Monday, January 22, 2018

11/40 புருஷ அவதாரம்


11/40 புருஷ அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



கேள்வி: புருஷாவதாரத்தின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.

பதில்: பிரளயகாலத்தில் பரமாத்மா தனி ஒருவனாக தானே படுத்திருந்தார். இவரை ‘சூன்ய’ என்னும் பெயரில் சாஸ்திர கிரந்தங்கள் அழைக்கின்றன. இந்த சூன்ய நாமக ஸ்ரீஹரிக்கு உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அப்போது எங்கும் சூழ்ந்திருந்த இருட்டை விலக்கி தன்னை ‘சூன்யன்’ என்ற பெயருடன் எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தினார். பெரிய உலகத்தை ஸ்ருஷ்டி செய்து அதில் புருஷ ரூபனாக தான் விஸ்வரூபம் எடுக்கவேண்டும் என்று எண்ணினார். பிறகு 24 தத்வங்களையும் மற்றும் உலகத்தையும் ஸ்ருஷ்டித்து சேஷசாயியாக படுத்தார்.

இவரே பத்பனாபன். இவரின் நாபியிலிருந்து 24 இதழ்களையுடைய ஒரு தாமரை மலர்ந்தது. அந்த தாமரையிலிருந்து நான்முக பிரம்மன் தோன்றினார். அந்த பத்பனாப ரூபத்திலிருந்து நாராயண, வாசுதேவ, வைகுண்ட என்ற மூன்று ரூபங்கள் அனந்தாசன, ஸ்வேதத்வீப, வைகுண்டம் ஆகிய இடங்களில் வெளிப்பட்டன. இந்த ரூபங்களுக்கு முன்னர், மத்ஸ்ய கூர்மாதி ரூபங்கள் வெளிப்பட்டன.

முதன்முதலில் பத்பனாப ரூபத்திலிருந்து வெளிப்பட்ட ரூபமே ‘சனத்குமாரன்’. சனகாதி முனிவர்களுக்கெல்லாம் பிரம்மசரியத்தை உபதேசித்த முதல் அவதாரம் இதுவே. அதன்பிறகு, வராக, மஹிதாஸ, ஐதரேய, நாராயண ஆகிய ரூபங்களை எடுத்தார். நர, ப்ருது, பலராம என்னும் மூன்று ஆவேச அவதாரங்களையும் எடுத்தார். இந்த மூன்று அவதாரங்களைத் தவிர, மற்ற அனைத்தும் ஸ்ரீஹரியின் ஸவரூப அவதாரங்கள் என்றே அழைக்கப்பட்டன. இந்த அனைத்து அவதார ரூபங்களுக்கும் பிம்பமூர்த்தியில் வேறுபாடு இல்லை. ஆகையால் மத்ஸ்ய, கூர்ம ஆகிய அவதாரங்கள் ஸ்ரீஹரியின் ஸ்வரூப அவதாரங்கள் எனலாம். பிரம்மாதி ஜீவர்கள் அனைவரும் பிரதிபிம்பர்கள் ஆவர். ஜடப் பொருட்களை பிரதிமை ரூபங்கள் எனலாம். 

கே: ஸ்ரீஹரியின் முதல் அவதாரம் ‘புருஷ’ என்று சிலரும், ‘சனத்குமார’ என்று சிலரும் சொல்கின்றனர். இதில் எது சரி?

ப: புருஷ என்னும் ரூபமே முதலாவதாகும். 

ஆத்யோSவதார புருஷ: பரஸ்ய
கால;ஸபாவ: ஸதஸன்மனஸ்ச |
த்ரவ்யம் விகாரோ குண-இந்திரியாணி
விராட் ஸ்வராட்ஸ்தாம்ஸு சரிஷ்ணு பூம்ன: ||

கால, ஸ்வபாவ அபிமானிகள், முக்யபிராணர், லட்சுமி, மனஸ், பஞ்சபூதங்கள், உலகம், சத்வம் முதலான குணங்கள், பத்து இந்திரியங்களின் அபிமானி தேவதைகள், கருடன், இந்திரன், அசையும் மற்றும் அசையா பொருட்கள் ஆகிய அனைத்தும் இந்த புருஷ நாமக ஸ்ரீஹரியின் ஸ்வரூபம் இல்லை என்றாலும், புருஷனுக்கு மிகவும் பிடித்தவை ஆகையினால் ‘புருஷ’ என்றே அழைக்கப்பட்டன. இதனாலேயே முதலாவது அவதாரம் ‘புருஷ’ என்று சொல்லலாம். மேலும் ஸ்ரீஹரி ஸ்ருஷ்டி செய்யும் எண்ணத்தில் மஹத்தத்வம் மற்றும் 16 கலைகளுடன் கூடிய ‘புருஷ’ என்னும் ரூபத்தை எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. 

கே: சனத்குமார என்னும் அவதாரமும் முதலாவதே என்று இந்த பாகவத ஸ்லோகம் சொல்கிறது.

ஸ ஏவ ப்ரதமம் தேவ: கௌமாரம் ஸர்வமாஸ்தித: |
சசார துஸ்சரம் ப்ரம்ஹா ப்ரஹ்மசர்யமகண்டிதம் ||

சனத்குமார் அவதாரம் முதலாவதாகும். இவன் அனைத்து நற்குணங்களால் நிரம்பி, பிரம்மசர்யத்தை பின்பற்றுபவனாக, சனகாதிகளுக்கு உத்தமமான குரு என்று அழைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் சனத்குமார அவதாரம்கூட முதலாவதாகும் என்று சொல்லலாம் அல்லவா?

ப: உலகத்தை ஸ்ருஷ்டிப்பதற்கு முதலாக ‘சூன்ய’ என்ற பெயருடன் முதலில் எடுத்த ரூபம் ‘புருஷ’ என்னும் ரூபம். உலகத்தின் உள், சேஷசாயியாக பத்பனாப ரூபத்தில், முதன்முதலில் வெளிக்கொணர்ந்த ரூபம் ‘சனத்குமார’ ரூபம். ஆகையால் உலகத்தின் வெளியில் முதலில் புருஷ ரூபமே ஆகும். உள்ளில் முதலில் சனத்குமார ரூபம். இதில் எந்தவித குழப்பமும் இல்லை.

கே: முதல் அவதாரம் புருஷன் என்றது சரி. ஆனால், காலம், ஸ்வபாவம் ஆகியவையும் ஸ்ரீஹரியின் ரூபங்களே. பிரம்மாதிகள் ஸ்ரீஹரியின் ஆவேச அவதாரங்களாயினர். ‘ஆத்யோSவதார: புருஷ:’ என்று மேலே சொல்லப்பட்ட ஸ்லோகத்தைப் பார்க்கும்போது இது தெரிகிறது. ஆகையால், பிரம்மன் முதலாதவர்களும் ஸ்ரீஹரியின் அவதாரங்களே என்று சொல்லலாமா?

ப: ’புருஷ: தஸ்யைவ ஆத்யோSவதார:’ என்ற பத்மபுராணத்தின் ஆதாரத்தில் புருஷன் மட்டுமே ஸ்ரீஹரியின் ஸ்வரூப அவதாரமே தவிர காலம் முதலானவை அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. ஜடப்பொருட்களான காலம் முதலானவையும், அவற்றின் அபிமானி தேவதைகளாகட்டும் ஸ்ரீஹரியின் ஆவேச அவதாரங்கள் ஆவதற்கு சாத்தியமே இல்லை. புருஷனுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கும் காரணத்தால் புருஷனின் அவதாரங்கள் ஆகியிருக்கிறார்கள் என்பதே பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காலம், ஸ்வபாவம் ஆகியவற்றில் ஸ்ரீஹரியின் சன்னிதானம் இருப்பதினால் அவை அவதாரங்கள் என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

கே: சூன்ய நாமக ஸ்ரீஹரி புருஷ என்னும் அவதாரத்தை முதன்முதலில் எடுத்தார் என்றும், அந்த புருஷ என்னும் உடலை அடைந்து, பின்னர் பிரளயகாலத்தில் அந்த உடலை தியாகம் செய்தார் என்றும் சொன்னால், ஸ்ரீஹரியும் நம்மைப் போலவே ‘அநித்யன்’ (அழிவுள்ளவன்) என்று ஆகின்றதல்லவா?

ப: ’ஜக்ருஹே பௌருஷம் ரூபம்’ என்னும் வாக்கியத்திற்கு, நம்மைப் போல் புருஷ என்னும் உடலை அடைந்தார் என்று பொருள் இல்லை. ஸ்ரீஹரி ஒரு உடலை எடுப்பதும் இல்லை. விடுவதும் இல்லை. அவருக்கும் அவரது உடலுக்கும் சிறிதுகூட வித்தியாசமே இல்லாதது ஒரு காரணம். மேலும் ஸ்ரீஹரி ஆதி அந்தம் இரண்டும் இல்லாததாலும் அந்தந்த ரூபத்தில் தோன்றுகிறார், பின் மறைகிறார் என்று பொருள் கொள்ளவேண்டும். பிரளயகாலத்தில் எல்லா இடங்களிலும் தமஸ் என்னும் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளை விரட்டியபோது முதலில் தோன்றியதே புருஷ என்னும் ரூபம் என்று பொருள் கொள்ளவேண்டுமே தவிர, ஒரு உடலை அடைந்தார் என்று பொருள் கொள்ளக்கூடாது. 

கே: புருஷ என்னும் அவதாரம் எப்படி நடந்தது? சற்று விரிவாக கூறவும்.

ப: பிரளயகாலத்தில் தனி ஒருவனாக ஆல இலையில் பாலகிருஷ்ணனாக படுத்திருந்த நாராயணனுக்கு, உலகத்தைப் படைக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்றுவதுபோல், சூன்ய என்னும் ரூபத்திலிருந்து புருஷ என்னும் ரூபத்தில் தோன்றினார். இதுவே முதலாம் அவதாரம். அப்போது லட்சுமிதேவி, ப்ரக்ருதி என்னும் ரூபத்தில் தோன்றினாள். அந்த ப்ரக்ருதியிடம் புருஷன் தன் வீர்யத்தை செலுத்தினார். இதிலிருந்து ஹிரண்யகர்பன் பிறந்தார். புருஷனிடமிருந்து பிறந்த அந்த ஹிரண்யகர்பனுக்கும் புருஷ என்றே பெயர். ஹிரண்யகர்பனின் மனைவியின் பெயர் ஸ்ரத்தாதேவி. அவளுக்கும் ப்ரக்ருதி என்றே பெயர். 

பிரளயகாலத்தில் ஸ்தூல சரீரங்கள் இல்லாத காரணத்தால், ஹிரண்யகர்பன் மற்றும் ஸ்ரத்தாதேவி இருவரும் தற்போது ஸ்தூல சரீரங்களைப் பெற்றனர். இவர்களிடமிருந்து அஹங்கார தத்வாபிமானி தேவதைகள் பிறந்தனர். இப்படி ’வ்யோம சம்ஹிதை’யில் சொல்லியிருப்பதாக ஸ்ரீமதாசார்யர் பாகவத தாத்பர்யத்தில் தெரிவிக்கிறார். 

கே: புருஷ என்னும் ஸ்ரீஹரியின் அவதாரம், ஹிர்ண்யகர்பன் என்பவரின் தோற்றத்திற்கு மட்டுமே காரணமா? அல்லது அவரிடமிருந்து வேறு ஏதாவது வேலைகளை நடத்தினாரா?

ப: இந்த புருஷ என்னும் ஸ்ரீஹரியின் அவதாரத்தின் மகிமைகளை சொல்லி முடிப்பது சாத்தியமே இல்லை. இவர் நான்முகனிற்கு மட்டும் தந்தை இல்லை. 14 லோகங்களும் இந்த புருஷனிடமிருந்தே பிறந்தன. எல்லா பிராணிகளும் இவரிடமிருந்தே பிறந்தன. அனைத்து தத்வங்களும்கூட புருஷனிடமிருந்தே பிறந்தன. ஆகையால் இவனை 16 கலைகளால் ஆன புருஷன் என்று சாஸ்திரங்கள் அழைக்கின்றன. 

கே: 16 கலைகள் என்றால் என்ன? இவனை 16 கலைகளால் ஆனவன் (ஷோடச கலாத்மக) என்று ஏன் அழைக்கிறார்கள்?

ப: பஞ்ச பூதங்கள் மற்றும் பதினொன்று இந்திரியங்கள் சேர்ந்து 16 கலைகள் என்று அழைத்துக் கொள்கின்றன. இவர்களின் ஸ்ருஷ்டிக்கு காரணம் ஆனதால் மற்றும் இந்த 16 கலைகளின் அபிமானி தேவதைகளின் அன்புக்குரியவன் ஆகையால் இவனை 16 கலைகளால் ஆனவன் என்று சாஸ்திரங்கள் அழைக்கின்றன. அல்லது பஞ்சபூதங்கள் மற்றும் பதினொன்று இந்திரியங்களை தன் வயிற்றில் வைத்துக்கொண்டவன் ஆகையால் 16 கலைகளால் ஆனவன் என்றும் சொல்லலாம். 

கே: 16 கலைகளால் ஆனவன் என்பதால் அவனை வர்ணிப்பதற்காக புருஷசூக்தம் 16 ரிக்குகளால் ஆனது என்று சொல்கிறார்களே?

ப: கண்டிப்பாக அப்படி சொல்லலாம். இதே புருஷ ரூபனின் விஸ்வரூபத்தை வர்ணிப்பதற்காகவே  புருஷசூக்தம் உண்டாயிற்று. 

கே: புருஷசூக்தத்தின் மகிமை என்ன? அதை ஏன் தினமும் சொல்லவேண்டும்?

ப: பிரம்மாண்டத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ரூபமே புருஷ ருபம். ஸ்ருஷ்டி செய்த அந்த புருஷனின் அருமை பெருமை மகிமைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்கவே வேண்டும். இப்படிச் செய்வதால் அனைத்து புருஷர்களும் தங்கள் விருப்பங்களை அடைவார்கள். முக்கியமாக சந்தான வரம் கிடைத்து அவர்களின் வம்சம் வளரும். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீஹரியிடம் பக்தி அதிகமாகி மோட்சம் கிடைக்கும்.

கே: புருஷ சூக்தத்தின் துவக்கத்தில் புருஷனை வர்ணிக்கும்போது அவருக்கு ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகால்கள் என்று சொல்கிறார்கள். ஆயிரம் தலைகள் இருந்தால், இரண்டாயிரம் கண்கள், இரண்டாயிரம் கைகால்கள் இருக்கவேண்டும் அல்லவா?

ப: அதற்காகவே ‘சஹஸ்ர’ என்னும் சொல்லிற்கு ‘பற்பல’ என்னும் பொருளை ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கிறார். சஹஸ்ர சீர்ஷா என்னும் சொல்லிற்கு ஆயிரம் தலைகள் என்ற பொருளில்லை. பற்பல தலைகள். அவனது இந்திரியங்களும் அனந்தமானவையே. ஆகவே, ஸ்ரீஹரிக்கு அனந்த தலைகள், அனந்த கண்கள், அனந்த கைகால்கள் என்று புருஷசூக்தம் சொல்லியிருப்பதாக தெரிந்துகொள்ளவேண்டும். 

கே: புருஷ என்னும் சொல்லிற்கு ஆண் என்று பொருள். ஸ்ரீஹரியின் புருஷ ரூபத்திற்கு என்ன பொருள்?

ப: ’புரி ஷேதே இதி புருஷ:’ என்னும் வாக்கியத்தின்படி உடலில் இருக்கும் ஜீவனுக்கு புருஷ என்று பொருள். ஆகையால், புருஷ என்னும் சொல்லிற்கு ஆண் என்று பொருள் கொள்வது மிகவும் தவறு. பெண் மற்றும் ஆண் இருவரும்கூட புருஷ என்று சொல்லலாம். ஸ்ரீஹரியின் விஷயத்தில் ‘பூர்வமேவ ஆஸ இதி புருஷ:’ என்னும் வாக்கியத்தின்படி முதலிலேயே எல்லா இடத்திலும் நிறைந்திருந்தான் ஆகையால் அவனை புருஷ என்று அழைக்கவேண்டும். 

கே: இந்த புருஷ என்னும் ரூபம் பிரம்மாண்டத்தின் வெளியே இருக்கிறதா? அல்லது உள்ளே இருக்கிறதா? அல்லது ‘புரி ஷேதே இதி புருஷ:’ என்று சொல்வதைப்போல் நம் உடலில் இருக்கிறதா? இந்த ரூபங்களெல்லாம் ஒன்றானவையா அல்லது வெவ்வேறு ரூபங்களா?

ப: ஸ்ரீஹரியின் எல்லா ரூபங்களும் ஒன்றானவையே. வெவ்வேறு அல்ல. ஆனால், புருஷ ரூபம் மூன்று விதங்களாக இருக்கின்றன. 

1. பிரம்மாண்டத்தை ஸ்ருஷ்டி செய்யும்முன் தோன்றிய ரூபம்.
2. பிரம்மாண்டம் தோன்றிய பின் அதற்குள் தோன்றிய இன்னொரு ரூபம்.
3. அனைத்து ஜீவர்களின் உள்ளேயும் பிண்டாண்டத்தில் நிரம்பியிருக்கும் இன்னொரு ரூபம்.

இதை இன்னொரு விதத்தில் விளக்கலாம்.

1. நாராயண ரூபியான புருஷ.
2. சதுர்முகனின் உள்ளிருக்கும் புருஷ.
3. சிவனின் உள்ளிருக்கும் புருஷ.

கே: புருஷ ரூபியான ஸ்ரீஹரியை தேவர்கள் எப்படி வணங்கினர்?

ப: பரமபுருஷ என்னும் அக்னியில் அனைத்து தேவர்களும் தங்கள் ஆத்மாவையே ஹவிஸ்ஸாக சமர்ப்பித்தனர். அதனைவிடவும் உன்னதமான யாகம் வேறில்லை. இந்த யக்ஞத்தில் வசந்தருதுவே நெய் ஆனது. க்ரீஷ்மருது விறகுகட்டைகள் ஆனது. சரத்ருது நைவேத்தியம் ஆயிற்று. இப்படி அனைத்து உலகமே புருஷனுக்கு ஆஹுதியானது.

கே: உலகமே ஆஹுதி ஆனது என்றால், பிரம்மாண்டமே நாசமானது என்று பொருள். இப்படியிருக்கும்போது, புருஷனிடமிருந்து உலகம் உருவானது என்று எப்படி சொல்வீர்கள்?

ப: அதுதான் ஆச்சரியம். தேவர்கள் அனைவரும் சேர்ந்து யாகங்களை செய்தபோது, புருஷனிடமிருந்து ரிக், யஜுர், சாம வேதங்கள் உருவாயின. காயத்ரி முதலான சந்தஸ்கள் அப்போதே நிர்மாணயின. அதுமட்டுமல்லாமல், குதிரைகள் மற்றும் பல்வேறு விலங்குகள் ஆகியவையும் இந்த புருஷனிடமிருந்து தோன்றின.

கே: ஆம். எவ்வளவு ஆச்சரியமான விஷயம். இந்த யாகத்தில் தேவர்கள் பரமபுருஷனான ஸ்ரீஹரியை எப்படி தியானித்தார்கள்? புருஷனின் முகம் எப்படியிருக்கிறது? தோள்கள், கைகால்கள் எப்படியிருக்கின்றன? அவனின் எந்தெந்த பாகங்களிலிருந்து என்னென்ன ஸ்ருஷ்டி ஆயிற்று?

ப: மிகவும் சுவையான கேள்வி. அந்த புருஷனின் முகத்திலிருந்து பிராமணர்கள், தோள்களிலிருந்து க்‌ஷத்திரியர்கள், தொடையிலிருந்து வைச்யர்கள், கால்களிலிருந்து சூத்திரர்கள் பிறந்தார்கள். மனதிலிருந்து சந்திரன், கண்ணிலிருந்து சூரியன், வாயிலிருந்து இந்திரன், அக்னி. மனதிலிருந்து வாயு. தொப்புளிலிருந்து ஆகாயம். தலையிலிருந்து ஸ்வர்க்கம். கால்களிலிருந்து பூமி. காதுகளிலிருந்து திசைகள். இப்படி அவனது அனைத்து உடல் பாகங்களிலிருந்தும் உலகின் ஸ்ருஷ்டி நடந்தது.

இப்படி தேவர்கள் புருஷனை யக்ஞத்தில் பூஜித்து, அவனிடமிருந்து உலகத்தில் உள்ள அனைத்தும் உற்பத்தி ஆகும்படி வேண்டினர். தினமும் நாமும் புருஷனை இதைப்போலவே வேண்டி தன்யர் ஆகவேண்டும்.

கே: நாமும்கூட புருஷர்தானே?

ப: சிலர் தம்மையே புருஷர் என்று அழைத்துக் கொள்கின்றனர். சிலர் வேதங்கள் விளக்கும் ஒருவரை புருஷன் என்று அழைக்கின்றனர். சிலர் வேதங்களுக்கு அபிமானியான கருடனை புருஷன் என்று அழைக்கின்றனர். வேறு சிலர் உலகத்தை அழிக்கும் வேலையைச் செய்யும் ருத்ரரை புருஷன் என்கின்றனர். பிரம்மாவையும் புருஷன் என்று சிலர் கூறுகின்றனர். புருஷ என்னும் சொல்லிற்கு முக்கியமான / முதன்மையான பொருள் நாராயணன் மட்டுமே ஆகும். மேலே கூறியவர்கள் எல்லாம் இரண்டாம் / அடுத்த பொருள் கொண்டவர்கள் எனலாம். நாராயணன் புருஷ நாமகனாக இவர்கள் அனைவரின் உள்ளும் நின்றிருப்பதால் இவர்கள் புருஷர்கள். ஆகையால், நானே புருஷன் என்று அழைத்துக்கொள்ளும் அனைவருக்கும், எனக்குள் அந்தர்யாமியாக இருக்கும் ஸ்ரீஹரியே புருஷன் என்ற நினைப்பு எப்போதும் இருக்கட்டும். 

கே: புருஷாவதாரம் சொல்லும் செய்தி என்ன?

ப: ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் அனைத்து தேவர்களும் புருஷ நாமகனான ஸ்ரீஹரியைக் குறித்து யாகம் செய்தனர். அவரின் வழிகாட்டுதலின்படி நம் வாழ்க்கையும்கூட ஒரு யக்ஞம் ஆகவேண்டும். நம் வாழ்க்கையை புருஷ என்னும் அக்னியில் ஹோமம் செய்யவேண்டும். கை கால்களில் இருக்கும் மொத்த விரல்கள் இருபது. இந்த இருபது விரல்களிலும் அனைத்து தத்வாபிமானி தேவதைகளும்  நிறைந்திருக்கின்றனர். இந்த உடல் 21வது. மொத்தம் இந்த 21 சமித்துகளை, அந்த புருஷனுக்கு சமர்ப்பித்து, ஆத்மா என்னும் பூர்ணாஹுதியை கொடுத்து தன்யர் ஆகவேண்டும். 

அல்லது 12 மாதங்கள், 5 ருதுக்கள், மூன்று உலகங்கள், இவற்றை சேர்த்தால் 20 சமித்துகள் ஆகின்றன. 21வது சூரியன். இந்த 21 சமித்துகளைக்கூட அந்த புருஷனுக்கு சமர்ப்பித்து, மேலும் நமக்குக் கிடைத்துள்ள தேச, காலம் ஆகியவற்றை அவனுக்கு சமர்ப்பித்து, தன்யர் ஆகவேண்டும். அப்போதுதான் நமக்கு புருஷ ஜென்மம் வந்ததற்கு நல்ல பயன் கிடைத்ததாக பொருள். இல்லையென்றால் இந்தப் பிறவியே வீண் என்று பொருள்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment