Tuesday, January 16, 2018

5/40 வாமன அவதாரம்

5/40 வாமன அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்

ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷச்சார்
தமிழில் : T.V.சத்ய நாராயணன்



கேள்வி: வாமன அவதாரம் நடந்தது எப்போது?

பதில்: இதே வைவஸ்வத மன்வந்தரத்தில்.

கே: வாமனாவதாரம் நடைபெற்றது பூமியில் எந்த பாகத்தில்?

ப: நர்மதா நதி தீரத்தில்.

கே: வாமனன் என்றால் யார்?

ப: கஸ்யபர் மற்றும் அதிதியரின் கடைசி மகன்.

கே: அதிதிக்கு எவ்வளவு மக்கள்?

ப: விவஸ்வான், அர்யமா, பூஷா, த்வஷ்டா, ஸவிதா, பக, தாதா, விதாதா, வருண, மித்ர, ஸத்ய, உருக்ரம. இதில் கடைசியாக இருக்கும் உருக்ரமனே உபேந்திரன். இவனே வாமனன். ‘அக்ஞகன்ய: ஜகன்யஜ:’. அதிதியின் கடைசி மகன், தேவதைகளில் முதலாமவன் - என்று பாகவதம் சொல்கிறது.

கே: உபேந்திரன் என்றால்?

ப: ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இந்திர பதவியை ஆளும் தேவதைகள் வெவ்வேறானவர்கள். அவரவர்களை அந்த பதவியில் அமர்த்தி, அவர்களை காப்பாற்றுவதற்காக இருக்கும் ஸ்ரீஹரியின் ரூபமே ‘உபேந்திரன்’.

கே: அனைத்து மன்வந்தரங்களுக்கும் உபேந்திரனே வாமனனாக இருக்கிறாரா?

ப: அப்படியில்லை. இந்த வைவஸ்வத மன்வந்தரத்தில் உபேந்திரன் வாமனனாக இருக்கிறார். அடுத்த மன்வந்தரத்தில் ‘சார்வபௌமன்’ என்று அழைத்துக் கொள்கிறார். அதற்கடுத்த மன்வந்தரங்களில் 

ரிஷப, விஷ்வக்சேன, தர்மசேது, ஸ்வதர்ம, யோகேஸ்வர, ப்ருஹத்பானு ஆகிய பெயர்களில் இந்திர பதவியில் அமர்பவர்களை காப்பாற்றுகிறார். இதைப் பற்றி மேலதிக தகவல்கள் அடுத்து ஸ்ரீஹரியின் அவதாரங்களான சார்வபௌமவை (ராஜராஜேஸ்வர) விளக்கும்போது பார்க்கலாம். 

கே: அனைத்து மன்வந்தரங்களிலும் இருக்கும் இந்திரன் ஒருவரே அல்லவா? இந்திரன் என்பது ஒரு தேவதையின் பெயர்தானே?

ப: இல்லை. இந்திரன் என்பது ஒரு பதவியின் பெயர். ஆறாவது மற்றும் ஏழாவது மன்வந்தரத்தில் புரந்தர என்னும் தேவதை இந்திர பதவியை வகித்தார். அடுத்த மன்வந்தரத்தில் பலி இந்திர பதவியை அடைகிறார். 

கே: உபேந்திரன் வாமனனாகி வந்ததன் காரணம் என்ன?

ப: இந்திரனிடமிருந்து பலி ஸ்வர்க்க பதவியை அபகரித்தார். ஆகவே அவனை அழிப்பதற்காக வாமனாவதாரம் நடைபெற்றிருக்கிறது.

கே: பலி அடுத்த மன்வந்தரத்தில் இந்திரன் ஆகிறான் என்றீர்கள். அப்படி இருக்கும்போது இந்த மன்வந்தரத்திலேயே அவன் இந்திரன் ஆகியிருந்தால் என்ன தப்பு?

ப: ஒருவருக்கு ஒரு ஆண்டு ஆனபிறகு பதவி கொடுக்கவேண்டும் என்று நிச்சயம் ஆகியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவன் அதற்கு முன்னரே பதவியில் அமர்ந்து நானே பீடாதிபதி என்றால், அது தப்புதானே!

கே: இந்திர பதவியை அபகாரம் செய்வதற்கு பலிக்கு என்ன அவசியம்?

ப: பாற்கடல் கடையும்போது தனக்கு அமிர்தம் கிடைக்கவில்லை. தேவர்கள் அவரை ஏமாற்றிவிட்டனர் என்ற கோபம் இருந்தது.

கே: இந்திர பதவியை அடையும் அளவிற்கு பலிக்கு எப்படி சக்தி வந்தது?

ப: அசுரர்களின் குரு சுக்ராச்சாரியர். இவர் பலி மூலமாக 100 அஸ்வமேத யாகங்கள் செய்து, ‘விஸ்வஜித்’ யாகத்தை செய்வித்தார். இதனாலேயே பலிக்கு சக்தி வந்தது.

கே: பலி, பிரகலாதரின் பேரன். இவரின் இந்த துர்புத்தியை பிரகலாதர் ஏன் தடுக்கவில்லை?

ப: தேவர்களின் பதவிக்கு போட்டி போடப்போகிறேன் என்று பலி, பிரகலாதரிடம் முதலிலேயே சொல்லிவிட்டார். ஸ்ரீஹரியின் விருப்பத்தை அறிந்திருந்த பிரகலாதர், பலிக்கு ‘ததாஸ்து - அப்படியே ஆகட்டும்’ என்று அனுமதி அளித்தார். தன் பேரனிடம் அதர்மம் - அநியாயங்கள் இல்லை என்னும் அறிவு பிரகலாதருக்கு இருந்தது. 

கே: பலி இந்திர பதவிக்கு வந்தபிறகு நடந்த கதை என்ன?

ப: தன் சக்தியினால் அனைத்து தேவர்களையும் வென்ற பலி, இந்திர பதவில் சுகமாக காலம் கழித்து வந்தார். சில காலம் ஆனபிறகு அவர் மனதில் ஏதோ குழப்பம், பிரச்னை. ஏதோ தப்பு செய்திருக்கிறோம் என்று தோன்றியது. அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் இதே குழப்பம் நிலவியது.  பல அபசகுனங்கள் தோன்றின. பலியின் ஆட்சிக்கு ஏதோ பிரச்னை வரப்போகிறதென்று அனைவருக்கும் சந்தேகம் வந்தது. இதனால் பலி மேலும் குழப்பமடைந்தார். தன் மனதை சமாதானப்படுத்துவதற்காக தன் தாத்தாவான பிரகலாதனை அணுகினார்.

‘தாத்தா! என் ஆட்சியில் பல அபசகுனங்கள் தோன்றுகின்றன. ஏதோ பயமாக இருக்கிறது. இதற்கான காரணத்தை விளக்குவீர்களா?’

பேரனின் உதவியற்ற நிலைக்கு தாத்தா மனமிரங்கினார். உடனே உண்மை நிலையை அறிந்தார். முன்னர், பலியின் கதி என்ன ஆகப்போகிறதென்று அறிந்தார். பிரகலாதன் தியானம் செய்து, ஸ்ரீஹரியின் விஸ்வரூபத்தை கண்டார். அதிதியின் கர்ப்பத்தில் வாமனனைக் கண்டு, அவனிடம் அனைத்து உலகத்தையும், தன்னையும், பலியையும்கூட கண்டார். பலியிடமிருந்த ஆட்சி அனைத்தையும் பறிப்பதையும் கண்டார். தான் கண்டவற்றை பலியிடம் தெரிவித்தார். 

விஷயத்தை அறிந்த பலி பயம் கொள்ளவில்லை. கோபம் கொண்டான். ‘என் பலம் மற்றும் பலம் பொருந்திய என் சேனையின் முன் ஸ்ரீஹரி என்ன செய்யமுடியும்?’ என்று கூவினான். விஷ்ணு துரோகமான இந்த வசனத்தைக் கேட்ட அந்த கணமே பிரகலாதர் ‘உன் அனைத்து ஆட்சியும் அழிந்துபோகட்டும்’ என்று சபித்தார். அந்த சாபத்தைக் கேட்ட பலி அவரிடம் மன்னிப்பு கோரினான். விஷ்ணு துரோகம் செய்ய மாட்டேன் என்று வாக்களித்தார். 

பிரகலாதரின் இந்த சாபம், பின்னர் பலியின் அழிவிற்கு காரணமாக இருந்தது. (வாமன புராணம்).

கே: தேவேந்திரனின் பதவியை அபகரிக்க வேண்டுமெனில், பலி தாமஸ ஜீவியாக இருக்கவேண்டுமல்லவா?

ப: பலி தைத்யராக இருந்தபோதிலும் சுத்த சாத்விக ஜீவியாக இருந்தார். ஆனால் அவ்வப்போது மட்டும் அவருக்கு அசுர ஆவேசம் வந்துவிடுகிறது என்று ஸ்ரீமதாசார்யர் தனது தாத்பர்ய நிர்ணயத்தில், ‘அசுராவேஷத:’ என்று குறிப்பிடுகிறார். ஆக இரு ஜீவிகள், பலியின் உடலில் இருந்து ஆண்டுகொண்டிருந்தன.

கே: பலியிடம் இரு ஜீவிகள் குடிகொண்டிருந்தன என்று எப்படி நிர்ணயம் செய்கிறீர்கள்?

ப: மேலே குறிப்பிட்டதைப் போல், ஸ்ரீஹரியைப் பற்றி பிரகாலதரிடம் பலி கேலியாகப் பேசினார். ஸ்ரீஹரி, வாமனனாக அவதாரம் எடுத்தபோதும், அவனது அகங்காரம், மமதைகளை அவரிடம் வெளிப்படுத்தினான். மற்றொரு முறை ஸ்ரீஹரிக்கு தன்னிடமிருந்த அனைத்தையும் அர்ப்பணம் செய்தார்.

கே: வாமனாவதாரத்தின் பின்புலம்?

ப: இந்திர பதவியை இழந்த தேவர்கள் அனைவரும், ஸ்ரீஹரியிடம் போய் முறையிட்டனர். தான் அவதரித்து, உங்கள் அனைவரையும் காப்பாற்றுவேன் என்று ஸ்ரீஹரி தேவர்களிடம் கூறினார். அதே சமயத்தில், அதிதியிடம் தன்னை மகனாக பெறவேண்டும் என்று தவம் செய்யுமாறு சொல்லவும் தேவர்களிடம் சொன்னார். இப்படி வாமனபுராணம் சொல்கிறது.

கே: அதிதியே தனது மக்களின் கஷ்டகாலத்தை அறிந்து, தவம் மேற்கொண்டாள் என பாகவதம் சொல்கிறதே?

ப: ஆம். அதிதிக்கும் தவம் செய்யவேண்டும் என விருப்பம் இருந்தது. அதே சமயத்தில், ஹரியின் ஆணையும் வந்தது. இப்படி இரண்டையும் சேர்த்து பார்க்கவேண்டும்.

கே: வாமனனை மகனாக அடையவேண்டுமென்று அதிதி, எந்த தவத்தை மேற்கொண்டாள்?

ப: வாரிசு இல்லாதவர்களுக்கு சொல்லப்படும் விரதம் என்றால் அது பயோவிரதம். அதையே அதிதியும் மேற்கொண்டாள்.

கே: இந்த காலத்தில் வாரிசு இல்லாதவர்கள் இந்த விரதத்தை செய்யலாமா?

ப: பயோவிரதத்தை மேற்கொண்டால் வாரிசு கண்டிப்பாக பிறக்கும். வாரிசு வேண்டும் என்பவர்கள், விஷ்ணு ப்ரீத்யர்த்தமாக இந்த விரதத்தை செய்யலாம்.

கே: வாமன அவதாரம் ஆன நாள்?

ப: பாத்ரபத சுத்த விஜயத்வாதசி, ஸ்ரவண நட்சத்திரம், அபிஜித் முகூர்த்தத்தில், சங்கு-துந்துபி ஆகிய வாத்திய கோஷத்துடன், அப்ஸரஸ்-கந்தர்வர்கள் ஆகியவர்களின் நடன-பாடல்களுடன், தேவ, ரிஷி, பித்ரு, அக்னிகளின் ஸ்தோத்திரங்களுடன், புஷ்பவிருஷ்டி ஆகும் சமயத்தில் வாமன அவதாரம் நடந்தது.

கே: வாமன அவதாரத்தை எப்படி தியானிக்க வேண்டும்?

ப: 
அஜீனதண்ட கமண்டலு மேருலாருசிரா பாவனவாமன மூர்த்தியே |
மிதஜகத் த்ரிததாய ஜிதாரயே நிகமவாக்படவே வடவே நம: ||

கே: பலியின் வீட்டிற்கு வாமனன் எப்படி வந்தார்?

ப: தர்ப்பைபுல்லினால் ஆன அரை ஞாண் கயிறு, பூணூல், கிருஷ்ணாஞ்சனத்தின் மேல்துண்டு அணிந்து கொண்டு, கண்களைப் பறிக்கும் அழகுடன் ஒரு பிரம்மசாரி ரூபத்தில், வாமனன் அனைவரின் மனதிலும் அமைதியை உண்டாக்குபவனாக, சிரித்த முகத்துடன், பலியை கடைத்தேற்றுவதற்காக, அஸ்வமேத யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஸ்ரீஹரி பலியின் வீட்டிற்கு வந்தார். 

கே: மூன்று அடி நிலத்தை வாமனன் தானமாக கேட்டபோது, பலி ஏன் கோபம் கொண்டார்?

ப: தன்னிடம் தானம் கேட்பவர்கள் மறுபடி வேறு யாரிடமும் தானம் கேட்கக்கூடாது என்னும் அகங்காரம் பலியிடம் இருந்தது. ஸ்ரீஹரி எதிரில் வந்து நின்றபோதும், அவர் எதைக் கேட்டாலும் தானம் அளிப்பேன் என்ற கர்வம் இருந்தது. இதற்கெல்லாம் காரணம் - அவரிடமிருந்த அசுர ஆவேசம்.

கே: பலி கொடுக்க இருந்த தானத்தை சுக்ராச்சாரியார் தடுத்தார். ஆகவே, சுக்ராச்சாரியார் துஷ்டர்தானே?

ப: சுக்ராச்சாரியார் ஒரு சிறந்த தேவதை. அசுரர்களின் குருவாக இருந்தார். ஸ்ரீஹரியின் விருப்பத்திற்கேற்ப அசுரர்களுக்கு அனுகூலம் செய்து தருவதே அவரின் கடமையாக இருந்தது. இப்படி செய்வதால் அவருக்கு தோஷம் ஏற்படவில்லை. ’உங்கள் யாகத்திற்கு என்னால் தடை வந்தது’ என்று வாமனன் கூறியபோது - ’ஸ்ரீஹரியான நீ எங்கள் யாகம் நடக்கும்போது எதிரில் வந்து நின்றதால், தடை எப்படி ஆகும்?’ என்று கேட்டார்.

கே: வாமனன், த்ரிவிக்ரமனாகி வளர்ந்து நின்றபோது, ஒரு காலடியால் பூமியை, இரண்டாவது காலடியால் வானத்தை அளந்த காட்சி, ‘உத்தானபாத ஆசனம் (யோக)’ போல இருந்ததா?

ப: இது சரியல்ல. பலிக்கு எங்கு பார்த்தாலும் ஸ்ரீஹரியின் பாதங்களே தெரிந்தன. வானத்தில் ஸ்ரீஹரியின் இரண்டாவது பாதம் தெரிந்தது. ஸ்ரீஹரி தன் விஸ்வரூப தரிசனத்தை அந்த சமயத்தில் காண்பித்தார். நாம் காலடி வைப்பதுபோல், தன் காலை சிறிது தூக்கியே இரண்டாவது அடியை வைத்தார் ஸ்ரீஹரி.

கே: ஸ்ரீஹரியின் விஸ்வரூப தரிசனத்தை அனைவரும் கண்டனரா?

ப: பலி மற்றும் சுக்ராச்சாரியார் கண்டனர். பலியை விட உத்தமரான தேவர்கள் கண்டனர். மற்றவர்களுக்கு வாமன ரூபத்திலேயே ஸ்ரீஹரி காணக் கிடைத்தார். குருக்‌ஷேத்திரத்தில், அர்ஜுனன், பீமன் மற்றும் சிலருக்கு மட்டுமே ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனம் காணக் கிடைத்தது போலவே இதுவும்.

கே: த்ரிவிக்ரமனாக வளர்ந்து நின்றபோது, இந்த பிரம்மாண்டத்தின் ஓடு உடைந்ததுபோல் ஆயிற்று என்று பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரது இடது காலின் நகத்தின் முனை உடைந்தது என்ற கதை பிரபலமாகியிருந்தாலும், பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தத்தில் ஏன் இது  குறிப்பிடப்படவில்லை?

ப: ஆம். ஆனால் ஐந்தாம் ஸ்கந்தத்தில் இருக்கும் பாகீரதி கத்யத்தில் ‘வாமபாதாங்குஷ்ட நக நிர்பின்ன’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகான கதையை எட்டாம் ஸ்கந்தத்தில் அறியவேண்டும். 

கே: பிரம்மாண்டத்தின் ஓடு உடைந்தபோது, சுரகங்கை உலகத்தில் பாய்ந்தாள். அவளின் வேகத்திற்கு உலகத்தில் இருந்தவர்கள் அனைவரும் அழிந்துபோயிருக்கவேண்டுமே?

ப: அதற்காகவே பிரம்மதேவர் அவளை தன் கமண்டலத்தில் பிடித்தார். பிறகு ஸ்வர்கம் முதலான  லோகங்களுக்கு வந்தாள். பகீரதன் அவளை பூமிக்கு வரவழைத்தபோது, ருத்ரதேவர் தன் ஜடையில் பிடித்தார். பிறகே பூமிக்குள் பிரவேசித்தாள் கங்கை. ‘காம் கச்சதி இதி கங்கா’ என்பதைப்போல், பூமியில் பிரவேசித்ததால் அவளுக்கு ‘கங்கா’ என்று பெயர் வந்தது. 

கே: மூன்றாவது அடியை ஸ்ரீஹரி பலியின் மேல் வைத்து, அதோலோகத்திற்கு (பாதாளத்திற்கு) அனுப்பினார். இதற்கான காரணம் என்ன?

ப: ஸ்ரீஹரி யாரை இரட்சிக்கப் போகிறாரோ, முதலில் அவரிடமிருந்து அவரின் செல்வத்தை பறித்துக் கொள்கிறார். பலியை இரட்சிப்பதற்காகவே முதலில் அவரிடமிருந்த அனைத்து வைபவங்களையும் ஸ்ரீஹரி பறித்துக் கொண்டார்.

கே: ஆனால், பல அரசர்கள் தங்கள் செல்வத்துடனேயே வாழ்ந்து, பிறகு சத்கதியை அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளனவே?

ப: ஆம். செல்வத்தை வைத்திருப்பது / பாதுகாப்பது தவறில்லை. அதை வைத்திருப்பதால் கர்வம் கொள்வதே தவறு. செல்வம் வந்தபோது கர்வம் வராதிருந்தால், அத்தகைய செல்வம் ஸ்ரீஹரியின் அருளினாலேயே கிடைத்தது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

கே: ஸ்ரீஹரியின் ரூபத்தை பிரகலாதன் பார்த்தாரா?

ப: ஆம். அதுமட்டுமல்லாமல், தன் பேரனான பலியை ரட்சிப்பாயாக. இவன் செய்த தவறுகளை மன்னிப்பாயாக என்று வேண்டினார். அவர் வேண்டுதலின்படியே ஸ்ரீஹரி, தான் பலியை ரட்சிப்பதோடு மட்டுமல்லாமல், அடுத்த மன்வந்தரம் வரையில், அதோலோகத்தில் பலியின் வீட்டின் வாயிலை தான் கபில ரூபத்தினால் காப்பேன் என்று ஆசிர்வதித்தார். 

கே: வாமனன் மற்றும் த்ரிவிக்ரம ரூபத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?

ப: தினமும் காலைவேளையில் ‘ஹேமாத்ரி ஷிகராகாரம்’ என்னும் ததிவாமன ஸ்தோத்திரத்தை படிக்கவேண்டும். த்ரிவிக்ரம ரூபத்தினால், பிரம்மாண்டத்தின் ஓட்டினை உடைத்தபோது, த்ரிவிக்ரம்ரின் பாதத்தைக் கழுவியபின், கங்கை பூமியில் பாய்ந்தபோது பிரம்மாண்டமே தங்கத்தைப் போல் ஜொலித்தது. இந்த காட்சியை நம் மனதில் நிறுத்தி தியானிக்கவேண்டும்.

கே: பலிச்சக்ரவர்த்தியிடமிருந்து நாம் கற்கவேண்டியது என்ன?

ப: நாம் ஹரிபக்தர்கள். ஆனால் நம் மனதில் எட்டு வகையான மதங்கள் குடிகொண்டிருக்கின்றன. இந்த துஷ்ட சக்திகளை நாம் அழிக்கவேண்டும். நற்குணங்களை ஸ்ரீஹரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக நம் இதயத்தில் வாமனனின் அவதாரம் நிகழவேண்டும். பலியிடம் இருந்த கர்வம், தற்புகழ்ச்சி ஆகியவற்றை அழித்து, அவன் தலைமேல் தன் காலை வைத்து அருளினார். பலியைப் போல் நாமும் நம்மை மற்றும் நம் தலையை ஸ்ரீஹரிக்கு சமர்ப்பித்து, அவன் சரணாகதியை அடையவேண்டும்.

கே: வாமனாவதாரம் சொல்லும் செய்தி என்ன?

ப: மூன்று காலடிகளினால் பலியை ரட்சித்தார். இதைபோலவே நம் வாழ்க்கையிலும் ஸ்ரீஹரி தன் மூன்று ரூபங்களினால் ரட்சிக்க வேண்டும். ஜாக்ரதே, ஸ்வப்ன, சுஷும்ன (முழிப்பு, கனவு மற்றும் தூக்கம்) ஆகிய மூன்று நிலைகளிலும், விஸ்வ, தைஜஸ், ப்ராக்ஞ ஆகிய ரூபங்களினால் குழந்தை, வாலிப, முதிய ஆகிய மூன்று பருவங்களிலும், அனிருத்த, பிரத்யும்ன, நாராயண என்னும் ரூபங்களினால், முன், பின் மற்றும் நடுவில், நரசிம்ம, ஸ்ரீகிருஷ்ண, ராம ரூபங்களினால் நம்மை காப்பாற்றவேண்டும். பலிக்கு விஸ்வரூப தரிசனத்தை அளித்தாற்போல், எங்கு பார்த்தாலும் ஸ்ரீஹரியைக் காணும் புத்தியைக் கொடுத்து நம்மை காப்பாற்றவேண்டும்.

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தின்படி ஸ்ரீஹரியை எப்படி தியானம் செய்யவேண்டும்?

ப: த்யாயேத் ஸுசுக்லமரவிந்த தலாயதாக்‌ஷம்
ஸௌவர்ண பாத்ர ததி போஜ்யமதாம்ருதம் ச |
தோர்ப்யாட்ம் ததானமபில்யைஸ்ச சுரை: பரீதம்
ஷீதாம்ஷு மண்டல கதம் ரமயா சமேதம் ||30||

தங்கப் பாத்திரத்திலிருக்கும் அமிர்தத்தை தன் கைகளில் பிடித்துக்கொண்டு, தன் குடும்பத்தினரான அனைத்து தேவர்களுடனும் மற்றும் ரமாதேவியுடனும் சந்திரமண்டலத்தில் அமர்ந்திருக்கும், தாமரையைப் போல் மலர்ந்திருக்கும் ஸ்ரீஹரியை தியானிக்க வேண்டும்.

உத்யத்ரவி ப்ரபவரீந்த்ர தரௌ கதாம் ச
ஞானம் ச விபுதமஜம் ப்ரியயா சமேதம் |
விஸ்வாவகாசமபித: ப்ரதி பூரயந்தம்
பாசா ஸ்வயா ஸ்மரத விஷ்ணுமஜாதி வந்த்யம் ||32||

உதிக்கும் சூரியனைப்போல ஒளிரும் கைகளினால் சக்ர, சங்க, கதா, ஞான முத்திரைகளைக் காட்டும், தன் ஒளியினால் உலகில் நிறைந்திருக்கும், பிரம்மர் முதலான தேவர்களினால் வணங்கப்படும், ரமாதேவியுடன் கூடிய, அழிவில்லாத நாராயணனை தியானிக்கவேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment