40/40 பலராம அம்ச-அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: பலராமனின் கதையை சுருக்கமாகச் சொல்லுங்கள்.
பதில்: பூமியின் பாரத்தைக் குறைக்கவேண்டி பூதேவி பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீஹரியை பல்வேறு ஸ்தோத்திரங்களால் வணங்கினாள். அவளின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமன் நாராயணன் பலராமன் மற்றும் கிருஷ்ண அவதாரங்களை எடுத்தார்.
தேவகியிடம் ஸ்ரீகிருஷ்ண அவதாரம் நடப்பதற்கு முன்னர், பலராம அவதாரம் ஆயிற்று. வசுதேவனின் மனைவிகளான தேவகி மற்றும் ரோகிணி இவர்கள் இருவரும் மூன்று மாத கர்ப்பிணிகளாக இருந்தனர். ஸ்ரீஹரியின் ஆணைப்படியே, துர்காதேவி, தேவகியின் கர்ப்பத்தில் இருந்த பலராமனை, ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றினாள். மஹா சேஷனே பலராமன். தேவகிக்கு கர்ப்பம் கலைந்துவிட்டது என்ற பேச்சு பரவியது. எட்டாவது குழந்தையாக கிருஷ்ணாவதாரம் நடந்தது. பலராமனிடத்தில் ஸ்ரீஹரியின் ‘சுக்லகேஷ’ ஆவேசம் மட்டும் இருந்தது. ஆகையால் இது ஸ்ரீஹரியின் ஸ்வரூப அவதாரம் கிடையாது. ஆவேச அவதாரம் மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணனின் அனைத்து பால லீலைகளின்போதும் கூடவே இருந்தவர் பலராமன். ரைவதனின் மகளான ரேவதியை மணம் புரிந்தார். பிறகு, கிருஷ்ணன் ருக்மிணியை மணம் புரிந்துகொண்டார். ருக்மிணியின் தம்பியான ருக்மி ஒரு துஷ்டனானதால், பலராமனே இவனைக் கொல்லவேண்டியதாக இருந்தது.
பீமன் மற்றும் துர்யோதனனுக்கு கதாயுதத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களுக்கு குரு ஆனார் பலராமர். குருக்ஷேத்திரப் போர் துவங்கும்முன், தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டு, நைமிஷாரண்யத்தில் ஹரிகதை சொல்லிக்கொண்டிருந்த ரோமஹர்ஷணன், தனக்கு மரியாதை கொடுக்கவில்லையென்று கோபப்பட்டு, தர்ப்பையினாலேயே அவனைக் கொன்றார்.
தீர்த்தயாத்திரையிலிருந்து திரும்பி வந்தபோது, துர்யோதனன் தொடை முறிந்து கீழே விழுந்திருந்தான். ஸ்ரீகிருஷ்ணனின் மனதை அறியாமல், பலராமன், பீமன் மேல் போர் புரியத் தயாரானார். முந்தைய பிறவியில் லட்சுமணனாகப் பிறந்து தன் அண்ணனுக்கு செய்த சேவையினால் கிடைத்த அதிகப் புண்ணியத்தை, தற்போது இப்படி அடிக்கடி செய்து குறைத்துக்கொண்டார்.
யாதவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக் கொல்லும்போது, பாம்பு உருவத்தில் கடலில் பிரவேசித்து தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொண்டார் பலராமன்.
கே: தசாவதாரத்தில் புத்தனுக்குப் பதில் பலராமனை சிலர் சேர்க்கின்றனர். இது சரியா?
ப: பலராமன் ஸ்ரீஹரியின் ஸ்வரூப அவதாரம் அல்ல. இது ஆவேச அவதாரம் மட்டுமே. ஆகையால் தசாவதாரத்தில் இவரை சேர்க்கக்கூடாது. ஸ்ரீஹரி, ராமனாக இருந்தபோது லட்சுமணன், அண்ணனுக்கு அபாரமான சேவை செய்தார். தன் யோக்யதைக்கு மீறிய புண்ணியத்தை சம்பாதித்தார். அதை சரி செய்வதற்காக, ஸ்ரீஹரி, இவரை தன் அண்ணனாகப் பிறப்பாய் என்று சொல்லி கிருஷ்ணாவதாரத்தில் பிறக்கச் செய்தார். இதனால் தன் அதிகமான புண்ணியத்தை சரிசெய்துகொண்ட பலராமனின் கதை மிகவும் சுவாரசியமானது. சாத்வீகர்கள் சில சமயம் தவறுகளைச் செய்யும்போது, இதனால் அவர்கள் பாபிகளாகின்றனர் என்று சொல்லமுடியாது. அவர்களுடைய அதிகமான புண்ணியத்தை குறைப்பதற்காகவே ஸ்ரீஹரி அவர்களின் மூலம் இப்படிச் செய்கிறான் என்று பலராம அவதாரத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பிற்சேர்க்கை:
கே: கார்த்தவீர்யார்ஜுன அவதாரத்தைப் பற்றி சொல்வீரா?
ப: கார்த்தவீர்யார்ஜுன அவதாரத்தைப் பற்றி நினைப்பது மிகவும் அவசியம். வீடுகளில் சிறிய பொருட்கள் சில தொலைந்து போன சமயத்தில், கார்த்தவீர்யார்ஜுனனை நினைத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. நிரந்தரமான சுகத்தை நாம் தொலைத்துவிட்டு அதை தேடவேண்டும் என்ற சாக்கில் கார்த்தவீர்யார்ஜுனனை நினைக்கும் புதிய வழக்கம் வரவேண்டும். ஒருமுறை அக்னி, கார்த்தவீர்யார்ஜுனனிடம் வந்து, ‘மிகவும் பசிக்கிறது. பிட்சை போடு’ என்ற கேட்டபோது, மொத்த பூமியையே தானமாக கொடுத்த கார்த்தவீர்யார்ஜுனன், நாம் நினைத்த நேரத்தில் வருவார். நிரந்தர சுகத்தைத் தராமல் இருக்கமாட்டார். ஆகையால், ஹைஹய ராஜனிடம், கார்த்தவீர்யார்ஜுனனாக இருக்கும் இந்த ஸ்ரீஹரியின் ஆவேச அவதாரத்தை என்றென்றும் நினைப்போமாக.
முடிவுரை:
பரமாத்மனே சததமேக ரூபிணே
தசரூபிணே ஷதசஹஸ்ர ரூபிணே |
அவிகாரிணே ஸ்புடமனந்த ரூபிணே
சுகசித் சமஸ்ததனவே நமோ நம: ||
இதுவே ஸ்ரீமதாசார்யரின் வேண்டுதலின் சிறப்பு. ஸ்ரீஹரியானவர் தனது 10, 100, 1000 ஆகிய ரூபங்களை, அவதாரங்களை தனது லீலைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார். மூலரூபம் ஒன்றிலிருந்தே அனைத்து செயல்களையும் செய்ய வல்லவராக இருந்தாலும், பற்பல ரூப-அவதாரங்களை எடுத்திருப்பது அவரின் சிறப்பு மகிமையாகும். அனைத்து அவதாரங்களும் - எல்லா காலங்களிலும் எப்போதும் இருப்பவை; மூலரூபத்திற்கும் அவதாரங்களுக்கும் எந்தவித வேறுபாடுகளும் இல்லை; ஸ்ரீஹரிக்கும் அவரது உறுப்புகளுக்கும் எந்தவித வேறுபாடுகளும் இல்லை; என்று அறியவேண்டும்.
இத்தகைய ரகசியங்களை சொல்லிக்கொடுத்து, அனைவரைவிடவும் அதிகமாக ஸ்ரீஹரியின் சிறப்புகளை சிந்தனை செய்து பூஜித்தவர் ஸ்ரீமதாசார்யர். ஸ்ரீஹரியைக் குறித்த அதிகமான நல்ல ஞானத்தை பெற்றுக்கொள்வதை விஞ்ஞானம் என்கிறார். விஞ்ஞானம் = வி-ஞானம் = விசேஷமான ஞானம். ஸ்ரீஹரியே அனைவரையும் படைத்தவர் என்று பொதுவாக அறிவது சாதாரண ஞானம். அவரது ரூபங்கள், அவதாரங்கள், அவற்றின் சிறப்பு இவற்றையெல்லாம் நன்கு அறிவது புண்ணியத்தை தேடித்தரும் செயல். மோட்சத்தையும் அளிக்கும் செயலாகும்.
சாஸ்திரங்களை, ஸ்ரீமதாசார்யர் இயற்றியுள்ள நிர்ணயங்களின்படி அவதாரம், அம்சம், ஆவேசங்கள் இங்கு விளக்கப்பட்டிருக்கிறது. பகவத் தத்வங்கள் எவ்வளவு அறிந்தாலும் போதாது. மேற்சொன்னவைகளில் தவறு இருந்தாலோ, சந்தேகம் வந்தாலோ, கற்றறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிந்து கொள்ளவேண்டும்.
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள் மற்றும் இருக்கும் பற்பல அவதாரங்களும் நமக்கு அருளி, நம்மை மத்வ சித்தாந்தத்தில் நடத்தி காப்பாற்றட்டும் என்று குர்வந்தர்கத ஸ்ரீமன் நாராயணனை பக்திபூர்வமாக சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***