் வந்த சிந்தனைகள் அனைத்தும், லயபத்தமான பாடல்கள் ஆயிற்று. குருகள் அருளிய ‘ரமாகாந்த விட்டலா’ என்னும் அங்கிதத்தில் அனேக கிருதிகளை தாசர் இயற்றினார். காவிய லட்சணங்களால் கூடிய அவருடைய பக்தி பரிதமான கிருதிகளை, குருகளான தந்தெ முத்துமோகன தாசர் அவ்வப்போது பார்த்து அவரை பாராட்டி வந்தார். 

இதனால், ரமாகாந்த தாசர் மகிழ்ந்து, 1938ல் ஹரிதாச தர்பண என்னும் கிருதியை பாமினி ஷட்பதியில் இயற்றி, அங்கிதம் கொடுத்த தம் குருகளின் பாதங்களில் சமர்ப்பித்தார். 137 நுடிகளைக் கொண்ட, ஹரிதாச கோஷ என்றே புகழ்பெற்ற ஹரிதாச தர்பணத்தை, தந்தெ முத்துமோகன தாசர்  முழுமையாக படித்து மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், தாம் நடத்தி வந்த ‘பரமார்த்த சந்திரோதய’ என்னும் தார்மிக மாத பத்திரிக்கையில் அதனை வெளியிட்டு சிஷ்யரை பாராட்டினார். 

ஸ்ரீரமாகாந்தரின் கிருதிகளில், ஹரிதாச தர்பண ஒரு சிறப்பான இடத்தினை பிடித்திருக்கிறது. 

***

No comments:

Post a Comment