Tuesday, January 23, 2018

12/40 சனத்குமார அவதாரம்

12/40 சனத்குமார அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கேள்வி: ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் ஸ்ரீஹரி முதலில் தன்னையே ஸ்ருஷ்டி செய்துகொண்டார் என்று பாகவதம் சொல்கிறது. ஒரு விளக்கின் உதவியால் பற்பல விளக்குகளை ஏற்றுவதைப்போல், பத்பனாப என்னும் முதல் ரூபத்திலிருந்து ஸ்ரீஹரியின் பற்பல ரூபங்கள் தோன்றின. இவற்றில் முதலாவது  அவதாரம் எது?

பதில்: 
‘ஸ ஏவ ப்ரதமம் தேவ: கௌமாரம் ஸர்கமாஸ்தித: |
சசார துஷ்சரம் ப்ரம்மா ப்ரம்மசர்யமகண்டிதம் ||

’புருஷ’ என்னும் ஸ்ரீஹரியே ’சனத்குமார’ என்னும் அவதாரத்தை எடுத்தார். இவர் அனைத்து நற்குணங்களால் நிறைந்தவனாக இருக்கிறார். பிரம்மசர்யத்தை ஸ்வீகரித்து, உலகத்தை காக்கின்றார். இப்படி பாகவதம் சொன்னதைப்போல் முதன்முதலில் பத்பனாப ரூபத்திலிருந்து தோன்றியதே சனத்குமார என்னும் ரூபம்.

கே: மேற்கண்ட ஸ்லோகத்தை கவனமாக பார்த்தால், ஸ்ரீஹரியின் அவதாரத்தின் பெயர் ‘குமார’ என்று தெரிகிறது. மேலும் பாகவதத்தில் பல்வேறு இடங்களில் மற்றும் ஸ்ரீமதாசார்யரின் பாரத தாத்பர்யத்தை கவனித்தால் ‘குமார’ என்பதே அவதாரத்தின் பெயர் என்று தெரிகிறது. ’சனத்குமார’ இல்லையென்றும் தெரிகிறது. இப்படியிருக்கும்போது, ஸ்ரீஹரியின் முதலாவது அவதாரம் ‘சனத்குமார’தான் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்?

ப: ஆம். அனைத்து இடங்களிலும் ஸ்ரீஹரியின் அவதாரத்தை பொதுவாக ‘குமார’ என்றே சொல்லப்பட்டிருக்கிறது. பாகவத தாத்பர்யத்திலும் குமார என்றே சொல்லியிருக்கிறார். ஆனாலும், உலகத்தில் சனத்குமார என்ற பெயரே புகழ்பெற்றிருக்கிறது. இப்படி சொல்வதில் தவறு இல்லை என்பதற்கு ‘சனத்குமாரோSவது காமதேனும்’ என்னும் நாராயண வர்மத்தின் வாக்கியமே சான்றாகும்.

கே: 1. சனக 2. சனந்தன 3. சனாதன 4. சனத்குமார என்பதாக பிரம்மதேவருக்கு நான்கு பேர் மானஸ குமாரர்கள் இருந்தனர். மிகவும் சிறிய உருவத்தைக் கொண்டிருந்த இவர்கள், பிரம்மசர்யத்தைக் கடைப்பிடித்து மகாதபஸ்விகளாக இருந்தனர். இவர்களில் ஒருவரான சனத்குமார் என்பவரையே நீங்கள் ஸ்ரீஹரியின் அவதாரம் என்று சொல்கிறீர்கள் அல்லவா?

ப: இல்லவே இல்லை. பிரம்மதேவரின் மானஸ குமாரராக இருந்தவர், மன்மதனின் அவதாரமே தவிர, ஸ்ரீஹரியின் அவதாரம் இல்லை. ஸ்ருஷ்டியில் முதன்முதலில் எடுத்த சனத்குமார என்னும் அவதாரம் மட்டுமே சாக்‌ஷாத் ஸ்ரீஹரியின் ஸ்வரூபம் / அவதாரம்.

கே: நாராயண வர்மத்தில் ‘சனத்குமாரோSவது காமதேவாத்’ என்று ‘காமதேவனிடமிருந்து என்னை சனத்குமாரன் ரட்சிக்கட்டும்’ என்று ஏன் பிரார்த்திக்கவேண்டும்? இதன் மர்மம் என்ன?

ப: இந்த வாக்கியத்தின்படியே, பிரம்மதேவரின் மானஸ குமாரரான சனத்குமாரன், ஸ்ரீஹரியின் அவதாரம் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், பிரம்மதேவரின் மானஸ குமாரனான சனத்குமாரன், சாக்‌ஷாத் மன்மதனின் அவதாரமே ஆவார். ஆகையால் காமதேவனிடமிருந்து என்னை காப்பாற்று என்று அவரிடமே வேண்டுகோள் வைப்பது ஆகாது. ஆகையால், நாராயண வர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் சனத்குமாரன் என்னும் பெயர் ஸ்ரீஹரியினுடையதே ஆகும். காமதேவரிடமிருந்து என்னை காப்பாற்று என்பது இவரது வேண்டுகோள். 

ஏனென்றால், சனத்குமாரன் என்று அவதாரம் எடுத்த ஸ்ரீஹரி, பிரம்மதேவரின் மானஸ குமாரரான சனத்குமாரன் என்னும் மன்மதனுக்கு பிரம்மசர்யத்தை உபதேசித்து, காமத்தை வெல்லும் வழியை சொல்லிக்கொடுத்தார். ஆகவே நமக்கும்கூட சனத்குமாரன் பிரம்மசரியத்தை வழங்கட்டும் என்பதே இங்கு தெரியவரும் மறைபொருள்.

கே: காமதேவனுக்கு பிரம்மசர்யத்தை உபதேசிக்க வேண்டுமெனில், தானும் பிரம்மசாரியாக இருக்கவேண்டும் அல்லவா?

ப: ஆம். சனத்குமாரன் என்னும் ஸ்ரீஹரியின் ரூபமானது பிரம்மசர்ய ரூபமே. சில அவதாரங்களில் கிருஹஸ்த தர்மத்தையும், இன்னும் சில அவதாரங்களில் யதிதர்மத்தையும் போதித்தார். ஆனால், சனத்குமாரன் என்னும் அவதாரத்தில் பிரம்மசரியத்தைக் கடைபிடித்தல், பிரம்மசாரிகள் செய்யவேண்டிய கடமைகள் ஆகியவற்றை முதலில் தான் பின்பற்றி, பின் அதை உபதேசித்தார். ஆகையால் ஒவ்வொரு பிரம்மசாரியும் தன் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்க, இந்த சனத்குமாரன் என்னும் ரூபத்தை வணங்க வேண்டும். அப்போது மட்டுமே பிரம்மசரியம் அதற்கான மதிப்பை / பொருளைக் கொள்கிறது.

கே: மன்மதனுக்கு பிரம்மசர்யத்தை உபதேசிப்பது மட்டுமே இவரது வேலையா அல்லது வேறு ஏதாவது ஞானகாரியத்தை செய்திருக்கிறாரா?

ப: சதுர்முக பிரம்மனுக்கு அனைத்து வேதங்களையும் உபதேசித்த ரூபம் இது. ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் பிரம்மதேவருக்கு வேதங்களை உபதேசித்து, ஸ்ருஷ்டியை துவக்குமாறு கூறிய அதிஅற்புதமான ரூபம் இது. அதுமட்டுமல்லாது, ருத்ரதேவருக்கும் பிரம்மசர்யத்தை கடைபிடிக்கும் முறைகளை சொல்லிக்கொடுத்த ரூபம் இது.

கே: சனத்குமாரன் ஆகியவர்களுக்கு, ஸ்ரீஹரியின் ரூபமான குமார ரூபம் ஞானோபதேசம் செய்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

ப: 
குமாரநாமா து ஹரி: ப்ரம்ஹசாரிவபு: ஸ்வயம் |
ஸனத்குமாராய பரம் ப்ரோவாச ஜகதீஸ்வர: ||

குமார என்னும் ஸ்ரீஹரி பிரம்மாசாரியின் ரூபத்தைக் கொண்டு, சனத்குமார என்னும் பிரம்மதேவரின் மானஸ குமாரனுக்கு மற்றும் ருத்ரன், பிரம்மன் முதலானவர்களுக்கு பர-தத்வத்தைப் பற்றி உபதேசம் செய்தார் என்று கூறும் ஸ்ருதி வாக்கியமே இந்த விஷயத்திற்கான ஆதாரம். மேலும்,

விஷ்ணோ: சனத்குமாராக்யாத் ஷுஸ்ருவுர் ஞானமுத்தமம் |
சனத்குமார ப்ரமுக: யோகேஷா: பரமேஷ்வராத் ||

சனத்குமார என்னும் விஷ்ணுவிடமிருந்து உத்தமமான தத்வஞானத்தை சனத்குமார, ருத்ர, சதுர்முக பிரம்மா ஆகியோர் பெற்றனர். மேற்கண்ட வாக்கியத்தை ஸ்ரீமதாசார்யர் பாகவத தாத்பர்யத்தில் கூறியிருக்கிறார்.

கே: மேற்கூறிய வாக்கியத்தில் ருத்ரதேவருக்கும் பிரம்மசரியத்தை உபதேசித்தார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லைதானே?

ப: 
குமாயோ நாம பகவான் ஸ்வயம் ஸ்வஸ்மாதஜாயத |
திதேஷ ப்ரம்ஹணே ப்ரஹ்ம ப்ரஹ்மசர்யே ஸ்திதோ விபு: |
யஸ்மாத் சனத்குமாரஸ்ச ப்ரஹ்மசர்யமாபாலயத் |
ய: ஸ்தாணு: ஸ்தாணுதாம் ப்ராதாத் பகவான் அவ்யயோ ஹரி: 

குமார என்னும் ஸ்ரீஹரி தன்னிலிருந்தே அவதாரங்களை எடுத்தார். பிரம்மசர்யத்தின் ரட்சணைக்காக சதுர்முக பிரம்மனுக்கு உபதேசம் செய்தார். இவனிடமிருந்து உபதேசம் பெற்றே, சதுர்முக பிரம்மதேவரின் மகனான சனத்குமாரன் பிரம்மசரியத்தை மேற்கொண்டான். ருத்ரதேவருக்கும்கூட இந்த பிரம்மசர்யத்தைப் பற்றி அழிவேயில்லாத ஸ்ரீஹரி உபதேசம் செய்தார்.

இந்த ஆதாரங்களினால், ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் ஸ்ருஷ்டியின் முதலாம் பிரம்மசாரியை காப்பாற்றுவதின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதன் (பிரம்மசர்யத்தின்) மகத்துவத்தை தெரியப்படுத்திய சனத்குமார அவதாரத்தின் முக்கிய நோக்கத்தை நாம் உணரவேண்டும். 

கே: பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்ரீஹரியின் பல்வேறு அவதாரங்களில் சனத்குமார என்னும் அவதாரம் ஸ்ரீஹரியின் ஸ்வரூபம் இல்லை என்று பல வியாக்கியானக்காரர்கள் (உரை ஆசிரியர்கள்) சொல்கிறார்கள். நீங்கள் மட்டும் இது ஸ்ரீஹரியின் அவதாரமே என்கிறீர்கள். இது எப்படி சரியாகும்?

ப: முன்பே சொன்னதுபோல், ஸ்ரீமதாசார்யார் மேற்கோள் காட்டியிருக்கும் பல்வேறு வேத வாக்கியங்களே இந்த விஷயத்தில் ஆதாரமாகும். மேலும் ஸ்ரீஹரியின் குமார அவதாரம், பிரம்மதேவரின் மானஸ குமாரரான சனத்குமாரர் - இந்த இருவரும் வெவ்வேறு என்பது தெளிவு. இந்த விஷயத்தை சில வியாக்கியானக்காரர்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

கே: சனத்குமார என்னும் சொல்லிற்கு என்ன பொருள்?

ப: சனத் = எப்போதும். கு = கெட்ட ஆசைகள். மார = நாசம் செய்பவன்.

கே: சனத்குமார என்னும் அவதாரத்தின் மூலம் நாம் அடையவேண்டிய லாபம் என்ன?

ப: அனைத்து சாதகர்களுக்கும் தங்களின் சாதனை வெற்றி பெறவேண்டுமெனில் பிரம்மசர்யத்தை பின்பற்றுதல் கட்டாயம் ஆகிறது. குறிப்பாக பிராமணருக்கு இந்த பிரம்மசர்யத்தை பின்பற்றுவது மிகவும் அவசியமானது. கிருஹஸ்தாசிரமத்திற்கு முன்னர் பிரம்மசர்யத்தை பின்பற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு கிருஹஸ்தர் ஆனபிறகும் வேறொரு விதமான பிரம்மசர்யத்தைப் பின்பற்றுவதும் முக்கியமே ஆகும். இந்த இரண்டு விதமான பிரம்மசர்யத்தின் ரட்சணைக்காக சனத்குமார என்னும் ஸ்ரீஹரியை நாம் சரணாகதி அடையவேண்டும். அப்போது மட்டுமே, நம்மால் நம் இந்திரியங்களை ஜெயிக்க முடியும். இந்த சனத்குமார என்னும் ஸ்ரீஹரியின் பரிபூர்ண அருளானது, நமக்கு நம் வாழ்க்கை முழுவதற்கும் கிடைக்கட்டும் என்று வேண்டுவோமாக.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment