Saturday, January 20, 2018

9/40 புத்த அவதாரம்

9/40 புத்த அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்




கேள்வி: புத்தாவதாரம் நடந்தது எப்போது?

பதில்: கலியுகம் பிறந்து ஓராயிரம் ஆண்டுகள் ஆன பிறகு.

கே: புத்தாவதாரத்தின் நோக்கம் என்ன?

ப: த்ரிபுராசுரர்கள் ருத்ரரால் கொல்லப்பட்ட பிறகு, பூமியில் மறுபடி பிறந்தனர். நல்ல தத்வஞானத்தைப் பெற்று மோட்சசாதனைக்கு செல்ல முற்பட்டனர். பற்பல துஷ்டர்களுக்கும் தத்வஞான உபதேசத்தைக் கொடுக்கத் துவங்கினர். இவர்களை அப்படிச் செய்யாமல் தடுக்க நடந்ததே புத்தாவதாரம்.

கே: அசுரர்கள் தத்வஞானத்தைப் பெற்றால் மகிழ்ச்சி அடையவேண்டும். அதை விட்டு, அவர்களை தடுப்பது ஏன்?

ப: புனிதமான தத்வஞானம் துஷ்டர்களுக்கு என்றும் போய் சேரக்கூடாது. ஏதாவது செய்து அவர்கள் தத்வஞானத்தைப் பெற்றாலும், என்றாவது ஒரு நாள் கெட்ட காரியங்களை செய்தே தீருவர். ஆகையால், தத்வஞானம், மோட்சத்திற்கான வழிகள் ஆகியவை துஷ்டர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று ஸ்ரீஹரி தக்க செயல்களை செய்கிறார்.

கே: புத்தாவதாரத்தின் பின்னணி என்ன?

ப: துர்ஜனர்களிடம் இருக்கும் ஞானத்தை அழிக்கவேண்டுமென்று தேவர்கள், ஸ்ரீமன் நாராயணனிடம் சென்று முறையிட்டனர்.

கே: புத்தாவதாரம் எப்படி நடந்தது?

ப: 'புத்தோ நாம்னா ஜனசுத: கேகடேஷு பவிஷ்யதி' என்னும் பாகவதத்தின் வாக்கியத்திற்கேற்ப த்ரிபுராசுரர்களில் முதலாமவன் சுத்தோதன என்னும் பெயரில் பிறந்தான். அவனின் மகனாக ஸ்ரீஹரி அவதரித்தார்.

கே: அசுரர் குலத்தில் விஷ்ணுவின் அவதாரம் எப்படி நடந்தது?

ப: இது சரியல்ல. அசுரர் குலத்தில் விஷ்ணு அவதாரம் செய்யவில்லை. அப்போதே பிறந்திருந்த அசுர குழந்தையை மாற்றி அந்த இடத்தில் ஒரு குழந்தையாக விஷ்ணு படுத்துக்கொண்டார். அதைத் தெரியாத அவர்கள், விஷ்ணுவையே தங்கள் குழந்தையாக வளர்த்து வந்தார்கள்.

கே: தசாவதாரத்தில் இருக்கும் புத்தன் வேறு. இப்போது உலகத்தில் புகழ் பெற்று இருக்கும் கௌதம புத்தர் வேறு என்று பலரும் சொல்கின்றனர். இப்படியிருக்கும்போது, விஷ்ணுவை சுத்தோதனனின் மகன் என்று எப்படி சொல்கிறீர்கள்?

ப: சுத்தோதனின் மகனின் இடத்தில் குழந்தையாக காண்பித்துக்கொண்ட விஷ்ணுவின் ரூபமே, தசாவதாரத்தில் சேர்ந்திருக்கும் புத்தன். சுத்தோதனின் நிஜமான குழந்தையாக இருந்தவரே கௌதம புத்தர். இருவரையும் ஒருவரே என்று நினைப்பது தவறு. இந்த விஷயத்தில் ஸ்ரீமதாசார்யர் தெளிவாக கூறுகிறார். ‘சுத்தோதனனேத்யேவ ஜெனேSபி ஜோக்த:’ என்று தாத்பர்ய நிர்ணயத்தில் 32வது அத்தியாயத்தில் கூறுகிறார். புத்தனாகி அவதரித்த விஷ்ணு பூலோகத்தில் அதிக காலம் இருக்கவில்லை. தன் வேலை முடிந்ததும், சுவர்க்கத்தில் தேவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டி புறப்பட்டுவிட்டார். பிறகு சுத்தோதனன் ஜினன் என்று அழைக்கப்பட்டதாக பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.

கே: அவதரித்தவுடன் புத்தன் என்ன செய்தார்?

ப: அனைவரும் பின்பற்றும் வைதிக காரியங்களைக் கண்டு சத்தமாக சிரிக்கத் துவங்கினார். 

கே: பிறந்த குழந்தை சிரிப்பதைக் கண்டு ஜினன் முதலானவர்கள் வியப்படையவில்லையா?

ப: ஆம். நீ யார் என்று கேட்டனர். அனைத்தையும் அறிந்தவன் ஆகையால் ‘நான் புத்தன்’ என்று குழந்தை பதில் அளித்தது. குழந்தையின் பதிலைக் கேட்ட அனைவரும் வாயடைத்துப் போயினர்.

கே: அனைத்து அசுரர்களுக்கும் புத்தன் என்ன உபதேசித்தார்?

ப: அனைத்தும் அழியக்கூடியவையே. அனைத்தும் தற்காலிகமானவையே. அனைத்தும் அசத்யமானவையே என்று உபதேசித்தார். 

கே: தேவர்கள் புத்தனுடன் ஏன் போர் புரிந்தனர்?

ப: இது ஒரு நாடகம். அங்கிருந்த அசுரர்களுக்கு தன் முக்கியத்துவத்தை தெரிவிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் இது. விஷ்ணுவும் புத்தனிடம் தோற்றுப் போனதாக நாடகம் ஆடினார்.

கே: சுதர்சன சக்ரத்தின் மேல் புத்தன் அமர்கிறான் என்கிற கதையின் பின்புலம் என்ன?

ப: தேவர்கள் புத்தன் மேல் ஆயுதங்களை பிரயோகித்தபோது, புத்தன் அவற்றை விழுங்கிவிட்டார். சுதர்சன சக்ரத்தை விஷ்ணு ஏவியபோது, அதையும் உடனே பிடித்து, ஆசனம் போல் செய்து அதன் மேல் அமர்ந்தார். ‘நீயே சர்வோத்தமன்’ என்று தேவர்கள் அனைவரும் கூறி, தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினர். ஜினன் முதலான தைத்யர்கள் புத்தனின் பேச்சுகளை உண்மையென்று நம்பினர்.

கே: சத்யஸ்வரூபனான விஷ்ணுவே புத்தனாக இருக்கிறான். புத்தனாக இருக்கும்போது பொய்யான தர்மத்தை உபதேசித்தது எப்படி சரியாகும்?

ப: ஸ்ரீஹரி எப்போதும் பொய் பேசுவதில்லை. புத்தனின் பேச்சுகளைக் கேட்டு, அசுரர்கள் தர்மங்களை விட்டது அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததாலேயே. அனைத்தும் சூன்யம் என்பது புத்தனின் நிஜமான கருத்து அல்ல.

கே: இதை எப்படி சொல்கிறீர்கள்?

ப: தான் நினைத்ததை புத்தன் தேவர்களிடத்தில் சொல்லியிருக்கிறார். அவர் பேச்சுகளின் நிஜமான பொருளை தேவலோகத்தில் தேவர்களிடம் விளக்கினார். இதுவே ‘பிரஷாந்தவித்யா’ என்று பிரபலமாயிற்று.

கே: புத்தரூபியான விஷ்ணு ஜடமான இந்த உலகத்தை ஞானம் என்று கூறினார். இது எப்படி?

ப: ‘ஞா’ - அனைத்தையும் அறிந்த ஸ்ரீஹரியிடமிருந்து ‘அன’ - உலகம் ஊக்கத்துடன் வளர்கிறது. ஆகையால் இந்த உலகமானது ஞானரூபம் என்றே பொருளாகுமே தவிர ஜடஸ்வரூபம் என்று பொருளல்ல. 

கே: அனைத்து உலகமும் சூன்யம் என்று புத்தன் கூறினார். இதன் பொருள் என்ன?

ப: சூன்யன் என்று பெயர் கொண்ட ஸ்ரீஹரியிடமிருந்து தோன்றி வளர்வதால், இந்த உலகத்திற்கு சூன்யம் என்று பெயர். இதுவே இதன் நிஜமான பொருள். 

கே: ’அசத்’ மற்றும் ‘அபாவ’ என்றால் என்ன?

ப: அ என்றால் ஸ்ரீஹரி. அவனால் அழியக்கூடியதாக இருப்பதால் இந்த உலகம் அசத் எனப்படுகிறது. அ என்னும் ஸ்ரீஹரியிடமிருந்து உலகம் தோன்றியதால், அபாவ எனப்படுகிறது.

கே: புத்தனிடமிருந்து எவ்வளவு மதங்கள் தோன்றின?

ப: ஜைன மதம் தோன்றியது இதே புத்தனிடமிருந்து. பௌத்த மதத்தில்கூட நான்கு பிரிவுகள் தோன்றின. புத்தனின் ஒரே சொற்பொழிவைக் கேட்டு, பலரும் பற்பல மதங்களை துவக்கினர்.

கே: ‘பத்தலெ நிந்தஹ பௌத்தனிகே’ என்று தாசராயர் கூறியிருக்கிறார். புத்தன் ஏன் நிர்வாணமானான்?

ப: தேவலோகத்தில் த்ரிபுராசுரர்களைக் கொல்வதற்காக புத்தன் அவரது மனைவியரின் முன் நிர்வாணமானான். இப்படி செய்ததன் மூலம் த்ரிபுராசுரர்களைக் கொன்றான்.

கே: ராமானுஜரின் மதத்தவர் புத்தனை தசாவதாரத்தில் சேர்ப்பதில்லை. ஏன்?

ப: மேலே சொன்னதைப் போல, புத்தனின் பேச்சுக்களைக் கேட்ட சிலர், இவர் ஸ்ரீஹரியே அல்ல என்று கூறினர். ஆகையால், ராமானுஜ மதத்தவரும் புத்தரை ஸ்ரீஹரியின் அவதாரம் என்று ஒப்புக்கொள்ளாமல் தசாவதாரத்தில் சேர்க்காமல், பலராமனை தசாவதாரத்தில் சேர்த்து, தமக்கென்று ஒரு தனி வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

கே: மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிம்ஹ, வாமன, பரசுராம, ராம, கிருஷ்ண, புத்த, கல்கி - இவையே தசாவதாரங்கள் என்று நாம் தெரிந்திருக்கிறோம். இதில் வேறு எதுவும் பிரச்னை இருக்கிறதா?

ப: ஆம். வங்காள தேசத்தில் கிருஷ்ணனை தசாவதாரத்தில் சேர்ப்பதில்லை. ‘கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்’ என்ற வாக்கியப்படி கிருஷ்ணன் மூலரூபியானவன். மத்ஸ்ய, கூர்ம, வராகன் ஆகியன கிருஷ்ணனின் அவதாரங்கள் என்கின்றனர். இப்படியாக தசாவதாரங்களில் பல குழப்பங்கள் உள்ளன. ஆனால் ஸ்ரீமதாசார்யர், புராணங்களின் ஆதாரங்களின்படி தசாவதாரத்தை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

கே: புத்தன் சாக்‌ஷாத் ஸ்ரீஹரியே என்றான பிறகு அவரின் உபாசனா முறைகள் ஏன் சரியாக சொல்லப்படவில்லை?

ப: புத்தாவதாரம் நம் காலத்திற்கு மிக அருகில் நடந்த ஒரு அவதாரம். அவரின் பேச்சுகள் / உபதேசங்கள் நம்மை மயக்குவதாக இருப்பதால், அவற்றை தவறாக புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே தத்வஞானத்தை நிலைநிறுத்த கிருஷ்ணாவதாரத்தைப் பூஜிப்பதே வழக்கமாக இருக்கிறது. அதுவே நம் பழக்கமாகவும் ஆகியுள்ளது.

கே: ஸ்ரீஹரியின் புத்தன் என்னும் ரூபத்தை எப்படி சிந்தனை செய்து பூஜிப்பது?

ப; பௌத்தாவதாரத்தின் உபதேசங்களின் மூலம், தாமஸர்களுக்கு மித்யாஞானத்தை அளித்து, பிரஷாந்தவித்யா மூலம் தேவர்களை ரட்சித்த சர்வக்ஞனான புத்தனை தசாவதாரங்களின் நடுவில் சிந்தனை செய்து பூஜிக்கவேண்டும்.

கே: புத்தாவதாரத்தை ஸ்ரீவாதிராஜர் தனது தசாவதாரஸ்துதியில் எப்படி வர்ணித்திருக்கிறார்?

ப: புத்தாவதாரகவி புத்தானுகம்பகுரு பத்தாஞ்சலௌ மயி தயாம்
ஷௌத்தோதனிப்ரமுக ஸைத்தாதிகாசுகம பௌத்தாகம ப்ரணயன |
க்ருத்தாஹிதாஸுஹ்ருதி ஸித்தாஸிகேடதர ஷுத்தாஷ்வயான கமலா
ஷுத்தாந்தயாம்ருசிபி னத்தாகிலாங்க நிஜமத்தாSவ கல்க்யபித போ: || 32 ||

முன்னர் உலகத்தில் பல அசுரர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் வைதிக தத்வஞானத்தையே பின்பற்றினர். அதனால் பாலில் விஷம் கலந்ததுபோல், தத்வஞானமே அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது சுத்தோதனன் என்னும் ராஜனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த குழந்தையை மாற்றிவிட்டு, ஸ்ரீஹரி குழந்தையாக அவதாரம் எடுத்து அங்கு படுத்துக்கொண்டான். உலகத்தில் சூன்யம், அனைத்தும் தற்காலிகமானவை / அழியக்கூடியவை மற்றும் பொய் என்று உபதேசித்தார். தாம் உபதேசித்த அனைத்தும் உண்மையே என்று அனைவரையும் நம்பவைத்தார். தேவர்களுடன் போர் புரிந்து அவர்கள் எய்த பாணங்களை முழுங்கினார். சுத்தோதனன் முதலானோர் இந்த குழந்தை சொல்லும் மதமே உண்மை என்று நம்பி, வைதிக மார்க்கத்தை விட்டுவிட்டனர். சொர்க்கத்தில் இந்த புத்தன் தேவர்களுக்கு உண்மையான ஞானத்தை உபதேசித்தார். அதுவே பிரஷாந்த வித்யா என்று பெயர்கொண்டு புகழ்பெற்றது. பூலோகத்தில் உபதேசித்த பொய்யான ஞானமே புத்தமதம் என்று பரவிற்று. ஞானிகளில் சிறந்தவனே, கருணையுடையவனே, புத்தாவதாரியான ஸ்ரீஹரியே, நான் கை கூப்பி உன்னை வேண்டுகிறேன். 

இப்படியாக ஸ்ரீவாதிராஜ குருசார்வபௌமர் புத்தாவதாரியான ஸ்ரீஹரியை மனமுருகி வேண்டுகிறார்.

கே: புத்தாவதாரம் நமக்கு சொல்லும் செய்தி என்ன?

ப: த்ரிபுராசுரர்கள் ருத்ரதேவரால் கொல்லப்பட்டிருந்தனர். அவர்கள் மறுபடி பூமியில் பிறந்தனர். உத்தமான தத்வஞானத்தைப் பெற்றனர். நைவேத்தியம் செய்யப்பட்ட புனித உணவில் நாய் வாய் வைத்ததைப் போல், அவர்கள் தத்வஞானத்தைப் பெறுவதற்கு முற்பட்டனர். தத்வஞானிகள் என்றும் அழியக்கூடாது என்பது ஸ்ரீஹரியின் கட்டளை. அதைபோலவே அயோக்கியர்கள் என்றும் நற்கதியைப் பெறக்கூடாது என்பதே ஸ்ரீஹரியின் விருப்பம் ஆகும். இப்படிப்பட்ட துஷ்டர்களை அழித்து, சஜ்ஜனர்களுக்கு அருளுவதற்காக ஸ்ரீஹரி புத்தனாக அவதரித்தார். நாம் பெற்ற தத்வஞானத்தை நல்லபடியாக மற்றவர்களுக்கு வழங்கவேண்டும். எந்த காரணத்தாலும் அதை கெட்டவர்களுக்கு உபதேசிக்கக்கூடாது. இதற்காக புத்தாவதாரத்தை நிரந்தரமாக சரணடைந்து வணங்கவேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment