Wednesday, January 17, 2018

6/40 பரசுராம அவதாரம்

6/40 பரசுராம அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்

ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷச்சார்
தமிழில் : T.V.சத்ய நாராயணன்




கேள்வி: பரசுராம அவதாரத்தின் சிறப்பு என்ன?

பதில்: அற்புதமான, நம் கற்பனைக்கு எட்டாத ரூபம். பூமியில் சிரஞ்சீவியாகி துஷ்டர்களை அழித்து, பக்தர்களை காக்கும் ரூபம்.

கே: பரசுராமரின் காலம் என்ன?

ப: இதே வைவஸ்வத மன்வந்தரத்தின் த்ரேதாயுகம். வைசாக சுத்த த்விதீயா.

கே: அவதாரம் நடைபெற்ற இடம் எது?

ப: தெளிவாக தெரியவில்லை. இமய மலைக்கு பக்கத்தில் என்று பொதுவாக சொல்லலாம்.

கே: சிரஞ்சீவியான ரூபம் எனில், இன்றும் பூமியில் இருக்கிறாரா?

ப: ஆம். சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கு முன் அவதாரம் எடுத்த இந்த ரூபம், இன்றும் மகேந்திர மலையில் பக்தர்களை காப்பாற்றுவதற்காக தவம் செய்து வருகிறார்.

கே: பரசுராம அவதாரத்தின் நோக்கம் என்ன?

ப: கடவுள் இல்லை, தர்மம் இல்லை, பசுக்களை மற்றும் பிராமணர்களை பூஜிக்க வேண்டியதில்லை என்ற நிலை வரும்போது, வர்ணாஸ்ரம தர்மங்களை நாசம் செய்யும் துஷ்டர்களை அழிக்கவே பிறந்த அவதாரம் பரசுராம அவதாரம்.

கே: அப்படியா? தற்போது நம் காலத்தில் பலரும் தர்ம காரியங்களை மூடநம்பிக்கை என்கிறார்கள். தாங்கள் சொன்ன துஷ்ட க்‌ஷத்ரியர்களின் லட்சணங்கள் இந்த காலத்து மனிதர்களிடமும் காணப்படுகிறதே? அப்படியிருக்கும்போது, இப்போதும் பரசுராமர் வரவேண்டுமல்லவா?

ப: கலியுகம் தொடங்கி ஓராயிரம் ஆண்டுகள் ஆகியிருந்தபோது, ஸ்ரீஹரி புத்த அவதாரம் எடுத்து கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்டினார். கலியுகம் முடியும்வரை ஸ்ரீஹரி இன்னொரு அவதாரம் எடுப்பதில்லை. இது யுகதர்மம். 

கே: பரசுராமதேவரின் வம்சம்?

ப: 
அத்ரியின் சகோதரர் பிருகு. 
பிருகுவின் மகன் ஓர்வன். 
இவரின் மகன் ருசிகன். 
ருசிகனின் மகன் ஜமதக்னி. 
ஜமதக்னியின் மகனே பரசுராமர்.
இது சந்திர வம்சம்.

கே: பரசுராம அவதாரத்தின் பின்புலம் என்ன?

ப: இது ஒரு புராணக்கதை. காதி என்பவருக்கு சத்யவதி என்றொரு மகள் இருந்தாள். அவளின் பேரழகைக் கண்ட ருசிகன் என்னும் ரிஷிக்கு அவளை மனைவியாக அடையும் ஆசை வந்தது. காதி அரசினிடம் சென்று அவர் மகளை தனக்கு மணமுடிக்குமாறு வேண்டினார். ருசிகன் மஹாதபஸ்வி. 

அப்போது காதி ராஜா ஒரு வேண்டுகோளை வைக்கிறார். தான் சொல்வதைப்போல் உள்ள 1000 குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால், திருமணம் நடக்கும் என்கிறார். ருசிகனும் வருணனைக் குறித்து கடும்தவம் செய்து, அவர் கேட்டதைப்போலவே 1000 குதிரைகள் - ஒரு காது கருப்பு நிறம். உடல் முழுவதும் வெள்ளை நிறம் - இப்படியான குதிரைகளை தருவித்து அதை ராஜனுக்கு சமர்ப்பிக்கிறார். அவற்றைக் கண்டு ஆச்சரியமடைந்த ராஜா மறுபேச்சின்றி தன் மகளை ருசிகனுக்குக் கொடுத்து, வெகு விமரிசையாக திருமணத்தை நடத்தினார். 

பல காலமாக ருசிகனுக்கு வாரிசு உண்டாகவில்லை. அங்கு காதி ராஜனுக்கும் மேற்கொண்டு வாரிசு உண்டாகவில்லை. ருசிகனின் மனைவி மற்றும் காதி ராஜனின் மனைவி இருவரும் ருசிகனிடம் வந்து தங்களுக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று வேண்டினர். ருசிகன் இருவருக்கும் சரு (அன்னம்) கொடுத்து, தன் அத்தையை அரச மரத்தைச் சுற்றிவந்து பின் அதை உண்ண வேண்டும் என்றும்; தன்  மனைவியை அத்தி மரத்தைச் சுற்றிவந்து பின் அதை உண்ண வேண்டும் என்றும் கூறினார். 

ருசிகன் கூறியதைப் போல் செய்யாமல் சத்யவதி மற்றும் அவர் தாய் தங்கள் சருவினை மாற்றிக் கொண்டனர். மரத்தையும் மாற்றிக் கொண்டனர். ஆகையால், அரசாட்சி செய்வதற்கான குழந்தை பிறக்காமல், சத்யவதியின் தாய்க்கு விஸ்வாமித்ரர் பிறந்தார். மகளான சத்யவதிக்கு பிராமண தர்மத்திற்கு அனுசரணையான குழந்தை பிறப்பதற்கு பதில், வீர பராக்ரமரான க்‌ஷத்ரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு மகன் பிறந்தார் என்று தெரியவருகிறது. சருவை மாற்றி சாப்பிட்டதால், இப்படி வாரிசுகளும் மாற்றிப் பிறந்தன. சத்யவதி ஆனவள், தன் தப்பை ஒப்புக்கொண்டு, தனக்கு பிராமண தர்மத்தை கடைப்பிடிக்கும் வாரிசே வேண்டும் என்று கேட்டதால், ருசிகன், மகன் ஜமதக்னி பிராமண தர்மத்தையே கடைப்பிடிப்பார் என்றும் பேரன் க்‌ஷத்ரிய தர்மத்தை கடைப்பிடிப்பார் என்றும் வரமளித்தார். 

ருசிகனின் இத்தகைய தவவலிமையினாலேயே ஸ்ரீஹரி ‘பரசுராம’ என்னும் ரூபத்தினால், சத்யவதியின் பேரனாக அவதாரம் செய்தார். 

கே: அவதாரத்திற்கான காரணம்?

ப: குஷனின் மகன் குஷிகன்.
குஷிகனின் மகன் காதி ராஜன்.
இவரின் மகள் சத்யவதி.
சத்யவதியை ருசிகரிஷிக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
அவதாரத்திற்கு ருசிகரிஷியே காரணம். 

கே: ருசிகனின் மகன் ஜமதக்னி. இவருக்கு எத்தனை வாரிசுகள்?

ப: வசுமான், ருமன்வான், சுஷேண, விஷ்வாவசு மற்றும் பரசுராமர் இப்படி ஐந்து மகன்கள். பரசுராமரே  சாக்‌ஷாத் ஸ்ரீஹரி.

கே: முதன்முதலில் பரசுராமர் கையால் கொல்லப்பட்டவர் யார்?

ப: அப்படி கொல்லப்பட்டவர் க்‌ஷத்ரியர் யாரும் அல்லர். தன்னைப் பெற்ற தாய் என்பதே இதற்கான பதில்.

கே: பெற்ற தாயின் தலையை கொய்தது தப்பில்லையா?

ப: தாயைக் காப்பாற்றவே செய்தது அது. கொன்றதாக ஆகாது. மேலும் தந்தையின் சொல்லை தட்டாமல் இருப்பதற்காக செய்தது. 

கே: ஜமதக்னி, ரிஷிபத்னியான ரேணுகாவின் தலையை கொய்யவேண்டும் என்று மகனுக்கு கட்டளையிட்டார். அப்படி அவர் மனைவி என்ன தவறை செய்தார்?

ப: கந்தர்வர்கள் நதியில் குளித்துக்கொண்டிருந்தபோது, ரேணுகா அவர்களைக் குறித்து தன் மனதில் தவறான எண்ணம் கொண்டாள். அதை தன் ஞானதிருஷ்டியில் கண்டுகொண்ட ஜமதக்னி, இத்தகைய தண்டனையைக் கொடுத்தார்.

கே: சின்ன தவறுக்கு இத்தகைய பெரிய தண்டனையா?

ப: இது சிறிய தவறல்ல. இது தண்டனையாகத் தெரிந்தாலும் தண்டனையல்ல. மோட்சத்திற்கான வழி. ரிஷிகளுக்கு வரும் கோபம் கெட்டதல்ல. கருணையே ஆகும். தன் மனைவி செய்த பாவத்திற்கான பரிகாரமாகவே இதைச் செய்தார். கௌதமர் தன் மனைவி அகலிகைக்குக் கொடுத்த சாபத்தைப் போன்றதே இதுவும்.

கே: தாயின் தலையைக் கொய்த பரசுராமருக்கு பாவம் வரவில்லையா?

ப: இல்லவே இல்லை. தந்தையின் சொல்லைக் காப்பாற்றினார் என்றும், தாயை மோட்சத்திற்கு அனுப்பினார் என்ற புண்ணியமே வந்தது. ஆனால் அனைவருக்கும் அதிபதியான ஸ்ரீஹரியே புண்ய-பாவத்தை தீர்மானிப்பவன். ஆகவே கணவனான ஜமதக்னிக்கு இந்த காரியத்திற்காக பாவம் வந்து சேர்ந்தது.

கே: பாவம் வந்து சேர்ந்ததால் ஜமதக்னிக்கு என்ன ஆயிற்று?

ப: சிறிது காலம் கழித்து, கார்த்தவீர்யார்ஜுனனின் வாரிசுகள் மற்றும் சேனைகள் வந்து ஜமதக்னியின் தலையைக் கொய்தனர். 

கே: ஸ்ரீஹரியின் ரூபமான தத்தாத்ரேயரிடம் உபதேசம் பெற்ற அவரது பக்தர் கார்த்தவீர்யார்ஜுனன். அவரை பரசுராமர் கொன்றார். அப்படிக் கொன்றது தப்பில்லையா?

ப: கார்த்தவீர்யார்ஜுனன் தெய்வபக்தராக இருந்தாலும் மிகவும் கர்வம் கொண்டிருந்தார். ஜமதக்னி ரிஷியின் ஆசிரமத்தில் இருந்த ஹோமதேனுவை கவர்ந்து, கோ மற்றும் பிராமணருக்கு அவமானத்தை ஏற்படுத்தினார். இதற்காகவே பரசுராமர் கையால் கொல்லப்பட்டார். 

கே: கார்த்தவீர்யார்ஜுனன் ஸ்ரீஹரியின் சுதர்சன சக்கரத்தின் அவதாரம் என்கிறார்கள். ஒரு முறை சுதர்சன சக்கரத்திற்கு கர்வம் உண்டானபோது, மகாவிஷ்ணு - நீ பூமியில் சஹஸ்ரபாஹுவாக பிறப்பாய். நான் ரிஷி புத்திரனாகப் பிறக்கிறேன். நம் இருவரின் சக்தியை பூமியே பார்க்கட்டும் -  என்றார். அதன்படியே தற்போது கார்த்தவீர்யார்ஜுனன் மற்றும் பரசுராமர் யுத்தம் செய்தனர். பரசுராமர் மகாவிஷ்ணு ரூபமாததால் அவரே வென்றார். இப்படியாக ஒரு கதை இருக்கிறதே. இது உண்மையா பொய்யா?

ப: இந்த கதைக்கு தக்க ஆதாரம் இல்லை. யாரோ கிளப்பிய புரளி என்றே சொல்லலாம். ஏனென்றால், சுதர்சன சக்கரம், 8வது கக்‌ஷையில் (தாரதம்ய) வரும் சாட்சாத் ஷண்முகன். கார்த்தவீர்யார்ஜுனன், சக்ரவர்த்திகளின் வகுப்பில், (தாரதம்யத்தில்) வெகு கீழே வரும் ஒரு தேவர் ஆவார். 

கே: கார்த்தவீர்யார்ஜுனனின் 17 அக்‌ஷோஹிணி சைன்யத்தை பரசுராமர் ஒருவராக அழித்தார். கார்த்தவீர்யார்ஜுனரையும் அழித்தார் என்றால், இது பாவமான செயல் அல்லவா?

ப: தந்தையான ஜமதக்னி மகனுக்கு சொல்வது என்னவென்றால்: ’ராம ராம மஹாபாஹோ பவான் பாபமகார்ஷேத். ராஜனை தேவையில்லாமல் கொன்றிருக்கிறாய். அதற்கான பிராயச்சித்தமாக ஒரு ஆண்டு காலம் தீர்த்தயாத்திரை செய்வாயாக’. பாவம் - புண்ணியம் இதெல்லாம் ஸ்ரீஹரியின் ரூபமான பரசுராமரின் லீலை அவ்வளவே.

கே: பரசுராமர் 21 முறை பூமியை சுற்றி வந்து, க்‌ஷத்திரியர்களை அழித்தார் என்கிறார்களே. இந்த எண்ணிக்கைக்கு என்ன காரணம்?

ப: புராணங்களில் இதற்கான பதில் உள்ளது. பரசுராமர் இல்லாதபோது, கார்த்தவீர்யார்ஜுனரின் மகன்கள், ஜமதக்னியின் தலையைக் கொய்தனர். அப்போது அவர் மனைவி, 21 முறை தன் மகனை சத்தமாக அழைக்கிறார். 21 முறை தாயின் கூக்குரலைக் கேட்ட மகன், 21 முறை பூமியை சுற்றி வந்து, க்‌ஷத்ரியர்களின் குலத்தை நாசம் செய்து, தாயை மகிழ்ச்சிப்படுத்தினார். 

கே: மொத்தம் எத்தனை க்‌ஷத்திரியர்களை பரசுராமர் கொன்றார்?

ப: எண்ணிக்கையே இல்லை. அரசர்களின் தலை-முண்டங்களினாலான ஒரு பெரிய மலையையே பரசுராமர் உருவாக்கினார். அவர்களின் ரத்தத்தினால் ஐந்து ஏரிகளை உருவாக்கினார். அதையே சமந்தபஞ்சக என்று அழைக்கலாயினர்.

கே: சில புத்தகங்களில் ஸ்யமந்தபஞ்சக என்று இருக்கிறதே?

ப: இது தவறு. சமந்தபஞ்சக என்பதே சரியான பெயர். ஸ்யமந்தகமணி என்னும் பெயரைக் கேட்ட சிலர், இதையும் ஸ்யமந்தபஞ்சக என்று தவறாக சொல்லலாயினர்.

கே: ரத்தத்தினாலான ஏரியை நிர்மாணித்தபின் பரசுராமர் என்ன செய்தார்?

ப: மாஹிஷ்மதி நகரத்திலிருந்து தந்தையின் தலையைக் கொண்டு வந்து அவருடைய உடலுடன் சேர்த்து, ரத்த நதியினால் வணங்கி, அவரை பிழைக்க வைத்தார். சப்தரிஷிகளின் வரிசையில் தன் தந்தையையும் சேர்த்தார். அங்கிருந்தே ஜமதக்னியின் வம்சம் துவங்கியது. ஜமதக்னி கோத்திரத்தின் பல்லாயிரம் சஜ்ஜனர்களின் மூலபுருஷரராக தன் தந்தையை நிறுவி அவருக்கு புகழ் சேர்த்தார். 

கே: எல்லா க்‌ஷத்ரியர்களையும் கொன்றபிறகு, பூலோகத்தின் நிலைமை என்ன ஆயிற்று?

ப: மொத்த பூலோகமும் பரசுராமரின் கீழ் வந்தது. நான்கு சமுத்திரங்களை கஸ்யபருக்கு தானம் அளித்தார். 

கே: அனைத்தையும் தானம் செய்தபிறகு, அவர் எங்கு வசித்தார்?

ப: தனக்கென்று எந்த இடமும் இல்லாதபோது, கடலின் மேல் தன் கோடலியை வீசினார். கோடலி விழுந்த இடத்தை கடல் அவருக்கென்று விட்டுக்கொடுத்தது. அங்கு இவர் வசித்தார். அதுவே தக்‌ஷிண கன்னட க்‌ஷேத்திரத்தின் பரசுராம க்‌ஷேத்ரம் எனப்படுகிறது. இன்றும் பாஜக க்‌ஷேத்திரத்தில் பரசுராம மலையில் துர்காதேவியுடன் பரசுராமர் வாசம் செய்கிறார். 

கே: பரசுராமரை பூஜை செய்வது எப்படி?

ப: ஸ்ரீஹரியின் அனைத்து ரூபங்களின் பூஜையைவிட பரசுராமரின் பூஜை / உபாசனை மிகவும் முக்கியமானது. இதர ரூபங்களை உருவச்சிலை ஆகியவற்றை வைத்து பூஜை செய்தால், பரசுராமரை அக்னியில் (நெருப்பில்) பூஜை செய்யவேண்டும். அக்னியின் மூலமாக தன் ஆகாரத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் பரசுராமரை திருப்திபடுத்தி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ளவேண்டும். 

கே: பரசுராமர் நமக்கு சொல்லும் செய்தி என்ன?

ப: ‘ராமோSத்ரிகோடேஷு அவ்யாத்’ 21 முறை பூமியை சுற்றி வந்து துஷ்ட க்‌ஷத்ரியர்களைக் கொன்ற பரசுராமர், இன்றைக்கும் பக்தர்களுக்கு அருள் புரிந்தவாறு மலைகளில் வசிக்கிறார். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சாஸ்திரங்களை பின்பற்றும்போது வரும் சந்தேகங்களை பெரும் தடைக்கற்களாக நினைக்கிறோம். அக்ஞானம் என்னும் பெரிய மலையே நம்மை மோட்சத்திற்கு போகாமல் தடுக்கும் இடர் ஆகும். இந்த அனைத்து தடைகளையும் உடைப்பதற்காகவே பரசுராமர் நம் இதயத்தில் வரவேண்டும். அஞ்ஞானம் என்னும் மலையை தகர்த்து எறிய வேண்டும். துஷ்ட க்‌ஷத்ரியர் என்னும் இருட்டை, சூரியனைப் போல் நாசம் செய்யும் ஞானசூரியனான பரசுராமருக்கு அனந்த வந்தனங்கள்.

கே: தந்த்ரசாரசங்கிரஹத்தின்படி பரசுராமரை எப்படி வணங்கவேண்டும்?

ப:
அங்கார வர்ணமபிதோSண்ட பஹி: ப்ரபாவி
ர்வ்யாப்தம் பரஷ்வத தனுர்தரமேக வீரம் |
த்யாயேதஜேஷ புருஹூத முகை:ஸ்துவத்பி
ராவேஷமாத்ம பதவீம் ப்ரதி பாதயந்தம் ||35||

நெருப்பைப்போல பிரகாசிப்பவரும், பிரம்மாண்டத்தின் உள்ளேயும் வெளியேயும் தன்னுடைய ஒளியினால் வியாபித்திருப்பவரும், கோடலி தரித்திருப்பவரும், வீரர்களில் முன்னிலை வகிப்பவரும், நான்முகன், ருத்ரன், இந்திரன் ஆகிய தேவர்களால் துதிக்கப்பட்டவரும், அவர்களுக்கு தன் ஸ்வரூபத்தை உபதேசித்துக் கொண்டிருப்பவருமான பரசுராம ரூபம் கொண்ட ஸ்ரீஹரியை தியானிப்போம். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment