Friday, February 2, 2018

22/40 தன்வந்திரி அவதாரம்

22/40 தன்வந்திரி அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்




கேள்வி: நம் வீட்டுக் கஷ்டங்களை யாரிடம் சொல்லி அழுவது? காசு பணத்திற்கு குறைவு இல்லையென்றாலும், நடைமுறை வாழ்க்கையில் பற்பல நோய் நொடிகள், மனதில் பற்பல பிரச்னைகள், இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற வெறுப்பு வந்துவிட்டது. இதற்கு ஏதேனும் தீர்வு / வழி சொல்லுங்களேன்.

பதில்: இவ்வளவு வருத்தப்படத் தேவையில்லை. இதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது. வாழ்க்கையில் நல்ல சாதனைகளை நீங்கள் செய்யவேண்டும் என்பதற்காகவே இப்படி கஷ்டங்கள் வருகின்றன. பூர்ண நம்பிக்கை வந்து தன்வந்திரி மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபம் செய்யுங்கள். நாயுருவி மரத்தின் சமித்துகளின் மூலம் பத்தாயிரம் முறையும், 2000 முறை அமிர்தவல்லியின் மூலம் ஆஹுதி கொடுத்து தன்வந்திரி ஹோமம் செய்யுங்கள். எந்த பிரச்னையும் உங்கள் அருகிலேயே வராது. அனைத்து மந்திர தந்திரங்களுக்கும் நீங்கள் ஒரு நெருப்பு போல காட்சியளிப்பீர்கள்.

பூதாபிசார ஷாந்த்யர்தமபாமேர்காஹுதிக்ரமா |
த்விகுணாSம்ருதயா பஸ்சாத் கேவலேன க்ருதேன வா ||

கே: பல ஆண்டுகளாக எனக்கு தலைவலி மற்றும் வாந்தி இருக்கிறது. எவ்வளவோ மருத்துவர்களைப் பார்த்தும் பிரச்னைகள் தீரவில்லை. மற்றும் என் உறவினர் ஒருவருக்கு வாரத்திற்கு இருமுறை ஜுரம் வருகிறது. இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?

ப: ஜ்வர தாஹாதி ஷாந்த்யர்தம் தர்பயோன்மனுனாSமுனா |
த்யாத்வா ஹரிம் ஜலே ஸப்த ராத்ரா ஜ்ஜோர்திர் வினஸ்யதி ||

தினமும் (ஒரு நாளைக்கு 8000 அல்லது 3000மாவது) தன்வந்திரி மந்திரத்தை ஏழு நாளைக்கு ஜபம் செய்யுங்கள். தர்ப்பணம் விடுங்கள். நோய்கள் கண்காணாத தூரத்திற்கு ஒடி மறைந்துவிடும்.

கே: எனக்கு இன்னும் ஒரே ஒரு ஆண்டு ஆயுள் இருப்பதாக, ஜாதகத்தில் தெரிகிறது என்று ஜோசியர் சொல்கிறார். பயமாக இருக்கிறது. இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?

ப: உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் நாளில், பசும்பால் மற்றும் நெய் கொண்டு, தன்வந்திரி மந்திரத்தால், ஒரு ஹோமம் செய்யுங்கள். இதனால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும். உங்கள் ஜாதகத்தை நீங்களே திருத்துவீர்கள்.

கே: நான் எதுவும் படிக்கவில்லை, எனக்கு எப்போதும் கஷ்டம் வருகிறது, எனக்கு எப்போதும் பயமாக இருக்கிறது, தினமும் ஏதும் ஒரு நோய் இருக்கிறது, என் உணவில் விஷம் கலந்துவிட்டார்கள் - இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லையே?

ப: தினந்தோறும் தன்வந்திரி மந்திரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறை பக்தியுடன் ஜெபிக்க வேண்டும். இதனால் அஞ்ஞானம், துக்கம், பயம், நோய், உணவில் கலந்த விஷம் இவை அனைத்தும்கூட நீங்கி, வாழ்க்கையில் சுகம் பிறக்கும். அதுமட்டுமல்லாமல் மனதளவில் வரும் பிரச்னைகள், குழப்பங்கள் இவைகளும்கூட தன்வந்திரி மந்திரத்தினால் பரிகாரம் ஆகின்றன.

அஞ்ஞான துக்க பய ரோக மஹா விஷாண |
யோகோSயாமாஷு வினிஹத்ய சுகம் ச தத்யாத் ||

கே: ஜெபம் செய்வதற்கு எனக்கு நேரமே கிடைப்பதில்லை. நோய்கள் தீவிரமடைந்துவிட்டன. நான் என்ன செய்யட்டும்?

ப: நீங்கள் ஜெபம் செய்யவேண்டும் என்பதில்லை. அமிர்தத்தைப் பொழிந்து கொண்டிருக்கும் தன்வந்திரியை மனதில் நினைத்து, உங்கள் தலையில் கைவைத்து, இன்னொரு மந்திர-உபாசகர் தன்வந்திரி ஜெபத்தை செய்தாலும் போதுமானது. இப்படிச் செய்தால் நிச்சயமாக ரோகங்கள் பரிகாரம் ஆகும். நோய்க்குக் காரணமாக இருக்கும் பாவங்கள் தூர விலகிப் போகும். அப்படி ஜெபிக்கும் மந்திர-உபாசகரிடம் ஹரிபக்தி மற்றும் சிரத்தைகள் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். 

த்யாத்யேவ ஹஸ்த தள கம் ஸ்வம்ருதம் ஸ்ரவந்தம்
வேதம் ஸ யஸ்ய திரஸி ஸ்வ கரம் நிதாய |
ஆவர்தயேன் மனுமெமம் ஸ ச வேதரோக: 
பாபாதபைதி மனுஸா யதி பக்தி மனு: ||

கே: நான் ஒரு மருத்துவன். எந்த நோய்க்கு எந்த சிகிச்சை / மருந்துகள் கொடுக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், நான் செய்யும் சிகிச்சையில் நோய்கள் குணமாவதில்லை. இதனால் அதிக நோயாளிகள் என்னிடம் வருவதில்லை. இதற்கு என்ன பரிகாரம்?

ப: தினமும் தன்வந்திரி மந்திரத்தை ஆயிரம் முறை ஜெபம் செய்யுங்கள். உள்ளங்கையில் மருத்தினை வைத்து, தன்வந்திரி மந்திரத்தை ஒரு முறை ஜெபித்து, பின் நோயாளிகளுக்குக் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் சாதாரண மருந்தினால், பெரிய நோய்களும்கூட தூர ஓடிப்போகும். அதிக நோயாளிகளுக்கு சேவை செய்யும் பாக்கியம் உங்களைத் தேடிவரும். 

கே: நீங்கள் சொல்லும் பரிகாரங்கள் அனைத்தும் மனதிற்கு மிகவும் அமைதியை தருகின்றன. ஆனால் நாங்கள் பெண்கள் ஆதலால், தன்வந்திரி மந்திரத்தை உச்சரிக்கும் அருகதை எங்களுக்கு இல்லை. நாங்கள் என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள்?

ப: நீங்களே ஜெபம் செய்யவேண்டும் என்பதில்லை. தன்வந்திரி சூளாதியைப் படித்து அதிலிருந்து சித்தி அடையலாம். அல்லது உங்கள் கணவரின் மூலம் ஜெபம் செய்வித்து, அவரின் மூலமே நோய்களுக்கான பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம். அல்லது உங்கள் கணவரின் முலமாகவே, பிரணவம் இல்லாத தன்வந்திரி மந்திரத்தை உபதேசம் பெற்று, அதனை ஜெபிக்கலாம். நோக்கம் தெளிவாக இருந்தால், அதை அடையும் வழிகள் ஆயிரம் உண்டு. 

கே: எந்த மந்திரத்திற்கும் இல்லாத மகிமையை தன்வந்திரி மந்திரத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

ப: தந்த்ரசார சங்க்ரஹத்தில், ஸ்ரீமதாசார்யர் தன்வந்திரி மந்திரத்தின் மகிமைகளைப் பற்றி மிகவும் அருமையாக விவரித்திருக்கிறார். அனைத்து மந்திரங்களின் கிரீடம் இதுவே என்று கொண்டாடுகிறார். 

‘தன்வந்தரோ மஹாமந்த்ர: ஸம்ஸ்ருதிவ்யாதி நாஷன:’ என்று சொன்னதின் மூலம், தன்வந்திரி மந்திரத்திற்கு, தற்காலிக நோய்கள் மட்டுமல்ல, சம்சாரத்தில் வரும் நோய்கள் அனைத்தையுமே தீர்க்கும் சாமர்த்தியம் உள்ளது என்று கண்டிப்பான குரலில் தெளிவாகக் கூறுகிறார். அஷ்டமஹா மந்திரங்களுக்கு அடுத்த நிலையில் தன்வந்திரி மந்திரம் உள்ளது.

கே: தன்வந்திரி மந்திரத்தை ஜெபிக்கும்போது எப்படி தியானம் செய்யவேண்டும்?

ப: எண்ணிக்கையற்ற சந்திரர்களின் ஒளியைக் காட்டிலும் அதிக பிரகாசமுள்ளவர். அமிர்தத்தை பொழிந்துகொண்டிருக்கும் கிரணங்களால் அனைத்துலகையும் வாழ வைத்துக்கொண்டிருப்பவர். ஆனந்த வடிவுடையவர். ரமா, பிரம்மா முதலியோர்க்கு தலைவர். ஞான முத்திரை, அமிர்த கலசம் இரண்டையும் இரு கைகளில் ஏந்தியிருப்பவர். சந்திர மண்டலத்தில் வீற்றிருப்பவர் - இப்படியாக தியானிக்க வேண்டும். 

கே: எங்கு / எப்படி தியானிக்கவேண்டும்?

ப: ‘ஆத்மஸம்ஸ்தம்’ என்ற சொல்லின் மூலம் ஸ்ரீமதாசார்யர் தியானம் எங்கு செய்யவேண்டும் என்று சொல்கிறார். நம் இதயத்தில், அக்னி மண்டலம், சந்திர மண்டலம் மற்றும் சூர்ய மண்டலங்கள் உள்ளன. இதயத்திலிருக்கும் சூரியமண்டலத்தில் சூரிய நாராயணனை நினைத்து காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதைப் போல, சந்திரமண்டலத்தில் தன்வந்திரியை நினைத்து ஜபம் செய்யவேண்டும். 

இதயத்திலிருக்கும் சந்திரமண்டலத்தில் இருக்கும் தன்வந்திரியானவர், நம் உடலில் இருக்கும் 72,000 நாடிகளில் தன் ஒளியைப் பாய்ச்சி நம் உடலை அமிர்தத்தால் நிரப்புகிறார். அதுமட்டுமல்லாமல், நம் தலையில், புருவங்களுக்கு நடுவில், உள் நாக்கினில், நாபியில் மற்றும் உடலின் கீழ்பாகத்தில் இருக்கும் ஷட்-சக்கரங்களில் (ஆறு சக்கரங்களில்) இதே தன்வந்திரி நிலைத்திருந்து, அமிர்த மழையை பொழிகின்றார். 

கே: என்ன ஆச்சரியம்? இதயத்தில் மட்டுமல்லாது, தன்வந்திரி நம் உடலில் ஆறு இடங்களில் நிலைத்திருக்கிறாரா?

ப: ஆம். இதைவிட அற்புதமான விஷயம் வேறொன்றில்லை. ஆறு சக்கரங்களிலும் நிலைத்திருந்து அமிர்தத்தைப் பொழிந்துகொண்டிருக்கும் தன்வந்திரியின் மகிமையை அறிந்து ஆதி-வியாதிகளை போக்கிக்கொள்ள வேண்டும். 

கே: தன்வந்திரியின் ரூபம் எப்படி இருக்கிறது? ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் அமிர்த கலசம் - இவற்றைத் தாங்கியவாறு இருக்கின்றார் அல்லவா?

ப: இதற்கும்கூட ‘ஏவ ச’ என்ற வாக்கியத்தின் மூலம் ஸ்ரீமதாசாரியார் பதில் அளித்திருக்கிறார். இடது கையில் அமிர்த கலசத்தையும், வலது கையில் ஞானமுத்திரையையும் ஏந்தியிருக்கிறார். இரண்டு கைகளை மட்டும் தியானிக்கவேண்டும் என்று ஸ்ரீமதாசாரியார் சொல்லியிருக்கிறார். நான்கு கைகளைக் கொண்டிருக்கும் தன்வந்திரியை வணங்குவதற்கு, எங்கும் சரியான ஆதாரம் இல்லை. 

கே: தன்வந்திரியின் அவதாரம் நடைபெற்றது எப்போது, எங்கு?

ப: தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது, கையில் அமிர்த கலசத்தைத் தாங்கியவாறு அவதரித்தவரே தன்வந்திரி. அவர் அவதரித்த நாளான - ஆஸ்விஜ மாதத்தில் வரும்  ஜலபூர்ண த்ரயோதசியை - தன்வந்திரி ஜெயந்தி என்று, தன்வந்திரியை வணங்குபவர்கள் விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.

கே: தன்வந்திரியின் கதையை சொல்வீரா?

ப: பாற்கடலை கடைந்தபோது அமிர்த கலசத்தைத் தாங்கியவாறு தோன்றியவரே தன்வந்திரி. அமிர்தத்தைக் கொண்டுவந்தபிறகு, தன் தந்தையான விஷ்ணுவைப் பார்த்து கேட்கிறார் - எனக்கு யக்ஞபாகத்தில் ஒரு இடம் கொடு. எனக்கு இந்த உலகத்தில் இருப்பதற்கு ஒரு இடம் கொடு. (அசுர மோகனத்திற்காக செய்யப்பட்ட ஒரு நாடகம் இது).

தன்வந்திரி கேட்டதைப் போலவே தந்தையான மகாவிஷ்ணு வரம் அளிக்கிறார். ‘நீ காசிராஜனின் வம்சத்தில் அவதரிப்பாய். அப்போது உனக்கு யக்ஞத்தில் பங்கு கிடைக்கும். மேலும் உலகத்தில், ஆயுர்வேத சாஸ்திரத்தைக் கண்டுபிடித்தவன் என்றே புகழ் பெறுவாய். உனக்கு முன்னர் பிறந்த தேவர்கள் தாங்கள் செய்த யாகத்தில் தம் பங்கினை ஏற்கனவே பெற்றுவிட்டதால், உனக்கு அதில் பாகத்தை அளிப்பது சாத்தியமில்லை’. 

தந்தையான விஷ்ணுவின் ஆணையின் பேரில், இதே தன்வந்திரி பின்னர் காசிராஜனின் மகனாகப் பிறக்கிறார். யயாதியின் வம்சத்தில், தீர்கதனு என்னும் காசிராஜனின் மகனாக, தன்வ என்பவன் பிறக்கிறான். இவன் ஸ்ரீஹரியின் தன்வந்திரி ரூபத்தைக் குறித்து தவம் செய்தான். விஷ்ணு தரிசனம் அளித்தபோது, நீயே எனக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்று வரம் கேட்கிறான். ஸ்ரீஹரியும், ‘ததாஸ்து - அப்படியே ஆகட்டும்’ என்று வரமளித்து, அந்த தன்வ ராஜனுக்கு மகனாகப் பிறந்து, தன்வந்திரி என்ற பெயரில் புகழ்பெற்றார்.

பாரத்வாஜ முனிவர்களிடமிருந்து ஆயுர்வேதத்தைக் கற்றார். மற்றும் ஆயுர்வேதத்தினை, 1. உடல் சிகிச்சை 2. குழந்தைகளுக்கான சிகிச்சை 3. வீட்டு சிகிச்சை 4. உடம்பில் மேல் பகுதிக்கான சிகிச்சை 5. அறுவை சிகிச்சை 6. பல் சிகிச்சை 7. ஜுர சிகிச்சை 8. பாலியல் பிரச்னைகளுக்கான சிகிச்சை என்று எட்டு பாகங்களாகப் பிரித்து, ஆயுர்வேதத்தைத் துவக்கியவர் என்று பெயர் பெற்றார். தன்வந்திரிக்கு கேதுமந்த என்ற மகனும், அவனுக்கு பீமரத என்னும் மகனும் பிறந்தனர். இப்படியாக இவரின் வம்சம் வளர்ந்தது. 

இந்த தன்வந்திரியானவர், ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரமே தவிர, ஸ்வருப-அவதாரம் இல்லை என்று பாகவதம் சொல்கிறது. 

கே: தன்வந்திரி என்றால் என்ன?

ப: தன்வ = நோய், நொடி, கஷ்டங்களை; தரி = நாசம் செய்பவன் என்று பொருள். ‘அஞ்ஞானரோக’ என்னும் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து பிரச்னைகளையும் நாசம் செய்பவன். தந்த்ரசார சங்க்ரஹ தியான ஸ்லோகத்தில் ஸ்ரீமதாசார்யார் தன்வந்திரி என்னும் பெயரின் பொருளை விவரமாகச் சொல்லியிருக்கிறார். 

கே: தன்வந்திரியின் படத்தை / உருவச்சிலையை (பிரதிமையை) பூஜிக்கலாமா? தன்வந்திரிக்கு எங்காவது கோயில் இருக்கின்றதா?

ப: சந்திரமண்டலத்தில் அமர்ந்து, அமிர்தகலசத்தைப் பிடித்தவாறு இருக்கும் தன்வந்திரியின் படத்தை / உருவச்சிலையை பூஜிப்பதால் நல்ல ஆரோக்கியம் கிட்டும். தென் கர்நாடகத்தில் உள்ள கொக்கட என்னும் ஊரில் தன்வந்திரி ஆலயம் ஒன்று உள்ளது. ஸ்ரீமதாசார்யர் இந்த கோயிலுக்கு வந்திருக்கிறார் என்று மத்வவிஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

நானாவித கஷ்டங்களில் மூழ்கியிருக்கும் நாம் அனைவரும் இந்த சம்சார சாகரத்தைக் கடந்து, ஸ்ரீஹரியை அடைவதற்கு, தன்வந்திரியையே சரணடைவோமாக.

கே: தன்வந்திரியின் என்னவென்று வணங்கவேண்டும்?

ப: 
அனைத்தையும் பார்க்கிறேன். ஆனாலும் நான் குருடன். அனைத்தையும் கேட்கிறேன். ஆனாலும் நான் செவிடன். ஓயாமல் அரட்டை அடிக்கிறேன். ஆனாலும் நான் ஊமை. வயிறு நிறைய உண்கிறேன். ஆனாலும் எனக்கு நாக்கே இல்லை. ஒரு நொடியும் வீணாக்காமல் ஏதோ வேலை செய்கிறேன். 

ஆனால் எனக்கு கைகளே இல்லை. முகத்திற்கு அழகான அலங்காரங்களைச் செய்துகொள்கிறேன். ஆனால் எனக்கு தலையே இல்லை. எல்லா இடத்திற்கும் போய் வருவேன். ஆனால் எனக்கு கால்களே இல்லை. ஏ தன்வந்திரியே! என் இந்திரியங்களில் எந்த நோயும் இல்லை. உன்னையே தேடி அலையும் ஒரே ஒரு இந்திரியமாவது கொடுத்து எனக்கு அருள்வாயாக, ஸ்வாமி! உண்மை வழியில் நடப்பதற்கு எனக்கு அருள்வாயாக என்று கீழ்க்கண்ட பாடலில் கோபாலதாசர் பாடுகிறார். 

“ஆவ ரோகவு எனகே தேவ தன்வந்திரி |
ஸாவதானதி என்ன கைபிடிது நோடய்யா ||”.

கே: ’தன்வந்திரி: பகவான் பாது அபத்யாத்’ என்னும் நாராயண வர்மத்தின் வாக்கியத்திற்கு என்ன பொருள்?

ப: தன்வந்திரி ரூபியான ஸ்ரீஹரி அப்த்யவிலிருந்து என்னை ரட்சிக்கட்டும். தேவர்களின் அனைத்துவிதமான கஷ்டங்களையும் போக்கிய, அவர்களுக்கு நலன்களை அள்ளி வழங்கிய கருணை மிகுந்தவனே தன்வந்திரி. அமிர்தத்தைப் பெறத் துடிக்கும் அனைத்து சாதகர்களுக்கும், காமம், அகங்காரம் முதலியவற்றை ஒழிக்கும் செயலில், பல்வேறு பிரச்னைகள் வரும்போது அவற்றை நீக்கி நமக்கு அருள்பவனே தன்வந்திரி. உடலுக்கு வரும் நோய்கள் மட்டுமல்லாது, மனதிற்கு வரும் நோய்களையும் நீக்கி, எல்லா சஜ்ஜனர்களுக்கும், நிரந்தரமான அமிர்தத்தைக் கொடுக்கும் தன்வந்திரியை தினம்தோறும் ஒவ்வொரு நொடியும் தியானித்து தன்யர் ஆவோமாக. 

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தின்படி தன்வந்திரியை எப்படி தியானிக்க வேண்டும்?

ப: 
சந்த்ரௌககாந்தி மம்ருதோரு கரைர்ஜகந்தி
ஸஜ்ஜீவயந்த மமிதாத்ம சுகம் பரேஷம் |
ஞானம் சுதாகயஷமேவ ச ஸந்ததானம் 
சீதாம்ஷுமண்டலகதம் ஸ்மரதாத்ம சம்ஸ்தம் ||

எண்ணிக்கையற்ற சந்திரர்களின் ஒளியைக் காட்டிலும் அதிக பிரகாசமுள்ளவர். அமிர்தத்தை பொழிந்துகொண்டிருக்கும் கிரணங்களால் அனைத்துலகையும் வாழ வைத்துக்கொண்டிருப்பவர். ஆனந்த வடிவுடையவர். ரமா, பிரம்மா முதலியோர்க்கு தலைவர். ஞான முத்திரை, அமிர்த கலசம் இரண்டையும் இரு கைகளில் ஏந்தியிருப்பவர். சந்திர மண்டலத்தில் வீற்றிருப்பவர் - இப்படியாக தியானிக்க வேண்டும். 

மூர்த்னி ஸ்திதாதமுத ஏவ சுதாம் ஸ்ரவந்தீம்
ப்ரூமத்யகாச்ச தத ஏவ ச தாலுஸம்ஸ்தாத் |
ஹார்த்ராச்ச நாபிசதனாததர ஸ்திதாச்ச 
த்யாத்வாகபி பூரிததனுர்துரிதம் நிஹந்த்யாத் ||

நம் தலையில், புருவங்களுக்கு நடுவில், கன்னங்களில், இதயத்தில், உடலின் கீழ் பாகத்தில் - இந்த அனைத்து இந்திரியங்களிலும், சந்திரமண்டலத்தில் வீற்றிருக்கும் தன்வந்திரி ரூபியான ஸ்ரீஹரி, அமிர்தமழையைப் பொழிந்துவருகின்றார். அந்த அமிர்தமழை தன் உடலில் நிரம்பியிருக்கிறது என்று நினைத்து ஜெபிப்பவர்கள் தீயவைகளை விலக்கிவிடுவார்கள். (இப்படி தியானிப்பதால் தீயவைகள் விலகிவிடும்).

அக்ஞான துக்கபயரோக மஹாவிஷாணி
யோகோக்யமாஷு வினிஹந்தி சுகம் ச தத்யாத் |
உன்மாதவிப்ரமஹர: பரதஸ்ச சாந்த்ர
ஸ்வானந்தமேவ பதமாபயதி ஸ்ம நித்யம் ||

இந்த தன்வந்திரி மந்திரமானது, அஞ்ஞானம், சந்தேகம், விபரீதஞானம், ஆத்யாத்மிக துக்கங்கள், பிசாசுகளினால் வரும் பயங்கள், நோய்கள், எதிரிகளால் வரும் பிரச்னைகள், விஷம் - இவைகளை விரைவில் போக்கி சுகத்தைக் கொடுக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல், பைத்தியம், பயப்படுதல் ஆகியவற்றை நீக்குவது மட்டுமல்லாமல், மறு உலகத்திலும் ஒரு நிரந்தரமான இடம் - இந்த மந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு கிடைக்கும். 

த்யாத்வைவ ஹஸ்ததலகம் ஸ்வம்ருதம் ஸ்ரவந்தம் 
தேவம் ஸ யஸ்ய ஷிரஸி ஸ்வகரம் நிதாய |
ஆவர்தயேன்மனுமிமம் ஸ ச வீதரோக:
பாபாதபைதி மனஸா யதி பக்தினம்ர: ||

தன்வந்திரி மந்திரத்தை தியானிப்பவன், தன் தலை முதலான இந்திரியங்களில் அமிர்தத்தைப் பொழிந்து கொண்டிருக்கும் தன்வந்திரியை, தன் கைகளில் இருப்பவராக தியானித்து, அந்தக் கையை ஒரு ரோகியின் தலையில் வைத்து, தன்வந்திரி மந்திரத்தை ஜெபித்தார் என்றால், அவர் எல்லா நோய்களும் நீங்கியவராகவும், எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை அடைந்தவராகவும் ஆகிறார். இதற்கு அந்த ரோகி, ஸ்ரீஹரி பக்தி உடையவராகவும், சிரத்தை உள்ளவராகவும் இருத்தல் அவசியம். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment