Monday, January 29, 2018

18/40 தத்தாத்ரேய அவதாரம்

18/40 தத்தாத்ரேய அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்




கேள்வி: யோக மார்க்கத்தில் முன்னேறுவதற்கு எந்த யோக ஆச்சாரியரின் பாதையை பின்பற்றுவது?

பதில்: உங்களுக்காகவே ஸ்ரீஹரி ’தத்த’ என்னும் அவதாரத்தை எடுத்திருக்கிறார். இவரே யோக சாஸ்திரத்தைத் துவக்கியவர். அனைத்து யோகிகளுக்கும் வழிகாட்டியாகவும் குருவாகவும் இருந்து ‘யோகிஜனப்ரிய’ என்னும் பெயர் பெற்றவர்.

கே: எனக்கு தியானம் செய்வது மிகவும் பிடிக்கும். ஒரு முறை ஒரு தத்துவவாதியிடம் பயிற்சி பெறப் போயிருந்தபோது, அவர் தத்தாத்ரேய ரூபத்தை அறிமுகப்படுத்தி, தியானம் செய்வதற்கு வழி காட்டினார். இது சரியா தப்பா?

ப: இது தவறில்லை. ஆனால், அவர் உங்களுக்கு முதல் வகுப்பில் என்னென்ன சொல்லிக் கொடுத்தார்?

கே: ‘அனைவரும் சமம் என்று உணரவேண்டும். த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத இவற்றைத் தாண்டி நிற்கவேண்டும்’. மேலும் தன்னை தத்தாத்ரேயரின் ஸ்வரூபம் என்று சொல்லிக் கொண்டார். அவர் சொல்லியதில் என்ன தவறு இருக்கிறது?

ப: ஹாஹா. வெறும் பத்து ஆண்டுகள் தியானம் செய்து சில சித்திகளைப் பெற்றதும், தான் தத்தாத்ரேயரே ஆகுவதென்றால், பழங்கால முனிவர்கள் ஏன் தம்மை மிகச் சிறிவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்?

கே: மற்றவரை திட்டுவதெனால் உங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. அனைத்து பிரச்னைகளையும் தாண்டி நாம் தியானம் மூலமாக அமைதியை பெறுபவர்கள். நமக்கு தியானம் சொல்லிக் கொடுத்த குரு, தத்தாத்ரேய ரூபம் எனில் அது நமக்கு மகிழ்ச்சிதானே?

ப: மகிழ்ச்சி. உங்கள் நம்பிக்கையைக் குலைப்பது எனது நோக்கமல்ல. ஆனால், ‘எனக்கு தெரிந்ததே உண்மை’, ‘எனக்கு தோன்றியதே தத்வம்’ என்று சொல்பவரிடம் போய் தொலைந்து விடாதீர்கள். 

கே: அப்படியென்றால் தியான யோகிகள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களா? அவர்களது குரு பரம்பரை போலியா?

ப: உண்மையின் வழி வேறு. உண்மையை நாடவேண்டுமானால், அதன் பாதையையே தேடிப் பிடிக்கவேண்டும்.

கே: பல புகழ்பெற்ற குருஜிகள் மற்றும் மந்திர சித்தி பெற்றவர்கள் தம்மை தத்தாத்ரேயரின் ஸ்வரூபம் என்று சொல்லிக் கொள்கின்றனர். ’ஆம்’ என்று சொல்வதற்கு நமக்கு மனம் ஒப்புவதில்லை. ‘இல்லை’ என்று சொல்வதற்கு சாத்தியம் இல்லை. இந்த குழப்பத்திற்கு ஒரு தீர்வைச் சொல்லுங்கள்.

ப: அத்தகைய குருஜிகள் தம்மை கடவுள் என்று சொல்வதற்கு சாஸ்திரங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களா இல்லையா? இல்லை என்றால் அவர் போலி என்றாகிறது. ஆம் என்றால் அதே சாஸ்திரங்களில் சொல்லியபடி அவர் கடவுள் இல்லை என்றாகிறது.

கே: எனக்கு தியானம் செய்யவேண்டும் என்ற பைத்தியம் பிடித்திருந்தது. தற்போது ஒரு யோகியிடம் இருக்கிறேன். இவர் எனக்கு பத்து ஆண்டுகளில் குண்டலினி சக்தியை எழுப்புகிறேன் என்றிருக்கிறார். இவருக்கு பணம், புகழ் இவற்றின் மேல் கொஞ்சமும் ஆசை இல்லை. யாருமில்லாத இடத்தில் எனக்கு உபதேசித்த இவரை நான் தத்தாத்ரேயரின் ஸ்வரூபம் என்று வணங்குகிறேன். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: உங்கள் கேள்விக்கு விளக்கமான பதில் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் சித்தி பெற்றதால், அதுவே சரியான வழி என்று சொல்வதற்கில்லை. மேலும் ஸ்ரீஹரி கலியுகத்தில் கண்டிப்பாக அவதாரம் செய்வதில்லை. ஆகையாலேயே ஸ்ரீஹரிக்கு ‘த்ரியுக’ என்று பெயர்.

கே: அப்படியென்றால், தத்தாத்ரேயர் வழிவந்த யோகிகள் அனைவரும் தவறான வழியில் போகிறவர்களா?

ப: நான் அப்படிச் சொல்லவில்லை. தியான யோகத்தில் சித்தி அடைந்தவர்கள் அனைவரும் உண்மையான வழியில் நடக்கிறவர்கள் அல்ல. எவ்வளவோ பேர் ஹடயோகத்தில் சித்தி பெற்று, தாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 10 அல்லது 50 அடி மேலே போகிறார்கள். இவர்களை நீங்கள் என்னவென்று சொல்கிறீர்கள்? இதுவே என் வாதம்.

கே: ஆம். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. சமீப காலமாக தத்தாத்ரேயரை வணங்குபவர்கள் பல இடங்களில் தியான முகாம், யோகா முகாம் ஆகியவற்றை அமைத்து, மக்களை தவறான வழியில் அழைத்துப் போகிறார்கள். இவர்களை நாம் எதிர்க்க வேண்டும் அல்லவா?

ப: இல்லை. ஒருவர் தவறு செய்ததால், அவர் பின் இருக்கும் ஒட்டுமொத்த தர்மத்தையே குற்றம் சொல்வது தவறு. அவர் சொல்வதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி, உண்மையான தர்மம் மற்றும் வழியைக் காட்டி, அதில் உறுதியாக இருக்கவேண்டும். 

கே: தத்தாத்ரேய என்றால் என்ன?

ப: பக்தர்களுக்காக தன்னையே கொடுத்தவர் ஆகையால் ‘தத்த’ என்று புகழ்பெற்றவர். அத்ரி ரிஷிகளின் வேண்டுதலின்படி அவரது மகனாக அவதரித்ததால் ‘ஆத்ரேய’ என்ற பெயர். இவ்விரண்டு பெயர்களையும் சேர்த்து உலகத்தில் மற்றும் சாஸ்திரங்களில் பக்தர்கள் ’தத்தாத்ரேய’ என்று அழைக்கின்றனர். 

கே: தத்தாத்ரேய அவதாரத்தின் பின்புலம்?

ப: ‘தேன நஷ்டேஷு வேதேஷு ப்ரக்ரியாஸு மகேஷு ச’ என்று ஹரிவம்சத்தில் சொல்லியவாறு, அந்த காலத்தில் வேதங்கள் அனைத்தும் நாசம் ஆகும் நிலைக்கு வந்தன. உண்மைக்கு வழியில்லாமல், பொய்யானது வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஸ்ரீஹரி, தத்தாத்ரேயராக அவதரித்தார்.

கே: அவதாரம் நடைபெற்ற காலம்?

ப: ஸ்வாயம்புவ மன்வந்தரத்தின் துவக்கக் காலம். சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன். பாகவதத்தில் சொல்லியபடி இது ஸ்ரீஹரியின் ஆறாவது அவதாரம்.

கே: அத்ரி-அனுசுயாவிடம் தத்தாத்ரேயர் ஏன் அவதரித்தார்? எப்படி அவதரித்தார்?

ப: படைத்தல் - காத்தல் - அழித்தல் இம்மூன்றுக்கும் காரணமான ஸ்ரீஹரியைக் குறித்து அத்ரி முனிவர் தவம் செய்தார். இவரது மனைவியான அனுசூயையும் விஷ்ணுவுடன், பிரம்ம மற்றும் ருத்ரதேவரையும் பூஜித்து வந்தார். இவர்கள் இருவரின் தவத்திற்கு மெச்சி, மூன்று தேவர்களும் பிரத்யட்சமாயினர்.

கே: தத்தாத்ரேயரின் கதையை விளக்குங்கள்.

ப: கர்தம ரிஷிக்கு தேவஹூதியிடம் மொத்தம் ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தனர். அதில் அனுசுயையும் ஒருவர். அத்ரி முனிவர் இவரை மணம் செய்துகொண்டார். 

உத்தம வாரிசுக்காக அத்ரி முனிவர் அனுசுயாவுடன் ஸ்ரீஹரியைக் குறித்து தவம் மேற்கொண்டார். ஸ்ரீவிஷ்ணுவினை படைத்தல் - காத்தல் - அழித்தல் ஆகியவற்றிற்கு காரணமானவர் என்று தன் இதய கமலத்தில் வணங்கினார். இவரின் தவத்தின் பலனாக ஸ்ரீஹரி தோன்றினார். ஸ்ரீஹரியுடன், பிரம்மா மற்றும் ருத்ரரும் வந்தனர். த்ரிமூர்த்திகளையும் கண்ட தம்பதிகள் விழுந்து வணங்கினர். ரிஷப வாகன, ஹம்ஸ வாகன மற்றும் கருட வாகனர்களான த்ரிமூர்த்திகளும் சூலம், கமண்டலம், சக்கரம் முதலான சின்னங்களுடன் வந்து அத்ரி அனுசுயா தம்பதிகளுக்கு அருளினர். வாரிசு உண்டாகட்டும் என்ற வரத்தை அளித்து, தாங்களே வந்து அவதரித்தனர். 

அத்ரி அனுசுயா தம்பதிகளிடம் பிறந்த ஸ்ரீவிஷ்ணு ‘தத்த’ என்ற பெயருடன், சதுர்முக பிரம்மன் ‘சோம’ என்னும் ஆவேச ரூபத்துடன், ருத்ரர் ‘துர்வாச’ என்னும் ரூபத்துடன் அவதரித்தனர். பிரம்மனுக்கு பூலோகத்தில் ஸ்வரூப அவதாரம் இல்லாத காரணத்தால், ஆவேச அவதாரம் செய்தார். 

இந்த தத்தனே உலகத்தில் தத்தாத்ரேயன் என்று புகழ்பெற்றிருக்கிறார். ராம கிருஷ்ண அவதாரங்களைப் போலவே இதுவும் ஸ்ரீஹரியின் அவதாரமே ஆகும். இவரே யோகசாஸ்திரத்தை துவக்கி வைத்தவர். இன்றும்கூட பலரும் தியானம் செய்யும்போது இவரையே தமது குருவாக நினைத்து வணங்குகின்றனர். 

இதே தத்தாத்ரேயன் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு யோக சாஸ்திரங்களை உபதேசித்து, அவரை தத்வஞானியாக மாற்றினார். 

கே: த்ரிமூர்த்திகளின் சங்கமமே தத்தாத்ரேய. அகையாலேயே மூன்று முகங்கள். ஆறு தோள்கள். வலது பக்கத்தின் மூன்று தோள்களில் திரிசூலம், ஜபமாலை, தாமரை ஆகியவற்றை ஏந்தி, இடது மூன்று தோள்களில் சக்ர, சங்கு, கமண்டலத்தை ஏந்தியிருப்பவர். இதுவே தத்தாத்ரேயனின் உருவம் அல்லவா?

ப; இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எந்த சாஸ்திரங்களிலும் தத்தாத்ரேயரை இப்படி வர்ணிக்கவில்லை. தத்தாத்ரேயரின் ஸ்வரூபத்தை இந்த புத்தகத்தின் அட்டைப் படத்தில் பார்க்கலாம்.

கே: விஷ்ணுவை மட்டும் வணங்கியபோது மூன்று தேவர்களும் வந்தனர். இதனால் மூவரும் ஒன்றே என்று தெரிகிறதல்லவா?

ப: பாகவதத்தின் நான்காம் ஸ்கந்தத்தைப் படித்தால் அப்படிதான் தோன்றும். ஆனால், பிரம்ம ருத்ரர்களின் உள்ளிருக்கும் விஷ்ணு ரூபம், மற்றும் தனியான விஷ்ணு ரூபம் இம்மூன்றையும் முனிவர் வணங்கியதாலேயே, இந்த மூன்று ரூபங்களிலும் வேறுபாடு இல்லை என்பது தெளிவு.

கே: அனுசுயாவிடம் பிரம்ம, விஷ்ணு, மகேஸ்வரர்கள் வந்து, நீ நிர்வாணமாக வந்து எமக்கு உணவளிக்க வேண்டும் என்கின்றனர். அப்போது அனுசுயா கமண்டலத்தில் இருக்கும் நீரை மூவர்மேலும் தெளிக்கிறார். மூவரும் குழந்தையாக மாறியதும் உணவளிக்கிறார். இப்படியான ஒரு கதை உலகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதுதானே தத்தாத்ரேய அவதாரம்?

ப: இது முற்றிலும் கற்பனையான, கீழ்த்தரமான கதை.

கே: தத்தவழியில் வந்தவர்கள் பலர் மாந்திரீகங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்?

ப: இதற்கு சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது. தத்தாத்ரேயனாக அவதாரம் செய்து, தத்வவாதத்தை எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்தபோது, லட்சக்கணக்கான மக்கள் இவரைப் பின்தொடரத் துவங்கினர். இவரின் சிஷ்யர்கள் ஆயினர். அப்போது ஸ்ரீஹரிக்கு யாருடைய தொடர்பும் வேண்டாம் என்று ஆயிற்று. சுராபானத்தை உருவாக்கினார். மனநிலை சரியில்லாதவர் போல் வீதிகளில் திரிந்தார். பெண்களையும் நாடினர். அதற்குள் மக்கள் அவரைவிட்டு தூர விலகத் துவங்கினர். சில அஞ்ஞானிகள் மட்டும், இதுவே தர்மம் என்று தவறாக நினைத்து, சுராபானத்தைப் பருகத் துவங்கினர். அங்கிருந்தே மாந்திரீகமும் துவங்கியது. ஆனால் மாந்திரீகத்தை ஸ்ரீஹரியே துவக்கினார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. 

கே: கார்த்தவீர்யார்ஜுன, பிரகலாத, யது, அலர்க முதலான சக்ரவர்த்திகள் தத்தாத்ரேயரின் சிஷ்யர்களாயினர் என்று கேள்விப்படுகிறோம். சுராபானம் முதலானவற்றை பயன்படுத்திய இவரின் சிஷ்யர்களாக இவர்கள் எப்படி ஆயினர்?

ப: தத்தாத்ரேயர் சாட்சாத் ஸ்ரீஹரியின் அவதாரம் என்ற அறிவு இவர்களுக்கு இருந்தது. சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் தத்தாத்ரேயரைக் குறித்து தவம் செய்து, கார்த்தவீர்யார்ஜுனன், அவரிடமிருந்து யோக சாஸ்திரத்தை உபதேசம் பெற்று பின், பெரிய யோகியானார்.

கே: ‘அலர்க’ என்னும் சொல்லிற்கு ‘பைத்தியக்கார நாய்’ என்ற பொருள்தானே? இந்த ராஜனுக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது? இவன் ஏன் தத்தாத்ரேயரின் சிஷ்யர் ஆனான்?

ப: சம்சாரத்தில் சிக்கிய அனைவரும் பைத்தியக்கார நாயைப் போலவே அலைகின்றனர். இதைத் தெரிவிப்பதற்காகவே அலர்கனின் தாய் இந்தப் பெயரினை வைத்தாள். இவனும் தத்தாத்ரேயரிடம் உபதேசம் பெற்று பெரிய யோகியானான். 

கே: தத்தாத்ரேயரைப் பற்றியும், தத்தாத்ரேயரின் யோகத்தைப் பற்றியும் ஸ்ரீமதாசார்யார் சொன்னதாக ஏதேனும் தகவல் உள்ளதா?

ப: பாகவத தாத்பர்யத்தில் தத்தாத்ரேய அவதாரத்தைப் பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார். கீதா தாத்பர்ய, பாகவத தாத்பர்ய ஆகியவற்றில் தத்தாத்ரேய யோகத்தைப் பற்றியும் அவரது வசனங்களைப் பற்றியும் விளக்கியிருக்கிறார். தாத்பர்ய நிர்ணயத்திலும் இதைப்பற்றிய தகவல்கள் உள்ளன. தந்த்ரசார சங்கரஹத்தில் தத்தாத்ரேய மந்திரத்தை உபதேசம் செய்திருக்கிறார். 

கே: தத்தாத்ரேய அவதாரத்தைப் பற்றி நமக்கு தெரியாத பல அபூர்வமான விஷயங்களை சொன்னீர்கள். இன்னும் மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறது. என்ன செய்யவேண்டும்?

ப: பாகவதம், ஹரிவம்சம், மார்க்கண்டேய புராணம் இவைகளை படியுங்கள். தத்தாத்ரேய அவதாரத்தைப் பற்றி இருக்கும் குழப்பங்கள் வேறு எந்த அவதாரங்களிலும் இல்லை. உண்மைக்கு ஒரே முகம். இரு முகங்கள் கிடையாது. மூன்று முகங்கள் என்பதோ கிடையவே கிடையாது. இவற்றை அறியாதவர்கள் ஒரே கழுத்தில் பிரம்ம, விஷ்ணு, மகேஸ்வரர் என்று மூவரையும் சேர்த்துவிட்டார்கள். இத்துடன் நிற்காமல் இன்னும் ஏதோதோ தவறான விஷயங்களை சொல்லிவிட்டார்கள். ஆதாரமில்லாத விஷயங்களே எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும்போது, ஆதாரம் உள்ள விஷயங்கள் விலைபோவது மிகக்கடினம். இதை புரிந்துகொள்வதற்கு ஸ்ரீஹரியின் தத்தாத்ரேய அவதாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியோடு அந்தமாக இதைப் பற்றி விவாதிக்க வேண்டும். வழிகாட்டியாக வரும் 100 பேரில் 99 பேர் தவறான வழியையே காட்டுவார்கள். சரியான, ஆதாரமுள்ள வழியைக் காட்டுபவன் ஒருவனே ஆகியிருக்கிறான். இவனின் அறிமுகத்தைப் பெற்று, இப்பிறவியை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள, அந்த தத்தாத்ரேயனே நமக்கு அருளட்டும்.

மோட்சத்திற்கு செல்வதற்கு தியான யோகமே வழி. அந்த தத்தாத்ரேயரே இந்த வழியில் நம்மை கைபிடித்து அழைத்துப் போகட்டும் என்று பக்தியுடன் அவரை ஒருமுறை வணங்குவோம். 

கே: தத்தாத்ரேய அவதாரம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

ப: நாம் அத்ரியாக, அனுசுயையின் கை பிடித்தால், ஸ்ரீஹரி நமது மகன் ஆவார். காம, க்ரோத, லோப இவைகளை ‘த்ரி’ எனலாம். இந்த மூன்றையும் விட்டவனே ’அத்ரி’. வெறும் அத்ரி ஆனால் போதாது, பொறாமையையும் விடவேண்டும். அப்போது அத்ரியான நாம், அனுசூயையின் கையைப் பிடித்தது போல் ஆகும். காம, க்ரோத, லோப மூன்றையும் விட்டு, பொறாமையில்லாமல் இருந்தால் மட்டும் ஸ்ரீஹரி காட்சி கொடுப்பதில்லை. அனைத்து ஆசையையும் விட்டு, ஸ்ரீஹரியைக் குறித்தே தவம் செய்யவேண்டும். அப்போது ஸ்ரீஹரி பக்தி என்னும் கயிறுக்குக் கட்டுப்பட்டு, தன்னையே கொடுத்துவிடுவார். இப்படியாக, அத்ரி அனுசுயாவிடம் பிறந்த தத்த அவதாரம் நமக்குச் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

கே: தத்தனை எப்படி தியானம் செய்யவேண்டும்?

ப: 
ப்ரோத்யத் திவாகர சமானதனும் சஹஸ்ரசூர்யோரு தீதிதிபிராப்த சமஸ்தலோகம் |
ஞானாபயாங்கிதகரம் கபிலம் ச தத்தம் த்யாயேதஜாதிசமிதிம் ப்ரதி போதயந்தம் ||

உதயசூரியனின் சிகப்பு வண்ணத்தை ஒத்த சரீரத்தைக் கொண்டவர், அளவில்லாத சூரியர்களைக் காட்டிலும் மிகுந்த ஒளியுள்ள கிரணங்களினால் எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர், ஞான மற்றும் அபய முத்திரைகளை தரித்திருப்பவர், நான்முகன், ருத்ரன் ஆகிய தேவர்கள் கூட்டத்திற்கு தத்வஞானத்தை போதிப்பவர், பக்தர்களுக்கு அருளுபவர். இப்படியான கபிலரூபி ஸ்ரீஹரியை தியானிக்க வேண்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment