Sunday, January 28, 2018

17/40 கபில அவதாரம்

17/40 கபில அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கேள்வி: சாங்க்ய மதத்தை தோற்றுவித்தவர் கபில. சாங்க்ய மதம் என்றால் என்ன?

பதில்: எண்ணிக்கையின் மூலம் வளர்ந்த மதம் என்று பொருள். 24 தத்வங்களைப் பற்றி முழுமையான தகவல்களைக் கொடுத்து, 25வது தத்வமான ஹரிதத்வத்தைப் பற்றி கொண்டாடிய மதமே சாங்க்ய மதம்.

கே: நம்மைப் பொறுத்தவரை, இயற்கையே (ப்ரக்ருதி) இந்த உலகத்திற்கு காரணம். அதுவே அனைத்தை விடவும் சிறந்தது. இந்த இயற்கை-வாதத்தை வளர்த்தவர் கபிலரூபியான ஸ்ரீஹரிதானே?

ப: நீங்கள் கேட்பது நிரீஷ்வர சாங்க்ய மதம். இதற்கு காரணமானவர் கபிலரூபியான ஸ்ரீஹரி அல்ல.

கே: பௌத்த மதத்திற்கு புத்தன் மூலபுருஷன் ஆனதைபோல், நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கு கபில ரூபியான ஸ்ரீஹரி மூலபுருஷனா?

ப: இல்லை. நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கு மூலபுருஷர் ஈஷ்வரகிருஷ்ண. இவரை சிலர் கபில என்றும் அழைக்கின்றனர். இவர் வேறு, ஸ்ரீஹரியின் ஸ்வரூபமான கபிலனே வேறு.

கே: ஆஸுரீ என்னும் சிஷ்யருக்கு உபதேசித்த கபிலனே சாங்க்ய மதத்தின் மூலபுருஷர் என்று அனைவரும் சொல்கின்றனரே?

ப: நிரீஷ்வர சாங்க்ய மதத்தை தோற்றுவித்தவரும், பாகவதத்தின் சாங்க்ய யோகத்தை உபதேசித்தவரும் வெவ்வேறாக இருந்தாலும், ஆச்சரியம் என்னவெனில் இருவருக்கும் ஒரே பெயர் - கபில. இதைப்போலவே இருவரின் சிஷ்யருக்கும் ஆஸுரீ என்றே பெயர். இந்த ஒற்றுமைகளை கவனிக்காமல், ஸ்ரீஹரியின் ஸ்வரூபமான கபிலனே, நிரீஷ்வர சாங்க்ய மதத்தை தோற்றுவித்த கபிலன் என்று தவறாக புரிந்துகொண்டிருக்கின்றனர். 

கே: நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கும், பாகவதத்தில் கபிலன் உபதேசித்த சாங்க்ய யோகத்திற்கும் என்ன வேறுபாடு?

ப: இயற்கையே (ப்ரக்ருதி) இந்த உலகத்திற்கு காரணம். இயற்கையின் பரிணாம வளர்ச்சியே இந்த உலகம். இப்படி இயற்கையை உயர்த்திச் சொல்லி, ஸ்ரீஹரியை (புருஷ) தாழ்த்தும் மதம் - நிரீஷ்வர சாங்க்ய மதம். கபில ரூபத்தில் ஸ்ரீஹரி உபதேசித்த சாங்க்ய சாஸ்திரத்திற்கு - உண்மையான அறிவுக்கு ஆதரவு அளிக்கும் மதம் - என்று பொருள். 

கே: அப்படியென்றால் இன்றைய விஞ்ஞான சாஸ்திரம் மற்றும் நிரீஷ்வர சாங்க்ய மதம் இரண்டும் ஒன்றேயல்லவா? இந்த விஞ்ஞான சாஸ்திரம், நிரீஷ்வர சாங்க்ய மதம் இவ்விரண்டிற்கும், கபிலரூபியான ஸ்ரீஹரியே மூலபுருஷன் என்று ஏன் சொல்லக்கூடாது?

ப: கபிலன் உபதேசித்த சாங்க்ய சாஸ்திரம், நிரீஷ்வர சாங்க்ய மதம் மற்றும் இன்றைய விஞ்ஞான சாஸ்திரம் - இம்மூன்றும் வெவ்வேறு ஆகும். மேலாகப் பார்க்கையில் இவை முன்றும் ஒன்று போலத் தெரிந்தாலும், ஆழ்ந்து பார்த்தால் பற்பல வேறுபாடுகள் தெரியும். மேலும் நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கும், விஞ்ஞான சாஸ்திரத்திற்கும், கபிலரூபியான ஸ்ரீஹரியே மூலபுருஷன் என்பதற்கு போதிய தகுந்த ஆதாரங்கள் இல்லை. 

கே: நாம் சொல்லும் பரிணாம கோட்பாடு (theory of evolution) மற்றும் உயிரற்றவைகளிலிருந்து உயிருள்ளவை பிறந்திருக்கின்றன என்னும் கோட்பாடு இவைகளும் சாங்க்ய மதம்தானே?

ப: சாங்க்ய மதத்தில் பரிணாம கோட்பாட்டை ஒப்புக்கொள்வதில்லை. உயிரற்றவைகளிலிருந்து உயிருள்ளவை பிறந்திருக்கின்றன என்னும் விஷயத்தையும் ஒப்புவதில்லை.

கே: ஆனாலும், விஞ்ஞான சாஸ்திரத்தின் கோட்பாடுகள், சாங்க்ய மதம் மற்றும் சார்வாக மதத்தின் கோட்பாடுகளைப் போலவே உள்ளதல்லவா?

ப: ஆம். நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கும், சார்வாக மதத்திற்கும், நவீன விஞ்ஞான கோட்பாடுகள் அப்படியே பொருந்தி வருகின்றன என்று சொல்லலாம். எதுவும், வேறு எதற்கும் துவக்கம் (மூலம்) என்று சொல்லமுடியாது. கபிலன் தேவஹூதிக்கு உபதேசித்த சாங்க்ய சாஸ்திரமானது இவை அனைத்தையும்விட வேறானது. 

கே: கபிலன் உபதேசித்த சாங்க்ய சாஸ்திரத்தில் உள்ள அபூர்வமான விஷயங்கள் என்ன?

ப: யம, நியம, ஆசன, பிராணாயாம, ப்ரத்யாஹார ஆகிய அஷ்டாங்க யோகா’வைப் பற்றி உபதேசித்திருப்பது மிகவும் அபூர்வமானது. தத்வங்களைப் பற்றி ‘இதமித்தம்’ என்னும் முடிவு சொல்லப்பட்டிருக்கிறது. விஷ்ணுவின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, தியானத்தின் மூலம் சம்சார சுழற்சியிலிருந்து விடுபடுவதற்கான சுலபமான வழிகள் இவை. 

கே: சாங்க்ய யோகத்தின் தத்வங்களில் கண்டிப்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

ப: 
‘சேத: கல்வஸ்ய பந்தாய முக்தயோ சாத்மனோ மதம் |
குணேஷ்டு சக்தம் பந்தாய தேஷ்வசக்தம் ஹி யுக்தயோ’ ||
3-26-15

சம்சார பந்தத்திற்கு காரணமாக இருக்கும் மனதே மோட்சத்திற்கும் காரணம். மனது சம்சாரத்தில் ஈடுபட்டால், அதன் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுகிறது. ஸ்ரீஹரியிடம் ஈடுபட்டால், மோட்சத்திற்கு காரணம் ஆகிவிடுகிறது. மேலும்,

‘திதிக்‌ஷ்வ: காருணிகா: சுஹ்ருத: சர்வதேஹினாம் |
அஜாதஷத்ரவ: ஷாந்தா: சாதவ: சாதுபூஷணா:’ ||
3-26-21

மோட்சத்திற்கான பாதையில் செல்ல விருப்பமுள்ளவர்கள், மற்றவர்களின் அபராதங்களை பொறுத்துக் கொள்பவர்கள், கருணை உள்ளவர்கள், பிறருக்கு உதவும் உள்ளம் உள்ளவர்கள், யாரையும் எதிரியாக நினைக்காதவர்கள், ஹரிபக்தர்கள், நற்காரியங்களை மட்டுமே செய்பவர்கள் - இவர்கள் சஜ்ஜனர்கள் எனப்படுகின்றனர். இத்தகைய தார்மிக விஷயங்கள் கபிலகீதையில் சொல்லப்பட்டிருக்கின்றன. 

கே: கபில அவதாரத்தின் நோக்கம்?

ப: சஜ்ஜனர்களான பக்தர்களுக்கு உபதேசவம் செய்வதே இந்த அவதாரத்தின் நோக்கம். ஞான காரியத்திற்காக நடந்த அவதாரம் இது. 

கே: விரக்தியுடன் கர்தம ரிஷிகள் தவம் செய்திருந்தபோது, திருமணம் செய்துகொள் என்று வரமளித்த பிரம்மதேவரின் செயல் தவறுதானே?

ப: கபில நாமக ஸ்ரீஹரியின் அவதாரத்திற்கு காரணமாக இருக்குமாறு, கர்தமருக்கு பிரம்மதேவன் அருளினார். ’கர்தமவீர்யமாபன்னோ ஜக்ஞே அக்னிரிவ தாருணி’ - கபிலரூபியான ஸ்ரீஹரி, கர்தம ரிஷியின் வீர்யத்தில் நுழைந்து, தேவஹூதியிடம் பிறந்தார் என்று பாகவதம் சொல்கிறது. 

கே: ஜட-தேகம் இல்லாத ஸ்ரீஹரிக்கு வீரியத்தில் நுழைவது சாத்தியமா?

ப: அழியக்கூடிய வீரியத்தில் தன் லீலையினால் நுழைந்து, அதை தாயின் உடலில் நுழைந்து, தன்னுடையதே ஆன ஞானானந்தமய ரூபத்தினால் அவதரிக்கிறான் என்று தெரிந்து கொள்ளவேண்டும். 

நாவதாரேஷு ஹரேர்தஹ: ஷுக்லாதி ஸம்பவ: |
ததாபி ஷுக்லஸம்ஸ்த: ஸன் மாத்ருதேஹோ ப்ரவிஷ்யதி ||
விலாப்ய ஷுக்லம் தத்ரைவ கேவலஞானரூபக: |
உதீதி பகவான் விஷ்ணு: காலே லோகம் விமோஹயன் ||

கே: புத்தாவதாரத்தைப் போலவே இந்த கபில அவதாரமும் மனதை வசீகரிக்கும் அவதாரமல்லவா?

ப: இல்லை. ஞானத்தை வளர்ப்பதற்காகவே நடந்த அவதாரம் இது. தாய் தேவஹுதிக்கு உபதேசம் செய்யும் சாக்கில், அனைத்து பக்தர்களையும் மோட்சத்திற்குக் கொண்டுபோகும் அற்புதமான அவதாரம் இது.

கே: இந்த வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து தப்பிக்க பக்தி செய்யவேண்டும். அந்த பக்தியில் பல விதங்கள் உள்ளன என்று கபிலர் உபதேசித்ததை சுருக்கமாகச் சொல்லவும்.

ப: புகழ் வேண்டும் என்பதற்காக கடமைகளைச் செய்தால் அது ராஜஸபக்தி. எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் பக்தி செய்தால் அது சாத்வீகபக்தி. ’யஜேத் யஷவ்யமிதி ய: ப்ருதக் பாவ: ஸ ஸாத்விக:’ என்பதைப்போல் ஒரு கடமையைப் போல் செய்யப்படும் பக்தியே சாத்வீக பக்தி என்று கபிலர் உபதேசிக்கிறார்.

கே: கபிலரின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.

ப: கர்தம ப்ரஜாபதி என்பவர், சரஸ்வதி நதிதீரத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். இவரின் வரத்திற்கு மெச்சிய ஸ்ரீஹரி, இவரை கிருஹஸ்தராக வாழ்வதற்கு அருளினார். அந்த வரத்தின் பலனாக, ஸ்வாயம்புவமனு இவரைத் தேடி வந்து, தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார். சக்ரவர்த்தியின் மகளான தேவஹூதி மிகவும் அழகானவள். ஆனாலும் முனிவரான கர்மதரை தனது கணவராக வரித்தாள். கர்தம மற்றும் தேவஹூதி இருவரும் இனிய தம்பதிகளாக வாழ்ந்தனர். தேவஹூதி, கர்தமருக்கு பற்பல ஆண்டுகள் தன் சேவையை மகிழ்ச்சியுடன் செய்துவந்தாள். ஒரு இளவரசியாக இருந்தாலும், முனிவரின் மனைவியாக அவரது சேவையை செய்துவந்தாள். கர்தமரும் அவளது சேவையில் மகிழ்ச்சியடைந்தார். இவர்கள் நூறு ஆண்டுகள் காலம் வாழ்க்கையை நடத்தியதில், தேவஹூதிக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தனர். 

வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட நினைத்த தேவஹூதி அதற்காக ஒரு ஆண் குழந்தையை வேண்டினாள். அதற்கு கர்தமர், ஸ்ரீஹரியே கபிலனாக உன்னிடம் அவதரிப்பார் என்று கூறினார். தேவஹூதியும் மிகவும் பக்தியுடன் ஸ்ரீஹரியை வணங்கி வந்தபோது, அவளின் பக்திக்கு இணங்கி ஸ்ரீஹரி, தேவஹூதி-கர்தமர் தம்பதிகளிடத்தில் அவதரித்தார். 

கபிலனின் அவதாரத்திற்குப் பிறகு, கர்தமர் தன் ஒன்பது பெண்களையும் - மரீசி, அத்ரி, அங்கிரஸ, புலஸ்த்ய, புலஹ, க்ரது, வஸிஷ்ட, ப்ருகு, தக்‌ஷன் ஆகியோருக்கு மணம் முடித்தார். பின்னர், கபிலனிடத்தில் வந்து, தாம் சன்யாச ஆசிரமத்தை ஏற்கப்போவதாக அறிவித்தார். பின் தவத்திற்காக காட்டிற்குச் சென்றபிறகு, தேவஹூதி தன் மகனான கபிலனிடமிருந்து சாங்க்ய யோகத்தின் உபதேசத்தைப் பெற்று வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டாள்.

கே: கபிலரூபியான ஸ்ரீஹரி எங்கெங்கு வியாபித்திருக்கிறார்? அவரை எப்படி வணங்குவது?

1. வலது கையில்
2. யக்ஞ சாலையில்
3. கண்களின் கருமணியில்
4. இதயத்தில்
5. தொப்புளில்
6. கங்கை - கடல் சங்கமத்தில்
7. பயணத்தில்
8. துளசிதளத்தில்
9. குதிரையின் பிடரியில்
10. படுக்கையறையில்
11. நைவேத்தியம் செய்யும் வேளையில்
12. வேலைகள் / கடமைகள் செய்து முடிக்கும் நேரத்தில்
13. அழகான பொருட்களில்
14. கல்வி கற்றுக்கொடுப்பவர்களில்
15. பழங்களில்
16. பாதகம் இல்லாத இடங்களில்
17. வளர்ந்த தர்ப்பைகளில்
18. நெருப்பில்
19. ஓடும் நீரில்
20. பாயும் நதிகளில்
21. ஸ்லோகங்களில்
22. குரங்கில்
23. ஆசார சீலர்களாக விளங்குபவர்களில்
24. நாழிகையின் துவக்கத்தில்
25. மேற்கு திசையில்
26. ஒளிரும் மின்னலில்
27. தங்கத்தில்

இந்த எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் கபிலனை, அந்தந்த நேரத்திற்குத் தகுந்தவாறு நினைக்கவேண்டும். இதனால் நமது பயங்கள் நீங்கி, சுபயோகம் வரும் என்று விஜயதாசர் தனது கபில சுளாதியில் தெரிவிக்கிறார். இத்தகைய கபிலனின் அருளைப் பெறுவதற்காக ஞானயோகத்தில் மூழ்கி அவனை த்யானிப்போமாக. 

கே: ‘பாயாத் குணேஷ: கபில: கர்மபந்தாத்’ - குணங்கள் மற்றும் ஐஸ்வர்யங்களால் நிறைந்த கபிலன் கர்ம பந்தனங்களால் நம்மை ரட்சிக்கட்டும் என்பதின் பொருள் என்ன?

ப: தந்த்ரசார சங்க்ரஹத்தில் ஸ்ரீமதாசார்யர், ’ப்ரோத்யத் திவாகர சமானதனும்’ என்னும் த்யான ஸ்லோகத்தின் மூலம் கபில மற்றும் தத்தாத்ரேய ஆகிய இரு ரூபங்களையும் வணங்குகிறார். 

நாராயண வர்மத்திலும் கபில மற்றும் தத்தாத்ரேயர் இருவரும் சேர்ந்தே வணங்கப்படுகின்றனர். இதன் மறைபொருளை பார்க்கவேண்டும். கார்த்தவீர்யார்ஜுனன் முதலான சக்ரவர்த்திகள் தத்தரின் யோகோபதேசத்தினால் நற்கதி அடைந்திருக்கிறார்கள். தாயான தேவஹூதி, மகனின் உபதேசித்த யோக சாஸ்திரத்தினால் நற்கதி அடைந்தாள். ஞான காரியத்திற்காக அவதரித்த இந்த இரண்டு ரூபங்களும் யோக சாஸ்திரத்திற்கு முக்கிய காரணர்களாக இருப்பது, கவனிக்கத்தக்க அம்சம் ஆகும். 

ஆகையால் நம் வாழ்க்கையிலும் யோகத்தையே முக்கிய குறிக்கோளாக்கொண்டு, யோக மார்க்கத்தில் சென்று நற்கதி அடையவேண்டும். சத்தியத்தின் பாதையை காட்டுபவர் ஒருவரே ஆவார். இவனின் அறிமுகத்தைப் பெற்று, நம் பிறவியின் பலனைப் பெற, அந்த தத்தாத்ரேயனே நமக்கு அருளட்டும். 

கே: கபில அவதாரத்தின் செய்தி என்ன?

ப: காலை நேரத்தில் கபிலனை நினைக்கவேண்டும். அப்போது பக்தி வைராக்கியங்கள் ஓரிடத்தில் சேர்கின்றன. பக்தி மற்றும் வைராக்கியம் இரண்டும் ஓர் இடத்தில் சேரும்போது, அங்கு நான் வருவேன் என்னும் செய்தியை கபில தன் அவதாரத்தின் மூலம் தெரிவிக்கிறார். கர்தமன் பக்தியின் அடையாளம். தேவஹூதி வைராக்கியத்தின் அடையாளம். கர்தம - தேவஹூதி திருமணத்தின் மூலம் பக்தி - வைராக்கியத்தின் சங்கமம் ஆனது. மன்வந்தராதிபதியின் மகளான தேவஹூதி மடியாக, பின்னல் போட்டு, எலும்பும் தோலுமாக இருந்த கர்தமரிஷியை மணக்க சம்மதித்தாள். மகளின் விருப்பத்திற்கேற்ப கன்யாதானம் செய்யத் தயாரானான் ஸ்வாயம்புவமனு. இன்றைய பெண்களுக்கு மற்றும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு, தேவஹூதி மற்றும் ஸ்வாயம்புவமனுவே சிறந்த உதாரணங்கள் ஆவர். 

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தின்படி கபிலனை எப்படி வணங்கவேண்டும்?

ப: 
ப்ரோத்யத் திவாகர சமானதனும் 
சஹஸ்ரசூர்யோரு தீதிதிபிராப்த சமஸ்தலோகம் |
ஞானாபயாங்கிதகரம் கபிலம் ச தத்தம்
த்யாயேதஜாதிசமிதிம் ப்ரதி போதயந்தம் ||

உதயசூரியனின் சிகப்பு வண்ணத்தை ஒத்த சரீரத்தைக் கொண்டவர், அளவில்லாத சூரியர்களைக் காட்டிலும் மிகுந்த ஒளியுள்ள கிரணங்களினால் எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர், ஞான மற்றும் அபய முத்திரைகளை தரித்திருப்பவர், நான்முகன், ருத்ரன் ஆகிய தேவர்கள் கூட்டத்திற்கு தத்வஞானத்தை போதிப்பவர், பக்தர்களுக்கு அருளுபவர். இப்படியான கபிலரூபி ஸ்ரீஹரியை தியானிக்க வேண்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

1 comment:

  1. Very nice and very useful.Instead of wasting time reading this enables usto. Get good knowledge of so many
    good things.Thank you.

    ReplyDelete