Friday, February 9, 2018

29/40 சத்யசேன அவதாரம்

29/40 சத்யசேன அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கேள்வி: இரண்டாம் மன்வந்தரத்தில் விபு நாம ஸ்ரீஹரியின் அவதாரத்தின் வைபவத்தைப் பற்றி அறிந்தோம். இதேபோல, மூன்றாம் மன்வந்தரத்தில், ஸ்ரீஹரியின் அவதாரத்தின் விசேஷம் என்ன என்று பார்க்கலாமா?

பதில்: அவதாரத்தின் பெயர் சத்யசேன

கே: சத்யசேன அவதாரத்தின் நோக்கம்?

ப: மூன்றாம் மன்வந்தரத்தில் சத்யஜித் என்னும் யமதர்மராஜன் இந்திரபதவியில் இருந்தார். ஒருமுறை உலகத்தில் துஷ்டர்களான அரக்கர்களே நிரம்பியிருந்தார்கள். விலங்குகளைக் கொல்வதை தம் வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தனர். பொய் பேசுவதே அவர்களின் வழக்கமாயிருந்தது. இந்த சமயத்தில், யமதர்மன் வேறுவழியில்லாமல் ஸ்ரீஹரியை சரணடைந்தார். அவரின் ஸ்தோத்திரத்திற்கு செவிசாய்த்து, ஸ்ரீஹரி சத்யசேன என்னும் அவதாரம் எடுத்தார். 

கே: சத்யசேன என்னும் பெயர் வரக் காரணமென்ன?

ப: பொய் பேசும் வழக்கமுடைய அரக்கர்களைக் கொன்று, உண்மையை நிறுவியதால், சத்யசேன என்னும் காரணப்பெயரைப் பெற்றார்.

கே: சத்யசேனன் யாரிடம் அவதரித்தார்?

ப: 
தர்மஸ்ய சூன்ருதாயாம் து பகவான் புருஷோத்தம: |
சத்யசேன இதி க்யாதோ ஜாத: ஸத்யவ்ரதை: ஸஹ ||

யமதர்மனின் மனைவியான சூன்ருதாதேவியிடம், புருஷோத்தமனான, நற்குணங்களால் நிரம்பியவனான, ஸ்ரீஹரி சத்யசேன என்ற பெயரில் அவதரித்தார். 

கே: யமதர்மன் - சூன்ருதாதேவியிடம், சத்யசேன ஸ்ரீஹரி மட்டுமே அவதரித்தாரா, அல்லது இன்னும் வேறு யாராவது அவதரித்தார்களா?

ப: ’சத்யவ்ரதை: ஸஹ’ என்னும் வாக்கியத்தின்படி இன்னும் பலர் சூன்ருதாதேவியிடம், சத்யசேனரின் சகோதரர்களாகப் பிறந்தனர் 

கே: மூன்றாம் மன்வந்தரத்தின் பெயர் என்ன? மன்வந்தரத்தின் அதிபதி யார்?

ப: மூன்றாம் மன்வந்தரத்தின் பெயர் - உத்தம. ப்ரியவ்ரத ராஜனின் மகனான உத்தமனே இதன் அதிபதி. பவன, யக்ஞஹோத்ர ஆகியோர் இவனின் மகன்கள்.

கே: அப்போதைய அரசாட்சி எப்படி இருந்தது?

ப: யமதர்மராஜன் இந்திரபதவியை வகித்து வந்தார். வசிஷ்டரின் மக்களான ப்ரமத முதலானவர்கள் சப்தரிஷி பட்டத்தில் இருந்தனர். சத்யர், வேதஸ்ருதர் மற்றும் பத்ரகீ ஆகியோர் தேவதா பதவிகளில் இருந்தனர். சத்யவ்ரத முதலான சகோதரர்களுக்கு காவலனாக, இந்திரனை கட்டுப்படுத்துபவனாக, சத்யசேன என்னும் பெயரைப் பெற்ற ஸ்ரீஹரியிடம் நமக்கும் சத்ய நிஷ்டையை அருள்வாயாக என்று வேண்டி என்றென்றும் அவரை சரணடைவோமாக. 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment