Wednesday, January 24, 2018

13/40 ஹயக்ரீவ அவதாரம்

13/40 ஹயக்ரீவ அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கேள்வி: ஹயக்ரீவ என்றால்?

பதில்: குதிரை முகம் கொண்டவன்.

கே: அவதாரம் நடந்த காலம்?

ப: ஸ்ருஷ்டியின் துவக்கக் காலம். தேவர்கள் உருவாவதற்கு முன்னர்.

கே: ஹயக்ரீவ அவதாரத்தின் நோக்கம்?

ப: மது-கைடப அசுரர்களை கொன்று, வேதங்களை காப்பாற்றுவதற்காக.

கே: வேதங்களை காப்பாற்றிய ரூபம், வேதவியாசர் அல்லவா?

ப: அது த்வாபரயுகத்தின் கதை. இது ஸ்ருஷ்டியின் துவக்கக் கதை. முதன்முதலாக நடந்த ஞான-அவதாரம், ஹயக்ரீவர்.

கே: மது-கைடபர் யார்?

ப: ஸ்ரீஹரியின் காதுகளிலிருந்து பிறந்த அசுரர்கள்.

கே: ஸ்ருஷ்டியின் துவக்கத்திலேயே இந்த அசுரர்கள் பிறந்தனரா?

ப: ஆம். தேவர்களின் ஸ்ருஷ்டிக்கு முன்னரே பிறந்த இவர்கள், வாயுதேவரின் ஆவேச பலத்தில், தண்ணீரில் பயங்கரமாக வளர்ந்தனர்.

கே: இத்தகைய அசுரர்களை பிரம்மதேவர் ஏன் கொல்லவில்லை?

ப: பிரம்மதேவரைக் குறித்து தவம் செய்து, யாராலும் கொல்லப்படக் கூடாதென்று வரம் பெற்றனர். பிரம்மதேவரின் முகத்திலிருந்து வெளிவந்த வேதாபிமானி தேவதைகளை கவர்ந்து கொண்டு, பாதாள லோகத்திற்கு ஓடினர்.

கே: தன்னிடம் வரம் பெற்ற தைத்யர்களை பிரம்மதேவர் எப்படி கொன்றார்?

ப: பிரம்மதேவர் ஸ்ரீஹரியைக் குறித்து ஞானஸத்ர யாகத்தை நடத்தினார். வேதங்களைக் காப்பாற்றுவதற்காக மனதை மயக்கக்கூடிய அழகிய ஹயக்ரீவ ரூபத்தில் ஸ்ரீஹரி அவதரித்தார். 

கே: ஹயக்ரீவ தேவரின் அவதாரம் நடந்தது எந்த நாள்?

ப: ஸ்ராவண சுத்த பௌர்ணமி அன்று ஹயக்ரீவ ஜெயந்தி.

கே: ஹயக்ரீவ ஜெயந்தியின் சிறப்பு என்ன?

ப: மிகவும் சிறப்பானது. ஒரு வருடத்தில் செய்த அனைத்து வேத அத்யயனங்களையும் ஹயக்ரீவ தேவருக்கு சமர்ப்பணம் செய்து, புதிய வேத அத்யயனங்களுக்காக சங்கல்பம் செய்யும் நாள். இதையே ‘உபாகர்ம’ என்கிறார்கள். அனைத்து வேதங்களுக்கும் ரட்சகராக இருப்பதால் ஹயக்ரீவரின் ஜெயந்தியையே ‘உபாகர்ம’ என்று கொண்டாடுவது மிகவும் சரியான விஷயம். 

கே: ஹயக்ரீவர் மது-கைடபரை எப்படி கொன்றார்?

ப: பாதாள லோகத்தில், காதுகளுக்கு மிகவும் இனிமையான வகையில் சாமகானத்தைப் பாடத் துவங்கினார். ஹயக்ரீவரைக் காண மது-கைடபர் ஓடி வந்தனர். வேதங்களை எடுத்துக்கொண்டு ஹயக்ரீவர் தன் இருப்பிடத்திற்கு வந்தபோது, மது-கைடபர் யுத்தத்திற்கு தயாரானார்கள். அந்த சமயத்தில், தன் தொடையில் அடித்து மது-கைடபர்களை கொன்றார்.

கே: இந்த மது-கைடபரின் மேதஸ் என்னும் கொழுப்பு தண்ணீரில் சேர்ந்ததாலேயே பூமி உண்டாயிற்று என்று சொல்கிறார்களே?

ப: ஆம். அதனாலேயே பூமிக்கு ‘மேதினி’ என்ற பெயர் உண்டாயிற்று. அது மட்டுமல்லாமல் அவர்களது எலும்புகளே கற்களானது. ஆசனம் இல்லாமல் தரையில் அமர்ந்து செய்யப்படும் நற்காரியங்களின் பலன்களை இந்த தைத்யர்கள் பறிக்கின்றனர் என்றும் சொல்லலாம்.

கே: பிரம்மதேவர் தனியாக இருந்தபோது அவருக்கு வந்து உதவிய ஹயக்ரீவரின் மேல் அவருக்கு மிகவும் பிரியம் இருந்திருக்கவேண்டுமே?

ப: ஆம். பிரம்மதேவரை அனைத்தும் அறிந்தவராக ஆக்கிய ஞானரூபம் இது. தன் விரோதிகளான அசுரர்களைக் கொன்று, சம்பூர்ணமான ஞானத்தை உபதேசித்த ரூபம் இது. ஹயக்ரீவ ரூபத்தைக் கண்டால் பிரம்மதேவருக்கு மிகவும் ஆனந்தம். இதையே வேதம் இப்படிச் சொல்கிறது. ‘யோ பிரம்ஹாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்யை தம் ஹ தேவமாத்ம புத்திப்ரகாஷம் முமுக்‌ஷுர்வை ஷரணமஹம் ப்ரபத்யே’.

கே: ஹயக்ரீவ தேவரின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.

ப: ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் சேஷசாயியான நாரயணனின் தொப்புளிலிருந்து தாமரை மலர்ந்தது. அதில் சதுர்முகன் தோன்றினார். அதே தாமரையில், தமோபிந்து, ரஜோபிந்துகளும் பிறந்தன. தமோபிந்துவிலிருந்து ‘கைடப’, ரஜோபிந்துவிலிருந்து ‘மது’ என்னும் இரு அரக்கர்கள் பிறந்தனர். (ஸ்ரீஹரியின் காதுகளிலிருந்து பிறந்தனர் என்றும் சொல்லலாம்). 

சதுர்முகனைக் குறித்து கடுந்தவம் புரிந்து, யாராலும் வெல்ல முடியாத வரத்தைக் கேட்டுப் பெற்றனர். வரத்தைப் பெற்றதால், நானே இறைவன் என்று கர்வத்துடன் திரியத் தொடங்கினர். சதுர்முகனுக்கு ஸ்ருஷ்டி செய்ய முடியாமல் இவர்கள் பெரிய தடையாக ஆகினர். மூர்த்தி முதலான நான்கு வேதாபிமானிகளை திருடிக்கொண்டு பாதாளலோகத்திற்கு ஓடினர்.

வேதங்கள் இல்லாமல் ஸ்ருஷ்டி எப்படி சாத்தியம்? குழப்பத்தில் ஆழ்ந்த சதுர்முகன், ஸ்ரீஹரியைக் குறித்து தவம் செய்தார். மகனின் வேண்டுதலுக்கு ஸ்ரீஹரி செவிசாய்த்தார். என்ன வேண்டும் என்று கேட்டார். ‘ஸ்ருஷ்டி செய் என்று நீ ஆணையிட்டாய். ஆனால் வேதங்களே இல்லை. எனக்கு வேதங்களைக் கொடுத்து அருள்புரிவாயாக’ என்று சதுர்முகன் வேண்டினார். ஸ்ரீஹரி புன்னகையுடன் ‘ததாஸ்து - அப்படியே ஆகட்டும்’ என்றார். 

உடனே மின்னலைப் போன்ற வேகத்தில், ஸ்ரீஹரி, வெள்ளை குதிரையின் அவதாரத்தை எடுத்தார். தன்னை ஹயக்ரீவன் என்று சொல்லிக்கொண்டார். பாதாளலோகத்திற்குச் சென்று மனதிற்கினிய சாமகானத்தைப் பாடினார். அபூர்வமான இனிய கானத்தைக் கேட்ட மது கைடபர், குரல் ஒலித்த திசையினை நோக்கி ஓடோடி வந்தனர். அந்தக் கணத்தில் ஹயக்ரீவர் மறைந்தார். அந்த நான்கு வேதங்களையும் எடுத்துக்கொண்டு தன் இருப்பிடத்திற்கு வந்தார். மது-கைடபர் ஸ்ரீஹரியுடன் யுத்தம் செய்யத் தயாராயினர். மலையைப் போன்ற பெரிய உடல்களைக் கொண்ட மது-கைடபரை ஸ்ரீஹரி தன் தொடையில் அடித்துக் கொன்றார். நான்முகனுக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஸ்ருஷ்டியின் துவக்கத்திற்கு முன்னோடியானார்.

அனைத்து வேதங்களையும் நான்முகனுக்கு உபதேசித்த அந்த ஞானமூர்த்திக்கு அனந்த வந்தனங்கள்.

கே: ஹயக்ரீவ தேவரின் முகத்திலிருந்து அனைத்து வித்யைகளும் எப்படி வெளிவந்தன?

ப: இதை ப்ருஹதாரண்யகம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. 

ஸ யதாSர்த்ரைதாக்னேரப்யாஹிதாத் ப்ருதக் துமாவினிஸ்சரந்தி, 
ஏவம் வா அரே அஸ்ய மஹதோ 
பூதஸ்ய நிஸ்சயஸிதமேதத் யத்ருக்வேதோ
யஜுர்வேத: ஸாமவேதோSதர்வாம்கிரஸ இதிஹாஸ: 
புராணம் வித்யா உபனிஷத: ஸ்லோகா: 
ஸூத்ராண்யனுவ்யாக்யானானி வ்யாக்யானான் 
யஸ்யைவைதானி நிஸ்வஸிதானி ||

பச்சை மரத்தை எரித்தால் எப்படி புகை சூழ்ந்து வெளிவருமோ அதேபோல், சர்வோத்தமனும், எக்காலமும் நிரந்தரமாக இருப்பவனும் ஆன ஹயக்ரீவ ரூபமான ஸ்ரீஹரியிடமிருந்து ரிக், யஜுர், சாம, அதர்வ என்னும் நான்கு வேதங்களும், மகாபாரதம், உபநிஷத், பஞ்சராத்ர, பிரம்மசூத்ர, வேதவியாக்யான, அனுவியாக்யான இவை அனைத்தும் ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் வெளிவந்தன. அப்படியே மஹத்தத்வம் ஆகியனவும் ஸ்ரீஹரியிடமிருந்து அனாயாசமாக ஸ்ருஷ்டியாயின. 

கே: மது-கைடபரை துர்கை கொன்றார் என்று சப்தஷதி சொல்கிறதே?

ப: மது-கைடபரைக் கொன்றவர் ஹயக்ரீவர். ஆகையால், அக்ரூரர் நீரில் நின்றவாறு ஸ்ரீஹரியை இப்படி வணங்குகிறார். - ‘ஹயஷீர்ஷ்ணே நமஸ்துப்யம் மது-கைடப ம்ருத்யவே’. இவர்களைக் கொன்றதாலேயே ஸ்ரீஹரிக்கு ‘மதுசூதனன்’ ‘மாதவ’ என்ற பெயர்கள் வந்தன. மது கைடபர்களை துர்கை கொன்றார் என்று சப்தஷதியில் சொல்லியிருப்பது கல்ப-பேதத்தினால் என்பதாக தெரிந்து கொள்ளவேண்டும். 

கே: ஹயக்ரீவ தேவரின் விசேஷ சன்னிதானம் இருக்கும் இடம் எது?

ப: பாகவதத்தில் சொல்லியிருப்பதைப் போல, பத்ராஷ்வ வர்ஷத்தில், ‘பத்ரஸ்ரவ’ என்னும் மனுவம்சத்தைச் சேர்ந்தவரால் பூஜிக்கப்பட்டு ஹயக்ரீவர் வீற்றிருக்கிறார். மேலும் சந்திர மண்டலத்தில் லட்சுமிதேவியினால் அமிர்தாபிஷேகம் செய்துகொண்டு அனைத்து உலகத்திற்கும் ஒளி தந்து கொண்டிருக்கிறார். 

கே: சூர்ய மண்டலத்தில் ஹயக்ரீவர் நிலைகொண்டு, காயத்ரி மந்திர பிரதிபாத்யனாக இருக்கிறார் என்று உபநிஷத்கள் சொல்கின்றனவே?

ப: ஆம். அது பெண் ரூபம். இவர் பிரம்ஹ காயத்ரி மந்திரத்தின் மூலம் வணங்கப்படுபவர். அறியப்படுபவர். வேதங்களால் ஆன உலகத்தைப் படைத்து, குதிரை ரூபம் தாங்கிய இவர், நம் அனைவரின் புத்தியை நல்வழிப்படுத்தட்டும் என்று காயத்ரி மந்திரம் இவரை வணங்குகிறது. காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யும் அனைவரும், ஹயக்ரீவரை நினைக்க வேண்டும். 

கே: சந்திர மண்டலத்தில் அமர்ந்திருக்கும் ஹயக்ரீவரைப் பற்றி விளக்குங்கள்.

ப: ஸ்ரீவாதிராஜர் ‘ஸச்சாஸ்தோதிதவர்த்மனா’ என்ற ஸ்லோகத்தில் நம் மனதைக் கவருமாறு வர்ணிக்கிறார். சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவாறு என் பாத கமலங்களை நினைத்தவாறு, ஆயுதங்களை தரித்து, என்னையே நினைத்து ஜபம் செய்பவர்களுக்கு, அனைத்து செல்வங்களுடன் தத்வஞானத்தையும் கொடுக்கிறேன் என்று புத்தகம், சங்கு, துளசிமாலை மற்றும் ஞானமுத்திரைகளை ஏந்தி நின்றிருப்பார். புத்தகம் பிடித்த கையின் சிறு விரலினால் தன் பாதங்களைக் காட்டிக் கொண்டிருப்பார். இத்தகைய அழகான ஹயக்ரீவரை லட்சுமிதேவி அமிர்தத்தினால் அபிஷேகம் செய்துகொண்டிருப்பாள்.

கே: புத்தகம், சங்கு, துளசிமாலை மற்றும் ஞானமுத்திரை இவை எதை விளக்குகின்றன?

ப: பிரம்மசர்ய நிலையில் இருக்கும்போது புத்தகம் படிப்பதில் நேரத்தை செலவழிக்கவேண்டும். கிருஹஸ்த நிலையில் ஈட்டிய செல்வத்தை நல்லவகையில் விநியோகம் செய்யவேண்டும். வானப்ரஸ்த நிலையில் ஸ்ரீஹரியைப் பற்றி நினைத்தவாறு ஞானத்தை அடைய வேண்டும். சன்யாஸ நிலையில் கையில் துளசிமாலை பிடித்து ஸ்ரீஹரியை நினைத்தவாறு தன்யர் ஆகவேண்டும் என்பதை தெரிவிக்கிறார்.

கே: ஹயக்ரீவ ரூபம் மிகவும் உக்கிரமான ரூபமா?

ப: பக்தி செய்யாதவர்களுக்கு மிகவும் உக்கிரம். பாதி பக்தி செய்பவர்களுக்கு பாதி உக்கிரம். முழுமையாக பக்தி செய்பவர்களுக்கு மிகவும் பிரியமான ரூபம். ஞானம் பெறுவதற்கு ஹயக்ரீவரை சரணாகதி அடைவோம்.

கே: சேஷனின் மேல் ஷார்ங்க தனுசை தலையணையாகக் கொண்டு நாராயணன் படுத்திருக்கும்போது, கிருமிகள் நாணைக் கடித்ததால் அது அறுந்து, அவர் தலை துண்டாயிற்று. அப்போது குதிரையின் தலையை ஒட்டவைத்து ஹயக்ரீவன் ஆனார் என்று தேவிபாகவதத்தில் சொல்லியிருக்கிறதே. இதற்கு என்ன பொருள்?

ப: புராணங்களின் பொருளை புரிந்துகொள்வது சுலபமல்ல. அசுர மோகனத்திற்காக இத்தகைய கதைகள் பற்பல உள்ளன. ஆனால் உண்மையான பொருளைப் பார்த்தால் அது வேறாக இருக்கும். 

கே: தன் பெயர் கொண்ட ஒருவராலேயே தான் இறக்கவேண்டும் என்று ஹயக்ரீவ என்னும் அசுரன், தேவியிடம் வரம் பெற்றான் என்று தேவிபாகவதத்தில் இருக்கிறது. ஆனால் மது-கைடபரை கொல்வதற்காகவே ஹயக்ரீவ அவதாரம் நடந்திருக்கிறது என்று நீங்கள் கூறினீர்கள். இந்த வேறுபாட்டை விளக்கவும். 

ப: இது கல்ப-பேதத்தினால் வந்தது எனக் கொள்ளலாம். இந்த கல்பத்தில் மது-கைடபரைக் கொல்வதற்காக ஹயக்ரீவரின் அவதாரம் நடந்திருக்கிறது. வேறொரு கல்பத்தில் ஹயக்ரீவாசுரரைக் கொல்வதற்காக ஹயக்ரீவரின் அவதாரம் நடந்திருக்கலாம். ஒரே கல்பத்தில் இரு வெவ்வேறு நோக்கங்கள் சாத்தியம் இல்லை.

கே: ஹயக்ரீவர் என்பவர் ஒரு முனிவர் என்று சொல்கிறார்களே. அப்படியா?

ப: ஸ்ரீஹரியின் அவதாரம் வேறு. முனிவர் வேறு. இதேபோல் ஹயக்ரீவ என்னும் பெயரில் ராஜன் ஒருவன் இருந்தான் என்றும் மகாபாரத சாந்தி பர்வத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

கே: ஞானாவதாரத்தில் முதல் அவதாரம் ஹயக்ரீவர். இதை உலகத்திற்கு தெரியப்படுத்தியவர் ஸ்ரீபாதராயர்தானே?

ப: ஆம். ஆனால் ஸ்ரீபாதராயருக்கு முன்னால் தந்த்ரசார சங்க்ரஹத்தில் ஸ்ரீமதாசார்யர் ஹயக்ரீவதேவரை வணங்கும் முறையைப் பற்றி ஞானத்தை வேண்டுபவர்களுக்கு தெரியப்படுத்தினார். மேலும் தாத்பர்ய நிர்ணயத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் ஹயக்ரீவ அவதாரத்தைப் பற்றி மிகவும் அழகாக விவரிக்கிறார். பிறகு ஸ்ரீபாதராயர், ஹயக்ரீவரை பூஜிக்கும் வழிகளை முதன்முதலில் வழக்கத்திற்குக் கொண்டுவந்தார். பிறகு ஸ்ரீவாதிராஜர் இன்னும் விளக்கமாக ஹயக்ரீவதேவரின் பக்தியை அனைத்து இடங்களிலும் பரப்பினார். 

கே: ஹயக்ரீவரை ஸ்ரீவாதிராஜர் தனது அனைத்து கிரந்தங்களிலும் நிறைய வர்ணித்திருக்கிறார். அவற்றின் சாரத்தை சுருக்கமாக சொல்லமுடியுமா?

ப: நம் இதயத்தில் ஹரிபக்தி என்னும் கொடி வளரவேண்டும். அப்போது இந்த சிறிய இதயத்தில் வளரும் ஹரிபக்தி என்னும் கொடியை மெல்லுவதற்காக குதிரை ஓடி வரும் - ’குதுரே பந்திதே நம்ம செலுவகுதிரே பந்திதே’. இதுவே ’ஹரிபக்திலதா’.

கே: ‘ஹயஷீர்ஷோ யாம் பதி தேவஹேளனாத்|’ என்று நாராயண வர்மத்தில் சொன்னதன் பொருள் என்ன?

ப: வேதசாஸ்திரங்கள் மோட்சத்திற்கான வழி. சிலசமயம், வேதசாஸ்திரங்களால் விளக்கப்படுபவனை தெளிவாக புரிந்துகொள்ள முடியாதபோது அல்லது அந்த தேவதைகளின் நற்குணங்களை சரியாக புரிந்துகொள்ளாதபோது அல்லது தவறாக புரிந்துகொண்டபோது, தப்பும்தவறுமாக படித்தபோது, அந்தந்த தேவதைகளை புறக்கணித்ததுபோல் ஆயிற்று. அனைத்து வேதசாஸ்திரங்களுக்கும் ஹயக்ரீவரே அதிபதி. அதனால் மேற்கண்ட செயல்களினால், சாட்சாத் ஹயக்ரீவருக்கே அபசாரம் செய்ததுபோல் ஆகிறது. இத்தகைய அபசாரங்களிலிருந்து ஹயக்ரீவர் என்னைக் காப்பாற்றட்டும். நாராயண வர்மத்தில் சொன்னதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம். 

கே: ஹயக்ரீவரை வணங்கும் முறை இன்னும் அதிகம் பரவுவதற்கு என்ன செய்யவேண்டும்?

ப: ஸ்ரீஹரியின் பல அவதாரங்கள் ஞான காரியங்களுக்காக நடந்திருக்கின்றன. அவற்றில் ஹயக்ரீவ என்னும் அவதாரம் மிகவும் முக்கியமானது. ஸ்ருஷ்டியின் துவக்கத்திலேயே வேதங்களால் ஆன உலகத்தை உருவாக்கி, நம் அனைவரின் குருவான வாயுதேவரை சர்வக்ஞராகச் செய்த ரூபம். நாமும் தத்வஞானிகள் ஆகவேண்டுமெனில் ஹயக்ரீவரையே பூஜிக்கவேண்டும். 

கே: ஹயக்ரீவரை வணங்க வேண்டிய முறை என்ன?

ப: தந்த்ரசாரத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருப்பதைப் போல், ஹயக்ரீவ மந்திரத்தை ஜபம் செய்து ஹயக்ரீவ சாலிக்ராமத்தை அல்லது மூர்த்தியை தினந்தோறும் பூஜிக்கவேண்டும். 

ஜயவாஜேவக்த்ர ப்ரபோ
ஜயஸிந்து கன்யாபதே
ஜயதேவ சூடாமணே
ஜய அனந்தசக்தே || ஜய அனந்தஸிந்தோ ||
ஜய அகாதபோத || ப்ரபோ ||
ஸ்ரீரமானாத || துப்யம் நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நம: 
பாஹிமாம் பாஹி ||

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தின்படி ஹயக்ரீவரை எப்படி தியானிக்கவேண்டும்?

ப: வந்தே துரங்க வதனம் சசிபிம்ப ஸம்ஸ்தம்
சந்த்ராவதாதம் அம்ருதாத்மகரை: சமந்தாத் |
அண்டாந்தரம் பஹிரபி ப்ரதி பாஸயந்தம்
சங்க்யாக்‌ஷ புஸ்தக சு போத யுதாஸ்ச பாஹும் ||50||

நஸ்தோ முகாதபி நிரந்தரமுத்கிரந்தம்
வித்யா அசேஷத உதாப்ஜ பவேச முக்யை: |
சம் சேவ்யமானமதி பக்தி பராவனம்ரை: 
லக்‌ஷ்ம்யாSம்ருதேன ஸததம் பரிஷிச்சமானம் ||51||

சந்திரபிம்பத்தில் அமர்ந்திருப்பவரும், சந்திரனைப்போல் வெண்மையானவரும், அமிர்தத்தைப் பொழிபவைகளும், மோட்சத்தை அளிக்கக்கூடியதுமான ஸ்வரூப கிரணங்களால் பிரம்மாண்டத்தின் உள்ளேயும் வெளியேயும் அனைத்து இடங்களிலும் பிரகாசிக்கச் செய்பவரும், சங்கு, ஜபமாலை, புத்தகம், ஞான முத்திரைகளால் தாமரைத்தண்டு போன்ற 4 தோள்கள் உள்ளவரும், மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் எப்போதும் அனைத்து வித்யைகளையும் உபதேசித்துக் கொண்டிருப்பவரும், நான்முகம், ருத்ரன் ஆகியவரால் பூஜிக்கப்படுபவரும், ஸ்ரீலட்சுமிதேவியினால் எப்போதும் அமிர்த அபிஷேகம் செய்யப்படுபவரும், குதிரை முகத்தை உடையவருமான ஹயக்ரீவரூபியான ஸ்ரீஹரியை  வணங்குகிறேன். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment