Friday, February 16, 2018

36/40 பசு அவதாரம்

36/40 பசு அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கே: மீன், பன்றி, சிங்கம், குதிரை இப்படி பல விலங்குகளின் ரூபத்தில் ஸ்ரீஹரி அவதரித்திருக்கிறார். ஆனால் அனைத்து விலங்குகளைவிட மிகவும் பவித்ரமான பசுவின் ரூபத்தில் ஏன் தன்னை காட்டிக்கொள்ளவில்லை? ஏன் பசுவின் ரூபத்தில் அவதாரம் செய்யவில்லை?

ப: பசுவின் ரூபத்தில் ஸ்ரீஹரி அவதாரம் செய்யவில்லை என்று பொதுவாக உலகத்தில் நம்பப்படுகிறது. ஆனால், கோவிந்தன், கோ’வின் ரூபத்திலும்கூட அவதாரம் செய்திருக்கிறார். இது ஒரு அற்புதமான கதை.

கே: அப்படியா? என்ன ஆச்சரியம்? ஸ்ரீஹரி எந்த சந்தர்ப்பத்தில் பசுவின் அவதாரத்தை எடுத்தார்?

ப: த்ரிபுராசுரர்கள், சித்தரசத்தின் (Siddha rasam - யாராலும் உருவாக்கப்படாத & அழிவில்லாத அமிர்தம்) கிணற்றைப் பெற்றிருந்தனர். அந்த சித்தரசம், அமிர்தத்தைப் போல் இருந்தது. அதைக் குடித்த தைத்யர்கள் அனைவரும் சாகாவரம் பெற்றனர். இத்தகைய அமிர்தத்தைப் பருகுவதற்காக ஸ்ரீஹரி பசுவின் ரூபத்தில் அவதரித்தார். 

கே: எப்போது, எதற்காக இப்படி அவதரித்தார்?

ப: த்ரிபுராசுரர்களை அழிக்கும் காலத்தில் ருத்ரரின் புகழை அதிகப்படுத்துவதற்காக.

கே: த்ரிபுராசுரர்களைக் கொன்றது ருத்ரர்தானே? இப்படி இருக்கும்போது ஸ்ரீஹரி ஏன் பசுவின் ரூபத்தை எடுத்தார்?

ப: ருத்ரர், த்ரிபுராசுரர்களின் நகரத்தின் மேல் பற்பல பாணங்களை விட்டு அசுரர்களை கொல்லத் துவங்கினார். ஆனால் அவர்கள் அனைவரும் மாய-அசுரர்களாகிருந்தனர். இறந்த அசுரர்களை அமிர்தம் நிறைந்த கிணற்றில் தள்ளி, மறுபடி அவர்களை பிழைக்க வைத்தனர். பிழைத்தவர்கள் மீண்டும் பலசாலியாக போருக்கு வந்தனர். இதனால் ருத்ரர் மிகவும் களைப்படைந்து, ஸ்ரீஹரியிடமே வந்து சரணடைந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீஹரி பசு அவதாரத்தை எடுத்தார். 

கே: த்ரிபுராசுரர்களின் நகரங்கள் யார் கண்ணிற்கும் தெரியவில்லை. மேலும் அவை ஆகாயத்தில் சுற்றிக்கொண்டிருந்தன. ஏகப்பட்ட ஆயுதங்களால் நிரம்பியிருந்தன. இந்த அசுரர்களின் தங்க, வெள்ளி, இரும்பாலான நகரங்களை, கோ (பசு) ரூபியான ஸ்ரீஹரி எப்படி அழித்தார்?

ப: கோரூபியான ஸ்ரீஹரி தானே இந்த நகரங்களை அழிக்கவில்லை. ருத்ரதேவர் மூலமாகவே இவற்றை அழித்தார். 

கே: பசு ரூபத்தில் ஸ்ரீஹரி என்னென்ன செயல்களை செய்தார்?

ப: ஸ்ரீஹரி பசுவின் ரூபத்தை எடுத்தபோது, பிரம்மன் கன்றுக்குட்டி அவதாரத்தை எடுத்தார். (முக்யபிராணரை கன்றுக்குட்டி ரூபத்தில் தியானிப்பவர்களுக்கு, சதுர்முக பிரம்மனின் இந்த கன்றுக்குட்டி ரூபமும்கூட மிகுந்த மகிழ்வைத் தரக்கூடியதாகும்) ஸ்ரீஹரி (பசு) நேராக சித்தரசம் இருந்த கிணற்றிற்கு சென்றார். அதிலிருந்த மொத்த அமிர்தத்தையும் குடித்து, கிணற்றை காலி செய்தார். 

கே: அப்போது அசுரர்கள் அந்த பசுவின் மேல் ஏன் போர் புரியவில்லை?

ப: அதுவே விஷ்ணுவின் மகிமை. பசுவின் மற்றும் கன்றுக்குட்டியின் மனதை மயக்கக்கூடிய அழகில் தங்களை பறிகொடுத்தனர். தங்களை அழிப்பதற்காகவே இவை வந்து கிணற்றிலிருக்கும் அமிர்தத்தைக் குடிக்கின்றன என்ற எண்ணம்கூட அசுரர்களுக்கு அந்த சமயத்தில் வரவில்லை.

கே: கிணறு காலியானபிறகு, மரித்த அசுரர்கள் மறுபடி உயிர் பிழைக்க சாத்தியம் இல்லைதானே?

ப: ஆம். எப்போது அமிர்த கிணறு காலியானதோ, அப்போது ருத்ரரால் கொல்லப்பட்ட அசுரர்கள் மறுபடி பிழைக்க வாய்ப்பில்லாமல் போனது.

கே: கோரூபியான ஸ்ரீஹரி போருக்கு எப்படி உதவி புரிந்தார்?

ப: பூமியை ரதமாக்கி, மேரு மலையை வில்லாக மாற்றி ருத்ரருக்குக் கொடுத்தார். மேலும், தன் சக்தியை அந்த போரில் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களிலும் நிறைத்து, ருத்ரரில் அந்தர்யாமியாக இருந்து, அபிஜித் முகூர்த்தத்தில், த்ரிபுராசுர பட்டணங்களின் மேல் பாணப் பிரயோகங்களைச் செய்தார். 

கே: பசுவின் ரூபத்தில் ஸ்ரீஹரி மட்டுமே போர் புரிந்திருக்கலாம். பிரம்மனை கன்றுக்குட்டியாக்கியதால், தான் அதற்குக் கட்டுப்பட்டதைப் போல் ஆயிற்றல்லவா?

ப: பிரம்மன் கன்றுக்குட்டியாக ஸ்ரீஹரியுடன் இருந்த காரணத்தால் மட்டுமே, அவரது ஸ்வதந்த்ரயத்திற்கு எந்தவித களங்கமும் வரவில்லை. ஏனென்றால், பிரம்மனே ஸ்ரீஹரிக்கு கட்டுப்பட்டவர் என்று அனைத்து ஆதாரங்களிலிருந்து தெரியவருகிறது. கன்றுக்குட்டியானது, பசுவிற்கு கட்டுப்பட்டது. பசு, கன்றுக்குட்டிக்கு கட்டுப்படுவது சாத்தியமே இல்லை. ஆக, ருத்ரரின் தந்தையான சதுர்முக பிரம்மன், தனது கட்டுப்பாட்டில் இருப்பவர் என்பதைக் காட்டுவதற்காகவே, ஸ்ரீஹரி பிரம்மனை கன்றுக்குட்டியாக மாற்றினார். 

இப்படி ஸ்ரீஹரியின் ஒவ்வொரு அவதாரமும் மிகவும் அற்புதமானது, சுவாரசியமானது, உலகத்தை ரட்சிப்பதற்கானது, ஞானம் வைராக்கியம் ஆகியவற்றைக் கொண்டது, இப்படி கோ ரூபத்தில் இருக்கும் ஸ்ரீஹரியை என்றென்றும் சரணடைவோமாக.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.


***


No comments:

Post a Comment